Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

சிறார்களின் திருவிருந்துக்கான மறைச் சுவடி

1.சிலுவை அடையாளம்
அர்ச்சிஸ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடத்திலே நின்று எங்களை இரட்சித்தருளும்;  எங்கள் சருவேசுரா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே - ஆமென்.


2.தூய ஆவியின் செபம்
ஓ தூய ஆவியே! தேவரீர் எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசிகளின் இருதயங்களை நிரப்பும். அவைகளில் உமது சிநேக அக்கினியை மூட்டியருளும். உமது ஞானக்கதிர்களை வரவிடும். ஆதனால் உமது முகத்தைப் புதுப்பித்தருளும்.

3.இயேசு கற்பித்த செபம் (மத் 6:9-1)
 பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே! உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவது போல பரலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும் - ஆமென்

4.மங்கள வார்த்தைச் செபம் (லூக் 1:28)
அருள் நிறைந்த மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. அர்ச்சியசிட மரியாயே! சருவேசுரனுடைய மாதாவே! பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் - ஆமென்.

5.மூவொரு இறைவனுக்குப் புகழ் (லூக் 2:8-20)
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும், எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக - ஆமென்.

6.விசுவாசப்பிரமாணம்
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏகசுதனாகிய நம்முடைய நாதர் இயேசுக்கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து, புனித கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும், மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். - ஆமென்.

7.காலை அர்ப்பணம்
இயேசுவின் திருஇருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும், தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேன் இன்று செய்யும் செபங்களையும், மகிழ்வுகளையும், புனித கன்னிமரியாயின் மாசில்லாத திருஇருதயத்தின் வழியாக, எல்லா ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காகவும், பாவங்களுக்குப் பரிகாரமாகவும், எல்லாக் கிறீஸ்தவமக்களுடனும் ஒன்றிணைந்து, உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். இவைகள் அனைத்தும் அவருடைய கருத்துக்களுக்காகவும் அனைத்து செபதூதர்களுக்காகவும் சிறப்பாக இம்மாதம் யாருக்காக திருத்தந்தை செபிக்கக் கேட்டுக் கொண்டாரோ, அவர்களுக்காகவும் மன்றாடுகிறோம் ஆமென்.

8. காலைச்செபம்
என்னை அன்பு செய்யும் வானகத்தந்தையே! உமது அன்பின் பொருட்டு எனக்கு இந்த நாளைத் தந்துள்ளீர். இன்று நான் சந்திக்கப்போகும் எல்லா மனிதர்களையும் உம்மிடம் ஒப்படைக்கின்றேன். இன்று எனக்கு நிகழ இருப்பவை அனைத்தும் உமது எண்ணப்படி நடக்கட்டும். இன்று நீர் எனக்கு தரப்போகும் அனைத்திற்கும் இப்பொழுதே நன்றி கூறுகின்றேன். அன்பான இயேசுவே உம்மைப்போன்று நானும் வானகத்தந்தையின் விருப்பப்படி வாழ எனக்கு உதவி செய்யும். அன்பான ஆவியானவரே இன்று நீர் என்னுள்ளத்தில் நல்லெண்ணங்களைத் தூண்டிவிடும்போது அவற்றை நான் விழிப்புடன் அவதானித்து அன்புச் செயல்கள் செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்.

9. நன்றிச் செபம் - 1
என் சர்வேசுரா சுவாமி! உம்மை நான் ஆராதிக்கின்றேன். என் முழு இருதயத்தோடு உம்மை நான் நேசிக்கின்றேன். என்னை உண்டாக்கிக் கிறீஸ்தவனாக்கி இந்த இரவில் என்னைக் காப்பாற்றியதற்காக உமக்கு நான் நன்றியறிந்த தோத்திரம் செலுத்துகின்றேன். இந்த நாளில் என் செயல்களை எல்லாம் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றேன். உமது அதிமிக மகிமைக்காக அவைகளையெல்லாம் உமது திருச்சித்தத்தின்படி செய்ய அருள் புரியும். பாவத்திலிருந்தும் சகல தீமைகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றியருளும். உமது அருள் என்னோடும் நான் நேசிக்கும் எல்லோரோடும் எப்போதும் இருக்கக்கடவது. ஆமென்.


10. நன்றிச் செபம் - 2
என்னை நேசிக்கின்ற பரலோக தந்தையே! இந்த நாளின் முடிவில் உமக்கு நன்றி கூறுகின்றேன். நீர் என்னோடு இருந்ததை நான் உணர்ந்தேன். நான் உம்மை நினையாத போது நீர் என்னை நினைத்தீர் இப்போது உமக்கு மீண்டும் நன்றி கூறுகின்றேன். என்னுடைய அம்மாவிற்காக நன்றி கூறுகின்றேன். என்னுடைய அப்பாவிற்காக நன்றி கூறுகின்றேன். என்னுடைய சகோதரர்களுக்காக நன்றி கூறுகின்றேன். என்னுடைய நண்பர்களுக்காக நன்றி கூறுகின்றேன். என்னை நேசிக்கின்ற அன்பான இயேசுவே! நான் நித்திரை செய்யும்போது என்னோடு இரும். எனக்கு நல்ல ஓய்வைத் தந்து என்னை இந்த இரவில் பாதுகாரும். என்னை நேசிக்கும் பரிசுத்த ஆவியானவரே! இந்த நாள் முழுவதும் நீர் எனக்குத் தந்த நல்ல சிந்தனைக்கு நன்றி கூறுகின்றேன். இந்த இரவு முழுவதும் நீர் என்னோடு இருந்து நாளைக் காலையில் என்னை உம் நினைவால் எழுப்பிவிடும் ஆமென்.

11.விசுவாசமுயற்சி
என் இறைவா! உமது திருச்சபை விசுவசித்து படிப்பிக்கிற உண்மைகள் எல்லாம் நீரே அறிவித்திருப்பதால் அவைகளை நானும் உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன். ஆமென்.

12.நம்பிக்கைமுயற்சி
என் இறைவா! நீர் தந்த வாக்குறுதிகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவின் இரத்தத்தால் என் பாவங்களை மன்னித்து எனக்கு உமது அருளையும் வானக வாழ்வையும் அளிப்பீர் என்று உறுதியாக நம்புகிறேன்;. ஆமென்.

 13.தேவ சிநேக மு யற்சி
என் இறைவா! நீர் அளவில்லாத அன்புக்கு உரியவர். ஆகவே அனைத்திற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு அன்பு செய்கின்றேன். என்னை நான் அன்பு செய்வது போல எல்லோரையும் அன்பு செய்கின்றேன். ஆமென்.

14.மன்னிப்பு மன்றாட்டு (லூக்.15:11-32)
 என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர் நீரே. என் பாவங்களால் உம்மை மனம் நோகச் செய்து விட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும், மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனந் திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்திற்கு ஏதுவான சுழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும், உறுதி கொண்டிருக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசுக்கிறீஸ்துவின், பாடுகளின் பயனாக, இறைவா என்மேல் இரக்கமாயிரும். ஆமென்.


 

15.பத்துக்கட்டளைகள் (வி.ப.20:1-7)  
(இப் பத்துக்கற்பனைகளும் சீனாய் மலையில் இறைவனால் மோயீசனிடம் வழங்கப்பட்டவை)

1 - ஒரே சருவேசுரனை முழு மனதுடனே ஆராதிப்பாயாக.
2 - கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதிருப்பாயாக.
3 - கட வு ளின் திருநாட்களை பரிசுத்தமாய்க்  கொண்டாட நினைவு கூர்வாயாக.
4 - தாய் தந்தையரை மதித்து நடப்பாயாக.
5 - கொலை செய்யாதிருப்பாயாக.
6 - மோக பாவம் செய்யாதிருப்பாயாக.
7 - களவு  செய்யாதிருப்பாயாக.
8 - பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக.
9 - பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.
10 - பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.


இந்தப் பத்துக் கட்டளைகளையும் கீழ்க்காணும் இரண்டு கட்டளைகளில் அடக்கலாம்:
1 - எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்வாயாக
2 - உன்னைப் போல உன் அயலானையும் அன்பு செய்வாயாக

 

16.திருச்சபையின் கட்டளைகள் ஆறு

1- ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுத் திருப்பலி ஒப்புக் கொடுப்பது.
2- வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல ஒப்புரவு  அருட்சாதனம் பெறுவது.
3- தவக்காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து பரிசுத்த நற்கருணை உட்கொள்வது.
4- மாமிசத் தவிர்ப்பு நாட்களில் மாமிசத் தவிர்ப்பும் நோன்பு நாட்களில் நோன்பும்    அனுசரிப்பது.
5- விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவு  முறையாரோடும் திருமணம் செய்யாதிருப்பது.
6- நமது ஞானமேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்வது.
 

17.துயிலெழும்போது சொல்லும் செபம்
இயேசு மரி சுசையே! உங்கள் அடைக்கலத்திலே நான் கண்விழித்துப் பொல்லாப்பைக் காணாமலும் நினையாமலும் இருக்கக் கடவேன். ஆமென். இயேசு மரி சுசையே! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்புக் கொடுக்கின்றேன்.

18.எழுந்திருக்கிறபோது சொல்லும் செபம்
இயேசுநாதருடைய திருப்பெயராலே எழுந்திருக்கின்றேன். படுக்கையிலே நின்று எழுவதுபோல சகல பாவத்தையும் விட்டெழவும் மறுபடியும் நான் பாவத்திலே விழாதபடியும் என்னைக் காத்தருளும் - ஆமென்.

19. ஆடை அணியும்போது
ஆண்டவரே! இந்த உடையைக் கொடுத்தது போல ஆத்துமத்தை அலங்கரிக்க உமது கருணைக் கொடையைக் கொடுத்தருள்வீராக.- ஆமென்.

20. உண ய அருந்துமுன் செபம்
 இறைவா! உமதருளினாலே நீர் எங்களுக்குக் கொடுத்திருக்கும் இந்த உணவை எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறீஸ்துவின் பெயரால் ஆசீர்வதித்தருளும். ஆமென்.

21.உண ய அருந்தி யபின் செபம்
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உமது பராமரிப்பினால் நீர் எங்களுக்கு வழங்கிய இந்த உணவிற்காகவும் நீர் எனக்குச் செய்து வருகிற எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு உளமார நன்றி கூறுகிறேன்.

 22.காவல் தூதர் செபம்
எனக்குக் காவலாயிருக்கிற இறைவனின் தூதரே! இறையருளால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட என்னை இன்று முழுவதும் உமது ஞான ஒளியில் நிறைந்து காத்து வழிநடத்தியருளும். ஆமென்.

23.பயணத்திற்கு அல்லது வீட்டிலிருந்து புறப்படும் போது
ஆண்டவரே! நான் துவங்கும் இந்தப்பயணத்தில் எந்தவித ஆபத்தும் நேராமல் காத்தருளும். அத்துடன் உமது பாதுகாப்பைத் தந்து நான் செய்யும் பணிகளை எளிதாக்கி உமது வழியில் நான் தவறாது செல்லவும் உமக்குச் சாட்சியமளித்து வாழவும் எனக்குத் துணை செய்தருளும். ஆமென்.

24.பணிகள் தொடங்கும்போது
ஆண்டவரே! உமது பெயரின் புகழ்ச்சிக்காக நாங்கள் துவங்கியுள்ள இப்பணியினை உமக்கு அர்ப்பணிக்கின்றோம் இப்பணி நிறைவு பெற்று உமது அருளினால் நிறைய நன்மைகளின் கனிகள் எங்களுக்கு கிடைப்பனவாக. ஆமென்.

25.பணிகள் செய்யும்போது
ஆண்டவரே! நாங்கள் செய்துகொண்டிருக்கும் இப்பணிகளைத் தொடர்ந்து ஆசீர் வதித்தருளும். உமது அருளினால்தான் எல்லாப் பணிகளும் தொடர்கின்றன நிறைவு  பெறுகின்றன என்பதனை உணர்ந்து செயல்பட எங்களுக்குத் துணை செய்தருளும். ஆமென்.

26. இயேசு மரி சுசை
முன்: இயேசு மரி சுசை எல்: என் இருதயத்தையும் ஆன்மாவையும் உங்களிடம் ஒப்படைக்கின்றேன்.
முன்: இயேசு மரி சுசை எல்: என் இறுதிவேளையில் எனக்கு உதவி செய்யுங்கள். முன்: இயேசு மரி சுசை எல்: உங்கள் அன்பில் அமைதியாக ஒரு நாள் என் உயிர் பிரிவதாக!

27.மூவேளைச் செபம் முன்:
 முன்:ஆண்டவருடைய தூதர் மரியாவுக்குத் தூதுரைத்தார். எல்: தூய ஆவியால் அவர் கருத்தாங்கினார். (அருள்.. .
முன்: இதோ ஆண்டவருடைய அடிமை எல்: உமது சொற்படியே எனக்கு ஆகட்டும். (அருள்...
முன்: வாக்கு மனிதர் ஆனார். எல்: நம்மிடையே குடி கொண்டார். (அருள்...
முன்: கிறீஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி.
எல்: இறைவனின் தூய அன்னையே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். செபிப்போமாக: இறைவா! உம் திருமகன் மனிதனானதை உம்முடைய வானதூதர் வழியாக அறிந்திருக்கின்றோம் அவருடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் நாங்கள் உயிர்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக! எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறீஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் ஆமென். தந்தைக்கும் மகனுக்கும்....(3முறை)

28.பாஸ்கா காலத்தில் மூவேளைச்செபம்.
விண்ணக அரசியே மனம் களிகூரும் - அல்லேலூயா!
ஏனெனில் இறைவனை கருத்தாங்கப் பேறுபெற்றீர் - அல்லேலூயா
கன்னிமரியே அகமகிழ்ந்து பூரிப்படைவீர் - அல்லேலூயா
ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார். . அல்லேலூயா

செபிப்போமாக
இறைவா! உமது திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசுக்கிறிஸ்துவின் உயிர்ப்பினால் உலகம் களிகூரத் திருவுளமானீரே! அவருடை ய திருத்தாயாகிய புனித கன்னிமரியாளின் துணையால் நாங்கள் என்றும் நிலையான பேரின்ப வாழ்வைப் பெற அருள் புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

29.சமாதானத்திற்காக செபம்.
ஆண்டவரே!
என்னை உமது சமாதானத்தின் கருவியாக்கும்.
வெறுப்புள்ள இடத்தில் அன்பையும்,
மனவருத்தம் உள்ள இடத்தில் மன்னிப்பையும்.
ஐயமுள்ள இடத்தில் விசுவாசத்தையும்.
அவநம்பிக்கை உள்ள இடத்தில் நம்பிக்கையையும்
இருள் உள்ள இடத்தில் ஒளியையும்.
துன்பம் உள்ள இடத்தில் இன்பத்தையும் நான் விதைத்திட அருள் தாரும்.
நான் ஆறுதல் தேடுவதை விட ஆறுதல் அளிக்கவும்
பிறரால் புரிந்து கொள்ளப் படுவதைவிட பிறரைப் புரிந்து கொள்ளவும்.
அன்பு செய்யப்படுவதை விட அன்பு செய்யவும் எனக்கு அருள் தாரும்.
ஏனெனில் கொடுப்பதன் மூலம்தான் பெற்றுக்கொள்ள முடியும்.
மன்னிப்பதன் மூலம்தான் மன்னிப்படைய முடியும்.
மடிவதன் மூலம்தான் முடிவில்லாத வாழ்வுக்குப் பிறக்க முடியும். ஆமென்.


30. பரிபூரண பலனுள்ள செபம்
மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே! அடியேன் தேவரீருடைய சமூகத்தில் முழந்தாளிலிருந்து சாஷ்டாங்கமாக விழுந்து என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளையெல்லாம் எண்ணினார்கள் என்று தேவரீரைப்பற்றி முன்னர் தாவீதென்ற தீர்க்கதரிசி உமது திருவாயின் வாக்கியமாக வசனித்ததை என் கண் முன்பாகக் கண்டு தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையும் மிகுந்த மனவுருக்கத்தோடும் துக்கத்தோடும் என்னுள்ளத்தில் தியானிக்கின்ற இந்நேரத்தில். திடனான விசுவாசம். நம்பிக்கை. இறையன்பு என்ற புண்ணியங்களையும் என் அக்கிரமங்களின் மேல் மெய்யான மனஸ்தாபத்தையும் அவைகளைத் திருத்த மெத்த உறுதியான பிரதிக்கனையையும் என் இதயத்தில் பதியச் செய்தருள வேண்டுமென்று என் நல்ல இயேசுவே தேவரீரை என் ஆத்துமத்தின் மேலான ஆசை ஆவலோடு இரந்து மன்றாடி பிரார்த்திக்கின்றேன் சுவாமி. ஆமென்.


31. அதிதூதரான மிக்கேல் செபம்
அதிதூதரான புனித மிக்கேலே யுத்தநாளில் எங்களைத் தற்காரும். பசாசின் துஷ்டதனத்திலும் கண்ணிகளிலும் நின்று எங்களைக் காத்தருளும். இறைவன் அதைக் கடிந்து கொள்ளும்படி தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். வானுலக சேனைக்கு அதிபதியாயிருக்கின்ற நீரும் ஆன்மாக்களை நாசஞ் செய்யும்படி உலகெங்கும் சுற்றித் திரியும் சாத்தானையும் மற்றும் பசாசுகளையும் தேவ வல்லமையைக் கொண்டு நரக பாதாளத்திலே தள்ளிவிடும். ஆமென்.
 

"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும், பகைமையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிக்காலை காயப்படுத்துவாய்"(தொநூ 3:15).