இயேசுக்கிறீஸ்துவில் அன்பார்ந்த இறைமக்களே! |
இருள் சூழ்ந்துள்ள இந்த வேளையிலே, முடிவில்லாத பேரொளியாகிய
நம் ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா பெருவிழாவை கொண்டாட
நாம் மகிழ்வுடன் கூடிவந்துள்ளோம். பாவத்தையும் சாவையும்
வென்ற இயேசு வெற்றி வீரராக உயிர்தெழுந்தார். இந்த இரவிலே
அவர் நம்மையும், பொய்மையினின்று மெய்மைக்கும், இருளினின்று
ஒளிக்கும், அடிமை வாழ்வாகிய பாவத்திலிருந்து விடுதலை
வாழ்வாகிய அருள் வாழ்விற்கும், சாவினின்று வாழ்விற்கும்
கடந்து வரச் செய்கின்றார். பத்து கன்னியர் உவமையில் வரும்
விவேகிகளைப் போன்று, எரியும் திரிகளை கைகளில் தாங்கி,
ஆண்டவருக்காகக் காத்திருந்து, இப்புனித வழிபாட்டு
நிகழ்வுகளில் ஆர்வமுடன் பங்குகொண்டு, நம் மீட்பர்
இயேசுவில் புதுவாழ்வு பெற, உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இன்றைய பாஸ்கா திருவிழிப்பு
பெருவிழா நான்கு பகுதிகளாக அமைகின்றது
1) திரு ஒளி வழிபாடு.
2) இறை வாக்கு வழிபாடு.
3) திருமுழுக்கு வழிபாடு.
4) நற்கருணை வழிபாடு.
1. திரு ஒளி
வழிபாடு
புது நெருப்பு ஆசீர்வதித்தல்
ஒளி என்பது உலகம் உருவானது முதல் இறைவனின் அடையாளக்
குறியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒளியின் வடிவில்தான்
முட்புதரில் மோயீசனுக்கு இறைவன் காட்சியளிக்கிறார்.
இஸ்ராயேல் மக்களை இறைவன் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில்
வழி நடத்துகிறார். இதே ஒளிதான் இயேசுவின் பிறப்பை
அறிவித்தது. இதே ஒளிதான் இன்று இயேசுவின் உயிர்ப்பையும்
உறுதிப்படுத்துகின்றது.
இப்பொழுது புதிய நெருப்பை
குருவானவர் மந்திரிக்கின்றார்.
பாஸ்காத்திரி ஏற்றுதல்
குரு பாஸ்கா திரியில் சிலுவை அடையாளமும், அகரமும், னகரமும்
என எழுதுகின்றார். இந்த அடையாளங்கள் சிலுவையின் மூலமாகவே
மனுக்குலம் மீட்கப்பட்டது என்றும் கிறீஸ்துவே முதலும்,
முடிவும், அவருக்கே அனைத்து மாட்சிமையும், புகழும்
உரியதாகும் என்பதையும் குறிக்கின்றன.
பாஸ்காபவனி
குரு பாஸ்கா திரியை ஏற்றி பீடத்தை நோக்கி பவனி வருவார்.
"கிறீஸ்துவின் ஒளி இதோ" என்று பாடும் குருவுக்கு "இறைவா
உமக்கு நன்றி" என்று பாடி ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பாஸ்காப்புகழுரை
நம் ஆதிப்பெற்றோர் செய்தபாவங்களும் மனுக்குலம் அனைத்தின்
பாவங்களுமே நம் மீட்பர் இயேசுவை சாவிற்கு உள்ளாக்கியது.
ஆயினும் அவர் பாவத்தை வென்றார். பாஸ்கா இரவு விடுதலையின்
இரவு. எனவே கிறீஸ்துவைப் பிரதிபலிக்கும் ஒளியின் மக்களாக
நாமும் எரியும் திரிகளைக் கையிலேந்தி, ஆண்டுகள் பலவாயினும்
ஆண்டவனுக்கு ஏற்ற பாடலாக அமைத்த இப்புகழுரைக்கு எழுந்து
நின்று செவிமடுப்போம்.
2. இறைவார்த்தை
வழிபாடு
முதல் வாசக முன்னுரை (தொநூ 1: 1-2:
2)
இறைவன் அனைத்துலகிற்கும் தலைமை வகிப்பவராக அனைத்தையும்
ஆளுபவராக இருக்கிறார். எனவேதான் அவர் அனைத்தையும் படைத்து
இருளை இல்லாமல் செய்து இறுதியில் மனிதனை தம் சாயலிலே
படைத்து அவனை படைப்பின் சிகரமாக்கினார், அவனோடு உறவுகொண்டு
வழிநடத்தினார். இன்னும் கிறிஸ்து வழியாக இறைவன்
திருச்சபையை பல்வேறு அடையாளங்கள் வாயிலாக வழிநடத்துகிறார்.
தமது அருட்கரத்தால் திருச்சபையின் கை பிடித்து காலத்தின்
அறிகுறிக்கேற்ப செயல்படுத்துகிறார் என்ற நம்பிக்கையோடு
இறைவார்த்தைக்கு செவி மடுப்போம்.
இரண்டாம் வாசகம் (விப 14: 15 -15:
1)
இறைவன் தொடக்கம் முதல் இஸ்ராயேல் மக்களை பல்வேறு
துன்பங்களிலிருந்து காத்தார், மோயீசன் தலைமையில் இஸ்ராயேல்
மக்கள் செங்கடலைக் கடந்து சென்ற அற்புத நிகழ்வுகளையும்,
எகிப்தியரை முறியடித்து மக்களை காப்பாற்றினார் என்பதையும்
வாசிக்க கேட்போம்.
மூன்றாம் வாசகம் (எசே 36:
16-28)
இறைவனின் அன்பையும் அரவணைப்பையும் உணராததால் இஸ்ராயேல்
மக்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்படுகிறார்கள். பாவத்தால்
இறுகிப்போன மனித உள்ளங்கள் திரும்பி ஆண்டவருக்குள்
வருகிறபோது, தூய நீரினால் தூய்மையாக்கி தன்னோடு
சேர்த்துக்கொள்வார் என்று கூறும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
(மூன்றாம் வாசகம் முடிந்தவுடன்
உன்னதங்களிலே பாடப்படும். மணி அடிக்கப்படும், பீடத்தின்
திரிகள் பற்றவைக்கப்படும்).
திருமுகம் (உரோ 6: 3-11)
இயேசு கிறிஸ்துவோடு துன்பப்படுகிறபோது இறக்கிறபோது
திருமுழுக்கினால் கிறிஸ்துவோடு உயிர்த்தெழுவோம், எனவே பாவ
வாழ்வைக் கடந்து தூய வழிகளில் வாழுங்கள் எனக் கூறும்
இவ்வாசகத்தைக் கேட்போம்.
நற்செய்தி வாசகம் (மாற்கு
16, 1-7)
3.
திருமுழுக்கு வழிபாடு:
திருமுழுக்கு வழிபாடு கிறிஸ்தவர்கள் எனப்படுகிற நாம்
அனைவரும் இயேசுவின் இறப்பிலும், உயிர்ப்பிலும்
பங்கேற்கிறோம் எனபதைக் குறித்துகாட்டுகிறது. கிறிஸ்துவின்
உயிர்ப்பு நமது விசுவாசத்தின் ஆணிவேர். ஆகவே கிறிஸ்து
இயேசுவின் உயிர்ப்பில் விசுவாசம் கொண்டு, நமது வாழ்வை
தூய்மைப்படுத்திக் கொள்ள இந்த வழிபாட்டில் பங்கெடுப்போம்.
இப்போது குருவானவர் நீரின் மீது இறைவன் இறங்கிவர நம்
அனைவரையும் மன்றாட அழைக்கிறார். தொடர்ந்து புனிதர்கள்
பிரார்த்தனை பாடப்படுகிறது. அனைத்துப் புனிதர்களின்
பரிந்துரை வழியாக இறைவனின் அருள் இந்த திருமுழுக்கு
தொட்டியில் உள்ள நீரில் இறங்க அனைவரும் எழுந்து நின்று
மன்றாடுவோம்.
புனிதர்களின் பிரார்த்தனை
திருமுழுக்கில் பெற்ற இறைஅருளுக்கு ஏற்ப வாழ்ந்து,
மீட்பின் நிறைவைப் பெற்றவர்கள் புனிதர்கள் என்பதால்
புனிதர்களின் மன்றாட்டுமாலை பாடப்படுகின்றது. நாமும்
விசுவாச வாழ்வில் நாளும் வளரத் தேவையான அருளை
இறைவனிடமிருந்து பெற்றுத்தருமாறு புனிதர்களிடம் வேண்டி
கரம் குவித்து பக்தியுடன் பாடுவோம்.
திருமுழுக்குத் தண்ணீர்
மந்திரிக்கப்படுகிறது:
குருவானவர் திருமுழுக்கு நீரில் இறையாசீர்
பொழியப்படவும் புதுப்பிறப்பை அருளும் தூயஆவியானவர் இந்த
நீரில் இறங்கி புனிதப்படுத்துமாறும் செபிக்கிறார்.
மீட்பின் வரலாற்றில் இறைவன் தண்ணீரை எவ்வாறெல்லாம்
பயன்படுத்தினார் என்பது இச்செபத்தில் நினைவு கூரப்படுகிறது.
தண்ணீர் கடவுளுடைய கொடைகளில் முதன்மையானது. உலகம்
உண்டாவதற்கு முன் தண்ணீர்தான் எங்கும் நிறைந்திருந்தது.
இந்த தண்ணீரின் தன்மைகள், பலன்கள் கணக்கற்றவை. யோர்தான்
ஆற்றிலே இயேசுவை ஆவியால் அபிஷேகம் செய்வதற்கு தண்ணீர்
தேவைப்பட்டது. இன்றும் நாம் புனிதமடைவதற்கு
புதுப்படைப்பாவதற்கு திருமுழுக்குத் தண்ணீர்
தேவைப்படுகிறது. ஆகவே இப்போது குருவானவர் இந்த தண்ணீரை
ஆசீர்வதித்து புனிதப்படுத்துகிறார்.
(குருவானவர் தண்ணீரிலிருந்து திரியை
எடுத்தவுடன்) அனைவரும் இப்போது நான் சொல்வதை
தொடர்ந்து சொல்லுங்கள்.
"நீரூற்றுகளே ஆண்டவரைப் போற்றுங்கள் என்றென்றும் அவரைப்
புகழ்ந்தேத்துங்கள்"
திருமுழுக்கு வாக்குறுதிகளை
புதுப்பித்தல்:
அனைவரும் மெழுகுதிரிகளை பற்றவைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு
மகத்துவமிக்க நேரம்.
திருமுழுக்கின்போது நமது ஞானபெற்றோர்கள், நமக்கு பதிலாக
வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். இப்போது அவர்கள் கொடுத்த
வாக்குறுதிகளை நாமே புதுப்பித்து கொள்வோம். திருமுழுக்கு
பெற்றுள்ள நாம், நமது திருமுழுக்கின்போது இறைவனுக்குக்
கொடுத்த வாக்குறுதிகளை மறந்து, நம்பிக்கை இன்றி, மனம்
போனபோக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தப் புனிதமான
இரவிலே, உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்த தெய்வீக உணர்விலே
மிகுந்த பொறுப்புடன், நன்கு உணர்ந்து நம் வாக்குறுதிகளை
அனைவரும் எழுந்து நின்று மெழுகுதிரிகளை ஏற்றி
புதுப்பிப்போம்.
உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள வேண்டுமானால்
இறைவனுக்கு எதிராக உள்ள தீயசக்திகளை விட்டுவிடுகிறேன்
என்றும் கடவுளின் வெளிப்பாட்டினையும், வழிகாட்டுதலையும்
ஏற்றுக்கொள்கிறேன் (அதாவது ஒருமையில் விட்டு விடுகிறேன் -
ஏற்றுக்கொள்கிறேன்) என்றும் பதிலளிப்போம்.
(திருமுழுக்கு வாக்குறுதி
புதுப்பித்துக்கொண்ட நம்மீது தூய நீர்
தெளிக்கப்படும். அவ்வேளை தேவாலய வலப்புறமிருந்து என்ற
பாடல் பாடப்படும்.
இறைமக்களின் வேண்டல்கள்
உயிர்ப்பின் உயிரே!
சாவு, பாவம், இருள் போன்ற தீமைகளை வீழ்த்தி, உயிர்ப்பு,
நிலைவாழ்வு, நிறையுண்மை போன்ற மறையுண்மைகளை நோக்கி, நீர்
பயணம் செய்ததுபோல, நாங்களும் எங்கள் சோதனைகளை வீழ்த்தி
உம்வழியில் வெற்றி நடைபோட வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
உலகின் ஒளியே!
இஸ்ராயேல் மக்கள் அன்று வேதனைகளையும், சோதனைகளையும் கடந்து,
பாஸ்கா விழா கொண்டாடியது போல, உமது உடலாம்
எங்கள்தாய்த்திருச்சபை பல்வேறு எதிர்ப்புக்களைத் தாண்டி,
பாஸ்கா விழாவின் கனிகளான நம்பிக்கை, அன்பு, அருள், ஒளி
இவைகளை நிரமபப் பெற்று வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
உலகின் இரட்சகரே!
உயிர்ப்பின் பாஸ்கா பலியை கொண்டாடும் எங்கள் பங்கு மக்கள்,
பிள்ளைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், ஏனைய
இறைமக்கள் அனைவரும் உமது உயிர்ப்பின் ஒளியைப் பெற்றிடவும்,
வீழ்ந்துபோன அவர்களது வாழ்வு வளம்பெறவும் வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வாழ்வின் வள்ளலே!
பல்வேறு பிரச்சனைகளால் அல்லல் படும் எங்கள் தாய்நாடு, உமது
உயிர்ப்பால் முழுவிடுதலை பெறவும், விடுதலையை நோக்கிப்
பயணம் செய்யம் நாட்டுத் தலைவர்கள், நாட்டுக்குப் பணி
செய்யவும், விடுதலையின் கீற்றுக்களான ஒற்றுமை, சமத்துவம்,
அமைதி எங்கள் நாட்டில் சுடர்ந்திட வேண்டுமென்றும், இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
4.
நற்கருணை
வழிபாடு:
வாழ்வின் உணவைப் பெற்று வாழும் வாழ்வைப் பொருளுள்ளதாக
மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். உண்ண உணவும் உடுக்க
உடையும் இல்லா மானிடருக்கு, உணவும் உடையும் கிடைக்க ஆவன
செய்ய இந்தத் திருவிருந்து நம்மை உந்தித் தள்ளட்டும்.
நற்கருணை என்றாலே பகிர்வு என்று பலமுறை கேட்டு ஓய்ந்து
விட்ட நாம், எப்போது பகிரப்போகிறோம் என்ற கேள்வியை இந்தத்
திருவிருந்து நம்முள் எழுப்பட்டும். |
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M. |
|
|
மறையுரைச்சிந்தனை -
அருட்சகோதரி: செல்வராணி O.S.M. |
|
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி. |
உயிர்ப்பு அழைப்பு, அனுபவம், அனுப்பப்படுதல்
'அவர் இங்கு இல்லை' என வந்து பாருங்கள்!
'அவரைக் கலிலேயாவில் காண்பீர்கள்' என சென்று அறிவியுங்கள்!
திருவிழிப்புகளின் தாய் என அழைக்கப்படுகின்ற பாஸ்கா
திருவிழிப்பில், 'கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை
என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள்
கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்' (1
கொரி 15:14) என்று பவுல் மொழியும் சொற்களின் பின்புலத்தில்
நம் நம்பிக்கையின் அடித்தளத்தை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
குளிர்காலத்தில் 'இறக்கின்ற' கதிரவன் வசந்தகாலத்தில்
'மறுபிறப்பு' எடுக்கின்றான் என்ற பின்புலத்தில், கதிரவன்
உதிக்கும் திசையான 'ஈஸ்ட்டிலிருந்து' (கிழக்கு) கிறிஸ்து
எழுவதால், கிறிஸ்துவின் உயிர்ப்பை 'ஈஸ்டர்' என்று
அழைப்பவர்கள், இயேசுவின் இறப்பை 'குளிர்காலத்திற்கும்,'
இயேசுவின் உயிர்ப்பை 'வசந்தகாலத்திற்கும்'
ஒப்பிடுகின்றனர்.
அடையாளம் மற்றும் பொருளாலும், நாள்காட்டியாலும் யூத
பாஸ்காவும் கிறிஸ்தவ ஈஸ்டரும் இணைந்தே செல்கின்றன. மார்ச்
மாத உத்தராயணத்தைத் (ஆங்கிலத்தில், எக்வினாக்ஸ்) தொடர்ந்து
வரும் பௌர்ணமிக்கு அடுத்த ஞாயிறு அன்று ஈஸ்டர்
கொண்டாடப்படுவதால் - மார்ச் 22க்கும் ஏப்ரல் 25க்கும்
இடையில் - திருவழிபாட்டு ஆண்டில் இது 'நகரும் திருவிழா' என
அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் 'ஈஸ்டர்' கொண்டாடப்பட
வேண்டும் என்பது பேரரசர் கொன்ஸ்தாந்தின் அவர்கள் 325ஆம்
ஆண்டு கூட்டிய நிசேயா திருச்சங்கத்தில்
முடிவெடுக்கப்பட்டது. அன்றுமுதல் பாஸ்கா பெருவிழாவின்
தொடக்கத்தைக் குறிக்கும் பௌர்ணமி நாளை ஒட்டியே ஈஸ்டர்
கொண்டாடப்படுகிறது. வழிபாடு மற்றும் சமய நிலைகளில் பெஸா
மற்றும் ஈஸ்டர் திருநாள்கள் வேறுபட்டாலும் இரண்டுமே
மறுபிறப்பையும் புதுவாழ்வையுமே கிறிஸ்தவத்தில் இயேசுவின்
உயிர்ப்பாலும், யூத சமயத்தில் இஸ்ரயேல் மக்கள்
அடிமைத்தனத்திலிருந்து பெற்ற வாழ்வாலும் (காண். விப 14-15)
- அடையாளப்படுத்துகின்றன.
உலகெங்கும் இன்று ஈஸ்டர் கொண்டாட்டங்களில் முயலும்
முட்டையும் இடம் பெறுகின்றன. 'முயல்' என்பது வளமையின்
அடையாளமாக இருக்கிறது. மேலும், 'முட்டை' வசந்தகாலத்தையும்,
வளமையையும், புதுப்பித்தலையும் குறிக்கிறது. ஜெர்மானிய
புராணம் ஒன்றின்படி, அடிபட்ட பறவை ஒன்றை ஈஸ்த்ரா முயலாக
மாற்றி நலம் தந்தார் என்றும், அதற்கு நன்றியாக அந்த முயல்
முட்டையிட்டது என்றும் சொல்லப்படுகிறது. பிரித்தானிக்கா
கலைக்களஞ்சியம், 'பண்டைக்கால எகிப்தியர்களும்
பாரசீகர்களும் வசந்தகாலத்தில் வளமையின் அடையாளமான
முட்டையின்மேல் வண்ணம் தடவியும், உண்டும் கொண்டாடினர்'
என்று குறிப்பிடுகிறது. மேலும், எகிப்திய இலக்கியங்களில்
முட்டை சூரியனையும், பாபிலோனிய இலக்கியங்களில்
யூப்பிரத்திசு நதியில் விழுந்த இஷ்தார் தேவதையின்
எழுச்சியையும் குறிக்கிறது. இதன் பின்புலத்தில்தான் முட்டை
இயேசுவின் கல்லறைக்கு ஒப்பிடப்பட்டு, முட்டையை
உடைத்துக்கொண்டு வரும் குஞ்சுபோல கல்லறையைத் திறந்துகொண்டு
இயேசு வருகிறார் என்று நாம் முட்டைகளை அலங்கரிக்கவும்
பரிமாறவும் செய்கின்றோம்.
ஒழுங்கற்ற நிலையிலிருந்து புதிய படைப்பு உருவாகிறது என
முதல் வாசகத்திலும், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து
இஸ்ரயேல் மக்கள் விடுதலை பெற்றுச் செங்கடலைக் கடந்தனர் என
இரண்டாம் வாசகத்திலும் கேட்டோம். இயேசுவை அடக்கம்
செய்யப்பட்ட கல்லறை வெற்றுக்கல்லறையாக இருக்கிறது. இது
எப்படி? என நாம் கேள்வி கேட்டால் நமக்கு விடை
கிடைப்பதில்லை. படைப்பு, விடுதலை, மற்றும் உயிர்ப்பு
அனுபவங்கள் சொற்களால் வரையறுக்கப்பட இயலாதவை. முன்பிருந்த
வெறுமை, அடிமைத்தனம், இறப்பு இப்போது இல்லை. 'உயிர்ப்பு
எப்படி?' என்ற கேள்வி அல்ல, 'உயிர்ப்பு ஏன்?' என்பதே நாம்
கேட்க வேண்டிய கேள்வியாக இருக்க வேண்டும்.
இயேசுவின் உயிர்ப்புக்கு இரு மரபுகள் சான்று பகர்கின்றன.
ஒன்று, அறிக்கை மரபு (ஆங்கிலத்தில், கன்ஃபெஷனல் டிரடிஷன்),
இரண்டு, கதையாடல் மரபு (ஆங்கிலத்தில், நரடிவ் டிரடிஷன்).
'ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். அவர் சீமோனுக்குத்
தோன்றினார்' (காண். லூக் 24:34) என்னும் சிறிய வாக்கியமாக
நின்றுகொள்கிறது அறிக்கை மரபு. வெற்றுக் கல்லறை, எம்மாவு
நிகழ்வு, இயேசுவின் தோற்ற நிகழ்வுகள் என விரிந்துநிற்கிறது
கதையாடல் மரபு. இவ்விரு மரபுகளையும் தாண்டி
உயிர்ப்புக்குச் சான்றாக நிற்பது திருத்தூதர்களின் வாழ்வு.
பயத்தால் தங்களைப் பூட்டிக்கொண்ட திருத்தூதர்கள் கதவுகளைத்
திறந்து வெளியே வருகிறார்கள். பயம் என்னும் முட்டைக்
கூட்டை உடைத்துக்கொண்டு இவர்களும் வெளியேறுகிறார்கள்.
'ஓய்வுநாளுக்குப் பின்' என்று இன்றைய நற்செய்தி வாசகம்
தொடங்குகிறது. முதல் வாசகத்தில், ஆறு நாள்கள் உலகைப்
படைத்த பின்னர் ஏழாம் நாளில் ஆண்டவராகிய கடவுள்
ஓய்வெடுத்தார் என வாசிக்கக் கேட்டோம். யூத மரபில்
ஓய்வுநாள் என்பது இயக்கம் (மூவ்மென்ட்) இல்லாத நாள். பெரிய
வெள்ளி, உயிர்ப்பு ஞாயிறு என நாம் வேகமாகக் கடக்கிறோம்.
ஆனால், இதற்கிடையில் புனித சனி ஓய்வுநாள் - இருக்கிறது.
இந்த ஓய்வுநாளில் நீண்ட அமைதி நிலவுகிறது. இயேசுவை அடக்கம்
செய்த அரிமத்தியா நகர் யோசேப்பு, நிக்கதேம், உடன்நின்ற
பெண்கள் அனைவரும் அனுபவத்த வலியை துன்பத்தை நம்மால்
நினைத்துப்பார்க்க முடிகிறது. தங்கள் கண் முன்னால்
நடந்தேறிய துன்ப நாடகம், திடீரென முடிந்துவிட்ட இயேசுவின்
வாழ்வு, தங்கள் கண்களுக்கு முன்னே அரங்கேறிய கொடிய மரணம்,
தங்களால் ஒன்றும் செய்ய இயலாத கையறுநிலை என அனைத்தும்
அவர்களுடைய இதயங்களின் வலியைக் கூட்டுகின்றன. போதகரும்
ஆண்டவருமான தங்கள் தலைவர் கொடிய சிலுவை இறப்புக்கு
உட்படுத்தப்பட்டதைக் கேள்வியுறுகின்ற திருத்தூதர்கள்
தாங்களும் கொல்லப்படுவோமோ என்ற பயத்தில் கதவுகளைச்
சாத்திக்கொள்கிறார்கள். உயிர்ப்பின் விந்தை என்னவென்றால்
இயேசுவின் எதிரிகள் மட்டுமே அவர் உயிர்த்துவிடுவார் என
நம்புகிறார்கள். கல்லறைக்குக் காவல் வைக்கிறார்கள்.
உயிர்ப்பு என்னும் செய்தியை மூன்று 'அ' எனப்
புரிந்துகொள்வோம்: அழைப்பு, அனுபவம், அனுப்பப்படுதல்.
ஆக, முதலில் உயிர்ப்பு என்பது ஓர் அழைப்பு. 'வந்து
பாருங்கள்' என்பதே அந்த அழைப்பு. 'வந்து பாருங்கள்' என்ற
சொல்லாடல் நற்செய்தி நூல்களில் இறையனுபவம் பெறுவதற்கான
அழைப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இயேசுவைப்
பின்தொடர்கிற முதற்சீடர்கள், 'ரபி, நீர் எங்கே
தங்கியிருக்கிறீர்?' எனக் கேட்டபோது, 'வந்து பாருங்கள்' என
அவர்களை அழைக்கிறார் இயேசு (யோவா 1). 'நாசரேத்திலிருந்து
நல்லது எதுவும் வர முடியுமோ?' எனக் கேட்ட நத்தனியேலிடம்,
'வந்து பாரும்' என அழைக்கிறார் பிலிப்பு (யோவா 1).
இயேசுவோடு உரையாடி முடிக்கின்ற சமாரியப் பெண் தன் குடத்தை
இயேசுவின் அருகில் விட்டுவிட்டு ஊருக்குள் சென்று, 'நான்
செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து
பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!' என அறிவிக்கிறார்
(யோவா 4). இலாசர் இறந்த நிலையில் பெத்தானியாவுக்கு வருகிற
இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, 'அவனை எங்கே வைத்தீர்கள்?'
எனக் கேட்டபோது, மார்த்தாவும் மரியாவும், 'ஆண்டவரே, வந்து
பாரும்!' என அழைக்கிறார்கள் (யோவா 11). இன்றைய நற்செய்தி
வாசகத்தில், மகதலா மரியா மற்றும் மற்ற மரியாவை (யாக்கோபு
மற்றும் யோசேப்பின் தாய், காண். மத் 27:56) நோக்கி, 'வந்து
பாருங்கள்' என அழைக்கிறார் வானதூதர்.
இரண்டாவதாக, உயிர்ப்பு என்பது ஓர் அனுபவம். வெற்றுக்
கல்லறைக்குள் நுழைந்து பார்க்கிற அனுபவம். 'அவர் இங்கே
இல்லை. அவர் சொன்னபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை
வைத்த இடத்தை வந்து பாருங்கள்' என்னும் வானதூதரின் அழைப்பு
கேட்டுப் பெண்கள் கல்லறைக்குள் செல்கிறார்கள்.
இந்நிகழ்வைப் பற்றி எழுதுகிற புனித அகுஸ்தினார்,
'கல்லறையின் கல் புரட்டப்பட்டது இயேசுவை வெளியே
கொண்டுவருவதற்கு அல்ல, மாறாக, சீடர்களை உள்ளே
அனுமதிப்பதற்கே' என்கிறார். 'இயேசு இங்கே இல்லை' என்னும்
அனுபவத்தை அவர்கள் பெறுகிறார்கள். இந்த அனுபவம் அவருடைய
சொற்கள்மேல் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இயேசுவின்
உருமாற்ற நிகழ்வில் தாபோர் மலையிலிருந்து இறங்கி வருகிற
திருத்தூதர்கள், 'இறந்து உயிர்த்தெழுதல் என்றால் என்ன?'
எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டே வருகிறார்கள். இறந்த
உயிர்த்தெழுதல் என்றால் என்ன என்பதை வெற்றுக் கல்லறைக்குள்
நுழைகிற பெண்கள் அறிந்துகொள்கிறார்கள். கல்லறையின்
கட்டிலிருந்து விடுபடுவதே உயிர்ப்பு அனுபவம். இப்பெண்கள்
கல்லறைக்கு வெளியே நிற்கிற இயேசு அனுபவத்தையும்
பெறுகிறார்கள். அவர்களை எதிர்கொள்கிற இயேசு அவர்களை
வாழ்த்துகிறார். இயேசுவின் காலடிகளைப்
பற்றிக்கொள்கிறார்கள் பெண்கள். 'காலடிகளைப்
பற்றிக்கொள்தல்' என்னும் சொல்லாடல் வழியாக, இயேசு ஓர் ஆவி
அல்ல, மாறாக, அவர் உடலைப் பெற்றிருந்தார் எனவும்,
உயிர்ப்புக்குப் பின்னர் அவர் ஆண்டவராகிய கடவுள் என
வணங்கப்படுகிறார் எனவும் மொழிகிறார் ஆசிரியர்.
மூன்றாவதாக, உயிர்ப்பு என்றால் அனுப்பப்படுதல். 'நீங்கள்
விரைந்து சென்று, 'இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்'
எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர்
கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள்
அவரைக் காண்பீர்கள்' எனப் பெண்களை அனுப்புகிறார் வானதூதர்.
கலிலேயா என்பது தொடக்கம். அங்கேதான் சீடர்கள் தங்களுடைய
அழைப்பைப் பெறுகிறார்கள். மீன்பிடித்துக்
கொண்டிருந்தவர்களை, சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்தவரை
மனிதர்களைப் பிடிப்பவர்களாக இயேசு மாற்றியது அங்கேதான்.
தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றியது, அப்பங்கள் பலுகச்
செய்தது, தொழுகைக்கூடங்களில் போதித்தது, பேய்களை ஓட்டியது
என இயேசுவின் வல்ல செயல்களும் போதனைகளும் நடந்தேறிய இடம்
கலிலேயோ. மேலும், கலிலேயோ புறவினத்தார் வாழும்
பகுதியாகவும், சாதாரண மக்கள் வாழும் பகுதியாகவும்
இருந்தது. இயேசு அங்கேதான் தம் பொதுவாழ்வை, பணிவாழ்வைத்
தொடங்குகிறார். பெண்களுக்குத் தோன்றுகிற இயேசுவும்,
'கலிலேயாவுக்குப் போகுமாறு சகோதரர்களிடம் சொல்லுங்கள்' என
அவர்களை அனுப்புகிறார். தம் திருத்தூதர்களை இப்போது
சகோதரர்கள் என அழைக்கிறார் இயேசு. தாம் பெற்ற உயிர்ப்பு
தம் சகோதரர்களுக்கும் சாத்தியம் எனச் சொல்வதோடு தங்கள்
வாழ்வின் தொடக்கத்திற்கு அவர்களை மீண்டும் அனுப்புகிறார்
இயேசு.
உயிர்ப்பு நிகழ்வை அழைப்பு, அனுபவம், அனுப்பப்படுதல் என
நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
(ஆ) வெற்றுக் கல்லறை அனுபவம் பெறுதல். 'அவர் இங்கே இல்லை'
என்று நாம் உணரத் தொடங்கும் அந்த நொடியில் இயேசு நம்
அருகில் இருக்கிறார். வாழ்கின்ற இயேசுவைக் கல்லறையில்
தேடுவது முறை அல்ல. இனி அவரைக் கல்லறையில் அல்ல, மாறாக,
கலிலேயாவில்தான் கண்டுகொள்ள முடியும். நம் வாழ்வைத் தொடாத
வெற்று வழிபாட்டுச் சடங்குகளில் அவர் இல்லை. 'நான், எனது,
எனக்கு' என்னும் தன்னல மனப்பாங்கில் அவர் இல்லை. மது,
போதை, இணையதளம் மோகம், இன்ப நாட்டம் போன்றவற்றில் அவர்
இல்லை. இவை எல்லாம் வெற்றுக் கல்லறைகள். உயிர்த்த அனுபவம்
பெறுதல் என்பது இவற்றை வெற்றுக் கல்லறைகள் என உணர்ந்து,
இயேசுவின் காலடிகளைப் பற்றிக்கொள்வது. இறப்பின் காரணிகளைத்
தள்ளி வைப்பது.
(இ) அனுப்பப்படுதல். 'கிறிஸ்து வாழ்கிறார்' என்னும்
செய்தியை உலகுக்குச் சொன்ன மகதலா நாட்டு மரியா போல, நாம்
வாழ்கிற இடங்களில் கிறிஸ்துவை நம் வாழ்க்கையால்
அறிவிக்கும்போது நாம் இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வில்
கொண்டாடுகிறோம். அன்றாட வாழ்க்கையை முழுமையாக வாழ முயற்சி
செய்வோம். அன்பு செய்தல், இரக்கம் காட்டுதல், மன்னித்தல்,
பிறரையும் நம்மையும் மேம்படுத்துதல் போன்றவை நம் வாழ்வின்
இலக்குகளாக அமையட்டும்.
மூன்று 'அ' கடந்து, இன்னொரு 'அ' இருக்கிறது. அதுதான்,
'அமைதி.' உயிர்த்த ஆண்டவர் 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'
எனத் தம் சீடர்களை வாழ்த்துகிறார். அமைதி (கிரேக்கத்தில்,
எய்ரேன், எபிரேயத்தில் ஷலோம்). அமைதி என்பது விரிசல்கள்,
பிளவுகள், உடைதல் இல்லாத ஒருங்கிணைந்த நிலை.
யாராவது இறந்தால், 'ரெஸ்ட் இன் பீஸ்' (ஆர்.ஐ.பி) எனச்
சொல்கிறோம். இறந்தோருக்கு அல்ல, இன்று வாழ்வோருக்கே பீஸ்
('அமைதி') தேவைப்படுகிறது. ஆக, 'லிவ் இன் பீஸ்' என இயேசு
நம்மை வாழ்த்துவதையே, நாம் ஒருவர் மற்றவருக்கு
அறிவிப்போம்.
இயேசுவின் எதிரிகள் அவருடைய கல்லறையில் இன்னொரு 'ஆர்.ஐ.பி'
எழுதினார்கள்: 'ரைஸ் இஃப் பாஸ்ஸிப்ள்'. 'இது எனக்குச்
சாத்தியம்' என அவர் எழுந்தார்.
கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும்
அறிய விரும்புகிறேன் என்பதே (காண். பிலி 3:10)
பவுலடியாரின் பேரார்வமாக இருந்தது. இதுவே நம் பேரார்வமாக
இருக்கட்டும். இன்று நாம் கொண்டாடுகிற ஒளி, தண்ணீர், புதிய
வாழ்வு ஆகியவை அனைத்தும் உயிர்ப்பின் நிகழ்வை நமக்கு
நினைவுறுத்துவதோடு உயிர்ப்பை நம் வாழ்வியல் அனுபவமாக
மாற்றட்டம். இறப்புக்குப் பின்னர் மட்டுமல்ல, இறப்புக்கு
முன்னும் உயிர்ப்பு சாத்தியம்.
நம் பயணம் கல்லறையை நோக்கியதாக அல்ல, கலிலேயாவை
நோக்கியதாகவே இருக்கட்டும்!
அங்கே அவர் நமக்கு முன் சென்றுகொண்டிருக்கிறார். |
கல்லை நமக்கு யார் புரட்டுவார்?
ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா (நள்ளிரவுத் திருப்பலி)
தொடக்கநூல் 1:1 2:2
விடுதலைப்பயணம் 14:15 15:1
எசேயா 36:16-17, 18-28
உரோமையர் 6:3-11
மாற்கு 16:1-7
யாராவது ஒருவர் இறந்த செய்தி கேட்டால், நாம் உடனடியாக, அவர்
இறந்தது நல்ல சாவா? அல்லது கெட்ட சாவா? எனக்
கேள்வியெழுப்பி வரையறுக்க முயல்கிறோம். ஒரு மனிதரின் நல்ல
சாவு என்பதை யூத சமயம் பின்வருமாறு வரையறுத்தது: இறக்கின்ற
மனிதர் நீண்ட நாள் வாழ்ந்தவராக இருக்க வேண்டும். அவருக்கென
நிறைய வழிமரபை விட்டுச் செல்ல வேண்டும். அவருக்கென சொந்தமான
கல்லறை இருக்க வேண்டும். மேற்காணும் மூன்று வரையறைகளின்படி
பார்த்தால் இயேசுவின் சாவு கெட்ட சாவே. தன் சக சமயத்தவர்களின்
பார்வையில் கெட்ட சாவையும், ஆள்வோரின் பார்வையில் பெருந்தண்டனையையும்,
சாமானியர்களின் பார்வையில் ஓர் அரசியல் மற்றும் சமூகப் படுகொலையையும்
கண்ட இயேசு இன்று உயிர்த்துவிட்டார்.
'கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய
நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்'
(காண். 1 கொரி 15:14) என்ற புனித பவுலின் கூற்றுப்படி,
கிறிஸ்துவின் உயிர்ப்பே நம் நம்பிக்கையின் அடித்தளமாக இருக்கிறது.
இந்த உயிர்ப்பை 'வெறும் வதந்தி' என்று இயேசுவின் எதிரிகள்
பரப்பி விட்டதாகவும், அது இந்நாள் வரை யூதரிடையே பரவி இருப்பதாகவும்
பதிவு செய்கின்றார் மத்தேயு (மத் 28:15).
இயேசுவின் உயிர்ப்பு நம் நம்பிக்கையின்
அடித்தளமா? அல்லது ஒரு வதந்தியா?
இன்று நாம் எங்கு பார்த்தாலும் வைத்திருக்கும் கண்காணிக்கும்
சிசிடிவி காமராக்கள் அன்று இயேசுவின் கல்லறைக்கு வெளியே
பொருத்தப்பட்டிருந்தால் இயேசுவின் உயிர்ப்பை நாம் எளிதாக
அறிந்திருக்கலாமே என்று சொல்கிறது நம் மூளை.
ஆனால், மூளையையும் தாண்டிய விடயங்களை இதயம் நம்புகிறது என்ற
கூற்றுக்கிணங்க உயிர்ப்பு என்னும் உண்மையை நம் இதயம்
மூன்று நிலைகளில் நம்புகிறது:
ஒன்று, உயிர்ப்பு கதையாடல்கள். இயேசுவின் உயிர்ப்பை ஒட்டி
நிகழ்ந்த கதையாடல்கள் - மகதலா மரியா, தோமா, சீடர்கள்,
பேதுரு, எம்மாவு போன்ற கதையாடல்கள் - இயேசுவின் உயிர்ப்புக்குச்
சான்றாக அமைகின்றன. அவை இயேசு உயிர்த்தார் என்பதைச் சொல்வதோடல்லாமல்,
இயேசு உயிர்த்தபோது அவர் எத்தகைய உடலைக் கொண்டிருந்தார்,
அந்த உடல் எப்படி பூட்டிய கதவுகளை ஊடுருவியது, அந்த உடல்
எப்படி வழி நடந்தது, மீன் சாப்பிட்டது, தழுவிக்கொள்ளும்
நிலையிலும் விரலை இடும் நிலையிலும் இருந்தது என்று பதிவு
செய்கின்றன.
இரண்டு, அறிக்கை கதையாடல்கள். தொடக்கத் திருஅவையில்,
திருமுழுக்கு பெறுகின்ற ஒவ்வொருவரும் இயேசுவின் உயிர்ப்பு
பற்றிய நம்பிக்கையை அறிக்கை செய்தனர். இப்படிப்பட்ட நம்பிக்கை
அறிக்கையை புனித பவுல் எழுதுகின்றார்: 'நான் பெற்றுக்கொண்டதும்
முதன்மையானது எனக்கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில்
எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து அடக்கம்
செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறு மூன்றாம் நாள்
உயிருடன் எழுப்பப்பட்டார்' (1 கொரி 15:3-4). இயேசுவின் உயிர்ப்பு
என்பது ஓர் அறிக்கைக் கோட்பாடாகத் தொடக்கத் திருஅவையில் இருந்தது
இயேசுவின் உயிர்ப்புக்கு இரண்டாவது சான்றாக அமைகின்றது.
மூன்று, மாற்றக் கதையாடல்கள். அதாவது, இயேசுவின் திருத்தூதர்கள்
ஒரு மாபெரும் மாற்றத்திற்கு ஆளாகிறார்கள். யூதர்களுக்கு அஞ்சி
கதவுகளை அடைத்துக்கொண்டிருந்தவர்கள், தலைமைச்சங்கத்தையும்
எதிர்த்து நிற்கும் அளவுக்குத் துணிவு பெறுகின்றனர். பெரிய
மக்கள் கூட்டத்திற்கு கற்பிக்கின்ற அவர்கள், 'நீங்கள் நாசரேத்து
இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால், கடவுள் அவரை உயிர்த்தெழச்
செய்தார். இதற்கு நாங்கள் சாட்சிகள்' என சான்று பகர்கின்றனர்.
'உயிர்ப்புக்குப் பின் தோன்றிய இயேசுவைக் கண்ட திருத்தூதர்கள்
புதிய மனிதர்களாக மாறுகின்றர். பயம், தயக்கம், கோபம் மறைந்து,
நம்பிக்கை, துணிச்சல், மற்றும் மன்னிப்பு அவர்கள் உள்ளங்களில்
பிறப்பதால் கிறிஸ்து திருத்தூதர்களின் உள்ளங்களில் உயிர்க்கிறார்'
என்று கூறுகின்றார் இறையியலாளர் ஷில்லிபெக்ஸ். திருத்தூதர்களின்
வாழ்வியல் மாற்றமே இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்றாக அமைகின்றது.
ஈஸ்டர் திருநாளுக்கு அறிவியல் மற்றும்
வரலாற்றுப் பூர்வமான பின்புலமும் உண்டு:
உங்கர் விவிலிய அகராதி, 'ஈஸ்டர்' என்ற சொல் ஒரு ஆங்கிலோ-சாக்ஸன்
சொல்லாடல் என்றும், இதன் மூலச் சொல் 'ஈஸ்த்ரா' என்ற வசந்தகாலத்
தேவதையின் பெயர் என்றும், இந்த தேவதைக்கு ஒவ்வொரு ஆண்டின்
பாஸ்கா காலத்திலும் பலிகள் செலுத்தப்பட்டன என்றும், ஏறக்குறைய
எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பெயர் கிறிஸ்துவின்
உயிர்ப்பை அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது என்றும் வரையறுக்கிறது.
குளிர்காலத்தில் 'இறக்கின்ற' கதிரவன் வசந்தகாலத்தில் 'மறுபிறப்பு'
எடுக்கின்றான் என்ற பின்புலத்தில், கதிரவன் உதிக்கும்
திசையான 'ஈஸ்ட்டிலிருந்து' (கிழக்கு) கிறிஸ்து எழுவதால்,
கிறிஸ்துவின் உயிர்ப்பை 'ஈஸ்டர்' என்று அழைப்பவர்கள், இயேசுவின்
இறப்பை 'குளிர்காலத்திற்கும்,' இயேசுவின் உயிர்ப்பை 'வசந்தகாலத்திற்கும்'
ஒப்பிடுகின்றனர்.
வசந்தகாலத் தேவதையான 'ஈஸ்த்ரா' ('எயோஸ்தர்,' 'ஒஸ்தாரா,' 'அவ்ஸ்த்ரா')
திருநாள் மார்ச் மாதத்தின் 21ஆம் நாள், வசந்தகாலத்தின் உத்தராயணம்
(இரவும் பகலும் சமமான நாள், சூரியன் நிலநடுக்கோட்டைக் கடந்துசெல்லும்
நாள்) அன்று கொண்டாடப்பட்டது. நீண்ட இருள்சூழ் பனிக்காலத்திற்குப்
பின் வெளிச்சத்தைக் கொண்டுவரும் இத்தேவதையை முயல் அடையாளப்படுத்தியது.
ஏனெனில், முயல் என்பது வசந்தகாலத்தையும் வளமையையும் குறித்தது.
க்ரிம் என்ற ஜெர்மானிய புராண ஆய்வாளரின் கூற்றுப்படி, 'உயிர்ப்பு
என்னும் கருதுகோள் ஈஸ்த்ரா திருநாளில் மையம் கொண்டுள்ளது.
ஏனெனில், வைகறையின் கடவுளாம், வசந்தத்தையும் வளமையையும் அறிவித்து,
மகிழ்ச்சியையும் ஆசீரையும் கொண்டுவரும் ஈஸ்த்ராரை தங்களுடைய
கடவுளில் கிறிஸ்தவர்கள் கண்டார்கள்.' சில ஐரோப்பிய மொழிகளில்
'ஈஸ்டர்' என்பது 'பாஸ்கா' (யூதர்களின் பெருவிழா) என்று அழைக்கப்பட்டாலும்,
ஆங்கிலோ-சாக்ஸன் குடும்ப மொழிகளில் 'ஈஸ்டர்' என்ற சொல்லே
வழங்கப்படுகிறது.
அடையாளம் மற்றும் பொருளாலும், நாள்காட்டியாலும் யூத
பாஸ்காவும் கிறிஸ்தவ ஈஸ்டரும் இணைந்தே செல்கின்றன. மார்ச்
மாத உத்தராயணத்தைத் தொடர்ந்து வரும் பௌர்ணமிக்கு அடுத்த
ஞாயிறு அன்று ஈஸ்டர் கொண்டாடப்படுவதால் - மார்ச் 22க்கும்
ஏப்ரல் 25க்கும் இடையில் - திருவழிபாட்டு ஆண்டில் இது 'நகரும்
திருவிழா' என அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் 'ஈஸ்டர்'
கொண்டாடப்பட வேண்டும் என்பது பேரரசர் கொன்ஸ்தாந்தின் அவர்கள்
325ஆம் ஆண்டு கூட்டிய நிசேயா திருச்சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அன்றுமுதல் பாஸ்கா பெருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும்
பௌர்ணமி நாளை ஒட்டியே ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. வழிபாடு
மற்றும் சமய நிலைகளில் பெஸா மற்றும் ஈஸ்டர் திருநாள்கள்
வேறுபட்டாலும் இரண்டுமே மறுபிறப்பையும் புதுவாழ்வையுமே
கிறிஸ்தவத்தில் இயேசுவின் உயிர்ப்பாலும், யூத சமயத்தில் இஸ்ரயேல்
மக்கள் அடிமைத்தனத்திலிருந்து பெற்ற வாழ்வாலும் (காண். விப
14-15) - அடையாளப்படுத்துகின்றன.
இத்திருவிழிப்புத் திருப்பலியில் நாம் வாசிக்கக் கேட்ட முதல்
வாசகங்கள், குளிர்காலத்திலிருந்து வசந்தகாலத்திற்கு பூவுலகும்
மானுடமும் கடந்து வந்த பாதையை நம் கண்முன் கொண்டு வந்தன.
முதல் வாசகத்தில் (தொநூ), 'இல்லாமையிலிருந்து இருத்தலுக்கும்,
குழப்பத்திலிருந்து தெளிவுக்கும், இருளிலிருந்து ஒளிக்கும்'
உலகம் கடந்து வருகிறது. இரண்டாம் வாசகத்தில் (விப) 'எகிப்தின்
அடிமைத்தனத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கும், பாரவோனை
அரசனாகக் கொண்டதிலிருந்து யாவேயை அரசராகக் கொள்வதற்கும்,
வாக்குறுதிக்கான காத்திருத்தலிலிருந்து வாக்குறுதி
நிறைவேறியதற்கும்' இஸ்ரயேல் மக்கள் கடந்து வருகின்றனர்.
மூன்றாம் வாசகத்தில் (எசே) 'உலர்ந்த நிலையிலிருந்து உயிர்பெற்ற
நிலைக்கும், பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து சொந்த
நாட்டிற்கும்' திரும்புகின்றனர் இஸ்ரயேல் மக்கள். இது அவர்களுடைய
இரண்டாம் மீட்பு. முந்தைய நிலை மறைந்து புதிய நிலை மலர்கிறது.
இதுவே பிரிஹதாரண்யக உபநிடதத்தில் நாம் காணும் இறைவேண்டலாகவும்
இருக்கிறது: 'பொய்மையிலிருந்து மெய்மைக்கு, இருளிலிருந்து
ஒளிக்கு, சாவிலிருந்து வாழ்வுக்கு இறைவா என்னை அழைத்துச்
செல்!'
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பெண்கள் சிலர் இயேசுவின் கல்லறைக்கு
வருகின்றனர். இறந்த உடலுக்கு மூன்று நாள்கள் நறுமணத் தைலம்
பூசுவது அவர்களுடைய அடக்கச் சடங்கின் ஒரு பகுதியாக இருந்தது.
'வாரத்தின் முதல் நாள் கதிரவன் எழும் வேளையில்' என்னும்
சொல்லாடல் வழியாக இருண்டு நேர்முகமான காரணிகளைச்
சுட்டுகிறார் மாற்கு: 'புதிய வாரம் தொடங்குகிறது, புதிய ஒளி
எழுகின்றது.' பழைய வாரத்தின் நிகழ்வுகள் மறைந்துவிட்டன, பழைய
இருள் மறைந்துவிட்டது. இருந்தாலும் அந்தப் பெண்களின் உள்ளத்தில்
ஒரு கலக்கம்: 'கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?'
நம் வாழ்விலும் ஏதோ ஒரு கல் நம்மை அடைத்திருப்பதாக நாம் அடிக்கடி
உணர்ந்து, அந்தக் கல்லை அகற்றுபவர் யார் எனப் புலம்புகின்றோம்.
முதல் வாசகத்தில், இருள் ஒரு கல் போல இருக்கிறது. இரண்டாம்
வாசகத்தில், எகிப்தின் அடிமைத்தனம் கல் போல இருக்கிறது.
மூன்றாம் வாசகத்தில், பாபிலோனிய நாடுகடத்துதல் கல் போல இருக்கின்றது.
ஆனால், 'கல்லை நமக்காக யார் புரட்டுவார்?' என்று கலங்கத்
தேவையில்லை. கற்கள் புரட்டப்படும் நாள்தான் ஈஸ்டர். மிகவும்
கடினமான கற்கள் என நினைக்கும் இறப்பு, பாவம், பயம், மற்றும்
உலகியல் பேரார்வம் அனைத்தையும் கடவுள் மிக எளிதாகப் புரட்டிவிடுகின்றார்.
மானுட வரலாறு ஒரு கல் முன் பயந்து நிற்பதில்லை. ஏனெனில்,
அது வாழ்வின் கல்லான (காண். 1 பேது 2:4) கிறிஸ்துவின்மேல்
கட்டப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் இன்று இரவு உயிர்த்த
ஆண்டவரைக் காண வேண்டும் - தனித்தனியாக. முதலில், நான் அகற்ற
விரும்பும் அல்லது அகற்ற வேண்டிய கல் எது என்று அந்தக் கல்லுக்குப்
பெயரிடுவோம்.
நம் நம்பிக்கையைத் தடுக்கின்ற கல் ஊக்கமின்மைதான்.
வாழ்வின் நிகழ்வுகள் நம் கைகளை மீறிச் செல்லும்போது, எல்லாம்
நம்மை விட்டுப் போய்விட்டது போலவும், இறப்பு சூழ்ந்துவிட்டது
போலவும் உணர்கின்றோம். நம்மேல் நாமே கற்களை அடுக்கிக்கொண்டு
நம்பிக்கையைப் புதைத்துவிடுகிறோம். அந்த நேரத்தில் நம்மை
எதிர்கொள்கின்ற தூதர், 'வாழ்பவரை இறந்தோரிடம் தேடுவதேன்?'
எனக் கேள்வி கேட்கின்றார். நம் இதயத்தை மூடிவிடும் இன்னொரு
கல் பாவம். பாவம் நம்மை மயக்குகிறது. எளிதான மற்றும் வேகமான
வழியில் நமக்கு இன்பத்தையும், வெற்றியையும், வளமையையும்
வழங்குகிறது. ஆனால், சற்று நேரத்தில் தனிமையையும் சாவையும்
விட்டுச் செல்கின்றது. பாவம் இறப்பின் நடுவே வாழ்வைத்
தேடுகிறது. தேடிச் சோர்ந்து போய், நம்மைச் சோர்வுக்கு ஆளாக்குகிறது.
இன்று ஏன் பாவத்தை நாம் விடக் கூடாது? பாவம் என்னும் கல்லை
இன்னும் நாம் ஏன் நம் இதயக் கதவுக்கு முன் வைக்க வேண்டும்?
கல்லறைக்குச் செல்கின்ற பெண்கள் திகிலுறுகிறார்கள். அச்சத்தின்
பெரிய நிலைதான் திகில்.
'உங்களுக்கு முன்பாக கலிலேயாவுக்குப்
போய்க்கொண்டிருக்கிறார்' என்று சொல்கின்றார் வெண்தொங்கல்
ஆடை அணிந்த இளைஞர் ஒருவர்.
கல்லறைக்குள் குனிந்து பார்க்கும் நம்மிடமும் இன்று தூதர்
பேசுகின்றார். சில நேரங்களில் நாமும் இத்தூதர் போல மற்றவர்களுக்கு
நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றோம்.
'கலிலேயாவுக்குப் போங்கள்!' என அனுப்புகின்றார் தூதர்.
கலிலேயா என்பது எருசலேமின் எதிர்ப்பதம். கலிலேயா இயேசுவின்
பணித் தொடக்கம். அங்கேதான் திருத்தூதர்களை இயேசு அழைத்தார்.
தங்கள் தலைவரின் இறுதியைக் கண்டு பயந்து போய்க் கிடந்த
திருத்தூதர்களை மீண்டும் தொடக்கத்துக்கு அழைத்துச்
செல்கின்றார் இயேசு.
உடனடியாக வெளியேறுகின்ற பெண்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். நடுக்கமும்
அச்சமும் கொள்கின்றனர். திருத்தூதர்களுக்குச் செய்தியை அறிவிக்கவில்லை.
இயேசுவின் அருகிலிருந்தவர்கள் அவரை இறுதிவரை புரிந்துகொள்ளவில்லை
என்பதைக் காட்டுவே மாற்கு எதிர்மறையான உணர்வோடு நற்செய்தியை
முடிக்கின்றார்.
ஆனால், யோவான் நற்செய்தியாளர் வேறொரு நிலையில் இதைப் பதிவு
செய்கின்றார். மகதலா மரியா இயேசுவைத் தோட்டக்காரர் என
நினைத்து அவரோடு உரையாடிக் கொண்டிருக்கின்றார். 'மரியா!'
என்று இயேசு அழைத்தவுடன், 'இரபூணி' எனத் திரும்புகின்றார்.
அவர் ஏற்கெனவே இயேசுவைப் பார்த்துக்கொண்டே தானே இருக்கின்றார்.
பின் ஏன் அவர் திரும்ப வேண்டும்? 'தன் திசையை அல்ல, தன்
இதயத்தை அவரை நோக்கித் திருப்பினாள்' என இதற்கு விளக்கம்
தருகின்றார் புனித அகுஸ்தினார். நம் இதயத்தை நாம் அவரை
நோக்கித் திருப்பினால், நாம் வாழ்க்கையை கலிலேயா நோக்கித்
திருப்ப முடியும்.
நாம் பல நேரங்களில் நம் கல்லறையின் திசை நோக்கியே
செல்கின்றோம். வாழ்பவரை இறந்தோரிடம் தேடுகிறோம். அல்லது இயேசுவைக்
கண்டாலும் நாம் இறந்தவற்றின் பக்கமே நம் இதயத்தைத்
திருப்பிக் கொள்கின்றோம். ஏனெனில், பழைய பாதை நமக்கு இனிக்கிறது,
இன்பம் தருகிறது. அல்லது நம் குற்றவுணர்வு, காயம், அதிருப்தி
ஆகியவற்றைத் தழுவிக்கொள்கிறோம். அவை நமக்கு பாதுகாப்பு வளையும்
என உணர்கின்றோம்.
தனிப்பட்ட மனிதர்களும், ஒட்டுமொத்த மனுக்குலமும் தங்கள் கல்லறைகளிலிருந்து
வெளியே வந்த கதையாடல்களைத்தான் விவிலியம் தாங்கி நிற்கிறது.
எல்லாம் முடிந்தது என்ற கல்லறையிலிருந்து இனிதான் எல்லாம்
தொடக்கம் என்ற வாழ்வுக்கு நகர்கின்றனர் நம் முதற்பெற்றோர்.
நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கைக்கு நகர்கின்றார் ஆபிரகாம்.
ஏமாற்றுகின்ற நிலையிலிருந்து பிளவுபடாத வாழ்வுக்கு
மாறுகின்றார் யாக்கோபு. பெலிஸ்தியச் சிறையில் தள்ளப்பட்ட
சிம்சோனின் தலைமுடி முளைக்க ஆரம்பிக்கின்றது. தாவீது தன்
பிரமாணிக்கமின்மையிலிருந்து உடன்படிக்கை அன்புக்கு கடவுளால்
நகர்த்தப்படுகின்றார். திருத்தூதர்கள், சக்கேயு, பவுல்
போன்றோர் தங்கள் வாழ்வுப் பாதையை மாற்றுகின்றனர்.
உயிர்ப்பு என்பது நம் வாழ்வியல் அனுபவமாக மாறாத வரை அது ஒரு
வதந்தியே. உயிர்ப்பின் ஆற்றல் நம்மைப் புதிய மனிதர்களாக்கும்.
துன்பங்களை எதிர்கொள்ள நமக்குக் கற்றுக்கொடுக்கும். ஆகையால்தான்
புனித பவுல், 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும்
அறியவும் விரும்புகிறேன்' (பிலி 3:10) என்கிறார்.
'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க
நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும்
அஞ்சிடேன்' (காண். திபா 23:4) என்கிறார் தாவீது. அவரின்
உடனிருப்பில் நமக்கு எல்லா நாளும் உயிர்ப்பு நாளே.
உயிர்ப்புப் பெருநாள் வாழ்த்துகள்!
|
கதிரவன் எழும்
வேளையில்!
நேற்றைய இரவு நம் அனைவருக்கும் சோகமாக முடிந்தது. நண்பகல்
முதல் பிற்பகல் மூன்று மணி வரை இருள் உண்டாயிற்று. கதிரவன்
ஒளி கொடுக்கவில்லை. இயேசுவின் சீடர்கள் நிம்மதியாகத் தூங்கவில்லை
- தங்களையும் பிடித்துக் கொண்டு போய்க் கொன்றுவிடுவார்களோ
என்று பயந்துகொண்டிருந்தனர். இயேசுவின் எதிரிகளும் நிம்மதியாகத்
தூங்கவில்லை - 'ஒருவேளை சொன்னபடி உயிர்த்தெழுந்துவிடுவானே
இந்த எத்தன்?' (காண். மத் 5:28) என்று எண்ணி கல்லறைக்குக்
காவல்காத்துக் கொண்டிருந்தனர். இயேசுவின் சிலுவைச் சாவைப்
பார்த்தவர்கள் - 'இன்று இவர், நாளை யாரோ?' என்று அரைத்தூக்கத்தில்
இருந்தனர். இயேசுவின் நண்பர்கள் - விடிந்தும் விடியாமல்
அவரின் கல்லறையை நோக்கி ஓடுகிறார்கள். இயேசுவின் உயிர்ப்பின்
மேல் இவர்களுக்கும் நம்பிக்கை இல்லை. ஆகையால்தான், தாங்கள்
ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக்கொண்டு
செல்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவும் தூங்கவில்லை.
அவர் உயிர்த்துவிட்டார்.
இதையே இன்றைய வாசகத்தில், உரோமை நகருக்கு எழுதும் திருமடலில்,
பவுலடியார், 'இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட கிறிஸ்து இனிமேல்
இறக்கமாட்டார்' என்று எழுதுகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகமே மிகவும் நம்பிக்கை தரக்கூடிய
வார்த்தைகளோடு தொடங்குகிறது: 'வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில்'.
மாற்கு இதை இன்னும் எளிய வார்த்தைகளில் தருகிறார்: 'வாரத்தின்
முதல் நாள் காலையிலேயே கதிரவன் எழும் வேளையில்' என எழுதுகின்றார்.
'கதிரவன் எழத் தொடங்கியிருந்தான்' என்ற இதே சொல்லாடல் முதல்
ஏற்பாட்டில் தொடக்கநூல் 32:31ல் வாசிக்கிறோம்: 'யாக்கோபு
பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான்!'
இஸ்ரயேல் இனத்தின் தலைமகன் யாக்கோபு தன் புதிய வாழ்வைத் தொடங்கியபோது
அங்கே கதிரவன் தோன்றினான். புதிய இஸ்ரயேல் இனத்தின் தலைமகன்
இயேசு இறப்பிலிருந்து உயிர்த்தபோதும் அங்கே கதிரவன்
தோன்றினான். அங்கே, 'யாக்கோபு' என்ற பெயர் 'இஸ்ரயேல்' என்று
மாறுகிறது. இங்கே, 'இயேசு' என்ற பெயர் 'கிறிஸ்து' என
மாறுகிறது. அங்கே, யாக்கோபின் இயல்பு முழுவதும் மாறுகிறது.
இங்கே இயேசுவின் உடல் இயல்பு மாறுகிறது. யாக்கோபைப்
பொறுத்த வரையில் அது ஒரு தனிநபர் மனமாற்றம். இயேசுவைப்
பொறுத்தவரையில் இது ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மன்னிப்பு
மாற்றம்.
கிழக்கில் எழுந்த சூரியனாய் இன்று இயேசு உயிர்த்த
பெருவிழாவைத்தான் இன்று நாம் 'ஈஸ்ட்-டர்' (கிழக்கிலிருந்து
உதித்தவர்) என்று கொண்டாடுகின்றோம். முடிவு என்று எல்லாரும்
நினைக்க விடிவு என எழுகிறார் இயேசு. உயிர்ப்பு என்பது
சிலுவையின் மறுபக்கம். உயிர்ப்பு என்பது இறப்பின் மறுபக்கம்.
உயிர்ப்பு என் நம் வாழ்வின் மறுபக்கம்.
'இருள் மறைந்து ஒளி பிறக்கும்' என்பதையே இன்றைய
திருவழிபாட்டு நிகழ்வுகள் அடையாளங்களாகவும், இறைவாக்கு
வழிபாடு இறைவார்த்தையாகவும் நமக்கு முன்வைக்கிறது. இன்றைய
திருநிகழ்வின் தொடக்கத்தில் ஆலயத்தின் விளக்குகள் அணைக்கப்பட,
நாம் புதிய நெருப்பிலிருந்து பாஸ்கா திரியை ஏற்றினோம். மறையுரை
முடிந்து நாம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப்
புதுப்பிக்கும்போதும் எரியும் திரிகளுடன் நிற்போம். பாஸ்கா
காலத்தின் இறுதி ஞாயிறாகிய பெந்தெகோஸ்தே திருவிழாவில்
திருத்தூதர்கள்மேல் இறங்கி வந்த நெருப்பு நாவுகளோடு நாம்
பாஸ்கா மகிழ்ச்சியை நிறைவு செய்வோம். ஆக, ஒளியில் தொடங்கும்
பாஸ்கா ஒளியில் முடிகிறது. இன்றைய வாசகங்களில் தொடக்க
நூல், விடுதலைப் பயண நூல், மற்றும் லூக்கா நற்செய்தி வாசகங்கள்
'ஒளி' என்ற வார்த்தையை மையமாகக் கொண்டுள்ளன.
படைப்பின் தொடக்கத்தில், மண்ணுலகு உருவற்று, வெறுமையாக,
ஆழத்தின்மேல் இருள்சூழ்ந்து இருந்தபோது, 'ஒளி தோன்றுக!' என்கிறார்
கடவுள். ஒளி உண்டாகிறது (காண். தொநூ 1:1). விடுதலைப் பயண
நிகழ்வில், முன்னால் கடல், பின்னால் எகிப்தியர் என்ற இறப்பின்
நிலையில் இஸ்ரயேல் மக்கள் இருந்தபோது, 'எகிப்தில் சவக்குழிகள்
இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்து
வந்தீர்?' (காண். விப 14:11) என்று மோசேயிடம் முறையிட்டபோது,
'ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் சும்மாயிருங்கள்!'
(காண். விப 14:14) என்று மோசே அவர்களுக்கு நம்பிக்கையைத்
தருகின்றார். இந்த நம்பிக்கையை உடனடியாக கடவுள் உறுதிப்படுத்துகிறார்.
எப்படி? 'நெருப்புத்தூண் எகிப்தியருக்கு இருளாகவும் இஸ்ரயேலருக்கு
இரவில் ஒளியாகவும் அமைந்தது.இதனால் இரவில் எந்நேரத்திலும்
அவர்கள் இவர்களை நெருங்கவில்லை' (காண். விப 14:20). தொடர்ந்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில், வாரத்தின் முதல் நாள்
காலையிலேயே அவர்கள் கல்லறைக்குச் சென்றபோது, 'கதிரவன் எழத்
தொடங்கியிருந்தான்' (காண். மாற் 16:1, லூக் 24:1).
இந்த மூன்று ஒளியின் பின்புலத்தில் நாம் கைகளிலும் உள்ளத்திலும்
நாம் இன்று ஏந்தும் பாஸ்கா ஒளியைச் சிந்திப்போம்.
1. படைப்பின் தொடக்க ஒளி
தொடக்கநூலில் நாம் இரண்டு படைப்பு நிகழ்வுகளை
வாசிக்கின்றோம். தொநூ 1ன்படி, வெறுமையாய் இருந்த, தண்ணீர்
சூழ்ந்த ஓரிடத்திலிருந்து பூமி ஒளியை நோக்கி எழுகிறது.
தொநூ 2ன்படி மண்ணுலகு மழை பெய்யாத பாலைநிலம் போல இருக்கிறது.
இவை ஒன்றோடொன்று முரண்பட்டது என நினைக்காமல், இரண்டையும்
இணைத்துப் பார்ப்போம். இம்மண்ணுலகு இவ்விரண்டு அனுபவங்களுக்கும்
உட்பட்டதாகவே இருக்கிறது. சில நேரங்களில் மழை பொழிந்து
வெள்ளமாக நிறைக்கிறது. சில நேரங்களில் ஒன்றும் இல்லாமல்
காய்ந்து பாலையாக வறண்டு கிடக்கிறது. படைப்பு நிகழ்வு நடக்கும்போது
முன்னிருப்பது மறைகிறது. அதுதான் படைப்பு. முன்னிருந்த இருள்
மறைகிறது. முன்னிருந்த வறட்சி மறைகிறது.
இன்றைய முதல் வாசகம் ஒளி தோன்றுவதற்கு முன் உலகம் இருந்த
நிலையை மூன்று அடைமொழிகளால் சொல்கிறது: 'உருவற்று இருந்தது,'
'வெறுமையாய் இருந்தது,' 'இருள் சூழ்ந்திருந்தது.' உருவம்
அல்லது வடிவம் என்பது ஒரு பொருளுக்கு அழகு தருகிறது. அதனால்
தான், 'வடிவு' என்றால் 'அழகு' என்று தமிழ் பொருள்கிறது. உருவற்ற
நிலை என்பது அழகற்ற நிலை. அழுகு என்றால் என்ன? 'அழகு என்றால்
தன்னிலேயே முழுமை பெற்றிருப்பதும், மற்றதோடு இசைவாகப்
பொருந்துவதும்' என்கிறார் அகுஸ்தினார். அவரே உதாரணமும் தருகின்றார்.
ஒருவர் ஒரு ஷூ அணிந்திருக்கிறார். அது அவருக்கு 'அழகாயிருக்கிறது'
என்று நாம் எப்போது சொல்கிறோம்? அந்த காலணி தன்னிலேயே
முழுமை பெற்றிருக்க வேண்டும். அதே வேளையில் அது அணிபவரின்
காலோடு பொருந்த வேண்டும். காலணியின் மேற்பகுதி இல்லாமல் இருந்தாலோ,
அல்லது கிழிந்திருந்தாலோ, அல்லது அணிபவரின் காலுக்குப்
பொருந்தாமல் பெரியதாக இருந்தாலோ நாம் அதை அழகு என்று சொல்வதில்லை.
நாம் அன்றாடம் அழகு என்று வர்ணிக்கும் பொருள்கள் அல்லது
நபரும் அப்படித்தான். ஒரு பெண்ணோ, ஃபோனோ அழகாக இருக்கிறார்-இருக்கிறது
என்று சொல்லும்போது, அங்கே இருக்கிற முழுமையையும், அதன்
பொருத்தத்தையும் வைத்தே சொல்கிறோம். மண்ணுலகில் எதுவும்
நிறைவாகவும் இல்லை, பொருத்தமாகவும் இல்லை. இரண்டாவதாக,
'வெறுமை' இருந்தது. 'வெறுமை' என்பது 'யாதுமற்ற நிலை.' கடவுளால்
மட்டும்தான் வெறுமையிலிருந்து படைக்க முடியும்.
ஒரு கவிதை எழுதுபவரை படைப்பாளி என்கிறோம். ஆனால், அவர் உருவாக்கிய
கவிதை அவருடையது என்றாலும், அவர் பயன்படுத்தும் வார்த்தைகளை
அவர் உருவாக்கவில்லையே. ஏற்கனவே இருந்த ஒன்றிலிருந்துதான்
அவர் மற்றொன்றை உருவாக்குகிறார். 'யாதுமற்ற நிலையை' இன்று
நம்மால் எண்ணிப்பார்க்க முடியாது. அப்படிப்பட்ட எண்ணத்திற்கு
உட்படாத ஒன்றே வெறுமை. மூன்றாவதாக, 'ஆழத்தின்மேல் இருள்
பரவியிருந்தது.' ஒளி செல்ல முடியாத இடமே ஆழம். அப்படிப்பட்ட
ஆழத்தில் இன்னும் இருள் இருந்தால் எவ்வளவு இருளாயிருக்கும்.
அந்த இடத்தின் குளிர்ச்சியில் உயிர் எழுதலும் வளர்தலும்
சாத்தியமில்லாமல் இருக்கும்.
உருவற்ற நிலை, வெறுமை, இருள் இம்மூன்றும் இஸ்ரயேல் மக்கள்
பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக்கிடந்தபோது அவர்கள் அனுபவித்த
அனுபவங்களே. இவ்வனுபவங்களையே அவர்கள் உருவகமாக படைப்பு நிகழ்வில்
பதிவு செய்கின்றனர். இஸ்ரயேல் என்ற உருவை அவர்கள் இழந்தார்கள்.
ஓய்வுநாள், சட்டம், கடவுள், ஆலயம், நகரம் என்று எதுவும் இல்லாமல்
வெறுமையாக இருந்தனர். அந்நிய நாட்டில் மொழி புரியாத இடத்தில்
ஊமையாய், உயிரற்ற இருந்தனர்.
இந்தப் பின்புலத்தில், 'கடவுள் ஒளி தோன்றுக' என்கிறார்.
அவர் சொல்லும்போதே ஒளி தோன்றுகிறது. அழகு பிறக்கிறது.
வெறுமை மறைகிறது. இருள் அகல்கிறது. உயிர் வளர்கிறது.
2. விடுதலைப் பயண நெருப்புத் தூண் ஒளி
'ஒளி' என்ற அடையாளம் விடுதலைப் பயண நூலின் தொடக்கம், நடு,
இறுதி என மூன்று இடங்களில் முதன்மையாக நிற்கிறது. நூலின்
தொடக்கத்தில், கடவுள் இஸ்ரயேல் மக்களின் கூக்குரலைக்
கேட்டு இறங்கி வந்த, மோசேயை எகிப்திற்கு அனுப்பும் நிகழ்வில்
'எரியும் முட்புதரை' பார்க்கிறோம்: 'அப்போது ஆண்டவரின் தூதர்
ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத்
தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது.
ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை' (விப 3:2). நூலின்
இறுதியில், 'மேகம் சந்திப்புக் கூடாரத்தை மூடிற்று. ஆண்டவரின்
மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று ... பகலில் ஆண்டவரின்
மேகம் இருப்பதையும் இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல்
வீட்டார் கண்டார்கள்' (காண். விப 40:34, 38). நூலின் நடுவில்
இன்றைய வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் 'நெருப்புத்தூணாக'
இஸ்ரயேல் மக்களோடு வழிநடக்கின்றார். மேலும், இந்நெருப்பு
பகைவர்களிடமிருந்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்றும் அரணாக,
வேலியாக இருக்கின்றது.
கடவுள் ஒளியைத் தேர்ந்துகொண்டதன் நோக்கம் என்ன? அவர் ஒரு
தூதராகவோ, ஒரு நபராகவோ, ஒரு வாளாகவோ உடன் வந்திருக்கலாமே?
'ஒளி' அடிமைகளின் வாழ்வில் மிக முக்கியமானது. பண்டைக்காலத்தில்
'ஒளி' என்பது எல்லாருடைய பயன்பாட்டில் இருந்தாலும், 'ஒளி'
என்பது அரண்மனையை அலங்கரிக்கக் கூடியதாகவும், 'இருள்' என்பது
அடிமைகளின் வீடுகளை அலங்கரிக்கக்கூடியதாகவும் இருந்தது. நம்
ஊரிலேயே பாருங்களேன். இருபது ஆண்டுகளுக்கு முன் 'ஒளி' என்பது
ஏழைகளின் வீட்டின் அடுப்பில் இருக்குமே தவிர, அவர்களின்
வீட்டின் கூரையில் இருக்காது. 'மின் ஒளி' வந்ததும்தான் நம்
ஊரில் சமத்துவம் வந்தது. கடவுள் எகிப்தியரின் மேல் கொண்டுவந்த
பத்து வாதைகளில் தலைப்பேறு இறப்பதற்கு முந்தையதாக, ஒன்பதாவது
கொள்ளை நோயாக, அதிகம் துன்பம் தருவதாக எகிப்தியரை வாட்டுவது
'மூன்று நாள் காரிருள்.' இருளில் இயக்கம் இருப்பதில்லை
(தாயின் கருவறையின் இருள் விதிவிலக்கு). தொடர்ந்து, ஏறக்குறைய
இருபத்து நான்கு இலட்சம் பேர் (ஆறு லட்சம் என்பது சிலரின்
கருத்து) எகிப்திலிருந்து வெளியேறுகின்றனர். இவ்வளவு
பேருக்கும் ஒரே நேரத்தில் தெரியக்கூடியதாக இருக்கின்ற ஒரு
அடையாளம் மேகமும் நெருப்பும் தூணும்தான். ஆக, இங்கே ஒளி என்பது
கடவுள் தருகின்ற பாதுகாப்பாகவும், உடனிருப்பாகவும் இருக்கின்றது.
ஆக, பாதுகாப்பற்ற இஸ்ரயேல் மக்களுக்கு பாதுகாப்பு தருகிறது
நெருப்புத் தூண். அவர்களோடு பயணத்திலும், பாளையத்திலும்
உடனிருக்கிறது நெருப்புத் தூண்.
3. வாரத்தின் முதல் நாளில் கதிரவனின் ஒளி
லூக்கா நற்செய்தியாளரின் பதிவின் படி கல்லறைக்குச் செல்பவர்கள்
பெண்கள். இவர்கள் நறுமணப் பொருள்களோடு - அதாவது, அடக்கச்
சடங்கின் நிறைவிற்காக - செல்கின்றனர். இவர்கள் மூன்று அதிர்ச்சிகளை
எதிர்கொள்கின்றனர்: 'கல்லறை வாயிலிலிருந்த கல் புரட்டப்பட்டுள்ளது,'
'ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை,' 'மின்னலைப் போன்ற
ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் தோன்றுகின்றனர்.' முதலில்
'விடியல்-கதிரவன்' என்று சொன்ன லூக்கா, 'மின்னல்' என்ற இன்னொரு
ஒளியையும் பதிவு செய்கின்றார். 'அவர் இங்கு இல்லை' என்று
சொல்கின்றனர் அந்த இரண்டு பேரும். மேலும், மறைநூலை அப்பெண்களுக்கு
நினைவூட்டுகின்றனர் அவர்கள். பெண்களும் சென்று பதினொருவருக்கு
அறிவிக்கின்றனர். ஆனால், திருத்தூதர்கள் பெண்கள் வார்த்தைகளை,
'பிதற்றல்கள்' என எடுத்துக்கொண்டதால் நம்பவில்லை. மேலும்,
கல்லறைக்கு ஓடிவரும் பேதுரு, இயேசுவின் உடலைச்
சுற்றியிருந்த துணிகளை மட்டும் பார்த்துவிட்டு, தமக்குள்
வியப்புற்றவராக வீடு திரும்புகின்றார்.
ஆக, வெளியில் இருந்த கதிரவனும், மின்னலின் ஒளியும் பெண்களையும்,
திருத்தூதர்களையும் பாதிக்கவில்லை. இந்த இடத்தில்தான் அகுஸ்தினார்,
'கல்லறையின் கல் புரட்டப்பட்டது இயேசுவை வெளியேற்ற அல்ல.
மாறாக, சீடர்களை உள்ளே அனுப்பவே!' என்கிறார். கல்லறைக்கு
உள்ளே அடித்த வெயில் திருத்தூதர்களின் உள்ளத்தில் அடிக்கவேயில்லை.
யோவான் மட்டுமே, 'கண்டார், நம்பினார்' எனப் பதிவு
செய்கின்றார்.
சீடர்கள் உடனடியாக நம்பவில்லை என்றாலும், அவர்களின் உள்ளத்தில்
அந்த அதிகாலை ஒளி பல நல்ல உணர்வுகளை எழுப்புகிறது. அடக்கச்
சடங்கிற்கு சென்றவர்கள் உடல் இல்லாமல் வியப்புறுகின்றனர்.
கல் மூடியிருக்கும் என நினைத்தவர்களுக்கு கல்லறை திறந்து
கிடக்கிறது. அசாதாரண நிகழ்வுகள் நடக்கின்றன. சாதாரண கதிரவன்
தோன்றும் நிகழ்வு அவர்களுடைய வாழ்வில் அசாதாரணங்களுக்கு
அவர்களின் கண்களைத் திறக்கிறது.
4. பாஸ்கா திரி ஒளி
படைப்பின் ஒளி, விடுதலைப் பயண நெருப்புத் தூண் ஒளி, விடியற்காலை
கதிரவன் ஒளி என்ற மூன்று ஒளியையும் நமக்கு நினைவுபடுத்துவது
இப்போது நாம் ஏந்தி நிற்கும் பாஸ்கா திரியின் ஒளி.
'பாஸ்கா' என்றால் 'கடத்தல்.' படைப்பு இருளைக் கடந்த இந்த
இரவில், இறைவன் இஸ்ரயேல் மக்களைக் கடத்திய இந்த இரவில், இயேசு
இறப்பைக் கடந்த இந்த இரவில் நாமும் பாஸ்கா திரியின் ஒளியோடு
இரவைக் கடந்துகொண்டிருக்கிறோம்.
பாஸ்கா திரியைப் புனிதப்படுத்தும் செபத்தில் அருள்பணியாளர்,
'காலங்கள் அவருடையன, யுகங்களும் அவருடையன' என்கிறார். ஒளியால்
காலத்தைப் பிரித்த கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் நேரத்தில்
செம்மையாகச் செய்துமுடிக்கிறார் (காண். சஉ 3:11).
இந்த பாஸ்காத் திரி நமக்குக் கொடுக்கும் பாடங்கள் மூன்று:
1. ஒளி வாழ்வின் உருவகம்
இருளாய் இருந்த திரி ஒளி பெறுகிறது. தொடர்ந்து எரியும்
திரி ஒரு கட்டத்தில் இல்லாமல் இருளுக்குள் மறைந்துவிடும்.
ஆனால், இருக்கும் ஒவ்வொரு பொழுதும் அது தானும் ஒளிர்ந்து
மற்றவர்களையும் ஒளிர்விக்கிறது. ஆக, ஒளி எப்போதும் இருக்கும்
என்ற நம்பிக்கையைத் தரவில்லை பாஸ்கா. ஏனெனில், பாலைவனத்தில்
இஸ்ரயேல் மக்களை ஒளிர்வித்த ஒளி, பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது
இருண்டது. ஆனால், மீண்டும் 'ஒளி உண்டாயிற்று.'ஆக, ஒளியும்,
இருளும், கதிரவனும், நிலவும், பகலும், இரவும் மாறி மாறி
வரக்கூடியவை. இன்று சிலுவை என்றால், நாளை உயிர்ப்பு. நாளை
மறுநாள் மீண்டும் சிலுவை வரலாம். ஆனால், அடுத்த நாள் உயிர்ப்பு
வரும் என்பதுதான் ஒளி தருகின்ற நம்பிக்கை. இதையே தான் சபை
உரையாளரும், 'ஒளி மகிழ்ச்சியூட்டும். கதிரவனைக் கண்டு கண்கள்
களிக்கும். மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன்
வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். இருள்சூழ்ந்த
நாள்கள் பல இருக்கும் என்பதை அவன் மறக்கலாகாது' (காண். சஉ
11:7-8) என்கிறார்.
2. ஒளியும் சார்பு நிலையும்
மெழுகுதிரியின் ஒளியோ, எண்ணெய் விளக்கின் ஒளியோ தானாகவே ஒளிர்வதில்லை.
திரி மெழுகோடு அல்லது எண்ணையோடு கொண்டுள்ள சார்பு
நிலையில்தான் ஒளி பிறக்கிறது. ஆக, நம் வாழ்வு ஒளிர்வதும்
அவர்மீதுள்ள சார்புநிலையில்தான். ஒளிக்கு அருகில் வரும் அனைத்தும்
ஒளி பெற்றுவிடுகிறது. ஒளியைச் சார்ந்து நிற்கும் அனைத்தும்
ஒளிர்கிறது. இதையே யோவான், 'தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை
வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி
அவர்கள் ஒளியிடம் வருவதில்லை' (காண். யோவா 3:20). ஆக,
தாவீதின் மன்றாட்டு போல இன்று நம் மன்றாட்டு இருக்கட்டும்:
'ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர். என்
கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்' (காண். திபா
18:28).
3. திரியின் தோற்றம் அல்ல, ஒளியே முக்கியம்
இயேசு என்ற திரியின் தோற்றம் கண்டு அவரைத் தீர்ப்பிட்டனர்
அவருடைய எதிரிகள். மெழுகுதிரியின் உயரம், தடிமன், வடிவம்,
நிறம் எதுவும் ஒளியைப் பாதிப்பதில்லை. மேலும், மெழுகுதிரி
ஒரு அலங்காரப் பொருள் அல்ல. மேலும், தன்னைச் சுற்றி எவ்வளவு
இருள் இருக்கிறது என்று மெழுகுதிரி பயப்படத் தேவையில்லை.
ஏனெனில், அதிகமான இருளின்தான் அது அதிக ஒளியுடன் எரியும்.
ஒளி எரியும்போது தன்னையே இழக்க நேரிடும். ஆனால், அந்த ஒளி
மனிதர் முன் ஒளிரும்போது 'மற்றவர்கள் நம் நற்செயல்களைக் கண்டு
விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்' (காண். மத்
5:16). அல்லது பவுலின் வார்த்தைகளில், 'தூங்குகிறவனே,
விழித்தெழு. இறந்தவனே, உயிர்பெற்றெழு. கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்'
(காண். எபே 5:14).
இறுதியாக,
'இருளிலிருந்து ஒளி தோன்றுக!' என்று சொன்ன கடவுளே நம் உள்ளங்களில்
அவருடைய ஒளியை வீசச் செய்தார் (காண். 2 கொரி 4:6). இந்த ஒளியால்
ஒளிபெற்ற நாம் 'உலகில் ஒளிரும் சுடர்களாகத் திகழ' (காண்.
பிலி 2:16) இறைவன் அருள்கூர்வாராக.
அனைவருக்கும் உயிர்ப்பு பெருநாள் வாழ்த்துக்களும், மகிழ்ச்சியும்,
அமைதியும்!
|
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை
மறைமாவட்டம். |
"அவர் இங்கே இல்லை"
நிகழ்வு
ஒரு ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில், மறைக்கல்வி
மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்த ஆசிரியர், இயேசு எல்லா
இடத்திலும் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதற்காக,
மறைக்கல்வி மாணவர்களிடம், "இயேசு எல்லா இடத்திலும்
இருக்கின்றார்; அவர் இல்லாத ஏதும் இவ்வுலகில் உண்டோ?"
என்று கேட்டார்.
எல்லா மாணவர்களும் "இல்லை" என்று ஒருமித்த குரலில்
சொன்னபொழுது, அந்தக் கூட்டத்தில் இருந்த புனிதா என்ற
சிறுமி மட்டும் "ஆம்" என்றாள். புனிதா மிகவும் புத்திசாலி
என்பதாலும் அவள் சொல்வதில் ஏதாவது காரணம் இருக்கும்
என்பதாலும், மறைக்கல்வி ஆசிரியர் அவளிடம், "இயேசு இல்லாத
இடம் எது?" என்று கேட்டார். உடனே புனிதா ஆசிரியரிடம்,
"இயேசு இல்லாத இடம், அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை"
என்றாள்.
இப்படிச் சொல்லிவிட்டு, அவள் தன்னுடைய கையில் இருந்த
திருவிவிலியத்தைத் திறந்து, மத்தேயு நற்செய்தி 28: 6 இல்
இருந்த, "அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன்
எழுப்பப்பட்டார்..." என்ற இறைவார்த்தையை வாசித்து
முடித்தாள். இதைக் கேட்டு வியந்து போன மறைக்கல்வி ஆசிரியர்
புனிதாவை வெகுவாகப் பாராட்டினார்.
ஆம். இயேசு அவர் அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறையில்
இல்லை. அவர், தான் சொன்னது போன்றே உயிர்த்தெழுந்தார்.
அதைத்தான் இன்றைய நாளில் உயிர்ப்புப் பெருவிழாவாகக்
கொண்டாடி மகிழ்கின்றோம். இயேசுவின் உயிர்ப்புப்
பெருவிழாவில் இன்றைய இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைச்
சொல்கின்றது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் உயிர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
இயேசு கிறிஸ்து சொல்வது ஒன்றும் செய்வதும் ஒன்றுமாய்
இருந்தவர் அல்லர்; அவர் சொல்லிலும் செயலிலும் வல்லவராக
இருந்தார் (லூக் 24:19). அப்படிப்பட்டவர், தான் இறந்து,
மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று மூன்றுமுறை
முன்னறிவித்தார் (மத் 16: 21, 17: 22-23, 20: 17-19) அவர்
முன்னறித்தது போன்றே மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.
ஆகையால், இயேசுவின் உயிர்த்தெழுதலை அவர் சொல்லிலும்
செயலிலும் வல்லவர் என்பதற்குச் சான்றாகச் சொல்லலாம்.
இப்படிச் சொல்லிலும் செயலிலும் வல்லவரான இயேசுவின்
உயிர்ப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைத்
தெரிந்து கொள்வது நல்லது. இயேசுவின் உயிர்ப்பு பல்வேறு
விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தததாக இருந்தாலும்,
மூன்று விதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்கின்றது.
முதலாவதாக, இயேசுவின் உயிர்ப்பு, நம்முடைய நம்பிக்கைக்கும்
நற்செய்தி அறிவிப்புக்கும் அடிப்படையாக இருக்கின்றது
(1கொரி 15: 14). தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் இயேசுவைப்
பற்றி மக்களுக்கு அறிவித்தபொழுது, அவருடைய பாடுகள்,
இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை முதன்மைப்படுத்தியே நற்செய்தி
அறிவித்து வந்தார்கள். அந்த வகையில் இயேசுவின் உயிர்ப்பு
நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் நற்செய்தி
அறிவிப்புக்கும் அடிப்படையாக இருக்கின்றது.
இரண்டாவதாக, இயேசுவின் உயிர்ப்பு ஏன் முக்கியத்துவம்
வாய்ந்தது எனில், அது, நாமும் ஒரு நாள் உயிர்த்தெழுவோம்
என்ற நம்பிக்கையை அளிப்பதாக இருக்கின்றது. புனித பவுல்
திமொத்தேயுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் இதைப்
பற்றிக் குறிப்பிடும்பொழுது, "நாம் அவரோடு இறந்தால்,
அவரோடு வாழ்வோம்" (2 திமொ 2:11) என்று குறிப்பிடுவார்.
ஆகையால், இயேசுவின் உயிர்ப்பு, நாமும் ஒருநாள்
உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையை அளிப்பதால், அதை
முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லலாம்.
மூன்றாவதாக, இயேசுவின் உயிர்ப்பு ஏன் முக்கியத்துவம்
வாய்ந்தது எனில், அது, இயேசு இன்றும் நம் நடுவில்
வாழ்கின்றார் என்பதை உறுதிபடச் சொல்கின்றது. எத்தனையோ
மகான்கள் இப்புவியில் வாழ்ந்து இறந்தார்கள்; ஆனால், அவர்
இன்றும் வாழ்கின்றார்கள் என்பதற்கு எந்தவொரு சான்று
கிடையாது. இயேசு இன்றும் வாழ்கின்றார் என்பதற்கு அவருடைய
உயிர்ப்பே சான்றாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தி 28: 20
இல் வருகின்ற, "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான்
உங்களுடன் இருக்கின்றேன்" என்ற சொற்கள், மேலே உள்ள
கூற்றுக்கு இன்னும் வலுச்சேர்ப்பனவாக இருக்கின்றன. இவ்வாறு
இயேசு இன்றும் வாழ்கின்றார் என்பதற்கு அவருடைய உயிர்ப்பு
ஆதாரமாக இருப்பதால், இயேசுவின் உயிர்ப்பு மிகவும்
முக்கியத்துவம் என்று சொல்லலாம்.
இயேசுவினுடைய உயிர்ப்பின் முக்கியத்துவைத் தெரிந்துகொண்ட
நாம், உயிர்த்த ஆண்டவர் இயேசு, தம் சீடர்களுக்கும் -
நமக்கும் - சொல்லக்கூடிய செய்தியென்ன என்பதைக் குறித்து
சிந்தித்துப் பார்ப்போம்.
நறுமணப் பொருள்கள் பூச வந்தவர்களை நற்செய்தி அறிவிக்கச்
சொல்லும் இயேசு
இயேசு, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நாள் ஓய்வுநாள்
என்பதால், அவருடைய உடலை உரிய முறையில் அடக்க செய்ய
முடியாமல் போனது. இதனால் அவருடைய உடலுக்கு நறுமணப்
பொருள்களைப் பூசுவதற்காக (மாற் 16: 1) அவருடைய கல்லறை
எங்கிருக்கின்றது என்று தெரிந்த (மத் 27: 56,61) மகதலா
மரியாவும் வேறொறு மரியாவும் வருகின்றார்கள். அதே
நேரத்தில், 'இயேசு அடக்கம் செய்துவைக்கப்பட்ட கல்லறையை ஒரு
கல் மூடியிருக்குமே...! அதை எப்படித் திறப்பது...?' என்ற
எண்ணத்தோடும் அவர்கள் வந்திருக்கக்கூடும்!
அவர்கள் கல்லறைக்கு வந்தபொழுது, கல்லறையை மூடியிருந்த கல்
புரட்டப்பட்டு, அதன்மேல் ஆண்டவரின் தூதர்
உட்கார்ந்திருக்கக் காண்கின்றார்கள். மேலும் ஆண்டவரின்
தூதர் அவர்களிடம், எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, "...
இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என சீடருக்குக்
கூறுங்கள்" என்கின்றார். இதற்குப் பின்னர் இயேசு
அவர்களுக்குத் தோன்றுகின்றபொழுதுகூட, "என் சகோதரர்களிடம்
சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள்"
என்றே சொல்கின்றார். இயேசு தன் சீடர்களை இங்கு,
"சகோதரர்கள்" என்று சொன்னது, அவர்கள் தன்னை
மறுதலித்தாலும், தன்னை விட்டு ஓடினாலும், அவற்றை எல்லாம்
அவர் மன்னித்துவிட்டதாகவும் நண்பர்கள் (யோவா 15: 15) என்று
ஏற்றுக்கொண்டதாகவும் அறிக்கையிடுகின்றது.
இவ்வாறு நறுமணப் பொருள்கள் பூச வந்த பெண்கள் இருவரும்,
உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும்
நற்செய்திப் பணியாளர்களான மாறுகின்றார்கள். அந்த இரண்டு
பெண்களும் இயேசுவின் உயிர்ப்பை சீடர்களுக்கு எடுத்துச்
சொல்லி, நற்செய்திப் பணியாளர்களாக மாறியது போன்று, நாமும்
ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் நற்செய்திப்
பணியாளர்களான மாறவேண்டும். இது நம்முடைய பொறுப்பு (1 கொரி
9: 17) என்பதை மறந்துவிடக்கூடாது
"அஞ்சாதீர்கள்" என்று திடப்படுத்தும் இயேசு
உயிர்த்த ஆண்டவர் இயேசு, பெண் சீடர்களிடம், உயிர்ப்புச்
செய்தியைச் சீடர்களிடம் அறிவிக்கவேண்டும் என்று சொன்னதோடு
மட்டுமல்லாமல், அவர்களிடம் இன்னொரு முக்கியமான
வார்த்தையும் சொல்கின்றார். அதுதான், "அஞ்சாதீர்கள்!"
என்பதாகும். இயேசு அவர்களிடம் சொன்ன இவ்வார்த்தை, சாதாரண
வார்த்தை கிடையாது; அச்சத்தோடும் நம்பிக்கையின்றியும்
இருந்தவர்களுக்கு, அச்சத்தைப் போக்கி நம்பிக்கை
அளிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கின்றன.
அன்று சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சி அறைக்குள்ளே
இருந்தார்கள் (யோவான் 24: 36). அப்படிப்பட்டவரிடம் இயேசு
"அஞ்சாதீர்கள்", "அமைதி உரித்தாகுக" என்று சொல்லி
அவர்களைத் திடப்படுத்தினார். இன்று கொரோனா போன்ற கொள்ளை
நோயினாலும், பல்வேறு காரணங்களாலும் நாம் அஞ்சி அஞ்சி
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படி இருக்கின்ற
நம்மிடமும் இயேசு, "அஞ்சாதீர்கள்" என்று வார்த்தையை
சொல்லி, இயேசு நமக்கு நம்பிக்கை அளித்து,
திடப்படுத்துகின்றார்.
ஆகையால், நாம் இயேசு சொல்லக்கூடிய இந்த நம்பிக்கையூட்டும்
வார்த்தையை நம்முடைய உள்ளத்தில் ஏற்று, திடம் கொள்வோம்.
சீடர்களைப் போன்று நாம் தவறு செய்திருந்தாலும், நம்மையும்
உயிர்த்த ஆண்டவர் இயேசு மன்னிக்கத் தயாராக இருக்கின்றார்
என்ற உறுதியோடு, சீடர்களைப் போன்று ஆண்டவரைப் பற்றிய
நற்செய்தியை எல்லாருக்கும் அறிவிப்போம். அதன்மூலம்
இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழ்வோம்.
சிந்தனை
'வாழ்க்கை மற்றவருக்காக வாழும்பொழுது பொருளுள்ளதாக
இருக்கின்றது' என்பார் கெலன் கெல்லர். இயேசு நமக்காக
வாழ்ந்து, இறந்து, மூன்றாம் நாள் உயித்தெழுந்து தன்
வாழ்வைப் பொருளுள்ளதாக மாற்றினார். நாமும் மற்றவருக்காக
வாழ்ந்து, வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். |
பாஸ்கா திருவிழிப்பு 16 04 2022
I லூக்கா 24: 1-12
"உயிரோடு இருப்பவரைக் கல்லறையில்
தேடுவதேன்!
இறந்தார்; உயிர்த்தெழுவார்:
1815 ஆம் ஆண்டு, ஜூன் 15 ஆம் நாள் மாவீரன் நெப்போலியன் இங்கிலாந்தை
ஆண்ட வெல்லிங்டன் என்ற மன்னனுக்கு எதிராகப்
போர்தொடுத்தான். போரானது வாட்டர்லூ என்ற இடத்தில் நடந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போர் முடிந்ததும், "எதிரி
வீழ்த்தப்பட்டான்" என்றுதான் முதலில் செய்தி வந்தது. இதைக்
கேட்டு மக்கள், "நெப்போலியன் எவ்வளவு பெரிய வீரன்! அவனுடைய
படைதான் எத்துணை வலிமையானது. அவனை வீழ்த்துவதற்கு யாரேனும்
இவ்வுலகில் உண்டா? வெல்லிங்டன் எல்லாம் நெப்போலியனுக்கு
முன்பு எம்மாத்திரம்!" என்று பேசத் தொடங்கினார்கள்.
சிறிது நேரம் கழித்துத்தான் "வெல்லிங்டனின் எதிரி வீழ்த்தப்பட்டான்"
என்ற செய்தி வந்தது. இச்செய்தியைக் கேட்டதும் மக்கள் அதிர்ந்து
போனார்கள்.
இயேசுவைப் பற்றி முதலில் கேள்விப்படும்போது, 'அவர் இறந்துவிட்டாரா?
இனிமேல் அவ்வளவுதானா?' என நாம் நினைக்கலாம். அவர் இறந்தார்
கொல்லப்பட்டார் ஆனால் மூன்றாம் நாள் வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்தார்.
ஆம், சாவு என்ற எதிரியை வென்று, வெற்றி வீரராய் உயிர்த்த
இயேசு நமக்குத் தரும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.
பெண் சீடர்களின் அஞ்சா நெஞ்சம்!:
இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டதும்
'எல்லாமே முடிந்துவிட்டது!' என்றுதான் அவரது சீடர்கள்
நினைந்திருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், இயேசுவுக்கு
ஏற்பட்ட நிலைமை தங்களுக்கும் ஏற்படக்கூடும் என்று, அவர்கள்
யூதர்களுக்கு அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை
மூடி வைத்திருந்தார்கள் (யோவா 20:19) இப்படி யூதர்களுக்கு
அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தவர்கள்
இயேசுவின் ஆண் சீடர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில்,
இயேசுவின் பெண் சீடர்களோ யூதர்களுக்கு அஞ்சாமல், வாரத்தின்
முதல் நாள், அதுவும் விடியற்காலையிலேயே இயேசு அடக்கம்
செய்து வைக்கப்பட்ட கல்லறைக்குக் கையில் நறுமணப் பொருள்களோடு
செல்கின்றார்கள். அங்கு இயேசு அடக்கம் செய்துவைக்கப்பட்ட
கல்லறையில் அவரது உடல் இல்லாததைக் கண்டு குழப்பமுறுகிறார்கள்.
இயேசுவின் இந்தப் பெண் சீடர்கள், இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்
என்று இயேசு சொன்னதை நினைவில் கொள்ளாமல் இருந்திருக்கலாம்
அல்லது புரிந்துகொள்ளாமல்கூட இருந்திருக்கலாம். ஆனால், அவர்களிடம்
இருந்த துணிச்சல், யூதர்களுக்கு அஞ்சாத மனத்திடம் நம்மை வியக்க
வைக்கின்றன. இது ஆண்கள்தான் பலசாலிகள்; பெண்கள் பலவீனமானவர்கள்
என்பதைக் கேள்விக்கு உட்படுத்துகின்றது.
சொன்னார், செய்தார்:
கல்லறையில் அடக்கம் செய்துவைக்கப்பட்டிருந்த இயேசுவின் உடல்,
அங்கு இல்லாததை கண்டு பெண்சீடர்கள் குழப்பமுறுகின்றபோது,
மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடையணிந்திருந்த இருவர் அவர்கள்
முன் தோன்றி, அவர்களிடம், "உயிரோடு இருப்பவரைக் கல்லறையில்
தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்"
என்கின்றார்கள்.
வானதூதர்கள் இருவரும் பெண் சீடர்களிடம் சொன்ன இந்த
வார்த்தைகள் நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை உணர்த்துகின்றன.
ஒன்று, இயேசு தாம் சொன்னது போன்று உயிர்த்தெழுந்துவிட்டார்
என்பது. இரண்டு, இயேசு உயிர்த்தெழுந்ததன் மூலம் சாவை
வென்றுவிட்டார் என்பது.
கொடுத்த வாக்குறுதியை அல்லது சொன்ன சொல்லைக் காற்றில் பறக்க
விடுபவர்கள் நம் நடுவில் ஏறலாம். இயேசுவின் காலத்திலும் இது
போன்ற மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள்; செயலில்
காட்டவில்லை (மத் 23:3). இயேசுவோ இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்
என்று சொன்னார். அவர் சொன்னது போன்றே செய்தும் காட்டினார்.
திருப்பாடல் ஆசிரியர் சொல்வார்: "ஆண்டவரே! முகில்களைத்
தொடுகிறது உமது வாக்குப் பிறழாமை" (திபா 36:5). இவ்வார்த்தைகளை
இயேசுவோடும் அவரது உயிர்ப்போடும் அப்படியே பொருத்திப்
பார்த்துக் கொள்ளலாம். ஆம், இயேசு சொன்னார். அதைச்
செய்துகாட்டினார்.
அடுத்ததாக, இயேசு இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததன்
மூலம் சாவுக்குச் சாவு மணி அடித்தார். இதைத்தான் பவுல்,
"சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே உன்
வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?" (1 கொரி 15:
54-55) என்கிறார். இதனால் நாம், பவுல் மீண்டுமாகச் சொல்வதுபோல்,
"அவர் இறந்துபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில்,
அவர் உயிர்த்தெழுவது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்"
(உரோ 6:5)
அறிந்தோம்; அறிவிப்போம்:
இயேசு உயிர்த்தெழுந்து விட்டார் என்று பெண் சீடர்களிடம்
சொன்ன இரண்டு வானதூதர்களும் தொடர்ந்து அவர்களிடம்,
"கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்" என்கிறார். இதையடுத்து அவர்களும்
இயேசு சொன்ன வார்த்தைகளை நினைவில் கொண்டு, கல்லறையைவிட்டுத்
திரும்பிப் போய் அனைத்தையும் பதினொருவருக்கும் மற்ற அனைவருக்கும்
அறிவிக்கிறார்கள்.
இயேசுவின் பெண் சீடர்கள்தான் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார்
என்பதை முதன்முதலில் அறிந்தார்கள். அவர்கள் அறிந்தது மட்டுமல்லாமல்,
அறிந்ததை மற்றவர்களுக்கும் அறிவிக்கின்றார்கள். இவ்வாறு
அவர்கள் திருத்தூதர்களுக்கே திருத்தூதர்கள் ஆகின்றார்கள்.
யோவான் நற்செய்தியில் மகதலா மரியாதான் உயிர்த்த ஆண்டவரை முதன்முதலில்
கண்டு, அவரைப் பற்றிய செய்தியைத் திருத்தூதர்களுக்கு அறிவித்தார்
என்று வருகின்றது (யோவா 20:18). இன்று நாம் வாசிக்கக்கேட்ட
லூக்கா நற்செய்தியில் பெண் சீடர்கள் அனைவரும் திருத்தூதர்களிடம்
சென்று, இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை அறிவிக்கின்றார்கள்
என்று வருகின்றது. இது நற்செய்தி அறிவிப்புப் பணியில் பெண்கள்
எப்படி முன்னோடிகளாக இருந்தார்கள் என்பது நமக்கு உணர்த்துகின்றது.
உயிர்த்த ஆண்டவரை அறிந்துகொண்ட பெண் சீடர்களை அவரைப் பற்றிய
நற்செய்தியை திருத்தூதர்களுக்கும் மற்ற அனைவருக்கும் அறிவித்தார்
எனில், நாமும் உயிர்த்த ஆண்டவரை அறிய வேண்டும், அறிவது மட்டுமல்லாமல்,
அவரை மற்றவருக்கு அறிவிக்க வேண்டும். உயிர்த்த ஆண்டவர் இயேசுவைப்
பற்றி அறிவிப்பது என்று வருகின்றபோது, இரண்டு நிலைகளில் அறிவிக்கலாம்.
ஒன்று, நமது வார்த்தையால் அறிவிப்பது. இதைப் பலரும் செய்து
கொண்டிருக்கின்றார்கள். இதைவிடவும் பெரியது ஒன்று இருக்கின்றது.
அதுதான் வாழ்வால் நற்செய்தி அறிவிப்பது. இப்படிப்பட்ட நற்செய்தி
அறிவிப்புப் பணிக்கு ஒருவர் கடல் கடந்து, உறவுகளை
விட்டுவிட்டுப் போகவேண்டிய தேவையில்லை. இருந்த இடத்தில் இருந்துகொண்டே
அவர் இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சியாக வாழலாம்.
எனவே, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவில் அவரது பெண் சீடர்களிடம்
இருந்த அஞ்சா நெஞ்சத்தை நாமும் கொண்டு வாழ்வோம். சொன்னபடி
உயிர்த்த இயேசுவை நமது வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்வாலும்
அறிவித்து, அவருக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனைக்கு:
'இயேசுவின் உயிர்ப்பு நமது எதிர்நோக்கின் ஆதாரம்' என்பார்
பவுல்.வி. ஜான்சன். எனவே, இயேசு உயிர்த்தெழுந்ததுபோல, அவர்மீது
நம்பிக்கை கொண்டிருக்கும் நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம்
என்ற எதிர்நோக்குடன் வாழ்ந்து, அவருக்குச் சான்று பகர்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
|
நன்மையே வெல்லும்!
தாய், தந்தை அவர்களுடைய பத்து வயது மகள் என்றிருந்த குடும்பத்தில்,
தாயானவள் தன்னுடைய மகளுக்கு விவிலிய அறிவைப் புகட்டும்
பொருட்டு நற்செய்தி நூலை எடுத்து வாசிக்கக் கொடுத்தாள்.
மகளும் அதனை ஒவ்வொருநாளும் நிறுத்தி நிதானமாக வாசித்து வந்தாள்.
நாட்கள் ஆக, ஆக அந்தப் பத்து வயதுச் சிறுமி ஆண்டவர் இயேசுவைக்
குறித்து ஓரளவுக்கு அறிந்துகொண்டாள்.
ஒருநாள் அந்தச் சிறுமி நற்செய்தி நூலைப் படித்துக்
கொண்டிருக்கும்போது திடிரென ஓரிடத்திற்கு வந்ததும் ஓவென
அழத் தொடங்கினாள். மகளுக்கு என்னவாயிற்றோ என்று பதறிய தாயானவள்
அவளிடம் வந்து, "ஏன் தங்கம் அழுகிறாய்! உனக்கு என்னாவாயிற்று?"
என்று கெஞ்சிக் கேட்டாள். "வேறொன்றும் இல்லையம்மா! நற்செய்தி
நூலில் எல்லாருக்கும் நன்மைசெய்து வந்த இயேசுவை யூதர்கள்
பிடித்து சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டார்கள், அதை
வாசித்ததும் எனக்கு அழுகை வந்துவிட்டது" என்று கேவிக் கேவி
அழுதாள். மகளைத் தேற்றிய தாயானவள், அவளிடம், "அழாதே தங்கம்,
நற்செய்தி நூலைத் தொடர்ந்து வாசி, அப்போது யூதர்களால்
சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசு கிறிஸ்து மூன்றாம்
நாளில் வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார் என்ற உண்மை
தெரியும்" என்றாள். தாய் சொன்ன வார்த்தைகளை நம்பி அவள் நற்செய்தி
நூலைத் தொடர்ந்து வாசித்தாள். தாய் சொன்னது போன்றே இயேசு
கிறிஸ்து மரித்து மூன்றாம் நாள் வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்திருந்தார்.
ஆம், ஆண்டவர் இயேசு சாவை வென்று, வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்துவிட்டார்.
ஆதலால், நாம் அனைவரும் அக்களிப்புடன் இறைவனைப் போற்றுவோம்.
இன்று நாம் அனைவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புப்
பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்த நல்ல நாளில்,
இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று
சிந்தித்துப் பார்ப்போம்.
இன்றைய உலகில் 'தீமைதான் வெல்லும்' என்பது போன்ற தோற்றம்
இருந்துகொண்டு இருக்கின்றது. தீமைகள் சில காலத்திற்கு வெல்லலாம்,
இறுதியில் வெல்வது என்னவோ நன்மைதான். ஆண்டவர் இயேசுவின்
வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கும்போது தீமை
வென்றுவிட்டதோ என்ற தோற்றம் ஏற்படும். ஆனால், தீமை ஒருபோதும்
வெற்றி பெறாது நன்மைதான் வெற்றிபெறும் என்பதை இயேசு
கிறிஸ்து தன்னுடைய உயிர்ப்பினால் இந்த உலகத்திற்கு உரக்க
எடுத்துரைக்கின்றார். ஆகவே, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா
நமக்கு எடுத்துரைக்கும் முதன்மையான செய்தி தீமையல்ல, நன்மையே,
சாவல்ல வாழ்வே வெற்றிபெறும் என்பதாகும்.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நமக்கு எடுத்துரைக்கும்
இரண்டாவது செய்தி, திகிலுற வேண்டாம், அஞ்சவேண்டாம் என்பதாகும்.
வாரத்தின் முதல் நாளன்று மகதலா மரியா, யாக்கோப்பின் தாய்
மரியா மற்றும் சலோமி ஆகிய மூவரும் ஆண்டவர் இயேசுவை அடக்கம்
செய்து வைத்த கல்லறைக்குச் சென்று, அவருடைய உடலில் நறுமணத்
தைலம் பூச விரைந்தபோது, இயேசுவை அடக்கம்செய்து வைத்த கல்லறையின்
முன்பாக இருந்த கல் விலக்கப்பட்டு இருப்பதைக் காண்கிறார்கள்.
உடனே அவர்கள் என்னவாயிற்றோ என்று உள்ளே சென்று பார்த்தபோது
அங்கிருந்த வானதூதர் அவர்களிடம், "திகிலுற வேண்டாம்" என்கிறார்.
உயிர்த்த ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் காட்சியளிக்கின்றபோதும்
உதிர்க்கின்ற முதல் வார்த்தை 'அஞ்சாதீர்கள்' என்பதுதான்.
வானதூதரும் இயேசுவும் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட சீடர்கள்
பயத்திலிருந்து விலகி அஞ்ச நெஞ்சத்தினராய் வாழத் தொடங்குகின்றார்கள்.
இயேசு சீடர்களுக்குச் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் இன்று
நமக்கும் சொல்கின்றார். ஆகவே, நாம் நம்முடைய அன்றாட
வாழ்வில் அச்சத்தினைத் தவிர்த்து அஞ்ச நெஞ்சத்தினராய்
வாழ்வோம்.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நமக்கு எடுத்துரைக்கும்
மூன்றாவது செய்தி, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புச்
செய்தியை எல்லாருக்கும் அறிவிக்கவேண்டும் என்பதுதான். இன்றைய
நற்செய்தியில் (மாற் 16: 1-7) வானதூதர் கல்லறைக்கு வந்த
மூன்று பெண்களிடம், "பேதுருவிடமும் மற்றச் சீடர்களிடமும்
..... சொல்லுங்கள்" என்று சொல்கின்றார். அவர்கள் மூவரும்
இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியைச் சொல்லி, ஆண்டவர்
இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாக விளங்குகின்றார்கள்.
இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் ஒவ்வொருவரும்
இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை எல்லா மக்களுக்கும் சொல்லவேண்டும்.
அது நம்முடைய கடமையாக இருக்கின்றது.
ஆகவே, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா மகிழ்வில்
திளைத்திருக்கும் நாம், அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவர் இயேசுவின்
உயிர்ப்புச் செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
|
"அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்"
பாஸ்கா திருவிழிப்பு
நிகழ்வு
பிரேசிலில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பழங்குடியினர் சிலர்
வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் பகுதியைச் சுற்றிப்
பெரிய ஆறு ஒன்று ஓடுகின்றது. இந்த ஆற்றில் சாத்தான் இருப்பதாகவும்,
ஒருவேளை யாராவது இந்த ஆற்றைக் கடக்க நேர்ந்தால், அவரைச்
சாத்தான் கொன்றுவிடும் என்ற நம்பிக்கை இவர்களிடையே இருப்பதால்,
யாரும் ஆற்றைக் கடக்கத் துணிவதில்லை இப்படியிருக்கும்பொழுது
இவர்கள் நடுவில் நற்செய்தி அறிவிக்க அருள்பணியாளர் ஒருவர்
வந்தார். அவர், ஆற்றில் சாத்தான் இருப்பதாகவும், அந்தச்
சாத்தான் ஆற்றைக் கடக்கிறவர்களைக் கொன்றுவிடும் என்றும் மக்கள்
சொன்ன செய்தியைக் கேட்டுச் சிரித்தார். ஏனெனில், அவர் அந்த
ஆற்றின் வழியாகத்தான் அங்கு வந்திருந்தார். பிறகு அவர் அவர்களிடம்
"ஆற்றில் சாத்தான் இல்லவே இல்லை... ஒருவேளை ஆற்றில்
சாத்தான் இருந்தால், அது என்னைக் கொன்றுபோட்டிருக்குமே!"
என்றார். அவர்கள் அவர் சொன்னதை நம்பவே இல்லை. இதனால் அவர்,
"தக்க சமயம் வரும்பொழுது, இவர்களிடம் இந்த ஆற்றில்
சாத்தான் இல்லை என்பதை நிரூபித்துக்கொள்வோம். அதுவரைக்கும்
பொறுமையாக இருப்போம்" என்று இருந்தார்.
ஒரு சமயம் இவர்கள் இருந்த பகுதியில் கொள்ளைநோய் வந்து, பலருடைய
உயிரையும் எடுத்துக்கொண்டது. .அப்பொழுது அருள்பணியாளர் அவர்களிடம்,
"இந்த ஆற்றுக்கு அந்தப் பக்கம்தான் பெரிய மருத்துவனை இருக்கின்றதே!
கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அங்குக்
கொண்டுசென்றால், அவர்களுடைய உயிரைக் காப்பாற்றிவிடலாமே!"
என்று சொன்னதற்கு, "ஆற்றில்தான்தான் சாத்தான் இருக்கின்றது!"
என்று பழைய கதையையே சொல்லிக்கொண்டிருந்தார். "இதுதான்! இந்த
ஆற்றில் சாத்தான் இல்லை என்று இவர்களிடம் நிரூபிப்பதற்குச்
சரியான வாய்ப்பு" என்று மனத்தில் நினைத்துக்கொண்டு, அருள்பணியாளர்
ஆற்றின் அருகில் சென்று, அதிலிருந்து தண்ணீரை எடுத்து, தன்
முகத்தில் தெளித்து, "இதோ பாருங்கள்! எனக்கு ஒன்றும் ஆகவில்லை.
இதிலிருந்தே தெரியவில்லை, இதில் சாத்தான் இல்லை என்று" என்றார்.
அவர்கள் அவர் சொன்னதை நம்பவில்லை.
இதனால் அவர் ஆற்றுக்குள் சிறிதுதூரம் சென்று, முன்பு சொன்ன
அதே வார்த்தைகளைச் சொன்னார். அப்பொழுதும் அவர் சொன்னதை அவர்கள்
நம்பவில்லை. கடைசியில் அவர் ஆற்றுக்குள் மூழ்கிச்சென்று,
மறுகரையில் போய் எழுந்து, முன்பு சொன்ன அதே வார்த்தைகளை
அவர்களிடம் மீண்டுமாகச் சொன்னார். இப்பொழுது அவர்கள் அவர்
சொன்னதை ஏற்றுக்கொண்டு, ஆற்றில் சாத்தான் இல்லை என்று நம்பத்
தொடங்கி, கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டவர்களை மறுகரையில் இருந்த
மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றினார்கள்.
ஆம், ஆற்றுக்குள் இறங்கினால் சாத்தான் கொன்றுவிடும் என்று
எப்படி அந்தப் பழங்குடி நினைத்தார்களோ, அப்படிப் பலரும்
சாவோடு மனித வாழ்க்கை முடிந்துவிடும் என்று
நினைத்திருந்தார்கள். இந்நிலையில் இந்த நிகழ்வில் வரும் அருள்பணியாளரைப்
போன்று, ஆண்டவர் இயேசு சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார்.
அதையே இன்று நாம் உயிர்ப்புப் பெருவிழாவாகக்
கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி
என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம்
ஒருவேளை கிறிஸ்து மட்டும் உயிர்த்தெழுந்திருக்காவிட்டால்,
அவருடைய சீடர்கள் முன்பு தாங்கள் செய்த வேலைகளைப் பார்க்கக்
கிளம்பிப் போயிருப்பார்கள்! அப்பொழுது கிறிஸ்தவ மறை என்ற
ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை; ஆனால், இதெல்லாம் நடக்கவில்லை.
மாறாக ஆண்டவர் இயேசு தாம் சொன்னது போன்றே மூன்றாம் நாள்
வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார். இவ்வாறு இயேசுவின் உயிர்ப்பு
திருத்தூதர்கள் அறிவித்த நற்செய்திக்கும், நாம்
கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது
(1 கொரி 15: 14).
இயேசுவின் உயிர்ப்பு, நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற
நம்பிக்கையை நமக்குத் தரக்கூடியதாக இருக்கின்றது. இது
குறித்துத் திருத்தூதர் புனித பவுல் கூறும்பொழுது, "அவர்
இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர்
உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்"
என்பார். எனவே, இயேசுவின் உயிர்ப்பு, நாமும் ஒரு நாள் உயிர்த்தெழுவோம்
என்ற நம்பிக்கைச் செய்தியைச் தருவதால், அவர் இறந்துபோன்று
நாமும் அவரோடு இறக்க முயற்சி செய்வோம்.
ஆண்டவரைத் தேடுவோர் கண்டுகொள்வர்
இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகின்ற இரண்டாவது செய்தி,
அவரைத் தேடுவோர் கண்டுகொள்வர் என்பதாகும்.
இறந்த உடலில் நறுமணப் பொருளைப் பூசுவது என்பது இறந்தவர்மீது
கொண்ட அன்பை வெளிப்படுத்தும் செயல். அது இன்றைய காலக்கட்டத்தில்
இறந்தவர்களின் கல்லறைகளில் மலர்களை வைப்பதற்கு இணையானது.
நற்செய்தியில் வருகின்ற மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா,
சலோமி ஆகிய மூவரும் இயேசுவின் உடலில் நறுமணப் பொருள்களைப்
பூசுவதற்காக அவற்றை ஓய்வுநாள் முடிந்ததும் வாங்கிக்கொண்டு,
வாரத்தின் முதன்நாள் விடியற்காலையில் செல்கிறார்கள். இயேசுவின்
இறந்த உடலை யோசேப்பு எங்கே வைத்தார் என்று மகதலா மரியாவிற்கும்
யோசேப்பின் தாய் மரியாவிற்கும் நன்றாக தெரிந்திருந்தது
(மாற் 15: 47). அதனாலேயே அவர்கள் அந்த இடம் நோக்கி
விரைந்து செல்கின்றார்கள்; ஆனால் அவர்கள், "கல்லறை
வாயிலிருந்த கல்லை நமக்கு யார் புரட்டுவார்?" என்பது தொடர்பாகப்
பேசிக்கொண்டே போகிறார்கள்; அவர்கள் அங்குச் சென்றதும், கல்
புரட்டப்பட்டிருப்பதையும், வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர்
வலப்புறம் அமர்ந்திருப்பதையும் கண்டு திகிலுறுகின்றார்கள்.
அப்பொழுது அவர் அவர்களிடம், "திகிலுற வேண்டாம்; அவர் உயிருடன்
எழுப்பப்பட்டார்" என்றார்.
இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இயேசுவை
முழுமனத்தோடு தேடிய இயேசுவின் பெண் சீடர்கள், அதிலும்
குறிப்பாக (யோவா நற்செய்தியின் 20: 11-18 ன்படி), மகதலா
மரியா உயிர்த்த ஆண்டவர் இயேசுவை முதன்முறையாகக்
கண்டுகொண்டார். நாமும் ஆண்டவர் இயேசுவை உள்ளார்ந்த
அன்போடும், முழு மனத்தோடும் தேடினால், அவரை நிச்சயம்
கண்டுகொள்ள முடியும்.
நற்செய்தியை அறிவிக்க வேண்டும்:
உயிர்ப்புப் பெருவிழா நமக்குத் தரும் மூன்றாவது செய்தி
நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியைப் பிறருக்கு
அறிவிக்கவேண்டும் என்பதாகும். ஆண்டவர் இயேசு உயிருடன்
எழுப்பப்பட்டார் என்ற செய்தியை வானதூதர்கள் வழியாக
அறிந்துகொள்ளும் மூன்று பெண்களும், இயேசு கலிலேயாவிற்குப்
போய்க்கொண்டிருக்கின்றார் என்ற செய்தியைச் சீடர்களிடம்
சொல்லப் பணிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு அவர்கள் தாங்கள்
பெற்றுக்கொண்ட நற்செய்தியைப் பிறருக்கு அறிவிக்கப்
பணிக்கப்படுகின்றார்கள். இயேசுவைப் பற்றிய நற்செய்தியை
நாம் கேட்கின்றோம் எனில், அதை நாம் மட்டும்
வைத்திருக்கக்கூடாது; எல்லாருக்கும் பயன்படும் வகையில்
அறிவிக்கவேண்டும். அதுவே நாம் செய்யவேண்டிய தலையான பணி.
"நாம் வாழும் வாழ்க்கை மிகச்சிறந்த நற்செய்தி அறிவிப்பாக
இல்லாதபோது, நற்செய்தி அறிவிப்பிற்காக எவ்வளவு தூரம் நாம்
பயணம் செய்தாலும், அதனால் எந்தவொரு பயனும் இல்லை" என்பார்
அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ். எனவே, நாம் நம் வாழ்வை
வாழ்வே மிகச் சிறந்த அறிவிப்பாக மாற்றி, இயேசுவின்
உயிர்ப்புப் பெருவிழாவை பொருள்ளதாக்குவோம்.
சிந்தனை:
"நமது பழைய வரலாறு சிலுவையோடு முடிந்துவிட்டது; நமது புதிய
வரலாறு இயேசுவின் உயிர்ப்போடு தொடங்கியிருக்கின்றது"
என்பார் வாட்ச்மேன் நீ (Watchman Nee) என்ற சீன அறிஞர்.
எனவே, இயேசுவின் உயிர்ப்பினால் புதிய வரலாற்றைத்
தொடங்கியிருக்கும் நாம் ,இயேசுவின் உயிர்ப்புக்குச்
சாட்சிகளாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம். |
இறைவாக்கு
ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள்
பாளையங்கோட்டை |
இயேசு என்ற முடிவில்லாத ஒளியை இந்த உலக இருளின் சக்திகள்
விழுங்கிட முயற்சித்தன. உலகின் ஒளி நானே என்று உரைத்தவரைக்
கொலை செய்தது இந்த உலகம். ஆனால் அவர் உயிர்த்துவிட்டார்!
சாவை வென்றவராய், சாத்தானை முறியடித்தவராய், பாவத்தை ஒழித்தவராய்
இயேசு உயிர்த்து விட்டார். அல்லேலூயா! கோதுமை மணியாக மண்ணில்
மடிந்தவர் (யோவா. 12:24) மிகுந்த பலனளிக்க உயிர்த்துவிட்டார்.
சாவையும், சாத்தானையும், பாவத்தையும் மட்டுமல்ல, உரோமை ஏகாதிபத்தியத்தையும்,
பரிசேயர், சதுசேயர் ஆணவத்தையும் தகர்த்து எரிந்துவிட்டார்.
இயேசு மரணத்தால் புதைக்கப்பட்டவர் அல்ல. மாறாக விதைக்கப்பட்டவர்.
எனவேதான் திருத்தூதர் பவுல் அடிகளார் சாவு வீழ்ந்தது.
வெற்றி கிடைத்தது. சாவே உன் வெற்றி எங்கே? சாவே உன்
கொடுக்கு எங்கே? என்று வீர முழக்கமிடுகிறார்.
கல்லறை தேடி வந்த பெண்களை நோக்கி: உயிருள்ளவரை இங்கே
தேடுவானேன்! அவர் இங்கே இல்லை. உயிர்த்துவிட்டார்! (லூக்.
24:7) என வானதூதர்கள் அறிவித்தார்கள் அல்லவா! கிறிஸ்து உயிருடன்
எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும்,
நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாக இருக்கும்
(1 கொரி. 15:14-15) என்று அறிவிக்கிறார் பவுல் அடிகளார்.
கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்களே
சாட்சிகள் (தி.ப. 2:32) என்றார் புனித பேதுரு.
ஆம்! அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! இயேசுவின் உயிர்ப்பு உலக
வரலாற்றை ஊடுருவிய நிகழ்ச்சி. திருச்சபையின் உயிர்நாடியாகும்.
விசுவாசத்தின் கருவாகும். உலக வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்வாகும்.
மூன்று முறை தன் இறப்பு, உயிர்ப்பு பற்றி அறிவித்த நேரங்களில்
சீடர்களின் மந்தப் புத்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் ஆவியானவரைப் பெற்றுத் தெளிவுப் பெற்றபின், நாங்கள்
கண்டதையும், கேட்டதையும் எங்களால் எடுத்துரைக்காமல் இருக்க
முடியாது (தி.ப. 4:20) என்றார் புனித பேதுரு.
ஆம்! இன்று இயேசு உயிர்த்தார் என்ற வரலாற்று உண்மையைக்
கொண்டாடுகிறோம். ஈஸ்டர் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்ளக்
காத்திருக்கிறோம்.
இயேசுவின் உயிர்ப்பில் நமக்கு விடுதலை கிடைத்திருக்கிறது.
புனித பவுல் அடிகளார் (உரோ. 6:23) உரோமையருக்கு எழுதும்
மடலிலே, பாவம் கொடுக்கும் கூலி சாவு என்று அறிவிக்கிறார்.
நாம் பாவத்தில் இருக்கும்வரை அடிமைப்பட்டுச் செத்துக் கிடக்கிறோம்.
ஆனால் நாம் இயேசுவோடு பாவத்திற்காக மரித்தோமென்றால் இயேசுவோடு
உயிர்ப்போம். விடுதலை பெறுவோம்.
மந்த புத்தியுள்ளவர்களே! மெசியா தாம் மாட்சிமை அடைவதற்கு
முன் இத்துன்பங்களைப்பட வேண்டுமல்லவா ? (லூக். 24:26). கர்ப்பிணிப்
பெண், குழந்தை பிறந்தவுடன் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறாள்.
குடிகாரக் கணவன் திருந்தி வாழும்போது மனைவி மகிழ்ச்சி அடைகிறாள்.
இவர்கள் மகிழ்ச்சிக்கு காரணம் இவர்கள் அனுபவித்த வேதனை. நம்
ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பும் இந்த உண்மையைத்தான் இன்று
எடுத்துரைக்கிறது.
வாரத்தின் முதல் நாளில் விடியற்காலையிலே, புதிய வாழ்வைத்
தேடி மதலேன் மரியாளும், மற்ற பெண்களும் சென்றார்கள். தேடலில்
ஆர்வமுள்ள மாணவன் நல்ல ஆசானைக் கண்டடைந்ததுபோல தேடியவர்கள்
உயிர்த்த ஆண்டவரைக் கண்டார்கள்.
ஒரு நாள் மாலை கல்லறைத் தோட்டத்தைக் கடந்து சென்றாள் ஒரு
சிறுமி. கல்லறைத் தோட்டத்தில் நின்ற வயதான மனிதர்
சிறுமியைப் பார்த்து, பொழுது சாய்ந்துவிட்டது. இந்த இருளில்
உனக்குக் கல்லறைத் தோட்டத்தில் நடந்து செல்ல பயமில்லையா என்று
கேட்டார். சிறுமியோ, எனக்குப் பயமே இல்லை. அதோ தெரிகிறது
என் வீடு என்று சொல்லிப் பயணத்தைத் தொடர்ந்தாள்.
சிறுமியின் கண்களுக்கு அவளது வீடு கண் முன் காட்சி தந்ததால்,
கல்லறைத் தோட்டம் அவள் நினைவுக்கு வரவில்லை. ஆம்! அன்பார்ந்தவர்களே!
இந்த மண்ணுலக வாழ்வுக்கு அப்பால் தெரியும் உயிர்ப்பு, அதனால்
கிடைக்கும் வான் வீட்டைப் பாருங்கள். அந்த வான் வீட்டுக்கு
இயேசு தன் உயிர்ப்பால் நமக்குப் பட்டா வழங்கிவிட்டார்கள்.
இயேசுவின் உயிர்ப்பு புது வாழ்வு தருகிறது.
1980-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி திருப்பலி
நிறைவேற்றிய எல் சால்வடோர் நாட்டுப் பேராயர் ஆஸ்கார்
ரோமேரோ, தான் கொலை செய்யப்படுமுன் சொன்னார்: "இறப்புக்கு
நான் அஞ்சவில்லை. இறப்பது நானாக இருக்க, உயிர்ப்பது சரித்திரமாகவும்,
சமுதாய மாற்றமாகவும் இருக்கப் போகிறது என்று மகிழ்ச்சி அடைகிறேன்"
என்றார். அவரது இறப்பு, தென் அமெரிக்க மக்களுக்கு உயிர்ப்பின்
சரித்திரமாக, சமுதாய மாற்றமாக மாறியுள்ளது. ஆனால் இயேசுவின்
உயிர்ப்பு எல்லா மக்களுக்கும் உயிர்ப்பும், வாழ்வும் ஆகும்.
காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடினாலும் தன் வயலுக்குத்
தண்ணீர் வரும் வாய்க்காலைச் சரி செய்து திறந்துவிட்டால்தான்
விளைச்சல் கிடைக்கும். குடம் ஓட்டையாக இருந்தால் குழாயில்
இருந்து விழும் தண்ணீர் குடத்தை நிறைக்காதே!
அதேபோல சாவின் தீய சக்திகளான வன்முறை, பழி வாங்கல், சுய
நலம், பொறாமை, ஏழைகளை வஞ்சித்தல், சாதியம் போன்ற சாக்கடைகளிலிருந்து
நாம் கழுவப்பட வேண்டும். அப்போது உயிர்த்த ஆண்டவரின் அன்பு,
அமைதி, மகிழ்ச்சி நம்மில் உயிர் பெறும். |
|
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை
ஆயர் F.அந்தோனிசாமி |
நினைவுதான் வாழ்வு
மனிதனைக் கடவுள் தமது சாயலில் படைத்து (தொநூ 1:27). அவன்
கையில் அழகான உலகத்தைக் கொடுத்து, அவன் வாழ்வாங்கு வாழ அவனுக்கு
ஆசியளித்தார் (தொநூ 1:28). மக்களுக்கு எப்பொழுதெல்லாம் ஆபத்து
ஏற்பட்டதோ அப்பொழுதெல்லாம் அவர்களது கூக்குரலுக்கு அவர்
செவிசாய்த்து, அவர்களை அரவணைத்துக் காத்தார் (விப
14:15-15:1). அவர்கள் மனம் சோர்ந்து போனபோதெல்லாம் ஆறுதல்
நிறைந்த வாக்குறுதிகளால் அவர்கள் வாழ்வை நிரப்பி அவர்களை
உற்சாகப்படுத்தினார் (எசே 36:26-27).
இயேசுவின் உயிர்ப்பு என்பது மனிதர்கள் மீது இறைவன்
கொண்டிருந்த அன்பின் உச்சக்கட்டம். மனிதர்களின் கேள்விகள்
அனைத்திற்கும் மீட்பின் வரலாற்றில் பதில் சொல்லி வந்த இறைவன்
எல்லாருடைய மனத்தையும் ஆட்டிப்படைத்த மரணத்திற்குப் பின்
என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு இயேசுவின் உயிர்ப்பின்
வழியாகப் பதில் சொல்லச் சித்தமானார்.
மரணத்திற்குப் பின் ஒரு புத்தம் புதிய வாழ்வு நமக்காகக்
காத்திருக்கின்றது. அங்கே துன்பமிருக்காது. துயரமிருக்காது.
சோதனை இருக்காது. வேதனையிருக்காது! அங்கே எல்லாரும் சந்திரனைப்
போல் அழகுள்ளவர்களாக, சூரியனைப் போல் ஒளிவீசுபவர்களாக இருப்பார்கள்
என்பதை உயிர்த்த இயேசு இன்று உணர்த்தியிருக்கின்றார்.
ஒரு கல்லறைத்தோட்டம். அந்தத் தோட்டத்தின் வாசலிலே அமர்ந்திருந்த
வயதான மனிதர் ஒருவர். அந்தக் கல்லறைத் தோட்டத்தைக் கடந்து
செல்ல நினைத்த ஒரு சிறுமியைப் பார்த்து. பொழுது
சாய்ந்துவிட்டது. இந்த இருளில் இந்த கல்லறைத் தோட்டத்தில்
நடந்து செல்ல உனக்குப் பயமாக இல்லையா? என்று கேட்டார். அதற்கு
அந்தச் சிறுமியோ, எனக்கென்ன பயம்? அதோ தெரிகின்றதே அதுதான்
எங்கள் வீடு என்று சொல்லிவிட்டு அவளது பயணத்தைத் தொடர்ந்தாள்.
அந்தச் சிறுமியின் வீடு அவள் கண்முன் தெரிந்ததால் அந்தக்
கல்லறைத் தோட்டத்திலிருந்த கல்லறைகள் அவள் மனதில் தோன்றவில்லை!
நினைவுதான் வாழ்வு என்பதை நாமறிவோம். கிறிஸ்துவில்
திருமுழுக்குப் பெற்ற அனைவரும் அவரைப் போல் உயிர்த்தெழுவோம்
என்கின்றார். புனித பவுலடிகளார் (உரோ 6:4).
இந்த 21-ஆம் நூற்றாண்டில் சிலர், எங்கள் கண்களை இமைகள்
மூடுகின்றன. ஆனால் கண்ணுக்குள்ளிருக்கும் கலக்கம் மறையவில்லை.
என்கின்றார்கள். சிலர், எங்கள்மீது கடற்கரை காற்று
வீசுகின்றது. ஆனால் எங்கள் உடல்மீது பட்ட காயத்தால் ஏற்பட்ட
எரிச்சல் இன்னும் தீரவில்லை என்கின்றார்கள். சிலர். எங்கள்
வீட்டுப் பிள்ளைகளைத் தொட்டியிலிட்டுத் தாலாட்டுகின்றோம்.
ஆனால் அவர்கள் பயத்தால் உறங்க மறுக்கின்றார்கள் என்கின்றார்கள்.
சிலர். தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி. போனது போக எது
மீதி? என்கின்றார்கள். பலர் உயிரோடு கல்லறைக்கு நடந்து
சென்றுகொண்டிருக்கின்றார்கள்.
இவர்களோடு இதோ உயிர்த்த கிறிஸ்து பேசுகின்றார் : இந்த மண்ணுலக
வாழ்வுக்கு அப்பால் தெரியும் உயிர்ப்பு என்னும் வான்
வீட்டைப் பாருங்கள். முடிவில்லா வாழ்வு உண்டு. உங்களுக்கு
என் உயிர்ப்பைப் பற்றிய, வான் வீட்டைப் பற்றிய சந்தேகமிருந்தால்
இன்றைய நற்செய்தியிலே வரும் மகதலா மரியாவைக் கேளுங்கள்; புரட்டப்பட்டிருந்த
கல்லறை கல்மீது அமர்ந்திருந்த வானதூதரைக் கேளுங்கள் : என்
சீடர்களைக் கேளுங்கள். உங்கள் உள்ளத்தில் நம்பிக்கை ஒளி ஏற்றப்படும்போது
உங்கள் வாழ்வைச் சுற்றிச் சூழ்ந்து நிற்கும் அச்சம், அதிர்ச்சி,
கலக்கம். மயக்கம் அனைத்தும் உங்களைவிட்டு அகன்று போக. உங்கள்
உள்ளத்தில் இந்த உலகத்தால் உங்களுக்குக் கொடுக்க முடியாத
அமைதியும், மகிழ்ச்சியும், ஒளியும் குடிகொள்ளும். மேலும்
அறிவோம் :
உறங்கு வதுபோலும் சாக்கா(டு) :உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
(குறள் : 339).
பொருள்:
நிலையில்லாத இவ்வுலக வாழ்வில் சாவு என்பது உறக்கம் கொள்வது
போன்றது. பிறப்பு என்பது உறக்கம் கலைந்து விழிப்பது போன்றது!
|
|
மறையுறை
மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ் |
ஒரு புதிய மதத்தைத் தோற்றுவிக்க
விரும்பிய இளைஞன் அதைப்பற்றி ஒரு பெரியவரிடம் ஆலேசானை கேட்டபோது,
அவர் இளைஞனிடம், "நீ தோற்றுவிக்கும் புதிய மதம் உன் காலத்திற்குப்
பின்னும் நீடிக்க வேண்டுமென்றால், ஒரு வெள்ளிக்கிழமை அன்று
நீ சிலுவையில் அறையப்பட்டு சாகவேண்டும்; அடுத்து வரும்
ஞாயிறு அன்று நீ உன் கல்லறையிலிருந்து உயிர்த்தெழ
வேண்டும்" என்றார். அப்பெரியவர் கூறியதன் உட்பொருளை அறிந்த
அந்த இளைஞன் தனது எண்ணத்தைக் கைவிட்டு விட்டான்.
கிறிஸ்தவ சமயம் இரண்டாயிரம்ஆண்டுகளுக்குப் பிறகும் பசுமையாக
இருப்பதற்குக் காரணம், அது கிறிஸ்துவின் உயிர்ப்பை அடித்தளமாசுக்
கொண்டுள்ளது. கிறிஸ்து எருசலேம் தேவாலயத்தைத் தூய்மைப்படுத்த
அதிலிருந்து வியாபாரிகளைச் சாட்டையால் அடித்து
வெளியேற்றினார். அப்போது யூதர்கள் அவரிடம், "இவ்வாறு செய்ய
உமக்கு என்ன அதிகாரம் உண்டு?" என்று கேட்டனர். இயேசு அவர்களிடம்,
"இக்கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் இதைக்
கட்டி எழுப்புவேன்" என்றார். அவர் குறிப்பிட்டது தமது உடலாகிய
கோவிலைப்பற்றி என்பதை அவர் உயிர்த்தெழுந்தபோது அவருடைய சீடர்கள்
நினைவுகூர்ந்து இயேசுவை நம்பினர் (யோவா 2:18-21).
கிறிஸ்து அவர் முன்னறிவித்தபடி இறந்த மூன்றாம் நாள் கல்லறையிலிருந்து
உயிர்த்தெழுந்தார். ஞாயிறு காலை கிறிஸ்துவின் கல்லறைக்குச்
சென்ற பெண்களிடம் இரு வானதூதர்கள், "உயிரோடு இருப்பவரைக்
கல்லறையில் தேடுவதேன்? அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்
" என்று கூறினர் (லூக் 24:5). இன்றைய நற்செய்தியில்,
யோவான் காலியான கல்லறைக்குள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார்
(யோவா 20:9). காலியாள கல்லறை அவருக்கு வழங்கிய செய்தி:
"கிறிஸ்து உயிர்த்துவிட்டார்."
நற்செய்தி நூல்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகின்றன
என்பதைவிட, கிறிஸ்துவின் உயிர்ப்புத்தான் நற்செய்தி நூல்களுக்கு
விளக்கம் தருகிறது. ஏனெனில், திருத்தூதர் பவுல் கூறுவதுபோல,
"கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை யென்றால், நாங்கள் பறைசாற்றும்
நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்"
(1 கொரி 15:14).
திருத்தூதர்களுடைய போதனையின் மையக்கரு கிறிஸ்துவின் இறப்பும்
உயிர்ப்புமாகும். இன்றைய முதல் வாசகத்தில் இதைத்தான்
பேதுகு யூத மக்களுக்கு அறிவிக்கின்றார். பிறவியிலேயே ஊனமுற்றிருந்தவரை
எழுந்து நடக்கச் செய்துவிட்டு, பேதுரு யூத மக்களிடம் கூறியது:
"வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால்
கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள்
சாட்சிகள்" (திப 3:15), "திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு
உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்தனர்"
(திப 4:33).
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது உயிர்ப்பிற்கு முன்னடையாளம்.
இதைப்பற்றித் திருத்தூதர் பவுல் மிகவும் தெளிவாகக்
கூறியுள்ளார், இறந்தோர் உயிர்த்தெழமாட்டார் எனில்
கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை" (1 கொரி 15:13),
"நாம் அனைவரும் சாசு மாட்டோம். ஆனால்அனைவரும்
மாற்றுருபெறுவோம்... சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்து
கொள்ளும் (1 கொரி 15:54). கிறிஸ்து சாவின் கொடுக்கை
முறித்துவிட்டார்" (1 கொரி 15:55).
ஒவ்வொரு சாவுமணி அடிக்கும்போதும் கிறிஸ்து கூறுவது: உயிர்த்தெழச்
செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை
கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம்
நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் (யோவா
11:25). நாம் இம்மையிலேயே கிறிஸ்துவோடு சாவைக் கடந்து
சென்றுவிட்டோம் (யோவா 5:24). இது யோவானின் நிறைவுகால இறையியல்
கருத்து.
ஒருநாள் நான் வீதியிலே சென்றபோது ஒருவர் என்னைப் பார்த்து,
"இயேசு ஜீவிக்கிறார். அல்லேலூயா" என்றார், ஆம், இயேசு இன்றும்
நம்முடன் இருக்கிறார். அவருடைய இறுதி வாக்குறுதி: "இதோ!
உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்
28:20).
கிறிஸ்து எந்நாளும் நம்முடன் இருக்கிறார்; பயணிக்கிறார்;
உரையாடுகிறார்; பேய்களை ஓட்டி. நோய்களைக் குணமாக்கி, ஆவியால்
நிரப்புகிறார். மறைநூலைப் புரிந்துகொள்ளும் வண்ணம் நமது
மனக்கண்களைத் திறந்து விடுகிறார். அப்பம் பிடுகையில் அவரை
அடையாளம் கண்டுகொள்ளச் செய்கிறார், ஒருவர் ஒருவரை அன்பு
செய்து, மண்ணுலகின் இறுதி எல்லைவரை அவருடைய சாட்சிகளாக
மாற்றுகிறார். சின்னஞ் சிறியவர்களிடமும் அவர் தம்மை வெளிப்படுத்தி
அவர்களுக்கு உதவி புரியும் நல்லுள்ளத்தை நமக்கு நல்குகிறார்;
எனவே துணிவு கொள்வோம்; மகிழ்வுடன் இருப்போம். நாம் உயிர்ப்பின்
மக்கள்; நமது கீதம்,அல்லேலூயா!
ஒருவர் ஓர் உயர்ந்த கொடிமரத்தில் ஏறி, கீழே இறங்கியபோது
அவரது தலை சுற்றியது. "ஐயோ! நான் செத்தேனே" என்று கதற,
கொடிமரத்தின் அடியில் இருந்தவர்கள்: "தம்பி, கீழே பார்க்காமல்,
மேலே பார்த்துக்கொண்டே இறங்கு" என்றனர். அவரும் அவ்வாறே
செய்து கீழே இறங்கினார். நாம் நம்மையும் நம் பிரச்சினைகளையும்
பார்க்கும்போது நமது தலை சுற்றுகிறது; இரத்த அழுத்தம் உயர்கிறது;
வாந்தி வருகிறது; வயிறு வலிக்கிறது. இருப்பதைவிட இறப்பது
மேல் என்று தோன்றுகிறது. ஆனால், இன்றைய இரண்டாம் வாசகத்தில்
திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று
எழுந்தவர் களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக்
கிறிஸ்து கடவுளின் வலப்பக்கம் அமச்ந்திருக்கிறார்" (கொலோ
3:1), எனவே, நாம் மேலே பார்ப்போம்: இதயங்களை மேலே எழுப்புவோம்.
உதவி நமக்குக் கடவுளிடமிருந்து வரும். அவரே விண்ணையும் மண்ணையும்
உண்டாக்கியவர். அவர் நம் கால் இடறவிடமாட்டார். அவர் கண்ணயர்வதுமில்லை;
உறங்குவதும் இல்லை. அவர் நாம் போகும்போதும் வரும்போதும்,
இப்போதும் எப்போதும் நமது உடலையும் ஆன்மாவையும் காப்பார்
(காண். திபா 21).
இவ்வுலகில் கடைசி நாள்வரை உண்மைக்கும் பொய்க்கும்,
சாவுக்கும் வாழ்வுக்கும், இருளுக்கும் ஒளிக்கும் இடையே தொடர்
போராட்டம் நடந்துகொண்டே இருக்கும். ஆனால் இறுதியில் பொய்மை
புதைக்கப்பட்டு உண்மை உயிர்த்தெழும். சாவுக்கு சாவுமணி அடிக்கப்படும்;
வாழ்வு மலரும். இருள் மறைந்து, ஒளி உதயமாகும்.
"ஆண்டவர் தோற்றுவித்த நாள் இதுவே!
இன்று அகமகிழ்வோம்! அக்களிப்போம்!
அல்லேலூயா!" (தியா118:24). |
பிரான்சு நாட்டில் வாழ்ந்த ஓர் இளைஞர்
ஒரு புதிய சமயத்தை நிறுவ விரும்பி, அதைக்குறித்து ஒரு பெரியவரிடம்
ஆலோசனை கேட்டபோது, அப்பெரியவர் அந்த இளைஞரிடம், "நீ நிறுவவிருக்கும்
புதிய சமயம் நீ இறந்த பிறகும் நிலைத்திருக்க
வேண்டுமென்றால், நீ ஒரு வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அறையப்பட்டுச்
சாக வேண்டும்; மறுநாள் சனிக்கிழமை கல்லறையில் அடக்கம் செய்யப்
பட்டு, மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழ
வேண்டும்" என்றார், அப்பெரியவர் சொன்னதில் பொதிந்திருந்த
உண்மையை உணர்ந்த அந்த இளைஞர் தனது என்னத்தைக் கைவிட்டு
விட்டார்.
கிறிஸ்துவ சமயம் கடந்த இருபது நூற்றாண்டுகள் எத்தனையோ சவால்களையும்
வேதகலாபனைகளையும் கடந்து வந்து, இன்றும் உயிர்த் துடிப்புடன்
இருப்பதற்குக் காரணம் அது கிறிஸ்துவின் உயிர்ப்பை அடித்தளமாகக்
கொண்டுள்ளது. நற்செய்தியானது கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகிறது
என்பதைவிட, கிறிஸ்துவின் உயிர்ப்புத் தான் நற்செய்திக்கே
விளக்கமளிக்கிறது. ஏனெனில் புனித பவுல் சுட்டிக்
காட்டியுள்ளது போல், கிறிஸ்து உயிர்க்கவில்லை என்றால் நற்செய்தியும்
பயனற்றது, நமது நம்பிக்கையும் பயனற்றது (1கொரி 15:14).
கிறிஸ்து தமது அதிகாரத்திற்கும் போதனைக்கும் தமது உயிர்த்தெழுதலைத்தான்
சான்றாக முன்வைத்தார். "இக்கோவிலை இடித்து விடுங்கள், நான்
மூன்று நாளில் இதைக்கட்டி எழுப்புவேன் (யோவா 2:19). அவர்
குறிப்பிட்ட கோவில் அவர் உடல் என்பதை அவரின் சீடர்கள். அவர்
உயிர்த்தபின் நினைவு கூர்ந்து, அவரில் நம்பிக்கை கொண்டனர்
(யோவா 2:21-22).
திருத்தூதர்களுடைய போதனையின் மையக்கருவாக விளங்கியது
கிறிஸ்துவின் உயிர்ப்பாகும், வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள்
கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்,
இதற்கு நாங்கள் சாட்சிகள்" (திப 3:15-16).
கடைக்குச் சென்ற ஒருவர், அக்கடையிலிருந்த காலியான
டின்னிலிருந்து 1/2 கிலோ கொடுக்கும்படி கடைக்காரரிடம் கேட்டபோது,
கடைக்காரர் அவரது அறியாமையை எண்ணி விழுந்து விழுந்து
சிரித்தார். காலியான டின்னிலிருந்து எதையாவது எடுக்க
முடியுமா? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!
ஆனால், காலியாகக் கிடந்த இயேசுவின் கல்லறை இயேசுவின் உயிர்ப்பை
எடுத்துரைத்தது. அதிகாலையில் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற
பெண்கள் காலியாகக் கிடந்த கல்லறையைக் கண்டனர். வானதூதர்
அவர்களுக்குக் கொடுத்த விளக்கம்: "சிலுவையில் அறையப்பட்ட
நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்.
அவர் இங்கே இல்லை " (மாற் 18:6).
பேதுருவுடன் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற அன்புச் சிடர்
யோவான், கல்லறைக்குள் சென்றார், கண்டார், நம்பினார்" (யோவா
20:8), அவர் கண்டதோ காலியான கல்லறை: ஆனால் அவர் நம்பியதோ
உயிர்த்த இயேசுவை. எனவே, காலியான கல்லறையே இயேசுவின் உயிர்ப்புக்குச்
சாட்சியம் பகர்ந்தது.
இயேசுவின் உயிர்ப்பு நமது உயிர்ப்புக்கு ஒரு முன்னோடியாகத்
திகழ்கிறது. இறந்தவர்கள் உயிர்க்கவில்லை என்றால் இயேசுவும்
உயிர்க்கவில்லை (1கொரி 15:13). கிறிஸ்துவில் நம்பிக்கை
கொள்வோம் இறப்பினும் வாழ்வர் (யோவா 11:25). கிறிஸ்துவின்
திருவுடலை உண்டு அவரது இரத்தத்தைப் பருகுவோர் நிலை
வாழ்வைக் கொண்டுள்ளனர் (யோவா 6:54), அவர்கள் ஏற்கெனவே
சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்து விட்டார்கள் (யோவா 5:24).
ஒருவர் குளவியால் கொட்டப்பட்டு இறந்து விட்டார். அவரைக்
கொட்டிய அதே குளவி அவரது மகனை ஒரு வாரம் கழித்து கொட்ட வந்தபோது,
அவன் அலறிக் கொண்டு அவன் அம்மாவைக் கட்டிப் பிடித்தான்.
அவன் அம்மா அவளிடம், "நீ பயப்படாதே! இக்குளலி உன் அப்பாவைக்
கொட்டிய போது அது தன் கொடுக்கை இழந்து விட்டது. இனிமேல்
அதனால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.
ஆம், இயேசு இறந்தபோது அவர் தமது சாவினால் சாவின் கொடுக்கை
முறித்து விட்டார், சாவு தனது கொடுக்கை இழந்து விட்டது.
"சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே உன்
வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?" (1கொரி
15:54-55).
நாம் திருமுழுக்குப் பெற்றபோது இயேசுவின் சாவிலும் உயிர்ப்பிலும்
பங்கு பெற்றுள்ளோம். அவரோடு நாம் இறந்து விட்டோம் என்றால்,
அவரோடு உயிர்ப்பது நிச்சயமாகி விட்டது (உரோ 6:3-11).
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது வாழ்வுக்குப் புதிய நம்பிக்கையைக்
கொடுக்கிறது. கிறிஸ்துவின் கல்லறைக்குச் சென்ற பெண்கள் கல்லறை
வாயிலை மூடியிருந்த பெரிய கல்லை (எவ்வாறு அகற்றுவது என்ற
கவலையுடன் சென்றனர், ஆனால் அக்கல்லானது ஏற்கெனவே, புரட்டப்பட்டிருந்தது
(மாற் 16:3 4), அவ்வாறே நமது வாழ்வில் வரும் பெரிய இடர்களையும்
உயிர்த்த இயேசு அகற்றி விடுவார். நாம் அஞ்சத் தேவையில்லை.
மலைகள் போலத் தடைகள் வந்தாலும் நாம் மலைத்திடாது நமது
வாழ்வுப் பயணத்தைத் தொடர்வோம். ஏனெனில் உயிர்த்த ஆண்டவர்
உலகம் முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார் (மத்
28:20). நாம் உயிர்ப்பின் மக்கள்; தம் கீதம் அல்லேலூயா!
பெரிய கொடிமரத்தில் ஏறிய ஒருவர் கீழே இறங்கியபோது மிகவும்
பயந்தார். கீழே இருந்தவர்கள் அவரிடம், கீழே பார்க்காமல்
மேலே வானத்தைப் பார்த்துக் கொண்டே இறங்கும்படி கேட்டனர்.
அவரும் மண்ணைப் பார்க்காமல் விண்ணைப் பார்த்த வண்ணம் கீழே
இறங்கினார். நாமும் நம்மையும் நமது பிரச்சினைகளையும் மட்டும்
பார்த்தால் நமது தலை சுற்றும்; மயக்கமும் தயக்கமும் வரும்.
எனவே, நாம் மேலுலகைப் பார்த்த வண்ணம் வாழ வேண்டும். ஏனெனில்,
அங்குதான் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கம் அமர்ந்துள்ளார்
(கொலோ 3:1-3).
பாஸ்காத் திருவிழிப்பில் நாம் காண்பது புதிய நெருப்பு,
புதிய ஒளி. புதிய தண்ணீர், புதுப்படைப்பு, புதுவாழ்வு. பழையன
கழிந்து, புதியன புகுந்தன. இவை யாவும் கடவுளின் செயலே (2
கொரி 5:17-18).
"ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்;
அகமகிழ்வோம்" (திபா 118:24).
|
திருவுரைத்
தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை |
இந்தப் புழுதியும் புத்துயிர் பெறும்
நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் புனித உணர்வுமாக
ஒரு தவப்பயணத்தைத் தொடங்கினோம் திருநீற்றுப் புதன்
சொல்லும் செய்தி என்ன?
மனிதனே நீ மண்ணாய் இருக்கிறாய் என்பது.
உயிர்ப்புப் பெருவிழா உரைக்கும் செய்தியோ... இந்தப்
புழுதியும்
புத்துயிர் பெறும், புதுவாழ்வுக்கு உயிர்க்கும் என்பதுதானே!
அஸ்தமனம் சூரியனுக்கு வீழ்ச்சி அல்ல. கல்வாரி மரணம் இயேசுவுக்குத்
தோல்வி அல்ல. தோல்விக்குப் பிறகு வெற்றி என்பார்கள். இயேசுவைப்
பொருத்தவரை தோல்வியே வெற்றி!
வாழப் பிறந்தவர்கள் மனிதர்கள் நாம். சாவதற்கென்றே
பிறந்தவர் அன்றோ இயேசு! மரணம்தான் இயேசுவின் மனிதப்
பிறப்பின் நோக்கம் என்றால், இலட்சியத்தின் நிறைவேற்றம்
எப்படித் தோல்வியாக இருக்க முடியும்? அந்த வெற்றிக்கு
இறைவன் கொடுத்த வடிவம்தான் இயேசுவின் உயிர்ப்பு.
அந்த வெற்றி உயிர்ப்பில் வேரூன்றியதுதானே நமது நம்பிக்கை!
"இயேசு ஆண்டவர் என அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள்
உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால்
மீட்புப் பெறுவீர்கள்" (உரோமை 10:9)
இருட்டத் தொடங்கிய நேரம் ஒருவர் தன் நண்பரைச் சந்திக்கச்
சென்றார். ஒரு காலத்தில் நிலக்கரிச் சுரங்கம் இருந்த
பகுதி. இப்போது பாழடைந்து கிடந்தது. இங்குமங்குமாக
ஆழக்குழிகள். அந்த வழியே சென்ற மனிதர் தவறி ஒரு சுரங்க
வாயிலில் சருக்கி உருண்டு உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது கையில் தட்டுப்பட்ட ஒரு மரத்தின் வேரைப்
பிடித்துக் கொண்டு தொங்கினார். யாராவது காப்பாற்ற
மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு அபயக்குரல் எழுப்பினார்.
கையில் விளக்கோடு அந்தப்பக்கம் வந்த ஒருவர் குரல் வந்த
பள்ளம் நோக்கி விளக்கைத் திருப்பினார். அவருக்கே
ஆச்சரியம்! தொங்கிக் கொண்டிருந்தவரின் காலுக்குடியில்
கால்அடி கீழே பாறை போல் உறுதியான மண்பகுதி இருப்பதைப்
பார்க்கிறார். "உன் காலுக்கடியில் உறுதியான நிலம்
இருக்கிறபோது, நீ ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறாய்? என்று
கேட்கிறார். ஆம் காலுக்கடியில் நிலமிருந்தும், அதைக்
காணாமல் உணராமல் ஏதோ படுபாதாளம். இருப்பது போல, உடல்நோக
எத்தனை நேரம் வீணாகத் தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார்!
இயேசுவின் உயிர்ப்பு மறைக்க முடியாதபடி முகத்தில்
இருக்கும் மூக்குப் போல வெளிப்படையாக இருந்தும், கல்வாரி
மரணத்தையே நினைத்துக் கலங்கிக் கொண்டிருப்பதா?
இயேசுவின் உயிர்ப்பு அலகையின் மீதும் பாவத்தின் மீதும்
அதன் விளைவான நோவு, சாவின் மீதும் கொண்ட வெற்றி. ஆனால் இது
இயேசுவோடு மட்டும் முடிந்து விட்ட ஒன்று எனில் அதுவெறும்
வரலாற்று நிகழ்வாகவே இருக்கும். மாறாக இறைத்தந்தை
இயேசுவில் பெற்ற வெற்றியை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் காண
வேண்டுமென்று விரும்புகிறார். இல்லையென்றால்...
"பசுமை பாலைவனமாவது, வாழ்வு சவக்காடாவது
வளமை வயிற்றெரிச்சலாவது, கண்ணியம் கண்ணீராவது
அன்றாட வாழ்க்கையெனில் அந்தக் கடவுள்
இருந்தால் என்ன, இறந்தால் என்ன
உயிர்த்தால் என்ன, ஒழிந்தால் என்ன?!"
என்ற யாரோ ஒருவரின் உள்ளக் குமுறல் வேதனையிலும்
விரக்தியிலும் வெடித்துச் சிதறும்.
மரணம் என்பது புதிய வாழ்வுக்கான நுழைவாயில். சாகா வரம்
வேண்டித்தான் மனித இனமே, கடவுளின் படைப்புக்களே
துடிக்கின்றன. திருத்தூதர் பவுல் சொல்வார் "இக்காலத்தில்
நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப்
போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான்
எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள்
வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு.
காத்திருக்கிறது" (உரோமை.8:18,19). இந்தப் படைப்புகளின்
வேட்கையை இயேசுவின் உயிர்ப்பு நிறைவு செய்கிறது.
நமது வாழ்விலும் நாம் சார்ந்த சமுதாயத்திலும் இயேசுவின்
உயிர்ப்பு வெளிப்பட வேண்டும். சான்றாக 1980 ஆம் ஆண்டு
மார்ச் 24ஆம் நாள், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்த
எல்சால்வதோர் நாட்டுப் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, தான் கொலை
செய்யப்படு முன் சொன்னார்: "இறப்பதற்கு நான் அஞ்சவில்லை.
இறப்பது நானாக இருக்க, உயிர்ப்பது சரித்திரமாகவும்
சமுதாயமாகவும் இருக்கப் போகிறது என்று மகிழ்ச்சி
அடைகிறேன்".
இயேசுவின் உயிர்ப்பு எல்லா மக்களுக்கும் உயிரும்
உயிர்ப்பும் ஆகும். "அவர்கள் என் உடலைக் கொல்ல முடியுமே
தவிர என் குரலை அடக்கிவிட முடியாது. நான் இறந்தால்,
மீண்டும் எல்சால்வதோர் மக்களில் உயிர்த்தெழுவேன்". இது
எல்சால்வதோர் மக்களுக்காவே உழைத்து இரத்த சாட்சியாக இறந்த
பேராயர் ஆஸ்கர் ரொமோரோவின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை
வெகுசில ஆண்டுகளுக்குள்ளேயே எத்தகைய செழித்த விளைச்சலை
அறுவடை செய்தது என்பதை இந்த உலகம் அறியும்!
கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை திருச்சபை கொண்டாடிய ஒரே
விழா உயிர்ப்பு விழா, இன்றும் நாம் நினைவு கூரும்
விழாக்களில் முதன்மையானது, முக்கியமானது. இயேசுவின்
உயிர்ப்புப் பெருவிழா. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இயேசு
உயிர்ப்பதில்லை.
சண்டையும் சச்சரவும் மறைந்து சமாதானம் பிறக்கின்ற
போதெல்லாம் அங்கே இயேசு உயிர்க்கிறார்! பகைமை மடிந்து
அன்பும் அமைதியும் தளிர்க்கின்ற போதெல்லாம் அங்கே இயேசு
உயிர்க்கிறார்! அழுத ஏழையின் கவலை தீர்ந்து கண்ணீர் உலரும்
போதெல்லாம் அங்கே இயேசு உயிர்க்கிறார்! துன்புற்ற மக்கள்
ஒன்று திரண்டு நம்பிக்கையோடு உரிமைக்குரல் உயர்த்தும்
போதெல்லாம் வெற்றி வீரராய் அங்கே இயேசு உயிர்க்கிறார்!
உயிர்த்த இயேசுவை மீண்டும் நம் பாவங்களால் இறக்கச்
செய்யாமல் பார்த்துக் கொள்வோம். இயேசு உயிர்த்தார்!
இயேசுவில் நாமும் உயிர்ப்போம்! உயிர்க்க வாழ்த்துக்கள்.
அல்லேலூயா! |
கல்லறைக்கு அப்பால்
'வார்த்தை மீது வாசல்கள்" (Windows on the Word) என்ற ஆங்கில
நூலில் காணும் நிகழ்ச்சி இது.
டாக்டர் தேஹான் என்பவர் தனது இரு மகன்களுடன் பசுமையான வயல்வெளி
வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். எங்கிருந்தோ வேகமாகப்
பறந்து வந்த தேனீ ஒன்று மூத்தமகன் ரிச்சர்டின் கண்களுக்குமேல்
- கண்ணிமையில் கொட்டி விட்டது. அந்தத் தேனீயைக் கீழே உதறித்
தள்ளிவிட்டு அங்கிருந்த புல்தரையில் ரிச்சர்ட் விழுந்து
கதறினான், அலறினான் வலி தாங்க இயலாமல். அதையெல்லாம் கண்டு
அதிர்ந்து நின்றான் சின்னவன் மெர்வின். சிறிதுநேரத்தில் அதே
தேனி அவனைச் சுற்றி வட்டமிட்டது. தன் அண்ணன் துடித்த
துடிப்பை நினைத்தான். அழத் தொடங்கினான். அது தன்னைக்
கொட்டிவிடுமோ என்று மிரண்டான். அதே புல்தரையில் உருண்டான்,
புரண்டான். அப்போது அவனுடைய தந்தை ஓடிவந்து மெர் வினைக் கைகளில்
அணைத்துக் கொண்டு "மெர்வின், பயப்படாதே. தைரியமாயிரு. அந்தத்
தேனீ உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அது ஏற்கனவே தன்
கொடுக்கை இழந்து விட்டது. அந்தத் தேனீ உன்னை வளைய வளைய வட்டமிடலாம்.
அச்சுறுத்தலாம். உன் அண்ணனைக் கொட்டியபோதே அதன் கொடுக்கு
முறிந்து விட்டது" என்றார்.
நம்மைப் பொறுத்தவரை இயேசு சாவின் கொடுக்கை முறித்து
விட்டார். ''சாவு, வீழ்ந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன்
வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே? (1 கொரி. 15;55)
என்ற திருத்தூதர் பவுலின் ஆவேச வார்த்தைகள் எவ்வளவு ஆழமானவை!
அர்த்தமுள்ளவை!
கிறிஸ்துவின் உயிர்ப்பில் திருத்தூதர் வைத்துள்ள நம்பிக்கை,
உறுதிப்பாடு வியப்புக்குரியவை. "பாவமே சாவின் கொடுக்கும்.
ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த
வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி" என்று திருத்தூதர்
பவுலோடு கிறிஸ்தவ உலகமே ஆர்ப்பரிக்கும் பாஸ்கா இரவு இது!
சாவின் மீது வெற்றி, சாவுக்குக் காரணமான பாவத்தின் மீது
வெற்றி, பாவத்துக்குக் காரணனான சாத்தானின் மீது வெற்றி, இம்முப்பெரும்
வெற்றிக்காக உயிர்த்த ஆண்டவரைக் கைகுலுக்கிப்
பாராட்டுவோம். இயேசு பெற்ற அம்முப்பெரும் வெற்றியில் நமக்கும்
பங்களிப்பதற்காக அவருக்கு நன்றி கூருவோம்.
1. இயேசு பாவத்தை வென்றார். அவரது உயிர்ப்பு பாவத்தின் மயக்கத்திலிருந்து
நம்மை விடுவிக்கிறது. கல்வாரிப் பலியே பாவப் பரிகாரப் பலிதான்.
கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே, மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே
இருந்த உறவுக்கான தடைச் சுவர்களை உடைத்தெறிந்த பலி,
"கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே
முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை
தோன்றுவார். ஆனால் பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக்
காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே
தோன்றுவார்'' (எபி.9:28)
2. இயேசு சாவை வென்றார். அவரது உயிர்ப்பு சாவின் தூக்கத்திலிருந்து
நம்மை எழுப்புகிறது. "பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு.
மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு" (உரோமை 6:23). "எல்லாப்
பகைவரையும் அடிபணிய வைக்கும் அவரை அவர் ஆட்சி செய்தாக
வேண்டும். சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப் படும்"
(1 கொரி.15:25, 26) திருத்தூதர் உரத்துச் சொன்ன வார்த்தைகள்
இவை. இயேசு வந்ததே, வாழ்வு சாவை விட வலிமையானது என்பதை உணர்த்தவே!
3. இயேசு அலகையை வென்றார். அவரது உயிர்ப்பு அலகையின்
மாயையிலிருந்து நம்மைத் தெளிவிக்கிறது. ''கடவுளின் அருளால்
அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது...
ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில்
பங்கு கொண்டார். இவ்வாறு சாவின் மேல் ஆற்றல் கொண்டிருந்த
அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார். வாழ்நாள் முழுவதும்
சாவு பற்றிய அச்சத்தினால் அடிமைப் பட்டிருந்தவர்களை
விடுவித்தார்" (எபி.2:9, 14, 15). ஏற்கனவே பாலை வனத்திலும்
தொழுகைக் கூடத்திலும் சாத்தானை விரட்டியடித்தவர் தானே இயேசு!
"உடலின் உயிர்ப்பை நம்புகிறேன். முடிவில்லா வாழ்வை நம்புகிறேன்"
- இது நமது நம்பிக்கைக் கோட்பாட்டின் தெளிவு. உயிர்ப்பு என்பது
கிறிஸ்தவக் கோட்பாட்டின் மையம். கிறிஸ்தவ நம்பிக்கைக்கும்
வாழ்வுக்கும் ஓர் உந்துசக்தி.
சிறந்த கிறிஸ்தவரும் அறிவியல் அறிஞருமான மைக்கேல் பாரடே
மரணப்படுக்கையில் இருந்தார். "சாவுக்குப் பிறகு கிடைக்கும்
வாழ்வு எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது அவர் சொன்னார்:
"எனக்குத் தெரியாது. ஆனால் நான் நிலையானவற்றில் நம்பிக்கை
கொண்டுள்ளேன். காரணம், நான் நம்பும் மீட்பர் உயிர்த்து இன்றும்
வாழ்கின்றார். எனவே நான் வாழ்வேன் என்பது உறுதி ". உயிர்ப்பு
என்பது மேலோட்டமாகப் பார்த்தால் புரியாத புதிராக, அறிவுக்குப்
புலப்படாததாகத் தோன்றும். ஆழமான நம்பிக்கை கொண்டு
பார்த்தால் இம்மறைபொருள் காட்டும் மேன்மையை உணர முடியும்.
திருத்தூதர் தெளிவுபடுத்துவது இதுதான்: "இறந்தோர் உயிர்த்தெழ
மாட்டார் எனில் கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகி
விடும். கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள்
பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும்
பொருளற்றதாயிருக்கும்" (1கொரி. 15:13,14)
ஆம், இயேசு உயிர்த்து விட்டார். நமது உயிர்ப்பு
வாழ்வுக்கும் உறுதி தந்துவிட்டார். அவரோடு நாமும் உயிர்க்கின்றோம்.
- பொய்யைவிட உண்மை மேலானது என்பதை இயேசுவின் உயிர்ப்புஎண்பிக்கிறது.
- தீமையைவிட நன்மை உறுதியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு
எடுத்து இயம்புகிறது.
- பகைமையை விட அன்பு, மன்னிப்பு உயர்ந்தது என்பதை இயேசுவின்
உயிர்ப்பு உணர்த்துகின்றது.
- சாவை விட வாழ்வு சக்தியானது என்பதை இயேசுவின் உயிர்ப்பு
உறுதிசெய்கின்றது.
உயிர்ப்பு நமக்கு அனுபவமாகட்டும். அல்லேலூயா!
|
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி |
சின்னச்சின்னதாய் உயிர்ப்பைக் காண...
இயற்கையில் ஏற்படும் ஒருசில அற்புத நிகழ்வுகள், இறைவனின்
சக்திமிக்க செயல்களாகப் பதிவாகியுள்ளன. இஸ்ரயேல் மக்கள்
விடுதலைப் பயணத்தைத் துவங்கியபோது, செங்கடலின் நீர்த்திரளை
இறைவன் சக்திமிகுந்த காற்றினால் பிரித்து, அதில், அவர்கள்,
பாதம் நனையாமல் கடந்து சென்றதை அறிவோம். இந்நிகழ்வை,
உயிர்ப்புப் பெருவிழாவின் திருவிழிப்பு திருவழிபாட்டில்
வாசிக்கக் கேட்டோம் (விடுதலைப் பயணம் 14:15 - 15:1). இயேசு
பிறந்த வேளையில், ஓர் அற்புத விண்மீன் வானில் தோன்றி,
மூன்று அறிஞர்களை வழிநடத்தியது. பெந்தக்கோஸ்து நாளன்று,
சக்திமிகுந்த காற்று மற்றும் நெருப்பு நாவுகள் வழியே அன்னை
மரியாவின் மீதும், திருத்தூதர்கள் மீதும் தூய ஆவியார்
இறங்கிவந்தார். கல்வாரியில் இயேசு உயிர் துறந்தபோது,
நண்பகல் வேளையில் பூமியை இருள் சூழ்ந்தது. உயிர்ப்பு
ஞாயிறு காலையில், நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதை,
திருவிழிப்பின்போது நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம்:
ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில்
மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச்
சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை
மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.
(மத்தேயு 28:1-2)
நிலநடுக்கம், சுனாமி, பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள்
ஏற்படும்போது, அவற்றை, நாம், மரணத்தைக் கொணரும் அழிவின்
சின்னங்களாகவே பெரும்பாலும் கருதுகிறோம். உயிர்ப்பு
ஞாயிறன்று ஏற்பட்ட நிலநடுக்கமோ, நம் எண்ணங்களைப்
புரட்டிப்போடும் வண்ணம், கல்லறைக் கல்லைப் புரட்டி, வாழ்வை
பறைசாற்றியது. மரணத்தை வெல்லும் சக்திபெற்றது வாழ்வு
என்பதே, உயிர்ப்பு விழாவின் மையக்கருத்து.
நாம் வாழும் இன்றையச் சூழலிலும், நிலநடுக்கத்தின் விளைவாக
உருவாகும் அழிவுகளின் நடுவே, வாழ்வு வெளிப்படும்
நிகழ்வுகளை நாம் செய்திகளாக வாசிக்கிறோம். துருக்கி
மற்றும் சிரியா நாடுகளில், இவ்வாண்டு பிப்ரவரி 6ம் தேதி
ஏற்பட்ட நிலநடுக்கத்தைப் பற்றிய வேதனை செய்திகளை நாம்
தொடர்ந்து கேட்டுவந்தோம். ஆயிரமாயிரம் மக்களைப் பலிகொண்ட
அந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் பல்லாயிரம் உயிர்கள்
இறந்த செய்திகள் வெளிவந்தபோது, அதே இடிபாடுகளிலிருந்து
உயிர்கள் மீட்கப்பட்ட செய்திகளையும் அறிந்தோம்.
நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த வேளையில் தாய் ஒருவர், பெண்
குழந்தையைப் பெற்றெடுத்த பின் உயிர் துறந்தார். மீட்புப்
பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், இறந்துபோன தாயின் தொப்புள்
கொடியுடன் இணைக்கப்பட்டு, உயிரோடு இருந்த குழந்தையைக்
காப்பாற்றிய செய்தியைக் கேள்விப்பட்டோம். அதையடுத்து, பல
நூறு உயிர்கள் அந்த இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதையும்,
ஒருவர், நிலநடுக்கம் ஏற்பட்டு, 13 நாள்களுக்குப் பின்
மீட்கப்பட்டதையும் கேள்விப்பட்டோம். கல்லறைகளிலிருந்து
நம்மை உயிருடன் கொணரும் சக்தி இறைவனுக்கு உண்டு என்பதற்கு,
துருக்கி, மற்றும் சிரியாவில் இடிபாடுகளிலிருந்து
மீட்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளெல்லாம் சாட்சிகளாக
வாழ்வர் என்று நம்பலாம்.
2011ம் ஆண்டு, அக்டோபர் 23, ஞாயிறன்று, துருக்கி நாட்டின்
Van என்ற நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் (7.2 ரிக்டர்
அளவு) பல நூறு கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. அன்றைய
நிலவரப்படி, 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்;
2000த்திற்கும் அதிகமானோர் காயமுற்றனர். ஒரு வாரத்தில்,
இறந்தோரின் எண்ணிக்கை 604 என்றும், காயமடைந்தோரின்
எண்ணிக்கை 4,100 என்றும் கூறப்பட்டது. மரணங்களின்
எண்ணிக்கை குறித்த செய்திகள் வெளிவந்த அதே நாள்களில்,
வாழ்வைப்பற்றிய ஒரு செய்தியும் வெளியானது. பிறந்து, 2
வாரங்களே ஆகியிருந்த, Azra Karaduman என்ற குழந்தை,
நிலநடுக்கம் ஏற்பட்டு 48 மணி நேரங்கள் சென்று,
இடிபாடுகளின் நடுவிலிருந்து காப்பாற்றப்பட்டது.
அதுமட்டுமல்ல, அக்குழந்தை காப்பற்றப்பட்ட அதே இடத்தில்,
குழந்தையின் தாயும் (Semiha), பாட்டியும் (Gulsaadet)
மீட்கப்பட்டனர்.
இக்குழந்தையை, "நம்பிக்கையின் முகம்" என்று ஊடகங்கள்
அழைத்தன. Azra என்ற அக்குழந்தையின் பெயருக்கு,
"பாலைநிலத்து மலர்" என்பது பொருள் என்றும், 2 வாரக்
குழந்தை, இரு தலைமுறைகளைக் காப்பாற்றியது என்றும்,
இந்நிகழ்வை, ஊடகங்கள் விவரித்தன.
அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் (CBS) இச்செய்தியை
ஒளிபரப்பியபோது, Mark Philips என்ற செய்தித் தொடர்பாளர்,
அழகான ஒரு கருத்தை பதிவுசெய்தார்: "பெரிய, பெரிய
புள்ளிவிவரங்களைக் காட்டிலும், சின்னச் சின்ன மனிதாபிமானக்
கதைகள் நம் கற்பனையைக் கவர்கின்றன" என்று அவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில், துருக்கியில், ஜப்பானில் (2011),
ஹெயிட்டியில் (2010), பல ஆசிய நாடுகளில் (2004), ஏற்பட்ட
நிலநடுக்கம், சுனாமி ஆகிய இயற்கைப் பேரிடர்களில் இறந்தோர்,
காயமுற்றோர் ஆகியோரின் புள்ளிவிவரங்கள் நம் மனதில்
பதிந்ததைவிட, அந்த அழிவுகளின் நடுவிலிருந்து, உயிர்கள்
மீட்கப்பட்டச் செய்திகள், நம்மை அதிகம் கவர்ந்தன
என்பதையும், அவை, நம் உள்ளங்களில், நம்பிக்கை விதைகளை
நட்டுவைத்தன என்பதையும் மறுக்கமுடியாது.
2010ம் ஆண்டு, சனவரி மாதம், ஹெயிட்டியில் நிலநடுக்கத்தால்
எற்பட்ட இடிபாடுகளிலிருந்து, பதினாறு நாட்களுக்குப் பின்,
Darline Etienne என்ற இளம்பெண் உயிரோடு மீட்கப்பட்டது, ஓர்
உயிர்ப்பு என்று கூறப்பட்டது. அதே 2010ம் ஆண்டு, சிலே
நாட்டு சுரங்க விபத்தில் அகப்பட்ட 33 தொழிலாளிகள், 69
நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டது, உயிர்ப்பெனக்
கொண்டாடப்பட்டது.
2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி, சிலே நாட்டின் அட்டக்காமா
(Atacama) பாலைநிலத்தில் அமைந்துள்ள, தாமிர, தங்கச்
சுரங்கம் ஒன்றில் சிக்கிக்கொண்ட 33 தொழிலாளர்கள், அக்டோபர்
12ம் தேதி, அதாவது, 69 நாட்களுக்குப் பின்,
மீட்கப்பட்டனர். இந்தச் சாதனை முடிந்ததும், சிலே நாட்டின்
ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Alejandro Karmelic அவர்கள்,
"சிலே நாடு, இன்று உயிர்ப்பின் நம்பிக்கைக்குச் சான்று
பகர்ந்துள்ளது" என்று கூறினார்.
ஆயர் Karmelic அவர்கள், உயிர்ப்பைக் குறித்து, அக்டோபர்
மாதத்தில் குறிப்பிட்டது பொருத்தமாகத் தெரிகிறது.
உயிர்ப்புக்கும், வசந்தகாலத்திற்கும் தொடர்பு உள்ளது
என்பதை அறிவோம். பூமியின் வட பாதி கோளத்தில் (Northern
hemisphere), மார்ச், ஏப்ரல் மாதங்களில் வரும்
வசந்தகாலத்தையொட்டி, திருஅவையில் தவக்காலமும், உயிர்ப்புத்
திருநாளும் கொண்டாடப்படுகின்றன. பூமியின் தென் பாதி
கோளத்தில் (Southern hemisphere), அமைந்துள்ள சிலே
நாட்டில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வசந்தகாலம்
வரும். எனவே, அந்த சுரங்கத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்ட
அக்டோபர் மாதத்தில், அவர்கள் உயிர்ப்புத் திருநாளைக்
கொண்டாடியிருந்தாலும், பொருத்தமாகவே இருந்திருக்கும்.
கல்வாரிக் கொடுமைகளுக்குப் பின், சாத்தப்பட்ட அறையை, ஒரு
கல்லறையாக மாற்றி, அதில், தங்களையே பூட்டி வைத்துக்கொண்ட
சீடர்கள், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின், அச்சமின்றி,
இயேசுவை உலகறியச் செய்தனர். அதேபோல், பாறைகளால் முற்றிலும்
மூடப்பட்டு, இனி உயிரோடு மீளமாட்டோம் என்ற அச்சத்தில்,
சந்தேகத்தில் புதையுண்டிருந்த சிலே நாட்டு சுரங்கத்
தொழிலாளிகள், வெளியே வந்தபின், பல நாடுகளுக்குச் சென்று
இயேசுவை உலகறியச் செய்தனர்.
இங்கு நாம் குறிப்பிட்ட 'உயிர்ப்பு நிகழ்வுகள்' ஊடகங்களில்
செய்திகளாக வெளிவந்தவை. ஆனால், ஊடகங்களில் செய்திகளாக
வராமல், நம் ஒவ்வொருநாள் வாழ்விலும், உயிர்ப்பு அனுபவம்,
சின்னச்சின்ன நிகழ்வுகள் வழியே நடந்தவண்ணம் உள்ளன. இவை
எதுவும் நம் கவனத்தை ஈர்ப்பது கிடையாது. இயேசுவின்
உயிர்ப்பு முதல்முறை நிகழ்ந்தபோதும், அது யாருடைய
கவனத்தையும் ஈர்க்கவில்லை. இத்தகைய உயிர்ப்பு நிகழ்வுகளைக்
காண்பதற்கு அன்பின் விழிகள் அவசியம். அன்பின் விழிகள்
கொண்டிருப்பதன் அவசியம் குறித்து, இறையியலிலும்,
ஆன்மீகத்திலும் புலமைபெற்ற அருள்பணி Ronald Rolheiser
அவர்கள், "உயிர்ப்பைக் காண" ('Seeing the Resurrection')
என்ற தலைப்பில் பகிர்ந்துகொண்டிருக்கும் கருத்துக்கள்,
நம்மை சிந்திக்க அழைக்கின்றன.
இறைவன் நம் சுதந்திரத்தைப் பறித்து, தன் வலிமையைத்
திணித்து, நம்மை, வலுக்கட்டாயமாக ஒன்றைக் காணும்படி
செய்வதில்லை. நம் சுதந்திரத்தை எப்போதும் மதிப்பவர் அவர்.
இறைவனின் இந்தப் பண்பு, இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வில்
மிகத் தெளிவாகத் தெரிகிறது. உயிர்ப்பு நிகழ்வு, கண்ணையும்,
கருத்தையும் பறிக்கும் பிரம்மாண்டமான நிகழ்வாக, தலைப்புச்
செய்தியாக நிகழவில்லை. இயேசுவின் பிறப்பைப் போலவே, அவரது
உயிர்ப்பும் மிக அமைதியாக நிகழ்ந்தது.
இயேசுவின் உயிர்ப்பை ஒரு சிலர் கண்டனர். மற்றவர்களால்,
அவரைக் காண இயலவில்லை. உயிர்ப்பு என்ற பேருண்மை, ஒரு
சிலரில், பெரும் மாற்றங்களை உருவாக்கியது. வேறு சிலரோ,
அந்த பேருண்மையைப் புரிந்துகொள்ள மறுத்ததோடு, அதை
அழிக்கவும் முயற்சிகள் செய்தனர். இந்த வேறுபாடு ஏன்? 12ம்
நூற்றாண்டில் வாழ்ந்த புனித விக்டரின் ஹுகோ என்பவர்
கூறுவது இதுதான்: "அன்பின் கண்களால் காணும்போது, சரியான
முறையில் காணமுடியும். பேருண்மைகளை சரியான முறையில்
புரிந்துகொள்ள முடியும்."
அன்பின் கண்கள் கொண்டு பார்த்த மகதலாவின் மரியா, உயிர்ப்பு
நாளன்று விடியற்காலையில் தன் அன்புத் தலைவனின் உடலுக்கு
உரிய மாண்பை வழங்க நறுமணத் தைலத்துடன் கல்லறைக்குச்
சென்றார் என்பதை உயிர்ப்பு ஞாயிறு காலைத் திருப்பலியின்
நற்செய்தியாக வாசிக்கிறோம். மனமெங்கும் நிறைந்திருந்த
அன்புடன் கல்லறைக்குச் சென்ற மரியா, உயிர்ப்பு என்ற
பேருண்மையின் முதல் திருத்தூதராக மாறினார். ஏனைய சீடர்கள்
தங்கள் கவலைகளாலும், அச்சத்தாலும் மூடிய கதவுகளுக்குப்
பின் பதுங்கியிருந்த வேளையில், மகதலாவின் மரியா துணிவுடன்
கல்லறைக்குச் சென்றார். உயிர்த்த இயேசுவை சந்தித்த முதல்
சீடராக மாறினார்.
நம்மைச் சுற்றி ஒவ்வொருநாளும் நிகழ்ந்துவரும் அழிவுச்
செய்திகளின் விளைவாக, உயிர்ப்பின் நம்பிக்கை நம்மைவிட்டு
விலகிச் செல்கிறது. இத்தனை அழிவுகளின் நடுவிலும், அன்பின்
கண்கள் கொண்டு பார்க்கப் பழகினால், நம்மைச் சுற்றி
சின்னச்சின்னதாய் உயிர்ப்பு நிகழ்வதைக் காணமுடியும்.
இத்தகைய வரத்தை, உயிர்த்த கிறிஸ்து நமக்கு வழங்கவேண்டும்
என்று மன்றாடுவோம். |
|
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை
|
இயேசுவாய் வாழ உயிர்ப்போம்!
உயிர்ப்பு கிறிஸ்தவ வாழ்வின் அச்சாரம். உயிர்ப்பு என்ற
ஒன்று இல்லையேல் நம் நம்பிக்கை வீண். திருஅவை என்ற ஒன்று
உயிர்ப்பு என்னும் அடித்தளத்தில் தான் இரண்டாயிரம்
ஆண்டுகள் தாண்டியும் நிலையாய் இருக்கிறது என்று சொன்னால்
அது மிகையாகாது. இயேசுவின் இந்த உயிர்ப்பு நம்மை அழைப்பது
எதற்காக? நாமும் இவ்வுலகில் இயேசுவாக வாழ உயிர்க்க
வேண்டும் என்பதற்காக.
உயிர்க்க வேண்டுமா? ஏன்? நாம் ஏற்கனவே உயிரோடுதானே
இருக்கிறோம்! என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.ஆம்.
நாம் உயிரோடு தான் இருக்கிறோம். ஆனால் இயேசுவைப் போல
உயிர்த்துடிப்போடு இருக்கிறோமா என்றால் இல்லை. இயேசு
உயிர்த்துடிப்போடு இருந்ததால்தான் தந்தையோடு
ஒன்றித்திருந்தார். மனிதர்களோடு அன்பாய் இருந்தார்.
சுறுசுறுப்பாக தன் பணிகளைச் செய்து தந்தையை
மாட்சிப்படுத்தினார். துயரங்களைக் கண்டு அஞ்சாமல்
வாழ்ந்தார். அவற்றை எதிர்கொண்டார். அவரிடமிருந்து வாழ்வின்
ஊற்று பலருக்கு பாய்ந்தது.அப்படிப்பட்ட இயேசுவை கல்லறை
எப்படி உள்ளே வைத்துக்கொள்ள முடியும்!
இயேசு தன் உயிர்ப்பின் வழியாக நம்மை தந்தையின் பிள்ளைகளாக
மீண்டும் உயிர்ப்பித்தார். படைப்பின் சிகரமாக நம்மை
இயற்கையோடு இணைத்தார். இந்நற்செய்தியை உலகெங்கும் பரப்ப
நம்மைப் பணித்திருக்கிறார். இதுதான் உயிர்ப்பின் உண்மையான
அர்த்தம்.
நம்முடைய சொந்த வாழ்வை ஆராய்ந்து பார்ப்போம். தந்தை
கடவுளோடு நமக்குள்ள இயேசு மீட்டெடுத்த உறவை நாம்
கடைபிடிக்கிறோமா? ஆழப்படுத்தியிருக்கிறோமா?
சடங்குக்காகவும் வாடிக்கைக்காகவும் வேடிக்கைக்காகவும்
கோவிலுக்கு வந்து செல்கிறோமே. அப்படி என்றால் நாம்
உயிர்த்துடிப்பு இல்லாதவர்களாகிவிடுகிறோம். இந்த ஆன்மீக
இறப்பு நிலையிலிருந்து உயிர்த்து தந்தையோடு இறைவேண்டலிலும்
இறைவார்த்தையை வாழ்வதிலும் நாம் இணைந்தால் அதுதான்
உண்மையான உயிர்ப்பு.
படைப்பின் சிகரமாக படைக்கப்பட்ட நாம் சக மனிதர்களையும்
நம்முடைய பராமரிப்பிற்காக படைக்கப்பட்ட அனைத்தையும்
மதித்து அன்பு செய்து உறவு விரிசல்களை சரிசெய்யாவிடில்,
நாம் கல்லறைக்குள் இருப்பதற்கு சமம். அந்த கல்லறையைப்
பிளந்து படைப்புக்களோடு உறவுள்ளவர்களாக வாழ முயன்றால்
நாமும் உயிருள்ளவர்களே.
வாழ்வுக்கு சாவில்லை. சாவுக்கு வாழ்வில்லை. நம்மை அன்பு
செய்யும் இறைவன் எந்நாளும் நம்மோடு இருக்கிறார். நமக்கு
புதுவாழ்வு அளிக்கிறார் என்ற நற்செய்தியை நம்மோடு
வைத்துக்கொள்ளாமல் நம் சொல்லால் செயலால் அன்பால் பிறருக்கு
பரப்பும் போது நாமும் இயேசுவைப் போல உயிருள்ளவர்களாவோம்.
நமக்கு முன் வாழ்ந்த பலர் தங்கள் இறந்த நிலையை உணர்ந்து
இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு உயிர்த்தெழுந்தார்கள்.
இயேசுவின் சீடர்கள் இயேசுவின் கொள்கைகள் மண்ணில் வாழ இறந்த
நிலையிலிருந்து உயிர்த்தார்கள். பல புனிதர்கள் தங்கள் உலக
பாவ வாழ்வுக்கு இறந்து இயேசுவைப் போல உயிர்த்து இயேசுவாகவே
வாழ்ந்தார்கள். நம் கண் முன்னே வாழ்ந்த அன்னை தெரசா,
கார்லோஸ், தேவ சகாயம் பிள்ளை, நற்செய்தி விழுமியங்களுடன்
மரித்த அருட்பணி ஸ்டேன் சுவாமி போன்றோர் இயேசுவைப் போல
உயிர்த்தவர்களாய் உயிர்த்துடிப்புள்ளவர்களாய்
வாழ்ந்தார்கள். இறந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாமும் நம்மால் இயன்ற அளவு நாம் வாழும் பகுதிகளில்
உயிர்த்துடிப்புள்ளவர்களாக வாழுவோம். ஏன் வாழ்கிறேன்? என்ற
இறப்பு நிலையை விட்டு வெளிவருவோம். தெய்வ பயமற்ற
இருளிலிருந்து வெளிவருவோம். உறலில்லா கல்லறைகளைத்
தகர்ப்போம். இயேசுவைப் போல உலகில் வாழ புதுப்படைப்பாய்
உயிர்த்தெழுவோம்.
இறைவேண்டல்
உயிரின் ஊற்றே! இறைவா! எங்களையும் இயேசுவைப் போல
உயிர்த்துடிப்புள்ளவர்களாய் மாற்றும். அன்றாட வாழ்வில் பல
நிலைகளில் இறந்த நிலையில் இருக்கும் நாங்கள் கல்லறைகளைத்
தகர்த்தெறிந்து "இயேசு"க்களாக புவியிலே வாழ எம்மை
உயிர்ப்பித்தருளும். ஆமென். |
|