ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

         புனித வியாழன்

    திருப்பலி முன்னுரை

திருநீற்றுப்புதன்   வருடாந்த ஞாயிறு வாசகம்   Sermon Fr.Albert
 
Sr. Gnanaselvi (india)
பாதம் கழுவும் வேதம் கேட்க வந்திருக்கும் அன்பிற்குரிய நெஞ்சங்களே!
 
இயேசுவின் வழியில் வீதியில் நடக்க நமது வீட்டுக்குள் நடக்க, நமது பணிசெய்யும் இடத்தில் நடக்க, தடைகளைத் தாண்டி தத்துவங்கள் படைக்க, இந்த நாள் தத்து எடுத்து கற்றுக் கொடுக்கிறது.

நம்மை உரசிப் பார்க்கும் மனிதர்களை நமது பார்வையால், நமது சொல்லால், செயலால் ஒத்தடம் கொடுக்கச் சொல்லிய நம் தேவன், இன்று சிந்தனைக்கு சில நல்ல தகவல்களை பாதம் கழுவும் வேதம் மூலம் தருகின்றார். அன்பிற்காக தியாகம் செய்ய வேண்டும் என சொல்லிவிட்டு, அந்த தியாகத்தை தான் செய்தும் காட்டுகின்றார். ஆன்மீகத்தின் உச்சகட்ட வெளிப்பாடு உணவைப் பகிர்தல். அந்தப் பகிர்தலாய் தன்னையே உடைத்து கொடுக்கின்றார். மாண்புமிகு பணியை ஆற்ற குருத்துவத்தை ஏற்படுத்துகிறார். அயலார்  வாழ ஆண்டவர்  இயேசு செய்ததை, அப்படியே செய்யுங்கள் என வலியுறுத்தும் இந்த வழிபாட்டின் நிகழ்வுகள்:
 
நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. இறை வார்த்தை வழிபாடு
2. பாதம் கழுவும் சடங்கு
3. நற்கருனை வழிபாடு
4. நற்கருணை இடமாற்று பவனி

இத்திரு நிகழ்வுகளில் முழுமையாக பங்கேற்று பலன்களையும் முழுமையாக அனுபவித்து மகிழ்வோம்.

இப்போது இறை வார்த்தை வழிபாடு ஆரம்பமாகிறது.

முதல்வாசக முன்னுரை: (வி.ப.12:1.8,11.14)
காலமறிந்து சொன்ன வார்த்தை, கஷ்டத்தை தள்ளி வைக்கிறது. தன்னலமற்ற வார் த்தை, பிறர்  நலத்தை தருகிறது. நம்பிக்கை வார்த்தை, நாணயத்தை அறிவிக்கிறது. விடுதலைப் பயணநூல் தரும் விடுதலை இறை வார்த்தையோ, இறைவனையே இத்திரு நிகழ்வில் நமக்கு இனம் காட்டுகிறது. இயேசு இரத்தம் சிந்தி நம்மை மீட்கும் காட்சியை நினைவுக்குள் வரவழைத்து, நாமும் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவோம் என்ற நம்பிக்கைச் சிந்தனையோடு, முதல் வாசகத்தை வாசிக்கக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
(1 கொரி: 11: 23-26,)
நாம் மகிழ்ச்சியாக வாழ, உண்மை சீடர்களாக சமத்துவ சங்கத்தின் அங்கத்தினராக வாழ, சக்தி தரும் வார்த்தையை பக்தியோடு வாசிக்கக் கேட்போம்.

நற்செய்தி வாசகம் (யோவா 13: 1-15):
பாதங்கள் கழுவுதல் என்பது அடிமைகள் அல்லது பணியாளர்கள் செய்ய வேண்டிய வேலை. ஆனால் இறை அரசை கட்டியயழுப்ப வந்த இறைமகன் இயேசு, தனது திருத்தூதர்களின் பாதங்களை கழுவி, தான் ஒரு பணியாளனாக செயல்படுகிறேன், எனவே நீங்களும் பணியாளர்களாக செயல்படுங்கள் என அறிவுறுத்தும் நிகழ்வை நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்போம்.
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. சீடர்களின் பாதங்களை கழுவி பணிவை எமக்கு பாடமாக்கிய தலைவரே எம் இறைவா!
திருச்சபையை வழிநடத்தும் பணியாளர்கள் அனைவரும், தங்கள் அர்ப்பண வாழ்வால் மக்களை உமது பாதையில் பயணிக்கச் செய்யவும், இன்னல் இடையூறுகளுக்கு மத்தியில் பணிவுடன் பணியைச் செய்யவும் அருள் தர வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. பணிவுமிகு பணியால் பலருக்கு ஒளியாக வாழ்ந்த இறைவா!
மக்களின் நலமிகு பணிக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள், மக்களிடையே பாகுபாடின்றி மனித மாண்பை வளர்க்கும் வண்ணம், பணிவுடன் செயல்பட ஆற்றல் தர வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3. வழிகாட்டும் விளக்காகிய எம் இறைவா!
எம் பங்கை வழிநடத்தும் பங்குத் தந்தை உருவாக்கும் இறை சமூகத்தில், உமது பணிவை விளம்பரமாக்கும் செயல்பாடுகள் அதிகம் மிளிரச் செய்ய அருள் தர வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4. பிறர்  நலனுக்காக உழைத்த தந்தையே இறைவா!
எமது வாழ்வில் நிலவும் குறைபாடுகளை அகற்றி, நிறைவாய் வாழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

5. வறுமையில் வாடுவோரைத் தேற்றும் தெய்வமே!
ஏழை எளிய மக்களின் தேவைகளை அறிந்து பசி பிணி போக்கவும், குடும்ப வாழ்வின் குழப்பங்கள் நீக்கவும், வருந்தும் உள்ளங்களிடம் இருப்பதை பகிர்ந்து வாழவும், மற்றவர்களையும் பகிர்ந்து வாழச் செய்யவும் அருள் வரங்களைத் தர வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

6. நீதியின் அரசரே எம் தெய்வமே!
நீர்  ஏராளமான ஏளனப் பேச்சுக்கள் மத்தியில், தந்தையின் சிந்தையறிந்து பணிந்து வாழ்ந்ததுபோல, நாங்களும் ஏளனப் பேச்சுகளுக்கு மத்தியில் இறை விருப்பத்திற்கு பணிந்து வாழ, நீதியின் பாதையில் நடக்க அருள் வரங்களைத் தர வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.



பாதங்களைக் கழுவும் முன்னுரை:

பாதங்களைக் கழுவும் பணிவான நிகழ்வு இப்போது ஆரம்பமாகிறது.

காரியம் ஆகும் வரை காலைப் பிடிப்பதும், காரியம் முடிந்தவுடன் காலை வாரிவிடுவதும் இன்று நம் நடுவில் நிகழும் செயலாக இருக்கிறது. நம் தலைவர்  இயேசு பெருமானும் தம் குடும்பத்து உறுப்பினர்களான சீடர்களின் பாதங்களைப் பிடிக்கின்றார். நான் தலைவர்  பதவியில் இருக்கின்றேன் எனக்கு அதிகாரம் இருக்கிறது, நான் யாரிடமும் சென்று காலையும் பிடிக்கத் தேவையில்லை, கையையும் பிடிக்கத் தேவையில்லை என வாழும் மனிதர்களுக்கு மத்தியில், நம் தலைவர்  இயேசு நம் காலைப் பிடிக்கின்றார். நம்மை எல்லாம் உயர்த்தும் பண்பு, பணிவுதான் என்பதை அறிவிக்க காலைப் பிடித்துத் துடைக்கின்றார். அன்போடு முத்தமிடுகிறார். இதோ நமது பங்குத் தந்தை நமக்காக நமது குடும்பத்து உறுப்பினர்களின் பாதங்களைக் கழுவ இயேசுவைப் போலவே கீழே குனிகின்றார். இயேசு செய்ததை அப்படியே செய்து காட்டும் நமது பங்குத்தந்தையின் செயல்பாடுகளை உற்று நோக்கும் நாம், நமது குடும்பத்து உறுப்பினர்களின் பாதங்களைக் கழுவ நம்மால் குனிய இயலுமா? நம்மைச் சுற்றி நம்மோடு அன்பு கலந்து உறவாடும் உறவினர்களில் யாரேனும் ஒரே ஒருவருடைய பாதத்தையாவது கழுவ நம்மால் இயலுமா? என்ற எண்ணத்துடன் பணிவை படம் பிடித்து காட்டும் நிகழ்வை உற்று நோக்குவோம். பணிவை வாழ்க்கைப் பாடமாக்கும் உறுதி மொழி ஒன்றை இதயத்தில் இடம் பெறச் செய்வோம்.

மகத்துவம் பொருந்திய ஞானஸ்நானம்:

இயேசு தான் விட்டுச் சென்ற பணியை ஆற்ற, குருக்களை நியமிக்கிறார். குருக்கள் திருச்சபையின் வரலாற்று வாசலில் அணையாத தீபமாக சுடர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தந்தைக்கு பிரியமானதை சிந்தை மாறாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். இறையரசின் விழுமியங்களை விளையச் செய்யும் குருக்கள் பணி சிறக்க, செபிக்க இத்தருணம் நம்மை ஞாபகப்படுத்துகிறது. நமது பங்குத் தந்தையின் செயல்பாடுகள் திருச்சபையின் வளர்ச்சிக்கு உரமிடுவதாக அமையட்டும் என வாழ்த்தி செபிப்போம்.

திருவுணவு வழிபாடு ஆரம்பமாகிறது.

உறவைக் கொண்டாடும் போது உணவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
வாழ்வின் நிறைவு என்பது நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதில் அடங்கியிருக்கிறது. இயேசு இறுதி உணவாகத் தன்னைத் தந்து நம்மை உறுதி செய்கிறார். இருப்பதை கொடுக்க யோசிக்கும் நம்மை, இருப்பதை எல்லாம் கொடுக்கும் ஆசையை உற்பத்தி செய்யும் திருவிருந்து வழிபாடு இது.... இந்த உணவை உண்போம். உணவின் பலனாய் பலரையும், நம்மையும் வாழச் செய்வோம். உணவின் சக்தி நம்மை வாழச் செய்வது போல, நமது சக்தி பிறரையும் வாழச் செய்யட்டும்.

நற்கருணை இடமாற்று பவனி:
இரவு உணவுக்குப்பின், இயேசு கெத்சமணித் தோட்டத்தில் இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓட  "தந்தையே கூடுமானால் இந்தத் துன்பக் கிண்ணம் என்னை விட்டு நீங்கட்டும்" என சொல்லி செபித்ததை நினைத்து, இடமாற்றம் செய்யப்படும் நற்கருணை பவனியில் நம்மைச் சுற்றி நிலவும் துன்பக் கிண்ணம் நம்மை விட்டு நீங்கட்டும் என செபிப்போம்.
 
மறையுரை சிந்தனைகள்

அது ஒரு மழைக்காலம். சிறுவன் ஒருவன் காலணிகள் விற்கும் கடைக்கு அருகில் அழுக்கான பாதங்களுடன் மண்டியிட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட ஒருவர்  அவனிடம் "என்ன செய்து கொண்டிருக்கிறாய்"? எனக் கேட்டார்  அவனோ "நான் எனக்கு காலணிகள் வேண்டும் எனக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்." என்று சொன்னான். அதைக் கேட்ட அந்த மனிதர், அவனுடைய அழுக்கான பாதங்களைக் கழுவித் துடைத்து விட்டு அவனுக்கு காலணிகள் வாங்கிக் கொடுத்தார். உடனே அந்தச் சிறுவன் அந்த மனிதரைக் "கடவுளின் மகனா நீங்கள்" எனக் கேட்டான்?

ஒரே ஒரு சின்ன செயல் போதும் கடவுளை அடையாளப்படுத்த, கடவுள் செய்ததைப் போல நாம் செய்யும்போது நாம் கடவுளாகவே கருதப்படுவோம்.

இரண்டு காலணிகள் பேசிக் கொண்டன. இந்த மனிதர்கள் சண்டை வந்து விட்டால் நம்மை தூக்கி எடுத்து தாக்கிக் கொள்கிறார்கள். நாம் அவர்களுக்கு நன்மை தானே செய்கின்றோம். நம்மிடம் இருந்தாவது நல்லதைக் ற்றுக் கொள்ளக் கூடாதா? எனக் கேட்டன.

காலணிகள் கூட நம்மை கல், முள், வெயில், சேறு இவைகளிடமிருந்து பாதுகாக்கின்றன. காலணிகள் நம்மை பாதுகாப்பது போல நாமும் பிறரின் நற்பெயரை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். காரணம் நாம் காலணிகளை விட மேலானவர்கள் அல்லவா!

பக்கத்து நாட்டுக்குப் பாதயாத்திரை மேற்கொண்டனர்  அந்த அரசன். பாதைகள் மோசமாயிருந்ததைப் பார்த்துப் பதைத்தான். ஊர்  திரும்பியதுமே உத்தரவிட்டான். "என் நாட்டின் சாலைகளில், தேர்  வழுக்கிக் கொண்டு போக வேண்டும். மாட்டுத் தோலால் எல்லாச் சாலைகளையும் போடுங்கள்" "பல்லாயிரக்கணக்கான மாடுகளைப் பலி கொடுத்தா, சாலைகள் போடுவது?" பதைத்தார்கள் மக்கள். அரசனின் ஆன்மீக குரு கையில் ஒரு பொட்டலத்தோடு அரசனைக் காணச் சென்றார். அவரது கைகளாலேயே செய்யப்பட்ட காலணிகள் அதில் இருந்தன. "இவற்றில் உன் பாதங்களை நுழைத்துக்கொள், மாடுகள் பிழைத்துக் கொள்ளட்டும்" என்றார். அரசன் வெட்கப்பட்டான். நமக்காக பிறரை வருத்துவது பிழை, நம்மை நாமே மாற்றிக் கொள்வதுதான் முறை.

இதைத்தான் அன்று இயேசு செய்தார். பிறரை ஒரு போதும் எக்காரணத்திற்காகவும் துன்புறுத்தக் கூடாது. பிறரின் நல வாழ்வுக்காக இயேசுவும் தன்னையே மாற்றிக்கொண்டார். நாமும் அப்படி மாற வேண்டும் என்பதற்காக, தான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள் எனப் பணிக்கிறார். பிறர்  நமக்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ அதையே நாம் பிறருக்கு செய்ய வேண்டும் என்பதே பொன் விதி

பிறர்  நம்மிடம் பணிவாக இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பது போல, நாம் பிறரிடம் பணிவாக இருக்க வேண்டும் என்பதுதானே பொன்விதி.

பொன்விதியை கடைபிடித்து வாழ்ந்தால், துன்ப விதி நம்மை பின்  தொடர மறுக்குமே! பொன்விதியை கடை பிடித்து வாழ்ந்தால், பாதங்களை மட்டுமல்ல உடல் முழுவதையும் கழுவிவிடும் பக்குவம் பெற்றுவிடுவோம்.

"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவுகிறேன் என்றால், நீங்களும் ஒருவர்  மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன் மாதிரி காட்டினேன்" சாதாரணமாகக் குருவின் காலடிகளை சீடர்கள் கழுவுவார்கள் தலைவரின் காலடிகளை வேலையாட்கள் கழுவுவதுதான் வழக்கம். ஆனால் போதகரும் குருவுமான இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவினார்.

* எனக்காக வாழாமல் தாழ்ச்சியோடு பிறருக்குப் பணி புரிவதே கடவுள் விரும்பும்
   செயல் என்று தெளிவுபடுத்துகிறார்.


* நமக்காக வாழாமல் பிறருக்காக வாழும் போது கடவுள் முன் பெருமதிப்பிற்கு
  உரியவர்களாக நாமிருப்போம். "நான் உங்களுக்கு மாதிரி காட்டினேன், நான்
   செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்"


* "மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல. மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும்
   பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்."


* பிறருக்காக வாழும் முறையைக் கற்றுக் கொள்வோம். இயேசுவைப் போல நம்
   குடும்பத்துக்குள் பாதங்களைக் கழுவி முத்தமிடுவோம்.

 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.



 
 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm

 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.
பெரிய வியாழன்

இன்றைய வாசகங்கள்:
விப 12: 1-8  11-14
1 கொரி 11:23-26
யோவா 13:1-15


ஆண்டவரின் இறுதி இராவுணவுக் கொண்டாட்டம்


அருள்பணியாளர்களின் திருநாள்
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பணிக்குருத்துவத்தை ஏற்படுத்திய இந்நாளில், ஒவ்வொரு ஆண்டும் திருத்தைலத் திருப்பலியைக் கொண்டாடும் தாய்த் திருச்சபை, இந்த நாளை குருத்துவத்தின் ஆண்டுவிழாவாக நினைவுகூர்ந்து, தன் அருள்பணியாளர்களின் குருத்துவ வாக்குறுதிகளைப் புதுப்பிக்க அழைக்கிறது.

