Plerinage des tamouls Lourdes

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் அகதா ✠ (St. Agatha of Sicily)
நினைவுத் திருநாள் : பெப்ரவரி 5
 
 
✠ புனிதர் அகதா ✠ (St. Agatha of Sicily)
மார்பகப் புற்று நோய் உள்ளவர்களின் பாதுகாவலர்

*கன்னி மற்றும் மறைசாட்சி : (Virgin and Martyr)

*பிறப்பு : கி.பி. 231
கேட்டனியா அல்லது பலெர்மோ, சிசிலி (Catania or Palermo, Sicily)

*இறப்பு : கி.பி. 251
கேட்டனியா, சிசிலி (Catania, Sicily)

*ஏற்கும் சபை/ சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Churches)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)
ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)

*சித்தரிக்கப்படும் வகை :
கத்தரிகள், இடுக்கி, தட்டின் மேல் மார்பகம்

*பாதுகாவல் :
கேட்டனியா (Catania), மோலிஸ் (Molise), மால்ட்டா (Malta), சேன் மரினோ (San Marino), ஸ்பெயின் நாட்டின் செகோவியா பிராந்தியத்திலுள்ள "ஸமர்ரமல" என்னும் ஊர்ப்பஞ்சாயத்து (Zamarramala, a municipality of the Province of Segovia in Spain), மார்பக புற்று நோயாளிகள் (Breast cancer patients), மறைசாட்சிகள் (Martyrs), செவிலியர் (Wet Nurses), கலிபோர்னியாவின் தென்மேற்கு பிராந்தியத்திலுள்ள "பெல்" என்ற நகரை கண்டுபிடித்தவர்கள் (Bell-Founders), ரொட்டி செய்யும் தொழிலாளி (Bakers), தீ (Fire), பூகம்பம் (Earthquakes), "எட்னா" மலையின் வெடிப்புகள் (Eruptions of Mount Etna).

சர்ச்சைகள் (Controversy) :
ரோமப் பேரரசர்களை வணங்க மறுத்தல்
(Rejection to worship Roman Emperors)
கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் தொழில்
(Forced prostitution)
பாலியல் வன்கொடுமை மற்றும் கன்னித்தன்மையை காத்துக்கொள்வதற்கான போர்
(Rape and conflict to maintain virginity)

புனிதர் அகதா, மறைசாட்சியாக மரித்த ஒரு கன்னியரும், கிறிஸ்தவ புனிதருமாவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலியின்போது, கடவுளை அதி தூய அன்னை, அர்ச்சிஷ்ட்ட கன்னி மரியாளுடன் சேர்ந்து நினைவுகூறப்படும் ஏழு பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.

பழங்கால கிறிஸ்தவ புராணத்தில், மிகவும் உயர்வாக போற்றப்படும் கன்னியராக மறைசாட்சியாக் மரித்த பெண்களுள் புனிதர் அகதாவும் ஒருவர் ஆவார். கி. பி. 249ம் ஆண்டு முதல் 253ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், ரோமப் பேரரசை ஆண்ட பேரரசன் "டேசியஸ்" (Full Name - Gaius Messius Quintus Trajanus Decius) என்பவன் கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைகளை ஆரம்பித்து வைத்த முதல் பேரரசன் ஆவான். இவனது காலத்திலேயே புனிதர் அகதா, சிசிலியில் உள்ள "கேட்டனியா" (Catania) என்னும் இடத்தில் வைத்து, தமது மிக உறுதியான கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

வசதிவாய்ப்புகளுள்ள குடும்பமொன்றில் பிறந்த அகதா, ஆன்மீகத்தில் ஈடுபாடு மிகக்கொண்டிருந்தார். தமது வாழ்வின் ஒவ்வொரு தருணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டவை என்ற தீவிர விசுவாசம் கொண்டிருந்தார். "ஜாகொபஸ் டி வொராஜின்" (Jacobus de Voragine) என்ற கிறிஸ்தவ சரித்திர ஆசிரியரின் (Legenda Aurea of ca. 1288) எனும் இலக்கியத்தின்படி, அகதா தமது கன்னிமையை இறைவனுக்கே அர்ப்பணித்தார். இவருக்கு பதினைந்து வயதானபோது, இவர்மீது மோகம் கொண்ட ரோமன் நிர்வாக அலுவலரான (Roman prefect) "குயின்ஷியானஸ்" (Quintianus) என்பவனை தீர்க்கமாக நிராகரித்தார். ஆத்திரம் கொண்ட குயின்ஷியானஸ், இவரை இவரது கிறிஸ்தவ விசுவாசத்துக்காக துன்புறுத்தினான். பின்னர், "அப்ரோடிசியா" (Aphrodisia) என்ற விபச்சார விடுதி நடத்துபவனிடம் அனுப்பினான்.

