Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 நாளாந்த  வாசகம்

                   04  டிசெம்பர் 2018  
                                                           பொதுக்காலம் 34ம் வாரம் 
=================================================================================
முதல் வாசகம் 
=================================================================================
 ஆண்டவர் தமது விருந்துக்கு அழைக்கின்றார்; எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10a

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.

மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.

அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: "இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்." ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா:  23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 6b)
=================================================================================
 பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3a அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருவார்; அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்போர் பேறுபெற்றோர். அல்லேலூயா.
=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
 இயேசு பலரைக் குணமாக்கினார், அப்பம் பலுகச்செய்தார்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 29-37

அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று அங்கே ஒரு மலையின் மீது ஏறி அமர்ந்தார். அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர்.

அவர்கள் தங்களோடு கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர், பேச்சற்றோர் மற்றும் பிற நோயாளர் பலரையும் அவர் காலடியில் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களை அவர் குணமாக்கினார். பேச்சற்றோர் பேசுவதையும், உடல் ஊனமுற்றோர் நலமடைவதையும், பார்வையற்றோர் பார்க்கிறதையும் கண்டு மக்கள் கூட்டத்தினர் வியந்து இஸ்ரயேலின் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

இயேசு தம் சீடரை வரவழைத்து, "நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்" என்று கூறினார்.

அதற்குச் சீடர்கள் அவரிடம், "இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?" என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார். அவர்கள், "ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன" என்றார்கள்.

தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை

நம்புகின்றவர்களுக்கு நல்லது நடக்கின்றது.

நம்பிக்கை விடுதலை தருகின்றது என்பதுவே உண்மை.

பலர் குணம் பெற்றனர். பலர் இன்றும் குணம் பெறுகின்றனர்.

நம்முடைய நம்பிக்கை நமக்கு நலம் தருகின்றதா? நாம் நம்பிக்கையில் உயர்ந்து இருக்கின்றோமா? விதண்டாவாதம் பேசி பொழுதை கழிக்கின்றோமா? வயது, அனுபவம், அறிவு, இவற்றை பொருத்து நம்முடைய நம்பிக்கையும் உயர்ந்திருக்குமேயானால் வாழ்வு நலம் பயக்கும்.

திருவிருந்துக்கு அழைக்கும் இறைவன், தன்னையே விருந்திலே உணவாகத் தந்து நம்மை வளப்படுத்துகின்றார். உணவை உண்போர் என்றுமே வாழ்வார்கள். உணவை நம்பிக்கையுடனே பெறுவோர் வாழ்வில் நலன்கள் பெருகும்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
 பரிவும் பகிர்தலும்

அது ஒரு பிரசித்த பெற்ற கோவில். அந்தக் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் ஒவ்வொருநாளும் வந்து போவார்கள். இதனால் அந்தக் கோவில் எப்போதுமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.

அந்தக் கோவிலுக்கு முன்பாக சிறுவன் ஒருவன் காலை முதல் இரவுவரை பூமாலை செய்து, அதனை கோவிலுக்கு வருவோரிடம் விற்றுவந்தான். இதற்கிடையில் ஒவ்வொருநாளும் மாலை நேரத்தில் கோவிலுக்கு ஒரு பணக்காரப் பெண்மணி வந்து போனார். அந்தப் பெண்மணியிடத்தில் மட்டும் பூமாலை விற்கின்ற சிறுவன் ஓடிச்சென்று, தன்னிடம் இருக்கும் பூமாலையை வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்பான். ஆனால் அந்த பணக்காரப் பெண்மணி சிறுவனை ஒருபோதும் கண்டுகொள்வதேயில்லை. அப்படியிருந்தும் சிறுவன் அவரிடம் பூமாலையை விற்பதற்குத் தயங்குவதே இல்லை.

இதுவே வழமையாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில், சிலகாலமாக அந்த பணக்காரப் பெண்மணி கோவிலுக்கு வரவே இல்லை. பணக்காரப் பெண்மணிக்கு என்னவாயிற்றோ என்று ஓரிரு நாட்கள் யோசித்துப் பார்த்த பூமாலை விற்கின்ற சிறுவன், பின்னர் அவரை மறந்துவிட்டு தன்னுடைய வேலையில் மும்முரம் காட்டத் தொடங்கினான்.

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு முன்பு வந்த அதே பணக்காரப் பெண்மணி இப்போது அதே நேரத்தில் கோவிலுக்கு வரத்தொடங்கினார். ஆனால் இப்போதெல்லாம் பூமாலை விற்கின்ற சிறுவன் அந்த பணக்காரப் பெண்மணிக்குப் பின்னாலேயே சென்று பூமாலை வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சிக்கேட்கவே இல்லை. சிறுவனின் நடத்தையில் இருந்த வித்தியாசத்தைக் கண்டுணர்ந்த அவர் சிறுவனிடத்தில் சென்று, "எதற்காக இப்போதெல்லாம் எனக்குப் பின்னாலேயே வந்து பூமாலை வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்பதில்லை" என்று கேட்டார். "உங்களிடத்தில் நான் எதற்கு பூமாலை வாங்கிக்கொள்ளுமாறு கெஞ்சிக்கேட்க கேட்க வேண்டும்?. இப்போது அதற்கான தேவையும் இல்லை" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து சொன்னான், "என் தங்கைக்கு புற்றுநோய் இருந்தது. அவளை ஒரு நல்ல மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று, சிகிச்சை அளிக்கத்தான் பணக்காரராகிய உங்களிடம் பூமாலை விற்று பணமீட்ட நினைத்தேன். ஆனால், நீங்களோ ஒரு பத்து ரூபாய்க்குக்கூட பூமாலை வாங்கவில்லை. கடந்த வாரம்தான் என் தங்கை சிகிச்சை அளிக்க போதிய பணமில்லாமல் இறந்து போனாள்... அவளே இந்த உலகத்தை விட்டு போனபின்பு, உங்களிடத்தில் "பூமாலை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கேட்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. அதனால் உங்கள் பின்னால் இப்போது வருவதில்லை".

சிறுவன் சொன்னதைக் கேட்ட பணக்காரப் பெண்மணிக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. தன்னால் அந்த சிறுவனுக்குக் கொடுத்து உதவ முடியவில்லையே என்று அவருடைய மனம் அவரை வாட்டி எடுத்தது.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் பணக்காரப் பெண்மணியைப் போன்றுதான் நம்மில் நிறையப் பேர், இருப்பதை இல்லாதவருக்குக் கொடுத்து உதவ மறுக்கின்றோம்.

ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில் தங்களிடத்தில் இருப்பதை பிறருக்குக் கொடுத்து வாழ்ந்த - பிறரோடு பகிர்ந்து வாழ்ந்த - மாமனிதர்களைக் குறித்துப் படிக்கின்றோம். அவர்களுடைய இத்தகைய இரக்கமிக்க செய்கை நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

ஆண்டவர் இயேசு புறவினத்தார் வாழும் பகுதிக்குச் சென்று, அங்கிருந்த ஒரு மலையில் ஏறி அமர்கின்றார். அவருடைய போதனையைக் கேட்பதற்காகவும், அவரிடமிருந்து நலம் பெறவும் மக்கள் கூடி வருகின்றார்கள். அப்போது இயேசு அவர்களிடமிருந்த நோயாளிகளைக் குணப்படுத்துகின்றார். அது மட்டுமல்லாமல் அத்தனை மக்களுக்கும் உணவு கொடுத்து உதவுகின்றார். மக்களின் பசியைப் போக்க சீடர்கள் தங்களிடமிருந்த ஏழு அப்பங்களைக் கொடுத்து உதவுகின்றார்கள். இயேசு அதில் தன்னுடைய வல்லமையைத் தந்து, எல்லா மக்களுக்கும் உணவு கொடுத்து உதவுகின்றார்.இவ்வாறு அவர்கள் தங்களிடம் இருந்ததை பிறருக்குக் கொடுத்ததால், பகிர்ந்து வாழ்ந்ததால் குறைவாய் இருந்த இடம் நிறைவானதாக மாறியது.

இயேசு செய்த அற்புதச் செயலுக்கு மிகவும் அடிப்படையாக இருந்தது அவரிடமிருந்து பரிவு என்று சொன்னால் அது மிகையாகாது. பரிவு என்றால் உடன் துன்புறுதல் என்று அர்த்தமாகும். ஆண்டவர் இயேசு மக்களின் துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்த்தார். அதனால்தான் அவர்களுடைய துன்பத்தை (நோய்கள், களைப்பு, உணவின்மை) தன்னுடைய துன்பமாகப் பார்த்து, அதனைப் போக்குவதற்கு உதவி செய்தார். உள்ளத்தில் பரிவு கொண்டுவாழும்போது எவ்வளவு பெரிய வல்ல செயலும் நடக்கலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரிடத்தில் இருந்த பரிவை நம்முடைய உள்ளத்திலும் தாங்கி வாழ்வோம்; இருப்பதை இல்லாதவருக்குக் கொடுப்போம், தேவையில் இருப்பவரோடு நம்மிடம் இருப்பதை பகிர்ந்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 பகிர்ந்து வாழுவோம்

மகான் ஒருவர் தன்னுடைய சீடர்களோடு சாலையோரமாக இருந்த மரத்திற்கு கீழே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அப்பக்கமாய் ஒரு நாய் வந்தது. அதன் உடலைப் பார்க்கும்போதே தெரிந்தது அது சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது என்று.

மகானின் சாப்பாட்டுத் தட்டையே பார்த்துக்கொண்டிருந்த அந்தநாய் திடிரென்று அவருடைய தட்டில் இருந்த ரொட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடியது. இதனைச் சற்றும் எதிர்பாராத அவருடைய சீடர்கள் அதனை அதட்டினார்கள். ஆனால் அந்த நாயோ அவர்களின் சத்தத்தைக் கேட்டு இன்னும் வேகமாக ஓடியது.

அப்போது மகான் என்ன நினைத்தாரே தெரியவில்லை கையில் ஒரு தம்ளரைத் தூக்கிக்கொண்டு நாய்க்கு பின்னாலே ஓடினார். மகான் இப்படியெல்லாம் நடந்துகொள்வார் என்று கொஞ்சமும் எதிர்பாராத அவருடைய சீட்டர்கள், "இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார்; ஒரு சாதாரண ரொட்டித்துண்டுக்காக நாய்க்கு பின்னால் ஓடுகிறாரே என்று அவர் பின்னாலே ஓடினார்கள்.

இதற்குள் வேகமாக ஓடிய நாய் ஓரிடத்தில் ரொட்டித் துண்டைக் கீழேபோட்டு சாப்பிடத் தொடங்கியது. பின்னாலே சென்ற மகான் தன்னுடைய தம்ளரில் இருந்த பாலை அந்த ரொட்டியில் ஊற்றி சாப்பிடக் கொடுத்து அந்த நாயிடம் பேசினார், "என்னிடமிருந்து எடுத்த வந்த அந்த ரொட்டியோ மிகவும் காய்ந்துபோனது; அதை அப்படியே சாப்பிட்டால் உனக்கு விக்கும். பால் ஊற்றிச் சாப்பிட்டால்தான் உள்ளே நன்றாக இறங்கும்" என்றார்.

அதற்குள் சீடர்கள் மகான் அருகே வந்து நின்றனர். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, நீங்கள் இந்த நாயை சத்தம் போட்டு விரட்டவில்லை என்றால், நான் இந்த நாய்க்கு உணவு அங்கேயே கொடுத்திருப்பேன், நீங்கள்தான் தேவையில்லாமல் அதனை ஓடிக் களைப்படையச் செய்துவிட்டீர்" என்று சொல்லிவிட்டுச் சொன்னார், "யார் பசியால் வாடினாலும், அது உயிரினங்களாக இருந்தால்கூட அவற்றுக்கு நாம் உணவிட வேண்டும், நம்மிடம் இருப்பதை பகிர்ந்துகொடுத்து உண்ணவேண்டும்" என்றார்.

நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழவேண்டும் என்பதை இக்கதையானது அழகாக எடுத்துக்கூறுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஏழு அப்பங்களையும், மீன்களையும் வைத்து நான்காயிரம் பேருக்கு உணவளிக்கிறார். தன்னுடைய போதனையைக் கேட்க பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் பட்டினியால் வருந்தக்கூடாது என்று அவர்களுக்கு உணவைப் பகிர்ந்தளிக்கிறார். இயேசு செய்த இந்த அருமடையாளத்திற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது அவர் மக்கள்மீது கொண்ட பரிவேயாகும்.

இன்று நம்மோடு, நாம் வாழும் இந்த சமூகத்தில் ஏராளமான மக்கள் உண்ண உணவில்லாமல், தங்க இடமில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் நம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும், இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்துவாழ முன்வர வேண்டும்.

ஆனால் மாறிவரும் இந்த காலச்சூழல் மக்களை சுயநலவாதிகளாகவும், அடுத்தவரைப் பற்றி அக்கறைகொள்ளாத மக்களாகவும் மாற்றுகிறது. "சக மனிதனைப் பற்றி அக்கறை கொள்ளாத மனிதர் தின்று கொழுத்த பற்றிக்குச் சமம்" என்பார் தத்துவஞானி சாக்ரடிஸ். சற்று கடினமான வார்த்தைகளாக இருந்தாலும் அதுதான் உண்மை.

நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு கூறுவார், "கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும், அமுக்கிக் குலுக்கி சரிந்து விழும்படி உங்கள் மடியில் போடுவார்கள்" (லூக் 6:38)" என்று. எனவே தன்னலச் சேற்றில் நாம் புதைந்து போகாமல், நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்வோம். இறையருள் பெறுவோம்.


Fr. Maria Antonyraj, Palayamkottai.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3  
=================================================================================
"இயேசு என்னும் பரிவுள்ள இறைவன்"

சீனாவில் அவாந்தி என்றொரு விகடகவி இருந்தார். நம் நாட்டில் தெனாலி ராமன், பீர்பால் எப்படி பிரபலமோ அதுபோன்று, சீனாவில் அவாந்தி பிரபலம்.

அவாந்தி இருந்த ஊரில் செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் ஆடம்பரமாகவும் செல்வச் செழிப்போடும் இருந்தான்; மக்களோ உணவின்றி பட்டினி கிடந்தார்கள். மக்கள் இப்படி உணவின்றி பட்டினி கிடக்கின்றார்களே, அவர்களுக்கு ஏதாவது கொடுத்து உதவலாமே என்று அவனுக்கு கடுகளவுகூட எண்ணம் வரவில்லை, மாறாக அவன் ஒவ்வொருநாள் மாலை வேளையிலும் தன்னுடைய பங்களாவிற்கு முன்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தான்.

இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட நினைத்த அவாந்தி, ஊரில் இருந்த ஒருசில இளைஞர்களைக் கூப்பிட்டு, அவர்களிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, "இந்த பணத்தைக் கொண்டு, அரிசி வாங்கி, அதனைக் கஞ்சியாகக் காய்ச்சி, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் தொடங்கிய சிறிதுநேரத்தில் மக்களுக்குக் கொடுக்கத் தொடங்குங்கள். அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்... இன்றைக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நான்தான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கின்றேன்" என்று சொல்லி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

மாலையில் குறிப்பிட்ட நேரத்தில், செல்வந்தனின் பங்களாவிற்கு முன்பாக ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கின. மக்களும் ஆடல் பாடல் நிகழ்சிகளை மிக மும்முரமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். அவாந்தியோ, சிறிதுநேரத்திற்கு பிறகு நடக்கப்போவது என்ன என்பது பற்றி ஒன்றுமே தெரியாதவர் போல், செல்வந்தனின் அருகே அமர்ந்து ஆடல் பாடல் நிகழ்சிகளைப் பார்த்து வந்தார்.

நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில், பின்னால் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் மக்களுக்கு மத்தியில் வந்து, "உங்களுக்காக கஞ்சி தயாராக இருக்கின்றது. எல்லாரும் சாப்பிட வாருங்கள்" என்றார்கள். இதைக் கேட்ட மக்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு சாப்பிடக் கிளம்பினார்கள். இப்போது நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு அந்த செல்வந்தனும் அவாந்தியும் மட்டுமே அங்கிருந்தார்கள். செல்வந்தனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவன் அவாந்தியைப் பார்த்து, "என்ன இந்த மக்கள்! இப்படி இருக்கிறார்கள்!. நாமோ இவர்களுக்காக மிகுந்த பொருட்செலவில் கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், இவர்கள் கஞ்சிக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுகிறார்களே" என்று அங்கலாத்தான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அவாந்தி, செல்வந்தன் பேசி முடித்ததும் பேசத் தொடங்கினார், "ஐயா பெரியவரே! மக்கள் உணவில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நீங்கள் இப்படி மிகுந்த பொருட்செலவில் ஒவ்வொருநாளும் கலைநிகழ்ச்சிகளை வழங்குவது எந்தவிதத்தில் நியாயம்?. நீங்கள் காட்டுகின்ற கலைநிகழ்ச்சிகள் அவர்களுடைய பசியைப் போக்காது. கஞ்சிதான் அவர்களுடைய பசியைப் போக்கும். அதனால்தான் கஞ்சியைக் கண்டதும் உங்களுடைய கலைநிகழ்ச்சிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் ஓடிப்போய்விட்டார்கள்... இனிமேலானது மக்களுடைய பசியைப் போக்க ஆவணசெய்யுங்கள்" என்றார். இதைக் கேட்டபோதும் அந்த செல்வந்தன் தன்னுடைய தவற்றை உணர்ந்து, திருந்தி நடக்கத் தொடங்கினான்.

மக்கள் உணவுக்கே வழியில்லாமல் கஷ்டப்படும்போது, அவர்களை திசை திருப்புவதற்காக ஏதேதோ செய்வது எந்தவிதத்தில் நியாயம் என்ற உண்மையை விளக்கிச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, கலிலேயக் கடற்கரை வழியாகச் சென்று, ஒரு மலையில் ஏறி அமர்கின்றார். இயேசுவைக் கண்டதும் பெருந்திரளான மக்கள் அவரிடத்தில் வருகிறார்கள். அவர்கள் தங்களோடு தூக்கிக்கொண்டு வந்த நோயாளிகளை, உடல் ஊனமுற்றவர்களை, பார்வையற்றவர்களை அவருக்கு முன்பாகக் கிடத்துகிறார்கள். இயேசு அவர்கள் அனைவரையும் குணப்படுத்துகின்றார். அதன்பின்பு இயேசு தன் சீடர்களை வரவழைத்து, "நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். இவர்களைப் பசியாய் அனுப்பிவிடவும் விரும்பவில்லை" என்று சொல்லி, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன" என்று கேட்கின்றார். அவர்கள், "ஏழு அப்பங்களும் சில மீன்களும் இருக்கின்றன" என்று சொன்னதும் அவற்றைத் தன்னிடம் கொண்டு வரச் சொல்லி ஆசி வழங்கி, அவற்றை மக்களிடம் கொண்டு போகச் சொல்கிறார். மக்களும் வயிறார உண்கிறார்கள்.

பெண்கள் குழந்தைகள் நீங்கலாக உணவுஉண்ட ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய நான்காயிரம் என்கிறார் நற்செய்தியாளர். இத்தனை மக்களுக்கும் இயேசு உணவளித்து, அவர்களிடம் இருந்த நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்றால், அவர் மக்களுக்கு எது தேவையோ அதை நன்றாக உணர்ந்திருந்தார். அதனால்தான் பரிவோடு அதனை அவர்களுக்குச் செய்துதந்தார்.

இயேசுவின் வழியில் நடக்கும் நாம், மக்களின் தேவை அறிந்து, அவர்களுக்கு உதவுகின்றோமா? அவர்களிடத்தில் பரிவு கொண்டு வாழ்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். "மக்களோடு இரு, மக்களுக்காக இரு"Plerinage des tamouls Lourdes என்பார்கள். இயேசு மக்களோடு இருந்தார், மக்களுக்காக இருந்தார். அதனால்தான் அவர்களுடைய தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்தார்.

நாமும் இயேசுவைப் போன்று மக்களின் தேவையை அறிந்து, அவர்களிடம் பரிவோடு நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 4
=================================================================================
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!