தமிழ் திருப்பயணிகள் ஆன்மீகப்
பணி மையம் உங்களை
வரவேற்கின்றது
மரியன்னை உங்களை அழைக்கிறாள்.........
இறை சித்தத்தை செயல்படுத்தும் மாபெரும் சக்தி மரியன்னை. அவள் மக்களின்
அன்னை. அன்னையிடம் வரம் கேட்க அல்ல, அன்னையையே வரமாகக் கேட்க,
லூர்து நகர் திருத்தலம் செல்வோம். குடும்பமாய்க் கூடி ஜெபமாலை
சொல்வோம். தூய ஆவியின் வரங்களும், அன்னை மரியின் பரிந்துரையும்
கிடைத்திட திருப்பலியில் விசேடமாக
தொடர்ந்து அனைவருக்காகவும் லூர்து அன்னை
மூலமாக ஜெபிக்கிறோம்.
தினம்
ஒரு நல்வார்த்தை
நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்: உங்களைத்
துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். மத்தேயு 5:44
செபமாலை அன்னையின் மாதம் எனப்படும்
அக்டோபர் மாதத்தில் நாம் அனைவரும் கால் பதித்து உள்ளோம்.
வணக்கமாதம் எனப்படுவது தேவ அன்னை மரியாளுக்கு மிகவும்
பிடித்தமான செபமாலையின் மாதமாதலால், நமதாண்டவர் இயேசுவின்
தாயான அன்னை மரியா திரு அவையின் தாய் மட்டுமல்ல, எம்
ஒவ்வொருவர் இல்லங்களின் அன்னையாக, நமது குடும்பங்களைக்
கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வழிநடத்துபவர்.
செபமாலை செபித்தல் எனப்படுவது மிகச்சிறிய காரியமாக எம்மில்
பலருக்குத் தென்பட்டாலும், தேவ அன்னைக்கு மிகவும்
பிடித்தமான செபமாலையில் உள்ள ஒவ்வொரு மணியும் நாம் தேவ
அன்னைக்குச் சமர்ப்பிக்கின்ற ஒரு ரோஜா மொட்டு என்பதனை
உணர்ந்திருக்கிறோமா? செபமாலையின் மணி ஒவ்வொன்றும் எவ்வகையில்
உயர்ந்தது என்பதை நாம் உணர்ந்து செபிக்கிறோமா?
சிந்தித்துப் பார்ப்போம்.
செபமாலையின் ஒவ்வொரு மணியையும் குறிப்பாக, விண்ணக தந்தையே
செபத்தையும் அருள் நிறை மரியே செபத்தையும் உணர்ந்து
தியானித்து செபிப்போமானால், இறைமகன் இயேசு பரலோக தகப்பனை
நோக்கி எவ்வாறு செபிக்க வேண்டுமெனக் கற்றுத் தந்த செபத்தையும்,
தேவதூதர் கபிரியேல், அன்னை மரியாளை வாழ்த்திய வார்த்தைகளையும்
நாம் மீளவும் உச்சரிக்கிறோம் என்பதனை எம்மால் மறுக்க
முடியுமா?
பரலோகத்தில் இருந்து ஏணியாகத் தொங்க விடப்பட்ட தங்கமாலையாம்
செபமாலையால் அன்னை மரியாளை அனுதினமும் அணி
செய்யும்போது, நமது கரங்களில் அழகிய ரோஜா மலர் மாலையாக
விரியும் என்பதை நமது கண்களால் உணரமுடியுமென தேவ அன்னையின்
பல கோடிக்கணக்கான செபமாலைப் பக்தர்கள் கருதுகின்றனர்.
செபமாலையின் ஒவ்வொரு பத்து மணியின் இடையில் சொல்லப்படும்
"ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்'' எனப்படும்
சிறிய செபம், தேவ அன்னையால் பாத்திமா தரிசன வேளையில்
கடந்த 106 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு தரப்பட்ட செபம்
என்பதனை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா?.
பல்வேறு வேலைப்பளுவின் மத்தியில் நம்மில் அனுதினமும்
தேவ இரகசியங்கள் இருபதைத் தியானித்துச் செபிப்பது இயலாத
காரியம் என்பது உண்மை. எனினும், ஆகக்குறைந்தது ஐந்து
தேவ இரகசியங்களையாவது செபிக்க நேரமில்லை என்று நாம்
சொல்வது சரியானதா?. ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி சாதனத்தின்
முன் தொடர் நாடகங்களைப் பார்த்து ரசிக்க அல்லது
வேடிக்கை வினோதங்களுக்கு எவ்வளவு நேரம் நாம் செலவிடுகிறோம்?
சிந்திப்போம்.
அழியா வார்த்தைகளின் நற்செய்தியின் இரத்தினச் சுருக்கமான
செபமாலை நமதாண்டவர் இயேசுவின் பாஸ்கா மறைபொருளைத் தன்னுள்ளே
மிகப்பெரிய செல்வமாகக் கொண்டிருக்கிறது என்பதனை நாம்
அறிந்து, தெரிந்து வைத்திருக்கிறோமா?.
தேவ அன்னை மரியாள் கடந்த 106 ஆண்டுகளுக்கு முன்னதான
தனது பாத்திமா தரிசனத்தில், "அழிந்து கொண்டிருக்கும்
இவ்வுலகைக் காப்பாற்ற அனுதினமும் செபமாலை செபியுங்கள்"
என நம்மிடம் வேண்டுகோள் விடுத்தது, தற்போது நம்மை
வாட்டி வதைக்கும் அழிவுகள் இந்த ஆதிக்கத்தை உள்ளடக்கியதோ?
என எம்மைச் சிந்திக்க வைக்கவில்லையா?
அடுத்த வருடம் வரவிருக்கும் வணக்க மாதத்தில் உயிருடன்
இருப்போமோவென நாமறியோம்?. எனவே, வீடுகளில், அல்லது
ஆலயங்களில் செபமாலை செபிக்கும்போது முடிந்த அளவில் பங்கெடுத்துச்
செபிப்பது எமக்குச் சிரமாக இருப்பினும், செபமாலை
செபித்தலுக்கு மதிப்பளித்து, விசுவசித்து நடப்போம்.
அன்னை மரியாளுக்குப் பிடித்தமான அற்புதமான செபமாலை எனப்படும்
செபத்தைக் கற்றோர், கல்லாதோர், நீதிமான்கள், பாவிகள்,
பெரியோர், சிறியோரும் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து, தினம்தோறும்
செபிக்க முயலுவோம்.
பரலோகத்தில் இருந்து நம்மை நோக்கி ஏணியாகத் தொங்கவிடப்பட்ட
தங்கமாலையாம் செபமாலை யால் அன்னை மரியாளை அனுதினமும்
மகிழ் வோடு அணி செய்வோம் அழிவிலிருந்து இந்த உலகம்
காப்பாற்றப்பட மட்டுமல்ல - நமது குடும்பங்களிலும் - தனிப்பட்ட
வாழ்விலும் அமைதி கிடைத்திட தேவ அன்னை யின் ஆயுதத்தை
நமது கரங்களில் நம்பிக்கை யோடும், மனத்துணிவோடும் எடுப்போம்.
தேவ அன்னை மரியாவின் அன்புப் பிள்ளைகளாக செபமாலையின்
வணக்க மாதமாம் அக்டோபர் மாதத்தில் மட்டுமல்ல, மாறாக அனுதினமும்
செபமாலை செபித்து வாழுவோம்.
இன்று வீட்டிலும், நாட்டிலும் நடக்கும்
பிரச்சனைகளுக்கு காரணம் குடும்ப ஜெபமாலை இப்போது இல்லாமல்
போனதுதான். கடந்த 20 ஆண்டுகளாகத்தான் இவ்வளவு பெரிய அழிவுகள்,
அதுவும் நாம் கேள்வியே பட்டிராத அழிவுகள் நடப்பது இப்போதுதான்.
கத்தொலிக்கத்திலிருந்து பிரிந்து 100 சபைகளுக்கும்
மேல் வந்ததிற்கும் காரணம் குடும்ப ஜெபமாலை
நின்றதுதான்.
முன்பெல்லாம் நம் கத்தொலிக்க குடும்பங்கள் இரவு ஜெபமாலை
சொல்லாமல் தூங்க மாட்டார்கள். வீட்டில் இருப்பவர்கள்
எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஜெபமாலை சொல்வார்கள். பல வீடுகளில்
நற்செய்தி வாசித்து ஜெபமாலை ஜெபிப்பார்கள். இந்த ஜெபமாலை
கத்தொலிக்க குடும்பங்களை மட்டுமல்ல உலகையே
காப்பாற்றிக் கொண்டிருந்தது.
ஏனென்றால் ஜெபமாலை தனிப்பட்ட ஒருவருக்காக ஜெபிக்கப்படுவதில்லை.
"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே "பாவிகளாய்
இருக்கிற எங்களுக்காக "எங்களை சோதனையில் விழவிடாதேயும்"
என்று நாம் ஜெபிக்கும் போது உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்காகவும்
ஜெபிக்கிறோம். "
ஏன் குடும்ப ஜெபமாலை நின்று போனது? வீட்டிற்குள்
நுழைந்த டி.வி என்ற சாத்தான்தான் அதிலும் தனியார் சானல்கள்
வந்த பின்புதான் இத்தகையை இழிவான நிலையை நாம் சந்தித்துள்ளோம்.