ஆக, அருள்பணியாளர்களின் திருநாள்.

அருள்பணியாளர்கள் ('presbyter,' or 'priest') என்றால் 'மறைமாவட்ட அருள்பணியாளர்கள்.' துறவற சபை குருக்களை துறவிகள் ('religious') என்றுதான் திருச்சபை அழைக்கிறதே தவிர, அவர்களை 'அருள்பணியாளர்கள்' என அழைப்பதில்லை. (மறைமாவட்ட அருள்பணியாளர்கள் கொஞ்சம் காலரைத் தூக்கிவிட்டுக்கோங்கப்பா!) திருவழிபாட்டு அறிவுரைப்படி இந்த திருத்தைல திருப்பலி நிகழ்வு பெரிய வியாழன் அன்றுதான் நடைபெற வேண்டும் என்றாலும், தங்கள் தலத்திருஅவையின் தேவை கருதி ஆயர்கள் இதை புனித வாரத்தின் திங்கள், செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் கொண்டாடலாம். மதுரை உயர்மறைமாவட்டத்தில் இந்த திங்களன்று இது கொண்டாடப்பட்டது.

அருள்பணியாளர்கள் வாக்குறுதிகள் புதுப்பிக்கும் சடங்கில் ஆயர் அவர்கள் அருள்பணியாளர்களைப் பார்த்துக் கேட்கும் மூன்று கேள்விகளை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். தமிழ் திருப்பலி புத்தகத்தில் உள்ள மொழிபெயர்ப்பு நன்றாக இல்லை. மூல மொழியாம் இலத்தீனிலும், அதை மிக ஒட்டிய இத்தாலியனிலும் வாசிக்கும்போது இவ்வாக்குறுதிகள் ஆச்சர்யமாக இருக்கின்றன. இத்தாலியன் மொழிபெயர்ப்பை நான் இங்கே தமிழாக்கம் செய்கிறேன்:

கேள்வி 1:

ஆயர்: அன்பிற்கினிய அருள்பணியாளர்களே,

இயேசு கிறிஸ்து தன் குருத்துவத்தை திருத்தூதர்களுக்கும், நமக்கும் பங்கிட்டுக்கொடுத்த நாளின் ஆண்டு நினைவை புனித திருச்சபை கொண்டாடுகிறது. (இந்நாளில்) நீங்கள் உங்கள் திருநிலைப்பாட்டு நிகழ்வின்போது உங்கள் ஆயர் முன்னிலையிலும், இறைவனின் புனித மக்கள் முன்னிலையிலும் கொடுத்த வாக்குறுதிகளைப் புதுப்பிக்க விரும்புகிறீர்களா?

அருள்பணியாளர்கள்: ஆம், விரும்புகிறேன்.

இங்கே மூன்று கூறுகள் முக்கியமானவை:

அ. ஓர் அருள்பணியாளர் இயேசுவின் குருத்துவத்தில் பங்கேற்கிறார். இது ஒரு புதிய புரிதல். ஏனெனில், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன் வரை, 'ஒரு அருள்பணியாளர் தலத்திருச்சபையின் ஆயரின் குருத்துவத்தில் பங்கேற்கிறார்' என்ற புரிதலே இருந்தது. இந்தப் புதிய புரிதலில், எல்லா அருள்பணியாளர்களையும் இணைப்பவர் கிறிஸ்துதான் என்பதும், அருள்பணியாளர்கள் மனித இயல்பில் அல்ல, மாறாக, இறை இயல்பிலேயே பங்கேற்கிறார்கள் என்பதும், அருள்பணி நிலையில் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் இல்லை என்பதும் அடிக்கோடிடப்படுகிறது.

ஆ. அருள்பணியாளர்கள் தருவது 'வாக்குறுதி' ('promise') இதை துறவிகளின் 'பொருத்தனை' ('vow')-யிலிருந்து வேறுபடுத்த வேண்டும். 'பொருத்தனை' என்பது நாம் ஆலயத்தில் இறைவனுக்குச் செலுத்தும் நேர்ச்சை ('votive') போன்றது. 'பொருத்தனையை' விட 'வாக்குறுதி' அதிக நம்பகத்தன்மையை உள்ளடக்கியது.

இ. அருள்பணியாளர்கள் தங்கள் வாக்குறுதியை ஆயர் முன்னிலையில், இறைமக்கள் முன்னிலையில் தங்கள் இறைவனுக்கே நேரிடையாகத் தருகின்றனர். ஆனால், துறவியர் தங்கள் 'பொருத்தனைகளை' தங்கள் மாநில முதல்வரிடம்தான் ('provincial' or his / her representative) கொடுக்கின்றனர். மேலும், இங்கே ஆயரும், இறைமக்களும் நான் கொடுக்கும் வாக்குறுதிக்கு சாட்சிகளாய் ('witnesses') இருக்கிறார்கள்.

கேள்வி 2:

ஆயர்: நீங்கள் உங்களையே மறுத்தும், கிறிஸ்துவின் அன்பினால் தூண்டப்பெற்று எவ்வித வற்புறுத்தலுமின்றி நீங்களே விரும்பி, அவரின் திருச்சபைக்காக ஏற்றுக்கொண்ட தூய பொறுப்புக்களை நிறைவேற்றியும், நம் குருத்துவத்தின் முன்மாதிரியாய் இருக்கின்ற ஆண்டவர் இயேசுவோடு, உங்களையே நெருக்கமாக்கி இணைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

அருள்பணியாளர்கள்: ஆம், விரும்புகிறேன்.

இங்கேயும் மூன்று கூறுகள் முக்கியமானவை:

அ. ஞானஸ்நானம் என்பது ஒரே நாளில் அடைந்துவிடும் நிலை அல்ல. அது ஒவ்வொரு நாளும் ஒரு அருள்பணியாளர் மேற்கொள்ளும் பயணம். இந்தப் பயணத்தின் இலக்கு ஆண்டவர் இயேசுவோடு தன்னையே இணைத்துக்கொள்ளுதல். ஆக, ஓர் அருள்பணியாளர் முதலில் தன்னையே கிறிஸ்துவோடு இணைத்துக்கொள்ள வேண்டும். (அப்படி இணைத்தால்தான் தன் மக்களை இறைவனோடு இணைக்க முடியும்).

ஆ. 'உங்களையே மறுத்தல்' என்றால், 'இனி நான், எனது, எனக்கு' என்று எதுவும் இல்லை என்பது பொருள்.

இ. 'எவ்வித வற்புறுத்தலுமின்றி.' என் ஏழு ஆண்டு அருள்பணி வாழ்வுப் பயணத்தில் இந்த வார்த்தைதான் இன்று எனக்கு ரொம்ப முக்கியமானதாகத் தெரிகின்றது. நானாக விரும்பி, யாருடைய வற்புறுத்தலுமின்றிதான் அருள்பணிநிலையை ஏற்றுக்கொள்கிறேன் என்றால், நான் எவ்வித முணுமுணுப்பும், எதிர்பார்ப்பும் இன்றி பணி செய்ய வேண்டும். மேலும், ஒன்றை விரும்பி ஏற்றுக்கொண்டபின், அதில் நிலைத்திருக்க வேண்டுமே தவிர, 'இன்னொன்றையும் நான் விரும்புகிறேன், அதுவும் எனக்கு வேண்டும்' என நினைப்பது மேன்மையன்று.

கேள்வி 3:

தலையும், மேய்ப்பருமான கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி, மனித விருப்பங்களால் வழிநடத்தப்படாமல், உங்கள் சகோதரர்கள்மேல் கொண்ட அன்பினால் (வழிநடத்தப்பட்டு), கடவுளின் மறைபொருள்களை புனித நற்கருணை மற்றும் மற்ற வழிபாட்டு செயல்பாடுகள் வழியாக நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக இருக்கவும், மீட்பின் வார்த்தையின் பணியை பற்றுறுதியடன் நிறைவேற்றவும் விரும்புகிறீர்களா?

அருள்பணியாளர்கள்: ஆம், விரும்புகிறேன்.

இங்கேயும் மூன்று கூறுகள் முக்கியமானவை:

அ. முதல் வாக்குறுதி (கேள்வி 2) அருள்பணியாளரின் தனிநபர் வாழ்வையும், இரண்டாம் வாக்குறுதி (கேள்வி 3) அவரின் பணிவாழ்வையும் மையப்படுத்தி இருக்கிறது. பணிவாழ்வு 'மனித விருப்பங்களால்' உந்தப்படக்கூடாது. அதாவது, தான் செய்யும் ஒவ்வொரு (வழிபாட்டு) செயலிலும், 'எனக்கு என்ன கிடைக்கும்?' என்று அருள்பணியாளர் எண்ணக் கூடாது. 'இந்தப் பூசை வைத்தால் எனக்கு என்ன கிடைக்கும்?' 'வீடு சந்திக்கச் சென்றால் என்ன கிடைக்கும்?' 'இவரிடம் நான் நல்ல நட்பை வளர்த்துக்கொண்டால் எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற எண்ணங்கள் அறவே கூடாது. இப்படிப்பட்ட கேள்விகள் ஓர் அருள்பணியாளரை ஒரு முதலாளியாக ('capitalist') ('எதில் நான் இன்வெஸ்ட் செய்தால் எனக்கு அதிக பலன் கிடைக்கும?') அல்லது நுகர்வோராக ('consumer') ('இவரிடமிருந்து எனக்கு என்ன கிடைக்கும்?') மாற்றிவிடும். அருள்பணியாளர் தன் சகோதரர்கள்மேல் கொண்ட அன்பினால் உந்தப்பட வேண்டும். பங்குத்தளத்தில் பணியாற்றும் ஓர் அருள்பணியாளர் அந்தப் பங்குத்தளத்தின் 'பாஸ்' அல்ல. மாறாக, சகோதரர். அந்த நிலையில்தான் அவர் தன் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

ஆ.கடவுளின் மறைபொருள்களையே அருள்பணியாளர் நிறைவேற்றுகின்றார். 'மறைபொருள்' என்பதால் இங்கே நம்பிக்கை மிக முக்கியமானது. கடவுளின் மறைபொருள்கள் மேல் எனக்குள்ள நம்பிக்கை முதலில் ஆழப்பட வேண்டும். மேலும், இது கடவுளின் மறைபொருள் என்பதால், நான் என் மூளையைக் கசக்கி விடை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இ. 'நம்பகத்தன்மை.' 'பற்றுறுதி.' மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை ஒரு வங்கியில் போடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்த வங்கியின் மேல் அவர்களுக்கு முதலில் நம்பகத்தன்மை வரவேண்டும். அந்த வங்கியும் தங்கள் வாடிக்கையாளரின் நம்பிக்கைக்குப் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டும். தாங்கள் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதியில் பற்றுறுதியோடு இருத்தல் வேண்டும். ஓர் அருள்பணியாளர் ஒரு வங்கி அதிகாரியைவிட அதிக பொறுப்பு கொண்டவர். நான் என் நண்பனிடமும் சொல்லத் தயங்கும் என் இரகசியத்தை, என் தனிவாழ்வை ஓர் அருள்பணியாளரிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், அது என் குளியலறையை அவருக்குத் திறந்து காட்டுவது போன்றது. 'இதுதான் நான்!' என்று என்னிடம் மக்கள் தங்களையே முழுமையாக நிறுத்துகிறார்கள் என்றால், நான் எவ்வளவு நம்பகத்தன்மை கொண்டவராகவும், நான் தரும் வாக்குறுதியில் பற்றுறுதி கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

நீண்ட கதையை ஒற்றை வாக்கியத்தில் சுருக்கினால், எனக்கும் எனக்கும், எனக்கும் இறைவனுக்கும், எனக்கும் என் சகோதரர்களுக்கும் உள்ள உறவு என்பது ஒரு வாக்குறுதி. நான் காப்பாற்றும் ஒவ்வொரு வாக்குறுதியும் அருள்பணிவாழ்வு என்ற ஓவியத்தில் நான் தூரிகையால் தீட்டும் வண்ணக் கோடுகள். நான் தவறும் ஒவ்வொரு வாக்குறுதியும் அந்த ஓவியத்தில் நான் கத்தியால் இழுக்கும் கீறல்கள்.

'இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை. அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது' (பவுல், 2 கொரி 4:7).
 
 ' என் இரத்தத்தினாலுகும் புதிய உடன்படிக்கை'
' இது என் உடல், இது என் இரத்தம்' என நம் ஆண்டவர் ஏற்படுத்திய நற்கருணை, ' பாதம் கழுவி பணி செய்யுங்கள்' என்று ஏற்படுத்தப்பட்ட பணிக்ஞானஸ்நானம், ' ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' என்ற புதிய கட்டளை என்ற மூன்று நிகழ்வுகளை இன்றைய நாளில் நாம் நினைவுகூறுகின்றோம். நற்கருணை, பணிக்ஞானஸ்நானம், புதிய கட்டளை ஆகிய மூன்றுக்கும் பொதுவான பண்புகளாக நாம் மூன்றை முன்வைக்கலாம்: உடன்படிக்கை, உடனிருப்பு, இணைந்திருத்தல்.

உடன்படிக்கை
உடன்படிக்கை என்ற அசீரியர்களின் சொல்லாடல் இஸ்ராயேல் மக்களின் வரலாற்றில் நுழைகின்றது. மனித உறவுகள் பொதுவாக இரண்டு வகையானவை: இரத்த உறவு மற்றும் திருமண உறவு. இந்த இரண்டு உறவுகளையும் கடந்த உறவிற்குப் பெயர்தான் உடன்படிக்கை. மேலும், போரில் வெற்றி பெறுகின்ற அரசன் தான் வெற்றி கொண்ட மக்களையும், கால்நடைகளையும், உடைமைகளையும் கைப்பற்றித் தன் நாட்டிற்குக் கொண்டு செல்லும்போது அவர்களிடம் ' இது முதல் நான் உங்கள் அரசனாயிருப்பேன். நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்' என்று உடன்படிக்கை செய்து கொள்வது அசீரியர்கள் மரபு. 3இதன் அடிப்படையில் இஸ்ராயேல் மக்கள் வாழ்விலும் யாவே இறைவன் இஸ்ராயேல் மக்களோடு மோசே வழியாக சீனாய் மலையில் செய்கின்ற முதல் உடன்படிக்கையில் ' நாம் உங்கள் கடவுளாயிருப்போம். நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்' என்ற உறவை ஏற்படுத்துகின்றார்.

இந்த உடன்படிக்கையின் மையமாக வைக்கப்படுவது இஸ்ராயேல் மக்களின் ' கீழ்ப்படிதல்' . இரண்டாவதாக, யாவே இறைவன் நாத்தான் இறைவாக்கினர் வழியாக தாவீது அரசனோடு உடன்படிக்கை செய்து கொள்கின்றார். இந்த உடன்படிக்கையின் மையமாக வைக்கப்படுவது என்னவென்றால் தாவீது அரசனின் வழியில் வரவிருக்கும் மெசியா குறித்த வாக்குறுதி. மூன்றாவதாக, எரேமியா இறைவாக்கினர் வழியாக யாவே இறைவன் புதிய உடன்படிக்கையை முன்னறிவிக்கின்றார். இந்த மூன்று பழைய ஏற்பாட்டு உடன்படிக்கைககளின் உருவாக வருகின்றார் கிறிஸ்து. இந்த மூன்று உடன்படிக்கைகளும் இவரில் நிறைவேறுகின்றன. முதல் உடன்படிக்கையின் ' கீழ்ப்படிதலை' கெத்சமேனித் தோட்டத்திலும், இரண்டாம் உடன்படிக்கையின் ' தாவீதின் மகன்' என்பதை எருசலேம் நுழைதலிலும், எரேமியாவின் புதிய உடன்படிக்கையை தனது இறுதி இராவுணவின் போது, ' இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை' (லூக் 22:20) என நிறைவுறச் செய்கின்றார். உடன்படிக்கை என்பது அங்கே பரிமாறப்படும் வார்த்தைகளை விட இன்னும் அதிகமானது. வார்த்தைகளின் பின்னால் இருக்கின்ற மறைபொருள்தான் உடன்படிக்கைக்கு அர்த்தம் கொடுக்கின்றது. நாமும் நம் வாழ்வில் குடும்பத்திலும், சமுதாயத்திலும், திருச்சபையிலும் உடன்படிக்கை வழியாக இணைந்திருக்கின்றோம். இதில் நிலைத்திருக்க நாம் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள் மட்டும் போதாது. அவைகளையும் தாண்டி மேலான ஒன்றை நாம் பெற்றிருக்க வேண்டும்.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு ஒரு ஆய்வு நடத்துகின்றது. பத்துப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எலுமிச்சை சாறு தயாரிக்க அழைக்கின்றது. 10 எலுமிச்சைகள், 10 கரண்டிகள், 10 சுகர் க்யூப்கள், 10 டம்ளர் தண்ணீர் என அவர்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் ஜூஸ் தயாரிக்கின்றனர். அதை ஆய்வு செய்தபோது பத்தும் பத்து சுவையைத் தருகின்றது. கொடுக்கபட்ட பொருட்கள் ஒரே மாதிரியானவை என்றாலும் சுவை எப்படி மாறுபடும் என்று ஆராய்கின்ற பல்கலைக்கழகம் கண்ணுக்குத் தெரிந்த பொருள்கள் தருகின்ற சுவையைக் காட்டிலும் கண்ணுக்குத் தெரியாத அர்ப்பணம்தான் அதற்குச் சுவை தருகின்றது என்று நிறைவு செய்கின்றனர். நம் வாழ்விலும் கொடுக்கப்பட்ட வருடங்கள், திறமைகள், உறவுகள் ஒரே மாதிரி இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே வெற்றியாளர்களாக மாறுகின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அளிக்கின்ற அர்ப்பணம். இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணம் மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது. நம் வாழ்வின் உடன்படிக்கை எப்படி இருக்கிறது?