அவரை எளிதில் கையாள முடியாது என்பதை கண்டுகொண்ட குயின்ஷியானஸ், அகதாவை பயமுறுத்தினான். அவருடன் வாதிட்டான். இறுதியில் அவரை சிறையில் அடைத்தான். சிறையில் எண்ணற்ற சித்திரவதைகளுக்கு ஆளான அகதாவின் மார்பகங்களை குறடு போன்ற இடுக்கியால் அறுத்தனர். மேற்கொண்டும் அவனுக்கு மசியாத அகதா அவனுடன் வியக்கத்தக்க வகையில் வாதிட்டு தமது மனோபலம் மற்றும் உறுதியான பக்தியைக் காண்பித்தார்.

இறுதியில், அகதாவை கூறிய மரக்குச்சுகளினால் தீயிட்டு எரித்துக் கொள்ள தீர்ப்பிடப்பட்டது. ஆனால் அவரது விதி, அவரை ஒரு பூகம்பம் மூலம் இரட்சித்தது. மீண்டும் சிறையிலடைக்கப்பட்ட அகதாவுக்கு அப்போஸ்தலரான புனிதர் பேதுரு (St. Peter the Apostle) காட்சியளித்து அவரது மார்பக மற்றும் உடலிலிருந்த காயங்களை ஆற்றினார். புனிதர் அகதா சிறையிலேயே மரித்துப் போனார். "கட்டானியா" பேராலயம் (Catania Cathedral) இவர் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டதாகும்.





புனித ஆகத்தா
மார்பகப் புற்று நோய் உள்ளவர்களின் பாதுகாவலர்
பிப்ரவரி - 05

ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று (மத் 5:28)

சிசிலியில் வாழ்ந்த, வசதியும், சமூகத்தில் நல் மதிப்பும் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் ஆத்தா. சிறு வயது முதலே இறைவனின் மீது தீரா நேசம் கொண்டிருந்த இவர், தன்னை இறைவனின் அடியவராகவே எண்ணி வளர்ந்து வந்தார். இளவயது நங்கையாக வளர்ந்து போதும் தனது வாழ்வு இறைவனுக்கு தான் என்று அர்ப்பணித்துக்கொண்டார். இதனால் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய அனைவரையும் நிராகரித்தார். அவர்களில் ஒருவன் குயின்சியன்
.

உயரிய பொறுப்பில் பலரின் மதிப்பிற்குரியவராக இருந்த குயின்சியன், ஆகத்தா தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினான். இவனின் விருப்பத்தை ஆகத்தா மறுத்ததால் கட்டாயப்படுத்தினான். எதற்கும் இணங்காததால், கோபமுற்ற குயின்சியன் என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தான். கடைசியில், ஆகத்தா கிறிஸ்தவர் என்ற வாதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அவரை மிரட்டிப் பணிய வைக்க முயன்றான். ஏனென்றால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்ட காலம் அது. ஆகத்தா எதற்கும் அடிபணியாததால் உயிர்போகும் அளவுக்குத் துன்புறுத்தினான்.

ஆகத்தா, "இயேசு கிறிஸ்துவே அனைத்தின் ஆண்டவரே ! எனது இதயத்தைப் பாரும். உமக்கு என் விருப்பம் நன்கு தெரியும். என்னிடம் உள்ள அனைத்தையும் எடுத்துக்கொள்ளும். உமது செம்மறியாகிய நான் அனைத்து தீமைகளையும் வெல்ல என்னைத் தகுதியாக்கும் "என்று ஜெபித்தார்.

கோபமுற்ற குயின்சியன் அகத்தாவைப் பாலியல் விடுதியில் தள்ளினான். அஃப்ரோடிசியா என்னும் பெண் தமது ஆறு பெண் குழந்தைகளுடன் சேர்த்து இந்த இழிதொழிலை நடத்திவந்தார். அங்கே மிகவும் போராடி அவமானங்களையும், அடி உதைகளையும் தாங்கிக்கொண்டு தன்னைக் களங்கமில்லாமல் ஆகத்தா காத்துக்கொண்டார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் குயின்சியன் அகத்தாவை அழைத்து பேசினான். அப்படியும் ஆதத்தா உறுதியுடன் இருந்ததால் அவளது மார்பகத்தின் ஒரு பகுதியை அறுத்து எறிந்தான். சிறையில் அடைத்து நையப் புடைத்தான். உணவு கொடுக்காது தண்டித்தான். சிறையில் புனித பேதுரு தோன்றி ஆகத்தாவின் அனைத்து காயங்களையும் குணமாக்கினார்; ஆறுதல் படுத்தினார்.

புதுமையாக நலமானதைப் பார்த்த பிறகும் மனம் மாறாத குயின்சியன் தொடர்ந்து காயப்படுத்திக் கொண்டே இருந்தான். கடைசியில் "ஆண்டவரே என்னைப் படைத்தவரை! நீர் எப்போதும் ஆபத்தில் இருந்து என்னைக் காத்துள்ளீர். உலகியல் நாட்டங்களில் இருந்து பாதுகாத்துள்ளீர். துன்பத்தைத் தாங்க பொறுமையைத் தந்துள்ளீர். இப்போதும் எனது ஆன்மாவைப் பெற்றுக்கொள்ளும்" என்று கூறி 251-ஆம் ஆண்டு ஆகத்தா உயிரிழந்தார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டுள்ளோருக்காக நாம் பாடுபடும்போது புனிதரின் ஆசீர் பெறுகிறோம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா