Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

லூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்

தூய லூர்து அன்னை ✠ (Our Lady of Lourdes)
தூய லூர்தன்னை விழா (பிப்ரவரி 11)
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் 1991 பிப்ரவரி 11 ஆம் நாள் லூர்துநகர் அன்னை திருவிழா அன்று தொடங்கப்பட்டது. தூய லூர்து அன்னை என்ற பெயர் பிரான்சு நாட்டின் லூர்து நகரில் 1858 பிப்ரவரி 11 முதல் 1858 ஜூலை 16 வரை புனித பெர்னதெத் சுபிஷரூஸ் என்ற பெண்ணுக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் காட்சியூம் விளங்குகிறது. லூர்து அன்னையின் திருவிழா பிப்ரவரி 11ந்தேதி கொண்டாடப்படுகிறது

இதுவரை 7000 -க்கும் மேற்பட்ட புதுமைகள்...............


புனித லூர்து அன்னையின் அருட்காட்சி

பிரான்சு நாட்டின் தென் மேற்குப் பகுதியில் பிரனி மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ள சிற்றூர். பரிஸ் (
Paris) நகருக்கு அடுத்த படி சுற்றுலாப் பயணிகள், திருப்பயணிகள் அதிகம் வந்து போகும் இடம். உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கே வந்து கூடுகின்றனர்.

வேளாங்கண்ணியைப் போலவே,  மதம், இன பேதங்களைக் கடந்து மக்கள் திரளாக இங்கு வருவதற்குக் காரணங்கள் இரண்டு.

-முதல் காரணம் : 150 ஆண்டுகளுக்கு முன்னர் மசபியல் என்ற குகையில் அன்னை 
                                  மரியாள் பெர்னதெத் சுபிரு (
Bernadette SOUBIROUS) என்ற சிறுமிக்குப்
                                  பதினெட்டு முறை காட்சி தந்தது.

-இரண்டாம் காரணம்: அதன் பின் இன்று வரை அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும்
                                         எண்ணற்ற புதுமைகள்.

இதுவரை 7000 க்கும் மேற்பட்ட புதுமைகள் நடைபெற்றுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கத்தோலிக்கத் திருச்சபை இவற்றில் 67 புதுமைகளை மட்டுமே அதிகார பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இவைகளும் கடுமையான சோதனை, பரிசோதனை, மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டே இவை புதுமைகள்தாம் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களை எந்த ஆராய்ச்சியாளரும் எந்த மருத்துவரும் பார்வை இடலாம். அங்கே அன்னை மரியாள் காட்சி தந்த 150 ஆம் ஆண்டை 2007ஆண்டு சிறப்பாகக் கொண்டாடினார்கள்.
 
பிரான்ஸ் லூர்த்து மாதா தேவாலயத்தில் 68ஆவது அதிசயம்
பிரான்சிலுள்ள புகழ்பெற்ற லூர்து மாதா தேவாலயத்தில் 1965ம் ஆண்டில் இருந்து முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழே இயங்காத நிலையில் இருந்த இத்தாலியைச் சொந்த லுவிகினா திறாவர்கோ என்ற கன்னியாஸ்த்திரி லூர்த்து மாதா தேவாலயத்திற்கு வந்து தொடாச்சியான பிராத்தனையில் ஈடுபட்டு வந்ததாகவும் இதனால் அவர் தனது கால்களை அசைத்து தானே எழுந்து நின்றதாகவும், இது லூர்து மாதா தேவாலயத்தில் நடந்த 68வது அதிசயம் என்றும் தேவாலய குருமார்கள் அறிவித்தனர்.

1965 ம் ஆண்டு யூலை மாதம் 26 ம்திகதி முடக்குவாத நோய் தாக்கியதிலிருந்து பல்வேறு சிகிச்சைகளும் குறிப்பாக அறுவைச் சிகிச்சைகளும் கூட செய்யப்பட்ட போதும் அவர் எழுந்து நடக்க முடியாமல் சக்கர சாற்காலியிலேயே காலந்தள்ளியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குணமாகியுள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மருத்துவத்துறையில் இது ஒரு அதிசயம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

1858 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி பெர்னடெட் என்ற மாடுமேய்க்கும் சிறுமிக்கு கன்னி மரியாள் காட்சியளித்த இடமே லூர்து மாதா தேவாலயமாக வழிபடப்பட்டு வருகிறது.

இந்த ஆலயத்தில் அருகிலுள்ள மலைக்குகையிலிருந்து ஊற்றெடுத்துப்பாயும் புனித நீரை பருகுவதன் மூலமும் அதில் நீராடுவதன் மூலமும் தங்களது தீராத நோய்கள் குணமடைவதாக நம்பும் மில்லியன் கணக்கான திருப்பயணிகள் ஆண்டு தோறும் பிரான்சின் கீழ் பகுதியில் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று வருகின்றனர்.

இதுவரை லூர்து மாதாவின் அருளால் தங்களது நோய்கள் குணமடைந்ததாகவும் துன்பங்கள் நீங்கியதாகவும் ஏழாயிரம் பேர் சான்றுகளை சமர்ப்பித்த போதிலும் அவற்றில் 69 சம்பவங்களே அதிசயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தேவாலயத்திற்கு ஐரோப்பாவில் உள்ள தமிழ் மக்கள் பெருந்தொகையாக தினசரி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
 

 
லூர்து அன்னையே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!!             
நிகழ்வு


12.02.1999 அன்று இந்துப் பத்திரிகையில் வந்த செய்தி. எத்தனையோ மருத்துவர்களாலும், மருந்து மாத்திரைகளாலும் குணப்படுத்த முடியாத முடக்குவாதமுற்ற ஒருவர் பிரான்சு நகரில் இருக்கும் லூர்து நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் அன்னையின் அற்புத நீரூற்றில் குளிப்பாட்டப் பட்டார். பின்னர் அவர் அங்கு நடந்த நற்கருணை ஆராதனைக்குக் கொண்டுவரப்பட்டார். குருவானவர் நற்கருணை ஆண்டவரை எல்லோரும் ஆராதிக்கும் வண்ணம் தூக்கிக்காட்டியபோது அதுவரை உயிரற்றவர் போன்று கிடந்த அந்த முடக்குவாதமுற்ற மனிதர் திடிரென தன்னுணர்வு பெற்றார். சிறுது நேரத்தில் அவர் எழுந்துநிற்கத் தொடங்கினார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் இதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். இறைவன் லூர்தன்னை வழியாகச் செய்த இந்த அற்புதச் செயலை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.


ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான மக்கள் லூர்து நகருக்கு நம்பிக்கையோடு செல்கிறார்கள். அதில் நிறையப் பேர் தீராத வியாதிகளிலிருந்து குணம்பெற்றுச் செல்கிறார்கள். அப்படிக் குணப்பெற்ற ஒருவர்தான் இந்த முடக்குவாதமுற்ற மனிதர்.


வரலாற்றுப் பின்னணி


1850 ஆம் ஆண்டு வரை பிரான்சில் இருக்கும் லூர்து நகர் ஒரு சாதாரண நகர்தான். அங்கே வாழ்ந்த மக்கள் அனைவரும் ஏழை எளியவர்கள்தான். லூர்தன்னை காட்சி கொடுத்த பெர்னதத் என்ற சிறுமியும்கூட ஒரு சாதாரண ஆடுமேய்க்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான். அப்படிப்பட்ட ஒரு சாதாரண 14 வயது மதிக்கத்தக்க சிறுமிக்குத்தான் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதியிலிருந்து ஜூலை 16 ஆம் தேதி வரை பிரனீஸ் என்ற மலையில் உள்ள மசபெல் குகையில் பதினெட்டு முறை மரியன்னை காட்சி கொடுத்தார்.


முதல் மூன்று காட்களில் மரியன்னை, பெர்னதத் என்ற அந்த சிறுமியிடம் எதுவும் பேசவில்லை. வானத்திலிருந்து ஒளிமயமான பெண் ஒருத்தி வெள்ளைநிற உடையில் நீலநிற இடைக்கச்சையுடன் அந்த சிறுமிக்குக் காட்சி அளித்தார். இக்காட்சியானது பெர்னதத்தோடு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமிகளுக்குக் கிடைக்கவில்லை, அவர்கள் ஏதோ ஓர் ஒளி தோன்றி மறைவதைத் தான் பார்த்தார்கள். பெர்னதத்தான் அந்த அற்புதக் காட்சியைக் கண்டாள்.


ஒன்பதாம் முறையாக மரியன்னை பெர்னதத்துக்கு காட்சி கொடுக்கும்போது, அவளிடம் மசபெல் குகைக்கு முன்பாக ஓரிடத்தில் கைகளை வைத்துத் தோண்டுமாறு கேட்டுக்கொண்டார். பெர்னதத்தும் அங்கே தோண்டியபோது தண்ணீர் மெதுவாக வந்தது. ஆனால் அது தெளிவில்லாமல் இருந்தது. அடுத்த இருபத்து நான்கு நேரத்திற்குள் அத்தண்ணீர் வற்றாத ஜீவ நதியாகப் பிறப்பெடுத்தது. ஏறக்குறைய 160 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ஜீவ ஊற்று வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. 13 ஆம் முறையாக மரியன்னை பெர்னத்துக்குத் தோன்றியபோது, அவ்விடத்தில் தனக்கு ஓர் ஆலயம் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். உடனே சிறுமி தன்னுடைய பங்குத் தந்தையாம் பெயர்மேல் (Peyermale) என்பவரைச் சந்தித்து, இச்செய்தியைச் சொன்னார். தொடக்கத்தில் சிறுமி இச்செய்தியைச் சொன்னபோது, அவர் நம்பவில்லை. பின்னர் அதனை நம்பினார்.


பதினாறாம் முறையாக அதாவது மார்ச் 25 ஆம் நாள் (கபிரியேல் அதிதூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னதினம்), மரியன்னை காட்சி கொடுத்தபோது அவ்விடத்தில் ஊரே கூடியிருந்தது. அப்போது அங்கே கூடியிருந்தவர்கள் பெர்னதத்திடம், அவருடைய பெயர் என்ன என்று கேட்கச் சொன்னார்கள். அச்சிறுமி அப்படியே கேட்க, "நாமே அமல உற்பவம்" என்று பதிலுரைத்தார். உடனே மக்கள் அனைவரும் மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள். ஏனென்றால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் அதாவது 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள்தான், திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் மரியாள் அமல உற்பவி என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்திருந்தார். இப்போது மரியாளே தன்னை நாமே அமல உற்பவம் என்று சொல்லியதால், திருச்சபையின் விசுவாச சத்தியத்தை மரியாளின் கூற்று உறுதி செய்துவிட்டது என்பதை நினைத்து அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.


மரியன்னை பெர்னதத் என்ற அந்த சிறுமிக்கு அதன்பிறகும் காட்சியளித்தார். அப்போதெல்லாம் மரியாள் அவளிடம், "குருக்களுக்காக ஜெபியுங்கள், பாவத்திற்கு பொருத்தனைகள் செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். மேலும் பெர்னதத்திடம், "நான் உனக்குக் உனக்குக் காட்சி தந்ததனால், உனக்குத் துன்பங்கள் இல்லாமல் இருக்கப்போவதில்லை. இந்த மண்ணுலக வாழ்வில் உனக்குத் துன்பங்கள் உண்டு. ஆனால் விண்ணுலகில் உனக்கு பேரானந்தம் உண்டு" என்று சொல்வார். பெர்னதத் என்ற அந்தச் சிறுமி, அருட்சகோதரியாக மாறி, இறக்கும்வரைக்கும் அவர் துன்பங்களைச் சந்தித்தார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் .


இன்றைக்கு லூர்து நகரில் எத்தனையோ புதுமைகள், அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. லூயிஸ் பிரிட்டோ என்பவருக்கு கண்பார்வை கிடைத்திருக்கிறது, அதே போன்று மூன்றாம் நெப்போலியனின் மகனுக்கு நோயிலிருந்து நலம் கிடைத்திருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அன்னையின் அருளால் லூர்து நகரில் நடக்கும் அதிசயங்கள் ஏராளம். அவற்றைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.


கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்


லூர்தன்னையின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த் நல்ல நாளில் அன்னை நமக்கு என்ன செய்தியைத் தருகிறார் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


1. அன்னை பிள்ளைகளாகிய நம்மீது கொண்டிருக்கும் அன்பு.


ஒவ்வொருமுறையும் அன்னையானவள் காட்சி கொடுக்கும்போது, அவளது காட்சிகள் அனைத்தும் பிள்ளைகளாகிய நம்மீதுகொண்ட பேரன்பை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. நாம் மனம்திரும்பி நடக்கவேண்டும், இறைவனுக்கு உகந்த வழியில் நடக்கவேண்டும், ஜெபிக்கவேண்டும் என்றுதான் அன்னையானவள் ஒவ்வொரு காட்சியிலும் சொல்கிறார். இவையனைத்தும் அன்னை, பிள்ளைகளாகிய நம்மீது எத்தகைய அன்பைக் கொண்டிருக்கிறார் என்பதை எடுத்துரைப்பதாக இருக்கின்றது. உண்மையிலே நாம் அந்த அன்னையின் அன்பை, நம் அன்னையரின் அன்பினை உணர்ந்திருக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிறைய நேரங்களில் அன்னையின் அன்பை உணராத பிள்ளைகளாகவே இருக்கின்றோம். இது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. "தாயின் மடிதான் உலகம், அவள் தாளைப் பணிந்திடுவோம்" என்கிறது ஒரு கிறிஸ்தவப் பாடல். இது எத்தனை உண்மை.


இளைஞன் ஒருவன் கொடிய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டான். இச்செய்தியைக் கேட்ட அந்த இளைஞனின் தாய் அலறியடித்து சிறைசாலைக்கு ஓடிவந்தாள். அப்போது அவளைப் பார்த்த சிறைச்சாலை அதிகாரி, "அம்மா! உங்கள் மகன் இப்போது யாரையும் பார்ப்பதாய் இல்லை, அவன் எல்லாரையும் வெறுத்து ஒதுக்குகிறான். ஏன் உங்களையும்கூட அவன் வெறுத்து ஒதுக்குகிறான். அதனால் தயவுசெய்து நீங்கள் இவ்விடத்தை விட்டுப் போய்விடுங்கள்" என்றார். அதற்கு அந்த அன்னை, "என் மகன் என்னை வெறுத்து ஒதுக்கலாம், பார்க்கமாட்டேன் என்று புறக்கணிக்கலாம். ஆனால், நான் அவனை எப்போதும் அன்பு செய்கிறேன்" என்றாள். இதுதான் தாயின் அன்பு. வெறுத்து ஒதுக்குகின்ற மகனுக்கும் அன்பைப் பொழிவதுதுன் உண்மையான தாயன்பு. அத்தகைய அன்பினை அன்னை மரியாள் நம்மிடத்தில் கொண்டிருக்கிறார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் அன்னை மரியின், நம் அன்னையின் அன்பை உணர்ந்தவர்களாய் வாழ்வோம்.


2. மனமாற்றம் பெறவேண்டும்


அன்னையானவள் ஒவ்வொரு காட்சியிலும் சொல்லக்கூடிய செய்தி மனமாற வேண்டும் என்பதாகும். லூர்து நகர் காட்சியிலும்கூட அன்னை பெர்னதத்திடம் அத்தகைய செய்தியைத்தான் சொன்னார்.


நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய போதனையைத் தொடங்குகிறபோது, "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்கு 1:15) என்றுதான் சொல்கிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்துபோது நம்முடைய வாழ்க்கையில் மனமாற்றம் எந்தளவுக்கு முக்கியத்தும் வாய்ந்தது எனப் புரிந்துகொள்ளலாம். நம்முடைய வாழ்க்கை இறைவனுக்கு உகந்த வாழ்க்கையாக இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் நம்முடைய மனம்போன போக்கில் வாழ்ந்து, மேலும் மேலும் பாவத்தைச் செய்துகொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு நிலை மாறவேண்டும். நாம் அனைவரும் மனமாறிய மக்களாக வாழவேண்டும்.


கர்நாடாக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பசவராஜ் நிங்கப்பா பெல கஜ்ஜாரி (46) என்பவர் கடந்த 30 ஆண்டுகளில் 261 வீடுகளில் பணம் மற்றும் நகைகளை திருடியவர். திருட்டு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்தவர். அப்படிப்பட்டவர் கடந்த 2010ம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் ஒருவரின் வீட்டில் திருடும்போது கையும், களவுமாக சிக்கிக்கொண்டார். சிக்கிய அவரை தண்டிக்காமல் உட்கார வைத்து பேராசிரியர் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். பேராசிரியர் வழங்கிய அறிவுரையால் அவர் மனம் திருந்தி வாழ ஆசைப்பட்டார். அதனால் அவர் இப்போது தான் திருடிய வீடுகளுக்கு நேரில் சென்று அங்குள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார். இது பலரை வியப்படைய செய்துள்ளது. (மே 11, 2016 தினகரன் பத்திரிக்கை)


நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனமாறி, இறைவனுக்கு உகந்த வழியில் நடக்கும்போது அது எல்லாருக்கும் ஏன் இறைவனுக்கும் ஆனந்தம்தான். ஆகவே, லூர்தன்னையின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த் நல்ல நாளில் அவர் நம்மீது கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பை உணர்ந்து வாழ்வோம். பாவத்திலிருந்து மனம் மாறுவோம். பாவிகளுக்காக ஜெபிப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!