உடனிருப்பு
' தம்மோடு இருக்கவும், அனுப்பப்படவும்' (மாற்கு 3:14) என திருத்தூதர்களை அழைத்த இயேசு இறுதி இராவுணவில் பணிக்குருத்துவத்தை ஏற்படுத்துகின்றார். இயேசு ஒரு குருவா? இயேசுவின் பிறப்பு அவரை ஒரு குருவாக்க முடியாது. ஏனென்றால் யூத சமயத்தில் ஒருவர் குருவாக இருக்க வேண்டுமானால் அவர் லேவியர் குலத்தில் பிறக்க வேண்டும். ஆனால் இயேசு பிறந்தது யூதா குலத்தில். இயேசுவின் பணிவாழ்வும் அவரை ஒரு குருவாக மாற்றவில்லை. இயேசு எருசலேம் ஆலயத்திற்கு சென்று பலி செலுத்தியது கிடையாது. ஆலயத்தில் பணி செய்தது கிடையாது. ஏன் தனது பணிவாழ்வு முழுவதும் எருசலேமையும், தலைமைக் குருக்களையும், அவர்களின் சடங்கு, சம்பிரதாயங்களையும் சாடி, அவர்களது இரட்டை வேடத்தைத் தோலுரிக்கின்றார். இயேசுவின் இறப்பும் கூட அவரை ஒரு குருவாக மாற்றமுடியாது. ஏனெனில் " சிலுவையில் அறையப்பட்டோர் சபிக்கப்பட்டோர்" என யூதர்களின் சட்ட நூற்கள் (தோரா) எடுத்துரைத்தன. பின் எப்படி எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவை ஒரு குருவாக அதுவும் தலைமைக்குருவாக (எபி 5, 7) முன்வைக்கின்றார்? இயேசுகிறிஸ்துவின் வலுவின்மையில் மனுக்குலத்தோடு உடனிருக்கு (எபி 4:15) நிலையும், அவரின் பரிந்து பேசுகின்ற தன்மையும் தான் (எபி 8) அவரை ஒரு (தலைமைக்)குருவாக முன்வைக்க இந்த ஆசிரியரைத் தூண்டுகிறது.

குருத்துவத்திற்கு அடிப்படையான ஒரு பண்பு உடனிருப்பு. இறைவனோடும், மக்களோடும் உடனிருக்கும் தன்மைதான் ஒருவரைக் குருவாக அடையாளம் காட்டுகின்றது. இந்த உடனிருப்பை சுவாமி விவேகானந்தர் அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வோடு சிந்திக்கலாம்: விவேகானந்தர் தம் 14 வயதில் துறவறம் மேற்கொள்ள விரும்பி தன் தாயிடம் அனுமதி கோரச் செல்கின்றார். ' அம்மா, நான் துறவறம் மேற்கொள்ளப் போகிறேன். அனுமதி தருவீர்களா?' என்ற கேட்ட அவருக்கு அவருடைய தாய், ' போய், சமையலறையிலிருந்து கத்தியை எடுத்துக்கொண்டு வா' என்கிறார். இவரும் எடுத்து வருகிறார். தாய் சொல்கிறர், ' இப்போது நீ போக முடியாது' . ஒரு மாதம் கழித்து மறுபடியும் அனுமதி கேட்கின்றார். மறுபடியும் தாய் கத்தியை எடுத்துவரச் சொல்கின்றார். மறுபடியும் ' இப்போது நீ போக முடியாது' என்று அனுமதி மறுக்கின்றார். மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் அவர் தன் தாயிடம் அனுமதி கேட்க வருகின்றார். இம்முறையும் கத்தியை எடுத்துவரச் சொல்கின்றார். எடுத்து வந்தவுடன் தாய், ' மகனே, நீ இப்போது துறவறத்திற்குச் செல்லலாம!' ; என்று அனுமதி கொடுக்கின்றார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ' அம்மா, ஒவ்வொரு முறையும் கத்தியை எடுத்துவரச் சொன்னபோது கத்தியைத்தானே எடுத்து வந்தேன்.

இப்போது மட்டும் எப்படி அனுமதி கொடுக்கிறீர்கள்' என்று கேட்கின்றார். ' மகனே, முதல் இரண்டு முறை கத்தியை எடுத்து வந்தபோது பாதுகாப்பான கைப்பிடியை நீ வைத்துக்கொண்டு வெட்டுகின்ற பகுதியை என்னிடம் நீட்டினாய். இன்றுதான் வெட்டுகின்ற பகுதியை நீ பிடித்துக்கொண்டு பாதுகாப்பான பகுதியை என்னிடம் நீட்டினாய். துறவறம் என்பதும் அதுதான். வெட்டுகின்ற பகுதியை நீ பிடித்துக்கொண்டு பாதுகாப்பான பகுதியை மற்றவர்களுக்கு நீட்டுவது.' பணிக்குருத்துவத்தின் உடனிருப்பும் இதுதான். வெட்டுகின்ற பகுதியை நமக்கு வைத்துக் கொண்டு பாதுகாப்பான பகுதியை மற்றவர்களுக்கு நீட்டுவது. ' நல்ல ஆயன் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பான்' என்று நம் ஆண்டவரின் உடனிருப்பு இந்த இரவில் வெளிப்பட்டது.

இணைந்திருத்தல்
' நானே திராட்சைக் செடி. நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்" (யோவான் 15:5) என்று தன்னோடு இணைந்திருக்க நம்மை அழைக்கும் கிறிஸ்து புதிய கட்டளையாக அதை தருகின்றார்.

' நான் உங்களுக்கு அன்பு செய்ததுபோல நீங்களும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' என்று அன்புக் கட்டளை நம்மை ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்க அழைக்கின்றார். நம் வாழ்வில் இணைந்திருத்தல் நான்கு நிலைகளில் சாத்தியமாகிறது: (1) தண்டவாளங்கள் போல கிட்டக் கிட்ட இருந்தாலும் தொட்டுக்கொள்ள முடியாத, தொட்டு விட்டால் விபத்து ஏற்படும் இணைந்திருத்தல், (2) நிலவும் சூரியனும் போல ஒன்று மற்றொன்றைச் சார்ந்திருந்தாலும், ஒன்றின் பிரசன்னம் மற்றவற்றிற்கு தடங்கலாக இருக்கும், (3) எண்ணெயும் தண்ணீரும்போல ஒன்று மற்றொன்றோடு இணைந்திருப்பது போல தெரிந்தாலும் இரண்டையும் எளிதாகப் பிரித்து விடலாம், (4) மலரும் மணமும்போல, நடனமும் ஆடுபவரும் போல ஒன்றையொன்று நிலையாகச் சார்ந்திருக்கும் இணைந்திருத்தல். புதிய கட்டளை விடுக்கின்ற இணைந்திருத்தல் இந்த நான்காம் நிலையில் இருக்க வேண்டும். இணைந்திருத்தலின் பலன் நாம் அதிலிருந்து எப்படி உருவாகிறோம் என்பதிலும் வெளிப்படும். நாம் ஒருவரோடு நாம் அன்பில் இணைந்திருக்கும்போது நாம் அவராகவே மாறுகிறோம்.

ஆண்டவரோடு இணைந்திருத்தல் நம்மை அவர்போல மாற்ற வேண்டும். உடன்படிக்கை, உடனிருப்பு, இணைந்திருத்தல் என்ற இந்த மூன்று நிலைகளில் நற்கருணையில், பணிக்குருத்துவத்தில், புதிய கட்டளையில் இணைந்திருப்போம்.
 
உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்

நற்கருணை, பணிக்ஞானஸ்நானம், அன்புக் கட்டளை - இந்த மூன்றையும் இன்றைய நாளில் கொண்டாடுகிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு வினைச்சொற்கள் இரண்டு முறை கையாளப்படுகின்றன: 'அறிதல்', 'புரிதல்.'

அ. தன் நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருக்கிறார் (13:1)
ஆ. அனைத்தையும் தந்தை தன் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் அறிந்திருக்கிறார் (13:3)
அ. நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது. பின்னரே புரியும். (13:7)
ஆ. நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? (13:12)

'அறிதல்' எப்போதும் இயேசுவுக்கு மட்டுமே சாத்தியமாகிறது. புரிதல் எப்போதும் நமக்கு தாமதமாகவே நடக்கிறது.
நற்கருணை, ஞானஸ்நானம், அன்பு - இந்த மூன்றையும் அறிந்தவர் இயேசு. இது இறுதிவரை நமக்குப் புரிந்தும் புரியாமலும் இருப்பதே வாழ்வியல் எதார்த்தம்.
இந்த மூன்றையும் இணைக்கின்ற மூன்று வாழ்க்கைப் பாடங்களை இன்றைய நாள் நமக்குக் கற்றுத்தருகிறது:

1. 'தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார்'
இந்த வரி உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யம் தருகிறது. அதாவது, இயேசுவைச் சுற்றி இன்னும் சில மணி நேரங்களில் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். இருந்தாலும் அவரிடம் 'அனைத்தும் தம் கையில் உள்ளன' என்ற நிறைவு மனப்பான்மை இருக்கிறது.

ஒரு ஊரில் ஏழை ஒருவன் இருந்தானாம். அவனுக்கு நிறைய தங்கக் காசுகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அவனது ஆசையை நிறைவேற்ற நினைக்கின்ற தேவதை ஒரு பை நிறைய தங்கக்காசுகளை அவனது வீட்டிற்கு வெளியே வைத்துவிட்டு மறைந்துவிடுகிறது. காலையில் துயில் எழுந்து கதவு திறக்கும்போது இவனது கண்களில் அந்தப் பை படுகின்றது. வேகமாக பையை எடுத்து வீட்டிற்குள் ஓடி நாணயங்களைக் கொட்டி எண்ணுகின்றான். '99 நாணயங்கள்' இருக்கின்றன. அவனுக்குள் சின்ன நெருடல்: '100 நாணயங்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே!' 'அந்த 100வது நாணயத்தை ஒருவேளை பக்கத்து வீட்டுக்காரன் எடுத்திருப்பானோ?' 'வீடு பெருக்க வந்த மனைவி எடுத்திருப்பாளோ?' அல்லது 'மகன் எடுத்திருப்பானோ' அவனுடைய மகிழ்ச்சி கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடுகிறது. தன்னிடம் இருக்கின்ற ஒன்றை மறைந்து இல்லாத ஒன்றை கற்பனை செய்து வாழ்தல் நமக்குள் குறைவு மனப்பாங்கை உருவாக்கிவிடுகிறது.

தன்னிடம் உள்ளது அனைத்தும் எடுக்கப்படும் என்பதை இயேசு அறிந்திருந்தும் எப்படி அவரால் தன் கையில் தந்தை அனைத்தையும் ஒப்படைத்துள்ளார் என்று நினைக்க முடிந்தது. இதுதான் உண்மையான மனச்சுதந்திரம் அல்லது கட்டின்மை. இயேசு ஒருபோதும் குறைவு மனப்பான்மை கொண்டிருக்கவில்லை. ஆகையால்தான் யாரையும் அவரால் குறைத்துப் பார்க்க முடியவில்லை.

நற்கருணை - இங்கே அப்பத்திலும், இரசத்திலும் இறைமை நிறைகின்றது.
ஞானஸ்நானம் - 'எனக்கு எதுவுமே வேண்டாம்' என முன்வரும் அருள்பணியாளர் தன் நிறைவை இறைவனில் காண்கின்றார்.
அன்பு - அடுத்தவரிடம் நிறைவை பார்க்கிற அன்பு மட்டுமே நீண்ட பயணம் செய்கிறது.

2. தற்கையளிப்பு
தன்னிடம் அனைத்தும் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கின்ற இயேசு அப்படியே தன்னிடம் உள்ளது அனைத்தையும் இழக்கின்றார். தன்னிடம் உள்ளது அனைத்தையும் அவர் இழந்தாலும் தன்னிடம் நிறைவு இருக்கும் என்ற மனநிலையில் இருந்தார் இயேசு.

யோவான் நற்செய்தியாளர் மட்டும் இயேசு நற்கருணையை ஏற்படுத்தும் நிகழ்வை பதிவு செய்யாமல் விடுகின்றார். அல்லது மற்ற நற்செய்தியாளர்கள் அப்பம், இரசம் கொண்டு நற்கருணையை ஏற்படுத்த யோவான் மட்டும் அதை தண்ணீர்-துண்டு என மாற்றிப் போடுகின்றார்.

பந்தியிலிருந்து எழுந்து - அப்பத்தை எடுத்து, தம் மேலுடையைக் கழற்றிவிட்டு - நன்றி செலுத்தி, துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வாழ்த்துரைத்து, தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவினார் - அதைப் பிட்டு அவர்களுக்கு வழங்கினார்.

'எழுதல்' என்பது புதிய செயலின் அடையாளம். அல்லது புதிய செயலைத் தொடங்குவதற்கான தயார்நிலையை இது குறிக்கிறது.
'மேலுடை' என்பது பாதுகாப்பு. இயேசு தன் வெளிப்புற பாதுகாப்பை அகற்றுகின்றார்.
'துண்டு' என்பது 'குறைவு' - பட்ஜெட்டில் துண்டு விழுந்தது என்கிறோம். நீண்ட துணியில் குறைவான பகுதியே 'துண்டு' - குறைவை அணிந்துகொண்டு
'தண்ணீர் எடுத்து சீடர்களின் பாதங்களைக் கழுவித் துடைக்கின்றார்.'

குருத்துவத்தில் ஓர் அருள்பணியாளர் செய்வதும் இதுவே.
தன் குடும்பத்திலிருந்து எழுகின்றார். தன் குடும்பம், தன் படிப்பு, தன் பின்புலம் என்னும் மேலுடையை அகற்றுகின்றார். தன்னிடம் உள்ள வலுவின்மை என்ற துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, தான் செல்லும் இடங்களில் பணிசெய்யத் தொடங்குகின்றார்.

அன்பிலும் இதுவே நிகழ்கிறது.
ஒருவர் தன் உறவுநிலையிலிருந்து எழ வேண்டும். தன் பாதுகாப்பு வளையத்தை அகற்ற வேண்டும். தன்னிடம் உள்ள குறைவை அடுத்தவரின் நிறைவு கொண்டு நிரப்பிக்கொள்ள வேண்டும்.
நற்கருணையிலும் இது நடந்தேறுகிறது.
அப்பமும், இரசமும் கோதுமை மற்றும் திராட்சைத் தோட்டத்திலிருந்து எழுகின்றன. தங்கள் இயல்பைக் களைகின்றன. ரொட்டியும், திராட்சை இரசமும் என புதிய உருப் பெறுகின்றன.

3. 'உன் காலடிகளைக் கழுவாவிட்டால்'
இயேசுவைப் போல பாதம் கழுவுவதைவிட அவரை நோக்கி பாதத்தை நீட்டுவது அடுத்த பாடம். சீமோன் பேதுரு தன் பாதத்தை நீட்ட மறுக்கின்றார்.

புதிதாக குருத்துவ அருள்பொழிவு செய்யப்படுபவர், அந்த அருள்பொழிவு நிகழ்வில், தன் பெயர் வாசிக்கப்பட்டவுடன், 'இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு, தன் பாதத்தை ஒரு அடி முன்னால் நகட்டி வைக்கின்றார். அந்த ஒற்றை அடி முன்னால் வைத்ததில் அவரின் நீண்ட பயணம் தொடர்கின்றது. சீமோன் பேதுருவின் இந்த தயக்கத்தைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

புதிதாக காலடியை எடுத்வைத்து நாம் செல்லும் பயணத்தில்தான் அன்பும் அடங்கியுள்ளது.
மேலும் நற்கருணையில் இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் கொடுக்கும் நிகழ்விலும் அவரின் அந்த ஒற்றை அடியை நாம் பார்க்கிறோம்.
இந்த மூன்றிலும், 'நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்கிறார் இயேசு.

'நான் உங்களுக்கு செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு' - என தன்னைப் பற்றிய நினைவை நீங்காத ஒன்றாக ஆக்குகின்றார் இயேசு.
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

இன்றைய வாசகங்கள்:
விப 12: 1-8
1 கொரி 11:23-26
யோவா 13:1-15


நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்

இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றிய மன்னர்:

பிரான்ஸ் நாட்டை ஆண்ட மன்னர்களில் மாமன்னர் ஒன்பதாம் லூயிசிற்கு (1215- 1270) மக்கள் மனத்தில் ஒரு தனி இடம் உண்டு. அவர் சிறுவனாக இருந்தபோது, ஒருநாள் அவருடைய தாய் அவரிடம், "என் அன்பு மகனே! நீ பாவம் செய்வதை விடவும், என் காலடியில் விழுந்து சாவதே மேல்!" என்றுரைத்தார். இவ்வார்த்தைகளை எப்போதும் தன் மனக் கண்முன்னால் வைத்திருந்த அவர் அதன்படியே வாழ்ந்து வந்தார். குறிப்பாக, அவர் இறைவேண்டலுக்கு மிகுதியான நேரம் ஒதுக்கினார், நோன்பிருந்தார், ஒறுத்தல் முயற்சிகளைச் செய்தார். இவற்றையெல்லாம் அவர் யாருக்கும் தெரியாமலேயே செய்துவந்தார்.

இதைவிடவும் அவர் ஏழை எளியவர்களுக்கு வாரி வாரி வழங்கினார். தான் உணவு உண்ட அதே மேசையில், பிச்சைக்காரர்களை அழைத்து வந்து, தன்னோடு சாப்பிடச் சொன்னார். அனாதைகள், கைவிடப்பட்டவர்கள், விலைமகளிர் யாவரும் தங்குவதற்கு இல்லாம் அமைத்துத் தந்தார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தொழுநோயார்களின் காலடிகளைக் கழுவினார். தொழுநோயாளர்கள் அருகில் செல்வதற்கே பலரும் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், மாமன்னர் ஒன்பதாம் லூயிஸ் தொழுநோயாளர்களின் காலடிகளைக் கழுவி, இயேசுவின் உண்மையான சீடராகி, பின்னாளில் திருஅவையால் புனிதராக உயர்த்தப்பட்டார்.

ஆம், இன்று நாம் ஆண்டவருடைய இறுதி இராவுணவை நினைவுகூர்கின்றோம். இதில் அவர் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்றார். இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதன் மூலம் நமக்கு எதை உணர்த்துகின்றார் என்று சிந்திப்போம்.

முன்மாதிரி காட்டிய இயேசு:


ஒரு தலைவன் என்பவன் தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவேளை அவன் முன்மாதிரியாக இல்லாத பட்சத்தில், அவனுக்குக் கீழ் உள்ளவர்களும் அவ்வாறுதான் இருப்பார்கள்.

இயேசு, ஆண்டவராகவும் போதகராகவும் இருந்தார். அதே வேளையில், அவர் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர், பரிசேயரைப் போன்று சொல்வது ஒன்றும் செய்வதுமாக இல்லாமல் (மத் 23:3), சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார் (லூக் 24:19). இயேசு சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார் என்பதற்கு மிகப்பெரிய சான்றாக இருப்பதுதான் அவர் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியது. இயேசு தன்னுடைய சீடர்களிடம், "உங்களுள் பெரியவராக இருக்க விருப்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்" (மத் 20:26) என்றார். இதை அவர் சொன்னது மட்டுமல்லாமல், வாழ்ந்தும் காட்டினார்.

இயேசு வாழ்ந்த காலக்கட்டத்தில் பாலஸ்தீன் நாட்டில் சரியான சாலைகள் கிடையாது. அதைவிடவும், சாலைகள் எங்கும் புழுதி படிந்திருக்கும். ஆகவே, வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது ஒருவர் தம் காலடிகளைக் கழுவிவிட்டுத்தான் வரவேண்டும். மேலும் காலடிகளைக் கழுவும் வேலையை வீட்டில் உள்ள அடிமைகள்தான் செய்தார்கள். அப்படி இருக்கையில் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்றார். இங்கு இன்னொரு செய்தியை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அது என்னவெனில், யூத இரபிகள் தங்களது சீடர்களை அடிமைகளைப் போன்று நடத்தினார்கள் என்பதுதான். இயேசு தம் சீடர்களை அடிமைகளாகவோ, பணியாளர்களாகவோ கருதாமல், நண்பர்களாகவே கருதினார் (யோவா 15:15) என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் யூத இரபிகள் தங்கள் சீடர்களை அடிமைகளாகக் கருதியதன் அடிப்படையில் பார்த்தால், அடிமைகளான சீடர்கள் தன் காலடிகளைக் கழுவ விடாமல், அவர்களுடைய காலடிகளைக் கழுவுகிறார் இயேசு. இது இயேசு செய்த மிகவும் புதுமையான செயல் என்றுதான் சொல்லவேண்டும்.

இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதன் மூலம் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள் (லூக் 22:24) தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்று முன்மாதிரி காட்டுகின்றார்.

பாவங்களைக் கழுவும் இயேசு:


இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதை, அவர் நம் பாவங்களைக் கழுவித் தூய்மைப்படுத்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்த உண்மையை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம்பெறுகின்ற இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வு யோவான் நற்செய்தியில் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக, அவர் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்ற நிகழ்வு இடம்பெறுகின்றது. மத்தேயு நற்செய்தியில் இயேசு, கிண்ணத்தைக் கையில் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, "இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்" (மத் 26:28) என்கிறார். யோவானும் தனது முதல் திருமுகத்தில் "இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்" (1 யோவா 1:7-9) என்கிறார். இதன்மூலம் இயேசுவின் இரத்தம் நம் பாவங்களைக் கழுவித் தூய்மையாக்குகின்றது என்று புரிந்துகொள்ளலாம்.

இப்போது நாம் இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதன் மூலம் எவ்வாறு நம் பாவங்களைக் கழுவினார் என்பதற்கு வருவோம். தண்ணீருக்குத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் இருக்கின்றது (எண் 31:23) என்று திருவிவிலியம் கூறுகின்றது. மேலும் திருமுழுக்குச் சடங்கின்போது அருள்பணியாளர் திருமுழுக்குப் பெறுகிறவரின் தலையில் தண்ணீர் ஊற்றி, "தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் நான் உன் பாவங்களைக் கழுவுகிறேன்" என்பதும் தண்ணீருக்குப் பாவங்களைப் போக்கும் ஆற்றல் உண்டு என்பதற்குச் சான்றாக இருக்கின்றது நற்செய்தியில் இயேசு பேதுருவின் காலடியைக் கழுவ வரும்போது, அவர், "நீர் என் காலடிகளைக் கழுவ விடமாட்டேன்" என்கிறார். அப்போது இயேசு அவரிடம் சொன்ன, "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்ற வார்த்தைகளைக் கொண்டு பார்க்கும்போது, இரத்தத்தால் மட்டுமல்ல தண்ணீரால் பாவங்கள் கழுவப்படாத யாருக்கும் இறையாட்சியில் பங்கு இல்லை என்று புரிந்துகொள்ளலாம்.

ஆகவே, இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியது அவரது தாழ்ச்சியை உணர்த்துவது என்றால், அவர் சீடர்களின் காலடிகளைக் கழுவியது, நம் பாவங்களைக் கழுவிப் போக்கி விட்டார் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

இயேசு செய்தது போல் நாமும் செய்வோம்:


இயேசு சீடர்களிடம் காலடிகளைக் கழுவியது ஒரு முக்கியமான செயல் எனில், அதன்பிறகு அவர் தன் சீடர்களுக்குச் சொன்ன, "ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கின்றீர்கள்" என்பதும் முக்கியமானது.

இன்றைக்குப் பலர் முதன்மையான இடத்தை, முதல் மரியாதையைப் பெற விரும்புகின்றார்கள். இதனால் அவர்களுக்கு மற்றவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணமே தோன்றுவதே இல்லை. காலடிகளைக் கழுவது என்பது ஒருவர் தம்மையே தாழ்த்திக் கொள்வதன் அடையாளம். 2013 ஆம் ஆண்டு வந்த பெரிய வியாழன் அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் காசா டெல் மர்மோ என்ற சிறைச்சாலைக்குச் சென்று, அங்கிருந்த கைதிகளின் காலடிகளைக் கழுவினார். அந்தக் கைதிகளில் பெண்கள் இருந்தார்கள்; பிற சமயத்தவரும், பிற சபைச் சார்ந்தவர்களும் இருந்தார்கள். வழக்கமாக, திருத்தந்தையர்கள் வயது முதிர்ந்த அருள்பணியாளர்களின் காலடிகளைக் கழுவுவர். திருத்தந்தை பிரான்சிசோ கைதிகளின் காலடிகளைக் கழுவித் தாழ்ச்சிக்கு இலக்கணமானார்.

இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் அவரை போன்று நம்மை தாழ்த்திக்கொண்டு மற்றவருக்குப் பணிவிடை செய்வது மட்டுமல்லாமல், அவரைப் போன்று நம்மையே பிறருக்காகக் கையளிக்க முன்வரவேண்டும். இதை நாம் கட்டாயத்தினால் அல்ல, விருப்பத்தோடு செய்து, இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.

சிந்தனைக்கு:

பிலாத்தைப் போன்று, தண்ணீரை எடுத்து, "இவனது இரத்தப் பழியில் எனக்குப் பங்கில்லை" (மத் 27: 24) சொல்லிக் கை கழுவதற்கு இங்குப் பலர் உண்டு. இயேசுவைப் போன்று மற்றவரின் காலடியைக் கழுவதற்குத்தான் யாருமே இல்லை. நாம் கைகழுகின்ற பிலாத்துவா? இல்லை காலடிகளைக் கழுவும் இயேசுவா? இயேசுவைப் போன்று மற்றவரின் காலடிகளைக் கழுவ முன் வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
உயிர் தரும் உணவு

பிரபல ஆங்கில எழுத்தாளரான கேனன் டோய்ல் (Canon Doyle) எழுதிய " The Great Boer War என்ற புத்தகத்தில் வரும் நிகழ்வு.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து நாட்டவருக்கும், எதிரி நாட்டவருக்கும் இடையே கடுமையான போர் நிகழ்ந்தது. அந்தப் போரில் இங்கிலாந்துப் படையானது பெரிய இழப்பைச் சந்தித்தது. எதிரி நாட்டுப் படை, இங்கிலாந்து நாட்டுப் படையை துவம்சம் செய்தது. அந்தப் படையில் வெகுசிலரே உயிர் தப்பினர். அப்படி உயிர் தப்பிய படைவீரர்களில் ஒருவர், எதிரி நாட்டுப் படைவீரர்கள் மீண்டும் தங்களைத் தாக்காமல் இருக்க, வித்தியாசமான ஒரு யோசனை செய்தார். அதாவது, போர்புரியும்போது தான் கொண்டுவந்த பெரிய வெள்ளைத் துணியில், தன்னுடைய உடலிலிருந்து வழியும் இரத்தத்தை எடுத்து, சிலுவை அடையாளம் வரைந்தார். அதேபோன்று தன்னோடு இருந்த படைவீரர்களையும், தங்களுடைய உடலிலிருந்து வழியும் இரத்தத்தை எடுத்து சிலுவை அடையாளம் வரையச் சொன்னார். இப்போது அந்த வெள்ளைத் துணியில் மிகப்பெரிய அளவில் வரையப்பட்ட சிலுவை அடையாளமானது, செஞ்சிலுவை சங்கத்தின் கொடியைப் போன்று இருந்தது. எதிரி நாட்டுப் படையினர் எஞ்சியிருந்த கொஞ்சம் இங்கிலாந்துப் படையினரை அழிக்க விரைந்து வந்தபோது, அங்கே செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியைத் தாங்கி வீரர்கள் இருப்பதைக் கண்டு, இவர்கள் போரில் காயப்பட்டுக் கிடக்கும் படைவீரர்களுக்கு உதவ வந்தவர்கள் என்று நினைத்து, அவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே திரும்பிவிட்டார். தங்களது இரத்தத்தால் வெள்ளைத் துணியில் சிலுவை அடையாளம் வரைந்த அந்தப் படைவீரர்களோ எதிரிகளிடமிருந்து உயிர்தப்பினார்கள்.

எப்படி படைவீரர்கள் இரத்தத்தால் வரைந்த சிலுவை அடையாளம் அவர்களைக் காப்பாற்றியதோ, அதே போன்று இயேசுவின் இரத்தம் இந்த உலகமனைத்தையும் பாவத்திலிருந்து, அழிவிலிருந்தும் விடுவித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

பெரிய வியாழனான இன்று, ஆண்டவர் இயேசு நற்கருணை ஏற்படுத்தியதை சிறப்பாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். எனவே அதைப் பற்றி ஒரு சில கருத்துகளை நாம் சிந்தித்துப் பார்ப்போம். " திருச்சபை, தனது வாழ்வை நற்கருணையிலிருந்து பெறுகிறது" என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்கம் (LG 11). ஆம், திருச்சபையின் வாழ்வுக்கு ஊற்றும், உச்சமுமாக இருப்பது இந்த நற்கருணைதான். இந்த நற்கருணையில் இயேசு தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகின்றார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்கள் கொண்டாடிய பாஸ்கா விழாவில் ஓர் ஆடானது பலியிடப்பட்டு, அது வீட்டிலுள்ள எல்லோராலும் உண்ணப்பட்டது. ஆனால் இயேசு கொண்டாடி புதிய பாஸ்கா விழாவில் ஆட்டிற்குப் பதிலாகன இயேசு தன்னுடைய உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தருகின்றார். கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் நாம் படிக்கக் கேட்பதுபோன்று, இயேசு தனது உடலையும், இரத்தத்தையும் நமக்கு உணவாகத் தந்து, இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்கிறார்.

ஆகவே, நாம் உட்கொள்ளும் இந்த நற்கருணையானது இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் அதேவேளையில் நற்கருணை ஒரு வழிபாட்டுக் கொண்டாட்டமாக அல்லாமல், வாழ்க்கை நிலையாக இருக்கவேண்டும் என்பதுதான் இயேசுவின் திருவுளமாக இருக்கின்றது. அதனால்தான் இயேசு தனது இறுதி இராவுணவின் போது சீடர்களின் பாதங்களைக் கழுவுகிறார்; " ஆண்டவரும், போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவிகிறேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவரது காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என்கிறார். அதாவது, நாம் ஒவ்வொருவருமே பிறருக்குப் பணிவிடை செய்து வாழவேண்டும் என்றதொரு அழைப்பினத் தருகின்றார்.

இன்றைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவர் மற்றவருக்குப் பணிவிடை செய்யும் மக்களாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பணத்திலும், குலத்திலும் நான் மற்றவரை விடப்பெரியவன், எனவே நான் எதற்கு பிறருக்குப் பணிவிடை செய்யவேண்டும்? பிறர்தான் எனக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று நினைக்கின்றோம். இது உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை நெறியாக இருக்காது.

இரக்கமும், மன்னிப்பும்தான் கிறிஸ்தவத்தின் இரண்டு கண்கள் என்பார்கள் பெரியவர்கள். எனவே நாம் நாமோடு வாழும் தேவையில் இருப்போர், வறியோர்மீதும் இரக்கம்கொண்டு, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் உண்மையான கிறிஸ்தவ நெறியாகும் என்ற வாழவேண்டும்.

கடந்த நூற்றாண்டில் ' மதுரா பாபு' என்ற ஒரு பணக்காரர் இருந்தார். அவர் ஒருமுறை புனித பூமிக்குச் (பனாரஸ்) சென்று, இறைவனை வழிபடவேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் கையில் கொஞ்சம் பணமும், உணவையும் எடுத்துக்கொண்டு கால்நடையாக நடந்து சென்றார்.

அவர் போகிற வழியில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த மக்கள் போதிய உணவில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். எனவே, அவர்களுக்கு தான் கொண்டுவந்த உணவை பகிர்ந்து கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல், தான் வைத்திருந்த பணத்தையும் அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் வறுமை நீங்க உதவினார். இவ்வாறு அவர் ஒருசில மாதங்கள் அவர்களோடு தங்கியிருந்து, அவர்களுக்காக உழைத்து அதிலே இன்பம் கண்டார்.

ஒருகட்டத்தில் மக்கள் அனைவரும் போதிய வசதிகளைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்வதைக் கண்டபிறகு, இறைவனை இந்த மக்களில் தரிசித்தபிறகு, இன்னும் எதற்கு புனிதபூமி செல்லவேண்டும் என்று அப்படியே வீடு திரும்பினார்.

எளியவருக்கு செய்கின்ற உதவிகள் யாவும், இறைவனுக்கே செய்யப்படுகின்றன என்பதை இந்த நிகழ்வானது நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. உண்மையான வழிபாடு என்பதும் இதுவாகத்தான் இருக்கின்றது.

ஆகவே, நற்கருணைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் இந்த வேளையில், அதனை ஒரு வழிபாடாக மட்டும் பார்க்காமல், வாழ்க்கை நிலையாகப் பார்ப்போம். நம்மோடு வாழும் மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம், அவர்களுக்கு பணிவிடை புரிந்துவாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

" நற்கருணை பாமரர் அநீதி எதிர்ப்பு, பாதகமிகு சாதிய எதிர்ப்பு; பெண்ணிய சமநிலை ஏற்பு; பழைய ஏற்பாட்டுக் கடப்பு" - தந்தை ஜெரி.
 
' இதை என் நினைவாகச் செய்யுங்கள்!'

ஒரு ஊரில் ஒரு தாயும் ஒரு மகனும் இருந்தார்கள். அந்த மகனுக்குத் திடீரென்று வெளிநாட்டில் வேலை கிடைக்க அவன் புறப்பட்டுப் போய்விட்டான். ஒவ்வொரு மாதமும் அவன் தன் தாய்க்கு ஒரு கடிதம் அனுப்புவான். தான் கண்ட இடங்களையும், ரசித்த நிகழ்வுகளையும் புகைப்படமாகவும், கடிதமாகவும் அனுப்புவான். அப்படி அனுப்பும் ஒவ்வொரு முறையும் அக்கடிதத்தோடு தன் சம்பளப்பணத்தில் ஒன்றிரண்டு தாள்களையும் வைத்து அனுப்புவான். இந்தத் தாயும் கடிதம் வந்தவுடன் தான் படித்ததோடு மட்டுமல்லாமல் அதைத் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமும் காட்டி மகிழ்வாள். ஐந்து வருடங்கள் வேலை முடித்து வீட்டிற்கு வருகின்றான் மகன். தன் இல்லம் சென்றவுடன் அவனுக்கு அதிர்ச்சி. தான் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தையும் தன் இல்லம் முழுவதும் தன் தாய் ஒட்டி வைத்திருக்கக் காண்கிறான். அந்தப் புகைப்படங்களோடு அவன் அனுப்பிய பணக்காகிதங்களையும் அந்தத் தாய் சுவரில் ஒட்டி வைத்திருக்கின்றார். அவன் அம்மாவிடம், ' இது படம் அல்ல அம்மா. நான் அனுப்பிய பணம்' என்கிறான். ' என்னது பணமா? நான் இதுவும் ஏதோ படம் என்றல்லவா நினைத்தேன்' என்கிறார் தாய். ' ஆனால் இதைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதும் நீ என் உடன் இருப்பது போலவே இருந்தது' என்று அவனைக் கட்டித் தழுவிக் கண்ணீர் வடிக்கின்றார்.

ஆண்டவரின் இறுதி இராவுணவுப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இன்றைய நாளின் மையமாக இருக்கும் வார்த்தைகள் இவைகள் தாம்: ' இதை என் நினைவாகச் செய்யுங்கள்!' . பாதம் கழுவுதல், பணிவிடை செய்தல், அப்பம் பிட்குதல், அன்பு செய்தல் என அனைத்திலும் தன் நினைவை நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார் இயேசு. மனிதர்களை மற்ற உயிர்களிலிருந்து மேன்மைப்படுத்தும் ஒரு கொடை ' நம் நினைவுகள்!' நம்மோடு வாழ்ந்த நம் முன்னோர்கள் இன்று நம்மோடு இல்லையென்றாலும் அவர்கள் விட்டுச்சென்ற வீடுகளோ, உறவுகளோ, மதிப்பீடுகளோ இன்றும் அவர்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன. நினைவுகள் நமக்கு அழியா வாழ்வைத் தருகின்றன. இறப்பு நினைவுகளை அழிக்க முடியாது. அதில் இறப்பு தோற்றுத்தான் போகின்றது. ஆகையால் தான் இயேசு தான் காட்டிக்கொடுக்கப்பட்டு இறப்பதற்கு முன் ' நினைவாகச் செய்யுங்கள்' என்று தம் சீடர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

எதை நினைவாகச் செய்யச் சொல்கின்றார்? தான் பெத்லேகேமில் மாடடைக் குடிலில் பிறந்ததையா, தன்னை ஏரோது கொல்லத் தேடியதையா, தன் பெற்றோர்கள் தன்னை ஆலயத்தில் அர்ப்பணித்ததையா, தன் திருமுழுக்கையா, தன் பணிவாழ்வையா, தனக்கு வந்த எதிர்ப்புக்களையோ, தன்னை ஏற்றுக்கொண்டவர்களையா, தனக்கு வழங்கப்பட்ட சிலுவைச்சாவையா, தன் இறப்பையா, தன் உயிர்ப்பையா - எதை நினைவாகச் செய்ய வேண்டும். அனைத்தையுமே.

அன்பில் நினைவு கூறுவோம். இன்று இவ்வுலகம் ஏங்கியிருக்கும் ஒன்று அன்பு. இது கிடைக்காமல் ஏங்குவோர் எத்தனையோ பேர். ஒவ்வொரு ஆன்மாவும் அன்பிற்காக ஏங்குகிறது. அந்த அன்பு பல நேரங்களில் பலருக்குக் கிடைப்பதில்லை. சிலர் கிடைக்கும் போது அதைக் கண்டுகொள்வதில்லை.

சிலர் அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. இயேசுவைப் பொறுத்த வரையில் அன்பு என்றால் ' அடையாளங்களைத் தாண்டுவது' . இன்று அன்பு செய்ய மிகப் பெரிய தடை அடையாளம். சமாரியர், பாவிகள், வரிதண்டுவோர், விபச்சாரர் என அனைத்து அடையாளங்களையும் தாண்டி ஒருவரின் உள்ளியல்பில் இறைவனைக் காணக் கற்றுக்கொடுக்கின்றார் இயேசு. ' நான் உங்களை அன்பு செய்தது போல' என்பதன் அர்த்தம் இதுதான். அன்பு செய்ய முக்கியத் தேவை ' வெறுமையாவது!' . தன்னையே வெறுமையாக்கும் ஒருவரால் தான் மற்றவரை அன்பினால் நிரப்ப முடியும். அன்பில் ஒருவர் மற்றவர் முன் தன்னையே தோலுரித்துக் காட்டுகின்றார்.

பணிவாழ்வு. பழைய ஏற்பாட்டில் அரசர்களும், இறைவாக்கினர்களும் திருப்பொழிவு செய்யப்பட்டது போல இன்று அருட்பணியாளர்கள் திருப்பொழிவு செய்யப்படுகிறார்கள். இந்த அருள்பொழிவு பற்றி திருப்பாடல் 45:7-8 இப்படிச் சொல்கிறது: ' எனவே கடவுள், உம் கடவுள், மகிழ்ச்சித் தைலத்தால் உமக்குத் திருப்பொழிவு செய்து, உம் அரசத் தோழரினும் மேலாய் உம்மை உயர்த்தினார். நறுமணத் துகள், அகிலொடு இலவங்கத்தின் மணம் உம் ஆடையெலாம் கமழும்.' திருப்பொழிவினால் ஒருவர் மகிழ்ச்சி பெறுகிறார். மாட்சிமை பெறுகிறார். மணம் பெறுகிறார். சகோதரர்கள் ஒன்றிணைந்திருப்பது எவ்வளவு அழகானது என்று வர்ணிக்கும் விவிலியம் ' அது ஆரோனினின் தலையினிலே ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவர்தம் அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும்' (திபா 133:2) என்று சொல்கின்றது.

இந்த வழிந்தோடுதலை கற்பனை செய்து பார்த்தாலே மெய்சிலிர்த்து விடுகிறது. இதை இன்னும் ஒரு படி மேலே போய் பார்த்தால் நம் தமிழக மண்ணின் கடவுளர்களுக்கு நீராபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய்வது போல இவர்களும் அபிஷேகம் கெய்யப்படுகிறார்கள். திருமுழுக்கின் வழியாக நாம் அனைவருமே கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்கேற்கிறோம். நாம் அனைவருமே அருள்பொழிவு செய்யப்படுகிறோம். அந்த அருள்பொழிவு நம்மை ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவ அழைக்கின்றது. பாதம் கழுவுபவர் தன் மேலாடையைக் கழற்ற வேண்டும். மேலாடைதான் ஒருவருக்கு மதிப்பைத தருவது. தனக்கு மதிப்பு தருவது இது என்று எதை ஒரு அருட்பணியாளர் நினைக்கிறாரோ அதை அவர் இழந்தால்தான் பணி செய்ய முடியும். தான் படித்த படிப்பு, தான் சம்பாதித்த உறவு, தன் பணித்தளம், தன் பணிப் பொறுப்பு என எதெல்லாம் அவருக்கு மதிப்பு தருகின்றதோ அதை அவர் கழற்றிவிட்டு துண்டைக் கட்டிக்கொள்ளத் துணியும்போதுதான் பணிவாழ்வு சாத்தியமாகும்.

குடும்ப உறவில் கணவன், மனைவியும் தங்களுக்குரியவற்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பிறருக்குரியவற்றில் அக்கறை செலுத்தும்போது அங்கே பணிவாழ்வு பிறக்கிறது.

நற்கருணை. இயேசுவைப் பொறுத்த வரையில் நற்கருணை ஒரு போராட்டம். ' நான், எனது, எனக்கு' என்று இந்த உலகம் எல்லாவற்றிற்கும் லேபிள்கள் போட்டு வைத்திருக்கும் வேளையில் அதற்கு எதிர் சான்றாக ' இது என் உடல், இது என் இரத்தம்' எனத் தன்னையே கையளிக்கின்றார்.

உயிர் வளர்ச்சியின் இன்றியமையாததொன்றாகிய உணவை நற்கருணையின் கருப்பொருளாக்குகின்றார் இயேசு. ஆனால் இன்று நற்கருணையின் பொருள் வெறும் ஆலயத்திற்குள் அடங்கிவிட்டது. ஒவ்வொரு முறை நாம் அருந்தும் உணவும் நற்கருணையே. தன்னையை வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்காக உடைத்த இயேசு நற்கருணையில் அதை நிறைவு செய்கின்றார்.
 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
இன்றைய வாசகங்கள்:
விப 12: 1-8
1 கொரி 11:23-26
யோவா 13:1-15


இன்றைய தினம் மீட்பின் வரலாற்றில் ஓர் அன்பின் நாள். தன் குருத்துவத்தில் சாதாரண மனிதர்களுக்கு இயேசு பங்கு கொடுத்து, தன் உடலையும், குருதியையும் உணவாகக் கொடுத்த புனித நாள். அன்பின் தத்துவத்தைச் செயல் வடிவில் எண்பித்துக் காட்டிய உன்னதமான தினம் என்று கூறலாம். எனவேதான் இந்த நாளை பெரிய வியாழன் என்று அழைக்கிறோம்.

இன்றைய தினத்தில் நான்கு நிலைகளில் சிந்திப்பது நல்லது:- எத்தனையோ மதங்கள் நமது பாரத நாட்டிலே, உலகத்திலே உள்ளன. அன்பைப் பற்றிப் போதிக்காத மதமே இல்லையென்று கூறலாம். ஆனால் இயேசுவின் அன்புக் கலாச்சாரம் ஒரு புதிய கலாச்சாரம். எந்த மதத்திலும் காணக் கிடைக்காத புதிய கட்டளை என்றால் அது மிகையாகாது. ஏனெனில் நான் உங்களிடம் அன்பு காட்டியதுபோல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் (யோவா. 13:34) என்ற புதிய கட்டளை வழங்குவதைக் கல்வாரியில் தானே நிறைவு செய்கிறார். தன் பாடுகளால், மரணத்தால், தன்னலமற்ற தியாகம் நிறைந்த, நிபந்தனையற்ற அன்பைக் காட்டுகிறார் இயேசு.

1. ஒரு போர் வீரன் - போர் முனையிலிருந்து தன் தாய் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். அப்பா! போர் முடிந்துவிட்டது. உடனடியாக ஊருக்கு வருகிறேன். பெற்றோருக்கு மிக்க மகிழ்ச்சி. என்னோடு என் நண்பன் ஒருவனையும் அழைத்து வருகிறேன். என்னை விட்டால் அவனுக்கு யாருமில்லை. போரில் இரண்டு கால்களையும் இழந்துவிட்டான். இதைக் கேட்ட பெற்றோரின் மனம் கசந்தது. ஒரு நாள், இரு நாள் என்றால் பரவாயில்லை. இரண்டு கால்களையும் இழந்தவனை எப்படிப் பராமரிப்பது என்று தடை செய்தார்கள். ஒரு வாரம் கழித்து பெற்றோருக்கு இந்த மகன் கடிதம் எழுதினான். இரண்டு கால்களையும் இழந்த ஒருவனை வைத்துக் கொண்டு சமாளிப்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்குப் புரிகின்றது. அதனால் நான் இங்கேயே தங்கிக் கொள்வதாக முடிவு எடுத்து விட்டேன். அங்கு உங்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை என்று எழுதினான். அப்போதுதான் இரண்டு கால்களையும் இழந்தவன் தன் மகன் என்பதை அறிந்துகொண்டார்கள்.

ஒருவனுக்கு ஊனம் என்றவுடன் அவனைப் பராமரிப்பதில் நிபந்தனை குறுக்கிடுவதை இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. நம்மில் பலரிடம் உண்மையான அன்பு இல்லை. எல்லாம் நிபந்தனையோடு கூடிய அன்புதான். சில சமயங்களில் நம் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் அடுத்தவர் மீது அன்பு வைப்போம். அவர்களைப் புகழ்வோம்.

பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவே வந்தேன் (மத். 20:28) என்ற தன் வாக்கிற்கு ஏற்ப, செயல்படுவதற்கு இறங்கி புரட்சியை உண்டாக்குகிறார். ஏனெனில் தலைவர்களின் கால்களைப் பிடிக்கும் இக்காலக் கட்டத்தில், தலைவருக்கெல்லாம் தலைவராம் இயேசு இங்கு சீடர்களின் கால்களைக் கழுவுகிறார். காலம் காலமாக இந்த உலகில், இந்த மனித சமுதாயத்தில் தலைவர்களுக்கு என்றுமே பஞ்சம் வந்ததில்லை. ஆனால் இன்றைய தலைமைத்துவம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? 400 ஆண்டுகளில் முகலாயர்கள் கொள்ளை யடித்ததைவிட, 150 ஆண்டுகள் வெள்ளையர்கள் சுரண்டிச் சென்றதைவிட, சுதந்திரம் பெற்ற இந்த 63 ஆண்டுகளில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிகார வர்க்கத்தினரே அதிக அளவில் கொள்ளையடித்து வருகிறார்கள்! இந்தத் தலைவர்களுக்குச் சுரண்டுவதற்காகவே சுதந்திரம் வழங்கப்பட்டதாக நினைக்கிறார்கள்! மதங்களைக் காப்பாற்ற மதவாதிகள் உண்டு. மொழிகளைக் காப்பாற்ற பண்டிதர்கள் உண்டு. கட்சிகளைக் காப்பாற்ற அரசியல்வாதிகள் உண்டு. ஆனால் மக்களைக் காப்பாற்ற யார்கள்? சவப்பெட்டி ஊழல், அரசு நில ஊழல், மாட்டுத் தீவன ஊழல், முத்திரைத்தாள் மோசடி , காமன்வெல்த் மோசடி, விளையாட்டில் சூதாட்டம் என்றெல்லாம் மக்களைச் சுரண்டி வாழும் தலைவர்கள்!!

ஆனால் இயேசு சீடர்கள் மத்தியிலே மவுனமாக, புரட்சியின் செயலாகத் தன் சீடர்களின் கால்களைக் கழுவுகிறார். தோட்டி என்றாலே முகம் சுழிக்கும்! அதேபோலத்தான் இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவியபோது சீடர்களே முகம் சுழித்தார்கள்.

ஒரு நாள் பட்டிமன்றம் நடந்தது. திருவள்ளுவர் சிறந்தவரா? அல்லது இயேசு சிறந்தவரா? என்று. தலைப்பே தவறாக இருந்தாலும் வாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். இரு அணிகளும் சிறப்பாக வாதிட்டார்கள். ஏனென்றால் திருக்குறளிலும் கவின்மிகு கருத்துகள் உண்டு. விவிலியத்திலும் சிறப்பு மிக்கச் சிந்தனைகள் உண்டு. ஆனால் இறுதியில் நடுவர் அவர்கள் இயேசுவே சிறந்தவர் எனத் தீர்ப்பு வழங்கினார். காரணம், இயேசு சொன்னதை வாழ்ந்து காட்டினார் என்பதற்கு விவிலியம் சாட்சி. ஆனால் வள்ளுவர் தான் சொன்னதைச் செய்துக் காட்டினாரா என்பதற்குச் சாட்சியம் இல்லை என்றார் நடுவர்.

ஆம்! இயேசு போதித்ததை வாழ்ந்தார்.


அன்று இரவு அப்பத்தையும், இரசத்தையும் எடுத்து, "இது என் உடல், இது என் இரத்தம்" என்று பிட்டு, பகிர்ந்து கொடுத்தார். மனித வரலாற்றில் இறைவன் தொடர்ந்து நம்மோடு இருக்கவே நற்கருணையை ஏற்படுத்தி கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றாகவும், உச்சகட்டமாகவும் தந்தார். நம்மை வாழ வைக்க தன்னையே பிட்டுக் கொடுத்தார்.

ஒரு பிச்சைக்காரன் வீடு வீடாகச் சென்று சோறு கேட்பான். ஒரு நாள் ஒரு வீட்டில் சோறு வாங்கியவுடன் வேகமாக நடந்து சென்றான். சோறு கொடுத்த அம்மையார் ஆச்சரியப்பட்டார்! மறுநாள் பிச்சை எடுக்க வந்தவனைப் பார்த்து என்னிடம் சோறு வாங்கிக் கொண்டு வேகமாக எங்கே சென்றாய் என்று கேட்டபோது, வீதியின் கடைசியிலே ஒரு மரத்தின் அடியிலே ஊனமுற்ற பிச்சைக்காரன் சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. நீங்கள் கொடுத்ததை அவனிடம் கொடுக்க வேகமாகச் சென்றேன் என்றான் அந்த பிச்சைக்காரன். பார்த்தீர்களா அன்பின் பகிர்தலை! ஆம்! இந்த நற்கருணை வாழ்வு நம்மையும் பிறருக்குப் பகிர்ந்து கொடுக்க இட்டுச் செல்ல வேண்டும்.

இயேசு செய்த இந்த மகத்தான பாஸ்காவைத் தொடர்ந்து நிறைவேற்ற குருத்துவத்தை ஏற்படுத்தினார். ஆம்! குருக்கள் அல்லாதோர் பொதுக் குருத்துவத்தில் திருமுழுக்கால் பங்கு பெறுகிறீர்கள். நாங்களோ பணிக்குருத்துவத்தால் இத் திருநிகழ்ச்சியை நிறைவேற்ற அழைக்கப்பட்டுள்ளோம்.

ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், கைம்பெண்கள், வலிமையற்றோர், பிணியுற்றோர், ஊனமுற்றோர், முகவரி இல்லாதவர்களின் வாழ்வுக்காக இயேசுவைப் போல பலிப் பொருளாக ஒவ்வொரு நாளும் மாறுவதே நம் குருத்துவ வாழ்வு. போதகரும், ஆண்டவருமாகிய நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவ வேண்டும் (யோவா. 13:14) என்றார் இயேசு. நாம் உட்கொள்ளும் நற்கருணை நம் மத்தியில் அன்றாடம் வாழும் நம் அடித்தட்டு மக்களின் நலனில் அக்கறை காட்டும் செயல்பாட்டிற்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டும். இயேசுவின் சீடர்கள் தொண்டராக, பணியாளராகத்தான் இருக்க முடியும். இல்லையேல் அவர்கள் சாத்தானின் சீடர்கள்!

 
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
இன்றைய வாசகங்கள்:
விப 12: 1-8
1 கொரி 11:23-26
யோவா 13:1-15


இவர்களே என் உண்மையான சீடர்கள்

நமது ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையின் கடைசி நாள்கள்.

இயேசு தாம் அன்பு செய்த பன்னிரெண்டு சீடர்களை அழைத்து, பந்தியிலே அமர்ந்து, துண்டைத் தமது இடுப்பில் கட்டிக்கொண்டு, அவர்களது பாதங்களைக் கழுவினார்!

கால்களைக் கழுவுதல் என்பதற்கு அர்த்தமென்ன? கால்களைக் கழுவுவதற்கு அன்பு செய்தல் என்பது அர்த்தமாகும். இயேசு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்து, உயிர்த்த இஸ்ரயேல் நாட்டிலே இஸ்ரயேல் மக்கள் அவர்களால் அன்பு செய்யப்படுகின்றவர்களின் கால்களைத் தண்ணீரால் கழுவி அவர்களை வீட்டிற்குள் வரவேற்று உபசரிப்பார்கள்.

நமது ஆசியா கண்டத்திலே பல நாடுகளில் இந்தப் பழக்கம் இன்றும் நடைமுறையில் உண்டு! சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு பங்கிற்கு பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டேன்!

நான் அப்பங்கில் முதன் முதலில் கிராமத்துக்குள் நுழைந்தபோது ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் என்னை நிற்க வைத்து என் பாதங்களைக் கழுவினார்கள்! பிறகுதான் வீட்டுக்குள் வரவேற்று உபசரித்தார்கள்! ஆகவே பாதம் கழுவுதல் என்பது அன்பிற்கு அடையாளம்.

புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் 4:8-இல் கடவுள் அன்புமயமானவர் என்று படிக்கின்றோம்.

அன்பிலே இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நம்மை அன்பு செய்பவர்களை நாம் அன்பு செய்வது! இதற்குப் பெயர் மனித அன்பு. மற்றொரு அன்பு நம்மை அன்பு செய்யாதவர்களையும், வெறுப்பவர்களையும், பகைப்பவர்களையும் நாம் அன்பு செய்வது! இதற்குப் பெயர் இறை அன்பு. இதோ இன்று அவரை வெறுத்தவர்களின், அவரைத் தனியாக விட்டுவிட்டு ஓடக் காத்திருந்தவர்களின் பாதங்களை இயேசு கழுவி, பகையாளர்களை அன்பு செய்ய அழைக்கின்றார்.

இயேசு 12 திருத்தூதர்களின் பாதங்களைக் கழுவப் போகின்றார்! இன்று எப்படிப்பட்டவர்களின் பாதங்களை இயேசு கழுவுகின்றார் எனப் பாருங்கள்.

முதலில் திருத்தூதர்களின் தலைவராக விளங்கிய புனித பேதுருவை எடுத்துக்கொள்வோம்.

இவர் மூன்று முறை இயேசுவை மறுதலித்தவர்!

உனக்கு இயேசுவைத் தெரியுமா? என்று கேட்டபோது. தெரியாது. தெரியாது, தெரியவே தெரியாது என்று சொன்னவர்.

இயேசு அவரை மன்னித்து அவருடைய பாதங்களைக் கழுவினார்!

யூதாஸ் காசு காசு என்று பிசாசு போல அலைந்தவன்! முப்பது வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்தான்! முத்தம்! அது அன்பின் அடையாளம்! சரியான ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி இயேசுவை சிலுவைச் சாவுக்குக் கையளித்தவன் யூதாஸ்.

ஆனால் இயேசு அவனை மன்னித்துவிட்டார்! அவனுடைய பாதங்களைக் கழுவினார்.

செபதேயுவின் மக்கள் யாக்கோபும், யோவானும் பதவி ஆசை பிடித்தவர்கள்! (மாற் 10:35-41). அம்மாவைத் தூண்டிவிட்டார்கள்! நான் எருசலேமுக்குப் போகவேண்டும்! குற்றமற்ற என்னைக் குற்றவாளியாக்கி, பாவமற்ற என்னைப் பாவியாக்கி, என்னைச் சிலுவையில் அறைந்து கொன்றுபோடுவார்கள்! ஆனால் நான் உயிர்த்தெழுவேன் என்றார் இயேசு. அப்பொழுது சீடர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நீங்க கவலைப்படாதீர்கள் ஆண்டவரே! நாங்க உங்களுக்கு ஆறுதலாக இருப்போம் என்று சொல்லியிருக்கவேண்டும்!

ஆனால்! அப்படியெல்லாம் யாக்கோபும், யோவானும் சொல்லாமல், அம்மாவைத் தூண்டிவிட்டு, பதவி கேட்கச் சொன்னார்கள். அந்த அம்மா சோகமே உருவாக நின்ற இயேசுவிடம் போய், ஆண்டவரே நீங்க செத்து உயிர்த்த பிறகு என் மகன்கள் இருவரையும் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் உட்கார வச்சிக்கிருங்க அப்படின்னாங்க.

வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது! ஒரு தாத்தா போயி வீட்டுகாரருகிட்டே, நெருப்பை அணைச்சிடாதேப்பா, கொஞ்சம் சுருட்டைப் பத்தவச்சிக்கிறேன் அப்படின்னாராம்.

இயேசு பதவி ஆசை பிடித்த யோவானையும் யாக்கோபையும் மன்னித்து விட்டு அவர்களுடைய பாதங்களையும் கழுவினார்.

மாற்கு 9 : 33 - 37; திருத்தூதர்கள் அத்தனை பேரும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சொல்லி, நீனா, நானா என்று சண்டை போட்டார்கள்.

ஆனால் இயேசு எல்லாரையும் மன்னித்து விட்டார். மன்னித்து அவர்களுடைய பாதங்களைக் கழுவினார்.

பாதங்களைக் கழுவிய பிறகு இயேசு திருத்தூதர்களைப் பார்த்து, நான் உங்களுக்கு முன் மாதிரி காட்டினேன் ! நீங்களும் என்னைப் போலவே வாழுங்கள் என்றார்!

ஆம். இன்று நம் பகைவர்களை அன்பு செய்ய, இயேசு ஆண்டவர் நம்மை அழைக்கின்றார்! முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு இதோ ஓர் உதாரணம்:

23-02-2002-ஆம் ஆண்டு மாலை மலர் என்னும் பத்திரிகையில் வந்த செய்தி இது! அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்னும் பத்திரிகை ஒன்று உண்டு! அதற்கு செய்தி சேகரிப்பதற்காக டேனியேல் என்பவர் பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகருக்குச் சென்றார்! அவரைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றார்கள்.

ஒரு நாள் தீவிரவாதிகள் டேனியேலின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்கள். கொலை செய்யப்பட்ட காட்சியை வீடியோ எடுத்தார்கள். பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பிவைத்தார்கள். செய்தி அமெரிக்க அரசுக்கு எட்டியது. அப்போது அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் கொலையாளிகளை சும்மா விட மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

டேனியேலின் மனைவியின் பெயர் மரியேன் - மாதாவின் பெயர். அவருக்கு 38 வயது. ஏற்கனவே ஒரு குழந்தை உண்டு! அப்போது 7 மாத கர்ப்பிணி.

அவர் கண்ணீர் மல்க அறிக்கை ஒன்றை பத்திரிகைளில் வெளியிட்டார். "என் கணவரை ஈவு இரக்கமின்றி கொலைசெய்துவிட்டார்கள். அவர் எந்தக் குற்றமும் செய்யாதவர்! அவரைக் கொன்று விடாதீர்கள் என்று கடத்தல்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதைக் கேட்கவில்லை.

என் கணவரைக் கொன்றவரைப் பழிவாங்க வேண்டாம். பழிவாங்குவது மிகவும் எளிது! தீவிரவாதத்தை தீவிரவாதத்தால் வெல்ல முடியாது. அன்பு, மனித நேயம் இவற்றால் மட்டுமே வெல்ல முடியும்" என்றார்.

இவர் ஓர் உண்மையான கிறிஸ்தவர்.

இந்தப் பெண்ணைப் போல வாழத்தான் இன்று நம்மை இயேசு அழைக்கின்றார்!

சில நேரங்களில் சில மனிதர்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும். காரணம் இவர்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்பதற்காகப் பேசுவதில்லை ! எதையாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகின்றார்கள்.

இயேசு! அவர் போதித்ததைச் சாதித்துக் காட்டினார்! அவர் மலைப் பொழிவில் மத் 5: 39-இல் உனது வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் உன் இடது கன்னத்தைத் திருப்பிக்காட்டு என்கின்றார். திருப்பி அறையாதவர்களைப் பார்த்து அறைந்து பாருங்கள்!

யாராவது நம்மை அறைந்தால் அது நமது வலது கன்னத்தில் விழாது! இடது கன்னத்தில்தான் விழும்! இஸ்ரயேல் நாட்டிலே யாராவது ஒருவர் நான்கு பேர் நடுவிலே ஒருவரை அவமானப்படுத்த விரும்பினால் அவரை அவர் புறங்கையால் அறைவார் அல்லது அவரது இடது கையால் அறைவார்.

இயேசு நம்மைப் பார்த்து, சாதாரணமாக திடீரெனக் கோபப்பட்டு உங்களை அறைபவர்களை நீங்கள் மன்னித்தால் மட்டும் போதாது; திட்டமிட்டு உங்களைப் பகைப்பவர்களையும் அன்பு செய்யுங்கள் என்கின்றார்.

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் இது பழைய கட்டளை! எதிரிகளை அன்பு செய் - இது புதிய கட்டளை.

நாம் புதிய கட்டளையைப் பின்பற்றினால் கடவுள். இதோ இந்த மக்கள் வழிபாட்டை வாழ்க்கையாக்கியிருக்கின்றார்கள் ! இவர்களை நான் வாழவைப்பேன். இவர்களே என் உண்மையான சீடர்கள், கிறிஸ்தவர்கள் எனச் சொல்லி நம்மீது பாசத்தைப் பொழிவார். எதிரிகளை மன்னிக்கும் மனத்தை நற்கருணை ஆண்டவரிடம் கேட்போம் (இரண்டாம் வாசகம்). முதல் வாசகம் சுட்டிக்காட்டும் ஆட்டின் இரத்தமாக நமது மன்னிப்பு இருக்கட்டும்.

மேலும் அறிவோம் :

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (குறள் : 155).
பொருள் : அயலார் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத் தண்டிப்போரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கருதி மதிக்கமாட்டார்கள். ஆனால் அயலார் செய்திடும் தீமையைப் பொறுத்தாற்றிக்கொள்வோரை அறவோர் அருமையும் அழகும் மதிப்பும் மிக்க பொன்னைப் போன்று போற்றிப் பேணிக்கொள்வர்.



 
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
இன்றைய வாசகங்கள்:
விப 12: 1-8
1 கொரி 11:23-26
யோவா 13:1-15


பேருந்து ஒன்றில் ஒரு பிச்சைக்காரன் கையை நீட்டி பயணிகளிடமிருந்து காசு வாங்கிக் கொண்டிருந்தான். அதே பேருந்தில் நடத்துனரும் கையை நீட்டி பயணிகளிடமிருந்து காசு வாங்கிப் பயணச் சீட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தார். நடத்துனர் பிச்சைக்காரனிடம், * நீயும் கையை நீட்டி காசு வாங்கிக் கொண்டிருக்கிறாய். நானும் கையை நீட்டி காசு வாங்கிக் கொண்டிருக்கிறேன். யார் பிச்சைக்காரன்? யார் நடத்துனர்? என்ற வேறுபாடு தெரியாமல் போய்விட்டது. மரியாதையாய் பேருந்திலிருந்து கீழே இறங்குடா!" என்று கூறினார்.

இக்காலத்தில் குருக்கள் செய்துவரும் பல பணிகளைப் பொதுநிலையினர் செய்து வருவதால், பொதுநிலையினர்களுக்கும் குருக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு மங்கிக்கொண்டு வருகிறது. இக்காலக்கட்டத்தில் பெரிய வியாழனாகிய இன்று குருக்களின் தனித்தன்மை என்ன என்பதையும், அவர்கள் தங்கள் தனித்தன்மையை இழக்காமல் பொதுநிலையினருடன் இணைந்து செயல் ஆற்றுவது எவ்வாறு என்பதையும் பற்றிச் சிந்திப்பது நல்லது.

பொதுநிலையினர், திருப்பணியாளர்கள் இதுவரை ஆற்றிவந்த ஒரு சில பணிகளைச் செய்வதால் அவர்கள் திருப்பணியாளர்கள் ஆவதில்லை. ஒருவரைத் திருப்பணியாளராக ஆக்குவது அவர் பெறும் திருப்பட்டம். திருப்பட்டங்கள் மூன்று. அவை முறையே, திருத்தொண்டர் பட்டம், குருப் பட்டம், ஆயர் பட்டம். இப்பட்டங்களில் ஏதாவது ஒன்றைப் பெறாதவர்கள் திருப்பணியாளர்கள் அல்ல என்பதை உணாக

இன்றையச் சூழலில் குருக்கள் தேவையா? நற்கருணை இன்றித் திருச்சபை இல்லை; குருக்கள் இன்றி நற்கருணை இல்லை. எனவே குருக்கள் திருச்சபைக்குத் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இரண்டாவது வத்திக்கான் சங்கம் மிகவும் தெளிவாகக் கூறுகிறது. விசுவசிப்போருக்கு எவரும் திருமுழுக்கு அளிக்கலாம் என்றாலும், குரு ஒருவரே மறையுடலை உருவாக்கும் அலுவலை நற்கருணைப்பலி மூலம் நிறைவேற்ற முடியும் (திருச்சபை, எண் 17).

ஞானஸ்நானம் என்னும் திருவருள்சாதனத்தால் குருக்கள் அழியா முத்திரையுடன் திருப்பணியாளர்கள் ஆகின்றனர். கிறிஸ்துவின் பெயரால் மக்களுக்குப் போதித்து, மக்களைப் புனிதப்படுத்தி, மக்களை வழிநடத்து கின்றனர். இப்பணிகளை அவர்கள் கிறிஸ்துவின் பெயரால், மறு கிறிஸ்துவாக, கிறிஸ்துவின் ஆளுமையில் ஆற்றுகின்றனர். குருக்கள் மட்டுமே திருப்பலியில் அப்பத்தையும், இரசத்தையும் கிறிஸ்துவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாற்ற முடியும். அவர்கள் மட்டுமே ஒப்புரவு அருள் அடையாளத்தில் மக்களின் பாவங்களை மன்னிக்க முடியும். எனவே பொதுநிலையினர் ஒருக்காலும் குருக்களின் இடத்தை நிரப்ப முடியாது. குருக்கள் திருச்சபைக்குத் தேவையில்லை என்ற நிலை உருவாக முடியாது,

நற்கருணை எவ்வாறு விசுவாசத்தின் மறைபொருளோ, அவ்வாறே குருத்துவமும் விசுவாசத்தின் மறைபொருள், விசுவாசமின்றிக் ருத்துவத்தையோ குருக்களையோ ஏற்க முடியாது. எந்தக் குருவும் குருத்துவப் பணிக்குத் தகுதியற்றவர். திருத்தூதர் பவுல் கூறுகிறார்: 'எங்களுக்குத் தகுதியில்லை எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது" (2 கொரி 3:5), கடவுள் தகுதியற்ற மனிதர்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய பணிக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறார். இரண்டாம் நற்கருணை மன்றாட்டில், "உம் திருமுன் நின்று ஊழியம் புரியத் தகுந்தவர்களென எங்களை ஏற்றுக்கொண்டீர், எனவே உமக்கு நன்றி செலுத்துகிறோம்" என்று குரு கூறுகின்றார். குருக்களை மக்கள் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகள், கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறினார். "உங்களுக்குச் செவிசாய்ப்பவர் எனக்குச் செவிசாய்க்கிறார். உங்களைப் புறக்கணிப்பவர் என்னைப் புறக்கணிக்கிறார். என்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறார்" (லூக் 10:16).

ஒரு குரு யார்? அவருடைய பணிகள் எத்தகையவை என்பதைப் பிரஞ்சுக் குரு லக்கோடர் பின்வருமாறு விவரிக்கிறார். "குரு உலகில் வாழ்கின்றவர். ஆனால் உலகத்தைச் சாராதவர். எந்தக் குடும்பத்தையும் சாராது எல்லாருக்கும் உறவினர். துன்பம் துடைத்து இன்பம் பெருக்கும் இறை அன்பர். இரகசியம் அறிந்து இறைபணி ஆற்றுகின்றவர். அன்பை வழங்க அவருக்கு ஓர் அனல் நெஞ்சம். கற்பைக் காக்க அவருக்கு ஒரு கல் நெஞ்சம். திருமறை நவின்று அருட்கரம் வழங்கும் ஆன்மவேடர். அருள் சாதனங்களை வழங்கி அவனியோர் கரைசேர விழைபவர், கடவுளே! இது என்ன வாழ்வு! அது உம்முடைய வாழ்வு! ஓ இயேசு கிறிஸ்துவின் குருவே!"

"இயேசுவின் இதய அன்பே ஞானஸ்நானம்" என்று குருத்துவத்திற்கு இலக்கணம் வகுத்த புனித ஜான் மரிய வியான்னி கூறுகின்றார். "ஒரு குரு யார்? என்பதை இம்மையில் முழுமையாக உணர்ந்தோமென்றால், நாம் இறந்துவிடுவோம், பயத்தினால் அல்ல, அன்பினால்," கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுக்க, ஒருவர் அவரை மறுதலிக்க, பாடுகளின் போது மற்றவர்கள் அனைவரும் (யோவானைத் தவிர) ஓடிப்போனார்கள். எனவே, இக்காலத்திலும் ஒருசில குருக்கள் திசைமாறிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சி அடையத் தேவையில்லை. குருத்துவ அழைத்தலை உதறிவிட்டு ஓடிப்போனக் குருக்களைப்பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்வதைவிட தங்கள் அழைத்தலில் நிலைத்து நிற்கும் குருக்களுக்காகக் கடவுளுக்கு நன்றி கூறவேண்டும். கிறிஸ்து, "தந்தையே! என் சீடர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் மன்றாடவில்லை. தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்" (யோவா 17:15) என்று மன்றாடியதுபோன்று, நாமும் மன்றாடுவோம்.

குருக்களின் பணிக்ஞானஸ்நானம் பொதுநிலையினரின் பொதுக்குருத்துவத்திலிருந்து தன்னியல்பிலேயே வேறுபட்டது எனினும், இரண்டும் ஒன்றை ஒன்று தழுவியுள்ளது. ஓர் இளங் குருமட அதிபர் மாணவர்களிடம், "நீங்கள் ஒழுங்காக நடக்கவில்லையென்றால் உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன்" என்று கூற, ஒரு மாணவன் எழுந்து அதிபரிடம், "எங்களை அனுப்பிவிட்டு நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று திருப்பிக் கேட்டபோது. அதிபர் வாயடைத்து நின்றார். அவ்வாறே பொதுநிலையினர் இல்லையென்றால், குருக்கள் என்ன செய்ய முடியும்? பொதுநிலையினரின் பொதுக் குருத்துவத்தைச் செயல்படுத்தவே குருக்களின் பணிக்ஞானஸ்நானம் உள்ளது பொதுநிலையினரும் தங்கள் வாழ்க்கை நிலைக்கேற்ப, கிறிஸ்துவின் போதிக்கும், புனிதப்படுத்தும், வழிநடத்தும் முப்பெரும் பணிகளிலும் பங்குபெறுகின்றனர். அனைத்துக் காரியங்களிலும் குருக்களுக்குப் பொதுநிலையினரின் ஒத்துழைப்புத் தேவை. எனவே குருக்கள் பொதுநிலையினரின் அழைத்தலையும் பணியையும் ஏற்று, மதித்து, ஊக்கவிக்க வேண்டும்,

இல்லறமும் துறவறமும் திருச்சபைத் தாயின் இரண்டு நுரையீரல்கள் போன்றவை. இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்றொன்றும் பாதிக்கப்படும். குருக்களும் பொதுநிலையினரும் தம்தம் தனித்தன்மையை மதித்து, இருவரும் இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே திருச்சபை மக்கள் நடுவில் கிறிஸ்துவின் அருளடையாளமாகச் செயல்பட முடியும். அதாவது, மீட்பைக் குறித்துக் காட்டும் அடையாளமாகவும் அம்மீட்பை வழங்கும் கருவியாகவும் செயல்பட முடியும்.

பொதுநிலையினரும் குருக்களும் பெரிய வியாழன் அன்று தீவிரமாகச் சிந்தித்து செல்பட வேண்டியவை பின்வருமாறு:

1. பெரிய வியாழன் மட்டும் பன்னிருவரின் பாதங்களைக் கழுவும் சடங்கை நடத்தினால் போதாது. ஒவ்வொரு நாளும் நாம் நம்மோடு இருப்பவர்களின் பாதங்களைக் கழுவ வேண்டும். அதாவது. மற்றவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும். ஏனெனில், "கிறிஸ்து தொண்டு ஏற்பதற்கு அல்ல. மாறாகத் தொண்டு ஆற்றுவதற்காக வந்தார்" (மாற் 10:45)

2 "இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்," "இது உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தம்." இவ்வார்த்தைகள் வசீகர வாய்ப்பாடாக மட்டுமல்ல, அவையே நமது வாழ்க்கை முறையாகவும் மாற வேண்டும். நாள்தோறும் நாம் நம்மை பிறரின் மேம்பாட்டிற்காகக் கையளிக்க வேண்டும். அதாவது, பலிவாழ்வு வாழ வேண்டும். பாலி ஒப்புக்கொடுப்பவர்களாக மட்டுமல்லாமல், பலிப்பொருளாகவே மாற வேண்டும்.
 
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
இன்றைய வாசகங்கள்:
விப 12: 1-8
1 கொரி 11:23-26
யோவா 13:1-15



உறவுகளின் கொண்டாட்டம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் முத்துக் குளிப்பவர்கள் கடலுக்கடியில் 400 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிப் போன ஸ்பெயின் நாட்டுக் கப்பல் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதில் பல விலை உயர்ந்த பொருள்கள் இருந்தன. அழகான கலைநயமிக்க வேலைப்பாடு கொண்ட தங்க மோதிரம் ஒன்று கிடைத்தது. நீட்டிய கை ஒன்று இதயத்தை ஏந்தியிருப்பது போன்ற சித்தரிப்பு. அதனடியில் "இதைவிட மேலாக உங்களுக்குக் கொடுப்பதற்கு வேறொன்றும் இல்லை" என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. திருமண நாளன்று அளிக்கப்பட்ட மோதிரம் அது.

இன்றைய விழாவின் உட்பொருள் உணர்த்துகின்ற வார்த்தைகள். இயேசு தன் உடலையும் இரத்தத்தையும் நமக்கு வழங்கி "இதைவிட மேலாக உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேறொன்றும் இல்லை என்று நம் ஒவ்வொருவரிடமும் கூறுகின்ற நாள் இது!

ஆண்டவராய், மீட்பராய் நாம் ஏற்றுக்கொண்ட தலைவன் இயேசு - நமக்காகத் தன்னையே பலியாக்குபவர். நற்கருணை என்பது தியாகப்பலி - நமக்காகத் தன்னையே உணவாக்குபவர். நற்கருணை என்பது திருவிருந்து. - நம்மோடு என்றும் உடன் இருப்பவர். நற்கருணை என்பது இறைப் பிரசன்னம்.

இந்த முப்பரிமாணம் கொண்ட நற்கருணையை இப்பே தெல்லாம் இந்த முப்பரிமாணத்தையும் உள்ளடக்கிய புதியதொரு கோணத்தில் பார்க்கிறோம். நற்கருணை என்பது ஒரு சமுதாய உறவின் கொண்டாட்டம்" என்ற கருத்து வளர்ந்து வலுப்பெற்று வருகிறது. உணவு உடலையும் உயிரையும் மட்டுமா வளர்க்கிறது? மாறாக நம் உறவையும் உணர்வையும் வளர்க்கிறது.

இயேசு தன் இறுதி இரவுணவைப் பாஸ்கா உணவாகக் கொண்டாடினார் என்கின்றனர் நற்செய்தியாளர்கள் (மத்.26:17, மார்க்.14:12, லூக்.22:15). எனவே இயேசுவின் இறுதி உணவுக்கும் இஸ்ரயேலரின் பாஸ்கா விழாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

தொழில் ரீதியாக இஸ்ரயேலில் இரு பிரிவினர். ஆடு மேய்ப்பவர்கள், விவசாயம் செய்பவர்கள். ஆடு மேய்த்தவர்கள் மேய்ப்பு நிலம் தேடி இடம் விட்டு இடம் மாறும்போது ஆடுவெட்டி வழிபட்ட விழா 'பாசா' என்பதாகும். விவசாயம் செய்தவர்கள் அறுவடையின் போது புதிய தானியங்களிலிருந்து அப்பம் செய்து கொண்டாடிய விழா 'மசோது எனப்படும். இரு சமுதாயத்தினரும் தங்கள் கூட்டு உணர்வைக் கொண்டாடும் வகையில் காலப் போக்கில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டன.

எகிப்தியரின் அடிமைத் தளையில் இணைந்த இச்சமுதாயம் தங்கள் விடுதலைக்கு முந்திய இரவு இவ்விரு விழாக்களையும் இணைத்துத்தான் 'பாஸ்கா' வாகக் கொண்டாடியது. இவ்வாறு யூத சமுதாயத்தின் விடுதலை விழாவாக உருப்பெற்றது பாஸ்கா. ஒரு சமுதாயத்தின் ஒட்டு மொத்தப் பங்கேற்பாக, பகிர்ந்து கொண்ட உணவில் பூத்த புதிய உறவாக இஸ்ரயேலரிடையே நிலவி வந்த அந்த விடுதலை விழாவைத்தான் இயேசு கொண்டாடினார். தனது தியாக வாழ்வின் அருள் சின்னமாக மாற்றினார் - விடுதலை வாழ்வே இலட்சியம், பணி வாழ்வுக்கே அர்ப்பணம், தியாகப் பலி வாழ்வே செயல்பாடு என்ற உணர்வோடு.

அப்படியானால் நமது நற்கருணை வழிபாடு ஒரு சமுதாய உறவுக் கொண்டாட்டமாக இருக்க வேண்டாமா? இயேசு தமது 12 சிடர்கள் அடங்கிய சிறு சமுதாயத்துடன் பாஸ்காவைக் கொண்டாடினார். தன்னைக் காட்டிக் கொடுக்கப் போகும் யூதாசையும் தன்னை மறுதலிக்கப் போகும் பேதுருவையும் கூடப் பந்தியில் பங்கெடுக்க அழைத்தார். துரோகி யூதாசைக் கூட 'நண்பா' என்று அழைத்த அன்பு இயேசுவினுடையது. அன்பு செய்பவர்களை அன்பு செய்வது எளிது. அன்பு செய்யாதவர்களை அன்பு செய்வது கடினம். இத்தகைய கடினமான உறவுக்கு அனைவரையும் அழைக்கிறார். இயேசுவின் பந்தியில் ஏற்றத்தாழ்வுக்கு, பிரிவினைக்கு இடமில்லை, பலி செலுத்த வரும்போது மனத்தாங்கலா, முதலில் சமாதானம் பிறகுதான் காணிக்கை. இதுதானே இயேசுவின் அருள்வாக்கு, அணுகுமுறை!

"அன்பின் அருள் அடையாளம்" என்ற திருத்தந்தை 16ஆம் ஆசீர்வாதப்பரின் திருத்தூது மடலில் 3 முக்கிய உண்மைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
1. நற்கருணை நம்பப்பட வேண்டிய மறைபொருள்.
2. நற்கருணை கொண்டாடப்பட வேண்டிய மறைபொருள்.
3. நற்கருணை வாழப்பட வேண்டிய மறைபொருள்.

நற்கருணையில் இயேசு பிரசன்னமாய் இருக்கிறார், பலியாக ஒப்புக் கொடுக்கப்படுகிறார். உணவாக உட்கொள்ளப்படுகிறார். நாம் இவற்றை நம்புகிறோம். இதில் பெரிய பிரச்சனை இல்லை. அவ்வாறே ஒவ்வொரு கணமும் உலகின் எங்கோ ஒரு மூலையில் நற்கருணை கொண்டாடப்படுகிறது. இதிலும் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் நற்கருணை மறைபொருளை நாம் வாழ்ந்து காட்டுகிறோமா?

திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் தான் இறப்பதற்குமுன் பெரிய வியாழனன்று குருக்களுக்கு வழங்கிய மையச் செய்தி: "இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் உடல், சிந்தப்படும் இரத்தம். இந்த வார்த்தைகள் வெறும் வாய்ப்பாடாக மட்டும் அமையாமல் வாழ்க்கை முறையாக வடிவெடுக்க வேண்டும். எனவே நற்கருணை வழிபாட்டில் பங்கேற்கும் குருக்களாகட்டும் பொது நிலையினராகட்டும் தங்கள் வாழ்வைப் பிறருக்காகப் பலியாக்க வேண்டும்."

தமிழகத்தின் வடக்கு மாவட்டம் ஒன்றில் ஒரு பங்கு. ஆலயத்தின் முன் வாசலில் ஒரு பெரிய பாறாங்கல். அதனைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுத்தான் திருமணமாகும் இளைஞன் கோவிலுக்குள் நுழைய வேண்டும். இது ஏன்? எப்படி இந்தப் பழக்கம் வந்தது? யாருக்கும் பதில் தெரியவில்லை. மிக வயதான ஒருவர் விளக்கினார்: "இது இளைஞனின் வீரத்தை எண்பிப்பதற்காக. இது தமிழ்க் கலாச்சார மரபும் கூட. அந்தக் கல்லைத் தூக்கித் தலைக்குமேல் கொண்டு போய் பின்னால் போட வேண்டும். அதன்பிறகுதான் ஆலயத்தில் தாலி கட்டுவர். காலப்போக்கில் தலைக்கு மேல் தூக்கிப் பின்னால் போட்ட நிலை மாறி, தலைவரை, கழுத்துவரை, இடுப்பு வரை, முட்டி வரை என்றாகியது. கடைசியாகத் தூக்க முடியாத நிலை, தூக்க முடியவில்லை என்பதற்காகத் திருமணத்தை நிறுத்த முடியுமா? எனவே தொட்டுக் கும்பிட்டாவது கோவிலுக்குள் நுழையட்டும் என்றானது.

தூக்க முடியவில்லை என்பதால் தொட்டுக் கும்பிடுவது போல, நற்கருணையை வாழ முடியவில்லை என்பதால் வணங்கி ஆராதித்துத் திருப்தி அடைகிறோமா?
வாழ்க்கை என்பது உறவுகளின் சங்கமம்!
வழிபாடு என்பது உறவுகளின் கொண்டாட்டம்!
 
தியாகமான பணி

இங்கிலாந்து நாட்டில் ஒரு காதல் இணைக்கு மணஒப்பந்த விழா நடந்தது. நிச்சயம் முடிந்த நிலையில் நாட்டில் எதிர்பாராத போர். எல்லா இளைஞர்களும் போர் முனைக்குச் செல்ல அரசு பணித்தது. மண ஒப்பந்தமாகியிருந்த அந்த இளைஞனும் போக நேர்ந்திட அருட்சாதனம் ஒத்தி வைக்கப்பட்டது.

இளைஞன் கடிதத் தொடர்பு வழித் தன் காதலை வெளிப்படுத்தி வந்தான். மணமகளும் அந்தக் கடிதங்களைப் படித்துப் படித்தே தன் மனத்தில் நிறைந்தவன் விரைவில் வருவான் என்று காத்திருந்தாள்.
திடீரென்று கடிதத் தொடர்பு நின்றுவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கடிதம் வந்தது. முற்றிலும் பழக்கப்படாத கையெழுத்து. " கடுமையான போர் ஒன்றில் என் இரண்டு கைகளையும் இழந்து விட்டேன். என்னால் எழுத இயலாது. ஒரு நண்பரைக் கொண்டு எழுதுகிறேன். நீ எனக்கு மிகமிக அருமையானவள். எனினும் இந்த நிலையில் உன்னை மணந்து கொள்வது என்பது உனக்கு இழைக்கின்ற மிகப்பெரிய கொடுமையாகும். எனவே மணஒப்பந்தக் கட்டிலிருந்து உன்னை மனதார விடுவிக்கிறேன். ஏற்ற ஒரு துணையைக் கண்டு நீ மகிழ்ச்சியோடு இருக்கிறாய் என்ற செய்தியே எனக்கு நிறைவு தரும்",
அடுத்த கணமே அந்த இளம்பெண் புறப்பட்டாள். போர்ப் படை சார்ந்த அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள். தன் காதலனைக் கண்டதும் கண்களில் நீர் மல்க அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டுச் சொன்னாள்: " உங்களை விடமாட்டேன். இந்த என் இரு கைகளும் உங்கள் கைகளாக இயங்கும்"
என்னே அவளுடைய தியாக அன்பு! இயேசு காட்டிய பேரன்பின் மங்கிய சாயல் அது! மனித அன்புக்கு வரம்பு உண்டு. இறைவன் அன்புக்கு எல்லை ஏது?

"மானிட மகன் தொண்டு ஏற்பதற்கல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமே வந்தார்". (மத்.20:28) " எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்" (போ.6:51) என்ற இயேசுவின் கூற்றுக்கள் பெரிய வியாழனன்று இறுதி இரவு உணவுவேளையில் செயல்வடிவம் கண்ட நிகழ்வுகள் தாம். நற்கருணையை நிறுவியதும் சீடர்களின் காலடிகளைக் கழுவியதும். இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற இரு வேறு நிகழ்வுகள் அல்ல. ஒரே அர்ப்பண அன்பின் வெளிப்பாடு.
இயேசுவின் அன்புக்கு 2 பக்கங்கள்: 1) தியாகமான பணி, 2. தாழ்ச்சியான பணி.

பணி இணையாத அன்பு போலித்தனம்; அன்பு கலவாத பணி அடிமைத்தனம்! நற்கருணையில் இயேசுவோடு ஒன்றிப்பு என்பது அன்புப் பணியால் மட்டுமே சாத்தியமாகும். அதற்கு இன்றைய வழிபாடு கொடுக்கும் அழைப்பு, விடுக்கும் சவால்:

- நற்கருணையாக வாழுங்கள் (Be Eucharists)
- பணியாளர்களாகச் செயல்படுங்கள் (Be Servants)
நற்கருணையில் இது இயேசுவின் உடல், இது இயேசுவின் இரத்தம் என்று அன்று, இது எனது உடல் என்று நொறுக்கப்படும். இது எனது இரத்தம் என்று சிந்தப்படும். இது குரு என்ற தனி மனிதனின் வார்த்தை அன்று. இயேசுவின் மறைஉடலான திருச்சபையின் வார்த்தை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கல்வாரிப் பலிக்கும், அதன் மறுபதிப்பாக இன்று ஆலயப் பீடத்தில் நடைபெறும் திருப்பலிக்கும் முக்கிய வேறுபாடு உண்டு. அங்கே இயேசு தனியாகத் தனது ஊனுடலில் பலியானார். அது இயேசுவின் பலி. இங்கோ தனது மறையுடலில் பலியாகிறார். அதாவது இயேசு நம்மில் பலியாகிறார். நாம் இயேசுவில் பலியாகிறோம். எனவே இது நமது பலி. இந்த உண்மைக்கு நம் வாழ்வில் எப்படிச் செயல் வடிவம் கொடுக்கிறோம்?

என் உடலை உண்டு என் குருதியைக் குடியுங்கள் என்று இயேசு சொன்னதும் கசாப்புக் கடைதான் யூதர்களின் நினைவுக்கு வந்தது. இன்றுகூட இயேசுவின் உடல் குருதி என்றதும் அப்பமும் இரசமும் மட்டும் தானே நம் நினைவுக்கு வருகின்றன. அதோடு சேர்ந்து மண்ணில் வதைக்கப்படுவோரின் சிதைத்த உடலும் சிந்தும் இரத்த வியர்வையும் நம் உணர்வுகளில் எழுந்தால் அப்போது வாழ்வோடு இணைந்த பலியாகும்.

"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றொருவருடைய காலடிகளைக் கழுவ கடமைப்பட்டிருக்கிறீர்கள்" (யோ.13;14) என்றார் இயேசு. இந்த நிகழ்வில் பேதுரு தயங்கினார். தன் தகுதியற்ற நிலையை வெளிப்படுத்தினார். யூதாசு தயங்கவில்லை. மறுப்புச் சொல்லவில்லை. இயேசு அந்தத் துரோகியின் காலடிகளையும் கழுவினார். அப்படி ஒரு தியாகமான, தாழ்ச்சியான பணிக்காகவே அந்த இரவில் பணிக் குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

இயேசுவின் திருச்சபையில் தலைமை என்பது தொண்டு (மார்க்.10:41-45). பதவி என்பது பணி என்பது மறைந்து, பணி ஒரு பதவியாகி விட்ட காலம் இது. " குருக்கள் தங்களைப் பணியாளர்கள் என்று இப்போது கூறிக் கொள்வது ஒரு மாய்மாலம், ஒரு பாசாங்கு என்றே எனக்குப் படுகிறது. குருக்களிடையே நிலவும் பதவிப் போட்டி அப்படி ஒன்றும் பரமரகசியம் அல்ல" என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டது நெஞ்சத்தை வேல் கொண்டு குத்துகிறது.
என் கடன் பணி செய்து கிடப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர்.

எவ்வாறு நற்கருணையில் இயேசு உடனிருந்து நமக்கு உணவளிக்கிறோரோ, அதேபோன்று நாமும் வாழ்விழந்து தவிப்பவர்களோடு உடனிருந்து, பயணித்து உயிரளிக்கும் ஆற்றலாக மாறுவோம்.
 
அருட்பணி.குழந்தை இயேசு பாபு


இன்றைய வாசகங்கள்
(14.04.2021) புனித வியாழன்
மு.வா: வி.ப 12: 1-8,11-14
ப.பா: தி.பா 115:12-13,15-18
இ.வா: 1 கொரி 11:23-26
ந.வா : யோவான் 13:1-15

ஆன்ம அடிமைத் தனத்திலிருந்து மீட்கும் புதிய -அன்பு பாஸ்கா!


ஒரு மனிதன் தொடர்ந்து குடித்து வந்தான். தன் குடும்பத் தேவைகளை கவனிப்பதே இல்லை. மனைவி பிள்ளைகள் மிகவும் துன்புற்றனர். ஒருமுறை பக்கத்துவீட்டு பெரியவர் இதைப்பற்றி விசாரித்த போது "நான் மற்றவர்களைப் போல் இல்லை. மனைவி பிள்ளைகளை அதிகம் நேசிக்கிறேன். நான் குடித்தாலும் யாரையும் அடிப்பது இல்லை. மாறாக அமைதியாகப் படுத்து உறங்கிவிடுவேன். தொந்தரவு செய்ய மாட்டேன். அதனால் நான் ஒன்றும் பெரிய பாவி இல்லை " என்றாராம். அதற்கு அப்பெரியவர் "இதனால் மட்டும் உன் தவறை ஞாயப்படுத்த முடியாது. உன் மனைவி பிள்ளைகளை நீ நேசிக்கவே இல்லை. உண்மையில் நீ நேசித்திருந்தால் அவர்களை வறுமையில் விட்டிருக்க மாட்டாய் "என்று கூறி " உனக்கு உண்மையான அன்பு இருந்தால் உன் குடும்பத்தை கவனி. அவர்களுக்காக உன் உடலையும் நேரத்தையும் உன் குடிப்பழக்கத்தையும் தியாகம் செய் " எனச் சொல்லிவிட்டு சென்றாராம்.அவ்வார்த்தைகளை ஆழமாகச் சிந்தித்த மனிதன் அன்புக்காக தன் குடிப்பழக்கத்தை விட்டான். தன் குடும்பத்திற்காக தன்னை முழுமைகக் கொடுத்தான். குடி என்னும் அடிமைத்தனத்திலிருந்து அவனும் வறுமை எனும் அடிமைத்தனத்திலிருந்து அவன் குடும்பமும் விடுதலை அடைந்தது.

இன்று புனித வியாழன். இன்றைய நாளில் நாம் இயேசு தன் சீடர்களோடு பாஸ்கா உணவு அருந்திய நிகழ்வைக் கொண்டாடுகிறோம்.இந்நாளில் இயேசு தன்னையே தாழ்த்தி தலைவன் என்ற நிலையிலிருந்து இறங்கித் தன் சீடர்களின் பாதங்களைக் கழுவும் நிகழ்வையும் நாம் நினைவு கூறுகிறோம். மேலும் இயேசு "இது என் உடல்.இது என் இரத்தம். இதைப் பெற்று உண்ணுங்கள்,பருகுங்கள் " என்று கூறி என்றும் அழியா தன் உடனிருப்பாக நற்கருணையையும், தன் நினைவாக பலியை நிறைவேற்ற குருத்துவத்தையும் ஏற்படுத்திய நாளிது.

இவ்விறுதி உணவை நாம் இயேசுவின் இறுதி பாஸ்கா விழா எனக் கூறுவது சிறந்தது. அதைவிட மேலாக இயேசு ஏற்படுத்திய புதிய பாஸ்கா விழா எனக் கூறுவது சிறந்ததாகவும் இருக்கும். பழைய ஏற்பாட்டில் முதன்முதலில் கொண்டாடப்பட்ட பாஸ்கா விழாவானது இஸ்ரயேலை யாவே இறைவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்பதற்கும் அவர்கள் ஒவ்வொருநாளும்
அடிமைத்தனத்தினால் அனுபவித்து வந்த உடல்ரீதியான இறப்பிலிருந்து விடுதலை அளிப்பதற்காகவும் கொண்டாடப்பட்ட பாஸ்கா.ஆனால் இயேசு ஏற்படுத்திய இந்த புதிய பாஸ்கா பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் அதனால் நாம் சந்திக்கின்ற ஆன்மீக இறப்பினின்றும் நம்மைக் காக்க இறைமகன் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட பாஸ்கா. இது அன்பின் பாஸ்கா.

இந்த பாஸ்காவிலே
நம் ஆண்டவர் இயேசு அன்பின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி தற்பெருமை, வெறுப்பு, அடக்குமுறை போன்ற பாவ அடிமைத்தனங்களில் நாம் வீழ்ந்து விடாத படிக்கு நமக்கு முன்மாதிரி காட்டியுள்ளார். தம் உடலையும் இரத்தத்தையும் கையளித்து சுய நலம் என்ற அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்க நம்மை பிறர்பணியில் பயன்படுத்த வேண்டும் என்ற வழியைக் கொடுத்துள்ளார். அத்தோடு புதிய கட்டளையாக அன்புக் கட்டளையை நமக்குத் தந்து அன்பு இருந்தால் எல்லாவித. அடிமைத்தனங்களிலிருந்தும் நாம் விடுதலை பெறலாம் என்பதை நமக்கு எண்பித்துக் காட்டி புதிய அன்பின் பாஸ்காவை இயேசு ஏற்படுத்தியுள்ளார்.

பிறரை அன்புடனும் கரிசனையுடனும் சிரித்த முகத்துடனும் நோக்குதல், தனிமையாய் இருப்பபவரிடம் சென்று சில மணித்துளிகள் உரையாடுதல், தாங்கித் தள்ளாடி நடப்பவர்களுக்கு கரம் கொடுத்து உதவுதல் , இல்லை என்று வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பகிர்ந்து கொடுத்தல், விழுந்தவரைத் தூக்கி விடுதல், தெரிந்தே நமக்கெதிராய் தீமை செய்பவர்களையும், நம்ப வைத்து ஏமாற்றுபவர்களையும் மன்னித்தல், பிடித்தவர் பிடிக்காதவர் என்ற வேறுபாடு இன்றி பாசமாய்ப் பழகுதல்,பணிவிடை பெறுபவர்களாக அல்லாமல் பணிவிடை புரிபவர்களாக வாழ்தல் போன்ற போன்ற சின்னச் சின்னக் காரியங்கள் கூட இயேசு ஏற்படுத்திய அன்பின் பாஸ்காவை பிரதிபலிக்கின்றன. இவை பிறருக்கு எதிராகவும் கடவுளுக்கு எதிராகவும் நாம் பாவம் செய்து அடிமைத்தனத்தில் விழந்து விடாமல் காக்கின்றன. கடவுளோடும் பிறரோடும் உள்ள உறவைப் புதுப்பித்து நம் ஆன்மாவை இறப்பினின்று காக்கின்றன.

எனவே இயேசு ஏற்படுத்திய இவ்வன்பு பாஸ்காவை, அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கும் பாஸ்காவை நமது வாழ்வாக்கி அவரின் நினைவாக மற்றவருக்கும் செய்வோம். அன்பை பிறருக்கு வழங்கி நம் ஆன்மாவை இறப்பினின்று காத்துக்கொள்வோம். அவரது உடலையும் இரத்தத்தையும் அன்போடு நமக்கு கையளித்தது போல அன்புப் பணிக்காய் நம்மை கையளித்து பணிசெய்ய வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல்
அன்பே உருவான இறைவா! உம் திருமகன் இயேசு ஏற்படுத்திய அன்பு பாஸ்காவை நாங்களும் வாழ்வாக்கி எல்லாவித பாவ அடிமைத்தனங்களிலிருந்தும் விடுதலை பெற வரமருளும். ஆமென்.
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்