தமிழ் திருப்பயணிகள் ஆன்மீகப்
பணி மையம் உங்களை
வரவேற்கின்றது
மரியன்னை உங்களை அழைக்கிறாள்.........
இறை சித்தத்தை செயல்படுத்தும் மாபெரும் சக்தி மரியன்னை. அவள் மக்களின்
அன்னை. அன்னையிடம் வரம் கேட்க அல்ல, அன்னையையே வரமாகக் கேட்க,
லூர்து நகர் திருத்தலம் செல்வோம். குடும்பமாய்க் கூடி ஜெபமாலை
சொல்வோம். தூய ஆவியின் வரங்களும், அன்னை மரியின் பரிந்துரையும்
கிடைத்திட திருப்பலியில் விசேடமாக
தொடர்ந்து அனைவருக்காகவும் லூர்து அன்னை
மூலமாக ஜெபிக்கிறோம்.
தினம்
ஒரு நல்வார்த்தை..
ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது
போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை. ஞானம் - கதிரவனை
விட அழகானது; விண்மீன் கூட்டத்தினும் சிறந்தது; ஒளியைக்
காட்டிலும் மேலானது. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால்,
ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.
Fr. William
J. Bausch என்ற அருட்பணியாளர் எழுதிய "Once Upon a
Gospel: Inspiring Homilies and Insightful
Reflections" என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஒரு கதை இது!
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த ஓர் ஆயரைப் பற்றிய
கதை. இந்த ஆயர் சிறந்த மறையுரையாளர். இறைவனை நம்பாதவர்கள்,
திருஅவையை வெறுத்துப் பழிப்பவர்கள் ஆகியோரைத்
தேடிச்சென்று அவர்களிடம் பேசி வந்தார் இந்த ஆயர். அவர்களிடம்
அடிக்கடி ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வது இவர் வழக்கம்.
பாரிஸ் நகரில் புகழ்பெற்ற Notre Dame பேராலயத்தின் வாசலில்
ஒவ்வொரு ஞாயிறன்றும் இளைஞன் ஒருவர் நின்றுகொண்டு,
ஞாயிறு திருப்பலிக்குச் செல்லும் அனைவரையும் முட்டாள்கள்
என்று உரத்த குரலில் கேலி செய்து வந்தார்.
கோவிலுக்குச் செல்பவர்கள் அவரைக் கண்டு பயந்து ஒதுங்கி
சென்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த இளைஞனின் ஆர்ப்பாட்டம்
எல்லை மீறிச் சென்றது.
ஒரு முறை ஞாயிறு திருப்பலிக்கு முன், கோவிலின் பங்குதந்தை
பேராலய வாசலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும், இளைஞனின்
கேலிப்பேச்சு உச்ச நிலையை அடைந்தது. இளைஞனின் கேலிகளை
எல்லாம் பொறுமையுடன் கேட்ட பங்குத்தந்தை அவரிடம்,
"நான் இப்போது கூறும் சவாலை உன்னால் நிறைவேற்ற
முடியாது. உனக்கு அவ்வளவு தூரம் வீரமில்லை" என்று
கூறினார். இதைக் கேட்டதும் இளைஞனின் கோபமும், கேலியும்
கட்டுக்கடங்காமல் சென்றன. "முட்டாள் சாமியாரே! எனக்குச்
சவால் விடுகிறாயா? சொல், எதுவாயினும் செய்து
காட்டுகிறேன்." என்று அனைவரும் கேட்கும்படி கத்தினார்.
பங்குத்தந்தை அமைதியாகத் தொடர்ந்தார்: "கோவிலுக்குள்
வா. பீடத்திற்கு முன் நின்று, சிலுவையில் இருக்கும் இயேசுவை
உற்றுப் பார். பின்னர், உன்னால் முடிந்த அளவு உரத்தக்
குரலில், 'கிறிஸ்து எனக்காக சிலுவையில் இறந்தார். ஆனால்,
அதைப்பற்றி எனக்குச் சிறிதும் கவலையில்லை.' என்று உரத்தக்
குரலில் நீ கத்த வேண்டும். உன்னால் முடியுமா?" என்று
பங்குத்தந்தை சவால் விடுத்தார்.
அந்தச் சவாலைத் துச்சமாக மதித்த இளைஞன், பீடத்தை
நெருங்கினார். சுற்றி இருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து
போயினர். இளைஞன் உரத்தக் குரலில் "கிறிஸ்து எனக்காக
சிலுவையில் இறந்தார். ஆனால், அதைப்பற்றி எனக்குச்
சிறிதும் கவலையில்லை" என்று கத்தினார். பங்கு குரு அவரிடம்,
"நன்றாகக் கத்தினாய். இன்னொரு முறை கத்து" என்றார்.
