Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ தூய லூர்து அன்னை ✠ (Our Lady of Lourdes)
  Limage contient peut-tre : plein air et nature  
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 11
 
 
✠ தூய லூர்து அன்னை ✠ (Our Lady of Lourdes)

*இடம் : லூர்து, ஃபிரான்ஸ் (Lourdes, France)

*திருநாள் : ஃபெப்ரவரி 11, 1858

*சாட்சிகள் :
புனிதர் பெர்னதெத் சூபிரஸ்
(Saint Bernadette Soubirous)

*வகை :
மரியாளின் தரிசனங்கள்
(Marian apparition)

*கத்தோலிக்க ஏற்பு : ஜூலை 3, 1862
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

*திருத்தலம் :
லூர்து அன்னை திருத்தலம், லூர்து நகர், ஃபிரான்ஸ்
(Sanctuary of Our Lady of Lourdes, Lourdes, France)

*பாதுகாவல் :
லூர்து நகர் (Lourdes), ஃபிரான்ஸ் (France),
தென் கொரியா, (South Korea), நோயாளிகள்,
லான்காஸ்டர் மறை மாவட்டம் (Diocese of Lancaster), நோய்களிலிருந்து பாதுகாவல் (Protection from Diseases)

தூய லூர்து அன்னை என்ற பெயர், ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் 1858ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் நாள் முதல், 1858ம் ஆண்டு, ஜூலை மாதம், 16ம் நாள் வரை பெர்னதெத் சூபிரஸ் (Bernadette Soubirous) என்ற சிறுமிக்கு அன்னை மரியாள் அளித்த திருக்காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த திருக்காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் திருக்காட்சியும் விளங்குகிறது. லூர்து அன்னையின் திருவிழா ஃபெப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படுகிறது.

மரியாளின் திருக்காட்சிகள் :
ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பிறந்தவர் பெர்னதெத் சூபிரஸ். இவருக்கு 14 வயது நடந்தபோது, 1858ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் தேதி, இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார்.

அன்னை மரியாள் ஓர் இளம் பெண்ணாக அந்த குகையில் தோன்றினார். அவர் வெண்ணிற ஆடையும், முக்காடும் அணிந்திருந்தார். அவர் நீல நிறத்தில் இடைக் கச்சையை உடுத்தியிருந்தார். கையில் முத்துகளால் ஆன ஒரு செபமாலை வைத்திருந்தார். அவரது காலடியில் காட்டு ரோஜா செடிகள் காணப்பட்டன. அவர் கைகளைக் கூப்பி வானத்தை நோக்கியவாறு இருந்தார். பெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும் "அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம்பெண்" என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை.

பெர்னதெத் அன்னையின் முதல் திருக்காட்சியைக் கண்டபோது, மரியாள் அவரை மேலும் சில நாட்கள் அதே இடத்திற்கு வரச் சொன்னார். மரியாளின் வார்த்தைகளை ஏற்று, பெர்னதெத்தும் அங்கு சென்றார். ஃபெப்ரவரி மாதம், 18ம் தேதி, மரியாளைக் கண்டு பெர்னதெத் பரவச நிலையில் இருந்ததை அவரோடு சென்றவர்கள் கண்டனர். ஒரு திருக்காட்சியில் மரியன்னை தனக்கு அங்கு ஓர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெர்னதெத் அதை பங்கு குருவிடம் சொன்ன போது, அவர் அதற்கான காரணத்தை அறிந்து வருமாறு கூறினார்.

ஃபெப்ரவரி 25ம் தேதி திருக்காட்சியின்போது, மரியாளின் கட்டளையை ஏற்று பெர்னதெத் மண்ணைத் தோண்டியபோது, அந்த இடத்தில் நீரூற்று ஒன்று தோன்றியது. அது பின்பு ஓடையாக மாறி, திருப்பயணிகளை கவர்ந்திழுக்கும் அற்புத இடமாக இன்றும் திகழ்கிறது. மார்ச் மாதம், 25ம் தேதி அன்னை மரியாள் பெர்னதெத்திடம், நாமே அமல உற்பவம் ("Que Soy Era Immaculada Concepciou") என்று தம்மைப் பற்றிக் கூறினார். இதற்கு, "பாவம் எதுவுமின்றி பிறந்தவர்" என்பது அர்த்தம்.

மொத்தம் பதினெட்டு முறை பெர்னதெத்துக்கு தரிசனமளித்த மரியன்னை, அவற்றில் 15 திருக்காட்சிகளில் செபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருட்களின் 15 மறையுண்மைகளையும் நாளுக்கு ஒன்று என்ற வகையில் பெர்னதெத்தை ஒவ்வொன்றாக தியானித்து செபிக்கச் செய்தார். பெர்னதெத்தின் பின்னே பக்தியுடன் ஒரு கூட்டமும், கிண்டல் செய்யும் நோக்கத்தில் மற்றொரு கூட்டமும் பின் தொடர்ந்தன.

ஏப்ரல் மாதம், 7ம் தேதி, பெர்னதெத் அன்னையின் 16வது திருக்காட்சியைக் கண்டபோது, மருத்துவ ஆய்வுக்காக 15 நிமிடங்கள் இவர் கையை சிலர் தீயினால் சுட்டனர். பெர்னதெத் அதை உணரவும் இல்லை, இவர் கையில் தீக்காயமும் ஏற்படவில்லை. ஜூலை மாதம், 16ம் தேதி அன்னை மரியாளின் கடைசி திருக்காட்சியைக் கண்ட பெர்னதெத், "இதற்கு முன்பாக நான் அவரை இத்தகைய பேரழகோடு கண்டதே இல்லை" என்று கூறினார்.

தரிசன பின்னணி :
கிறிஸ்தவ வரலாற்றில் அன்னை மரியாளின் திருக்காட்சிகள் முதல் நூற்றாண்டு முதலே பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகின் பல இடங்களிலும் அன்னையின் திருக்காட்சிகள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு திருக்காட்சியும் கடவுளின் ஏதேனும் ஒரு செய்தியை வழங்குவதாக விளங்குகிறது. லூர்து நகரின் திருக்காட்சியும் அப்படிப்பட்ட ஒரு திருக்காட்சியாகவே இயற்கைக்கு மேற்பட்ட விதத்தில் அமைந்துள்ளது.

திருத்தந்தை 9ம் பயஸ் 1854ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, "மரியாள், தாம் உற்பவித்த நொடியில் இருந்தே, வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், சிறப்பு சலுகையினாலும், மனித குலத்தின் மீட்பராம் இயேசுவின் பேறுபலன்களினாலும், சென்மப் பாவத்தின் கறைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் திருச்சபையின் போதனை இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட உண்மையாகும். எனவே, இறைமக்கள் இதில் என்றும் தளராத உறுதியான விசுவாசம் கொள்ளவேண்டும்" என்று கூறி, மரியாளின் அமல உற்பவத்தை விசுவாசக் கோட்பாடாக அறிவித்தார். இதை உறுதி செய்யும் வகையிலேயே கன்னி மரியாள் லூர்து நகரில் திருக்காட்சியளித்தார்.

லூர்து பேராலயம் :
பெர்னதெத், அன்னை மரியாளின் திருக்காட்சிகளை கண்ட நாட்களிலேயே, லூர்து திருக்காட்சிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணியைத் திருச்சபை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் 1858ம் ஆண்டு, நவம்பர் மாதம், 17ம் தேதி, திருக்காட்சிகளைப் பற்றி ஆராய விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இறுதியாக 1862ம் ஆண்டு, ஜனவரி மாதம், 18ம் தேதி, டர்பெஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ், "பெர்னதெத் சூபிரசுக்கு கன்னி மரியாள் தரிசனம் தந்தபோது, இயற்கைக்கு மேற்பட்ட இறைவனின் செயல்பாடுகள் நிகழ்ந்தது உண்மையே" என்று அறிவித்தார். திருத்தந்தை 9ம் பயஸ், லூர்து அன்னையின் வணக்கத்திற்கு அனுமதி வழங்கினார். இதன் மூலம் லூர்து நகர், அன்னை மரியாளின் பக்தர்கள் வந்து செல்லும் புனித இடமாக மாறியது.

அதன் பிறகு அன்னை மரியாள் திருக்காட்சியளித்த மசபியேல் குகையின் அருகே, மரியாளின் பெயரில் பெரிய ஆலயம் ஒன்று கட்டி எழுப்பப்பட்டது. காட்சியின்போது தோன்றிய நீரூற்றும், பெரிய ஓடையாக மாறி ஆற்றில் கலப்பதுடன், நம்பிக்கையோடு அதன் நீரைப் பருகுவோருக்கு குணமளிக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. ஆண்டுதோறும் உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான திருப்பயணிகள் லூர்து அன்னை பேராலயத்தை நாடிச் செல்கின்றனர்.

செபிப்போம் :
"நாமே மாசில்லா உற்பவம்" என்று திருவாய் மலர்ந்த அன்னையே!
எம்மையும், எம் குடும்பத்தையும், இச்சமூகத்தையும், உம்மை விசுவசிக்காத சகோதர்களையும் உமது பொற்பாதத்தில் ஒப்படைகிறோம்!
உலக மாந்தரனைவரினதும் அன்புத்தாயே!
உம்மையே தஞ்சமென ஓடிவரும் அடியோர் மேலே தயவாயிரும் அம்மா!
கருணையின் ஊற்றுக்கண்ணான மாதாவே!
நீர் பரிந்துரைத்தால் தண்ணீரும் இரசமாகும் என்பதனை உளமார உணர்ந்து விசுவசிக்கும் எம்மை கரம் பிடித்து வழி நடத்துமம்மா!
எல்லையில்லாத உமது திருஇருதயத்தின் அன்பால் எம்மைக் காக்கும் அதிதூய இறை அன்னையே!
உமது திருவயிற்றின் கனியாகிய இயேசுவின் திருவார்த்தைகளின் வழிநடக்க எமக்கு கற்றுத் தாருமம்மா!

லோக நாயகியே! ஆரோக்கிய அன்னையே! சகாய தாயே! அடைக்கல மாதாவே! பனிமய அன்னையே! சந்தன மாதாவே! மடு மாதாவே! செல்வ மாதாவே! பெரிய நாயகி அன்னையே! அதிசய மணல் மாதாவே! அதிசய மின்னல் மாதாவே! பூண்டி புதுமை அன்னையே! லூர்து அன்னையே! காணிக்கை மாதாவே! ஜெபமாலை அன்னையே!
நீர் அருளித்தந்த செபமாலையை நாங்கள் விட்டுவிடாதிருக்கும் வரமருளும் அம்மா!
ஆமென்

மாசில்லாக் கன்னியே, மாதாவே உம்மேல்...
நேசமில்லாதவர் நீசரே ஆவார்...
வாழ்க, வாழ்க, வாழ்க மரியே...
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா