• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

பாத்திமா மாதாவின் மன்றாட்டு மாலை  

   

பாத்திமா மாதாவின் நவநாள்

பாத்திமா மாதாவின் மன்றாட்டு மாலை


ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்

பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய சருவேசுரா!
எங்கள்மேல் இரக்கமாயிரும்

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா!
எங்கள்மேல் இரக்கமாயிரும்

பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா! எங்கள்மேல் இரக்கமாயிரும்

தூய திரித்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா! எங்கள்மேல் இரக்கமாயிரும்

புனித மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவனின் புனித மாதாவே!

புனித பற்றிமா செபமாலை மாதாவே!

பற்றிமா என்னும் சிற்றூரின் பக்கத்தின் மலையோரத்தில், ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த, மூன்று சிறு ஏழைப்பிள்ளைகளுக்கு, ஆறு முறை தரிசனமாகிய, பற்றிமா செபமாலை மாதாவே!

மதிய வேளையில் மணியடித்தவுடன், முழந்தாளில் நின்று, வழக்கப் பிரகாரம் செபமாலை செபித்து எழும்பிய உடனே, அந்தப் பக்தியுள்ள பிள்ளைகளுக்குத் தரிசனமான பற்றிமா செபமாலை மாதாவே!

செபமாலையை அவர்கள் அப்படியே எப்பொழுதும் பக்தியுடன் செபிக்கவும், ஒவ்வொரு காரணிக்கத்தின் முடிவிலும், ஒரு சிறு செபத்தைச் சேர்த்துக்கொள்ளும்படியும், படிப்பிக்கத் தயைகூர்ந்த பற்றிமா செபமாலை மாதாவே!

யேசுவே! எங்கள் பாவங்களைப்பொறுத்தருளும், நரக ஆக்கினையில் நின்று எங்களை இரட்சித்தருளும், உத்தரிக்கின்ற ஆத்துமாக்களுக்கும், விசேசமாக, யாரும் நினையாத ஆத்துமாக்களுக்கும், ஆறுதலை அளித்தருளுமென்று, செபமாலையின் ஒவ்வொரு காரணிக் கத்தின் கடைசியில், திரித்துவ ஆராதனைக்குப் பின்பு சொல்லும்படி கற்பித்த பற்றிமா செபமாலை மாதாவே!

பாவமில்லை, புண்ணியமில்லை, நரகமில்லை, மோட்சமில்லை என்கின்ற பசாசின் துர்ப்போதனைகளால், மக்கள் போகாதபடிக்கு, யேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும், என்று பலமுறை செபமாலையுடன் சேர்த்துச் செபிக்கும்படி அப்பிள்ளைகளுக்குக், கற்பிக்கக் கிருபைகூர்ந்த பற்றிமா செபமாலை மாதாவே!

நரகமிருக்கின்றது சத்தியமென்றும், அதற்கு அஞ்சி நடக்கவேண்டு மென்றும், ஆக்கினையில் நின்று எங்களை இரட்சித்தருளும் என்று அடிக்கடி செபிக்கும்படி, கற்பிக்கக் கிருபைகூர்ந்த பற்றிமா செபமாலை மாதாவே!

நல்ல கிறிஸ்தவர்களுமே உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களையும், அதன் அகோர வேதனையையும் மறவாமல், உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காக வேண்டிக்கொள்ளும்படி கற்பிக்கக் கிருபை கூர்ந்த பற்றிமா செபமாலை மாதாவே!

செபமாலை வழியாய், உலகத்திற்குச் சமாதானம் வருமென்று வாக்களித்த பற்றிமா செபமாலை மாதாவே!

பரிசுத்ததனம், கற்புஎன்னும் உத்தம புண்ணியங்களைக் கெடுக்கும் படி, பசாசு விரிக்கும் பலவித மாய வலைகளிலும் சிக்கி, அனேகம் ஆத்துமாக்கள் நரகத்திற்கு இரையாகின்றார்கள் என்று அப்பிள்ளை களுக்கு ஞான உபதேசம் கற்பிக்கக் கிருபை கூர்ந்த பற்றிமா செபமாலை மாதாவே!

நீர் எங்கிருந்து வந்தீரம்மா? என்று லூசியா கேட்டபோது, மோட்சத்திலிருந்து வந்ததாகப் பதிலுரைக்கக் கிருபை கூர்ந்த பற்றிமா செபமாலை மாதாவே!

என் சிறு சகோதரி ஜசிந்தாவையும் கொண்டுபோவீரா? எனக் கேட்க, ஆம் என்று பதிலுரைக்கக் கிருபை கூர்ந்த பற்றிமா செபமாலை மாதாவே!

என் சிறு சகோதரன் பிரான்சிஸ்குவையும் கொண்டுபோவீரா? எனக் கேட்க, அவன் செபமாலையைப் பக்தியோடு செபிக்கவில்லை. அனேகமுறை அவன் பக்தியோடு செபிக்கவேண்டும். அதன்பின்பு அவனைக் கொண்டு போவேன் என்று திருவாய் மலர்ந்தருளிய பற்றிமா செபமாலை மாதாவே!

இம்மூவரில் மூத்தவளாகிய லூசியாவைப் பார்த்து, நீ எழுத, வாசிக்க, படிக்கும்படி நான் விரும்புகிறேன் என்று கற்பிக்கத் தயைகூர்ந்த பற்றிமா செபமாலை மாதாவே!

அப்படியே அவள் படித்து, தேவ அழைப்பை அடைந்து, கன்னியாஸ் திரியாயிருக்க உதவி புரிந்த பற்றிமா செபமாலை மாதாவே!

அப்பிள்ளைகள் ஆடு மேய்த்தக்கொண்டிருந்த அந்த மலையடி வாரத்தில், உமக்கு ஒரு சிறு கோவிலைக்கட்ட, நீர் விரும்புவதாய் தெரிவித்த பற்றிமா செபமாலை மாதாவே!

நீர் காணப்பட்ட கருங்காலி மரத்தடியில், விசுவாசிகள் கொண்டுவந்து போடும் காணிக்கை நேர்த்திப் பணத்தை, வாரியெடுத்து, பற்றிமா பங்குத் தந்தையிடம் கொண்டு போய்க்கொடுங்கள், என்று கற்பிக்கக் கிருபைகூர்ந்த பற்றிமா செபமாலை மாதாவே!

அதற்காக சிறு தட்டுகளை வாங்குங்கள், அதிலே காணிக்கைகளை வாரிப்போடுங்கள். ஒன்றை லூசியா, ஜசிந்தா இரு சிறுமிகளும், வேறுசிறுமிகள் இருவருமாகத் தூக்கிக்கொண்டு போக வேண்டு மென்றும், மற்றதைச் சிறுவன் பிரான்சீஸ்குவும், வேறு சிறுவர்கள் மூவரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு போக வேண்டுமென்றும் கற்பித்த பற்றிமா செபமாலை மாதாவே!

திருநாட்கள் கொண்டாட்டங்களில், தேவாலயங்களிலும் உள்ளும் புறமும், ஆண், பெண்கள் எவ்வித அடக்க ஒடுக்கமாய் விலகி நடக்க வேண்டுமென்று தெளிவாய் படிப்பிக்கச் சித்தமான பற்றிமா செபமாலை மாதாவே!

கோவில் காணிக்கைச் சொத்துக்கள் மட்டில், இக்காலத்தில் எங்கும் பசாசு படிப்பித்திருக்கும் கள்ளப்போதனைகளையும், வீண்கட்சி வாக்கு வாதங்களையும், இவ்வாறு அடியோடு அறுத்தெறியும்படி, பங்குச் சுவாமிடம் கொண்டுபோய்க் கொடுங்கள் என்று கற்பித்த பற்றிமா செபமாலை மாதாவே!

காணிக்கையில் கொஞ்சம் வாங்கி, அந்த அத்தவானக் காட்டில் ஒரு சிறு கோவிலைக் கட்டவேண்டுமென்று படிப்பித்த பற்றிமா செபமாலை மாதாவே!

அங்கே ஆயிரமாயிரம் ஜனங்கள் திரு யாத்திரையாய் வரும்போது, அவர்களை அன்புள்ள அன்னையைப்போல பட்சத்தோடு அரவ ணைத்துப் பராமரிக்கும் பற்றிமா செபமாலை மாதாவே!

அந்தப்பற்றிமா மலையில் வந்துகூடும் திரளான ஜனங்களுக்கு, அங்கே குடிக்கத் தண்ணீர் இல்லாமல் படும் கஸ்டத்தைக் கண்டு, மனம்நொந்த மேற்றிராணியாண்டவர், நீர் தரிசனையான மரத்துக் கண்மையில் வெட்டிப் பார்த்தபோது, அற்புதமாய் நீரூற்று பிறப்பித்து, அந்த நீரினால், அனேகருக்கு அநேக ஆத்தும, சரீர ஆரோக்கியங்களை அளிக்கும் பற்றிமா செபமாலை மாதாவே!

திரு யாத்திரிகர்களைத் தடைப்பிக்கவும், விலக்கவும், கட்டப்பட்ட சிறு கோவிலை அழிக்கவும், வேத விரோதக்கட்சிகள் பட்டாளக் காரர்கள் பட்ட சகல பிரயாசைகளையும் ஜெயித்து, வெற்றியுறும்படி விசுவாசிகளுக்கு உதவிசெய்த பற்றிமா செபமாலை மாதாவே!

அண்மையிலும், சேய்மையிலும் நின்று அங்குவரும் வியாதியஸ் தர்களுக்கு ஆறுதலையும், தீராதவியாதியென்று வைத்தியர் திட்ட மிட்ட வியாதிகளைப் போக்கிவரும் பற்றிமா செபமாலை மாதாவே!

காட்டுத்தீபோல் பரவிவந்த பிரிமேசன் இரகசிய வேதமென்னும் பசாசின் பிணி, போத்துக்கலிலும் நுளைந்து, வேதகலகம் செய்யும்போது, போத்துக்கல் நகரின்மேல் கடைக்கண்ணருளிய, பற்றிமா செபமாலை மாதாவே!

போத்துக்கேய வாசியான வாஸ்கொடகாமா, தினந்தோறும் உம்மை நோக்கிக்கரையிலும், கப்பலிலும் நம்பிக்கையோடு செய்த செபமாலை முதலிய செபத்திற்குச் சம்பாவனையாக, சிந்து தேசத்தைக் கண்டு பிடிக்குமாறு செய்த பற்றிமா செபமாலை மாதாவே!

அதன்பின் அஞ்ஞானத்தில் அமிழ்ந்தியிருந்த சிந்து தேசத்தில், சத்திய வேதத்தைப்போதிக்க எத்தனமாக, போத்துக்கல் இராட்சி யத்தையே தேவசித்தப்படி தெரிந்துகொண்டு, பிரான்சிஸ்கு சவேரி யாரை அனுப்பவும், அவர் பணிகளை ஆசீர்வதிக்கவும் கிருபைகூர்ந்த பற்றிமா செபமாலை மாதாவே!

அவவிசுவாசம், அனாச்சாரம், அலங்கோலம் என்னும் கொள்ளை நோய்களில் நாங்கள் அகப்பட்டு மடியாமல், எங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று தாயே உம்மை மன்றாடுகின்றோம்!
- தாயே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!

செபமாலைப் பக்தி அபத்தான இக்காலத்தில், எங்கும் எங்கள் குடும்பங்களிலும் பரவி, ஊன்றி நிலைக்கச் செய்ய வேண்டுமென்று தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

இராட்சியங்களை ஆண்டு நடத்தும் அரசர், தேசாதிபதிகள், நீதியைப் பின்சென்று, வழுவாது தங்கள் பிரசைகளை வழிநடத்த உதவி செய்யும்படி தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

குடும்பங்களிலும், தேசங்களிலும் சண்டைசச்சரவுகள், யுத்தம் முதலிய தீமைகளை விலக்கும்படி தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

கீழ்ப்படிதல், பொறுமை, பிறர்சிநேகம் என்னும் புண்ணியங்களை எல்லோரும் கண்டறியவும், குடும்பங்களில் அனுசரிக்கவும் செய்யும்படி, தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

எங்கள் இல்லங்களிலும், தேவாலயங்களிலும், தேவ சிநேகத்திற்கும், பிறர் சிநேகத்திற்கும் விரோதமாயும், சத்தியவேதம் எங்கும் பரவு வதற்கு இடையூறாயும், எங்கள் மத்தியில் குடிகொண்டிருக்கும் ஜர்தி, மத, பேதம் முதலிய துர்ப்பழக்கங்கள் ஒழிந்துபோகவும், துணைபுரிய வேண்டுமென்று தாயே உம்மை மன்றாடுகின்றோம்

ஆங்காங்கு உமது ஸ்தோத்திரத்திற்காக, தேவாலயங்களைக் கட்ட நீர் கற்பிப்பதனால், அங்கே தேவபலிசை நடைபெறவும், தேவநற் கருணையை அடிக்கடி எல்லோரும் பக்தியோடு உட்கொள்ளவும் வேண்டுமென்கிற உமது விருப்பம், எங்கள் மத்தியில் நிறைவேறும்படி செய்யவேண்டுமென்று தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

சத்திய வேதம்பரம்புவதற்கு, அந்தந்த இராட்சியங்களில் அநேகர் தேவ அழைப்பினைப் பெறவும், தேவ ஊழியர்கள் அதிகரிக்கவும், இதற்கு உதவி புரிவோரை நீர் ஆசீர்வதிக்கவும், வேண்டுமென்று தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

கற்பென்னும் புண்ணியத்தின் உன்னத அலங்காரத்தைக் காண்பிக்கத் தக்கதாக உமத தூயசரீரம், சூரியகாந்தியாக, அதிசோதிமயமாய் ஜொலித்து பிரகாசித்ததைப் பார்க்கக்கூடாமல், அந்தப் பிள்ளைகள் கண்கூசியதால், கற்பின் மகிமை அலங்காரத்தை எங்கள் மத்தியில் உள்ள இளம் பிள்ளைகள் கண்டுணரவும், கற்பை சிநேகிக்கவும், உதவிபுரியும்படி தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

குடும்பங்களில் அனுசரிக்க வேண்டிய பரிசுத்த கற்பென்னும் புண்ணியத்திற்கு விரோதமாய், இக்காலத்தில் எங்கும் போதிக்கப்படும் கொடிய துர்ப்போதனைகள் ஒழிந்துபோக உதவி புரியவேண்டுமென்று தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

சிறு பிள்ளையாய்ப் பிறந்து, சீவித்து, பன்னிரண்டு வயதில், தேவாலயத்திற்குச் சென்று, ஞானோபதேசம் கற்று, பின்பு சிறு பிள்ளைகளை என்னண்டை வரவிடுங்கள், பரலோக இராட்சியம் அவர்களுடையதென்று திருவுளம்பற்றிய வாக்கியத்தின் மாட்சிமையையும், மகத்துவத்தையும், பெற்றோர் அறிய உதவி செய்யும்படி தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

கீழைத்தேசமெங்கும், அதிதீவிரத்தில் சத்திய வேதம் பரவி, சகலரும ; உமது பிள்ளைகளாகவும், பரலோக இராட்சியத்தில் பங்கடையவும், வழி செய்யும்படி தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

மூன்று சிறு பிள்ளைகளுக்கு, நீர் முன்னறிவித்திருந்த பிரகாரம், கடைசிக்காட்சி நாளாகிய, அக்டோபர் மாதம் பதின்மூன்றாம் திகதி, சூசையப்பருடனும், திருக்குமாரனுடனும் அவர்களுக்குத் தரிசனை யாகி, அவர்களை ஆசீர்வதித்ததுபோல, எங்கள் அந்திம காலத்தில் பரிசுத்த சூசையப்பருடைய அடைக்கலத்தையும், ஆதரவையம், நாங்கள் அடையக் கிருபை செய்யும்படி தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

நாங்கள் அனைவரும்; அனுதினமும் பக்தியுடன் செபமாலை செபித்து, பரிசுத்தமாய் சீவித்து, பாக்கியமாய் மரித்து, பரகதியில் முடிவில்லாப் பேரின்ப பாக்கியம் பெறும்படி, உமது திருக்குமாரனிடம் மனுப்பேச வேண்டுமென்று தாயே உம்மை மன்றாடுகின்றோம்!

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி!

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எங்கள் மன்றாட்டைக் கேட்ருளும் சுவாமி!

உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே!
எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!

செபிப்போமாக!
தமது சீவியத்தாலும், உத்தானத்தாலும், எங்களுக்கு நித்திய இரட்சணிய சம்பாவனையைச் சம்பாதித்தருளிய, ஏக புத்திரனின் பிதாவாகிய சருவேசுராசுவாமி, அந்தத் தேவபரம இரகசியங்களை முத்திப் பேறுபெற்ற பரிசுத்த கன்னிமரியாயின் மகா பரிசுத்த செபமாலை வழியாக நினைவுகூரும் அடியோர், அவைகளுக்கொப்ப நடந்து, அதிலுள்ள வாக்குத்தத்தங்களின் பேறுபலன்களை அடையத்தக்கதாக, உதவி புரிந்தருளும். இவற்றையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய யேசுக்கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து, எங்களுக்குத் தந்தருளும் சுவாமி ஆமேன்.




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்