Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   04 மார்ச் 2020  
    தவக்காலம் 1 ஆம் வாரம்
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 நினிவே மக்கள் தங்கள் தீய வழிகளை விட்டு விலகினார்கள்.

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3: 1-10

இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அவர், "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி" என்றார். அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்று நாள் ஆகும். யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்த பின், உரத்தகுரலில், "இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்" என்று அறிவித்தார்.

நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக்கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து, அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். "இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக்கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது."

கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - திபா 51: 1-2. 10-11. 16-17 (பல்லவி: 17b) Mp3
=================================================================================
பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.
1கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

16ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உள்ளத்தை நீர் அவமதிப்பதில்லை. - பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
நற்செய்திக்கு முன் வசனம் (யோவே 2: 12-13)

"இப்பொழுதாவது உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் நான் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்," என்கிறார் ஆண்டவர்.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
நற்செய்தி வாசகம்
இத்தீய தலைமுறையினர்க்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32


அக்காலத்தில்

மக்கள் வந்து கூடக்கூட இயேசு கூறியது: இந்தத் தீய தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிடமகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்.

தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!

தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால் இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 யோனா 3: 1-10

கடவுளின் மன்னிப்பைப் பெறுவதற்கு முதலில் மனம்மாறவேண்டும்

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஒருவனுக்கு அவன் செய்த கொலைக் குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டது; ஆனால், அவனுடைய சகோதரர் நாட்டிற்காக மிகப்பெரிய சேவையாற்றி இருக்கின்றார் என்ற செய்தி தெரிய வந்ததும், அந்நாட்டின் ஆளுநர் கொலைக்குற்றவாளியின் சகோதரை அழைத்து, அவரிடம் மன்னிப்புக் கடித்தத்தைக் கொடுத்து, "இந்தக் கடிதத்தை உங்கள் சகோதரர் அடைபட்டிருக்கின்ற சிறையில் அதிகாரியாக இருப்பவரிடம் கொடுத்து, அவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகலாம்" என்றார். அவரும் அந்த மன்னிப்புக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் சகோதரர் அடைபட்டிருந்த சிறைக்குச் சென்றார்.

சிறையில் இருந்த அதிகாரியைச் சந்திப்பதற்கு முன்பாக, கொலைகுற்றத்தைச் செய்திருக்கும் தன் சகோதரர் தன் குற்றத்தை உணர்ந்திருக்கின்றாரா? அதற்காக மனம்வருந்துகின்றாரா? போன்றவற்றை அவர் தெரிந்துகொள்ளவிரும்பினார். அதனால் அவர் ஆளுநர் கொடுத்த மன்னிப்புக் கடிதத்தை சிறை அதிகாரியிடம் கொடுக்காமல், நேரடியாகத் தன் சகோதரைச் சந்தித்தார்.

"ஒருவேளை நீ செய்த குற்றத்தை ஆளுநர் மன்னிக்கின்றார் என்றால் இதற்கடுத்து நீ என்ன செய்வாய்?" என்றார் அவருடைய சகோதரர். "ஒருவேளை ஆளுநர் நான் செய்த குற்றத்தை மன்னிக்கின்றார் என்றால், முதலில் நான் எனக்கு மரணதண்டனை விதித்த நீதிபதியை கொல்வேன். பிறகு யாரெல்லாம் எனக்கெதிராகச் சாட்சி சொன்னார்களோ, அவர்களையெல்லாம் கொல்வேன்" என்றான் அந்தக் கொலைக் குற்றவாளி. இதைக் கேட்டு வந்தவர் அதிர்ந்துபோனார். பின்னர் அவர் ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், "குற்றத்தை உணராத என் சகோதரனுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்வது மிகவும் ஆபத்தான செயல். அதனால் அவனுக்கு முகத்தாட்சண்யம் பாராமல் மரண தண்டனை விதித்துவிடுங்கள்" என்று எழுதினார்.

ஆம், செய்த குற்றத்தை உணராதவருக்கு மன்னிப்பு அளிப்பது மிகப்பெரிய குற்றம் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. செய்த குற்றத்தை அல்லது பாவத்தை உணராமல் இருப்போருக்கு மன்னிப்பு அளிப்பது மிகப்பெரிய குற்றம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், குற்றத்தை உணர்ந்தோருக்கு மன்னிப்பு அளிப்பது தகுதியும் நீதியுமான ஒரு செயலாகும். முதல் வாசகத்தில் தங்களுடைய குற்றத்தை உணர்ந்து, சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்ந்து நோன்பிருந்த நினிவே மக்களை ஆண்டவராகிய கடவுள் மன்னிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இன்னும் நாற்பது நாள்களில் நினிவே அழிக்கப்படும்

