மருத்துவர் மருந்துகள் தரலாம். ஆனால் குணமளிப்பவர் கடவுளே.
'நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்" (விப 15:26) என்று கடவுளே தன்னைக்
குறித்து சான்றுரைத்துள்ளார். மனிதனைத் தனது சாயலாகப் படைத்து (தொநூ
1:26-27), தனது ஆவியையே அவனுக்கு உயிர் மூச்சாகக் கொடுத்துள்ள கடவுளால் மட்டுமே
(தொநூ 2:7) ஒரு மனிதனுக்கு முழுமையாக சுகத்தைத் தர முடியும். அவ்வாறு தனது
குணமளிக்கும் ஆற்றலை மனிதருக்கு வெளிப்படுத்த கடவுள் தேர்ந்து கொண்ட பல்வேறு
திருத்தலங்களில் முதன்மையானது லூர்து அன்னை திருத்தலம் ஆகும்.
நோயுற்றோருக்கென்றே அமைந்திருக்கும் திருத்தலமாகவே இது திகழ்கின்றது. இங்கு
நடைபெறும் வழிபாடுகளும் செயல்களும், இங்கு வந்து செல்வோரின் சாட்சியங்களும்
இதனை உறுதி செய்கின்றன.
உடலும் உள்ளமும் கொண்டவன் மனிதன். இவை இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே
ஒரு மனிதன் நலமாக இருக்கிறான் என்று பொருள். உடல் சுகம் எந்த அளவு
முக்கியமோ, அதே அளவு ஆன்மீக நலனும் முக்கியம். எனவேதான் தன்னிடம்
கொண்டு வரப்பட்ட திமிர்வாதக்காரரைக் குணமாக்கும் முன்பு, "மகனே, உன் பாவங்கள்
மன்னிக்கபட்டன" என்று முதலில் ஆன்ம சுகத்தை இயேசு கொடுக்கிறார் (மாற்
2:1-12. இவ்வாறு உடல் உள்ள நோய்களுக்குக் குணம் கொடுக்கிற தெய்வீக மருத்துவராக
இயேசு இருப்பதை நற்செய்தி எடுத்தியம்புகிறது.
இந்த இரண்டு வகையாக குணமளித்தலும் லூர்து அன்னை திருத்தலத்தில் இன்றும் தொடர்ந்து
நடைபெற்று வருகின்றன. உடல் உள்ள சுகத்தைத் தேடி மக்கள் தினமும் இத்திருத்தலத்திற்கு
வருகிறார்கள். இங்கு நடைபெறும் திருப்பலிகள் பக்தர்களுக்கு ஆன்ம பலத்தைத்
தருகின்றன. இங்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒப்புரவு
அருள்சாதனக் கொண்டாட்டம் ஆன்மாவைச் சுத்திகரிக்கிறது. தினமும் மாலை 5 மணிக்கு
நடைபெறும் நற்கருணைப் பவனி நோயுற்றோருக்கான சிறப்பு நிகழ்வாகவே அமைந்துள்ளது.
சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டே இப்பவணியில் கலந்து கொள்ளும் திரளான
பக்தர்கள் இதற்கு சாட்சியம். இங்கு நடைபெறும் புனித நீராட்டு இத்திருத்தலத்திற்கே
உரிய சிறப்பு நிகழ்வாகும். இந்நீராட்டு உடல் தூய்மையை மட்டுமல்ல, உள்ளத்
தூய்மையையும் கொடுக்கிறது.
இவ்வாறு மனிதனின் உடல் உள்ளங்களுக்கு குணம் தரும் தெய்வீக மருந்தகமாக
லூர்து நகர் திருத்தலம் திகழ்கிறது. இத்திருத்தலத்திற்கு வந்து குணம்
பெற்றுச் செல்லும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே
செல்கிறது. குறையோடு வருகிறவர்கள் நிறைவோடு செல்கிறார்கள். உண்மையான விசுவாசத்தோடு
இத்திருத்தலத்தை நாடிவருபவர்கள் முழுமையான சுகம் பெற்றுச் செல்கிறார்கள்.
லூர்து நகருக்குத் தன் தாயை நாடி வருகிற அனைவரையும் பார்த்து, "நீங்கள்
விரும்பியபடியே ஆகட்டும்" (மத் 15:28), "உங்களது நம்பிக்கை உங்களைக் குணமாக்கிற்று"
(லூக் 8:48, 17:19, 18:42) என்று இயேசு இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
எனவே, அனைவரும் வாருங்கள்! லூர்து அன்னையின் பரிந்துரையால் உடல் உள்ள நலம்
பெற்றுச் செல்லுங்கள்! |
|