ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 குருத்தோலை ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    Sermon Fr.Albert 
பெரிய வியாழன் புனித வெள்ளி பாஸ்காத் திருவிழிப்பு உயிர்ப்பு ஞாயிறு
Sr. Gnanaselvi (india)
குருத்தோலை ஏந்தி நிற்கும் அன்பு நெஞ்சங்களே!

இன்று நாம் நமக்காக சிலுவையை தூக்கிக் கொண்டு நடந்த இயேசுவின் பாடுகளின் பாதையில் பாதத்தை எடுத்து வைக்கிறோம். பரிசுத்த வாரத்தில் நுழையும் நாம் இயேசுவைப் போல பரிசுத்தமாக வாழ அழைக்கப்படுகிறோம்.

இறைமகன் இயேசு வாழ்வு கொடுக்கும் பணியை செய்ய வந்தவர். நீதி, அன்பு, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் பாதையில் பயணம் செய்தவர். ஆயுதமின்றி அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் பேரணி நடத்துகின்றார். அதே பாதையில் பயணிக்க நம்மையும் இன்று அழைக்கின்றார்.

மனிதவாழ்வு ஒரு போராட்டம் நிறைந்த வாழ்வுதான் நீதியைப் பற்றி பேசுபவர்கள் எல்லாம் அநீதிக்கு ஆளாக வேண்டிய நிலை. அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்புபவர்களின் குரல் ஒடுக்கப்படுகின்ற நிலை. மனிதவடிவில் வாழ்ந்த இறைமகன் இயேசுவுக்கும் இதே நிலை. இயேசு அதிகார வர்க்கத்திற்கு எதிராக குரல் எழுப்புகின்றார். ஏழையர் வாழ்க்கையை உயர்த்துகிறார். போலிகளை விரட்டுகின்றார். சமூகம் ஒதுக்கியவர்களை சகோதர உணர்வுடன் நேசிக்கிறார். உண்மையை உரத்து பேசுகிறார். பலர் உண்ணவும், உறங்கவும், வழியின்றி தன்னலவாதிகளின் பிடிக்குள் கிடப்பதைக் கண்டு மனம் குமுறுகிறார். தச்சன் மகனாய் அவதாரமெடுத்தவர், ஜெகத்தை மீட்க கோவேறு கழுதையை வாகனமாக்கி புறப்படுகிறார். இவரின் பயணத்தால் பலரின் வாழ்க்கை தடம் புரட்டிப் போடப்படுகிறது. சாலை மறியல் செய்யாதவர் பயணத்தால் பலரின் பயணம் நின்றுபோய் தடுமாறுகிறது. இருப்பவர், இல்லாதவர் என்ற நிலைமாறி, சமதள பூமியாய் சங்கீதம் பாடச் செய்ய புறப்பட்டவரை விட்டுவைக்க விரும்பாத உயர்மட்ட சமூகம், வாழ்த்துபாடி வரவேற்று, சதிசெய்து சாவுக்கு கையளித்து, கைதட்டி நிற்கின்றது. இயேசுவின் சாவு, பலருடைய வாழ்வுக்கு சான்றாக வெளிச்சம் சிந்துகிறது.

இதுதான் இன்றும் நாம் பயணிக்க வேண்டிய பாதை. இயேசுவின் வாழ்வு கொடுக்கும் மனநிலைப் பாதையில் தொடர் பயணம் செய்ய வேண்டியது நமது பொறுப்பாகும். இயேசுவிடம் விளங்கிய பணிவேட்கையை நமதாக்க, குருத்து ஓலை மூலம் விளக்கும் திருப்பலி தரும் கருத்துகளை இதயத்தில் பொருத்தி செபிப்போம்.

 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை அளிக்கின்ற ஆண்டவரே!
திருச்சபையை வழிநடத்திட நீர் தேர்வு செய்து தந்த திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் அவர்களையும் அவரோடு இணைந்து பணியாற்றும் திருச்சபை பணியாளர்களையும் ஆசிர்வதியும். நலிந்த நிலையில இருக்கும் திருச்சபை மக்களை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை, திருச்சபை பணியாளர்களுக்கு தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. காலைதோறும் எங்களைத் தட்டி எழுப்புகின்ற இறைவா!
நாடுகளின் தலைவர்கள் நாட்டுமக்களுக்கு நற்பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தட்டி எழுப்பிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்

3. கற்றோரின் நாவை எங்களுக்கு அளிக்கின்ற எம் இறைவா!
இந்த புனித வாரத்திலே எங்கள் குருக்களின் நாவால் நல்ல மறை போதகத்தை உச்சரிக்கவும் அவர்களின் மறையுரையை கேட்க எங்கள் செவிகளை திறக்கவும் அதனால் மனமாற்றம் பெற்று புனித வாரத்தின் பலன்களை அனுபவிக்கவும் அருள் தர இறைவாஉம்மை மன்றாடுகிறோம்.

4. எங்களுக்கு துணையாக எம் அருகில் இருக்கின்ற இறைவா!
எங்கள் அருகில் நீர் இருந்தால் நாங்கள் அவமானம் அடையமாட்டோம். இழிவான நிலையை காண மாட்டோம். இந்த புனித வாரத்திலே நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து எங்கள் துன்பதுயரங்களில் இருந்து விடுதலை பெற்று ஆண்டவருக்கு "தேவையானவர்களாக" நாங்கள் வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அடிப்போர்க்கு முதுகையும் தாடியை பிடுங்குவோருக்கு தாடையையும் ஒப்புவித்த இறைவா!
வருத்தத்தில், நோயில், வறுமையில், இயலாத நிலையில் வாழும் எம் உறவினர்களுக்கு எங்களையே அர்ப்பணித்து உறவு முறிந்த இடத்தில உறவை முளைக்கச் செய்து புனித வாரத்தில் புனித சூழலை உருவாக்க இறைமக்கள் அனைவருக்கும ஆற்றல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

 
மறையுரை சிந்தனைகள்

நாம் அவருக்குத் தேவை

தளபதி ஆலன்பீ எருசலேமைப் பிடித்தபோது தனது படைகளுடன் குதிரையிலேறி அணிவகுத்து எருசலேமில் நுழைய ஆயத்தமானார். அந்த அணிவகுப்பு எருசலேம் பட்டணத்தில் உள்ள யோப்பா வாசல் வழியாகவே செல்ல வேண்டியிருந்தது. இந்த வாசல் வரை குதிரையில் வந்த ஆலன்பீ வாசலை நெருங்கியதும் குதிரையிலிருந்து இறங்கி தன் வாசல்வரை குதிரையில் வந்த ஆலன்பீ வாசலை நெருங்கியது குதிரையிலிருந்து இறங்கி தன் தலையிலிருந்து தொப்பியை எடுத்துவிட்டு முழங்காலிட்டு தலைவணங்கினார் பின் எழுந்து அந்த பாதையில் நடந்தே சென்றார். இவர் பின் வந்த படைகளும் காரணம் தெரியாமல தாமும் அவ்வாறே செய்தனர். குறிப்பிட்ட தூரம் சென்ற பிறகு அங்கிருந்த ஒருநபர் காரணம் கேட்க ஆலன்பீ மறு மொழியாக "ராஜாதி ராஜாவான இயேசு கிறிஸ்து "இதே வாசல் வழியாக ஒரு சாதாரண கழுதையில் ஏறி பவனியாகப்போயிருக்கிறார். ஒரு சாதாரண தளபதியான நான் இதன் வழியாக குதிரையில் போகலாமா? என்று கேட்டார். ஆலன்பீPயின் இந்த வைராக்கியம் பிறரைப் பரவசப்படுத்தியது.

"இயேசு கிறிஸ்து கடவுளுடைய சாயலாயிருந்தும் கடவுளுக்குச் சமமாக எண்ணாமல் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் தன்மையெடுத்து மனித வடிவானார்.". அவர் மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணத்தை தழுவும் வரை கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். அவர் ராஜாதிராஜா. அவர் பவனி செல்ல வேண்டுமானால் அந்த நாட்களில் ஒட்டகம் அல்லது குதிரையில் வந்திருக்கலாம். அவரோ எல்லாராலும் அற்பமாய் எண்ணப்படுகிற கழுதையை தன் வாகனமாக பயன்படுத்தினார்.

நாம் தாழ்ந்தவர்களாக இருந்தாலும் நம்மையும் அவர் பயன்படுத்துவார் என நம்புவோம்.
கடவுள் தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து பராமரித்து உயர்த்துகிறார்"மனிதர்கள் நம்மை அற்பமாய் பார்க்கலாம். ஆனால் தெய்வம் நம்மை அவ்வாறு பார்ப்பதில்லை.
தெய்வத்தின் பார்வை எல்லார் மேலும் சமமாகத்தான் இருக்கிறது. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி பைத்தியமானவைகளை இறைவன் இந்த உலகத்தில் தெரிந்துக் கொண்டார். பலமுள்ளவற்றை வெட்கப்படுத்தும்படி இறைவன் இந்த உலகத்தில் பலவீனமானவற்றைத் தெரிந்துக் கொண்டார்.

பு.ம. செஸ்ட்ர்ட்டென் எழுதிய 'கழுதை' கவிதை ஒன்றின் கடைசி வரி இப்படி இருக்கிறது. என்னைப் பட்டினி போடுங்கள், அடியுங்கள், திட்டுங்கள்...  எனக்கு கவலையில்லை. முட்டாள்களே! எனக்கும் ஒரு நேரம் வந்தது. அது உன்னதமான நேரம். ஆப்போது என்னைச்சுற்றி கோஷம் எழுப்பினார்கள். என் கால்களுக்கு முன் தழைகளைப் பரப்பினார்கள்.

ஒரு காலத்தில் போர்வீரன் ஒருவன் குதிரை ஒன்று வைத்திருந்தான். அந்தக் குதிரை பலம் வாய்ந்ததாகவும் உயரமாகவும் கட்டான உடலமைப்போடும் இருந்தது. அதனால் அது மிகுந்த கர்வம்கொண்டிருந்தது. ஒருநாள் அந்தப் போர்வீரன் குதிரை மீது ஏறிப் போர்களத்திற்குச் சென்றான். வீரனைப்போருக்கு அழைத்துப்போகிறோம் என்ற நினைப்பில் குதிரை மேலும் கர்வம்கொண்டது.

வுழியில் பெரும் சுமையைத் தூக்கிவந்த கழுதையைப் பார்த்து. கழுதையிடம் குதிரை திமிராகத் தலையை ஆட்டி அசிங்கமான கழுதையே! ஒதுங்கிப்போ நாங்கள் போர்முனைக்குச் செல்கிறோம் என்று கூறியது. கழுதை ஒரு பக்கமாக ஒதுங்கியது. குதிரை கடந்துசென்றது. சில நாட்களுக்குப் பிறகு கழுதை அதே குதிரையைக் கடந்துசெல்ல நேர்தது அதனால் இந்த முறை அந்தக் குதிரையின் மீது காயமடைந்திருந்த போர்வீரன் தன்னுடைய எல்லாச் சுமைகளையும் ஏற்றிக்கொண்டு தானும் உட்கார்ந்து வந்தான்.

கழுதை குதிரையின் அருகில் சென்று சில நாட்களுக்கு முன்பு நீ என்னைப் பெருஞ் சுமைகளைத் தூக்கும் அசிங்கமானவன் என்று இழித்துரைத்தாய் இப்போது நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எந்தப் பதிலும் சொல்ல முடியாமல் குதிரை அவமானப்பட்டுத் தலைகுனிந்தது.

தாழ்ந்தோரைத்தேடி அவர்களுக்காகவே இப்படி கழுதையின் மீது நம் தலைவர் இயேசுவிரான் பவனி வருகின்றார்.
அவர் வரும் பாதையில் நிற்கும் நாம் நம்மையே தாழ்த்துவோம். அப்போது அவர் நம்மை உயர்த்துவார்.அவருக்கு நாம் தேவை.


 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

திருப்பாடுகளின் புனித வாரம் குருத்து ஞாயிறு

I. எசாயா 50:4-7
II. பிலிப்பியர் 2:6-11
III. லூக்கா 22:14 - 23:56

வெற்றியா ? தோல்வியா?

ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் புனித வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்களை அவரன்பின் சுவையை உணர்ந்து வாழ அன்புடன் அழைக்கின்றேன். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவரது எருசலேம் பவனி தொடங்கி, இரவல் கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டது முதல் அனைத்தையும் வாசிக்கக் கேட்டோம். இன்றைய நாளும் அவரது பாடுகளும் நமக்கு விடுக்கும் செய்தி என்ன? நம்முடைய பயணங்களும் பாதைகளும் ஒரு இலக்கை நிர்ணயித்தே நடந்தேறுகின்றன. பயணத்தைத் தொடங்கும் போதே எங்கு செல்கிறோம்? எப்படி செல்கிறோம் எதற்காக செல்கிறோம் என்பன போன்ற கேள்விகளுக்கு பதிலினை தயார் செய்தே நாம் பயணத்தைத் தொடங்குகிறோம். இன்றைய நாளில் பலவிதமான பயணங்களை மேற்கொள்பவர்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கொண்டிருக்கின்றோம். ஆகாய மார்க்கமாகவும், கடல், தரை மார்க்கமாகவும் பயணம் செய்து வாக்குகளை சேகரிக்கும் மனிதர்கள் பலரை நாம் பார்க்கும் காலம் இது. இவர்களது பயணம் ஒரு இலக்கைக் கொண்டது. அது " வெற்றி "..... யாரும் தோல்வி அடைய வேண்டும் என்னும் எண்ணத்துடன் பவனி வருவது கிடையாது. அமோக வெற்றி பெற வேண்டும் . எல்லோரும் பாராட்டும் வண்ணம் பதவியைப் பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் இங்கு பவனிகளும் பயணங்களும் நடைபெறுகின்றன.

இயேசுவின் பவனியோ மிகவும் வித்தியாசமானது அவர் ஆடம்பரமான வாகனத்தில், மின் விளக்குகளின் வெளிச்சத்தில் ஒலிபெருக்கிகளின் சப்தத்தில் வரவில்லை மாறாக வித்தியாசமாக வருகின்றார். ஏழைகளின் சொத்தாம் கழுதை வாகனமாகின்றது. மக்கள் வெள்ளம் அவருக்கு வெளிச்சமாகின்றது. ஓசான்னா கீதமே ஒலிப்பெருக்கியாகிறது. ஒலிவ இலைகளின் அசைவு ஓராயிரம் மகிழ்வு செய்தியை ஏற்படுத்துகின்றது. இப்படி மகிழ்ந்து பவனி சென்றவர் இறுதியில் கொடூரமாக இறந்து போகின்றார். வெற்றிப் பவனி வந்தவர் தோல்வியை தழுவி விட்டாரோ என்று எண்ணும் அளவுக்கு சாவை அடைகின்றார். இயேசு பெயரளவில் வெற்றி பெற விரும்பவில்லை. மாறாக நிலையான வெற்றியை விரும்புகின்றார். அதை வெளிப்படையாக பார்ப்பவர்க்கு இவர் என்ன இப்படி அநியாயமாக இறந்துவிட்டாரே என்று எண்ணத்தோன்றும். அதை முழுமையாக உணர்ந்து கொள்பவரால் மட்டுமே இது இவரின் வீழ்ச்சி அல்ல அது அவரின் எழுச்சி என்று தெரியும். வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் . கடமையைச் செய்தால் வெற்றி. கடமைக்குச் செய்தால் தோல்வி. இங்கு பலர் கடமைக்கு பல செயல்களை செய்து விட்டு வெற்றி கண்டு விடுகின்றனர். ஆனால் இத்தகைய வெற்றி ஒரு போதும் நிலைப்பதில்லை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இயேசுவோ கடமையைச் செய்தார் . நிலையான வெற்றியைப் பெற்றார்.

இன்றைய நாளில் இயேசு நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான் நீடித்த நிலையான வெற்றியை உனதாக்கிக் கொள். இயேசு தனது துயரமான நேரங்களில் கூட செபத்தினை தகுந்த ஆயுதமாகக் கொண்டிருந்தார். தான் செபித்ததோடு மட்டுமல்லாமல் பிறரையும் விழித்திருந்து செபிக்க அழைக்கின்றார். நாமும் செபிப்போம் செபத்தின் வல்லமையால் வெற்றி பெறுவோம். மீண்டும் இருள் அதிகாரம் செலுத்தும் தருணங்களிலும் துணிவோடு இருக்க அழைக்கின்றார். தோல்வி என்பது உறுதி அல்ல வெற்றி என்பது இறுதியும் அல்ல இதை உணர்ந்தாலே நம் வாழ்வு சிறப்புறும். இன்று நாம் கைகளிலேந்தி ஓசன்னா கீதம் பாடி ஆர்ப்பரித்து மகிழ்ந்த (ஒலிவ கிளைகள்) தென்னங்குறுத்தோலைகள், புதிதாக தோன்றும் போது வெற்றி பெற்றதாக நினைத்திருக்கலாம். ஆனால் இன்று மரத்திலிருந்து வெட்டப்பட்டு நம் கைகளில் மகிழ்வின் பொருளாக இடம் பிடித்திருக்கின்றது. வெளிப்புறமாக பார்க்கும் போது, மரத்திலிருந்து தளைத்து பலன் தருவதை விடுத்து இன்று நம் கைகளில் வந்து வாழ்வினை தொலைத்து விட்டதே என்று கவலைப்படலாம். ஆனால் உண்மையில் இன்று இந்த குருத்தோலைகள் நம் வீட்டின் மற்றொரு சிலுவைச்சின்னமாக மாறி நமக்கு வலிமையைத் தரும் ஒரு மீட்பாக மாறி இருக்கின்றது. என்பதே உண்மை.

இன்று நாம் கடந்து வந்த பாதைகளும் தெருக்களும் நம்மால் புனிதம் அடைந்திருக்கின்றன. நமது பயணத்தால் நாம் புனிதமடைந்திருக்கின்றோம். நமது பயணம் வெற்றியை நோக்கிய பயணம். இந்த புனித வாரம் முழுவதும் நம்மை புனிதப்படுத்துவதற்கான வெற்றியின் பயணம். எனவே அன்பு உள்ளங்களே நம் ஆண்டவர் இயேசுவின் இந்த புனித பயணத்தில் வெற்றியின் பயணத்தில் பங்கேற்கும் நாம் அனைவரும் வெற்றியின் மக்களாக வாழ அருள் வேண்டுவோம். விழிப்பதற்கே உறக்கம், வெல்வதற்கே தோல்வி, எழுவதற்கே வீழ்ச்சி, வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை உணர்ந்து வாழ்வோம், இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.

 


 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.
திருப்பாடுகளின் புனித வாரம்
குருத்து ஞாயிறு

வெற்றியின் பயணம் :

எட்டி விடும் தூரத்தில் வெற்றியும் இல்லை, அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை"

இது வெற்றியாளர்களின் கோட்பாட்டு வரிகள். வெற்றிபெற நினைப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அத்தனை போராட்டங்களையும் சந்திக்க தயாராக இருப்பார்கள். துன்பங்களையும் தோல்விகளையும் கண்டு ஓடி ஒளியாது, துணிந்து நின்று போராடுவார்கள். துரத்தி வருகின்ற அத்தனை போராட்டங்களையும் கடந்து, கடைசியில் வெற்றி என்ற மகுடத்தைப் பெறுவார்கள். அவர்களே வெற்றியாளர்கள், சாதனையாளர்கள். அப்படியென்றால் இந்த உலகத்தின் முதல் சாதனையாளர், வெற்றியாளர், புரட்சியாளர் இயேசுதான்.

இயேசு எருசலேமுக்குள் நுழைகின்ற அந்த பயணம் தான் புனித வாரத்தின் தொடக்கமாகவும் நுழைவு வாயிலாகவும் அமைகிறது. குருத்து ஞாயிற்றை கொண்டாடும் நாம் இயேசுவின் வெற்றிப் பயணத்தில் பங்கெடுக்க அழைக்கப்படுகிறோம். இதுதான் இயேசுவின் கடைசி எருசலேம் பயணம், அவர் பல துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து அங்கேயே இறக்கப்போகிறார். அப்படியிக்க இது எப்படி வெற்றிப் பயணமாகும் ? இயேசு மனிதனாக பிறப்பெடுத்து முப்பத்து மூன்று ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்தது இந்த நாளுக்காகத் தானே...! எருசலேமுக்குள் நுழையாமல் வெற்றியைப் பெற முடியாது என்பது இயேசுவுக்குத் தெரியும் அதனால்தான் துன்பத்தை சந்திக்க துணிகிறார்.

திருவிழாவிற்கு சமையலுக்காய் கொல்லப்பட போகும் ஆடு, எவ்வாறு மாலை மரியாதையுடன் மந்திரிக்கப்பட்டு, அழைத்துச் செல்லப்படுமோ, அப்படி மேள தாளத்துடன் ஓசன்னா பாடி அழைத்துச் செல்லப்படுகிறார் இயேசு. என்னே இயேசுவின் துணிச்சல்...!! அவரின் பாடுகள் நம்மீது கொண்ட பாசத்தின் வெளிப்பாடு. அவரின் பாடுகள் அவர்மீது திணிக்கப்பட்டது அல்ல, அவராக விரும்பி ஏற்றுக் கொண்டது. கட்டாயப்படுத்தப்பட்டது அல்ல, நம் மீது கொண்ட கருணையினால் விரும்பி ஏற்றது. " நல்ல ஆயன் நானே, நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பான்"என்று சொல்லி மனமுவந்து சாவை ஏற்கத் தயாரானார்.

எருசலேம் மக்களின் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு
உரோமையர்களை நம்பினோம், ஆளுநர்களை நம்பினோம், தலைமைக் குருக்களை நம்பினோம், ஒன்றும் நடக்க வில்லை என்று புலம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு, கழுதைக்குட்டியின் மேல் ஏறி வந்த இயேசுவின் மீது நம்பிக்கை வந்தது. ஏனெனில் அக்காலத்தில் மெசியாவின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருந்தது. யாராவது நம்மை காப்பாற்ற மாட்டாரா.."? நம் நாடும், நகரமும் நலம் பெறாதா "என்ற கவலையும், ஏக்கமும் நிறைய இருந்தது. இப்படிப்பட்ட நேரத்தில் இயேசு கழுதையின் மேல் ஏறி வந்தது, இவரே அரசர் என்ற நம்பிக்கையை தந்தது. இயேசு எருசலேமுக்குள் நுழைந்த நிகழ்வை நாம் நற்செய்தில் பார்க்கும் போது, மகிழ்ச்சி என்ற உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது. அந்த மகிழ்ச்சிதான் மக்களை குருத்தோலைகள் ஏந்தவும், துணிகளை விரிக்கவும் தூண்டியது. உரத்த குரல் எழுப்பி ஓசன்னா பாடுகின்றனர். ஆண்டவர் பெயரால் அரசராய் வருபவர் போற்றப்பெறுக, விண்ணகத்தில் மாட்சியும், அமைதியும் உண்டாகுக என ஆர்ப்பரிக்கின்ற இன்றைய நாள் நமக்கு உணர்த்தும் முதல் செய்தி மகிழ்ச்சி. இயேசுவோடு உடன் வந்த மக்கள் மட்டும் அல்ல, இயேசுவும் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறார். இயேசுவின் பிறப்பு மகிழ்ச்சியின் பிறப்பாக அறிவிக்கப்பட்டது போல, அவரது எருசலேம் பயணமும் மகிழ்ச்சியின் பயணமாக இருக்கிறது. இத்தனைநாளும் மக்களிடம் குருத்தோலையும், கழுதையும், போர்வையும் இருந்தன. ஆனால் இன்று மட்டும் தான் ஆர்ப்பரிக்கின்றன. காரணம் இயேசு அவர்களோடு இருந்ததால். ஆக இயேசுவை நீக்க விட்டால் மகிழ்ச்சிக்கு இடம் இல்லை. அவரோடு இருக்கும் போது நாம் தனியாக இருப்பதில்லை. வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும், நம் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளும், தடைகளும் தாண்டமுடியாதவைகளாக இருந்தாலும், கவலைவேண்டாம். ஏனெனில் இயேசு நம் நடுவில் இருக்கிறார். நாம் அவரோடு நடப்போம், அவர் நம்மோடு நடக்கிறார். நம்மையும் தன் கழுதைக் குட்டியின் மேல் ஏற்றிக்கொள்கிறார். ஏனெனில் அவரது மகிழ்ச்சியில் நமக்கும் பங்கு உண்டு, அவரது மகிழ்ச்சியில் பங்குகொள்ள விரும்பும் நாம், அவரது துன்பத்திலும் பங்குகொள்வோம். அப்போதுதான் வெற்றியிலும் பங்குகொள்ள முடியும்.

முரண்பட்ட வாழ்வு :
இயேசு மூன்று முறை எருசலேமுக்குள் நுழைகிறார்,
1. இயேசுவை காணிக்கையாக்க பெற்றோர் தூக்கிச் சென்றனர்.
2. பன்னிரெண்டு வயதில் பாஸ்கா கொண்டாட பெற்றோருடன் செல்கிறார் இயேசு.
3. வெற்றி ஆர்ப்பரிப்போடு இன்று எருசலேம் நுழைகிறார்.

இயேசுவின் முதல் இரண்டு வருகைக்கும், மூன்றாம் வருகைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அப்போது ஆர்ப்பரிப்பு இல்லை, இப்போது ஆர்ப்பரிப்பு. அப்போது அவருக்கு எந்த பட்டமும் இல்லை, இப்போது தாவீதின் மகன் என்ற பட்டம். அப்போது எந்த ஆதரவாளர்களும் இல்லை, இப்போது சீடர்களும், மக்கள் கூட்டமும். அப்போது எந்த தயாரிப்பும் இல்லை, இப்போது கழுதை, குருத்தோலை, போர்வை. அப்போது இயேசு தன் சொந்த ஊருக்குத் திரும்பினார், இப்போது திரும்பிபோக மாட்டார். இப்படி அவரது எருசலேம் பயணம், முரண்பட்ட பயணமாக இருந்தது. இருப்பினும் அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.

தன் பயணத்தில் குருத்தோலை ஏந்திவருபவர்கள் தன் காலை வாரிவிடுவார்கள் என்றும், ஒசன்னா பாடுபவர்கள் ஒழிக என கத்துவார்கள் என்றும், தங்கள் ஆடைகளை முன் விரித்தவர்கள், தன் ஆடையை களைவார்கள் என்றும், போதகரே என்பர்கள், சிலுவையில் அறையும் என்று கத்துவார்கள் என்றும், உடன் வந்த சீடர்கள் ஒடிப்போவார்கள் என்றும், கட்டி அணைத்தவர்கள் காட்டிக் கொடுப்பார்கள் என்றும் இயேசுவுக்கு தெரிந்திருந்தது. அத்தனையும் தெரிந்திருந்தும் அமைதியுடன் பயணம் தொடர்கிறார்.

இயேசுவுக்கே இத்தனை முரண்பாடுகள் என்றால் நம் வாழ்க்கையில் எத்தனை, எத்தனை முரண்பாடுகள்? போராட்டங்களும், முரண்பாடுகளும், பிளவுகளும், மனவருத்தங்களும், கசப்பு நிறைந்த அனுபவங்களும் நித்தம் நித்தம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இவற்றை சந்திக்காமல் வாழ்க்கைப் பயணத்தை தொடரமுடியாது. வெற்றிக்கனியை பறிக்க முடியாது. புனித வாரத்தில் இருக்கின்ற நாம், நம்முடைய வாழ்கையில் வரும் போராட்டங்களையும், துன்பங்களையும், இயேசுவின் துணையோடு கடக்க முற்படுவோம். துன்பக் கிண்ணத்தை அனுபவித்து உயிர்பெற்ற இயேசுவைப் போல, நம் வாழ்வும் உயிர் பெற்று, ஒளிபெற உறுதி கொண்டு அவரோடு பயணிப்போம். இறைமகன் இயேசு நம்மையும்,நம்மை சுற்றியிருப்பவர்களையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்.
 


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 குருத்தோலையும் சிலுவை மரமும்

புனித வாரத்துக்குள் நுழையும் நாம் இயேசுவுடன் இணைந்து எருசலேமுக்குள் நுழைகிறோம். பவனியின்போது நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்திப் பகுதிக்கும், நற்செய்தி வாசகத்தில் நாம் கேட்ட இயேசுவின் பாடுகள் வரலாற்றுக்கும் மூன்று முரண்கள் உள்ளன. அல்லது இயேசு மூன்று நிலைகளுக்குக் கடந்து போவதை நாம் காண்கிறோம். இவற்றை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

(அ) உடனிருப்பிலிருந்து உதறித் தள்ளுதலுக்கு

மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிற கழுதைக்குட்டி நிகழ்வில், 'ஒரு கழுதையும் அதனோடு ஒரு குட்டியும்' என இரண்டு விலங்குகள் அழைத்துவரப்படுகின்றன. மற்ற நற்செய்தியாளர்கள் கழுதைக்குட்டி மட்டுமே வருவதாகப் பதிவு செய்கிறார்கள். மத்தேயு நற்செய்தியாளர், 'கடவுள் நம்மோடு' என்னும் உடனிருத்தலின் செய்தியைத் தருகிறவர். கழுதையும் அதனோடு ஒரு குட்டியும் என்பதை, இயேசுவின் பாடுகளில் அவரோடு உடனிருந்த தந்தையை நாம் நினைவுகூர்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். கடவுள் இயேசுவோடும் உடன் நடக்கிறார். இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேம் நுழையும்போது அவருடைய சீடர்களும் மக்களும் உடன் நடக்கிறார்கள். ஆனால், சில நாள்களில் அவர்கள் இயேசுவை உதறித் தள்ளுகிறார்கள்.

(ஆ) புகழ்ச்சியிலிருந்து தீர்ப்பிடுதலுக்கு

ஓர் அரசர் அல்லது பெரியவர் ஊருக்குள் நுழையும்போது அவருக்கு முன்னே துணிகளை விரிப்பதும், அவரை எதிர்கொள்ள கொடிகள் பிடிப்பதும் வழக்கம். இன்றும் சில ஊர்களில் தேர்ப்பவனி செல்லும் இடங்களிலும், நற்கருணைப் பவனியிலும் பவனிக்கு முன்னே துணிகள் விரிக்கப்படுவது வழக்கம். அதாவது, தங்களுடைய மீட்பரும் அரசருமாகிய ஒருவரைத் தாங்கள் கண்டுகொண்டதாக உணர்கிறார்கள் இஸ்ரயேல் மக்கள். அவரை அரசராகப் புகழ்ந்து பாடியவர்கள் அவருக்குச் சிலுவைத் தீர்ப்பு அளிக்கிறார்கள். 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா!' என்னும் சொற்கள் விரைவில் 'இவனைச் சிலுவையில் அறையும்' என மாறுகின்றன.

(இ) மாட்சியிலிருந்து அவமானத்துக்கு

குருத்தோலை, கழுதைமேல் பவனி, வழியில் துணிகள் என மாட்சி பெற்ற இயேசு, அவருடைய சிலுவைப் பயணத்தில் மிகுந்;த அவமானம் அடைகிறார். குருத்தோலையின் மென்மை மறைந்து சிலுவையின் வன்மை அவருடைய தோளைப் பற்றிக்கொள்கிறது. கழுதைமேல் பவனி வந்தவர் தெருக்களில் இழுத்துச் செல்லப்படுகிறார். பவனியின்போது மற்றவர்கள் தங்கள் மேலாடைகளை விரித்தனர். சிலுவைப் பயணத்தில் இயேசுவின் மேலாடை பறித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்காணும் மூன்று முரண்களை, அல்லது மூன்று நகர்வுகளை இயேசு எப்படி எதிர்கொண்டார்?

இரு நிகழ்வுகளையும் இயேசு அவை இருப்பது போல அப்படியே ஏற்றுக்கொள்கிறார். எந்தவித எதிர்பார்ப்போ, மறுப்போ அவரிடம் இல்லை.
இரு நிகழ்வுகளுமே தம் கட்டுக்குள் இருப்பவை அல்ல எனத் தெரிந்தாலும், தன் கட்டுக்கோப்பை இழக்காதவராக இருக்கிறார் இயேசு.
இவ்விரு பயணங்களையும் தாண்டிய மூன்றாவது பயணம் - இறப்பிலிருந்து உயிர்ப்புக்கு - இயேசுவுக்கு எப்போதும் நினைவில் இருந்ததால் இவை இரண்டுமே அவற்றுக்கான பயணங்கள் என எடுத்துக்கொண்டார்.

நம் வாழ்வின் முரண்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்?
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
சாவை ஏற்றுக்கொண்ட இயேசு
நிகழ்வு

2001 ஆண்டு, செப்டம்பர் திங்கள் 11 ஆம் நாள், அமெரிக்காவில் இருந்த இரட்டைக் கோபுரத்தின்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. இத்தாக்குதலில் ஆயிரக்கணக்கானக்கோர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தார். "மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின்மீதே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டார்களா?" என்று உலக நாடுகள் அஞ்சி நடுங்கின; தங்களது பாதுகாப்பைக் குறித்து எல்லா நாடுகளும் கேள்வி எழுப்பத் தொடங்கின. இத்தகைய கொடுஞ்செயலுக்கு நடுவில், தனது உயிரைத் துச்சமென நினைத்து 2700 பேர்களுடைய உயிர்களைக் காப்பாற்றி, இறுதியில் தன் உயிரை இழந்த ரிக் ரெஸ்கோர்லா (Rick Rescorla) என்பவரைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும்.

இந்த ரிக் ரெஸ்கோர்லா இரட்டைக் கோபுரத்தின், தெற்குக் கோபுரத்தின் தலைமைக் காவலராக இருந்தவர். வடக்குக் கோபுரத்தின்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்ட இவர், தெற்குக் கோபுரத்தில் இருந்தவர்களையெல்லாம் காப்பாற்றுவதற்காக அக்கோபுரத்தின் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று, அங்கிருந்தவர்களிடம், நேரிடப்போகும் ஆபத்தைச் சொல்லி, அவர்களைக் கீழே இறங்கச் சொன்னார். இவ்வாறு அவர் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று, தீவிரவாதிகளின் தாக்குதலைக் குறித்துச் சொல்லிக்கொண்டு போகும்போது, அந்தக் கோபுரத்தின்மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அவர் இறந்து போனார்.

ஆம், தீவிரவாதிகளின் தாக்குதலிருந்து மக்களைக் காப்பாற்ற ரிக் ரெஸ்கோர்லா தன்னையே சாவுக்குக் கையளித்தார். ஆண்டவர் இயேசு நம்மைப் பாவத்திலிருந்து மீட்புப் புதுவாழ்வளிக்க தன்னையே தியாகமாகத் தந்தார். அதைத்தான் இன்று நாம் கொண்டாடுகின்ற பாடுகளின் குறித்து ஞாயிறு உணர்த்துகின்றது. இயேசு ஏன் பாடுகள் படவேண்டும், அவருடைய பாடுகளால் நாம் அடையும் பேறுபலன் என்ன என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தம்மையே தாழ்த்திக்கொண்ட இயேசு

இவ்வுலகில் எதுவுமே இல்லாதவர்களும், எந்தவோர் அதிகாரத்திலும் இல்லாதவர்களும் எளிமையாகவும் தாழ்ச்சியாகவும் இருப்பதில் எந்தவொரு வியப்புமில்லை; ஆனால் எல்லாம் இருந்தும் ஒருவர் எளிமையாகவும் தாழ்ச்சியாகவும் இருப்பதில்தான் வியப்பிக்கின்றது. ஆண்டவர் இயேசு செல்வராயிருந்தவர், அப்படிப்பட்டவர் நமக்காக ஏழையானார் (2கொரி 8: 9). மேலும் அவர் கடவுள் வடிவில் விளங்கினார்; எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தார் (மத் 28: 18). அப்படிப்பட்டவர் தம்மையே வெறுமையாக்கி, மனிதருக்குக் ஒப்பாகி, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்.

சிலுவைச்சாவானது நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கும் துரோகிகளுக்கும் தரப்பட்டது. இத்தண்டனையானது முதலில் பாரசீக மன்னன் முதலாம் தாரியுஸ் என்பவனால் கி.மு 519 ஆம் ஆண்டு, பாபிலோனில் தனக்கெதிராகக் கலகம் செய்த மூவாயிரம் பேர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் கி.மு. 88 ஆண்டு யூதேயாவைச் சாந்த தலைமைக்குருவான அலெக்சாண்டர் ஜன்னேயுஸ் (Alexander Janneaus) என்பவரால் பரிசேயச் சட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்ட எண்ணூறு பேர்களுக்குக் கொடுக்கப்பட்டது. பின்னாளில் உரோமையர்களால் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடிய தண்டனையானது, கி.பி நான்காம் நூற்றாண்டில், கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்த முதலாம் காண்டண்டைன் என்பவரால் நிறுத்தப்பட்டது.