இரண்டாவது முறையும் இளைஞன் கத்தினார். ஆனால், இம்முறை
அவரது வார்த்தைகளில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிந்தது. பங்கு
குரு இளைஞனிடம், "தயவு செய்து இறுதியாக ஒரு முறை மட்டும்
கோவிலில் உள்ள அனைவரும் கேட்கும்படி கத்திவிட்டு, பின்னர்
நீ போகலாம்." என்று கூறினார்.
இம்முறை இளைஞன் சிலுவையை உற்றுப் பார்த்தார். கைகளை
உயர்த்தினார். அவர் கத்த முற்பட்டபோது, வார்த்தைகள்
வரவில்லை. சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவை அவரால்
தொடர்ந்து பார்க்க முடியவில்லை. கண்களைத்
தாழ்த்தினார். கண்ணீர் தெறித்தது.
இந்த நிகழ்வை விவரித்துக் கூறிய ஆயர் சிறிது நேரம் அமைதியாக
இருந்தபின், தொடர்ந்தார்: "அந்த இளைஞன் நான்தான்.
கடவுள் எனக்குத் தேவையில்லை என்று வாழ்ந்தவன் நான். ஆனால்,
கடவுள் எனக்குத் தேவை என்று சிலுவையில் தொங்கிய இயேசு
எனக்கு உணர்த்தினார். அது மட்டுமல்ல, நான் கடவுளுக்குத்
தேவை என்பதையும் அவர் எனக்குப் புரியவைத்தார்" என்று
கூறினார் அந்த ஆயர்.
சிலுவையில் அறையுண்ட இயேசுவை இந்த வாரம் முழுவதும் அடிக்கடி
சந்திக்கவும், சிந்திக்கவும் இருக்கிறோம். நமக்குள் என்னென்ன
மாற்றங்கள் உருவாகப் போகின்றன?
இன்று வீட்டிலும், நாட்டிலும் நடக்கும் பிரச்சனைகளுக்கு
காரணம் குடும்ப ஜெபமாலை இப்போது இல்லாமல் போனதுதான்.
கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இவ்வளவு பெரிய அழிவுகள், அதுவும்
நாம் கேள்வியே பட்டிராத அழிவுகள் நடப்பது இப்போதுதான்.
கத்தொலிக்கத்திலிருந்து பிரிந்து 100 சபைகளுக்கும்
மேல் வந்ததிற்கும் காரணம் குடும்ப ஜெபமாலை நின்றதுதான்.
முன்பெல்லாம் நம் கத்தொலிக்க குடும்பங்கள் இரவு ஜெபமாலை
சொல்லாமல் தூங்க மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள்
எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஜெபமாலை சொல்வார்கள். பல வீடுகளில்
நற்செய்தி வாசித்து ஜெபமாலை ஜெபிப்பார்கள். இந்த ஜெபமாலை
கத்தொலிக்க குடும்பங்களை மட்டுமல்ல உலகையே
காப்பாற்றிக்கொண்டிருந்தது.
ஏனென்றால் ஜெபமாலை தனிப்பட்ட ஒருவருக்காக ஜெபிக்கப்படுவதில்லை.
"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே "பாவிகளாய்
இருக்கிற எங்களுக்காக "எங்களை சோதனையில் விழவிடாதேயும்"
என்று நாம் ஜெபிக்கும் போது உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்காகவும்
ஜெபிக்கிறோம். "
ஏன் குடும்ப ஜெபமாலை நின்று போனது? வீட்டிற்குள்
நுழைந்த டி.வி என்ற சாத்தான்தான் அதிலும் தனியார் சானல்கள்
வந்த பின்புதான் இத்தகையை இழிவான நிலையை நாம் சந்தித்துள்ளோம்.
அருட்தந்தை லீனஸ்
அ.ம.தி அவர்களோடு இணைந்து நாங்களும் செபிப்போம். செபம்
என்பது எம்மை இறைவனின் கரங்களில் கொடுத்து, அவரது
சித்தம் எம்வாழ்வில் நடைபெறவேண்டுமென்று மன்றாடுவோம்.
உமது சித்தம் பூவிலகில் செய்யப்படுவதாக!
பிரான்ஸ் லூர்து திருத்தலத்தில்
தமிழ் மொழிக்கு பொறுப்பாய் பணி செய்து கொண்டிருக்கும்
அருட்தந்தை லீனஸ் அவர்கள் உலக மக்களுக்கு சொல்லும்
செய்தி.
நாமனைவரும் அருட்தந்தை லீனஸ்
அவர்களோடு இணைந்து, கொரோணா வைரஸினால் பாதிக்கப்பட்ட
அணைத்து மக்களையும் இறைவன் தொட்டு குணப்படுத்த
வேண்டும் என மன்றாடும் இந்த செபத்தில் பங்கு
பற்றுவோம்.