|
|
29 மே 2020 |
|
பாஸ்கா
7ஆம் வாரம் - செவ்வாய்
|
=================================================================================
முதல் வாசகம்
=================================================================================
இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 25: 13-21
அந்நாள்களில்
அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்தைச் சந்திக்கச் செசரியா
வந்தனர். அவர்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தபோது பெஸ்து
பவுலுக்கு எதிரான வழக்கை அரசனிடம் எடுத்துக் கூறினார்:
"பெலிக்சு கைதியாக விட்டுச்சென்ற ஒரு மனிதர் இங்கு இருக்கிறார்.
நான் எருசலேமிலிருந்தபோது தலைமைக் குருக்களும், யூதரின் மூப்பர்களும்
அவரைப்பற்றிய வழக்கை என்னிடம் தெரிவித்து அவருக்கு எதிராகத்
தீர்ப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். நான் அவர்களைப்
பார்த்து, "குற்றம் சாட்டப்பட்டவர் எவரும் குற்றம் சாட்டியவர்க்கு
முன் நின்று தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தைப்பற்றி விளக்குவதற்கான
வாய்ப்பைப் பெறவேண்டும். அதற்குமுன் அவருக்குத் தீர்ப்பு அளிப்பது
உரோமையரின் வழக்கமல்ல" என்று கூறினேன்.
எனவே அவர்கள் இங்கே வந்தபோது, சற்றும் காலம் தாழ்த்தாமல் மறு
நாளிலேயே நான் நடுவர் இருக்கையில் அமர்ந்து அவரை என்னிடம்
கூட்டிக்கொண்டு வருமாறு ஆணை பிறப்பித்தேன். குற்றம் சுமத்தியவர்கள்
எழுந்து பேசியபோது நான் நினைத்திருந்த கொடிய குற்றம் எதுவும்
அவர்மீது சுமத்தவில்லை. அவர்கள் அவருக்கு எதிராகச் சொன்னதெல்லாம்
தங்கள் சமயத்திலுள்ள சில கருத்து வேறுபாடுகளாகத்தான் இருந்தன.
இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப்பற்றியும் அவர்கள் பேசினார்கள்.
இந்த இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்.
இக்கருத்துச்சிக்கல்களைப்பற்றிக் கேட்டதும் நான் குழம்பிப்
போய், "நீர் எருசலேமுக்கு வருகிறீரா? அங்கு இவைபற்றி விசாரிக்கப்பட
விரும்புகிறீரா?" எனக் கேட்டேன். பவுல், பேரரசரே விசாரித்துத்
தீர்ப்பு அளிக்கும்வரை தம்மைக் காவலில் வைக்க வேண்டும் என்று
கேட்டுக் கொண்டார். ஆதலால் இவரைச் சீசரிடம் அனுப்பும்வரை காவலில்
வைக்குமாறு ஆணை பிறப்பித்தேன்."
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
பதிலுரைப்
பாடல்
-
திபா 103: 1-2. 11-12. 19-20 . (பல்லவி: 19a )
Mp3
=================================================================================
பல்லவி: ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலை
நிறுத்தியுள்ளார்.
அல்லது : அல்லேலூயா.
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை
ஏத்திடு!
2
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும்
மறவாதே! - பல்லவி
11
அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று
விண்ணளவு போன்று உயர்ந்தது.
12
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத்
தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.
- பல்லவி
19
ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்;
அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.
20
அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே!
அவரைப் போற்றுங்கள். - பல்லவி
=================================================================================
நற்செய்திக்கு முன்
வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 26
அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும்
கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு
நினைவூட்டுவார். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்; என் ஆடுகளை மேய்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 15-19
தம் சீடர்களுக்குத் தோன்றி, இயேசு சீமோன் பேதுருவிடம்,
"யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு
செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே,
எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!" என்றார்.
இயேசு அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்" என்றார்.
இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது
அன்பு செலுத்துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம்
ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!"
என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்" என்றார்.
மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு
என்னிடம் அன்பு உண்டா?" என்று கேட்டார். "உனக்கு என்னிடம் அன்பு
உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று,
அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு
உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?" என்றார். இயேசு அவரிடம்,
"என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக்
கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு
முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்.
வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக்
கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றார்.
பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக்
குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம்,
"என்னைப் பின் தொடர்" என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================================================================================
மறையுரைச் சிந்தனை -
1
=================================================================================
திருத்தூதர் பணிகள் 25: 13-21
பவுல்மீது குற்றம் சுமத்திய யூதர்கள்
நிகழ்வு
இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பிரபல பத்திரிகையாளர் பிலிப் ஹோவர்ட்
(Philip Howard 1933-2014). இவர் தன்னுடைய ஐம்பதாவது வயதில்,
தன் தந்தை பீட்டர் ஹோவர்டிடம், "அப்பா! நான் ஒரு மறைப்பணியாளராக
மாறி, கடவுளுடைய வார்த்தையை எடுத்துரைக்கலாம் என்று
நினைக்கின்றேன். இது குறித்து நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று
கேட்டார்.
இதற்கு இவருடைய தந்தை, "இந்த வயதில் உனக்கு ஒரு மறைப்பணியாளராக
மாறி, கடவுளுடைய வார்த்தையை எடுத்துரைக்கவேண்டும் என்ற எண்ணம்
ஏற்பட்டிருக்கின்றதே! அதே நினைத்து நான் பெருமைப்படுகின்றேன்.
அதே நேரத்தில் நீ ஒரு மறைப்பணியாளராக மாறுவதற்கு முன்பாக,
மூன்று நடைமுறை உண்மைகளை உன்னுடைய மனத்தில் வைத்துக்கொள். ஒன்று,
நீ யாரிடம் கடவுளிடம் வார்த்தையை அறிவிக்கின்றாயோ, அவர்களே உன்னைப்
பற்றி அவதூறாகப் பேசுவார்கள்; அதைத் தாங்கிக் கொள்ளத் தயாராக
இருக்கவேண்டும். இரண்டு, நீ கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கின்றபொழுது,
உனக்குப் பிடிக்காதவர்கள் உன்னைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள்.
அதையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். மூன்று, நீ
உன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் செலுத்தி மக்கள் நடுவில்
பணிசெய்வாய். அதற்காக எவரும் உன்னைப் பாராட்டமாட்டார். இந்த
மூன்று நடைமுறை உண்மைகளையும் ஏற்றுக்கொண்டு, மறைப்பணி செய்யவேண்டும்
என்று நீ நினைத்தால் செய்; இல்லையென்றால் விட்டுவிடு" என்றார்.
தன் தந்தை சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து போன பிலிப்
ஹோவர்ட், மறைப்பணி செய்வது ஒன்றும் அவ்வளவு செயலில்லை என்று,
மறைப்பணியாளராக வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை அடியோடு
விட்டுவிட்டார்.
ஆம், மறைப்பணி செய்வது ஒன்றும் எளிதான செயல் கிடையாது; மிகவும்
கடினமான செயல். மறைப்பணியைச் செய்கின்றபொழுது அல்லது கடவுளின்
வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைக்கின்றபொழுது, மக்கள் அவதூறு
பரப்புவார்கள்... கேலி கிண்டல் செய்வார்கள்... பாராட்டுவதற்கு
மனமில்லாமல் இருப்பார்கள். இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு கடவுளின்
வார்த்தையை எடுத்துரைக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒருவரால் சிறந்த
முறையில் மறைப்பணியைச் செய்யமுடியும். இன்றைய முதல் வாசகத்தில்,
கடவுளின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்து வந்த பவுலின்மீது
யூதர்கள் குற்றம் சுமத்துவது தொடர்பாக வாசிக்கின்றோம். இப்படிப்பட்ட
சவால்களுக்கு நடுவில் பவுல் எப்படிப் பணி செய்தார் என்பதைக்
குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அகிரிப்பா பெஸ்தைச் சந்தித்தல்
இன்றைய முதல் வாசகம், தன்னிடம் மரியாதை நிமித்தமாக வந்த அக்ரிப்பாவிடம்
பெஸ்து, தன்னுடைய காவலில் இருந்த பவுலைக் குறித்துச் சொல்வதாக
இருக்கின்றது. இந்த அக்ரிப்பா. பெரிய ஏரோதின் பேரன், முதலாம்
அக்ரிப்பாவின் மகன். இவன் வடகிழக்குப் பாலஸ்தினை ஆண்டு வந்தான்.
அப்படிப்பட்டவன் தன்னுடைய சகோதரி பெர்க்கியுவோடு, உரோமையின் ஆளுநராக
இருந்த பெஸ்துவைச் சந்திக்க வருகின்றான். அவ்வாறு சந்திக்க வருகின்றபொழுதுதான்,
பெஸ்து தன்னுடைய காவலில் இருந்த பவுலைக் குறித்தும் கொடிய குற்றம்
எதுவும் இல்லாதபொழுதும் யூதர்கள் அவருக்கு எதிராக குற்றம் சுமத்துவதையும்
குறித்து அக்ரிப்பாவிடம் எடுத்துக்கூறுகின்றான்..
பெஸ்து பவுலைக் குறித்து அக்ரிப்பாவிடம் இவ்வாறு
சொல்லும்பொழுது, ஒரு முக்கியமான செய்தியையும் சொல்கின்றார். அது
என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு உயிரோடு இருக்கின்றார் என்று சாதித்து வந்த பவுல்
பெஸ்து அக்ரிப்பாவிடம் பவுலைக் குறித்துச் சொல்கின்றபொழுது,
"இயேசு உயிரோடு இருப்பதாக பவுல் சாதித்து வருகின்றார்"
என்கிறார். ஆம், இறைப்பணியைச் செய்துவந்த பவுல், தனக்கு
வாய்ப்புக் கிடைக்கின்றபொழுதெல்லாம் உயிர்த்த ஆண்டவரைப் பற்றி
எடுத்துரைத்து வந்தார். இதனாலேயே யூதர்களில் இருபிரிவினராக
இருந்த பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் இடையே வாக்குவாதம்
ஏற்படுகின்றது (திப 22: 6-11).
பவுல், உயிர்த்த ஆண்டவரைப் பற்றி அறிவித்து வந்தது, நமக்கொரு
முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில்,
நாமும் உயிர்த்த ஆண்டவரைப் பற்றி, நமக்கு வாய்ப்புக்
கிடைக்கின்றபொழுதெல்லாம் நம்முடைய வார்த்தையால் மட்டுமல்ல,
வாழ்வாலும் அறிவிக்க வேண்டும் என்பதாகும். நாம் நம்முடைய
வாழ்வாலும் வார்த்தையாலும் உயிர்த்த ஆண்டவருக்குச் சான்று
பகற்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
"நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன்
கலக்கமுறாதே" (எரேமி 1:7) என்பார் ஆண்டவர். எரேமியா
இறைவாக்கினரிடம் ஆண்டவர் இவ்வாறு சொன்னதற்குப் பிறகு, அவர்
எப்படிக் கடவுளின் வார்த்தையை அஞ்சாமல், கலக்கமுறாமல்
மக்களுக்கு அறிவித்தாரோ, பவுல் எப்படி கடவுளின் வார்த்தையை
யாருக்கும் அஞ்சாமல் அறிவித்தாரோ, அதுபோன்று நாமும் கடவுளின்
வார்த்தையை அஞ்சாமல் அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச்
சிந்தனை - 2
=================================================================================
யோவான் 21: 15-19
பேதுருவை மீண்டுமாக அழைக்கும் இயேசு
நிகழ்வு
அது ஒரு பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தின் நுழைவாயிலில் ஓர்
அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கீழ்காணும்
வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன: "இத்தனை நாள்களும் உங்களுடைய
வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நபர், இன்று அதிகாலையில் திடீரென
இறந்துவிட்டார். அவருக்குக் இறுதி அஞ்சலி செலுத்துகின்ற
நிகழ்வு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
தயதுசெய்து, அதில் கலந்துகொள்ளுங்கள்."
இந்த வார்த்தைகளைப் படித்துப் பார்த்துவிட்டு, அந்த
நிறுவனத்தில் பணியாற்றிவந்த பணியாளர்கள், "யாராக
இருக்கும்...?" என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்; அதுகுறித்து
விவாதிக்கவும் தொடங்கினார்கள். இதில் ஒருசிலர், "நல்லவேளை
நம்முடைய வளர்ச்சிக்குத் தடையாக இருந்தவன் ஒளிந்துவிட்டான்"
என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.
நிறுவனத்தில் பணியாற்றி வந்த பணியாளர்கள் அனைவரும் வந்ததும்,
இறந்து போனவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் கூட்டம் தொடங்கி,
ஒருவர் பின் ஒருவராக இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவிட்டு
வந்தனர். அப்படி அஞ்சலி செலுத்துவிட்டு வந்தவர்களுடைய
முகத்தில் அதிர்ச்சி குடிகொண்டிருந்தது. காரணம், சவப்
பெட்டியில் இறந்தவருடைய உடலுக்குப் பதிலாக பெரிய கண்ணாடி
வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கண்ணாடியின் ஓரத்தில், "உங்களுடைய
வளர்ச்சிக்கு தடையாக, உங்களைத் தவிர வேறு யாரும் காரணமாக
இருக்க முடியாது" என்று எழுதப்பட்டிருந்தது. இதைப்
பார்த்துவிட்டுத்தான் எல்லாரும் அதிர்ச்சியோடு இருந்தார்கள்.
எல்லாரும் அஞ்சலி செலுத்துவிட்டுத் தங்களுடைய இருக்கையில்
அமர்ந்த பிறகு, அந்த நிறுவனத்தின் தலைவர் பேசத் தொடங்கினார்:
"இந்த இறுதி அஞ்சலிக் கூட்டம் வித்தியாசமாக இருக்கலாம்;
ஆனாலும் உங்களுடைய வளர்ச்சிக்குத் தடையாக உங்களைத் தவிர வேறு
யாரும் இருக்கமுடியாது என்ற உண்மையை உணர்த்துவதற்காகவே, இந்தக்
கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகையால், உங்களுடைய
வளர்ச்சிக்குத் தடையாக உங்களிடம் இருக்கின்ற தளர்ச்சி, சோர்வு
மனப்பான்மை, வெறுப்பு, கசப்புணர்வு... ஆகியவற்றை
உங்களிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு, புதிய மனிதர்களாக
வாழுங்கள்" என்றார் நிறுவனத்தின் தலைவர். அவர் சொன்னது போன்றே,
ஒவ்வொரு பணியாளரும் தங்களுடைய வளர்ச்சிக்குத் தடையாக
இருந்தவற்றை அப்புறப்படுத்திவிட்டுப் புதிய மனிதர்களாக மாறி,
புத்துணர்ச்சியோடு பணிசெய்யத் தொடங்கினார்கள். இதனால் அந்த
நிறுவனம் முன்பைவிடப் பல மடங்கு சிறப்பாகச் செயல்பட்டது.
இந்த நிகழ்வில் வருகின்ற நிறுவனத்தின் தலைவர் எப்படித்
தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்களைப் புதிய
மனிதர்களாக வாழ அழைத்தாரோ, அப்படி இன்றைய நற்செய்தியில், இயேசு
தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவை புதிய மனிதராக வாழ
அழைக்கின்றார். இயேசு, தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவை
மீண்டுமாக அழைத்தது நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது
என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
"யோவானின் மகன் சீமோனே; என்று பேதுருவை மறுபடியும் அழைக்கும்
இயேசு
திருத்தூதர்களில் தலைமைத் திருத்தூதராக இருந்த பேதுரு, ஆண்டவர்
இயேசுவை மும்முறை மறுதலித்தார். இதற்காக அவர் மனம்வருந்திக்
மனம் உடைந்து அழுதார் (மாற் 14: 72). ஆனாலும், பேதுரு தன்னுடைய
குற்றத்தை இயேசுவிடம் அறிக்கையிடுவதற்கான ஒரு வாய்ப்பு
கிடைக்காமலே இருந்தது. உயிர்த்த ஆண்டவர் பேதுருவுக்குத்
தனியாகத் தோன்றியதாக லூக்கா நற்செய்தியாளர்
குறிப்பிட்டிருந்தாலும் (லூக் 24: 24), அங்கு பேதுரு தன்னுடைய
குற்றத்தை அறிக்கையிடுகின்ற சூழல் இல்லாமலேயே போய்விடுகின்றது.
இப்படிப்பட்ட சூழலில்தான் உயிர்த்த இயேசுவே, பேதுரு தன்னுடைய
குற்றத்தை உணர்ந்து அறிக்கையிடுவதற்கான சூழலை ஏற்படுத்தித்
தருகின்றார்; அவரைப் புதிய மனிதராக வாழ அழைக்கின்றார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு பேதுருவிடம் பேசுகின்றபொழுது,
"யோவானின் மகன் சீமோனே!" என்றுதான் பேசத் தொடங்குகின்றார். இது
இயேசு பேதுருவை முதன்முறை அழைத்ததை நமக்கு நினைவு
படுத்துகின்றது (யோவா 1: 42) இவ்வாறு இயேசு, தன்னை மும்முறை
மறுதலித்த பேதுருவை, அவருடைய பெயரைச் சொல்லி, மீண்டுமாகத்
தன்னுடைய அழைக்கின்றார்.
மன்னிப்பின் அடையாளமாக தன் ஆடுகளை மேய்ச்சச் சொன்ன இயேசு
பேதுரு, இயேசுவை மும்முறை மறுதலித்தார். எனவே, அதனை
மன்னிக்கும் பொருட்டு இயேசு அவரிடம், "நீ இவர்களைவிட மிகுதியாக
என்மீது அன்பு செலுத்துகின்றாயா?" என்று கேட்கின்றார். அவரும்
ஆம் என்கின்றார். இயேசு பேதுருவிடம், "இவர்களைவிட" என்று
கேட்டதற்குக் காரணம், பேதுரு இயேசுவிடம், "எல்லாரும் உம்மை
விட்டு ஓடிப்போனாலும், நான் ஒருபோதும் ஓடிப் போகமாட்டேன்" (மத்
26: 33) "உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" (யோவா 13: 37)
என்றும் சொல்லியிருதந்தார். அதனால்தான் இயேசு பேதுருவிடம்
அப்படிக் கேட்கின்றார்.
இயேசு இவ்வாறு மும்முறை கேட்டதும், "எல்லாம் உமக்குத்
தெரியுமே!" என்கின்றார் பேதுரு. அப்பொழுதுதான் இயேசு அவரிடம்,
"என் ஆடுகளைப் பேணி வளர்" என்று சொல்லிவிட்டு, அவர் எப்படித்
தனக்காக உயிரைக் கொடுப்பார் என்பதை முன்னறிவிக்கின்றார்.
இயேசு, பேதுரு எப்படி இறப்பார் என்பது பற்றிச் சொன்னது போன்றே,
அவர் நீரோ மன்னனின் காலத்தில் (கி.பி 65-67) இறக்கின்றார்.
இவ்வாறு இரண்டாம் முறையாக அழைக்கப்பட்ட பேதுரு ஆண்டவர்
இயேசுவுக்காக உயிரைத் தந்து, அவருக்குச் சான்று பகர்கின்றார்.
பேதுருவை இயேசு இரண்டாம் முறையாக அழைத்தது, கடவுள் நமக்கு
மீண்டுமாக வாய்ப்புத் தருகின்றார்; அவர் முதன்முறை நாம்
தோல்வியுற்றதும் அப்படியே நம்மை விட்டுவிடுவதில்லை என்ற
செய்தியை நமக்கு மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. ஆகையால்,
நாம் கடவுள் நமக்குத் தருகின்ற இன்னொரு வாய்ப்பினையும்
நல்லவிதமாய்ப் பயன்படுத்தி, அவருக்குச் சிறந்த விதமாய்ச்
சான்று பகர்வோம்.
சிந்தனை
"ஆண்டவரின் வாக்கு மீண்டும் அருளப்பட்டது" (செக் 4:18) என்று
இறைவாக்கினர் செக்கரியா நூலில் வாசிக்கின்றோம். ஆம், கடவுளின்
வாக்கும் அழைப்பும் நமக்கு மீண்டுமாக அருளப்படுகின்றது. அவற்றை
நல்லமுறையில் பயன்படுத்தி, பேதுருவைப் போன்று இயேசுவுக்குச்
சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Fr. Maria Antonyraj, Palayamkottai.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
|
|