• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

இயேசுவின் மடல்

நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்
திவ்ய நற்கருணை நாதர்

திவ்விய நற்கருணை செபமாலை

தவிர்க்க வேண்டிய  அவசங்கைகள்
 ☦️ நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-1

தேவ நற்கருணை ஆசீர்வாதங் கொடுக்கிறபோது வேண்டிக் கொள்ளும் ஜெபம்
மகா அன்புள்ள கடவுளே! ஆச்சரியத்துக்குரிய இரட்சகரே! தேவரீர் என்னைக் காப்பாற்ற இம்மாத்திரம் தாழ்ந்து, அப்பத்தின் ரூபமாய் தேவ நற்கருணையில் எழுந்தருளி, என்னை ஆசீர்வதிக்கத் தயைபுரிந்தபடியால் சாஷ்டாங்கமாக விழுந்து உம்மை ஆராதிக்கிறேன். சஞ்சலக் கடலில் மூழ்கி சிலுவையிலறையுண்டு என்னை இரட்சித்த ஆண்ட வரே, நான் எனக்குள் ஒடுங்கி நடுநடுங்கி இரு கரங் குவித்து பஞ்சேந்திரியம் உள்ளிந்திரியங்களையும் அடக்கிக்கொண்டு உமக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன். என் சீவியத்தை மாற்றி தேவரீருக்கு இனி நல்ல ஊழியம் பண்ண வார்த்தைப்பாடு கொடுக்கிறேன். தேவரீரே எனக்கு ஒருநாள் தீர்வையிட ஒட்டலோகமாய் வருவீராகையால் அந்தப் பயங்கரமான காலத்தில் என் பேரில் கிருபை வைக்க உம்மை இரந்து மன்றாடுகிறேன். உமது சோதிப் பிரகாசத்தை என் கண்ணால் காணக் கூடாத இப்போது இந்தத் தேவ நற்கருணையில் என் சர்வேசுரனாகிய தேவரீர் மெய்யாகவே எழுந்தருளி இருக்கிறீரென்று விசுவசித்து தாழ்ச்சியோடும் பக்தியோடும் உமக்குத் தேவ ஆராதனை பண்ணி எனது ஆசைப் பற்றுதலெல்லாம் தேவரீர் பேரிலேயே வைக்கிறேன் சுவாமி. ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.







நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-2

இஸ்பிரீத்து சாந்து மந்திரம்:

திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே நின்று உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரர்களுடைய பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இருதயங்களின் பிரகாசமே, எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரயாசத்தில் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே, எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே, உமது விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பனங்களை நிரப்பும்.

உம்முடைய தெய்வீகமன்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிறதைக் குணமாக்கும், வணங்காததை வணங்கப் பண்ணும், குளிரோடிருக்கிறதைக் குளிர் போக்கும், தவறினதைச் செவ்வனே நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோஷத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.







 நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-3

திவ்விய சற்பிரசாதத்திற்கு நிந்தைப் பரிகார ஜெபம்:

என் சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சேசுவே! மெய்யான தேவனும் மெய்யான மனிதனுமாகிய ஆண்டவரே, என் முழு இருதயத்தோடே தேவரீரைச் சிநேகித்து வணங்கி ஆராதிக்கிறேன். திருப்பீடத்தில் மறைந்து வசிக்கும் தேவனாகிய உமக்கு விரோதமாய் நான் நன்றி நாணமின்றிக் கட்டிக் கொண்ட தோஷ துரோக அநாச்சாரங்களுக்கு உத்தரிப்புப் பலியாகவும் மற்றும் மனுக்குலத்தோரால் செய்யப்பட்டதும், இனி செய்யப்படுவதுமாகிய பாவ அக்கிரமங்களுக்குப் பரிகாரமாகவும், அடியேனுடைய ஆராதனை வணக்கத் தோத்திரங்களைக் கையேற்றுக் கொள்ள கிருபை புரிந்தருளும். தேவரீருக்கு அடியேன் செலுத்த வேண்டிய ஆராதனை வணக்கத் தோத்திரங்களை உமது மகிமைப் பிரதாபத்துக்கு யோக்கியமான பிரகாரமாய் நான் செய்யக் கூடாதிருந்தாலும், என்னாலியன்ற தாழ்ச்சி நேசப் பற்றுதலோடே அவைகளை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

இதன்றியே புத்தியுடைத்தான ஜீவ ஜந்துக்களின் இருதய கமலங்களில் எவ்வளவான சிநேகப் பெருக்கம் அடங்கக் கூடுமோ அவ்வளவான பூரண அன்பு ஐக்கியத்தோடே தேவரீரை சிநேகிக்க ஆசைப்படுகிறேன். தேவரீரை அறியாமலும் சிநேகித்து சேவியாமலுமிருக்கிற அவிசுவாசிகள் எல்லோரும் மனந்திரும்பி வரவும் நான் ஆசைப்படுகிறேன். என் நேச சேசுவே! தேவரீருடைய தெய்வீகம் இப்பூலோகமெங்கும் பிரபலியமாய் ஆராதிக்கப்படவும், திவ்விய சற்பிரசாதத்தில் தேவரீருக்கு இடைவிடாத தோத்திரம் செலுத்தப்படவும் கடவதாக. ஆமென். (200 நாட் பலன்)

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

 நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-4

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.

இஸ்பிரீத்து சாந்து செபம்:

திவ்ய இஸ்பிரீத்து சாந்துவே, தேவரீர் எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் உம்முடைய சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.

பிரார்த்திக்கக்கடவோம்:

சர்வேசுரா சுவாமி, விசுவாசிகளுடைய இருதயங்களை இஸ்பிரீத்து சாந்துவின் பிரகாசத்தால் படிப்பித்தருளினீரே. அதே இஸ்பிரீத்து சாந்துவினால் நாங்கள் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்போதும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.
ஆமென்.

ஆண்டவரே, நாங்கள் சரீரக் கற்புடனே உமக்கு ஊழியம் செய்யவும் இருதய சுத்தத்துடனே உமக்குப் பிரியப்பட நடக்கவும் உம்முடைய இஸ்பிரீத்துசாந்துவின் அக்கினியினால் எங்கள் இருதயம் பற்றி எரியவும் தயை செய்தருளும் சுவாமி. எங்கள் கிரியைகள் வார்த்தைகளெல்லாம் உம்மைக் கொண்டு துவக்கவும், உம்மிலே முடியவும் வேண்டியதாகையால், நாங்கள் அதைச் செய்கிறதற்கு முன்னமே உம்முடைய ஏவுதலைத் தந்தருளும். செய்யும் போது உமது உதவியைத் தந்து நடத்தும் ஆண்டவரே. ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-5


தேவ நற்கருணையின் சந்நிதியில் செபம்-01

என் இருதய விருப்பமே! என் மதுரமே! என் ஆருயிரே! என் பாக்கியமே! என் நம்பிக்கையே! என் சிநேக தேவனான சேசுவே! தேவநற்கருணையில் தேவரீர் எங்களோடு வாசமாயிருக்க எத்தனை பாடுபட வேண்டியிருந்தது! தேவநற்கருணையில் பலியாயிருக்கச் சிலுவை மரத்தில் உயிர்விட வேண்டியிருந்தது. உமது தரிசனத்தால் எங்களுக்கு ஆறுதல் தந்தருள நீர் எத்தனை நிந்தை அவமானத்திற்கு உள்ளாக வேண்டியிருந்தது!

தேவரீர் எங்கள் பேரில் வைத்த மகா சிநேகப் பெருக்கத்தினாலும், நாங்கள் உம்மை நேசிக்க வேண்டுமென்கிற ஆவலினாலும், எல்லாவற்றிற்கும் உள்ளானீர். எழுந்தருளிவாராய். என் ஆத்தும அன்பனே. வாராய். நான் உமது பேரில் வைக்க வேண்டிய சிநேகத்தைச் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்கள் பங்கிட்டுக் கொள்ள வராதபடி. என் இருதய வாசலை இறுக அடைத்துப் போடும். ஆராதனைக்குப் பாத்திரமான என் இரட்சகரே, நீர்மாத்திரமே என்னை ஆட்கொள்ளும். உமக்கு மாத்திரமே என்னை முழுதும் சொந்தமாக்கிக் கொள்ளும். சிலமுறை நான் உமக்கு அடங்கி நடவாவிட்டால், உமது திருவுளத்திற்கு இசைந்த வண்ணம் நடக்க அதிகப் பிரயாசைப்பட்டு, எச்சரிக்கை சாதனமாயிருக்கும் படிக்கு என்னைத் தண்டியும்.

உமது மனதிற்கு இரம்மியமான காரியத்தை மாத்திரமே நான் விரும்பவும், தேவநற்கருணையில் அடிக்கடி உம்மைச் சந்தித்து இஷ்டமாய் உம்மோடு பேசிக் கொண்டிருக்கவும், அடிக்கடி தேவநற்கருணை வழியாய் உம்மை உட்கொள்ளவும் கிருபை செய்யும். யாராருக்கு என்னென்ன வேண்டுமோ தேடித்திரியட்டும். எனக்கு உமது சிநேகம் ஒன்று மாத்திரம் கிடைத்தால் போதும். நான் என்னை முழுதும் மறந்து உமது நன்மைத் தனத்தின் பேரில் மாத்திரமே சிந்தையாயிருக்க கிருபை செய்யும். பக்தி சுவாலகரே! நான் உங்களுடைய ஆனந்த பாக்கியத்தின் மேல் விருப்பம் வைக்காமல், சர்வேசுரன் பேரில் உங்களுக்குள்ள சிநேகத்தை மாத்திரமே விரும்புகிறேன். உங்களைப் போல் நான் சர்வேசுரனை நேசிக்கவும் அவருக்குப் பிரியப்பட நடக்கவும் நான் செய்ய வேண்டியது இன்னதென்று எனக்குக் கற்பியுங்கள். ஆமென்.


நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.



☦️ நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-6

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா! பிதா! சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. ஆமென்.

பரிசுத்த ஆவிக்கு மன்றாட்டு:

திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே நின்று உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும்.

தரித்திரர்களுடய பிதாவே! கொடைகளைக் கொடுக்கிறவரே! இருதயங்களின் பிரகாசமே! எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே! ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாடியே! பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே! பிரயாசத்தில் சுகமே! வெயிலில் குளிர்ச்சியே! அழுகையில் தேற்றரவே! எழுந்தருளி வாரும்.

வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கிற பிரகாசமே! உமது விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமன்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.

அசுத்தமாயிருக்கிறதைச் சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதைச் செவ்வனே நடத்தும்.

உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோஷத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு! சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.





☦️ நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-7

தேவ நற்கருணையின் சந்நிதியில் செபம்-02

நிர்ப்பாக்கியம் நிறைந்த பாவிகளின் மன்றாட்டைக் கேட்க, தேவ நற்கருணையில் எழுந்தருளியிருக்கத் திருவுளமான சேசுவே! நிர்ப்பாக்கியரிலும் நிர்ப்பாக்கியனான நன்றி கெட்ட பாவியாயிருக்கிற, அடியேனுடைய மன்றாட்டிற்கு இறங்கித் திருச்செவிகொடும். உமக்கு ஏற்காத துரோகத்தைச் செய்ய ஒருமித்ததினால், என் பாவ அகோரத்தைக் கண்டு மனம் நொந்து உருகி, உமது பாதத்தை நாடிவரும் என் பாவத்தைப் பொறுத்துக் கொள்ளும்.

என் கர்த்தரே சுவாமிஇ நான் உமக்கு ஏற்காத துரோகங்களைச் செய்ய உடன்பட்டதென்ன? என் ஆண்டவரே! நீர் மட்டற்ற சிநேகத்திற்குப் பாத்திரமாக இருக்கிறீர் என்கிறதைக் கண்டு, என் இருதயம் உம்மை மாத்திரமே நேசிக்கவும், உமக்கு மாத்திரமே பிரியப்படவும் விரும்பி நாடுகிறது. நீர் எனக்கு உதவியாயிராவிட்டால், நான் உம்மை நேசிக்கக் கூடாதென்கிறதினால் உமது மட்டற்ற வல்லமையையும், அளவற்ற நன்மைத் தன்மையையும், பரலோகமும் பூலோகமும் அறியும்படிக்கு, உமக்கு அடங்கி நடவாத அடிமையான என்னை உமக்குப் பிரமாணிக்கமான சிநேகிதனாக்கிக் கொள்ளும். உமக்கு சித்தம் உண்டானால் - எல்லாம் ஆகுமென்கிறதினால், நான் உமக்குச் செய்த தோஷம் துரோகத்திற்கு ஈடாக உம்மை ஆவலாய் நேசிக்கச் செய்யும். சேசுவேஇ உம்மை நேசிக்கிறேன், என் சிநேக தேவனே! உம்மையே - நேசிக்கிறேன். என் உயிரையும் எல்லாவற்றையும் விட அதிகமாக உம்மையே நேசிக்கிறேன். ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-8

தேவ நற்கருணையின் சந்நிதியில் செபம்-03

சகல நன்மையின் ஊருணியுமாய், பாவ வியாதிக்குப் பரம சஞ்சீவியுமாய், எளிய தரித்திரரின் பொக்கிஷமுமாய் இந்தப் பீடத்தில் எழுத்தருளிவரத் திருவுளமான என் ஆண்டவரே! பாவ வியாதியில் அகப்பட்டு மெலிந்தவனுமாய், வறுமை நிறைந்தவனுமாயிருக்கிற அடியேன் உமது பாதாரவிந்தத்தை அண்டி வந்து, உமது தயையை இரந்து கேட்கிறேன். நீசனாயிருக்கிற அடியேன் பேரில் இரங்கக் கிருபை செய்யும். எனக்கு நன்மை செய்ய வேண்டுமென்று பரலோகத்திலிருந்து, தேவரீர் இந்தப் பீடத்தில் எழுந்தருளி வந்ததைக் காண்கிற நான் என் நிர்ப்பாக்கியத்தைக் கண்டு, மன மடியப் போகிறதில்லை.

எங்கள் பேரில் வைத்த சிநேகப் பெருக்கத்தால், எங்களோடிருக்கத் திருவுளமான என் தயாபர சேசுவே! உம்மையே வாழ்த்தி ஸ்துதித்து, வணங்கி, நமஸ்கரிக்கிறேன். நான் உம்மை யாதொரு மன்றாட்டு கேட்க வேண்டுமேன்று தேவரீர் திருவுளமாயிருக்கிறதினால், இனி நான் ஒருக்காலும் உமக்கு ஏற்காத துரோகத்தை செய்யாதிருக்கவும், என் பலமெல்லாம் கொண்டு சிநேகிக்கவும், கிருபை செய்யும். ஆண்டவரே! நான் உம்மை முழு மனதோடும், ஆத்துமத்தோடும் என் புத்தி, பலம் எல்லாம் கொண்டு நேசிக்கிறேன். நான் உம்மை நேசிக்கிறேன் என்று சொல்லும்போது, வாயினால் மாத்திரம் சொல்லாமல் மனதோடும், வாக்கோடும், காலத்திற்கும் நித்தியத்திற்கும் உண்மையாகவே உம்மை நேசிக்கிறேன் என்று சொல்லச் செய்யும். சௌந்தரிய நேசத்தின் தாயே! சம்மனசுகளே, அர்ச்சியசிஷ்டவர்களே மட்டற்ற நேசத்திற்குப் பாத்திரமான சர்வேசுரனை மன்றாடுங்கள்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


☦️ நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-9

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதாஇ சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. ஆமென்.

பரிசுத்த ஆவியிடம் நம்மை ஒப்புவிக்கும் செபம்

அன்பான பரிசுத்த ஆவியே! உம்மை நாங்கள் போற்றுகிறோம்; புகழ்கிறோம். தந்தை மகன் பரிசுத்த ஆவிக்கு நன்றி. இறைவா உம் திருப்பாதங்களை முத்தம் செய்கிறோம். ஆண்டவரே உம் அருட்கரத்தால் எம்மை ஆசீர்வதியும். நாங்கள் என்றும் உமது பிள்ளைகளாக இருந்து உம்மிடம் வந்து சேரும் வரம் தாரும். உமக்காக நாங்கள் எதையும் தியாகம் செய்யும் பரிசுத்த உள்ளத்தை எங்களுக்குத் தாரும். ஒரு நிமிடம் கூட எம்மை விட்டுப் பிரியாதேயும். உம் பாதங்களை முத்தம் செய்து சரணடையும் எங்களை ஏற்று அரவணைத்துக் கொண்டு உம் அருளால் எங்களை நிரப்பியருளும். ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.



நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்


ஏப்ரல்-10

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதாஇ சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. ஆமென்.

திவ்விய சற்பிரசாத சந்நிதியில் ஜெபம்

திவ்விய சேசுவே! சந்தித்து ஆராதிப்போரின்றி எத்தனையோ திருப்பேழைகளில் இரா முழுதும் தனி வாசமானீர். அன்பு நிறைந்த என் இருதயத்தைத் தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிறேன். அதன் ஒவ்வொரு அசைவும்இ ஆட்டமும் தேவரீரை நோக்கிய சிநேகப் பிரார்த்தனையாய் இருக்கக்கடவது. திவ்விய சற்பிரசாதத்தில் மறைந்திருந்து எங்களுக்காகத் தேவரீர் எப்பொழுதும் விழித்துக் காத்துக் கொண்டிருக்கிறீர். தேவரீர் உமது நேசப் பெருக்கத்தால் ஒருபொழுதும் சோர்ந்து அயர்ந்து போவதில்லையே. பாவிகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அலுவலில் தேவரீர் ஒருபொழுதும் சலிப்பதுமில்லையே.

அன்புக்குரிய சேசுவே! சிநேகத்தினிமித்தம் சிறைப்பட்டிருக்கும் என் ஆண்டவரே! என் இருதயம் தேவரீருக்காகச் சுடர் விட்டெரியும் ஓர் தீபமாகக் கடவது. திவ்விய நற்கருணையில் வீற்றிருக்கும் காவல் தீரனேஇ எங்கள் க்ஷேம லாபத்தினிமித்தம் விழித்திருக்கலானீரே சுவாமி. ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-11

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே. ஆமென்.

திவ்விய நற்கருணை முன் சொல்லும் தேவ ஸ்துதிகள்

சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக!

அவருடைய பரிசுத்த நாமம் ஸ்துதிக்கப்படுவதாக!

மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனுமான இயேசு கிறிஸ்து நாதர் ஸ்துதிக்கப்படுவாராக!

இயேசுவின் திருநாமம் ஸ்துதிக்கப்படுவதாக!
அவருடைய மிகவும் அர்ச்சிதமான இருதயம் ஸ்துதிக்கப்படுவதாக!

அவருடைய விலைமதிக்கப்படாத திரு இரத்தம் ஸ்துதிக்கப்படுவதாக!

பீடத்தில் மிகவும் பரிசுத்த தேவ திரவிய அநுமானத்தில் இயேசு கிறிஸ்து ஸ்துதிக்கப்படுவாராக!

சர்வேசுரனுடைய தாயாராகிய அதி பரிசுத்த மரியம்மாள் ஸ்துதிக்கப்படுவாராக!

அவர்களுடைய அர்ச்சியசிஷ்ட மாசில்லாத உற்பவம் ஸ்துதிக்கப்படுவதாக!

கன்னிகையும் தாயுமான மரியம்மாளின் நாமம் ஸ்துதிக்கப்படுவதாக!

அவர்களுடைய மகிமையான ஆரோபணம் ஸ்துதிக்கப்படுவதாக!

அவர்களுடைய பரிசுத்த பத்தாவாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் ஸ்துதிக்கப்படுவாராக!

தமது சம்மனசுக்களிடத்திலும் அர்ச்சியசிஷ்டவர்களிடத்திலும் சர்வேசுரன் ஸ்துதிக்கப்படுவாராக!

~ ஆமென்.


நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.


நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்



ஏப்ரல்-12

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதாஇ சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. ஆமென்.

திவ்விய சற்பிரசாத நேசம்

1. ஓ! மதுரம் பொருந்திய சேசுவே! தேவரீருடைய திருப்பீடத்திற்கு முன் என் இருதயம் நேசச் சுடர் விட்டெரியும் ஒரு தீபமாகக் கடவது.

2. ஓ மிகவும் பிரிய சேசுவே! நான் உம்மை முகமுகமாய்க் கண்டு தரிசித்து சதா காலத்திற்கும் உமது மடியிலிருந்து இளைப்பாறுவதெப்போ?

3. மிகவும் ஆசை நேசம் அமைந்த ஆண்டவர! உமது அன்பின் தேவ திரவிய அநுமானச் சங்கிலியால் என்னைப் பந்தனமாக்கியருளும்.

4. மாடப் புறாவின் இறக்கைகள் எனக்கு இருக்குமாகில்இ ஓ! எவ்வளவு சந்தோமாய் நான் பறந்தோடிச் சென்று என் சேசுவின் திரு இருதயத்தில் சதா காலத்திற்கும் இளைப்பாறுவேன்.

5. நேச சங்கிலியால் பந்தனமாகிச் சிறைப்பட்டிருக்கும் திவ்விய சேசுவே! நிர்ப்பாக்கியமான என் இருதயத்தை உமது சினேக பந்தனமாக்கியருளும்.

6. மிகவும் பிரிய சேசுவே! உமக்காகவே தேவரீர் என் இருதயத்தை சிருஷ்டித்திருக்கிற படியால், திருப்பெட்டகத்திலுள்ள உமது திவ்விய இருதயத்தோடு அதை வைத்து மறைத்துக் கொள்ளும்.

7. சிறந்த குணாகுணங்கள் அமைந்த திவ்விய கர்த்தரே! என் இருதயம் மெலிந்து அயர்ந்து போனபடியால் உமது திரு இருதயத்திற்குள் அது பிரவேசித்து இளைப்பாற உத்தாரம் தந்தருளும்.

8. சேசுவே! அந்தரங்கமான உமது சிநேக இரகசியங்களை எனக்குப் படிப்பித்தருளும்.

9. திவ்விய சற்பிரசாதத்தில் வீற்றிருக்கும் சேசுவை உலகம் நன்றாய் அறியுமாகில் இப் பூலோகம் அதிகப் பிரகாசமாகவும் மறுலோகம் அதிக சமீபமாகவும் விளங்குமாம்.

10. மிகவும் பரிசுத்த திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும் ஸ்துதியும், நன்றியறிந்த தோத்திரமும் செலுத்தப்படக் கடவது.

~ ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.



 நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்


ஏப்ரல்-13

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. ஆமென்.

தீய ஆவியின் அனைத்து மாயைகளில் இருந்தும் விடுபட பரிசுத்த ஆவியிடம் செபம்

உலகின் இயக்கமும், எங்கள் மூச்சுக்காற்றுமான பரிசுத்த ஆவியே! கர்ஜிக்கும் சிங்கம் போலவும், கவரும் கழுகு போலவும், வேட்டையாடும் வேங்கை போலவும், எம்மிடையே கலகத்தையும், குழப்பங்களையும் விளைவிக்கும் சாத்தானின் சதித்திட்டங்கள் அனைத்தையும், உமது அக்னி நாவுகளால் அழித்தொழிப்பீராக. எம் மக்கள் துன்பங்களினால் சோர்ந்து போகும் போதும், வறுமையினால் வதைபடும் போதும், வாழ்வில் நெருக்கடிக்கு உள்ளாகும் போதும் உம்மை பற்றி பிடிப்பதற்குப் பதிலாக, மாற்றானின் மாய தந்திரங்களையும், மந்திர வித்தைகளையும் நம்பி பலி கொடுக்கவும், படையல் வைக்கவும் துணிந்து வருகின்றனர்.

எங்களது இத்தகைய இழிசெயலால் உமக்கு நாங்கள் வருத்தமும், துன்பமும் உண்டாக்குகின்றோம். சோதனை என்பது, விசுவாச உறுதிப்பாடு என்பதை நாங்கள் உணராமல் இருப்பதால் இத்தகைய தவறுகளை செய்கின்றோம். உம்மை நம்பியவர்கள் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லை என்பதை உணர, எங்களது ஞானக்கண்கள் தவறி விட்டன. நாங்கள் எங்கள் ஊனக்கண்களால் காண்பதால், தீயச்சக்திகளின் மீது நம்பிக்கை கொள்கிறோம். எங்களது ஆன்ம கதவுகளைத் திறந்து, எங்களை ஞானத்தின் ஒளியில் வழிநடத்தும்.

எங்களின் ஆற்றலும், அருட் காவலுமானவரே! நாங்கள் புறாவைப் போல கபடமற்றவர்களாகவும், அன்னப்பறவை போல ஞானம் பெற்றவர்களாகவும் இருந்து, தீமையை பின்தொடர்ந்து செல்லாமல் நன்மையின் வழியில் நடந்து, இறைமக்களின் உன்னத சாட்சிகளாக விளங்குமாறு உமது அருளை எம்மீது பொழிந்தருளும்.

நெருக்கடியும், துன்பமும் எங்களை வேதனைக்கு உள்ளாக்கும்போது, உமது பரிசுத்த நாமத்தை கூவியழைத்து, உமது இறக்கையின் நிழலில் இளைப்பாறும் எண்ணத்தை எங்களுக்குத் தந்தருளும். ஒருபோதும் உமது பரிசுத்த உள்ளத்துக்கு கேடு விளைவிக்காமல், மகிழ்ச்சியூட்டும் மனதை எங்களுக்குத் தாரும். கலங்கரை சுடரே! அருள் ஒளியே! இருளடைந்திருக்கும் எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி பாய்ச்சி, தூய்மை அடையச் செய்தருளும். நாங்கள் மறந்தும் கூட மாற்றானின் பாதையில் பயணம் செய்யாமல், உம்மோடு இணைந்து எங்கள் செயல்திட்டங்களை அமைத்திட அருள்புரியும். எந்தச் சூழ்நிலையிலும், சாத்தான் எங்களை வஞ்சனை செய்துவிடாமல் இருக்க, நிழல் போல் எம்மைத் தொடர்ந்து வாரும். ஏனெனில், உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்குப் பயமில்லை. அனைத்து விதமான சோதனை இருளிலிருந்தும் எம்மை விடுவியும். இடைவிடா உமது பரிசுத்த ஒளியால் எம்மை நிரப்பி, வாதை எங்கள் கூடாரத்தை அணுகாமல் காத்தருளும்.

~ ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.

 நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-14

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. ஆமென்.

தேவ நற்கருணையின் சன்னிதியில் வேண்டுதல்:

நிகரில்லாத பரம அன்பின் மிகுதியினாலே தேவ நற்கருணையில் எழுந்தருளி, எங்கள் பீடங்களின் மேல் நிலையாயிருக்க தயைபுரிந்த மதுர சேசுவே! அன்புக்குரிய இரட்சகரே! தேவரீர் பரம கர்த்தரென்றும், சர்வத்துக்கும் அதிபதியான கடவுளாகிய என் தெய்வமென்றும் விசுவசித்து நம்பி, இதிலே உம்மை மிகுந்த தாழ்ச்சி வணக்கத்துடனே ஆராதிக்கிறேன்.

பரம திவ்விய நற்கருணையில் இருக்கிற உமக்கு பாவிகள் செய்கிற துரோகங்களைத் தேவரீர் பாராட்டாமல், அடியோர்கள்பேரிலே காண்பிக்கிற மட்டில்லாத பட்சத்தைப்பற்றி முழுமனதோடு உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். எங்கள் நன்றிகெட்டதனத்தின் பேரில் மிகுந்த விதனப்பட்ட அனந்த மகிமையுள்ள பரம தேவனே! ஆராதனைக்குரிய இந்த தேவதிரவிய அநுமானத்தில் இருக்கிற உமக்கு செய்யப்பட்டதும், இனி செய்யப்படுவதுமாகிய துரோகங்களுக்கும் அவமானங்களுக்கும் நிந்தைகளுக்கும் பரிகாரமாக என்னால் இயன்ற மட்டும் பக்தி வணக்கத்தோடும், என் இருதயத்திலுள்ள முழுப்பட்சத் தோடும், உமக்கு நமஸ்காரம் செய்ய வருகிறேன்.

ஆ! என் திவ்விய கர்த்தாவே! முன்னால் நானே அநேக விசை உம்முடைய சந்நிதியில் வணக்கக் குறைச்சலாய் நடந்ததற்கும், தேவபக்தி சிநேகமில்லாமல் அசட்டையாய் உம்மை உட்கொண்டதற்கும் அடியேன்படுகிற மிகுதியான வியாகுலத்தை தேவரீருக்கு எவ்விதமாய்ச் சொல்லப் போகிறேன்?

தயையுள்ள கர்த்தாவே! அடியோர்களுடைய பாவதுரோகங்களை பொறுத்து, உம்முடைய அளவில்லாத கிருபையை மாத்திரம் நினைத்தருளும் சுவாமி. தேவரீருடைய மட்டற்ற அன்பு விளங்குகிற இந்தத் தேவதிரவிய அநுமானத்தில் உம்மை வணங்கவும், எல்லாருடைய வணக்கத்தையும் உமக்கு வருவிக்கவும் எனக்குள்ள பெரும் ஆசையை ஏற்றுக்கொள்ளும் சுவாமி. மெய்யாகவே சம்மனசுக்களும், அர்ச்சியசிஷ்டவர்களும் இதிலே உம்மை சிநேகித்து ஸ்துதித்து ஆராதிக்கிறது போல, நானும் என் முழு மனதோடு உம்மை நேசித்து தோத்தரித்து வந்தித்து வணங்க அபேட்சிக்கிறேன்.

மேலும் நான் சாஷ்டாங்கமாக விழுந்து ஆராதிக்கிற உமது இந்தத் திருச் சரீரத்தையும் விலைமதியாத இரத்தத்தையும் பற்றி, நான் இனி தேவ நற்கருணையில் உம்மை பயபக்தி வணக்கத்துடனே நமஸ்கரிக்கிறதினாலும், அதைத் தகுந்த ஆயத்தத்தோடு வாங்கிக்கொள்ளுகிறதினாலும், உம்முடைய கிருபையை அடைந்து, என் மரணத்திற்குப்பின் சகல மோட்சவாசிகளோடே கூடப் பேரின்ப பாக்கியத்தில் நித்தியமாய் உம்மைத் தரிசித்து ஸ்துதிக்கிறதற்குப் பாத்திர வானாகும்படி எனக்கு அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி. ஆமென்.

சர்வேசுரா சுவாமி! உம்முடைய திவ்விய குமாரனுமாய் எங்கள் பரம குருவுமாய் இருக்கிற சேசுநாதர், அடியோர்கள் செய்த பாவங்களின் பரிகாரமாக உமக்குச் செலுத்துகிற பரிசுத்தப் பலியை உம்முடைய தேவாலயத்தில் நின்றும், தேவரீர் பரலோகத்தில் வீற்றிருக்கிற உன்னத ஸ்தலத்திலே நின்றும் பார்த்து எங்கள் எண்ணிறந்த அக்கிரமங்களைப் பொறுத்தருளும். சிலுவையினின்று எங்கள் திவ்விய இரட்சகரும், மனிதாவதாரத்தால் எங்கள் சகோதரருமாகிய சேசுவினுடைய திரு இரத்தத்தின் சத்தம் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றது. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி!

சுவாமி உம்முடைய கோபத்தை அமர்த்தியருளும். எங்கள் மேல் உம்முடைய கிருபாகடாட்சம் வைத்து நன்மை புரியும். என் கர்த்தாவே! அதிக தாமதஞ் செய்யாதேயும். இவ்வூரின் மேலும் இச்சனத்தின் மேலும் தேவரீர் தயவாயிருக்கும்படிக்கு உம்முடைய திருநாமம் பிரார்த்திக்கப்பட்டபடியினாலே உமக்குத் தோத்திரமாகத் தானே எங்களுக்குக் கிருபை செய்தருளும் சுவாமி. ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு சதாகாலமும் ஆராதனையும் ஸ்துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது. (மூன்று தடவை சொல்லவும்.)


நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-15

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. ஆமென்.

குழந்தைகளை பரிசுத்த ஆவியின் அருட்காவலில் ஒப்படைக்கும் செபம்

பரிசுத்த ஆவியே! என்றும் எம்மை விட்டுப் பிரியாத பாதுகாவலரே நீர் எமக்குத் தந்த அன்பு செல்வங்களுக்காக உமக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறோம். எங்கள் குழந்தைகளை உமது அரவணைப்பிலும், பாதுகாப்பிலும் நாங்கள் ஒப்படைக்கிறோம். இவ்வுலக மாயைகளும், தீமைகளும் எங்களை அச்சுறுத்துகின்றன. தெய்வ பயமின்றி வாழும் எங்கள் குழந்தைகளுக்கு தெய்வ பயத்தையும், ஞானத்தையும் அளித்தருளும். எங்களுக்கு வழிகாட்டியும், துணையுமான பரிசுத்த ஆவியே! எங்கள் குழந்தைகளின் வழிப்பயணத்தில் துணையாக வாரும். அவர்களது சொல், செயல், சிந்தனைகளை ஆசீர்வதியும் அவர்களது நாவுகளுக்கு நல் வார்த்தைகளையும், பரந்துபட்ட ஞானப் பார்வையையும் அவர்களுக்கு வழங்கியருளும்.

சாத்தானின் சதியில் விழுந்து விடாமல் இருக்க அவர்களை நன்மையின் பாதையில் வழி நடத்தும். அவர்கள் பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் பெருமையைத் தேடித் தரக்கூடியவர்களாகவும், சமூகப் பார்வை உடையவர்களாகவும், கல்வி அறிவிலும், பொது அறிவிலும் சிறந்து விளங்கி, இந்த உலகின் கலங்கரைச் சுடர்களாக விளங்க உமது அக்னியின் சுடரால் அவர்களை அருட்பொழிவு செய்தருளும். போர்களினாலும், இயற்கை இடர்களினாலும் அவர்களுக்கு எத்துன்பமும் நேராமல், எந்நேரமும் உமது கருணையின் சிறகு கொண்டு அணைத்துப் பாதுகாத்தருளும். அவர்கள் பாதங்கள் வழிதவறிச் செல்லாமல் இறைவழியில் செல்ல ஒளியின் தூதுவர்களை அவர்களுக்குத் துணையாக அனுப்பும்.

நன்மையின் பரிசுத்த ஆவியே! எந்நாளும் எந்நேரமும் எங்கள் குழந்தைகளை விட்டுப் பிரியாமல் அவர்களை நீதியின் பாதையில் வழிநடத்தும். உயிரின் உயிரான பரிசுத்த ஆவியே! எங்கள் குழந்தைகளுக்கு நீடிய ஆயுளும், நிலைத்த நன்மைகளையும் மழையென பொழிந்து ஆசீர்வதியும். எங்கள் குழந்தைகள் உம்மை மறவாது போற்றிப் புகழும் வரம் அருளும். உம் உறவில் வாழ்வதை நாடும் நல்மனதை அவர்களுக்கு தந்தருளும். என்றும் வாழும் பரிசுத்த ஆவியே எங்கள் குழந்தைகளை என்றும் உமது சாட்சிகளாக மாற்றியருளும்.

~ ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.



நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-16

தேவ நற்கருணையின் சந்நிதியில் செபம்-04

எங்களுக்காகச் சிலுவைமரத்தில் பலியான மாசற்ற செம்மறிப்புருவையே! நீர் வதைபட்ட மரணத்தால், மீட்டு இரட்சிக்க வந்தவர்களில் நானும் ஒருவனென்கிறதை மறந்து விடாதேயும். நீர் எனக்காக உம்மைக் கையளித்ததும் அல்லாமல், இன்னும் என் பேரில் வைத்த சிநேகத்தால் தினந்தோறும் எனக்காகப் பீடத்தின் பேரில், தேவரீர் பலியாகத் திருவுளமானதினால் ஒருபொழுதும் உம்மை விட்டுப் பிரியவிடாதேயும். உமக்குச் சித்தமானபடி என்னை நடப்பிக்க என்னை முழுதும் உமக்குக் கையளிக்கிறேன்.

நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிற என் மனதை, உமது சிநேகத்தால் அடக்கி, உமது திருச்சித்தத்திற்கு எப்போதும் அடிமைப்பட்டதாயிருக்கச் செய்யும். என் ஆசைக்கு இரம்மியம் தேடாமல், மட்டற்ற உமது நன்மைத்தனத்திற்கு மாத்திரம் பிரியப்பட விரும்புகிறேன். என்னிடத்தில் உமக்கு அருவருப்பானதையெல்லாம் பறித்தெறிந்து, உமக்குப் பிரியப்பட வேண்டும் என்கிற ஆசை ஒன்றை மாத்திரமே எனக்குக் கட்டளையிட்டருளும். நீர் ஆசைப்படுகிறதையே நானும் ஆசைப்படச்செய்யும். என் இரட்சகரான கர்த்தாவே, நான் உம்மை நேசிக்க வேண்டுமென்று நீர் ஆசைப்படுகிறதினாலும், நீர் மட்டில்லாத நேசத்திற்குப் பாத்திரமாய் இருக்கிறதினாலும், நான் உம்மை நேசிக்கிறேன். உம்மை நேசிக்க வேண்டியபடி நான் நேசிக்கவில்லை என்கிறதினால், மிகவும் மனம் நொந்து விசனப்படுகிறேன். ஆண்டவரே! உமது நேசத்திற்காக என் உயிரைக் கொடுக்க ஆசைப்படுகிறேன். என் ஆசையைக் கையேற்றுக் கொண்டு உமது நேசத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.



நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்


ஏப்ரல்-17

பரிசுத்த ஆவியின் திருக்கொடைகளுக்காக நன்றி செபம்

மகா பரிசுத்த ஆவியே, நான் அன்றாட கடமைகளை செவ்வனே நிறைவேற்றவும், எனது இலட்சியத்தை அடையவும் நீரே எனக்கு வழிகாட்டுகிறீர். எனக்கு எதிராக பிறர் செய்யும் துரோகங்களை மன்னித்து, மறக்கும் மனவலிமையைத் தருபவர் நீரே. என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், நீர் என் அருகிலிருந்து எனக்கு வழிகாட்டுகின்றீர். இதுபோல, எனது அன்றாட வாழ்வில் நீர் செய்து வருகின்ற அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி கூறுகின்றேன்.

நான் உம்மை விட்டு ஒருபோதும் பிரியாதிருக்கும்படி, உமது அக்னியின் ஆவியால் என்னை அணைத்துக் கொள்ளும். நான் என்றும் உம்முடன் இருந்து, உமது முடிவில்லா மகிமையில் பங்குபெறவே விரும்புகிறேன். எனக்கு ஊட்டமளிக்கும் பரிசுத்த ஆவியே, எனை என்றும் பிரியாத துணையாளரே, எளியேனின் எளிய உள்ளத்து ஆவலை ஆசீர்வதித்தருளும். ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.




நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-18

தேவ நற்கருணையின் சந்நிதியில் செபம்-05

ஆண்டவரே! தேவரீர் எங்களோடு வாசமாயிருக்கவும், உம்மை நேசிக்கிறவர்களுக்கு உமது தரிசனத்தைக் கொடுக்கவும், பீடத்தை ஆலயமாகத் தெரிந்து கொண்டதினால், மனிதர் மேல் உமக்குள்ள சிநேகம் கரைகடந்ததாய் இருக்க வேண்டியது. மனிதர்கள் உம்மைச் சிநேகிக்க ஆசைவர இன்னும் நீர் செய்யக் கூடுமானதென்ன? நேசத்திற்குப் பாத்திரமான சேசுவே! நாங்கள் உம்மை அளவில்லாமல் சிநேகிக்கச் செய்யும். எங்களை இத்தனை ஆவலாய்ச் சிநேகிக்கிறவரை, நாங்கள் இத்தனை அற்பமாய்ச் சிநேகிக்கிறது ஞாயமோ?

சேசுவே, உமது சிநேக பாசத்தால் எங்களை, உமது அருகில் இழும். நீர் எத்தனை சிநேகத்திற்குப் பாத்திரமாயிருக்கிறீர் என்கிறதை நாங்கள் கண்டறியச் செய்யும். மட்டற்ற மகிமைப் பிரதாபமும், அளவற்ற நன்மைத் தனமுமுள்ள சேசுவே! நீர் மனிதர் மேல் வைத்த கரை கடந்த சிநேகத்தையும், மனிதர் உம்மைச் நேசிக்க வேண்டுமென்று நீர் செய்துவரும் இத்தனை ஆச்சரியமான காரியங்களையும் கண்ட பின்பு, இன்னும் இத்தனை ஆயிரம் பேர் உம்மை நேசிக்காமல் இருக்கிறதெப்படி? இத்தனைக் காலம் நான் உமக்கு நன்றிகெட்டவனாயிருந்தது போதும், நீர் மட்டற்ற சிநேகத்திற்குப் பாத்திரமாய் இருக்கிறதினாலும், நான் உம்மை எல்லாவற்றுக்கும் மேலாக சிநேகிக்க வேண்டுமென்று தேவரீர் கற்பிக்கிறதினாலும், என்னால் இயன்ற மட்டும் உம்மை நேசிக்கின்றேன். உம்மை மாத்திரம் நேசிக்கிறேன்.

ஓ, என் ஆண்டவரே! நான் இந்த மட்டும் உம்மை நேசிக்காமலிருந்ததற்கு என்னாலான பரிகாரம் செய்கிறேன். உமது மனதிற்குத் திருப்தியான பரிகாரம் நான் செய்யக் கிருபை செய்யும், உலக நன்மையை ஆசிக்கிறவர்களுக்குக் கொடும். மேன்மையான சம்பத்தாகிய உமது சிநேகத்தை எனக்குத் தந்தருளும். நீர் எனக்காகப் பேறுபெற்ற பலன்களைக் குறித்து, நான் உம்மை நம்பி இரந்து கேட்கும் சிநேகத்தை எனக்குத் தந்தருளும். சேசுவே உம்மை நேசிக்கிறேன். மட்டற்ற நன்மையே, நீயே என் சம்பத்து, நீயே என் பாக்கியம், நீயே என் சிநேகம். ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.







நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-20

திவ்விய நற்கருணைக்கு முன் நம் அன்பை வெளிப்படுத்துதல்

1.ஓ எங்கள் இனிய இயேசுவே! உமது திருப்பீடத்திற்கு முன் என் இதயம் அன்புச் சுடர் விட்டெரியும் பிரகாசிக்கும் தீபமாக ஒளிரட்டும்.

2.ஓ அன்புள்ள இயேசுவே! நான் உமது முகத்தை நேருக்கு நேராகக் கண்டு தரிசித்து, என்றென்றும் உமது மடியில் இளைப்பாற அருள் புரியும்.

3.என் மேல் ஆசையும் அன்பும் கொண்ட இயேசு ஆண்டவரே! உமது அன்பின் திவ்விய நற்கருணை என்னும் சங்கிலியால் என்னைக் கட்டிப் பிணைத்தருளும்.

4.மாடப்புறாவின் சிறகுகள் எனக்கு இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியோடு நான் பறந்து சென்று என் இயேசுவின் திரு இதயத்தில் என்றென்றும் இளைப்பாறி மகிழ்ந்திருப்பேன்!

5.அன்புச் சங்கிலியால் என்னைக் கட்டிப் பிணைத்துச் சிறைப்பிடித்திருக்கும் திவ்விய இயேசுவே!தகுதியற்ற என் இதயத்தை உமது அன்பால் பிணைத்தருளும்.

6.அன்புள்ள இயேசுவே! உமக்காகவே நீர் என் இதயத்தை உருவாக்கியதால், திருப்பேழையிலுள்ள உமது திரு இதயத்தோடு அதை வைத்து மறைத்துக் கொள்ளும்.

7.சிறந்த குணங்கள் கொண்ட திவ்விய இயேசுவே! என் இதயம் மெலிந்து, சோர்வுற்று, பெலனின்றிப் போனதால், உமது திரு இதயத்திற்குள் அதை வைத்து இளைப்பாற அருள் புரியும்.

8.இயேசுவே! அந்தரங்கமான உமது அன்பின் இரகசியங்களை எனக்குக் கற்றுத் தந்தரருளும்.

9.திவ்விய நற்கருணையில் வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்துவை இந்த உலகம் நன்கு அறிந்து கொண்டால், இந்த மண்ணுலகம் முழுவதும் மிகப் பிரகாசமாக இருக்கும். விண்ணுலகமும் மிக அருகில் இருக்கும்.

10.திவ்விய நற்கருணைக்கு எந்நேரமும், எக்காலமும், மாட்சியும், மகிமையும், புகழும், போற்றுதலும் நன்றியோடு கூடிய ஆராதனையும் உண்டாகக் கடவது. ஆமென்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.




 நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-21

திவ்விய நற்கருணை வாங்கத் தயாரிப்பு

நீ நன்மை வாங்குகிறதற்கு முன் ஆத்தும ஒறுத்தல், சரீர ஒறுத்தல் செய். நல்ல விதமாக சுவாமியை உட்கொள்ளும்படிக்கு அவர் தாமே உன் இருதயத்தைச் சுத்தம் செய்து தேவ வரப் பிரசாதங்களினால் உன் ஆத்துமத்தை அலங்கரிக்க வேண்டுமென்று மன்றாடு. தேவமாதாவையும், காவலான சம்மனசையும், நீ பக்தி வைத்திருக்கும் அர்ச்சியசிஷ்டவர்களையும் வேண்டிக்கொள்.

தேவ நற்கருணை வாங்குகிறபொழுது அந்த அர்ச்சியசிஷ்டவர்களுக்கு இருந்த பக்தி உனக்கும் வர உதவி செய்ய வேண்டுமென்று மன்றாடு. அந்த நினைவோடு நித்திரை செய்து விழித்தவுடனே உன்னிடத்தில் சேசுநாதர் சுவாமி எழுந்தருளி வரப் போகிறாரென்றும், அதனால் உனக்கு எத்தனை பாக்கியமும் நன்மையும் வருகிறதென்றும் நினைத்து அந்த நினைவோடு கோவிலுக்கு பயபக்தியுடன் சென்று விசுவாசம், ஆராதனை, நம்பிக்கை, தேவ சிநேக முயற்சிகளைச் செய்வாயாக.

பின்பு நன்மை வாங்கும் தருணத்தில் நீ எழுந்திருந்து கிராதிக்குச் சமீபத்தில் அடக்கவொடுக்க வணக்கத்துடனே போய் முழங்காலிலேயிருந்து குரு தேவ நற்கருணையைத் தம்முடைய கையில் எடுத்துக்கொண்டு ஒரு செபத்தை மூன்று விசை சொல்லும்போது நீயும், சுவாமி உனக்காகப் பட்ட பாடுகளைத் தியானித்துக் கொண்டு, இதோ உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே, ஆண்டவரே! என்னிடம் தேவரீர் எழுந்தருளி வர நான் பேறுபெற்றவன் அல்ல; தேவரீர் ஒரு வார்த்தை மாத்திரம் திருவுளம்பற்ற என் ஆத்துமம் ஆரோக்கியம் அடையும்" என்று அவரோடு நீயும் மூன்று விசை சொல்லி வெகு வணக்கத்தோடும், இருதய நேசத்தோடும், சற்பிரசாதத்தை உட்கொண்டு, வெகு மேரை மரியாதையோடும், தாழ்ச்சி பக்தியோடும் அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்து, முன்னிருந்த இடத்துக்குத் திரும்பி தாழ்ச்சி, பயம், நம்பிக்கை முதலிய முயற்சிகளைச் செய்யக் கடவாய்.

அந்த நாளில் மற்ற நாளைப் பார்க்கிலும் அதிக ஒடுக்க வணக்கமாயிருந்து ஞான புஸ்தகங்களை வாசித்து, சாயங்காலம் கோவிலுக்குப் போய் தேவ நற்கருணையைச் சந்தித்து வணங்கி மீண்டும் தாழ்ச்சி, சிநேகம் முதலான முயற்சிகளைச் செய்யக் கடவாய்.


நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.





 நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-24

திவ்விய நற்கருணை வாங்கும் முன் செபம்

விசுவாச முயற்சி:

என் ஆண்டவராயிருக்கிற சேசுகிறீஸ்துவே! அடியேன் தேவ நற்கருணை உட்கொள்ளும் போது தேவரீர் திரு ஆத்துமத்தோடும், தேவ சுபாவத்தோடும் அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாயின் திரு உதரத்திலெடுத்த திருச்சரீரத்தோடும் எழுந்தருளி என்னிடத்தில் வருகிறீரென்று உறுதியாய் விசுவசிக்கிறேன் சுவாமி. இது சத்தியமான காரியமென்று ஒப்புவிக்கிறதற்கு என்னுடைய இரத்த மெல்லாம் சிந்தி உமக்காக ஜீவனை இழக்க வேண்டியிருந்தாலும், நல்ல மனதோடே இழக்கத் துணிகிறேன். என் விசுவாசத்தை இன்னமும் உறுதிப்படுத்தியருளும் சுவாமி.

ஆராதனை முயற்சி:

என்னைப் படைத்து இரட்சித்து அனுச்சாரணம் செய்து வருகிற என் ஆண்டவரே, நித்திய பரம கடவுளான கர்த்தாவே! உமது திருச் சமுகத்தில் என்னுடைய புத்தி மனதை மிகவும் தாழ்த்தி மகா தாழ்ச்சி வினயத்துடனே உம்மை வணங்குகிறேன். தேவரீர் மாத்திரமே சகல தோத்திரங்களுக்கும் ஆராதனைகளுக்கும் பாத்திர மாயிருக்கிறீர்.

தாழ்ச்சி முயற்சி:

ஆ சுவாமி! தேவரீர் யார்? நான் யார்? தேவரீரிடத்தில் அற்பமாகிலும் பழுதில்லை, நான் மட்டில்லாத பழுதுள்ளவன்; தேவரீர் என்னைப் படைத்தவர்; நான் உம்மாலே படைக்கப் பட்டவன்; தேவரீர் மட்டில்லாத மகிமையுள்ளவராகையால், உமது சமுகத்தில் பத்திராசனரென்கிற சம்மனசுக்கள் முதலாய் நடுநடுங்குகிறார்கள். நான் நிலத்தின் சகதிக்குள் உதிக்கிற புழுவுக்குச் சமானமாயிருக்கிறேன். தேவரீர் மட்டில்லாத பரிசுத்தர். நான் அவலட்சண பாவச் சேற்றிலே புரண்டு அசுத்த நாற்றமாயிருக்கிறவன் இப்படிப்பட்ட நானோ தேவரீரை உட்கொள்ளுகிறது? இத்தனை நீசனாயிருக்கிற என்னிடத்தில் எழுந்தருளி வர எப்படி மனந்துணிந்தீர்? அற்பப்புழுவுக்குச் சமானமாய் இருக்கிற என்னிடத்தில் என்ன நன்மை கண்டீர்? ஆ, சுவாமி! மெய்யாகவே தேவரீர் என்னிடத்தில் எழுந்தருளிவர நான் பேறுபெற்றவனல்ல. தேவரீர் ஒரு வார்த்தை மாத்திரம் திருவுளம் பற்றுவீரானால் என் ஆத்துமம் வியாதியினின்று விடுபட்டு ஆரோக்கியத்தையடையும். என் ஆத்துமமே, உன் கர்த்தருடைய மகிமையையும், உனது நீசத்தனத்தையும் கண்டு அவருடைய சமூகத்திலே வெட்கி நாணக் கடவாய்.

பயமும் நம்பிக்கையுமுள்ள முயற்சி:

சுவாமி! அடியேன் உமது பரிசுத்த தன்மையையும் மகிமைப் பிரதாபத்தையும், என்னுடைய பாவங்களையும் நீசத் தன்மையையும் நினைக்கும் பொழுது உம்மைத் தேவ நற்கருணை வழியாக உட்கொள்ளப் பயப்படுகிறேன். பின்னொரு பக்கத்தில் உம்மை உட்கொள்ளாமல் போனால் எனக்கு நித்திய சீவியமில்லாமல் உமது கோபத்துக்கு உள்ளாவேனென்று நினைத்து நடுநடுங்குகிறேன். இனி நான் போகும் வழி என்ன சுவாமி! அடியேன் எத்தனை அபாத்திரவானாயிருந்தாலும், உமது கிருபையை நம்பி நீர் கட்டளையிட்டபடி உம்மை உட்கொள்ளத் துணிகிறேன். தேவரீர் தாமே எனது ஆத்துமத்தை உமது வரப்பிரசாதங்களினால் அலங்கரித்து, உமக்கு யோக்கியமான இருப்பிடமாயிருக்கத் தயை செய்தருளும் சுவாமி.

சந்தோஷ முயற்சி:

என்னாண்டவரே! தேவரீர் என்னை ஒன்று மில்லாமையிலிருந்து உண்டாக்கினீரே. உமக்கே தோத்திரமுண்டாகக்கடவது. என் ஆத்துமமே, என்ன நினைக்கிறாய்? நீ செய்யுங் காரியம் இன்னதென்று அறிவாயோ? உனக்கு எவ்வளவு கனமான மகிமை வருமென்று விசாரிக்கிறாயோ? நித்திய சர்வேசுரனுடைய ஏக குமாரனாகிய திவ்விய சேசுநாதர் திரு ஆத்துமத்தோடும் திருச்சரீரத்தோடும் தேவ சுபாவத்தோடும் அவருக்குள்ள பாக்கியங்களோடும் நம்மிடத்தில் வருவாரே! அவரும் நாமும் ஏகமாய் ஒன்றித்திருப்போமே. அவர் நம்மிடத்திலேயும் நாம் அவரிடத்திலேயும் இருக்குமாப் போலாயிற்றே. ஆ! என் ஆத்துமமே, நமக்கு எத்தனை பாக்கியமும் எத்தனை மகிமையும் வருகிறதென்று பார்த்து சந்தோஷப்படக் கடவாய்.

ஆசை முயற்சி:

என் திவ்விய அன்பனுமாய் நாதனுமாயிருக்கிற பரம கர்த்தாவே! எனக்கு மிகவும் பிரிய சேசுவே! என் பாக்கியமே, என் சந்தோஷமே, என் இருதயமே, என் கண்மணியே, ஆ! என் அன்பே, என்னிடத்தில் எழுந்தருளி வாரும். பசி தாகத்தை அனுபவிக்கிறவர்கள் எவ்வளவு ஆவலுடன் போஜனமும் தண்ணீரும் தேடுகிறார்களோ, அப்படியே என் ஆத்துமம் தேவரீரை மிகுந்த ஆவலுடன் தேடுகிறது சுவாமி! சீக்கிரமாக வாரும். தாமதம் செய்யாதேயும். நீர் ஒரு நாழிகை தாமதம் செய்கிறது எனக்கு ஒரு வருஷம் போலிருக்கிறது. உம்முடனே ஒன்றிக்க வேண்டுமென்கிற ஆசையின் மிகுதியினால் என் ஆத்துமம் மயங்கிக் களைத்துப் போகிறது சுவாமி.

(பிற்பாடு மிகுந்த வணக்கம், தாழ்ச்சி, ஆசையுடனே தேவ நற்கருணை உட்கொண்டு, பஞ்சேந்திரியங்களையும் உள்ளிந்திரியங்களையும் அடக்கி அங்குமிங்கும் பராக்குப் பாராமலும், புறத்து விசாரங்களுக்கு இடங்கொடாமலும், உள்ளத்தில் வாசமாய் உன் இருதயத்தில் எழுந்தருளி வந்திருக்கிற சேசுநாதருக்குத் தோத்திரம் செய்யவும், அவரோடு பேசிக் கொண்டிருக்கவும் கடவாய்.)

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.





நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்


ஏப்ரல்-25

திவ்விய நற்கருணையின் முன் தியானச் செபம்

இயேசு கிறிஸ்து பேசுகிறார்: ஆத்துமமே, நீ நமக்குப் பிரியப் படத்தக்கதாக அநேக காரியங்களை அறிந்திருப்பது அவசரமல்ல. நம்மை உருக்கமாய்ச் சிநேகிப்பதே போதும். உன் பிரிய சிநேகிதனோடு சம்பாஷிப்பதுபோல இப்போது நம்மோடு பேசுவாயாக. யாரைப் பற்றியாவது நம்மிடத்தில் மனுப் பேச வேண்டியதுண்டா? உன் உற்றார் உறவின் முறையார் சகோதரர் சகோதரிகளுடைய பேரென்ன?

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

அவர்களில் ஒவ்வொருவருக்கும் நாம் என்ன செய்ய வேண்டுமென்கிறாய்?

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

அவர்களுக்கு வேண்டிய காரியங்களையயல்லாம் நம்மிடத்தில் கேள். ஏனென்றால் தங்கள் சுயநலத்தை மறந்து புறத்தியாருடைய நன்மையை நாடியிருக்கிற தயாள சற்குணமுள்ள ஆத்துமங்கள் நமக்கு மிகவும் பிரியம்.

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

எந்த ஏழைக்கு நாம் இரக்கஞ் செய்ய வேணுமென்கிறாய்? அங்கே ஒரு வியாதியஸ்தன் மிகவுந் துன்பப்படுகிறதாக நீ பார்த்தாயே. அவனார்? எந்தப் பாவி மனந்திரும்ப வேணுமென்று கேட்கிறாய்?

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

யாரோடே இப்போது நீ சமாதானமாய்ப் போக வேணுமென்கிறாய்? அவர்களுக்காக இப்போது சற்று நேரம் பக்தியோடு வேண்டிக்கொள்.

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

இருதயப் பற்றுதலோடே செபிக்கப்படும் செபங்களையெல்லாம் கேட்டருளுவோமென்று நாம் வாக்குறுதியாகத் திருவுளம்பற்றியிருக்கிறோமே. அப்படியே சிநேகிதர் ஒருவரொருவருக்காக ஒப்புக்கொடுக்கிற செபம் இருதய உருக்கம் அமைந்த செபம் அல்லவா? இதற்கு நாம் இரங்காதிருப்போமா? உனக்காக ஏதாவது நன்மை வரப்பிரசாதம் நீ கேட்க வேண்டியதில்லையா?

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

உனக்குப் பிரியமானால் உன் ஆத்துமத்திலுள்ள குறைகளையயல்லாம் எழுதிக் கொண்டு வந்து நமது சமூகத்தில் வாசித்துக் காட்டு.

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

ஆசாபாசம், அகந்தை, பொருளாசை, சுயபட்சம், கோழைத் தனம், சோம்பல் முதலிய துர்க்குணங்கள் மட்டில் நீ எவ்வளவு மனசார்புள்ளவனாய் இருக்கிறாய்?

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

இந்தத் துர்க்குணங்களையயல்லாம் நீ ஜெயிக்கத் தக்கதாக, நாம் உன்னிடத்தில் எழுந்தருளி வந்து உனக்கு உதவி செய்ய வேணுமென்று மன்றாடக் கடவாய். நிர்ப்பாக்கியமான ஆத்துமமே வெட்கப்படாதே! ஏனென்றால் முதலில் இப்பேர்ப்பட்ட துர்க்குணங்களுக்குள்ளாயிருந்த அநேகர் உருக்கமாய் மன்றாடிக் கேட்டுக்கொண்டபடியால், நமது உதவியைக் கொண்டு அவர்கள் அந்தக் குற்றங்களைக் கொஞ்சங்கொஞ்சமாய் ஜெயித்து ஜெயசீலராகி, இப்போது முத்தி முடிதரித்த அர்ச்சியசிஷ்டவர்களாக மோட்ச இராச்சியத்தில் வீற்றிருக்கிறார்கள்.

புத்தி, ஞாபகம், தேர்ச்சி, உடல் நலம் முதலிய பிரபஞ்ச நன்மைகளையும் நம்மிடத்தில் கேட்க நீ கூச்சப்படாதே. அவை களை எல்லாம் நாம் கொடுக்கச் சித்தமாயிருக்கிறோம். அவைகளால் உன் ஆத்துமம் அதிக பரிசுத்தமாகக் கூடுமானால் அவைகளை உனக்குக் கட்டளையிட்டருளுவோம்.

ஆத்துமமே இன்றைக்கு உனக்கு என்னென்ன வேணும்? உனக்கு நன்மை செய்ய நாம் எவ்வளவோ ஆசைப் படுகிறோம்!

உனக்கு ஓயாத கவலையை உண்டுபண்ணு கிற அலுவல் ஏதாவது உண்டா? அதை நமக்கு விவரமாய்ச் சொல்

அந்த அலுவலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

அதில் என்னென்ன பிரயோசனம் வருமென்று நம்பி இருக்கிறாய்? உன் உற்றார், உறவினர், முறையார், பெற்றோர், பெரியோருக்குப் பிரியப்படுகிறதற்காக எதைச் செய்கிறாய்? அதனால் அவர்களுக்கு என்ன நன்மை செய்யலாமென்று எண்ணியிருக்கிறாய்?

நமக்காக நீ ஏதாகிலும் செய்ய மாட்டாயா? உன் உறவின் முறையார் சிநேகிதர் நம்மை மறந்து போகிறார்களே! அவர்களுடைய ஆத்துமங்களுக்கு வேண்டிய நன்மை செய்ய உனக்கு மனதில்லையா? எந்த விஷயத்தில் அதிக அக்கறையாய் அல்லது கரிசனத்தோடு உழைத்து வேலை செய்கிறாய்? எந்தெந்த முகாந்தரத்தைப் பற்றி நீ அதிலே ஓயாத சிந்தனையாயிருக்கிறாய்? அதற்காக நீ பிரயோகித்துக் கொள்ள நினைக்கும் உபாயங்கள் என்ன?

உனது சுக துக்கங்களையும் சலிப்புச் சஞ்சலங்களையும் நமக்குச் சொல்லிக் காட்டு. அவற்றின் காரணத்தை உனக்கு விளக்கிக் காண்பிப்போம். உன் ஏற்பாடு பிரயத்தனங்களில் யாருடைய உதவியை நீ கோரியிருக்கிறாய்? சகல இருதயங்களுக்கும் எஜமான் நாம் அல்லவா? நமது இஷ்டம் போல் அவைகளை படிப்படியாய் இளக்கி வசப்படுத்துவோம். உன் கோரிக்கை பிரயத்தனங்களுக்கு உதவியானவர்களை உன் கிட்டக் கொண்டு வந்து விடுவோம்.

ஆத்துமமே! உனக்கு ஏதாவது தொல்லை தொந்தரவுகள் உண்டா? அதன் விபரத்தை நமக்கு வெளிப்படுத்து.

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

நீ ஏன் சலிப்பாய் இருக்கிறாய்? உனக்குக் கஸ்தி வருவித்தது யார்? உன்னை நிந்தித்து வேதனைப்படுத்தியதார்? உன் அகந்தையைக் குத்திக் காயப்படுத்தினது யார்? அப்படிப் பட்டவர்கள் எல்லாருக்கும் நீ பொறுத்தல் கொடுக்கிறாயென்றும் அந்தக் குறைகளை முழுவதும் மறந்து விடுவாயென்றும் உறுதியாய்ச் சொல்லி அவர்களுக்காக வேண்டிக்கொள். நாமும் உன்னை ஆசீர்வதிப்போம்.

உனக்குக் கலக்கம் வருவிக்கிற தந்திர சோதனைகள் ஏதாவது உண்டா? காரணமில்லாத பயம் சில விசை உன் இருதயத்தைக் கலங்கடிக்கிறதா?

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

ஆத்துமமே பயப்படாதே. நமது பேரில் நம்பிக்கையாயிரு.

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

நாம் உன்னிருதயத்தில் வாசம் பண்ணுகிறோம். அங்கே நடக்கிற விசேங்களையயல்லாம் நாம் அறிந்திருக் கிறோம். நாம் உனக்கு உதவி செய்வோம். தைரியமாயிரு. உன் சிநேகிதரென்று வெறும் பேர் படைத்து குறை பேசி உனக்கு வஞ்சனை செய்கிறவர்கள் உண்டா?

(சிறிது நேரம் மௌனமாகச் சிந்திக்கவும்)

அவர்களுக்காகவும் வேண்டிக்கொள். உன் மன ஆறுதலுக்கு அவசரமாகில் அவர்கள் மனதை மாற்றி எதார்த்தவாதி களாக்குவோம்.

நமக்கு சொல்லத்தகும் சந்தோஷ விசேஷம் ஒன்றுமில்லையா? உன்னோடே நாமும் மகிழத்தக்கதாக அந்த விசேங்களை நமக்குச் சொல்லக் கூடாதா? நேற்றைய தினமுதல் உனக்கு நேரிட்ட சந்தோ விசேங்களை நமக்கு வெளிப்படுத்து. நீ நினையாத சமயத்தில் உன்னைச் சந்திக்க வந்த ஒரு சிநேகிதரால் நீ அடைந்த சந்தோமும் உனக்கிருந்த அச்சம் சலிப்புகள் நீங்கி உனக்கு உண்டான ஆறுதல் அகமகிழ்ச்சியும், சிநேக மேரையாய் உனக்குக் கிடைத்த கடிதமும் சந்திப்புச் சாமான்களால் வந்த அக்களிப்பும் இவைகளெல் லாம் நம்மாலே தான் உனக்கு அனுப்பப்பட்டன.

ஆத்துமமே! இவைகளுக்காக நீ ஏன் நன்றியறிதல் காண்பிக்கிறதில்லை? சுவாமி, நன்றியறிந்திருக்கிறேன், உமது திருநாமம் வாழ்த்தப்படக்கடவது" என்று ஏன் சொல்லுகிறதில்லை? நன்றியறிதல் அதிகமான நன்மையை விளைவிக்குமே. உபகாரம் மறக்கப்படாதிருப்பதைக் காண்பது உபகாரிக்கு அதிக உதார குணத்தை வருவிக்கு மல்லவா?

நமக்கு நீ செய்ய விரும்பும் வாக்குத் தத்தங்கள் ஏதாவது உண்டா? உன் இருதய அந்தரங்கமெல்லாம் நமக்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது. பிறரை நீ ஏய்த்துப் போட்டாலும், உன் ஆண்டவராகிய நம்மை ஏய்க்க முடியாது. ஆகையால் ஆத்துமமே! உண்மை எதார்த்தத்துடன் நமது சமூகத்தில் சஞ்சரிப்பாயாக.

அந்தப் பாவ சமயத்தை விலக்கிவிடத் தீர்மானித்திருக் கிறாயா? உன் ஆத்துமத்துக்குப் பொல்லாப்பாயிருக்கிற அந்தப் பொருளை விட்டு விடுவாயா? உன் மன ரூபிகரத்தை வீணாய்க் குழப்பிக் கொண்டிருக்கிற அந்தக் கெட்ட புத்தகத்தை இனி வாசியாமல் தள்ளிப் போடுவாயா? உன் ஆத்தும சமாதானத்துக்கு விக்கினமாயிருக்கிற இன்னின்னாருடைய சகவாசத்தை விட்டு விடுவாயா? உனக்குப் பொல்லாப்பு செய்பவர்களுக்கு எப்படித் தயை சாந்தகுணம் காண்பிக்க வேணுமென்று நம்மிடத்தில் கற்றறிந்துகொள்.

ஆத்துமமே உனக்கு ஆசீர்வாதம். இப்போது நீ போய் உன் வேலைகளைச் செய். ஒழுங்குபோல் மெளனமாயிரு. அடக்க ஒடுக்கமாயிரு. கீழ்ப்படிதல் உள்ளவனாயிரு. பிறர்நேசமுள்ளவனாயிரு. அமலோற்பவ மாதாவை அதிமிக அன்போடு நேசித்திரு. நாளைக்குத் திரும்ப வா. வரும்போது உன் இருதயம் அதிகப் பக்திப் பற்றுதல் அமைந்ததாய் இருக்கும்படி பார்த்துக்கொள்.

இனி உன்னிருதயம் நன்மையில் சார்ந்ததுமாய் நன்மை செய்ய அதிக உறுதியான தீர்மானமுள்ளது மாயிருக்க வேண்டும். நாளைக்கு சில புது வரப் பிரசாதங்களையும் நன்மைகளையும் உனக்குக் கட்டளையிடச் சித்தமாயிருக்கிறோம்.

(சிறிது நேரம் மௌனமாகச் செபத் சிந்தனையில் இருக்கவும்)

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு, சதாகாலமும் ஆராதனையும் துதியும் தோத்திரமும் நமஸ்காரமும் உண்டாகக் கடவது.





 நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-26

தூய ஆவியின் துணையை நோக்கிச் செபம்

தூய ஆவியாரே எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து உமது பேரொளியின் அருட்சுடரை எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருளுவீர். நன்கொடை வள்ளலே வந்தருளுவீர். இதய ஒளியே, வந்தருளுவீர். உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தன்மை தருபவரே, உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதல் ஆனவரே, உன்னதப் பேரின்ப ஒளியே, உம்மை நம்புவோரின் இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவுமில்லை. மாசு கொண்டதை கழுவிடுவீர். வரட்சி உற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப்போனதை ஆண்டருளுவீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும் உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணிய பலன்களையும் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பை அளித்து அழிவில்லா இன்பமும் அருள்வீரே. - ஆமென்.








நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-27

தூய ஆவியாரால் நிரப்பப்படச் செபம்

நீங்கள் மனம் மாறுங்கள், உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெருவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். (திருத்தூதர் பணிகள் 2:38) என்பது புனித பேதுருவின் அறிவுரை. எனவே தூய ஆவியார் நம்மில் நிரம்ப வேண்டுமெனில் நாம்:

1. நம் பாவங்களுக்காக மனத்துயரடைய வேண்டும்.

2. இயேசு கிறிஸ்துவை நம் ஒரே மீட்பராக ஏற்க வேண்டும்.

3. தூய ஆவியார் நம்மை நிரப்ப உருக்கமாகக் கெஞ்சி மன்றாட வேண்டும்

எல்: என்றும் வாழும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே, எங்கள் அன்பு இயேசுவே, நீர் வாக்களித்த தூய ஆவியாரை எங்கள் மீது அனுப்பியருளும். உம் தூய ஆவியாரின் கனிகளையும், கொடைகளையும், அருங்கொடைகளையும் எங்களுக்கு அருளி எங்களைப் புதிய படைப்பாக மாற்றியருளும். இயேசுவே, உமக்கு நன்றி! இயேசுவே உமக்குப் புகழ்! விண்ணுலகத் தந்தையே, எங்கள் மீது உம் தூய ஆவியாரைப் பொழிந்தருளும். நன்றி தந்தையே, என்றும் புகழ் உமக்கே. ஆமென்.

முத: மூவொரு இறைவா, உம்மைத் ஆராதிக்கிறோம்.
எல்: அனைத்திற்கும் முழு முதல் பொருள் நீரே.

முத: இறைவா, உம்மை விசுவசிக்கிறோம்.
எல்: என்றும் மாறாத நிலையான உண்மை நீரே.

முத: இறைவா, உம்மை நம்புகிறோம்.
எல்: எல்லையற்ற இரக்கமும், நிறை ஆற்றலும் கொண்டவர் நீரே.

முத: இறைவா உம்மை அன்பு செய்கிறோம்.
எல்: அளவற்ற நன்மையும் அன்பும் கொண்டவர் நீரே.

முத: அன்புத் தந்தையே, உம் தூய ஆவியாரை அனுப்பியருளும்.
எல்: அவர் எங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவராக.

முத: இனிய இயேசுவே, உம் தூய ஆவியாரை அனுப்பியருளும்.
எல்: அனைத்திலும் நாங்கள் இறைவனை மாட்சிப்படுத்துவோமாக.

முத: தூய ஆவியே எம்மில் எழுந்தருளி வாரும்! உம்முடைய இறைமக்களின் உள்ளங்களை நிரப்பியருளும். உம் அன்புத் தீயால் எங்களின் உள்ளத்தைப் பற்றி எரியச் செய்தருளும்.
எல்: உம்முடைய ஞானக்கதிர்களை வரவிடுவீர். அதனால் உலகைப் புதுப்பிப்பீர்.

முத: செபிப்போமாக! எல்லாம் வல்ல இறைவா! உம் மக்களின் உள்ளங்களைத் தூய ஆவியின் ஒளியால் தெளிவுப்படுத்தினீரே. அந்தத் தூய ஆவியின் ஒளியால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவருடைய ஆறுதலால் மகிழ்ச்சி பெறவும் அருள்புரிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல்: ஆமென்.





நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-28

தூய ஆவியாருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் செபம்

விண்ணகத் தந்தையோடும் அவரது திரு மகனாம் இயேசு கிறிஸ்துவோடும் உறவாடும் தூய ஆவியாரே! விண்ணகச் சாட்சிகளின் பெருங்கூட்டத்திற்கு முன் முழந்தாள்படியிட்டு, என்னையும், என் ஆன்மாவையும், என் உடலையும் அர்ப்பணிக்கிறேன். உமது தூய்மையின் பிரகாசத்தையும், உமது தவறாத நீதியின் திறமையையும், உமது அன்பின் வலிமையையும் நான் போற்றிப் புகழ்கிறேன். என் ஆன்மாவின் வல்லமையும் ஒளியும் நீரே. நான் இருப்பதும் இயங்குவதும் வாழ்வதும் உம்மாலே தான். என் அவநம்பிக்கையினாலும் என் அற்பப் பாவங்களினாலும் உம்மை நான் ஒருபோதும் துயரத்துக்குள்ளாக்காமலிருக்க என் முழு உள்ளத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகிறேன். என் ஒவ்வொரு சிந்தனைகளையும் இரக்கத்துடன் காத்து, உமது ஒளியைக் காணவும், உமது குரலைக் கேட்கவும், உமது இரக்கமுள்ள ஊக்கங்களைப் பின்பற்ற தயை புரியும்.

நான் உம்மை என்றும் பற்றிக் கொண்டு, என் பலவீனத்திலே என்னைக் காக்கும்படி என்னை உமக்களிக்கிறேன். இயேசுவின் துளையுண்ட கால்களைப் பிடித்து, அவருடைய ஐந்து திருக் காயங்களையும் பார்த்து, அவருடைய திரு இரத்தத்தில் நம்பிக்கை கொண்டு, குத்தித் திறக்கப்பட்ட விலாவையும் இதயத்தையும் வணங்கி, ஆராதனைக்குரிய ஆவியாரே, என் பலவீனத்தின் உதவியாளரே, நான் என்றும் உமக்கு எதிராகப் பாவம் செய்யாதவாறு, உம் அருளினால் என்னைக் காத்தருளும்படி உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன். தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் தூய ஆவியாரே, ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கிறேன்" என்று நான் எங்கும் எப்பொழுதும் சொல்ல உமதருளைப் பொழிந்தருளும். ஆமென்.





நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-29

தூய ஆவியாரின் ஏழு வரங்கள் பெறச் செபம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, விண்ணகத்திற்குச் செல்லும் முன் உமது திருத்தூதர்கள் மற்றும் சீடர்களின் ஆன்மாக்களின் வேலைகளை நிறைவேற்ற தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்தீரே. உமது இரக்கத்தின் அன்பின் வேலைகளை எங்கள் ஆன்மாக்களில் முழுமையாக்க, அதே தூய ஆவியாரை எங்களுக்கும் தந்தருளும். அழிந்து போகும் இவ்வுலகச் செல்வங்கள் மீது பற்று கொள்ளமல், நிலைவாழ்வை அளிக்கும் உன்னதச் செல்வத்தின் மீது ஆசை கொள்ள உமது ஞானத்தின் ஆவியைப் பொழிந்தருளும்.

உமது தெய்வீக உண்மையின் ஒளியால் எங்களது மனதை விழிப்பூட்ட உமது புரிந்துணர்வின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை மட்டும் மகிழ்வித்து விண்ணகத்தை அடையும் வழியைத் தேர்ந்தெடுக்க உமது ஆலோசனையின் ஆவியைப் பொழிந்தருளும். எங்கள் மீட்புக்கு எதிரானத் தடைகளைச் சகித்து, எங்களது சிலுவையை சுமந்து உம்மைப் பின்செல்ல உமது வலிமையின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளை அறிய, எங்களை அறிய, புனிதர்களின் வழியைப் பின்பற்றி முழுமை அடைய உமது அறிவின் ஆவியைப் பொழிந்தருளும். கடவுளுக்கு செய்யும் சேவையில் இனிமையும் மகிழ்ச்சியும் அடைய உமது பக்தியின் ஆவியைப் பொழிந்தருளும். நாங்கள் கடவுளிடம் அன்பான பயபக்தி கொண்டு, கடவுளை வருத்தப்படுத்தும் எந்தச் செயலையும் செய்யமலிருக்க உமது தேவபயத்தின் ஆவியைப் பொழிந்தருளும். ஆண்டவரே உமது உண்மைச் சீடர்களின் அடையாளத்தால் எங்களை முத்திரையிட்டு, உமது ஆவியால் எங்களை வழிநடத்தியருளும். ஆமென்.





நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்

ஏப்ரல்-30

பரிசுத்த ஆவியின் செபம்

பழைய மொழிபெயர்ப்பு:

திவ்ய இஸ்பிரித்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளிவாரும். பரலோகத்தில் நின்று உம்முடைய திவ்ய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்திரர்களுடைய பிதாவே, கொடைகளைக் கொடுக்கின்றவரே இருதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தில் சுகமே, வெயிலில் குளிற்சியே, அழுகையில் தேற்றரவே எழுந்தருளிவாரும். வெகு ஆனந்தத்தோடு கூடியிருக்கிற பிரகாசமே உம்முடைய விசுவாசிகளுடைய இருதயங்களின் உற்பணங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை. அசுத்தமாயிருக்கிறதை சுத்தம்பண்னும்.

உலர்ந்ததை நனையும். நோவாய் இருக்கிறதை குணமாக்கும். வணங்காததை வணங்கப்பண்னும், குளிரோடிருக்கிறதை குளிர் போக்கும். தவறினதை செவ்வனெ நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புன்னியத்தின் பேறு பலன்களையும் நல்ல மரணத்தையும் நித்திய மோட்ச சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. -ஆமென்.

புதிய மொழிபெயர்ப்பு:

தூய ஆவியே எழுந்தருள்வீர்,
வானின்று உமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீது அனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய் வந்தருள்வீர்,
நன்கொடை வல்லலே வந்தருள்வீர்,
இதய ஒளியே வந்தருள்வீர்.

உன்னத ஆறுத லானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தன்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வேம்மைத் தணிக்கும் குளிர்நிழலே,
அழுகையில் ஆறுத லானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப் போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்,
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வரட்சி யுற்றதை நனைத்திடுவீர்.
காயப் பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்கா திருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதை குளிர் போக்கிடுவீர்,
தவறிப் போனதை ஆண்டருள்வீர்.

இறைiவா உம்மை விசுவசித்து ,
உம்மை நம்பும் அடியார்க்கு,
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே. ஆமென்.

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்