![]() |
||
தூய ஆவியார் நவநாள் - நாள்-01 தொடக்க செபம் தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். தூய ஆவியே, எங்கள் ஆருயிரே, நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். எங்களில் ஒளியேற்றி எங்களை வழி நடத்தியருளும். எங்களுக்குத் திடம் அளித்து எங்களைத் தேற்றியருளும். நாங்கள் செய்ய வேண்டியவற்றை எங்களுக்குச் சொல்லி ஆணையிடும். உமது திட்டத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் போதும். எப்படி நாங்கள் நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நாங்கள் அன்புடன் ஏற்று அடிபணிகிறோம். ஆமென். தூய ஆவியாரை நோக்கி செபம் தூய ஆவியே எழுந்தருள்வீர். வானினின்று எமது பேரொளியின், அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர். எளியவர் தந்தாய், வந்தருள்வீர். நன்கொடை வள்ளலே வந்தருள்வீர். இருதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே, உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே, உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர். உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை. நல்லது அவனில் ஏதுமில்லை. மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதைக் குளிர் போக்கிடுவீர். தவறிப்போனதை ஆண்டருள்வீர். இறைவா, உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர். புண்ணிய பலன்கள் வழங்கிடுவீர். இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர். அழிவிலா இன்பம் அருள்வீரே. ஆமென். தூய ஆவியார் நவநாள் செபம் (ஒன்பது நாள்களும் சொல்ல வேண்டும்) ஓ தூய ஆவியாரே! எங்கள் இறைவா! நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம். உமது தெய்வீகத்தன்மையின்றி நாங்கள் ஒன்றுமில்லாதவர்கள், நீரின்றி எங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்;. வாரும் தேற்றரவாளரே, எளியோரின் தந்தையே, சிறந்த ஆறுதலளிப்பவரே, எங்களை அநாதைகளை விட்டு விடாத எங்கள் மீட்பரான இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதியை நிறைவேற்றுவீராக. பெந்தக்கோஸ்தே நாளன்று அன்னை மரியா மீதும், திருத்தூதர்கள் மீதும் இறங்கி வந்ததைப் போல, உமது தகுதியற்ற படைப்பாகிய ஏழைகள் எங்கள் மீதும் இறங்கி, எங்கள் உள்ளத்தையும் இதயத்தையும் நிரப்புவீராக. மிக அற்புதமாகவும், மிகுந்த இரக்கத்தோடும், தாராள மனத்தோடும் நீர் அன்று அவர்களுக்கு வழங்கிய அதே கொடைகளை இன்று எங்களுக்கும் வழங்குவீராக. உமக்கு வருத்தமளிக்கும் செயல்கள் அனைத்தையும் எங்கள் இதயத்திலிருந்து எடுத்துவிட்டு, அதை உமக்குத் தகுந்த உறைவிடமாக மாற்றுவீராக. நித்திய பேறுபலன்களை நாங்கள் காணவும், புரிந்து கொள்ளவும் எங்கள் மனதை ஒளிரச் செய்வீராக. எல்லாவற்றிற்கும் மேலாக எங்களிடமுள்ள தகுதியற்ற பிணைப்புகளைக் அகற்றி, எங்கள் இதயத்தை உம் அன்பால் பற்றி எரியச் செய்து, எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்கள் ஆண்டவராகிய இயேசுவில் மறைந்திருக்கச் செய்வீராக. இறைவனின் திருவுளத்தின்படி நாங்கள் நடந்து, தூய ஆவியாரின் துண்டுதலால் வழிநடத்தப்பட எங்கள் சிந்தையை திடப்படுத்துவீராக. இயேசு கிறிஸ்து தமது மண்ணுலக வாழ்வில் கடைப்பிடித்துக் கற்றுக்கொடுத்த தாழ்ச்சி, வறுமை, கீழ்ப்படிதல், இவ்வுலக அலட்சியம் ஆகிய தெய்வீகப் படிப்பினைகளை நாங்களும் கடைப்பிடிக்க உமது அருளினால் எங்களுக்கு உதவுவீராக. ஓ ஆறுதலளிக்கும் தூய ஆவியாரே! மிகுந்த நம்பிக்கையுடன் எங்கள் கடமைகளை நிறைவேற்றவும், எங்களது அன்றாடச் சிலுவைகளை நாங்கள் பொறுமையுடன் சுமக்கவும், இறைவனின் திருவுளத்தை நாங்கள் முழுமையாக நிறைவேற்றவும், வானத்தைத் திறந்து வெண்புறாவாக எங்கள் மேல் இறங்கி வருவீராக. அன்பின் ஆவியாரே! தூய்மையின் ஆவியாரே! அமைதியின் ஆவியாரே! என் ஆன்மாவை மேன்மேலும் தூய்மையாக்கும். இந்த உலகம் தர முடியாத அந்த விண்ணக அமைதியை எங்களுக்குத் தருவீராக. உமது இறையரசு இந்த உலகெங்கும் பரவிட அயராது உழைக்கும் எங்கள் திருஅவையையும், எங்கள் திருத்தந்தையையும், ஆயர்களையும், திருப்பணியாளர்களையும், துறவறத்தார் அனைவரையும், இறை மக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பி ஆசீர்வதியும். ஓ தூய ஆவியாரே! எல்லா நல்லவற்றையும் முழுமையாக அளிப்பவரே! இந்த நவநாள் வழியாக நான் வேண்டும் அனைத்தையும் அருள்வீராக. என்னிலும், என் வழியாகவும் உமது திருவுளம் நிறைவேறுவதாக. நீர் என்றென்றும் புகழப்படவும் மாட்சிப்படவும் தகுந்தவர். ஆமென். |