|
தொடர் பாடல் |
|
|
1 சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய், கீதமும் பாடலும் இசைத்தே
உந்தன் ஆயரை, தலைவரைப் புகழ்வாயே.
2 எல்லாப் புகழும் கடந்தவர் அவரே; இயலாது உன்னால் அவரைப் புகழ,
இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.
3 உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம் போற்றுதற்குரிய
இப்பேருண்மை இன்று சிந்தனைக்கு ஏற்ற பொருளே.
4 தூய விருந்தின் பந்தியில் அன்று பன்னிரு சோதரர் கூட்ட மதற்கே
கிடைத்த உணவிது; ஐயமே யில்லை.
5 ஆர்ப்பரிப் புடனே இனிமையும் கலந்த நிறைபுகழ்க் கீதம்
ஒலிப்பதோடன்றி மகிழ்வும் மனதில் பெருகிடல் தகுமே.
6 பெருஞ்சிறப்பான திருவிழா இன்றே இத்திரு விருந்தை முதன்
முதலாக நிறுவிய நாளை நினைவுகூர்கின்றோம்.
7 புதிய பேரரசரின் இத்திருப் பந்தியில் புதிய ஏற்பாட்டின்
புதுத்தனிப் பாஸ்கா பழைய பாஸ்காவை முடிவுறச் செய்யும்.
8 புதுமை பழமையைப் போக்குதல் காணீர், உண்மை நிழலை ஓட்டுதல்
காணீர் ஒளியோ இரவை ஒழித்தல் காணீர்.
9 திருவிருந்ததனில் நிறைவேற்றியதைத் தம் நினைவாகச் சீடரும்
செய்யக் கட்டளை தந்தார் கிறிஸ்து பெருமான்.
10 திருக் கட்டளையால் அறிவுரை பெற்று அப்பமும் இரசமும்
மீட்புக்குரிய பலிப் பொருளாக அர்ச்சிக்கின்றோம்.
11 அப்பம் மாறி அவர் ஊன் ஆவதும், இரசமது மாறி இரத்தமாவதும்
கிறிஸ்துவர்க் கருளிய உண்மையாமே.
12 புலனையும் அறிவையும் முற்றும் கடந்து, இயற்கை முறைமைக்
கப்பால், உள்ளத்தை உறுதியோ டேற்கும் உயிர்விசுவாசம்.
13 அப்பமும் இரசமும் குணங்களில் வேறாய் அவற்றின் தோற்றம்
மட்டுமே யிருக்க அற்புத உட்பொருள் மறைவாய் உள்ளதே.
14 ஊனே உணவு, இரத்தமே பானம் இருவித குணங்கள் ஒவ்வொன் றுள்ளும்
கிறிஸ்து முழுவதும் உண்டெனக் கொள்வீர்.
15 உண்பவர் அவரைப் பிய்ப்பதுமில்லை. உடைப்பதுமில்லை,
பிரிப்பதுமில்லை. அவரை முழுதாய் உண்கின்றனரே.
16 உண்பவர் ஒருவரோ, ஆயிரம் பேரோ, ஒருவர் உண்பதையே அனைவரும்
உண்பர்; உண்பதால் என்றுமே தீர்வதுமில்லை.
17 நல்லவர் உண்பர், தீயரும் உண்பர் அதனால் அவர் பெறும் பயன்
வெவ்வேறாம் முன்னவர் வாழ்வார், பின்னவர் அழிவார்.
18 நல்லோர் வாழ்வார், தீயோர் அழிவார்: உணவொன்றாயினும் எத்துணை
வேறாம் பயன்விளைத் திடுமெனப் பகுத்துணர்வாயே.
19 அப்ப மதனைப் பிட்ட பின்னரும் முழுமையில் எதுவோ அதுவே
பகுதியில் உளதாம், அறிந்திடு, ஐயமே வேண்டா.
20 உட்பொருள் பிளவுபடுவதேயில்லை; குணத்தில் மட்டும் பிடப்படுமே
அவரது நிலையும் உருவும் குறையா.
21 வானவர் உணவிதோ வழிநடப் போர்க்கும் உணவாயிற்றே; மக்களின்
உணவை நாய்கட் கெறிதல் நலமாகாதே.
22 ஈசாக் பலியிலும் பாஸ்கா மறியிலும் நம் முன்னோர்க்குத் தந்த
மன்னாவிலும் இந்தப் பலியின் முன்குறி காண்பீர்.
23 நல்ல ஆயனே, உண்மை உணவே, யேசுவே, எம்மேல் இரங்கிடுவீரே,
எமக்கு நல் அமுதே ஊட்டிடுவீரே.
24 , உம்திரு மந்தை எம்மைக் காத்து, நித்திய வாழ்வினர் வாழும்
நாட்டில் நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்.
25 அனைத்தும் அறிவோய், அனைத்தும் வல்லோய், மாந்தர்க்கிங்கு
உணவினைத் தருவோய், அங்கும் பந்தியில் அமரச் செய்வாய்.
26 அமர்ந்து உம்முடன் பங்கினைக் கொள்ளவும், வான்திருக்
கூட்டத்தின் நட்பினராகவும், அருள்வீர், ஆமென், அல்லேலூயா. |
|