Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருச்செபமாலை


செபமாலை வழியினிலே
மெழுகுவர்த்திப் பவனி

முன்னுரை

அன்பு சகோதர சகோதரிகளே!
இங்கு லூர்து மாநகரில், மசபியேல் குகையில் அமலோற்பவ அன்னை 18 முறை பெர்னதெத் சுபிருஸ் என்னும் சிறுமிக்கு காட்சியளித்தார்கள். தனது பணிவான தூதுவரான அச்சிறுமி வழியாக, அன்னையாம் கன்னி மரியாளே இங்கு ஓர் ஆலயம் கட்டவும், இங்கு பவனியாக வரவும் குருக்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அன்னை மரியாளின் விருப்பமான இவ்விசுவாச செயலைத்தான் நாம் இங்கே இப்பொழுது நிறைவேற்றப் போகிறோம்.

செபத்திலும் தியானத்திலும் நாம் ஒன்றாக பங்கெடுப்பதற்குத் தயாராக, உங்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றிக் கொண்டு, அமைதியாகக் காத்திருங்கள்.
 
(1) சந்தோஷ தேவ இரகசியங்கள் (மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்)
1. கபிரியேர் தூதர் அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்கிறார
வானதூதர் அவரைப் பார்த்து, "மரியே அஞ்சாதீர். கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" என்றார் (லூக் 1:30).
பயத்தோடும் அச்ச உணர்வோடும் வாழும் அனைவரும் தங்களைக் கடவுளின் கரத்தில் ஒப்படைக்க வேண்டுமென்று செபிப்போம்.
2. அன்னை மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்திக்கிறார்
தன் உறவினரான எலிசபெத்தை அன்னை மரியாள் சந்தித்தபோது, மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து அவர் கூறியது: "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவர் பெயர்;" (லூக் 1:49).
இந்த ஆண்டு நன்றி செலுத்துவதற்கு நாம் இன்னும் அதிகமான கற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அன்னை மரியாளின் எடுத்துக் காட்டை கடைப்பிடிப்போம்.
நம்மிலும் நம்மைச் சுற்றிலும் நடைபெறும் கடவுளின் செயல்களை தியானிக்கச் செய்யும்  நம்பிக்கையை கேட்டு மன்றாடுவோம்.
3. இயேசு குடிலில் பிறக்கிறார்.
வானதூதர் இடையர்களிடம், "குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்" என்றார் (லூக் 2:12).
நமது மனித நிலையைப் பகிர்ந்து கொள்வதற்காகக் கடவுள் ஏழையாகப் பிறந்தார்.
புனித பெர்னதெத்தைப் போல, உலக செல்வங்களில் பற்றற்று வாழத் தேவையான அருளையும், நம்மிடம் உள்ளதை தேவையில் இருப்பவரோடு பகிர்ந்து கொள்ள தாராள உள்ளத்தையும் ஆர்வத்தையும் கேட்டு மன்றாடுவோம்.
4. கோயிலில் இயேசு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
"சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றினார்" (லூக் 2:28).
மரண நிலையில் கிறிஸ்துவைச் சந்திப்பதற்காகத் தங்களைத் தயாரித்துக் கொண்டிருப்பவர்களுக்காகச் செபிப்போம்.
நிலைவாழ்வை எண்ணி சிமியோன் கொண்டிருந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, அவர்களது இதயம் எந்நாளும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அன்னை மரியாளிடம் மன்றாடுவோம்.
5. கோயிலில் இயேசுவை கண்டுபிடிக்கிறார்கள் (காணாமல் போன இயேசுவைக் கோயிலில் கண்டுபிடித்தல்)
மரியாள் குழந்தை இயேசுவிடம், "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த ஏக்கத்தோடு தேடிக் கொண்டிருந்தோமே" என்றார் (லூக் 2:48).
மரியாளும் சூசையப்பரும் இயேசுவை ஏக்கத்தோடு தேடினார்கள்.
என்றும் மனவுறுதியோடு விசுவாசத்தில் நிலைத்திருக்கும் அருளைக் கேட்டு மன்றாடுவோம். குறிப்பாக, கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலகிச் சென்றவர்கள், கிறிஸ்துவை மீண்டும் கண்டுகொள்ளும் மகிழ்ச்சியைப் பெற வேண்டுமென்று செபிப்போம்.
 
(2) ஒளியின் தேவ இரகசியங்கள் (ஒளியின் மறையுண்மைகள்)
1.யோர்தான் நதியில் இயேசுவின் திருமுழுக்கு
இயேசு திருமுழுக்குப் பெற்ற பிறகு, திருமுழுக்கு யோவான், "தூய ஆவியானவர் விண்ணிலிருந்து புறாவின் வடிவில் அவர் மீது இறங்கி வந்ததையும் அவர் மீது தங்கியதையும் நான் கண்டேன்" என்று அறிக்கையிட்டார்.
மசபியேல் குகையில் அன்னை மரியாள் பெர்னதெத்திடம், "நீ ஊற்றிலிருந்து வரும் தண்ணீரைப் பருகு. அத்தண்ணீரால் உன்னையும் தூய்மைப்படுத்து" என்றார்.
லூர்து நகருக்கு வந்து, இவ்வூற்று தண்ணீரை அiயாளமாகப் பயன்படுத்தும் அனைத்து திருப்பயணிகளின் திருமுழுக்கு அருள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்று மன்றாடுவோம்.
2. கானாவுர் திருமணம்
மரியாள் பணியாளர்களிடம், "அவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்" என்றார் (யோவா 2:5).
திருச்சிலுவை அடையாளத்தை வரையவும், பாவிகளுக்காகச் செபிக்கவும், ஊற்றிலிருந்து தண்ணீர் பருகவும் அன்னை மரியாள் பெர்னதெத்துக்குக் கற்றுக் கொடுத்ததன் மூலம் மறையறிவைக் கொடுத்தார்.
அன்னை மரியாளின் பள்ளியில் கிறிஸ்துவிடமிருந்தும், திருச்சபையிடமிருந்தும் கற்றுக் கொள்வதற்கான அருளைக் கேட்டு மன்றாடுவோம்.
3. இறையரசைப் பற்றிய பறைசாற்றலும, மனமாற்றத்திற்கான அழைப்பும்.
அந்நாட்களில் இயேசு, "மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று பறைசாற்றினார் (மாற் 1:15).
இறையரசை கண்டறியவும், அதனை அனுபவிக்கவும், லூர்து நகரில் பெர்னதெத் என்னும் சிறுமியை அன்னை மரியாள் அழைத்து வருகிறார்.
பெர்னதெத்தோடு இணைந்து யாருக்கெல்லாம் இன்னும் இறையரசு அறிவிக்கப்படவில்லையோ அவர்களுக்காகச் செபிப்போம்.
4. இயேசுவின் உருமாற்றம்
இயேசு செபித்துக் கொண்டிருக்கையில் அவரது முகம் மாறியது. அவரது ஆடைகள் மின்னலைப் போன்று ஒளிர்ந்தன.
அன்னை மரியாளின் காட்சியின் போது, பெர்னதெத்தின் முகம் மாறி அவர் கண்ட காட்சியின் மகிமையைப் பிரதிபலித்த போது, அங்கே இருந்தவர்கள் வாயடைத்து நின்றார்கள்.
உலகிற்குத் தேவையான புனிதர்களைக் கடவுள் தரவேண்டுமென்று மன்றாடுவோம்.
5. நற்கருணையை ஏற்படுத்துதல்
இயேசு கூட்டத்தினரைப் பார்த்து, "எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்பவர், நிலைவாழ்வைக் கொண்டுள்ளார்" என்றார் (யோவா 6:54)
மீட்பரைப் பெற்றுக்கொள்வதற்கு பெர்னதெத்தின் இதயக் கதவுகள் திறந்திருப்பதற்காக, காட்சிகளின் போது அன்னை மரியாள் அவரைத் தயாரித்தார்.
இயேசுவின் உடலோடு நாம் கொண்டுள்ள உயிரோட்டமான ஒன்றிப்பின் வழியாக நிலைவாழ்வு நம்மில் இருக்க வேண்டுமென மன்றாடுவோம்.
 
(3) துக்க தேவ இரகசியங்கள் (துயர்நிறை மறையுண்மைகள்)
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வடிக்கிறார் (தோட்டத்தில் வேதனை)
துயரத்தில் மூழ்கியவராக, நொறுங்குண்ட இதயத்தோடு இயேசு மிகவும் தீவிரமாகச் செபிக்கிறார். அவரது வியர்வை இரத்தத் துளிகளாக மாறி தரையில் விழுகின்றன.
பெர்னதெத்தோடு பேசிய அந்த அழகியப் பெண், "பரிகாரம்! பரிகாரம்! பரிகாரம்! பாவிகளுக்காச் செபியுங்கள்" என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
இயேசுவை அறியாதவர்களுக்காகவும், அவரை வெறுப்பவர்களுக்காகவும், அவரை மறுப்பவர்களுக்காகவும் செபிப்போம். பாவிகளுக்கு அடைக்கலமான அன்னை மரியாள் மூலம் அவர்களின் மனமாற்றத்திற்கான அருளைக் கேட்டு மன்றாடுவோம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்படுகிறார் (கற்றூணில் அடிக்கப்படுதல்)
சாட்டையால் அடிக்கும்படி பிலாத்து இயேசுவை யூ தர்களிடம் கையளிக்கிறான். மனுக்குலத்தின் மீது கொண்ட அன்பினால், நமது மீட்புக்காக தன்னையே இயேசு கையளிக்கிறார். எந்த அளவுக்கு எனில், இறைவாக்கினர் எசாயா முன்னுரைத்ததைப் போல, "துன்புறும் மனிதனாக, துன்பத்தை அறிந்தவராக" அடிக்கப்படுவதற்காக மானிட மகன் தன்னையே கையளிக்கிறார்.
நோயுற்றோருக்கு ஆரோக்கியமாக விளங்கும் அன்னை மரியாள் வழியாக, உடல் நோயால் துன்புறுவோருக்காகவும், அவர்களுக்கு பணிபுரிய தங்களை அர்ப்பணித்துள்ள அனைவருக்காகவும் மன்றாடுவோம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்படுகிறது
போர்வீரர்கள் முட்களால் ஒரு மகுடம் செய்து, அதனை இயேசுவின் தலையில் சூடுகிறார்கள்.
பல்வேறு விதமான அழுத்தங்கள், மனநோயால் உள்ளத்தளவில் துன்புறும் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.
துன்புறுவோருக்கு ஆறுதலான அன்னை மரியாளின் வழியாக, இறைவன் அவர்களுக்கு நல்சுகத்தையும் மனஅமைதியையும் தரவேண்டுமென்று மன்றாடுவோம்.
4. இயேசு சிலுவையை சுமந்து செல்கிறார்.
இயேசு தானே சிலுவையைச் சுமந்தவராக, எபிரேய மொழியில் கொல்கொத்தா என அழைக்கப்படும் மண்டை ஓடு என்னும் இடத்திற்குச் செல்கிறார்.
இயேசு கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசத்தின் பொருட்டு துன்புறுத்தப்படும் அனைத்து சகோதர சகோதரிகளையும் இப்பொழுது நினைவு கூருவோம்.
கிறிஸ்தவர்களின் சகாயமான அன்னை மரியாள் வழியாக, இறைவன் அவர்களுக்கு மனஉறுதியையும், ஆறுதலையும், மத சுதந்திரத்தையும் அருள வேண்டுமென்று கெஞ்சி மன்றாடுவோம்.
5. இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்
அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள் (யோவா 19:18).
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேர முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார் (யோவா 19:26-27).
இதோ இங்கே நமக்குச் செவிமடுக்கும் தாயின் முன்பாக நின்று கொண்டிருக்கிறோம். அவரது மகனின் சீடராக வாழ்வதற்கான நமது விருப்பத்தை புதுப்பிக்கும்படியாக நாம் ஒருவர் மற்றவருக்காகச் செபிப்போம்.
 
(4) மகிமை தேவ இரகசியங்கள் (மகிமை நிறை மறையுண்மைகள்)
1. இயேசு உயிர்த்தெழுகிறார் (உயிர்த்தெழுதல்)
"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நமது விசுவாசம் வீண்" என்கிறார் புனித பவுலடியார் (1கொரி 15:14).
திருமுழுக்குப் பெற்ற அனைவரும் மலைகளைப் பெயர்த்தகற்றும் அளவுக்கு ஆற்றலுள்ள விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்று புனித கன்னி மரியாளின் பரிந்துரையின் வழியாக மன்றாடுவோமாக!
2. இயேசு விண்ணேற்படைகிறார் (விண்ணேற்பு)
"அப்போஸ்தலர்கள் கண்கள் முன்பாக இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள பார்வையிலிருந்து மறைத்துவிட்டது" (திப 1:9).
உலகிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் மரியன்னையின் கரங்களில் ஒப்படைப்போம். ஒருவரை ஒருவர் மன்னிக்கவும், கூடிச் செபிப்பதில் நிலைத்திருக்கவும் தேவையான பலத்தையும் துணிவையும் தர வேண்டுமென்று தந்தையின் வலப்புறம் வீற்றிருக்கும் இயேசுவிடம் மன்றாடுவோம்.
3. அப்போஸ்தலர்கள் மீதும் அன்னை மரியாளின் மீதும் தூய ஆவியானவர் இறங்கி வருகிறார். (அப்போஸ்தலர்கள் மீது தூய ஆவியானவர் இறங்குதல்)
உயிர்ப்பின் ஐம்பதாம் நாளில் (பெந்தகோஸ்து நாளில்), அப்போஸ்தலர்கள் அனைவரும் தூய ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள்.
ஆச்சரியமிக்க கடவுளின் செயல்களை எல்லா மக்களும் அறிவிப்பதற்காகப் பணிக்கப்பட்டுள்ள அனைத்துக் குருக்களையும் திருச்சபையின் தாயான மரியாளோடு இணைந்து ஆண்டவரின் கரங்களில் ஒப்படைப்போம். திருச்சபைக்கும் உலகிற்கும் தேவையான குருத்துவ, துறவற வாழ்விற்கான இறையழைத்தலைத் தரவேண்டுமென்று மன்றாடுவோம்.
4. உடலோடும் ஆன்மாவோடும் அன்னை மரியாள் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்படுகிறார். (அன்னை மரியாளின் விண்ணேற்பு)
அன்னை மரியாளின் அழகைக் குறித்து பெர்னதெத் பின்வருமாறு கூறுகிறார்: பிரகாசமான ஒளியைப் பார்த்தேன். அப்படிப்பட்ட பிரகாசமான ஒளி பூமியில் எங்குமில்லை. ஏன், சூரிய ஒளியில்கூட அவ்வளவு பிரகாசம் இல்லை. அவ்வொளியின் நடுவே அற்புதமான ஓர் உருவத்தைப் பார்த்தேன். அதைப் போன்ற வடிவம் பூமியில் எங்குமில்லை."
ஓ மரியே! அழகான அனைத்தையும் கண்டு தியானித்து மகிழவும், எங்களின் மாண்பை சிதைக்கும் அனைத்துக் காட்சிகளிலிருந்து நாங்கள் விலகவும் தேவையான பலத்தை அருள்வீராக!
5. விண்ணக மண்ணக அரசியாக அன்னை மரியாள் முடி சூட்டப்படுகிறார்
லூர்து மாநகருக்கு வரும் அனைத்து திருப்பயணிகளுக்காகவும், குறிப்பாக நோயுற்றோருக்காகவும் பாவிகளுக்காகவும் சிறப்பாக மன்றாடுவோம்.
அன்னை மரியாளின் தாய்மையையும், அவரின் வல்லமையுள்ள பரிந்துரையையும், அத்தோடு கடவுளின் உயிருள்ள பிரசன்னத்தை பெர்னதெத் வாழ்ந்த இவ்விடத்தில் அவர்கள் கண்டறியவும் வேண்டுமென்று மன்றாடுவோம்.
முடிவுரை
இச்செப வேளையின் முடிவில், நாம் ஒவ்வொருவரும் மற்றவரோடு சமாதானத்தையும், உறவின் வாழ்த்தையும் பகிர்ந்து கொள்வது மிகவும் பொருத்தமானது.
உங்களது திருப்பயணம் ஆசீர்வதிக்கப்பட்ட திருப்பயணமாக அமைய உங்களை வாழ்த்துகிறோம்.

அனைவருக்கும் இரவு வணக்கம்!
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்