ஆண்டவராகிய கடவுள் யோனாவை அழைத்து, யூதரல்லாத பிற இனத்து மக்கள் வாழ்ந்து வந்த நினிவேவிற்குச் சென்று, அங்கு தன்னுடைய செய்தியைச் சொல்லச் சொல்லும்போது, அவர் அதற்குக் கீழ்ப்படியாமல் கிழக்குத் திசைப் பக்கமாகப் போவதற்குப் பதில், மேற்குத் திசை பக்கம் போவார். இதனால் அவர் கடலில் தூக்கி வீசப்பட்டு, பெரிய மீனால் காப்பாற்றப்பட்டு வெளியே வருவார். இதற்குப் பின்பு கடவுள் அவரை இரண்டாம் முறையாக அழைத்து, தன்னுடைய செய்தியை நினிவே மக்களிடம் சொல்லச் சொல்லும்பொழுது, அவர் அங்கு சென்று, "இன்னும் நாற்பது நாள்களில் நினிவே அழிக்கப்படும்" என்பார். யோனாவின் எண்ணமெல்லாம் பிற இனத்து மக்கள் அழிந்துபோகவேண்டும் என்பதாகத்தான் இருந்தது; ஆனால், நடந்ததோ வேறொன்று.

குற்றத்தை உணர்ந்தவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் ஆண்டவர்

இறைவாக்கினர் யோனா ஆண்டவர் சொன்ன செய்தியை நினிவே மக்களிடம் சொன்னபொழுது அரசர் உட்பட சிறுவர் முதல் பெரியவர் வரை சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து நோன்பிருக்கத் தொடங்குகின்றார்கள். இதைப் பார்க்கும் ஆண்டவர் அவர்கள்மீது அனுப்புவதாகச் சொன்ன தண்டனை அனுப்பாமல் விட்டுவிடுகின்றார். நினிவே மக்கள் அழிந்துபோகவேண்டும் என்று யோனா நினைத்தபொழுது, ஆண்டவர் அதற்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டு நினிவே மக்களை அழிக்காமல் விடுகின்றார். இதன்மூலம் ஆண்டவர், எல்லார் மக்களுக்கும் தந்தையாகவும் கடவுளாகவும் இருக்கின்றார் என்ற உண்மையும் அவர் யாரெல்லாம் தங்களுடைய குற்றத்தை உணர்கின்றார்களோ, அவர்களுடைய குற்றத்தை அவர் மன்னிக்கின்றார் என்ற உண்மையும் வெளிப்படுகின்றது.

நாம் நம்முடைய குற்றத்தை உணர்ந்து, மனம்வருந்தி ஆண்டவரிடம் திரும்பி வருகின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

"நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்" (மத் 3: 8) என்பார் திருமுழுக்கு யோவான். ஆகையால், நினிவே மக்கள் எப்படி தாங்கள் மனம்மாறியவர்கள் என்பதைச் சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து நோன்பிருந்து காட்டினார்களோ, அதுபோன்று நாமும் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 லூக்கா 11: 29-32

நல்லதைப் பார்க்கத் தவறும் மக்கள்

நிகழ்வு

ஒருமுறை ஒரு தனியார் தொலைகாட்சியைச் சார்ந்த நிருபர் ஒருவர், கூட்டமாக ஓரிடத்தில் கூட்டமாக நின்றுகொண்டிருந்தவர்களிடம் சென்று, "இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு நிமிடங்கள் கொடுக்கப்படும். இந்த இரண்டு நிமிடங்களில் உங்கள் மனத்தில் தோன்றும் கருத்துகளைச் சொல்லலாம். நீங்கள் சொல்லக்கூடிய கருத்துகள் எங்கள் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும்" என்றார்.

உடனே அங்கே நின்றுகொண்டிருந்த ஒவ்வொருவரும், தாங்கள் சொல்லக்கூடிய கருத்துகளை எல்லாரும் கேட்பார்கள் என்ற எண்ணத்தில், சமூகத்திலும் நாட்டிலும் நடக்கக்கூடிய தீமைகளைப் புட்டுப்புட்டு வைத்தார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் பொறுமையாகப் பதிவுசெய்துகொண்டிருந்த நிருபரோ, நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களிடம், "உங்களில் யாராவது ஒருவர் உங்களைச் சுற்றிலும் இந்த சமூகத்திலும் நாட்டிலும் நடக்கக்கூடிய நல்ல செயல்களைப் பற்றிச் சொல்வீர்கள் என்று நினைத்தேன்... யாருமே அவற்றைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை நினைக்கும்பொழுது மிகவும் வேதனையாக இருக்கின்றது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மனிதர்களைப் போன்றுதான் நாம் நம்மைச் சுற்றி நடக்கக்கூடிய நல்ல செயல்களை, நல்ல மனிதர்களைப் பற்றிப் பேசுவதே இல்லை; குறைகளைப் பற்றித்தான் பேசிக்கொண்டே இருக்கின்றோம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எவ்வளவோ வல்ல செயல்களைச் செய்திருக்கும்பொழுது, அவற்றையெல்லாம் பார்த்து, அவர் இறைமகன் என்று ஏற்றுக்கொள்ளாத மக்கள்கூட்டம், அவரிடம் மீண்டுமாக அடையாளம் ஒன்று கேட்கின்றது. இதற்கு இயேசுவின் பதில் என்னவாக இருந்தது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவிடம் சிலர் அடையாளம் கேட்டல்

ஆண்டவராகிய இயேசு தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெற்றவராய் சென்ற இடங்களில் எல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார் (திப 10: 38). குறிப்பாக அவர் பார்வையற்றவர்களுக்குப் பார்வையும் கால் ஊனமுற்றவர்களுக்கு நடக்கக்கூடிய வலுவினையும் தொழுநோயாளர்களுக்கு நலமும் அளித்து வந்தார். இவையெல்லாம் மெசியா இப்பூவுலகிற்கு வந்துவிட்டார் என்பதற்கான அடையாளங்கள் (எசா 35: 6). இப்படியிருந்தபொழுதும் சிலர் இயேசுவிடம், நீர் இறைமகன்தானா என்பதை நிரூபிக்கும் வகையில் அடையாளம் ஒன்றைத் தாரும் (லூக் 11: 16) என்று கேட்கின்றார்கள். அப்பொழுதுதான் இயேசு அவர்களுக்குத் தக்க பதிலளிக்கின்றார்.

யோனாவை விடப் பெரியவர் இயேசு

தன்னிடம் அடையாளம் கேட்டவர்களிடம் இயேசு உடனே அடையாளத்தை நிகழ்த்திக் காட்டவில்லை. மாறாக, யோனாவின் அடையாளத்தைத் தருகின்றார். யோனா பெரிய மீனின் வயிற்றில் மூன்று இரவும் மூன்று பகலும் இருந்தார். அதுபோன்று தானும் பூமியின் வயிற்றில் இருந்துவிட்டு, மூன்றாம் நாள் உயர்த்தெழுவேன் என்று இயேசு யோனாவை அடையாளமாகத் தருகின்றார். மேலும் இறைவாக்கினர் யோனா அசிரியர்களின் தலைநகரான நினிவேவில் வாழ்ந்து வந்த பிற இனத்து மக்களுக்கு ஆண்டவருடைய நற்செய்தியை அறிவித்தார். அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு அங்கிருந்தவர்கள் உடனே சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனம்மாறினார்கள்; ஆனால், இயேசுவோ இறைவாக்கினர் யோனாவை விடப் பெரியவர். அப்படியிருந்தும் மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்டு மனம்மாறாததும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாதது மிகவும் வருத்தமாக இருக்கின்றது.

சாலமோனை விடப் பெரியவர் இயேசு

ஆண்டவர் இயேசு தன்னிடம் அடையாளம் கேட்டவர்களிடம் இறைவாக்கினர் யோனாவின் அடையாளத்தைத் தந்ததோடு நின்றுவிடாமல், இன்னொருவருவரையும் எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். அவர்தான் சேபா நாட்டு அரசி. செபா நாடாது தெற்கு அரேபியாவில் உள்ள சிறிய நாடு. இந்நாட்டைச் சார்ந்த அரசி சாலமோன் மன்னரின் ஞானத்தைக் கேட்டு, அவரைத் தேடி வருகின்றார் (1 அர 10: 1-10) ஆனால், ஆண்டவர் இயேசுவோ சாலமோன் மன்னரைவிடப் பெரியவர். அப்படியிருந்தபொழுதும் மக்கள் அவரைத் தேடி வராததும் அவர்மீது நம்பிக்கை கொள்ளாததும் மிகவும் வியப்பாக இருக்கின்றது.

இன்றைக்குகூட ஒருசிலர் கண்முன்னால் இருக்கக்கூடிய அல்லது உள்ளூரில் இருக்கக்கூடிய கோயிலுக்குப் போகாமல், எங்கோ இருக்கின்ற கோயிலுக்கு அல்லது திருத்தலங்களுக்குப் போவது மிகவும் வியப்பாக இருக்கின்றது. அவர்கள் திருத்தலங்களுக்குப் போகிறார்கள் என்று சொல்வதை விடவும் ஏதாவது ஒரு பெரிய அதிசயத்தைக் கண்டுவிடலமா என்பதாகத்தான் இருக்கின்றது அவர்களுடைய எண்ணமெல்லாம். இப்படிப்பட்டோர் அதிசயத்தைத் தேடி அலைபவர்களாக இல்லாமல், இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்கு ஏற்ப, அவர்கள் இருக்கக்கூடிய இடத்தில் வாழ்வது நல்லது.

சிந்தனை

"உலகை வெல்வது நமது நம்பிக்கையே" (1 யோவா 5: 4) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் நம்மிடம் இருக்கக்கூடிய அவநம்பிக்கையையும் எப்பொழுதும் தவற்றை மட்டுமே பார்க்கக்கூடிய போக்கையும் அப்புறப்படுத்திவிட்டு, இறைவனிடம் நம்பிக்கையோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!