இத்தகைய கொடிய தண்டனையை கடவுள் வடிவில் விளங்கியவரும், எல்லா அதிகாரமும் தன்னகத்தே கொண்டவருமான இயேசு தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதுதான் வியக்குரியதாக இருக்கின்றது. இயேசு சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக் கொண்டதன் மூலம், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் சொல்வது போன்று கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். மேலும் அவர் தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார் (எபி 5: 8)

கடவுளால் மிகவும் உயர்த்தப்பட்ட இயேசு

சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திகொண்ட இயேசுவை தந்தைக் கடவுள் அப்படியே விட்டுவிடவில்லை. மாறாக, அவர் இயேசுவை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளுகின்றார். அப்படியெனில், நாம் இயேசுவைப் போன்று கீழ்ப்படிதலுடனும் தாழ்ச்சியுடனும் வாழ்கின்றபொழுது கடவுள் நம்மை மிகவும் உயர்த்துவார் என்பது உறுதி.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் துன்புறும் ஊழியரைக் குறித்துப் பேசுகின்றது. இங்குக் குறிப்பிடப்படும் துன்புறும் ஊழியர் "கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்; ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்" என்கின்றார். ஆண்டவருக்குச் செவிகொடுப்பதாகவும் அல்லது அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகவும் துன்புறும் ஊழியர் சொல்கின்ற இந்த வார்த்தைகளை இஸ்ரயேல் மக்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இஸ்ரயேல் மக்களிடம் கடவுள், "மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி இருந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால் திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்" (எசா 1: 19-20) என்பார். இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு இணங்கவோ, அவருக்குச் செவிசாய்க்கவோ அல்லது அவருக்குக் கீழ்ப்படியோ இல்லை. இவ்வாறு அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் வாளுக்கு இரையானார்கள்; ஆனால் துன்புறும் ஊழியனாம் இயேசு கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததால், அவர் கடவுளால் மிகவே உயர்த்தப்பட்டார். ஆகவே, நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவரால் நிச்சயம் உயர்த்தப்படுவோம்.
துணை நிற்கும் இறைவன்

துன்புறும் ஊழியராம் இயேசுவைப் போன்று, கடவுளின் திருவுளம் நிறைவேற நாம் நம்மையே கையளிக்கின்றபொழுது இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் சொல்லப்படுவதுபோல் அடிக்கப்படலாம்; காறி உமிழப்படலாம். அவமானப்படுத்தப்படலாம். இன்னும் பல்வேறு துன்பங்களை நாம் அனுபவிக்கலாம். இத்தகைய தருணங்களில் நாம் மனந்தளர்ந்து போய்விடாமல் ஆண்டவராகிய கடவுள் நமக்குத் துணையாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு வாழலாம் என்கிறது இன்றைய முதல் வாசகம், இதை, "ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்" என்று இன்றைய முதல்வாசகத்தின் இறுதியில் வருகின்ற வார்த்தைகளில் காணலாம். இயேசுகூட இதையேதான், "நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு இருக்கிறார்" (யோவா 16: 32) என்பார். ஆகவே, நாம் இயேசுவைப் போன்று தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மையே நாம் அர்ப்பணித்து வாழ்கின்றபொழுது, சவால்களையும் துன்பங்களையும் வரலாம். அவற்றைக் கண்டு அஞ்சாமல், அவர் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால், அவர் தரும் மேலான ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனை:

"வைரம் ஜொலிக்க வேண்டுமானால் சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்கவேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும்" என்பார் சி. என். அண்ணாத்துரை. எனவே, இந்த உலகை மீட்க வந்த இயேசு அதற்காகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தம்மையே தந்தது போன்று, நாமும் இந்த உலகை உய்விக்க நம்மையே தருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
குருத்து ஞாயிறு

ஒரு சோதிடர் ஒருவர் அரசனிடம் வந்தார். பலவாறு சொன்ன சோதிடர் இறுதியாக அரசே! இந்த தேதியில் உங்கள் மனைவி இறந்துவிடுவார்கள் என்று சொன்னார். அதே நாளில் சோதிடர் சொன்னபடி ராணியும் இறந்தாள். மறுநாள் அரசன் சோதிடரை அழைத்து நீ எப்போது இறப்பாய் என்று கேட்டார். அரசே! நீங்கள் சாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே நான் இறப்பேன் என்றார். அப்படியென்றால் என்னோடு இரு என்று அரசன் வைத்துக் கொண்டார்.

வாழ்க்கையை முன் கூட்டியே தீர்மானிப்பது நல்லதுதான். இயேசு தனக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்தவராக இன்று எருசலேம் நகரில் நுழைகின்றார். தான் சிலுவையில் கையளிக்கப்படப் போவது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும் (மத். 26:2). தன்னை 12 சீடர்களில் ஒருவன் காட்டிக் கொடுக்கப் போவதும் தெரியும் (மத். 26:21), சீடர்கள் சிதறிப் போவார்கள் என்பதும் தெரியும் (மத். 26:33). தான் பாடுகள் படப்போகும் அனைத்தும் அவருக்குத் தெரியும். எல்லாம் தெரிந்துமா அவர் எருசலேம் நுழைந்தார்?

ஆம்! எல்லாம் தெரிந்தும், அறிந்தும், புரிந்தும், உணர்ந்தும் தான். ஏனெனில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அவரது வாழ்க்கையின் குறிக்கோள். இந்தப் பாடுகளின் இறப்பு, உயிர்ப்பு வழியாகத் தனது அன்பு எவ்வளவு பெரிது என்பதை உலக மக்கள் அறிய வேண்டும் என்பது தந்தையின் விருப்பமாகும். பாடுகளை அறிந்த இயேசு மனிதத் தன்மையால் முகம் குப்புற விழுந்து, என் தந்தையே! முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும் (மத். 26:39) என்று செபிப்பதாக வாசிக்கிறோம். ஆனால் அச்சம் ஒரு பக்கம் ஆட்கொண்டாலும் தந்தையின் மீது மகன் கொண்டிருந்த விசுவாசம் அசைக்க முடியாத ஒன்று.
நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் எதிரிகள், வீடு ஒன்றை நெருப்பு வைத்தார்கள். வீடு பற்றி எரிந்து வீட்டில் இருந்த 3 பேர் தந்தை, தாய், மகள் மூவரும் வெளியே ஓடிவந்தார்கள். நெருப்போ பரவியது. மேல் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் எழுந்தான். அம்மா! அப்பா! என்னைக் காப்பாற்றுங்கள் என்ற கூக்குரல் ஒலித்தது. அப்போதுதான் பெற்றோருக்கு மகன் தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. சன்னல் எரிந்து விழக் கண்ட பெற்றோர் மகனே! கீழே குதியும். உன்னை நாங்கள் தாங்கிப் பிடித்துக் கொள்வோம் என்றனர். ஐயோ பயமாக இருக்கிறது. நீங்கள் நிற்பது தெரியவில்லையே என்றான். நாங்கள் இங்கே நிற்கிறோம். குதி குதி என்று சொல்ல சப்தம் கேட்கும் திசையை நோக்கிக் குதித்தான். தகப்பன் தாங்கிக் கொண்டார். இதுதான் மகன் தன் தந்தை மீது கொண்டிருந்த நம்பிக்கை.

இத்தகைய மனநிலைதான் இயேசுவைத் துன்பக் கிணற்றுக்குள் துணிந்து குதிக்க வைத்தது. தன் தந்தை தன்னைக் கைவிட மாட்டார் என்பதே இயேசுவைத் துணிந்து போகச் செய்தது. இன்று பவுல் அடிகளார் கூறுவதுபோல இயேசுவை உயிர்த்தெழச் செய்து, அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தி விண்ணகத் தையும், மண்ணகத்தையும், கீழுலகத்தையும் அவருக்கு அடிபணிய வைத்தார் (பிலி. 2:11).

சிலுவை வழியாகத்தான் இயேசு இறைமகன் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது. யூதர்களுக்கு இடறலாகவும், கிரேக்கர்களுக்கு (புறவினத்தாருக்கு) மடமையாகவும், ஆனால் விசுவாசம் கொண்டவர்களுக்குச் சிலுவையில் இறைமகனாகவும் இருக்கிறார் (1 கொரி. 1:23). தன்னையே அழித்துத் தன் ஆடுகளுக்காக உயிர் கொடுத்தார் இயேசு (யோவா. 10:18).

ஆம். பாடுகள் நம்மில் எழ வேண்டிய பரிதாப உணர்ச்சியல்ல! அதில் நாம் பங்கு பெற அழைக்கப்படுகிறோம். இயேசு ஏந்தும் சிலுவை நமக்கு நம்பிக்கை, நமக்கு மீட்பு, நமக்கு வழி, நமக்கு மகிமை.

மதமும், அரசியலும் மனித வரலாற்றில் கைகோர்த்து கொள்ளும்போது நல்லவையும் நடந்துள்ளன. தீயவையும் நிகழ்ந்துள்ளன. நீதியும் உண்மையும் காக்கப்பட்ட நேரங்கள் உண்டு உண்மையை நீதியை மூடி மறைத்ததும் உண்டு. குருத்தோலை ஏந்தி வெற்றி வீரராகப் பவனியில் அழைத்து வரப்பட்ட இயேசுவுக்கு என்ன நிகழ்ந்தது தெரியுமா? தன்னல குரு கைப்பாஸ் தலைமைச் சங்கத்தைக் கூட்டி இயேசுவைக் குற்றவாளியாக்கப் பொய்ச் சான்று தேடுகிறான். புரட்சியாளர், வரி கொடுக்கத் தடுத்தவர், தன்னை அரசனாக்கிக் கொண்டார் இயேசு என்றெல்லாம். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு வித்திட்டான். இன்றும் மதம், சிந்திக்க தெரியாத பாமர மக்களைத் தன் கைவசம் வைத்து நீதிக்கும், உண்மைக்கும் முரணாகச் செல்லத் தூண்டுகிறது. இதனால் இயேசுவின் சீடர்களுக்கு இந்த உலகம் தருவதோ சிலுவை. ஆனால் வெற்றி நமக்காகக் காத்திருக்கிறது, உணருவோம்.
 
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

நம்மை மற்றவர்க்குப் பிடிக்குமா ?

யார் அழகாக இருக்கின்றார்களோ அவரை எல்லாருக்கும் பிடிக்கும். எது அழகாக இருக்கின்றதோ அது எல்லாருக்கும் பிடிக்கும்.

இந்த உலகத்திலே வாழும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்கு இயேசுவைப் பிடிக்கும். காரணம் அவரிடம் காணப்படும் அழகு.

இயேசு - அவரது உணர்வில் அழகு! இயேசு அவரது எண்ணத்தில் அழகு! இயேசு - அவரது சொல்லில் அழகு! இயேசு - அவரது செயலில் அழகு! எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சுமந்த சுமையில் - சிலுவையில் அழகு! சுமை சுமக்க இயேசு மனமுவந்து முன்வந்த நாள்தான் குருத்து ஞாயிறு.

இயேசுவுக்கு அவரை மக்கள் எப்படி நடத்தப்போகின்றார்கள் என்பது நன்றாகத் தெரியும். அவர்மீது பாவத்தைச் சுமத்துவார்கள், பழியைச் சுமத்துவார்கள், கன்னத்தில் அறைந்து. கற்றூணில் கட்டி, அடிமேல் அடி அடித்து, தோள்மீது சிலுவையைச் சுமத்தி, அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள் என்று இயேசுவுக்குத் தெரியும். தனக்கு நடக்கப்போவதை அறிந்தே. தெரிந்தே அவர் எருசலேம் நகருக்குள் நுழைந்தார். இயேசு குருத்து ஞாயிறைப் பற்றி முன்பே தனது சீடர்களுக்கு மூன்று முறை அறிவித்திருந்தார். அவரைப்பற்றி இறைவாக்கினர் எழுதி வைத்திருந்த யாவும் நிறைவேறும் (லூக் 18:31) எனச் சொல்லியிருந்தார். எசாயா இறைவாக்கினர் எழுதி வைத்திருந்தது போல (எசா 50 : 4-7) அவர் அடிப்பவர் முன் கிளர்ந்தெழவில்லை ; நிந்தனை செய்தோர் முன்னும், காறி உமிழ்ந்தோர் முன்னும் முகத்தை மறைக்கவில்லை : அத்தனை சுமைகளையும் அவர் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். இதற்குக் காரணம் சுமைக்கும், அழகுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அழகுக்கு அகிலத்தைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு.

எங்கே சுமை இருக்கின்றதோ அங்கே அழகு இருக்கும்.
வானம் சந்திரனைச் சுமக்கும் போது அழகு பெறுகின்றது.
பூமி மனிதனைச் சுமக்கும் போது அழகு பெறுகின்றது.
பூ மணத்தைச் சுமக்கும்போது அழகு பெறுகின்றது.
ஆம், சுமைக்கும். அழகுக்குமிடையே ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.


இன்று இயேசு எத்தனையோ பேருக்கு அழகான ஆண்டவராக, நண்பராக, அன்பராகக் காட்சியளிக்கின்றார். இதற்குக் காரணம் உலக மக்களின் நலனுக்காக அவர் சுமந்த சுமைகள்!

அவர் சுமந்த ஒவ்வொரு சுமையும் சிலுவையும் அவரை அழகுக்கு அழகு செய்யும் அற்புதப் பிறவியாக்கியது. ஒரு தாய் அவளது குழந்தையைச் சுமக்கும்போது தாய்மை என்னும் அழகைப் பெறுவது போல, இயேசு நமது பாவங்களைச் சுமந்தபோது உலக மீட்பர் என்னும் அழகைப் பெற்றார்.

அன்று அவர் கண்ணிலே சுமை! அன்று அவர் கருத்திலே சுமை! அன்று அவர் சொல்லிலே சுமை! அன்று அவர் செயலிலே சுமை ! அன்று அவர் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் சுமை! ஆனால் இன்றோ, அவர் மீது காணப்படும் காயங்கள் கூட அழகாகத் தெரிகின்றன. காரணம் அவர் சுமந்த சுமைகள்.

இன்று இயேசு நமக்குத் தரும் அருள்வாக்கு என்ன?

எனதருமை மகளே. மகனே! அன்று சுமை சுமக்க, சிலுவையைச் சுமக்க நான் பயந்திருந்தால் நான் எருசலேம் நகருக்குள் நுழைந்திருக்க மாட்டேன். அன்று நுழைந்து, சாவு என்னும் மாபெரும் சுமைக்கு (இரண்டாம் வாசகம்) என்னையே நான் கையளித்ததினால்தான் எனக்கு உயிர்ப்பு என்ற அழகும், மீட்பர் என்ற அழகும், ஆண்டவர் என்ற அழகும் கிடைத்தன. நான் அழகாக இருப்பதினால்தான் உலகத்தை என் பக்கம் ஈர்க்க ன்றது. நீயும் சுமை சுமக்க முன் வா! அழகாக மாறு! உன்னை எல்லாரும் விரும்புவார்கள். நீ அன்பு செய்யப்படும்போது ஆனந்தமடைவாய்! என்கின்றார் இயேசு.

நிலம் தன்னை மனிதன் தோண்டும்போது, மரம் வைக்கத் தோண்டுவான், தண்ணீர் எடுக்கத் தோண்டுவான் எனப் பொறுமையாக இருப்பதுபோல, நாம் சிலுவையால், துன்பத்தால், சுமையால் தோண்டப்படும்போது பொறுமையாக வாழ முன்வருவோம் ; அழகான மனிதர்களாவோம்.
மேலும் அறிவோம் :

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை (குறள் : 151).

பொருள் :
தன்னைத் தோண்டிக் குழிபறிப்போரையும் கூட நிலமகள் சுமந்து நலம் புரிகிறாள். அதுபோன்று தம்மை அவமதித்து இழிவாகப் பேசுவோரையும் பொறுத்துக்கொள்ளுவது தலைசிறந்த பண்பாகும்.
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்

ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு

ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணை முதல் வாரம் சைக்கிளிலும், இரண்டாம் வாரம் பைக்கிலும், மூன்றாம் வாரம் மாருதிக் காரிலும் ஏற்றிக் கொண்டு, கடற்கரைக்குச் சென்று பல்வேறு பரிசுப் பொருள்களை அவளுக்கு அளித்து அன்பு மழையில் நனைய வைத்தான். அவன் ஒரு பணக்காரனாக இருக்க வேண்டும் என்று எண்ணியு அப்பெண் அவனைப் பார்த்து. "நான் உன்னைக் காதலிக்கின்றேன் கண்ணா" என்றாள். அவன் அவளிடம், "நான்" பயன்படுத்திய சைக்கிள், பைக், மாருதிக்கார் அனைத்துமே என்னுடைய நன்பனுடையது" என்றான். உடனே அவள் அவனிடம், "அப்ப, நான் போயிட்டு வர்றேன் அண்ணா" என்று கூறிவிட்டுக் கிளம்பிளாள். காசு இருந்தால் அவன் "கண்ணன்"; காக இல்லை என்றால் அவன் அண்ணன், குளத்திலே தண்ணீர் இருந்தால் அதில் கொக்கும் மீனும் இருக்கும்; தண்ணீர் இல்லை என்றால், அவை வேறொரு குளத்திற்குச் சென்றுவிடும்.

குருத்து ஞாயிறு திருவழிபாடு மக்களின் நிலையற்றத் தன்மையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. எந்த மக்கள் குருத்து ஞாயிறு அன்று "ஓசான்னா" பாடிக் கிறிஸ்துவை எருசலேம் திருநகருக்கு அழைத்துச் சென்றார்களோ. அதே மக்கள் கூட்டம் கிறிஸ்து கைது செய்யப்பட்டபோது "அவன் ஒழிக" என்று கூச்சலிட்டது.

கிறிஸ்துவின் பாடுகள் விதியின் விளையாட்டோ தலைமைக் குருக்களின் சதியோ அல்ல; மாறாக அது வகுத்தான் வகுத்த வழி: கடவுளின் திட்டம். அத்திட்டத்தைக் கிறிஸ்து மக்கள் மீட்புக்காக மன உவப்புடன் ஏற்று நிறைவேற்றினார். இன்றைய முதல் வாசகம், இறைவாக்கினர் சொயா துன்புறும் ஊழியனைப் பற்றி எழுதியுள்ள நான்கு கவிதைகளில் ஒன்று துன்புறும் ஊழியனாகிய கிறிஸ்து தமது பாடுகளை நெஞ்சுறுதியுடன் ஏற்கிறார்; தம் முகத்தைக் கற்பாறையாக ஆக்கிக் கொண்டார் (எசா 50:7). இன்றைய பதிலுரைப் பாடல் கிறிஸ்து எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டார் என்பதை எடுத்துரைக்கிறது. "என் இறைவா. என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்" (திபா 22), இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார் எனக் கூறுகிறது (பிலி 2:6). இன்றைய நற்செய்தி மத்தேயு எழுதியுள்ளபடி கிறிஸ்துவின் பாடுகளை எடுத்துரைக்கிறது (மத் 26:14-27:16).

கிறிஸ்துவின் பாடுகளைப் பொருத்தமட்டில், அவருடைய உடல் வேதனையைவிட மன வேதனையே அதிகம். பாடுகளின்போது அவர் அனைவராலும் கைவிடப்பட்டார். யூதாசு அவரைக் காட்டிக் கொடுத்தான்; பேதுரு அவரை மறுதலித்தார்; சீடர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தண். தலைமைச் சங்கம் அவருக்கு மரண தண்டனை விதிக்க ஆளுநர் பிலாத்தை வற்புறுத்தியது; மக்கள் கூட்டம் பரபாசை விடுவிக்கக் கோரி கிறிஸ்துவைச் சிலுவையில் அறைய வேண்டுமெனக் கூச்சலிட்டது. ஆளுநர் பிலாத்து தன் கைகளைக் கழுவி நழுவி விட்டான்.

ஒருவருக்குத் துன்பம், கேடுகாலம் வருவதும் நல்லது; ஏனெனில் அப்போதுதான் அவருடைய உண்மையான நண்பர்கள் யார் என்பது தெரியவரும் என்கிறார் வள்ளுவர்.

கேட்டிலும் உண்டு ஓர்உறுதி கிளைஞசை
நீட்டி அளப்பதோர் கோல் (குறள் 796)

கிறிஸ்துவின் பாடுகளின்போது அவரைவிட்டு நீங்காத ஒரே ஒருவர் அவரது வானகத் தந்தை மட்டுமே. இதைக் கிறிஸ்துவே தம் சீடர்களிடம் முன்னறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்து தம் சீடர்களிடம், "நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப் போவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்" (யோவா 16:32) என்று கூறினார்.

"என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது கூறியது. நமக்கு வியப்பளிக்கலாம். ஆனால் கிறிஸ்து சிலுவையில் சொல்லியது திருப்பா 22 முழுவதையும். இத்திருப்பா நம்பிக்கையின் பா; அவநம்பிக்கையின் பாடல் அல்ல: "நீரோ ஆண்டவரே! என்னைவிட்டுத் தொலைவில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்" (திபா 22:19). எனவே இருள் சூழ்ந்த நிலையிலும் கிறிஸ்து தந்தை யிடம் கொண்டிருந்த நம்பிக்கையை இழக்கவில்லை என்பது உறுதி, எத்தகைய துன்பச் சூழ்நிலையிலும் கடவுள் நம்முடன் இருக்கிறார். "அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னைவிட்டு விலகமாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார். அஞ்சாதே. திகைக்காதே" (இச 31:8). "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்" (உரோ 8:31).

கிறிஸ்து புகழப்பட்ட போதும் இகழப்பட்ட போதும் ஒரே மனநிலையுடன் இருந்தார். மக்கள் அவரைப் போற்றியபோது அவர் புகழில் மயங்கவில்லை; தூற்றப்பட்டபோது அவர் மனமுடைந்து போகவில்லை. கிறிஸ்துவிடம் விளங்கிய மனநிலை பவுலிடம் இருந்தது. "போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; புகழ்வார் புகழலும் இகழ்வார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை" (2 கொரி 6:8). கிறிஸ்துவிடமும் பவுலிடமும் விளங்கின மனநிலையுடன் நாம் வாழ்ந்தால். நாம் உண்மையில் முதிர்ச்சி பெற்ற மனிதர்கள்.

தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம், "உங்களுக்குப் பிடித்த மொழி ஆங்கில மொழியா அல்லது தமிழ் மொழியா?" என்று கேட்டதற்கு ஒரு மாணவன், 'சார்! எனக்குப் பிடித்த மொழி உங்கள் மகள் தேன் மொழி" என்றான்! நமக்குப் பல மொழிகள் பிடித்திருக்கலாம். ஆனால் கிறிஸ்து வுக்குப் பிடித்த மொழி மௌன மொழி: பிடித்த இராகம் மௌன இராகம். பாடுகளின்போது அவர்மீது அடுக்கடுக்காய்க் குற்றங்களைச் சுமத்தியபோது அவர் மறுத்து ஒரு பதிலும் கூறவில்லை. "இயேசு பேசாதிருந்தார்" (மத் 26:63). அதைக்கண்ட ஆளுநர் பிலாத்து வியப்படைந்தான். புனிதவாரத்தில் நாம் மௌனமாக இருப்போம். மௌனம் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதம்.

திருமணமான ஒரு பெண் தன் தோழியிடம், "என் கணவர் மனம் மாறவேண்டுமென்று எனக்குத் தெரிந்த எல்லா விரதங்களையும் கடைப்பிடித்தும் அவர் மனம் மாறவில்லை" என்றார். அதற்குத் தோழி. " இன்னும் ஒரு விரதம் பாக்கியிருக்கிறது. அதுதான் மெனை விரதம்" என்றார்.

பசியைப் பொறுத்துக்கொண்டு, சாப்பிடாமல் நோன்பு இருப்பவர்களைவிடப் பிறரின் இன்னாச் சொல்லைப் பொறுத்துக் கொள்பவர்களே மேலானவர் என்கிறார் வள்ளுவர்.

உண்ணாதுநோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின்பின் (குறள்160)

புனிதவார சிந்தனைக்கு


கடவுளுக்குப் பிடித்த மொழி மௌனமொழி?
கடவுளுக்குப் பிடித்த இராகம் மௌன இராகம்!
கடவுளுக்குப் பிடித்த விரதம் மௌன விரதம்!


 
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

புகழ்ச்சிப் பவனியா? புரட்சிப் பவனியா?

இயேசு ஏன் சோதனைக்கு ஆளானார்? என்ற கேள்வியோடு தவக்காலத்தைத் தொடங்கினோம்.

இயேசு ஏன் துன்பத்துக்கு ஆளானார்? என்ற கேள்வியோடு தவக்காலத்தை நிறைவு செய்கிறோம்.

குருத்து ஞாயிறு இன்று தென்னை மரத்தின் இளம்தளிர்- களைக் கொய்து கரங்களில் ஏந்தி ஆலயம் நோக்கிப் பவனியாகச் செல்கின்றோம். கையில் உள்ள இளந்தளிர் பேசினால் நம்மிடம் என்ன சொல்லும்? "தென்னை மரத்தின் எதிர்காலம் நான். இளம் பருவத்திலேயே உங்கள் மகிழ்ச்சிக்காக என்னைக் கையளித்து விட்டேன். வளர வேண்டிய நான் மரணத்தைத் தழுவி விட்டேன். இயேசுவின் வரவேற்புக்கு நான் பயன்பட்டதற்காகப் பெருமைப் படுகிறேன்".

இறைவனுக்காக இறையாட்சிக்காக நாம் வாழ வேண்டும் என்று சுட்டிக் காட்டிய மீட்பர் இயேசுவும் இளம்வயதிலேயே தியாகப் பலியானார்.

இறப்புப் பற்றிய பயம் இயல்பானதுதான். ஆனால் இலக்குத் தெளிவும் இலட்சிய வேட்கையும் கொண்டவர்கள் மரணத்தை நினைத்து அஞ்சுவதில்லை. நெருங்கி வரும் சாவை நோக்கி அணிவகுத்து நிற்பார்கள்.

மார்ட்டின் லூத்தர் கிங் அத்தகையவர்களில் ஒருவர். அமெரிக்காவில் கருப்பின மக்களின் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுத்தவர். எவ்வித அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் போராடியவர்.

1968 ஏப்பிரல் 4ஆம் நாள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முந்திய நாள் மிகப் பெரிய பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் சொன்னார்: "நமக்கு முன்னே கடினமான நாட்களைச் சந்திக்க இருக்கிறோம். அதைப் பற்றிய அலட்டல் எனக்கில்லை. மலை உச்சிக்கு வந்து விட்டேன். எல்லாரையும் போல எனக்கும் நீண்டகாலம் வாழ ஆசை தான். ஆனால் இப்போது அதைப் பற்றிய சிந்தனையே இல்லை. இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே என் ஒரே ஆசை. அவர்தான் என்னை மலை உச்சிக்கு அழைத்து வாக்களிக்கப்பட்ட பூமியைப் பார்க்கச் சொல்கிறார். அந்தப் பூமியில் நுழையும் வாய்ப்பு எனக்கு இல்லாமல் போகலாம். ஆனால் இந்த இரவில் உறுதியாக ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நாம் ஒர் இனமாக ஒருநாள் அந்த வாக்களிக்கப்பட்ட பூமிக்குள் நுழைவோம்".

தன் தலைவன் இயேசுவைப் போல் தனது சாவைக் கண்முன் கண்டார் மார்ட்டின் லூத்தர் கிங். அஞ்சிப் பின்வாங்கவில்லை. தன் இன மக்களின் விடுதலைக்காகத் துணிந்து சாவைச் சந்தித்தார், தழுவினார்.

இன்று திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு. எருசலேம் நோக்கிய இயேசுவின் வெற்றிப் பவனியைக் கொண்டாடுகிறோம். அது சாவதற் கென்றே நடந்த ஊர்வலம். அண்மையில்தான் லாசரை சாவினின்று உயிர்த்தெழச் செய்தார். அதைக் கண்டு பலர் அவர் மீது நம்பிக்கை கொண்டாலும் பரிசேயர்கள் கொலை வெறியோடு அவரது செயல்பாடு களுக்கு முடிவுகட்ட முனைந்தார்கள். "இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" (யோ.11;50) அதனால் "அவர் திருவிழாவுக்கு வரமாட்டாரோ?" என்று மக்கள் பேசிக் கொண்டனர். ஆனால் இயேசு சாவைக் கண்டு அஞ்சுபவரா? மனிதர் எல்லாரும் வாழ்வதற்கென்றே பிறந்தவர்கள் இயேசுவோ சாவதற்கென்றே பிறந்தவர் அன்றோ! "மானிட மகன்... தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே வந்தார்" (மத்.20:28) என்பதை எண்பிக்கும் நிகழ்வின் தொடக்கம்தான் குருத்து ஞாயிறு.

அன்று நடந்தது மக்களைப் பொருத்தவரை குருத்துப் பவனி, புகழ்ச்சிப் பவனி. ஆனால் இயேசுவைப் பொருத்தவரை அது கொள்கைப் பவனி, புரட்சிப் பவனி. மனித வாழ்வுக்கு அர்த்தம் தருவதே அவன் தனக்கென வகுத்துக் கொள்ளும் கொள்கைகளே! அந்த உயர்ந்த குறிக்கோளுக்காக உயிர்மூச்சையும் தியாகம் செய்வதில்தான் வாழ்வு நிறைவு காண்கிறது. அந்த நிறைவைக் கண்டவர் இயேசு.

மக்களின் சிந்தனையும் விருப்பமும் இயேசுவின் நோக்கமும் குறிக்கோளும் முற்றிலும் முரண்பட்டவை. மக்கள் உலக ஆசைகளோடு இயேசுவை அரசனாக்க நினைத்தார்கள். இயேசுவோ இறைவனின் ஆசையை நிலைநிறுத்தத் தன்னையே பலியாக்க நினைத்தார். உள்ளத்தில் முரண்பாடுகளோடு சென்றவர்கள் உண்மை வெட்ட வெளிச்சமாகும்போது இயேசு காட்டிக் கொடுக்கப்படுகிறார். அநீதத் தீர்ப்புக்கு ஆளாகிறார். சிலுவைப் பாடுகளைச் சந்திக்கிறார். கல்வாரி மரணத்தைத் தழுவுகிறார்.

எல்லோருக்கும் அரசர் இயேசுவே
இயேசுவுக்கு அரியணையோ சிலுவையே.
இதுவே குருத்தோலை ஞாயிறு சொல்லும் செய்தி.

நம்மை இயேசு பக்தர்களாக அல்ல, ரசிகர்களாக அல்ல, மாறாகச் சீடர்களாக வாழ அழைக்கிறார். பக்தன் ரசிகனாகத் தொலைவில் நின்று வியப்பவன். சீடனோ தன் தலைவனின் சிந்தைக்குள்ளே புகுந்து வாழ்பவன். பிறருக்காகத் தன்னையே அளித்து, ஏன், தன்னையே அழித்து நமக்கு வாழ்வு தந்த இயேசுவின் உண்மைச் சீடராய் உலகிற்கு அறிவிக்க வேண்டிய பணியும் நமக்குண்டு.

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன்உயிரை இழக்கும் எவருமே அதைக் காத்துக் கொள்வார்". (மார்க்.8:34,35)
 
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி

பீடத்தையும் வீதியையும் இணைக்க...

திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கிய நாள்களை இன்று நாம் துவக்குகிறோம். குருத்தோலை ஞாயிறு அல்லது, பாடுகளின் ஞாயிறு என்றழைக்கப்படும் இஞ்ஞாயிறைத் தொடர்ந்துவரும் வாரத்தை, புனித வாரம் என்று சிறப்பிக்கிறோம். குருத்தோலை ஞாயிறு, மற்றும், புனிதவாரம் என்ற இரு கருத்துக்களை மையப்படுத்தி இன்றைய சிந்தனைகளை மேற்கொள்வோம்.

முதலில், குருத்தோலை ஞாயிறு.

இன்று நாம் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: குருத்தோலை ஞாயிறு சூறாவளி 1920 (The Palm Sunday Tornado 1920). அமெரிக்காவின் Georgia, Indiana, Ohio பகுதிகளில் 1920ம் ஆண்டு, மார்ச் 28ம் தேதி, குருத்தோலை ஞாயிறன்று உருவான 38 சூறாவளிகளால் பல கட்டிடங்களும், மரங்களும் சாய்ந்தன. ஏறக்குறைய 400 பேர் இறந்தனர். 1200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

அதே வண்ணம், 1965ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி குருத்தோலை ஞாயிறன்று வீசிய மற்றொரு சூறாவளியைக் குறித்து செய்திகள் வெளியாயின. இந்த சூறாவளியில், 271 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், 1500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் பதிவான சக்திவாய்ந்த சூறாவளிகளில் இது நான்காவது இடத்தைப் பெற்றது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்தி சூறாவளிகள். சூறாவளி உருவாகும் மாதங்களில் குருத்தோலை ஞாயிறு இடம்பெறுகிறது.

குருத்தோலை ஞாயிறு - சூறாவளி இவை இரண்டையும் இணைத்துச் சிந்திக்கும்போது, பல எண்ணங்கள் உருவாகின்றன. முதல் குருத்தோலை ஞாயிறு நடந்தபோது, சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. இயற்கை உருவாக்கிய சூறாவளி அல்ல, இயேசு என்ற ஓர் இளையப் போதகரின் வடிவில் எருசலேமுக்குள் நுழைந்த சூறாவளி அது.

சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும், மரங்களை, வீடுகளை அடியோடு பெயர்த்துவிடும், அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடும். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, முதல் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள், பலவற்றை, குறிப்பாக, மதத்தின் பெயரால் நிகழ்ந்த பல தவறுகளை தலைகீழாக மாற்றின என்பதை உணரலாம்.

இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத்தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக மாறியதுபோல் இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம், இந்தக் குருத்தோலை ஊர்வலம். இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மதத்தலைவர்களின் அதிகார மையமாக விளங்கிய எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அவலங்களை சீராக்கினார். எனவே, இந்தக் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, பல வழிகளிலும் புரட்டிப்போட்ட ஒரு சூறாவளிதானே!

இந்த குருத்தோலை ஞாயிறு நம்மையும் விழித்தெழச்செய்யும் ஓர் அழைப்பாக விளங்கட்டும். நம் வாழ்விலும் இயேசு நுழைந்து, அங்கு மாற்றங்களை - அவை தலைகீழ் மாற்றங்களானாலும் சரி - உருவாக்கவேண்டுமென்று விழைவோம், வேண்டுவோம். அடுத்து, நமது சிந்தனைகளில் வலம்வரும் கருத்து, புனிதவாரம். குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா முடிய உள்ள இந்த ஏழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரமாகக் கொண்டாட அழைக்கிறார். வருடத்தின் 52 வாரங்களில், இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்கவேண்டும்? இயேசு, இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவுகூர்வதால், இதை, புனிதவாரம் என்றழைக்கிறோம். ஆனால், அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே!

நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் அவரை மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்துகொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில், உண்மை உருகுலைந்தது. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணியைப்போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.

நாம் இங்கே பட்டியலிட்ட நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றை புனிதமான நிகழ்வு என்று சொல்ல இயலுமா? புனிதம் என்ற சொல்லுக்கு, வேறோர் இலக்கணம் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகையத் துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி, வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு, அந்தச் சிலுவையில் சொல்லித்தந்தார். புனிதவாரம் முழுவதும், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய, கற்றுக்கொள்ளவேண்டிய, வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன.

புனிதவாரம் முழுவதும், குறிப்பாக, இவ்வாரத்தின் இறுதி மூன்று நாள்களில், பல திருவழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ள தாய் திருஅவை நமக்கு வாய்ப்பளிக்கிறார். இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் ஓர் ஆபத்து உள்ளது. அதாவது, இந்த வழிபாட்டு நிகழ்வுகளை, சடங்குகளாக, வரலாற்று நிகழ்வுகளாக காணும் பார்வையாளர்களாக நாம் மாறிவிடும் ஆபத்து உள்ளது. அன்று, இயேசுவின் பாடுகளுக்கு அவரை இட்டுச்சென்றது, அன்றைய சமுதாயத்தில் நிலவிய கொடுமைகள். அதே கொடுமைகள் இன்று நாம் வாழும் சமுதாயத்திலும் தொடர்ந்து நிகழ்கின்றன.

இயேசுவுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் கேள்விப்பட்டு, அவர் மீது பரிதாபம் கொள்வதோடு நமது புனிதவார பங்கேற்பு நின்றுவிட்டால், புனிதவாரம் வெறும் சடங்காக மாறிவிடும். இந்த திருவழிபாட்டு நிகழ்வுகள், இன்றைய சமுதாயக் கொடுமைகள் குறித்து சிந்திக்கவும், அவற்றை நீக்குவதற்குத் தேவையான முயற்சிகளில் நம்மை ஈடுபடுத்தவும் நமக்கு உதவினால், நம் புனிதவார முயற்சிகள் பொருளுள்ளவையாக அமையும்.

நமது கோவில்களில் நடைபெறும் திருவழிபாட்டு நிகழ்வுகள், சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு நம்மை அழைத்துச் செல்லவேண்டும். அங்கு, இயேசுவின் பாடுகளில் தொடர்ந்து பங்கேற்கும் மக்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்வதற்கு நம்மைத் தூண்டவேண்டும். அவ்வாறு இல்லையெனில், துன்பப்படும் இயேசுவைக் கண்டும் காணாமல் செல்லும் அக்கறையற்ற மனநிலைக்கு நாம் தள்ளப்படுவோம். இக்கருத்தை, Geoffrey Studdert Kennedy என்ற ஆங்கிலிக்கன் போதகர் ஓர் அழகிய கவிதையில் கூறியுள்ளார். Kennedy அவர்கள், முதல் உலகப்போர் காலத்தில், ஆங்கிலேயப் படைவீரர்கள் நடுவே ஆன்மீகப் பணியாற்றியவர்.

Kennedy அவர்கள் எழுதிய "Indifference" - 'அக்கறையற்ற நிலை' என்ற கவிதையின் வரிகள் இதோ:

இயேசு, கொல்கொதா வந்தபோது, அவரை ஒரு மரத்தில் தொங்கவிட்டனர்.
அவரது கரங்களையும், கால்களையும் ஆணிகளால் துளைத்தனர்.
தலையில் சூட்டிய முள்முடியால் ஆழமான காயங்களை உருவாக்கினர்.
அவை, கொடுமையான நாள்கள், மனித உயிர் மலிவாகிப்போன நாள்கள்.
இயேசு, பர்மிங்காம் (இன்றைய நகர்) வந்தபோது, மக்கள் அவரைக் கடந்து சென்றனர்.
அவரை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை, அவரை சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை.
தெருவோரத்தில், குளிரில் இயேசு நடுங்கிக்கொண்டிருந்ததை யாரும் உணரவில்லை.
இயேசு அழுகுரலில் கூறினார்: "இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது என்னெவென்று இவர்களுக்குத் தெரியவில்லை".
குளிர்காலப் பனி இயேசுவை மூடி, அவரை குளிரில் உறையவைத்தது.
கடந்து சென்ற மக்களெல்லாம் அவரவர் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
சுவர் ஓரமாக குளிரில் நடுங்கியபடி, 'கல்வாரியைத் தாரும்' என்று இயேசு கதறினார்.

இயேசுவின் பாடுகள் என்ற வரலாற்று நிகழ்வை வழிபாட்டு நிகழ்வாகக் கொண்டாடும் இந்த புனித வாரத்தில், கோவில்களில் நிகழும் வழிபாடுகளில் பொருளுள்ள முறையில் பங்கேற்கவும், அந்த பங்கேற்பின் பயனாக நம் வீதிகளில் நிகழும் கொடுமைகளைக் களையும் தெளிவையும், துணிவையும் பெறவும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
 
 
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
 
 
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
குருத்து ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 50:4-7)

இறைவாக்கினர் இரண்டாம் எசாயா கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவர் இறைவாக்குரைக்க அழைக்கப்பட்ட தருணத்- தில் யூதேயா நாட்டு மக்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்தனர். அடிமை நிலையில் இருந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதே இவரது பணியாக இருந்தது. எசாயா இறைவாக்குகளில் ஊழியர் பாடல்கள் (servant songs) சிறப்பிடம் பெறுகின்றன. இப்புத்தகத்தி- லுள்ள நான்கு ஊழியர் பாடல்களும் (42:1-7, 49:1-9, 50:4-11, 52:13-53:12) இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட ஊழியர் படும் துன்பங்களையும், அவர் அடையப்போகும் மாட்சியை பற்றியும் தெளிவாக விளக்குகின்றன. நாடுகடத்தலில் இஸ்ரயேல் மக்களின் துன்ப வேளைகளில் இவை நம்பிக்கை ஒளியை வீசின. இறைவாக்- கினர் எசாயாவால் முன்னுரைக்கப்பட்ட இவையனைத்தும் கடவுளின் ஊழியராகிய இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறுகின்றன. குறிப்பாக இவ்வாசகம் கடவுளின் ஊழியர் எந்த அளவுக்கு பொறு- மையோடும், கடவுள் தனக்கு உதவிக்கரம் நீட்டுவார் என்ற நம்பிக்- கையோடும், துன்பங்களைத் தாங்கிக் கொள்கிறார் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.

இரண்டாம் வாசகப் பின்னணி (பிலிப். 2:6-11)

தூய பவுல் தன்னுடைய மடல்களில் பல பகுதிகளை கிறிஸ்- தியல் விளக்கங்களுக்காக அர்ப்பணித்துளார். பரவலாகக் காணப்- படும் கிறிஸ்தியல் பாடல்களில் இந்தப் பகுதி மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. பிலிப்பிய மக்களிடையே காணப்பட்ட பொறாமை, தன்னலம், ஆணவம் ஆகியவற்றுக்கு மாற்று மருந்தாக இயேசுவின் தாழ்ச்சி எடுத்துக்காட்டப்படுகிறது. இயேசு கடவுளாயிருந்தாலும், எவ்வாறு தன்னையே ஒரு அடிமையின் நிலைக்குத் தாழ்த்தினாரோ, அதைப் போலக் கிறிஸ்தவர்களும் தாழ்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று பணிக்கிறார். ஆறு முதல் எட்டு வசனங்கள் இயேசு- வின் தாழ்ச்சியையும், ஒன்பது முதல் பதினொன்று வசனங்கள் அவரது மாட்சியையும் எடுத்துரைக்கின்றன. இயேசுவின் வாழ்க்கை மூலம் தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்ற நம்பிக்கை கீதத்தைத் தூய பவுல் இசைக்கிறார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 26:14 27:66) நற்செய்தி நூல்களிலேயே முதன் முதலாக எழுதப்பட்டது இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு பற்றிய பகுதி தான். இயேசுவின் இறப்புக்குப் பிறகு யூதர்களுக்குப் பயந்து நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடந்த சீடர்கள் இயேசுவின் உயிர்த்தெ- ழுதலுக்குப் பிறகு அவரின் அன்புக் கட்டளையை ஏற்று, எருசலேம் தொடங்கி நாடெங்கிலும் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு, பற்றிய செய்தியை அறிவித்தார்கள். இதுதான் முதன் முதலில் நற்செய்தி (Kerygma) என்றழைக்கப்பட்டது. இதைத்தான் நாம் திருத்தூதர் பணிகள் நூலிலே தூய பேதுரு, பவுல் ஆகியோரின் போதனைகளிலே காண்கிறோம். நாளடைவில்தான் இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு, போதனைகள் ஆகியவை சேர்க்கப்பட்டன. மத்தேயு நற்செய்தியாளர் தனது நூலை யூத மக்களுக்கு எழுதுவ- தால் 'இயேசுவை புதிய மோசேயாகக் காட்டுதல், பழைய ஏற்பாட்டில் முன்னுரைத்தவாறே இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறுதல்' ஆகிய யுத்திகளை இயேசுவின் பாடுகள் பற்றிய பகுதிகளில் கையாண்டுள்ளார். பிலாத்துவின் மனைவியின் கனவு, பிலாத்து தன் கைகளைக் கழுவுதல் போன்ற வேறு நற்செய்தியாளர்கள் கூறாத பகுதிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இயேசு இதில் அதிகமாகப் பேசுபவராக சித்தரிக்கப்படுகிறார்.

மறையுரை

"கல் சிற்பமாக, செதுக்கப்பட வேண்டும்,
மண் பலன் கொடுக்க, பண்படுத்தப்பட வேண்டும்.
மகன் மாட்சி பெற, துன்பப்பட வேண்டும்".


இன்றைய ஞாயிறு 'குருத்து ஞாயிறு' எனவும், 'பாடுகளின் ஞாயிறு' எனவும் அழைக்கப்படுகிறது. மாட்சி, பாடுகள் என்ற இரு வெவ்வேறு துருவங்கள் ஒரே தளத்தில் பயணிக்கின்றன. இன்றைய வழிபாடானது இந்த இரண்டு கூறுகளையும் நமக்கு அறிவுறுத்துகிறது. குருத்தோலை மகிழ்ச்சியின் அடையாளம். பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் தாமே கூடாரப் பெருவிழாவின் முதல் நாளிலே ஓலை மற்றும் தளிர்களையும், இலைகளையும் கொண்டு வந்து ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருக்குமாறு மக்களைப் பணிக்கிறார் (லேவி 23:40). மக்கபேயர் காலத்தில் அயல் நாட்டவரால் தீட்டுப்படுத்தப்பட்ட எருசலேம் கோவில் மீட்கப்பட்டு தூய்மைப்படுத்தும் விழா கொண்டா- டப்பட்டது. அந்நாளிலேயே அவர்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவர்களாய் கூடாரத்திருவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் (2மக். 10:6-8). தூய யோவான் தனக்கு அருளப்பட்ட காட்சியிலே கடவுளின் முத்திரையிடப்பட்டவர்கள் வெண்ணிற ஆடை அணிந்து கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்ததாகச் சான்று பகர்கிறார் (தி.வெ. 7:9). இவ்வாறு குருத்தோலைப் பவனி நமக்கு இயேசுவை அரசராகப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஓசான்னா கீதம் வெற்றியின் முழக்கமாக அமைகிறது. ஆலயத்தை அடைந்தவுடன் நாம் இயேசு- வின் பாடுகளைப் பற்றித் தியானிக்க அழைக்கப்படுகிறோம்.

இந்த இரு நிகழ்வுகளும் ஒரு மாபெரும் உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்த கலவை. வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சிகரங்களும் சறுக்கல்களும் நமது வாழ்க்கைப் பயணத்தில் இன்றிய- மையாதவை. பாடுகளின் வழியாகத் தான் மீட்பு உள்ளது என்ற உண்மை புலப்படுகிறது. இயேசு சிலுவை அரியணையிலே அரசராக வீற்றிருக்கிறார்.

இயேசு எருசலேமிற்குள் வெற்றி வீரராக, யூதர்களின் அரசராக நுழைகிறார். இவ்வாறு இறைவாக்கினர் செக்கரியாவின் இறைவாக்- கான, "மகளே எருசலேம்! ஆர்ப்பரி, இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர். வெற்றி வேந்தர். எளிமையுள்ளவர், கழுதையின் மேல் கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் ஏறி வருகிறவர்" (9:9) என்ற வாக்குறுதி நிறைவேறுகிறது. எருசலேம் தாவீது அரசரின் தலை நகரம். தாவீதின் மகனான இயேசு (மத் 1:1) எருசலேம் அரசராக வெற்றி நடை போடுகிறார். கபிரியேல் தூதர் அன்னை மரியாளுக்குக் கொடுத்த, "அவருடைய தந்தையா- கிய தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்" (லூக் 1:32)என்ற வாக்குறுதி இவ்வாறு நிறைவேறுகிறது. உரோமைப் பேரரசின் கீழ் பல்வேறு வழிகளில் அடிமைப்பட்டு வந்த யூத மக்கள் உரோமைப் பேரரசை வீழ்த்தி, தங்களை மீட்க ஓர் அரசர் வருவார் என்று நாள்தோறும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கிடந்தனர். அற்புதங்களையும் அருங்குறிகளையும் ஆற்றி, பசாசின் பிடியிலிருக்கும் நோயின் கொடூரத்திலும் விடுதலை அளித்த இயேசுதான் தாங்கள் எதிர்பார்த்த மெசியா என்று நம்பினர். வழிநெடு- கிலும் துணிகளையும் தழைகளையும் பரப்பி, கைகளில் குருத்தோ- லைகளை ஏந்தி, "ஓசான்னா! தாவீதின் மகன் ஓசான்னா" என்று புகழ்ச்சிக் கீதம் இசைத்தனர். ஆனால் இயேசு இம்மண்ணக அரசர்களிலிருந்து வேறுபட்டவர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள- வில்லை. இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியின் நிமித்தமே எருசலேமை நோக்கி, "இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து...." (லூக் 19:51) தன் பயணத்தைத் தொடர்ந்தார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வில்லை. லூக்கா நற்செய்தியாளர் இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணத்தை மையப்படுத்தி தன் நூலை அமைத்திருக்கிறார். தன்னுடைய பணியின் உச்ச கட்டமான சிலுவை மரணம் எருசலேமில்தான் நிகழும் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் இயேசுவே "எருசலேமே, எருசலேமே, இறை- வாக்கினரைக் கொல்லும் நகரே!... (லூக் 13:34) என்று எருசலேமுக்- காகப் புலம்பினார். பாடுகளின் வழியாகத்தான் மீட்பு உண்டு என்று இயேசு உலகுக்கு உணர்த்தினார். ஆனால் யூதர்களால் மெசியாவை துன்புறுபவராக, பாடுபடுபவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களு- டைய எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போயின.

இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணம் கடல் மணல் மேல் நடக்கும் இதமான அனுபவமல்ல. மாறாக மலை ஏறுகின்ற மலைத்த அனுபவம். அவருடைய பாதை மலர்களால் அலங்கரிக்கப்- பட்டதல்ல. மாறாகக் கல்லும் முள்ளும் வீசப்பட்ட கரடு முரடான பாதை. இத்தகைய பாதையிலே பக்தியோடு பயணம் செய்ய இன்று நாம் அழைக்கப்படுகிறோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு எருசலேம் உண்டு. நாம் பிறந்தது முதல் அந்த இலக்கை நோக்கியே நாம் பயணிக்கிறோம். இயேசுவின் பயணம் நம்முடைய இலக்கை அடைவதற்கு பல பாடங்களைக் கற்றுத்தருகிறது.

1. துன்பங்கள் தவிர்க்கப்பட முடியாதது. இலக்கைத் தொட நாம் சிலவற்றை இழந்துதான் ஆக வேண்டும். குறிக்கோளை அடைய குருதி சிந்திதான் ஆக வேண்டும். வெற்றி பெற வெறுமையை சந்தித்துத்தான் ஆக வேண்டும். துன்பமில்லாத வாழ்க்கை கானல் நீர். இயேசுவின் வாழ்க்கையைப் பாருங்கள். கருத்தரித்தது முதல் கடைசி மூச்சு வரை எத்தனை விதமான துன்பங்கள்: உடலளாவிய உபாதைகள் கனமான சிலுவை, கன்னத்தில் அறை, தலையில் முள்முடி, தேகத்தில் சாட்டையடி, தாகத்திற்கு காடி, நெஞ்சிலே ஈட்டி, கைக்கால்களில் ஆணிகள், மனதளவில் காயங்கள்-சொந்த ஊர் மக்களின் புறக்கணிப்பு, உறவினர்களின் கைவிரிப்பு, சதுசேயர், பரிசேயர்களின் வெறுப்பு, கூட்டத்தாரின் நகைப்பு, ஆன்மீக அல்லல்கள் -சாத்தானின் வலைகள், கெத்சமனித் தோட்டத்தில் மனக் கலக்கம், சிலுவை மரத்தில் பார்வையாளர்களின், கள்வனின் ஏளனங்கள்....

2. துன்பங்களிலிருந்து மீள வழி தேட வேண்டும். துன்பத்தைக் கண்டு துவண்டு விடக் கூடாது, பயந்து ஓடக் கூடாது, துன்பம் மனிதனின் நிழல் மாதிரி. மனிதன் தன் நிழலைக் கண்டு பயந்து ஓட ஓட அது அவனைத் துரத்தும். ஆனால் தைரியத்துடன் நின்று எதிர் கொள்ளும்போது அது ஒன்றும் இல்லாமல் போய்விடும். தவறி கிணற்றுக்குள் விழுந்தவன் கை, கால்களை அசைத்து பிழைக்கும் வழியைத் தேட வேண்டும். தவளை ஒன்று தவறிப்- போய்ப் பாதியளவு பால் இருந்த ஒரு பெரிய பாத்திரத்திற்குள் விழுந்தது. அதிலிருந்து வெளிவரப் பலமுறை முயன்றது. பலன் ஏதுமில்லை. ஆனால் அது தன் முயற்சியில் தளரவில்லை. மறுநாள் வரை கை, கால்களை உதைத்துக் கொண்டே இருந்த- தால் பாலின் மேலாக வெண்ணெய் பொங்கியது. வெண்ணெய் கட்டி மேலேறி நின்றது. தவளை வெளியே வந்தது.

3. துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும். ''குணம்பெற முடியா- தது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்". துன்பத்தைக் கண்டு கவலையோடு முணங்குகிறவன் துன்பத்தை அதிகரிக்கிறான். அதைப் புன்முறுவலோடு ஏற்றுக் கொள்கிறவன் துன்பத்தை எளி- தாக்குகிறான். ஏனெனில் துன்பம் மீட்பின் காரணியாக இருக்கிறது. எனவே நாம் 'எனக்குத் துன்பங்களே வேண்டாம்' என்று கேட்க வேண்டாம், 'துன்பங்களைத் தாங்கிக் கொள்ள எனக்குச் சக்தியை கொடு' என வேண்டுவோம். "துன்பங்களைச் சந்தியுங்கள். உங்களுக்குள்ளே சக்தி பிறக்கும்".

பிற மறையுரைக் கருத்துக்கள்

🕇 யூதாஸ் தன்னை காட்டிக் கொடுப்பான், பேதுரு தன்னை மறு- தலிப்பார், எல்லா சீடர்களும் தன்னை தனியே விட்டுவிட்டு ஓடிப்போவார்கள் என்று தெரிந்திருந்தும் இயேசு அவர்கள்மேல் கொண்ட அளப்பறிய அன்பால் தன்னையே உணவாகப் பானமாக சீடர்களுக்குக் கடைசி இராவுணவின்போது கையளிக்கிறார்.
🕇 கடவுள் கிறிஸ்து இயேசுவின் மனிதனை நித்தியத்திற்கும் அன்பு செய்தாலும், மனிதன் உலகம் முடியும் மட்டும் கடவுளைத் தனது பாவங்களால், வெறுத்துக் கொண்டே இருப்பான் என்பதை தான் இயேசுவின் பாடுகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன.
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

பவனிகள், ஊர்வலங்கள், பேரணிகள் நமக்குப் புதிதல்ல. இவற்றை எடுப்பவர்கள் யார்? எதற்காக இந்த ஊர்வலங்கள்? இவை கொள்கைகளுக்காக எடுக்கப்பட்டவைகளா? வெறும் பிழைப்புக் கானவைகளா? என்பதெல்லாம் நாம் அறிவோம். இன்று ஆலயத்தில் எடுக்கப்படும் பவனி எத்தகையது? இதன் நோக்கம் என்ன? எதற்காக நாம் இதில் பங்கு கொள்கிறோம்? இது ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் வாடிக்கையான நிகழ்வாக மட்டும் நின்றுவிடப் போகிறதா? இதன் உண்மையான பொருள் என்ன? முதல் பவனி எப்படி நிகழ்ந்தது? இயேசு எதற்காக அதை நிகழ்த்தினார்? அவருடைய நோக்கம் என்னவாக இருந்திருக்கும், என்று சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.

இயேசுவின் காலச்சூழல்

இந்தப் பவனி இயேசுவின் வாழ்வில் எத்தகையதொரு காலக்கட்டத்தில் நிகழ்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு கால அரசியல், சமூக, சமயச் சூழல் எத்தகைய தாக இருந்தது என்பதை ஆய்ந்துபார்க்க வேண்டும்.உரோமைப் பேரரசின் கீழ் பாலஸ்தீனம் ஆளப்பட்டு வந்த காலம் அது. பரிசேயரும், சதுசேயரும், தலைமைக் குருக்களும் தங்கள் சமயத்தை எப்படியாவது பாதுகாத்துவிட வேண்டும் என எண்ணி அதற்காக எதையும் செய்யத் துணிந்து நின்றனர் (யோவா 11:48-50). இத்தகைய காலக்கட்டத்தில் தாவீதின் காலம் முதல் அதிகாரத்தின் இடமான, ஆசீர்வதிக்கப்பட்ட இடமான யூதேயாவையும் அதன் தலைநகரமான எருசலேமையும் தவிர்த்துவிட்டு, இயேசு கிராமப் பகுதியான, விளிம்பு நிலை மக்கள் வாழ்ந்த கலிலேயப் பகுதியில் பணி செய்து சீடர்களையும் சேர்த்துக்கொண்டு எருசலேம் நோக்கிப் பயணம் போகின்றார். இவர் எதற்காக எருசலேம் வருகின்றார்? அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சியமைத்து உரோமையரை விரட்டப் போகிறாரா? சமயத்தைச் சீர்திருத்த தலைமைக்குருக்கள், வரிதண்டுபவர்களை சாடப்போகிறாரா? என அனைவரும் அச்சப்பட்டுக் கிடந்த நேரத்தில் இயேசு இந்தப் பவனியை எடுக்கிறார். இயேசு இந்தப் பவனியை எப்படி பார்த்தார்? அவருக்குத் தம்மைப் பற்றியும், தமது பணியைப் பற்றியும், இந்தப் பவனியைப் பற்றியும் எத்தகைய புரிதல் இருந்தது? என்று அறிவது அவசியம். இவற்றையெல்லாம் இயேசு நேரடியாக வாய் வார்த்தை கொண்டு விளக்கவில்லை. அங்குப் பயன்படுத்தப்பட்ட அடையாளங்கள், இந்நிகழ்ச்சி நடந்த இடங்கள், இவற்றின் மூலம் இயேசு தமது எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றார். எனவே, இயேசுவின் பவனியின் நோக்கம் புரிபட வேண்டுமானால் இயேசு பயணம் தொடங்கிய இடம், முடித்த இடம், பவனியில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் ஆகியவற்றின் உண்மைப் பொருள்களைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த வகையில் பெத்தானியா, பெத்பகே, எருசலேம், ஒலிவ மரம் மற்றும் ஒலிவ மலை, கழுதைக் குட்டி ஆகியவற்றின் பின்னணியில் உள்ள உண்மைப் பொருள்களை அதன் வழியாக இந்தத் திருநிகழ்வின் ஆழ்ந்த அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

1. பெத்தானியா

கடவுளின் கொடையின் வீடு எனப் பொருள்படும் இவ் விடத்தில் இயேசுவின் வரலாற்றின் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன (யோவா 11:1, 18, மத் 26:6, மாற் 14:3). இயேசு தன் இறுதிக் காலங்களில் பகலில் எருசலேமில் தங்கியிருந்தாலும், இரவில் பெத்தானியாவில் வந்து தங்கி விடுவார். அவருக்கு அது தங்கும் இடமாக, ஆறுதலின் இடமாகத் திகழ்ந்தது (மத் 21:17, மாற் 11:1, 11-12). இயேசுவின் விண்ணேற்றமும் இறுதியில் அங்குதான் நிகழ்ந்தது (லூக் 24:50). இயேசுவின் வாழ்வில் பெத்லகேம், நாசரேத்து எருசலேம் ஆகியவற்றிற்குப் பிறகு அவரோடு பின்னிப் பிணைந்த ஒரு நகரம் பெத்தானியா. எனவே, இயேசு இங்கிருந்து தமது இறுதிப் பயணத்தைக் கல்வாரி நோக்கித் தொடங்குகின்றார். பெத்தானியா கடவுளின் கொடையின் வீடு. ஆனால் இயேசு தம்மையே இந்த உலகிற்குக் கொடையாகத் தருவதற்கு இதோ புறப்பட்டுவிட்டார்.

2.பெத்பகே

இப்பெயர் இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் நற்செய்திப் பகுதியில் மட்டும் காணப்படுகிறது (மத் 21:1, மாற் 11:1, லூக் 19:29). இதன் பொருள் வாயின் வீடு என்பதாகும். வாய் என்பது வார்த்தையைச் சுட்டிக்காட்டுகின்றது. இயேசு தமது வாழ்வில் நற்செய்தியைப் போதித்தார். இப்போது அதை வாழப் போகிறார். "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோவா 15:13) என்று சொன்னவர் அதைச் செய்யப் போய்க்கொண்டிருக்கிறார். தாம் போதித்த நற்செய்தியாகவே மாறப்போகிறார்.

3. எருசலேம்

இதன் பொருள் 'அமைதியின் நகர்' என்பதாகும். ஆனால் அதன் வரலாற்றில் அது அமைதியைவிட அதிகமான போர் களையும், வன்முறையையும்தான் சந்தித்துள்ளது. எனவே, திருப் பாடலின் ஆசிரியர் இவ்வாறு பாடுகின்றார். "எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள். உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகையில் நல்வாழ்வு இருப்பதாக! உன்னுள் சமாதானம் நிலவுவதாக! என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகிறேன்" (திபா 122:6-8). இந்த வாழ்த்து இஸ்ரயேலர் வாழ்வில் வெறும் கனவாக, கானல் நீராகவே இருந்துவிட்டது. இயேசுவின் காலத்திலும் அமைதியற்ற நிலையில்தான் எருசலேம் இருந்தது. அதனால்தான் இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார். "இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்க கூடாதா?" (லூக் 19:41-42) என்று ஆதங்கப்படுகிறார். அதனால் வரும் அமைதியின்மையையும் முன்னறிவிக்கின்றார். இறுதியில், "ஏனெனில் கடவுள் உன்னைத்தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை" (லூக் 19:44) என்கிறார். ஆக, இயேசுவின் கண்ணோட்டத்தில் எருசலேமின் அமைதிக்காகவே தான் தந்தையிடமிருந்து வந்ததாகவும், எருசலேம் நகரத்தார் அதை அறிந்து கொள்ளாமல் போனதையும் தெளிவுபடுத்துகிறார். இப்போது அவர் எடுத்திருக்கும் இந்தப் பவனியும் எருசலேமின் அமைதியையும் அதன் மக்களின் நல்வாழ்வையும் குறிக்க எடுக்கப் படுகிறது என்பதை இயேசு உணர்ந்திருந்தார்.

4. ஒலிவமலை மற்றும் ஒலிவ மரம்

ஒலிவமரம்: இது வெற்றியின் அடையாளம். பண்டைய கிரேக்கர்கள் போரிலோ, விளையாட்டிலோ வென்றவருக்கு ஒலிவ இலைகளால் கிரீடம் வைத்துப் பாராட்டுவார்கள். விவிலியத்தில் இது இரக்கத்தின் அடையாளமாகவும், ஆறுதலுக்கும், நல் வாழ்வுக்கும் அடையாளமாகவும் இருந்தது. இயேசுவும் தம் வாழ்வில் தமது புதுமைகளின் வழியாக இந்த ஆறுதலையும், நல்வாழ்வையும் கொடுத்து வந்தார். அதன் அடையாளமே ஒலிவ இலை

ஒலிவ மலை: இது எருசலேமிற்கு அண்மையில் உள்ளது. எருசலேமிற்கும், ஒலிவ மலைக்கும் இடையே கெதரோன் பள்ளத்தாக்கு இருந்தது. செக்கரியா காலத்திலிருந்து ஒலிவ மலை மெசியாவின் வருகையோடு தொடர்புடையதாய் இருந்தது. செக்கரியா இறைவாக்கினர் இவ்வாறு கூறுகின்றார். (ஆண்டவரின் நாளில், மெசியாவின் காலத்தில்) "அந்நாளில் அவருடைய காலடிகள் எருசலேமுக்குக் கிழக்கே உள்ள ஒலிவ மலையின் மேல் நிற்கும்" (செக் 14:4). ஆக, மெசியா ஒலிவ மலையில் தோன்றி அங்கிருந்து கெதரோன் பள்ளத்தாக்கில் இறங்கி எருசலேமுக்குள் நுழைவார் என்பது இஸ்ரயேலின் நம்பிக்கையாக இருந்தது. அதனால் மெசியா நுழைவதற்கென்று எருசலேம் மதிலில் வாயில் ஒன்று அமைத்து இருந்தார்கள். இதோ இயேசுவும் அதையே செய்கின்றார். ஒலிவ மலையில் தமது பயணத்தைத் தொடங்கி, கெதரோன் பள்ளத்தாக்கு வழியாக எருசலேமுக்குள் நுழைகிறார். எனவே, தாமே வாக்களிக்கப்பட்ட மெசியா, இதுவே வாக்களிக்கப்பட்ட மெசியாவின் காலம் என்பதை உணர்த்துகின்றார்.

5. கழுதைக்குட்டி

யாரும் ஏறாத கழுதைக் குட்டியின்மீது அமர்ந்து பவனி வர வேண்டும் என்பதில் இயேசு குறியாயிருக்கிறார். அதற்கான முன் முயற்சிகளை எடுக்கிறார். இதில் ஒரு சிறப்புத்தன்மை இருக்கிறது. அதாவது குதிரைமீது வருகிறவர் போர் வீரனாக, ஆயுதம் ஏந்திய வனாக, அழிக்கவும், கொள்ளையிடவும், கொலை செய்யவும் வருகிறான். அச்சமும், வன்முறையும் அங்கு அரங்கேறும். ஆனால் கழுதைக் குட்டிமீது வருவது வேறொன்றுக்கு அடையாளம். செக்கரியா இதையும் முன்மொழிந்துள்ளார்.

"மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூறு. மகளே எருசலேம், ஆர்ப்பரி. இதோ, உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர். வெற்றி வேந்தர், எளிமையானவர். கழுதையின் மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறார்" (செக் 9:9).

எனவே, இயேசுவின் கண்ணோட்டத்தில் இது மெசியாவின் காலம். தான்தான் மெசியா, எருசலேமுக்கும் எல்லா மக்களுக்கும், அமைதியின் வழியில் வன்முறைகளைத் தவிர்த்து அருளையும், இரக்கத்தையும், நலத்தையும் தருவதற்காகத் தாம் வந்ததாக அவர் எண்ணினார். இவை அனைத்தையும் வெளிப்படுத்தவும், உணர்த்தவுமே பெத்தானியா, பெத்பகே, எருசலேம், ஒலிவ மரம், ஒலிவ மலை, கழுதைக்குட்டியெனப் பல இடங்களையும், பொருள் களையும், அடையாளங்களையும் பயன்படுத்தினார். இதை அந்த மக்கள் உணர்ந்திருந்தார்களா? நாம் உணர்ந்துள்ளோமா? இயேசுவை மெசியாவாக, அமைதியின் அரசராக நம் வாழ்வில் ஏற்போம்; அமைதியும், நலமும் பெறுவோம்.
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.

தவக்காலம் குருத்து ஞாயிறு
முதல் வாசகம்: எசா 50: 4-7

"ஆண்டவரின் ஊழியன்" என்பவரைப் பற்றி எசாயா ஆகமத்தில் 4 கவிதைகள் வருகின்றன (42 : 1-9; 49 : 1-6; 50: 4-11; 53 : 13-53 : 12). இன்றைய வாசகம் இவற்றில் மூன்றாம் கவிதையிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது. "ஆண்டவரின் ஊழியன்" எனப்படுபவர் பொதுவாக இஸ்ரயேல் இனத்தைக் குறிக்கலாம் (49 : 3). எனினும் இறைவாக்கு நிறைவேறல் முறையில் இது இயேசுவையும் சுட்டும் (லூக் 4: 17-21; மத் 3:17; திப.8:32-33; சிறப்பாக எசா 53 ம் அதி. காண்க). ஊழியன் பற்றிய கவிதைகள் பின்வரும் நாட்களிலும் விளக்கம் பெறுகின்றன.

இறைவனுக்குச் செவிமடுக்கிறார் "ஆண்டவரின் ஊழியன்"

"ஆண்டவர் என் காதுகளைத் திறந்தார்" (50 : 5) என்பதன் மூலம், தான் அவருக்குக் கீழ்ப்படிந்திருப்பதை உணர்த்துகிறார். ஆண்டவர் ஆசானாயிருக்க, ஊழியன் பிரமாணிக்கமுள்ள மாணாக்கர் ஆகிறார். "என் செவிகள் திறக்கும்படி செய்தீர்" (திபா 39:6). எனவே நான் உமக்கு அடிமையாவேன் என்பார். இறைவார்த்தைக்கு அடிபணிவதில் மட்டும் ஊழியனின் கடமை அடங்காது. தான் கேட்டதை, கற்றதை, உணர்ந்ததைப் பிறருக்கும் அறிவிப்பவனே உண்மை ஊழியன். "கற்றதை உணர்த்தும் நாவை ஆண்டவர் எனக்கு அளித்தார்" (50:4). "எமக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்" (யோவா 3:11) என்பார் இயேசு. ஊழியனின் செவிப்புலன்களை மட்டுமன்று, நாவையும் ஆண்டவர் திறக்கிறார் (50:4-5). தம் ஊழியனில் இவ்வாற்றல்களை நிறைவேற்றிய அதே இறைவன், இயேசுவிலும், நம்மிலுமே இதே முறையில் செயல்படுகிறார். ஊழியன் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அவருக்குச் சாட்சியம் பகர்கிறார். கிறிஸ்துவும் "தம் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அன்பில் நிலைத்திருக்கிறார்'' (யோவா 15: 10; 17:7). "நீர் எனக்கு அறிவித்ததையே நான் அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்" (யோவா 17 : 9) என்பார். இறைவார்த்தை நமக்கு விவிலியத்திலிருந்து மட்டுமன்று, பல இடங்களிலிலுமிருந்து, சிறப்பாக அவதிப்படுவோர், அல்லல்படுவோர், அநீதியால் அழிக்கப்படுவோரிடம் இருந்தே வருகிறது. இவற்றிற்குச் செவிமடுக்கிறோமா? இவை நம்மைச் செயலுக்குத் தூண்டுகின்றனவா? "அரியதாம் சொல்லியவண்ணம் செயல்."

இறைவனுக்காகத் துன்புறுகிறார் "ஆண்டவரின் ஊழியன்"

"துன்புறுத்துகிறவர்களுக்கு என் உடலைக் கையளித்தேன்" (50:6) என்பது ஊழியனின் சொற்கள். ஆம், தான் குற்றமில்லா நிலையிலும் தண்டனைகளை ஏற்கிறார். "தன்னை அறைபவர்க்குக் கன்னத்தைக் காட்டட்டும், நிந்தைகளால் அவன் நிரப்பப்படட்டும்" (புலம் 3:28-30) என்பது இவரில் நிறைவேறுகிறது. இறைவனுக்காகத் துன்பப்படுவது என்பது இறைமக்களுக்காகப் பயன்படும் துன்பமே. "மெய்யாகவே அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார். நம்முடைய நோய்களைச் சுமந்து கொண்டார்..... நம் பாவங்களுக்காகவே அவர் காயப்பட்டார்.... நம் அனைவருடைய அக்கிரமங்களையும் ஆண்டவர் அவர்மேல் சுமத்தினார்" (எசா 53:3-8). ஊழியனும் சரி, கிறிஸ்துவும் சரி, பிறர் பாவங்களுக்காக தம் உயிரையே கையளிக்கின்றனர். "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற் 10:45). இவ்வாறு துன்பத்தை விரும்பி ஏற்கும்போது 'ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணை நிற்கிறார்" (எசா 50:7). இயேசுவின் உயிர்ப்பிலே இறைவனின் இத் துணை எவ்வளவு பொருத்தமாகப் பொருள் பெறுகிறது? நாமும் இயேசுவைப் போன்று "துன்புறும் ஊழியர்களாக" இருப்போமா? துன்ப துயரங்களில் இறைவனின் கரத்தைக் காண்போமா? "கடவுளாகிய ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார்" என்று கூறுவோமா? "உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை" (பாரதி) என்று கூறக்கூடிய திண்மையைப் பெறுவோமா? கிறிஸ்துவின் பாடுகளே என்னை உறுதிப்படுத்தும்.

ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார்.
இரண்டாம் வாசகம் : பிலிப் 2:6-11

கிறிஸ்துவின் தாழ்ச்சியையும் மகிமையையும் எடுத்துக் கூறும் இன்றைய வாசகம் ஆதித் திருச்சபையில் வழக்கிலிருந்த ஒரு பாடலாயிருக்கலாம் என்பது பலரின் எண்ணம். பவுலடியாரே இதை எழுதியிருக்கலாம் என்று கூறுவோரும் உளர். பாடலின் முதற் பகுதி (2:6 -8) கிறிஸ்துவின் தாழ்ச்சியையும் (Kenosis), இரண்டாம் பகுதி (2:9-11) அவருடைய மகிமையையும் (Glory) எடுத்துக் கூறுகிறது. தாழ்வே உயர்வுக்கு வழி; தாழ்வின்றி உயர்வில்லை என்பது பெறப்படுகிறது
.
இயேசுவின் கீழ்ப்படிதல்

இயேசு இறைமகன். "தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாகவும் இருந்தது" (யோவா 1:1). அவர் கட்புலனாகாக் கடவுளின் சாயல்... அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர் (கொலோ 1 15 - 18). எனினும் இயேசு இவ்வுலகிலே கடவுளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பாதவர் போன்று, மனித உரு எடுக்கிறார். முழுமையான கடவுள் வெறுமையென்னும் நிலைக்கு வருகிறார். அவர் மனிதனாக மட்டும் பிறக்கவில்லை; அடிமைத் தன்மையை ஏற்கிறார் (எசா 52:13 - 53:12; கலா 4:1-5). "எல்லாவற்றிலும் நம்மைப் போல் சோதிக்கப்ட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர்" (எபி 4:15; 2:17 -18). அடிமைகளுக்கும் கொலை காரருக்கும் கொடுக்கப்படும் தண்டனையான சிலுவையையும் விரும்பி ஏற்கிறார். "அவர் இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்" (எபி 5:8). இயேசுவின் இத்தாழ்ச்சியும் கீழ்ப்படிதலும் நமக்கு மாதிரிகையாயிருக்க வேண்டும். "கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றார்" (1 பேது 2:21) என்பார் பேதுரு. கிறிஸ்துவுக்காக, நமது பாவங்களுக்குக் கழுவாயாக, பிறர் தம் பாவங்களிலிருந்து விடுதலையடைய நாமும் துன்ப துயரங்களை விரும்பி எற்றுக்கொள்வோமா?

கிறிஸ்துவின் மகிமை

கிறிஸ்து துன்ப துயருற்றுப் பாடுகள் பட்டதனாலே தான் இறைத் தந்தை அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்துகிறார். பாடுகளின்றி இயேசுவுக்கு மகிமை கிடையாது. துன்பமின்றி நமக்கும் மீட்புக் கிடையாது. "நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்தது போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்கு பெறுவீர்கள்" (2 கொரி 1:7) என்பது முழுக்க முழுக்க உண்மை. விதை தன்னையே அழித்துக்கொள்ளும் போது தான் அது செடியாக வாழ்வு பெறுகிறது. தன்னுடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் இயேசு இறைத் தந்தையால் உயர்த்தப்பட்டு, "ஆண்டவர்" என்னும் பெயர் பெறுகிறார் (2:11). அவருக்கு முன் மூவுலகும் மண்டியிடுகின்றன (2; 10). ஆம், இறந்த இயேசுவிலே, சிலுவை மரத்தில் யாவராலும் புறக்கணிக்கப் பட்டுத் தொங்கும் இயேசுவிலே, மூவுலகும் படைத்த இறைவனைக் காண வேண்டும். "ஆதியன் அந்தன் நடுவாகி அல்லானை" காண வேண்டும். "ஆக்குவான், காப்பான் அழிப்பான், அருள் தருவானாம்" ஆண்டவனைக் காண வேண்டும் (திருவா. சிவபுராணம்). "இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தாரென நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்" (உரோ 10:9). அதே வேளையிலே "தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டாலன்றி வேறு எவரும் 'இயேசுவே ஆண்டவர்' எனச் சொல்ல முடியாது" (1 கொரி 12:3) என்பதையும் உணர்வோம்.

இன்று, குருத்துத் திருநாள். எருசலேம் மக்களோடு சேர்ந்து நாமும் "தாவீதின் மகனுக்கு ஓசான்னா; ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக, உன்னதங்களில் ஓசான்னா" (மத் 21: 9) என்று உயிர்த்த இயேசுவைக் கண்முன் வைத்துப் பாடுவோம்; அவரைச் சிலுவைச் சாவிலிருந்து பிரித்துவிடாது பாடுவோம். ஆம், சிலுவையிலே தான் உயிர்ப்பு.

சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவர் ஆனார்.
நற்செய்தி : லூக் 19 : 28 - 40
(பவனிக்கு முன்)

திருப்பலி வாசகத்தில் வரும் பாடுகளின் வரலாற்றிற்கு குறிப்புகள் தராது, திருப்பவனியில் வாசிக்கப்படும் வாசகங்களில் இரண்டிற்கு மட்டும் விளக்கம் தரப்படுகிறது (மாற்கு 11: 1- 10 லூக் 19: 28 -40). இவற்றையே 3 ஆண்டுகளுக்கும் பயன்படுத்தலாம். குருத்துத் திருவிழா துக்கத்தையும் (இயேசுவின் பாடுகள்) மகிழ்ச்சியையும் (இயேசுவின் உயிர்ப்பு) நம் கண்முன் வைக்கிறது.

இயேசு எருசலேம் போகிறார்

இயேசுவுக்கு எருசலேம்தான் குறிக்கோள். ஏனெனில் அங்குதான் "அவரது இறுதிப் பயணம்" நிறைவேறப்போகிறது (9:31); அங்குதான் "மனுமகனைக் குறித்து இறைவாக்கினர் எழுதியதெல்லாம் நிறைவேறும்" (18:31); அங்குதான் "கடவுளின் அரசு வெளிப்படும்" (19: 11); "இறைவாக்கினர் எருசலேமுக்கு வெளியே மடிவது முறை ஆகாது' (13:33). எனவே வருவது துன்பமோ, இன்பமோ, இயேசு வைத்தகண் வாங்காது "எருசலேமுக்குச் செல்ல முனைந்து நிற்கிறார்" (9: 51). என்னே இயேசுவின் துணிவு? "எருசலேமே, இறைவாக்கினரைக் கொன்று, உன்னிடம் அனுப்பப்பட்டோரையும் கல்லால் எறியும் எருசலேமே" (13 : 34) என்று இயேசு வருத்தப்பட்டுக் கூறினும், தம் பயணத்திலேயே குறிக்கோளாயிருக்கிறார். கிறிஸ்துவ வாழ்வு ஒரு பயணம் தானே! அதுவும் விண்ணக எருசலேம் நோக்கிய பயணம் தானே! எனினும் வழியிலே இடையூறுகள் கண்டு, இன்னல்கள் கண்டு தடம்மாறி விடுகிறோமே! "கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசுபெற வேண்டி இலக்கை நோக்கி முனைந்து ஓடுகிறேன்" (பிலி 3:14) என்ற பவுலடியாருடைய மாதிரிகையைப் பின்பற்றுவோமா?

மக்களின் புகழ்ச்சி

"ஆண்டவருக்குத் தேவை" (19:31. 34) என்றவுடனே, உரிமையாளர் தம் கழுதையை இயேசுவின் பணிக்கு அனுப்புகின்றனர். கழுதைமேல் பவனி வரும் இயேசுவிலே, ஆண்டவரை, தம் அரசரைக் கண்டு மக்கள் வாழ்த்தி ஏத்துகின்றனர் (19; 38). ஆண்டவர் பணிக்கு நம்மை, நம் உடைமைகளை முன்வந்து கொடுக்கின்றோமா? ஆண்டவரின் அற்புதச் செயல்கள் அன்றாடம் நம் வாழ்விலே நடந்தேறுவது கண்டு அவரை வாயாறப் புகழ்கிறோமா? "ஒரு நாமம் ஒருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ" (திருவா: திருத்தெள்ளேணம்).

பரிசேயர் பொறாமையும் கோபமும்

நல்லவை கண்டு, நல்லார் கண்டு, மனமகிழார் பொல்லார். பரிசேயரும் அவ்வாறே நடக்கின்றனர். "போதகரே, உம் சீடர்களைக் கண்டியும்" (19 : 39) என்பர். நாமும் பல தருணங்களில் இப்பரிசேயரை ஒத்திருப்ப தில்லையா? நாம் செபிப்பதில்லை; நாம் பிறர்க்கு உதவுவதில்லை; நாம் நற்செயல்கள் புரிவதில்லை. அதே வேளையிலே செபிப்போரை, அன்பு காட்டுவோரை, நற்செயல் புரிவோர்களைக் கண்டு குறை கூறுவ தில்லையா? மனம் வெதும்புவதில்லையா? நல்லது செய்யாவிடினும் அல்லது செய்யாதிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டாமா? "உன் கண்ணிலிருக்கும் மரக்கட்டையை எடுத்தெறி; பிறகு உன் சகோதரன் அல்லது சகோதரியின் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க நன்றாய்க் கண் தெரியும்" (லூக் 6:42).

கற்கள் இறை புகழ் பாடல்

பரிசேயர் பரமனைப் பாடாதிருக்கலாம்; இயேசுவைப் புகழ்ந்தேத்திய மக்களே சில நாட்களுக்குப் பின் "அவரைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" (லூக் 23 : 21) என்று அவர்மேல் பழிசாற்றலாம். ஆயினும் விண்ணும் மண்ணும், மரமும், செடி கொடிகளும், கற்களும் மணலும், மிருகங்களும் பறவைகளும், ஊர்வனவும் நடப்பனவும், நீரும், நிலமும் - இயற்கை முழுவதுமே - இறைவனை ஏத்திக் கொண்டேதான் இருக்கும். "அவற்றிற்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை... எனினும் அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்று அடைகின்றது" (திபா 19:3- 4). நாம் இக்குரலைக் கேட்கிறோமா? கேட்டு, அவற்றின் இசையோடு நம் குரலையும் சேர்த்துப் பாடுகிறோமா?

இது ஆண்டவருக்குத் தேவை.அரசராக வரும் ஆண்டவர் வாழி.
நற்செய்தி : மாற் 11:1-10

(பவனிக்கு முன்)
இன்று நமது கரங்களில் குருத்தோலை ஏந்தி இயேசுவை நம் அரசராக ஏற்று வழிபடுகின்றோம். ஆண்டவர் ஆடம்பரத்துடன் சீடர்கள் புடைசூழ எருசலேமில் நுழைந்த நிகழ்ச்சியின் மறு பதிப்பே இன்றைய பவனி. சோகமும் மகிழ்ச்சியும் கலந்து காணப்படும் விழா இது. பாவத்தளையில் இருந்து, சாத்தானின் பிடியினின்று நம்மை விடுவிக்கக் கல்வாரியை நோக்கி இயேசு செல்லுகிறார் என்பதிலே மகிழ்ச்சி; அதே வேளையில் தன் பகைவர்களுடன் அவர் தொடுக்கும் அப்போரிலே தன்னையே பலியாக்கிக் கொள்வாரே என்பதில் வேதனை. இத்தகைய உணர்வுகளுடன் புனித வாரத்தைத் தொடங்குவோம்.

முதல் குருத்து ஞாயிறு

எகிப்திய அடிமைத் தனத்தினின்று இஸ்ரயேல் இனம் மீட்கப்பட்டதை நினைவு கூறும் விழாவே பாஸ்கு விழா. அவ்வேளையில்தான் இயேசுவும் சாத்தானின் பிடியினின்று நம்மை மீட்க முன் வருகின்றார். ஆண்டவரின் பொன் மொழிகளையும், புதுமைகளையும் அறிந்த மக்கள் அவரை யூதப் பின்னணியில் எடை போடுகின்றனர். உரோமைய ஆட்சியை அகற்றி, மீண்டும் இஸ்ரயேல் ஆட்சியை நிறுவும் மாவீரன் - பேரரசன் - என்று எண்ணி, ஆரவாரத்துடன் அவரை அழைத்துச் செல்லுகின்றனர். எருசலேமுக்கு அருகில் உள்ள பெத்பகே என்ற ஊரிலிருந்துதான் பவனி புறப்பட்டது. இதுவரை யாரும் பயன்படுத்தாத கழுதைக்குட்டி ஆண்டவரிடம் கொண்டு வரப்படுகின்றது. அதன்மீது தங்கள் போர்வைகளைச் சேணம்போல் போட்டு ஆண்டவரை அமரச் செய்கின்றனர். அரசராக வருபவரின் கால்களில் தூசி படியலாமா? (2 அரச 9:13) எனவே பாதையில் துணி விரிக்கப்படுகிறது. தளைகள் தூவப்படுகின்றன. "ஆண்டவரே நம்மீது ஒளி வீசினார்; மரக்கிளைகள் கையிலேந்தி விழாப் பவனி நடத்துங்கள்" என்கிறது திருப்பாடல் (118:27). அதிகார ஆணவம் கொண்ட அரசனைப் போல் அல்ல, அன்பும் சாந்தமும் உருவான ஆன்மீகத் தலைவனைப் போல், இழிவாக எண்ணப்படும் கழுதை மேல் ஏறிப் பவனி வருகிறார் இறைமகன்.

சீயோன் மகளே மகிழ்ந்து களிகூறு;
எருசலேம் மகளே ஆர்ப்பரி;
இதோ உன் அரசர் உன்னிடம் வருகின்றார்;
அவர் நீதியுள்ளவர்; வெற்றி வேந்தர்;
கழுதையின் மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறார் (செக் 9: 91.


"நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவர்" என்கிறார் இயேசு (மத் 18: 29). இயேசுவே இப்பவனியை ஏற்பாடு செய்கிறார். அவர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா தானே என்பதைப் பகிரங்கமாக அறிவிக்கவே இந்த ஏற்பாடு. எனினும் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு இது ஒத்துவராததால், இன்று ஓசான்னா பாடினவர்கள் பெரிய வெள்ளியன்று "இவரைக் கொல்ல வேண்டும்" என்று கூக்குரலிட்டனர். என்எதிர்பார்ப்புகள் என்ன? எப்படி நான் இயேசுவை வரவேற்கிறேன்?

இறை புகழ்

பவனி ஆரம்பமானது; உடனிருந்தவர் உரக்கக் கூவினர்: "தாவீதின் மகனுக்கு ஓசான்னா" (மத் 21:9), "ஆண்டவர் பெயரால் வருபவர் வாழி", "இஸ்ரயேலின் அரசர் வாழி" (யோவா 12: 13). ஓசான்னா என்ற எபிரேயச் சொல்லுக்கு ஓ! காப்பாற்றுமே என்பது பொருள் (காண் 2 சாமு 14:4; 2 அரச 6:26). அபயக்குரல் எழுப்பும் பொழுதும், "போற்றி, வாழி" என்று புகழ் பாடும்பொழுதுமே இச்சொல்லைப் பயன்படுத்தினர். இயேசு ஒருவரே நம்மை மீட்கக் கூடியவர்; அவரது புகழ் என்றும் நம் நாவில் ஒலிக்க வேண்டும். அவரது பாடுகளின் வேளையிலும் நமது விசுவாசக் கண்ணால் எளிய கோலத்தில் பவனி வரும் கிறிஸ்துவில் தெய்வத் திருமகனைக் காண வேண்டும்.

ஓசான்னா, ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி.
 
 தித்திக்குதே - ஞாயிறு மறையுரை - அருட்பணி அ. ஸ்தனிஸ்லாஸ்
குருத்து ஞாயிறு

பத்தாவது மாடியிலே குடியிருந்த வீட்டில் மூன்று பேர் தாய், தந்தை, பத்து வயது மகன். அன்று தாயும், தந்தையும் அவசர வேலையாக வெளியே சென்றார்கள். மகன் மட்டும் வீட்டிலிருந்தான். எதிர்பாராத விதமாக வீடு தீப்பற்றிக்கொண்டது. தாயும், தந்தையும் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்தார்கள். தீக்கொழுந்துவிட்டு எரிகிறது. எங்கும் ஒரே புகைமயம். மகனின் அழுகுரல் கேட்டது. 'என்னைக்காப்பாத்துங்க' என்ற மகனின் அபயக்குரல் கேட்டு கலங்கினார்கள். புகையால் யாரும் வீட்டை நெருங்கமுடியவில்லை. அப்பா கீழேயிருந்து கத்தினார். "மகனே படுக்கை அறை ஜன்னலைத்திறந்து கீழே குதி. நாங்கள் உன்னைக் காப்பாற்றுகிறோம்." "அப்பா நீங்க எங்க நிற்கிறீர்கள் என்றே தெரியல. எங்கும் ஒரே புகை. எப்படி குதிக்கிறது," எனப் பயந்தான் மகன். "மகனே! நீ பயப்படாதே. நானும் உன் அம்மாவும் சரியாக ஜன்னலுக்குக் கீழேதான் நிற்கிறோம். நீ தைரியமாகக் குதி. நாங்கள் உன்னை நிச்சயம் காப்பாற்றுவோம்," என அப்பா தைரியம் சொல்ல, அப்பாவும் அம்மாவும் எங்கே நிற்கிறார்கள் என்று தெரியாவிட்டாலும், அப்பாவின் குரல் வந்த திசையை நோக்கிக் குதித்தான். அப்பா அவனைத் தாங்கிப்பிடித்துக் காப்பாற்றினார்.

அப்பாவின் குரல் வந்த திசையை நோக்கித் தைரியத்துடன் குதித்த அந்தச் சிறுவன் கொண்டிருந்த மனநிலைக்குப்பெயர்தான் விசுவாசம். தம் தந்தை தன்னைக் காப்பாற்றுவார் என்ற உறுதியான நம்பிக்கையில் குதித்தான் மகன். அவன் வாழ்வு காப்பாற்றப்பட்டது. ஒளி பிறக்கும், வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளத்தோடு இருளுக்குள், மரணத்திற்குள் குதித்தல் தான் விசுவாசம். என்னைப் படைத்தக்கடவுள், என்னை ஒரு குறையும் இல்லாமல் காப்பாற்றி வருகின்ற கடவுள், எந்த நிலையிலும் என்னைக் கைவிடமாட்டார் என்ற உறுதியான அசைக்கமுடியாத மனநிலையைத்தான் விசுவாசம் என்கிறோம். எனக்கு என்ன நடந்தாலும், எது நடந்தாலும், எப்படி நடந்தாலும் அது ஆண்டவரின் விருப்பப்படித்தான் நடக்கிறது என்பதை உணர்ந்து, அவரின் திருவுளத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வாழும் வாழ்வுதான் விசுவாசவாழ்வு. அப்படிப்பட்ட விசுவாசவாழ்வை வாழ்ந்து காட்டிய இயேசுவின் ஆடம்பர எருசலேம் நுழைவு விழாவைத்தான் குருத்து ஞாயிறு விழாவாகக் கொண்டாடுகிறோம். "என்னை அனுப்பினவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதே எனது பணி" என்ற ஏசு, தந்தை தனக்கு ஒப்படைத்த பணியை நிறைவேற்ற எருசலேம் செல்கிறார்.

இயேசுவின் ஆடம்பர எருசலேம் நுழைவு:

குருத்து ஞாயிறு:
புனிதக்காலத்தின் நுழைவாயில் குருத்து ஞாயிறு. தவக்காலத்தின் உச்சக்கட்டம்; திருப்பாடுகளின் தொடக்கம். ஏசுவின் பணிவாழ்வு ஒரு லட்சியப்பயணம். அந்த லட்சியப்பயணத்தில் எருசலேம் மட்டுமே அவரது இலக்கு. அவரது பணி முழுவதும் எருசலேம் நோக்கியதாக அமைகிறது. "ஏசு தாம் விண்ணேற்படையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமுக்கு அவர் செல்ல முனைந்து நின்றார்". லூக் 9:51. யூதர்கள் தங்களின் எல்லா எதிர்பார்ப்புகளும், உடன்படிக்கையின் வாக்குறுதிகளும் இறுதியாக எருசலேமில்தான் நிறைவேறும் என நம்பினர். அவர்கள் சார்பாக முடியவிருக்கும் இறுதியுகப்போர் எருசலேமின் நுழைவில் அமைந்துள்ள ஒலிவ மலையில் நிகழும், அந்நாளில் ஆண்டவர் உலகம் முழுவதற்கும் அரசராவார். சக் 14:4-11. எனவே இறுதிகால நிறைவு நிகழ்ச்சியில் ஒலிவ மலை குறிப்பிடப்படுகிறது. எருசலேம் எதிர்ப்பார்பின் நகரமாகவும், இறுதி நிகழ்வுகளின் இடமாகவும் யூதர்கள் கருதிவந்தனர்.

பழைய ஏற்பாட்டின் நிறைவாக்கமாக வந்த ஏசுவின் வாழ்வும்,

பணியும் எருசலேமில்தான் உச்சக்கட்டத்தை அமையவேண்டியிருந்தது. மோயீசனும் (சட்டமும்) எலியாசும் நிறைவேறப்போகின்ற அவரின் இறுதிப்பயணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். லூக்9:30-31. இவ்வாறு எருசலேமில் நடக்கவிருந்த இறுதிக்கட்ட நிகழ்வுகளின் தொடக்கக்கட்டமாக ஏசுவின் எருசலேம் நுழைவு அமைந்துள்ளது.

"எருசலேமில் உள்ளவர்கள் இந்நாட்களில் நடந்ததை அறியாதவர் யார் இருக்க முடியும்," லூக் 24:18 என எம்மாவுஸ் சென்ற சீடர்கள் விளக்கும் அளவுக்கு எருசலேமில் பெரிய பெரிய நிகழ்வுகள் நடந்தன. மீட்பும் விடுதலையும் நமக்கு உண்டு என்றால், நமது விசுவாசம் அர்த்தமுள்ளது என்றால், மோயீசன் முதல் இறைவாக்கினர் அனைவரும் முன்னுரைத்தபடி மெசியா பாடுகள் பட்டன்றோ மகிமை அடையவோண்டும் லூக் 24:26-27. இத்தகைய இன்றியமையாத அருள் மறை நிகழ்ச்சிகள், இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு பாஸ்கா செயல்-நம் விசுவாசத்தின் கொடுமுடியாகவும், நிறைவாக்கு இறுதிகட்டமாகவும் எருசலேமில் நிகழ்ந்தன. இயேசுவும் இதற்காகவே தம் நகரான எருசலேமுக்கு எழுந்தருளினார்.

குருத்துப்பவனி: எருசலேம் நிகழ்வுகளுக்கு நடுநாயகராம் ஏசுவை வரவேற்க கூட்டம் கூடியது. எகிப்தில் முதன்முறை நிகழ்ந்த 'பாஸ்கா அனுபவம்' ஒவ்வொரு ஆண்டும் 'நினைவாகவே' கொண்டாடப்பட்டது. ஆனால் பழையது அனைத்தையும் நிறைவாக்கக்கூடிய நமது பாஸ்கா பலி எருசலேமில் நிறைவேற இருந்தது. "கிறிஸ்துவே உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறி. ஆகையால் விழாக்கொண்டாடுவோம்." 1கொரி 5:7. எனவே பாஸ்கா திருவிழாவிற்கு வந்த பெரும் கூட்டம், இயேசு எருசலேமுக்கு வருகிறாரெனக் கேள்வியுற்று, விழா கொண்டாட அவரை எதிர்கொண்டுபோகிறது. யோவா 12:12-13. இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு எனும் மறைநிகழ்ச்சிகள் முழுமைபெற இருந்தது. இதில் இணைந்தவர்கள் எல்லாரும் அடையாளம் ஏந்தி அறிக்கையிட்டு சொல்வதைக் காண்கிறோம். அந்த அடையாளம்தான் குருத்தோலைகள். இயேசுவின் எருசலேம் நுழைவு உலகமனைத்தும் மகிழவேண்டிய தருணம் என்பதை குருத்துக்கள் நினைவூட்டுகின்றன.

குருத்து: குருத்தோலை வெற்றியின் அடையாளம். ஆதிக்கிறிஸ்தவர்கள் கல்லறைகளில் குருத்தோலையை வைத்தனர். எதற்காக? கிறிஸ்து சாவின்மீது வெற்றிக்கொண்டு உயிர்த்ததுபோல, இவர்களும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதற்கான அடையாளமாகத்தான். குருத்தோலை உயரந்து நிற்பதுபோல, நம் இதயங்களும், எண்ணங்களும் உயரணும் என்பதை வெளிப்படுத்தத்தான் குருத்தோலை பவனி.

ஒலிவக்கிளைகள்: நோவா காலத்து வெள்ளைப்பெருக்கு, பூமீயின் முகத்தைப்புதுப்பித்து, புதுப்படைப்பாக அனைத்தையும் உருமாற்றியது. இனி அழிவு இல்லை என்ற நம்பிக்கையை கொண்டுவந்த புறா, ஒலிவ மரத்தின் கிளையொன்றை அலகில் கவ்விக்கொண்டு வந்தது. தொ.நூ.8:11. அழுகைக்கும், அழிவிற்கும் உட்பட்டிருந்த படைப்பு, இனி விடுதலைக்கு கடந்து செல்ல இதோ இயேசுவின் தலைமையில் புறப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கை முழக்கமிடும் பவனி இது. ஒலிவ மரம் தேவர்களும், மனிதர்களும் பயன்படுத்தும் செழுமையான மரம். இறையரசின் செழுமை, கொழுமை, வளமை, முழுமையை முன்னறிவிக்கிறது. உயிர்ப்புக்கு இன்று துவக்கவிழா.

கழுதைமேல் பவனி:
பாலஸ்தீன நாட்டில் கழுதைக்கு சிறப்பான முக்கியத்துவம் உண்டு. போர்க்காலங்களில் குதிரைகளைப் பயன்படுத்திய அரசர்கள், போர்முடிந்து அமைதியான நாட்களிலே கழுதைமீது பவனி வந்தார்கள். கழுதை அமைதி, சாந்தம், சமாதானத்தின் சின்னம், இயேசு சாந்தத்தின் உருவாக, அமைதியின் அரசராக, சமாதானத்தின் தூதுவராக, துன்புறும் ஊழியனாகத் தம்மையே தாழ்த்தி அரச பவனி வருகிறார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற மனிதனாக உருவெடுத்த இயேசு, தன்னை ஆண்டவரின் ஊழியனாகத் தம் சொல்லாலும், செயலாலும் எண்பித்து காட்டினார். பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்காகத் தம் உயிரையும் அளிக்க வந்த இயேசு, இதோ சமாதானத்தின் தூதுவராக, எளிமையும், சாந்தமும் நிறைந்த விநோத அரசராகச் சக் 9:9 கழுதையின்மீது அமர்ந்து எருசலேம் நுழைகிறார்.

எருசலேம் பவனி: பவனி என்றால் மக்கள் குதூகலமாககூடி, சாலைகளிலே திரண்டு செல்ல அரசனோ அல்லது விழா நாயகனோ பவனியின் இறுதியில் ஆரவாரமாக, ஆடம்பரமாக அழைத்து வரப்படுவார். ஆனால் இந்தப் பவனி ஒரு வித்தியாசமான பவனி. தாவீதின் மகன் என்று போற்றப்பட்ட இயேசு பவனியின் முன் வழிநடக்க, உலகம் அனைத்தையும் தமக்குப் பின்னால் இழுத்துக் கொண்டும், இயக்கிக்கொண்டும் எருசலேம் நோக்கி விரைகிறார். இது ஒரு கொள்கை வீரனின் லட்சியப்பயணம். இப்பயணத்தில் ஒடுக்குவோருக்கும், ஆணவக்காரர்களும் இடமில்லை. நலிவுற்று, ஒடுக்கப்பட்டு, உரிமையிழந்து, நிற்கிறவர்களின் பிரதிநிதியாக ஏசு எருசலேம் நோக்கிப்புறப்படுகிறார். திக்கற்று, திசையற்று, வக்கற்று, வகையற்று நிற்கும் மக்கள் இயேசுவைப்பின் தொடர்கிறார்கள்.

இந்தப்பயணம் எருசலேம் கோட்டைகளை வளைத்து ஆட்சியைப் பிடிக்கும் பயணமல்ல. தவறுகளைச்சுட்டிக்காட்டி, உரிமைகளை நிலைநாட்டத் தன்னையே பலியாக்கப்போகும் ஒரு செம்மறியின் பயணம். கூட்டமோ இக்கால அரசியலார்கள் கால்நடைகளைப் போல லாரிகளில் ஏற்றிவரப்பட்ட கூட்டமல்ல. மாறாக எழுச்சி நாயகனை எதிர்கொண்ட கூட்டம். மனித நேயத்தைத் தேடிய புதிய ஆண்மீகம் படைத்த எழுச்சிமிகு கூட்டம்.

எருசலேமை நோக்கித் தம் மரணத்தின் வழியாய் உயிர்ப்பை நோக்கி இழுக்கப்பட்டு, இயக்கப்பட்டு முனைந்து கொண்டிருக்கும் ஏசுவின் புரட்சிப் பேரணியில் இணைய விரும்பும் செம்மறியின் தோழர்கள் நாம். இவர்கள் தங்கள் ஆடைகளைச் செம்மறியின் இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கிக்கொள்ள, பாஸ்கா பலியிடத் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு மரித்தல், வெறுமையாக்குதல், இழத்தல், மடிதல் வழியாக உயிர்ப்பு, வெற்றி, அமைதி, சமாதானம், அன்பு, நீதி, சமத்துவம் உணர்வு கொண்ட புதிய உலகம் கண்டிட இயேசுவுடன் எருசலேம் நுழையலாம். இதன் நிறைவாக ஒருநாள் விண்ணக எருசலேமுக்கு வந்துசேருவோம்.

தமக்கு என்ன நடக்கும் என்று எல்லாம் தெரிந்துதான் இயேசு எருசலேம் செல்கிறாரா?

தமக்கு என்ன நடக்கும், நடக்கப்போகிறது என்பதை எல்லாம் முற்றிலும் அறிந்தவராகத்தான் இயேசு எருசலேம் செல்கிறார். தான் சிலுவைச்சாவுக்கு கையளிக்கப்படப்போவது அவருக்குத் தெரியும், தன்னை அவரது சீடருள் ஒருவர் யூதாஸ் காட்டிக்கொடுக்கப்போவது தெரியும்; அவர் பிடிபடும்போது சீடர்கள் எல்லாரும் ஓடிப்போவார்கள் என்பது தெரியும்; பேதுரு அவரை மும்முறை மறுதலிப்பார் எனவும் தெரியும்; தலைமைச்சங்கம் அவருக்கு மரணதண்டனை அளிக்க பொய்குற்றம் சுமத்துவார்கள் எனத் தெரியும்; தனக்கு மரண தண்டனை அளிக்க ஆளுனர் பிலாத்தை வலியுறுத்துவார்கள் என்பதும் தெரியும்; தன்னால் சீசரும் பிலாத்துவும் நண்பராவர் எனத் தெரியும்; மக்கள் பரபாசை விடுவிக்கச்சொல்லி, தன்னை சிலுவையில் அறையவேண்மென மக்கள் கூக்குரலிடுவர் என்பது தெரியும்; ஆளுனன் பிலாத்து தன் பதவிக்காகக் கைக்கழுவிவிடுவான் என்பதும் தெரியும்.......எல்லாம் தெரிந்துதான் இயேசு எருசலேம் நுழைகிறார். தாம் படப்போகும் பாடுகள் அனைத்தும் அவருக்குத்தெரியும். எல்லாம் தெரிந்துதான், அறிந்துதான், புரிந்துதான், உணர்ந்துதான் தெளிவான மனத்துடன், உறுதியான நம்பிக்கையுடன், அசைக்கமுடியாத விசுவாசத்துடன், ஆழமான அன்புடன் எருசலேம் செல்கிறார்.

* ஏன் எல்லாம் தெரிந்தும் இயேசு எருசலேம் நுழைகிறார்:

* இயேசு தம் தந்தையின் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றுவதே தமது வாழ்வின் குறிக்கோள் என்பதை உணர்ந்தார். "உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்." எபி 10:12. "என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் வந்தேன்" யோவா 6:38. இயேசு தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற எருசலேம் நுழைகிறார்.
* தம் தந்தையின் விருப்பம் என்ன? இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பின் வழியாகத் தனது அன்பு எவ்வளவு பெரியது என்பதை உலகமக்கள் உணர்ந்து கொள்ளவேண்டுமென்பதே தந்தையின் விருப்பம். தான் தனது மரணம்-உயிர்ப்பின் மூலமாக உலகை மீட்க வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற எருசலேம் செல்கிறார். "அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழியவிடாமல் அனைவரையும் உயிர்த்தெழச் செய்யவேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுள்ளம். மகனைக்கண்டு அவரிடம் நம்பிக்கைக் கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதிநாளில் அவர்களை உயிர்த்தெழச்செய்வேன்." யோவா 6:39-40. இது தம் பாடுகள், இறப்பு, உயிர்ப்பின் மூலமாகத்தான் நிறைவேற்ற முடியும் என்ற உறுதியுடன் இயேசு எருசலேம் நுழைகிறார்.

* தன்னையே பலியாக்க: ஏசு எருசலேம் ஆலயவிழாவில் கலந்து கொண்டதும், நற்கருணை உணவை ஏற்படுத்தியதும் அவர் தன்னையே சாவுக்குக் கையளிக்கத்தான். அப்பம் பிட்கப்படுவதுபோலத் தானும் பிட்கப்பட்டார். அதனால்தான், "யாரைத்தேடி வந்தீர்கள்? இதோ நான்தான்" யோவா 18:5 எனத் துணிவுடன் தன்னையே கையளித்தார்.

* உலகை மீட்க: ஏசுவாக-மீட்பராக, இரட்சகராக, விடுதலை கொடுப்பவராக இவ்வுலகில் அவதரித்த இயேசுவின் இறுதியான, உறுதியான நோக்கம் உலகில் உள்ளோர்க்கு ஆன்மீக விடுதலை வழங்குவதுதான். "ஆடுகள் உயிர்பெறும்பொருட்டே வந்தேன். அதை மிகுதியாகப் பெறும் பொருட்டே வந்தேன்" யோவா 10:10 என்ற இயேசு பிறந்தது, வாழ்ந்தது, பாடுகள் பட்டது, இறந்தது, உயிர்த்தது இவை அனைத்துமே மக்களுக்கு மீட்பையும், ஆன்மீக விடுதலையையும் வழங்கத்தான்.

* இயேசு அஞ்சினாரா?

தமது தந்தையின் விருப்பத்தை, திட்டத்தை, திருவுளத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆசையிருந்தாலும், பாடுகளை, துன்பங்களைக்கண்டு இயேசு அஞ்சியிருக்கமாட்டாரா? பயப்பட்டிருக்கமாட்டாரா? இயேசு அஞ்சினார் என்பது அவரது கெத்சமனி தோட்ட செபத்திலிருந்து தெரிகிறது. கெத்சமனி தோட்டத்தில் முகம் குப்புற விழுந்து, "என் தந்தையே! முடிந்தால் இத்துன்பக்கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும்," மத் 28:39 என்று செபித்தார். இயேசு துயரமும், மனக்கலக்கமும் அடைந்தார். அவரது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டிருந்தது. மத் 26:37-38.

தம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை ஒருபுறம். பாடுகள், மரணத்தைக்கண்டு அச்சம் மறுபுறம். அச்சம் அழியும் இடத்தில்தான் ஆண்டவனின் ஆசை நிறைவேறுகிறது. இயேசு தம் இதயத்தில் எழுந்த அச்சத்தை அழித்தார். "ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கிறார். நான் அவமானம் அடையமாட்டேன்" எசா 50:7. தம் தந்தையின் துணைமீது தமக்கிருந்த ஆழ்ந்த விசுவாசம்தான் இயேசுவின் அச்சத்தை அழித்தது. துன்பங்களால் வரும் அச்சத்தை அழிக்கும் சக்தி, ஆற்றல் ஆழ்ந்த விசுவாசத்திற்கு உண்டு.

தந்தை உலகின்மீது கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடுதான் இயேசு கிறிஸ்து. தந்தையின் அன்பை இயேசுவில் அனுபவிக்கலாம். அப்படிப்பட்ட இயேசுவின் அன்புக்கு அச்சமில்லை. உண்மையான அன்பு எல்லாவிதமான அச்சத்தையும் நீக்கிவிடும். இயேசுவும் மனுக்குல மீட்பின் மீது, மனுக்குலத்தின் மீது உண்மையான அன்பு கொண்டிருந்ததால்தான் அவரிடம் அச்சம் அழிந்தது. விசுவாசம் உறுதியானது. அந்த அன்பு தம் உயிரைத்தியாகம் செய்வதில் நிரூபித்தது. அன்பில் அச்சத்திற்கு இடமில்லை.

சிலுவைப்பயணத்தின் வழியாய் இயேசு இறைமகன் என்ற உண்மை நிரூபிக்கப்படுகிறது. யூதர்களுக்கு இடறலாகவும், புற இனத்தாருக்கு மடமையாகவும், ஆனால் விசுவாசம் கொண்டவர்களுக்கு இயேசு இறைமகனாகவும் இருக்கிறார். 1கொரி 1:23. இந்த இறைமகன்தான் அச்சத்தை அழித்து, தம் பாடுகள் இறப்பு, உயிர்ப்பு வழியாக நமக்கு மீட்பைப்பெற்றுக்கொடுத்தார்.

* பாடுகளின் பாதையில் ஏசு அனுபவித்த துன்பங்கள்:

* தம் மேனியில்-உடலில் சுமந்த துன்பங்கள்: இயேசுவை காவலர் அடித்தனர்; உதைத்தனர்; அவர் முகத்தில் உமிழ்ந்தனர். முள்முடி சூட்டினர். சிலுவையை அவர்மீது சுமந்தனர். சிலுவையில் பாரத்தால் விழுந்தார்; எழுந்தார்; நடந்தார்; சிலுவையில் அறையப்பட்டார். உயிர் கொடுத்தார்; ஈட்டியால் குத்தப்பட்டார்.

+ தம் மனதில் ஏற்றத் துன்பங்கள்:
தாம் நம்பிய சீடர்கள் தம்மைவிட்டுவிட்டு ஓடியது. இயேசுவை மரியாதை குறைவாகக் காவலர்கள் நடத்தினர். பொய்க்குற்றங்கல் சாட்டினர். தவறே செய்யாதவர், தவறு செய்தவராக மக்களால் நம்பப்படுவது, நடத்தப்படுவது மிகப்பெரிய மனவேதனை.

+ தாம் தனிமையில் கைவிடப்பட்டது: அன்பு சீடர்கள் அத்தனைபேரும் தம்மை தனியாக தவிக்கவிட்டுவிட்டு ஓடிவிட்டனர். ஒரு சீடர் காட்டிக்கொடுத்தார்; ஒருவர் மறுதலித்தார்; ஒருவர் நன்மை பெற மக்களுக்குச் சார்பாகப் பேசினார். ஏமாற்றம், பயம், திகில் மனக்கலக்கத்தை இயேசு தனிமையில் அனுபவித்தார்.

* துன்புறும் ஊழியனின் மூன்று குணநலன்கள்:

* கடவுளின் குரலுக்குச் செவிமடுத்து, தம் உள்ளத்தைக் கடவுள்முன் எழுப்பி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார். கடவுளின் விருப்பத்திற்கேற்ப நடக்கையில் எதிர்வரும் துன்பங்களை வெறுக்காமல் துணிவுடன் ஏற்கிறார். துன்பங்களைத் தாங்கும் பலம், சக்தி கடவுள் கொடுப்பார் என்ற பூரண நம்பிக்கை ஆண்டவரின் ஊழியனுக்கு உண்டு. * கடவுளின் ஊழியன் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருப்பார். தம்மையே வெறுத்து, வெறுவையாக்கி, அடிமையின் கோலம் பூண்ட இயேசு இறைவாழ்வுக்கு முன் மாதிரி.
 
 
மறையுரை மொட்டுக்கள் நன்றி வழிகாட்டும் தோழன்
பாதை தயார்! பயணிக்கத் தயாரா?

தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் உயரிய மனிதர்களால்தான் இந்த உலகம் தொடர்ந்து இயங்குகின்றது. அவ்வாறு தன்னலம் துறந்து பிறர்நலத்தை மட்டுமே தன் வாழ்வின் கொள்கையாக வரிந்து கொண்ட மனிதர்களுள் முதலிடம் இயேசுவுக்கு உண்டு. தம் வாழ்வு முழுவதும் தம் விருப்பத்தை முன்னிறுத்தாமல் தந்தையின் விருப்பத்தையே முன்னிறுத்தி வாழ்ந்த இயேசு, தரணிவாழ் மக்களின் நல்வாழ்வுக்காகவும் தந்தையின் விருப்பப்படி தன்னையே தியாகம் செய்யத் தயார் என்ற மனநிலையோடு எருசலேம் நகருக்குள் நுழைகின்றார். அனைத்துலகின் அரசராகக் கொடிகளும் படைகளும் புடைசூழ வரவேண்டியவர், இன்று பாமர மக்களுக்கும் பச்சைக் குருத்தோலைகளுக்கும் நடுவே பவனி வருகின்றார். தலைவாகள் என்றாலே வெட்டிப் பந்தாக்களும் ஆடம்பரங்களும் மட்டுமே என்ற மனநிலையோடு வாழும் இன்றைய எதார்த்த உலகிற்கு இயேசுவின் எருசலேம் பயணம் ஒரு சவால்.

இன்றைய உலகம் ஆடம்பரமில்லா எளிமை, பகட்டுகள் இல்லா அமைதியான அணுகுமுறை போன்றவற்றறிலிருந்து முற்றிலும் விலகிவிட்டது. வீண்பேச்சுக்களும், அணிவகுக்கும் வாகனங்களும், அலங்கார நுழைவுகளும், பிரம்மாண்ட மேடைகளும், ஆளுயர மாலைகளும், வெற்று அறிவிப்புகளும்தான் இன்று தலைவர்கள் என்போரை அடையாளப்படுத்துகின்றன. இவற்றை விடுத்து, சாதாரண மக்களின் வரவேற்பும், கழுதையின்மீது பயணமும் என இயேசு உண்மையான தலைமைப் பண்பிற்கு இலக்கணமாகவும், எளிமை என்னும் உயரிய பண்பிற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றார். சொற்கள் அல்ல, செயல்களே ஒருவரது வாழ்விற்கு அடையாளமாக விளங்கும் என்னும் புதிய படிப்பினையை இன்று இயேசு நமக்குக் கற்றுத் தருகின்றார்.

நம் அரசர் பல்லக்கின்மீது பவனி வரவில்லை, மாறாகக் கோவேறு கழுதையின் மீது பவனிவருகிறார். நம் அரசருக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படவில்லை; மாறாக மக்களின் மேலாடையும் போர்வைகளும் மட்டுமே விரிக்கப்பட்டன. நம் அரசருக்குப் பல வண்ணக் கொடிகள் உயர்த்தப்படவில்லை. மாறாகக் குருத்து மடல்களே உயர்த்தப்பட்டன. நம் அரசர் அரியணையையும் ஆடம்பரத்தையும் ஏற்கச் செல்லவில்லை. மாறாக பாடுகளையும் மரணத்தையும் ஏற்கச் செல்கிறார். மொத்தத்தில் நாம் செல்லவிருக்கும் பயணம் பகட்டான பயணம் அல்ல. மாறாகப் பாடுகளின் பயணம், பக்தியின் பயணம். மனித வாழ்வில் இன்பத்தை விரும்பி ஏற்கும் நாம், இயேசுவைப் போலத் துன்பத்தையும், துயரத்தையும் கூடத் துணிவோடு ஏற்க வேண்டும் என்ற அடிப்படைப் பாடத்தை இயேசு இன்று கற்றுத் தருகின்றார். துன்பங்கள் மனித வாழ்வைச் செதுக்கும் சிற்றுளிகள் என்ற தெளிவு நமக்கு இருக்கிறதா? துன்பத்தால் புடமிடப்படாமல் இன்பத்தைத் துய்க்க முடியாது என்பதை உள்ளத்தில் உணர்வோம்.
 
 

  
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே