|
|
|
பாத்திமா அன்னையின் மூன்று இரகசியங்கள் |
=================================================================================
தூய பாத்திமா செபமாலை அன்னை✠ (Our Lady of the Holy Rosary of
Ftima)
லூசியா
சான்டோஸ், பிரான்சிஸ்கோ மார்ட்டோ, ஜெசிந்தா மார்ட்டோ,
1917.
=================================================================================
தூய பாத்திமா அன்னை என்ற பெயர், போர்ச்சுக்கல் நாட்டின்
பாத்திமா நகரில் 1917ம் ஆண்டு, மே மாதம், 13ம் நாள் முதல்,
1917ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 13ம் நாள் வரை லூசியா
சான்ட்டோஸ் (Lcia Santos), ஜெசிந்தா (Jacinta), பிரான்சிஸ்கோ
மார்ட்டோ (Francisco Marto) என்ற மூன்று சிறாருக்கு அன்னை மரியாள்
காட்சி அளித்ததன் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.
இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த காட்சிகளில் சிறப்பு
வாய்ந்ததாக பாத்திமா நகர் காட்சியும் விளங்குகிறது. இரண்டாம்
உலகப் போர், ரஷ்ய நாட்டின் மனமாற்றம் ஆகியவை பற்றி பாத்திமா அன்னை
வழங்கிய முன்னறிவிப்புகள் அப்படியே பலித்ததால், பாத்திமா
காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது. பாத்திமா அன்னையின் திருவிழா
மே மாதம், 13ம் தேதி கொண்டாடப்படுகிறது.
வானதூதரின் காட்சிகள்:
1916ம் ஆண்டு வசந்த காலத்தில், போர்ச்சுக்கல் நாட்டின்
பாத்திமா பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களான
லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ
ஆகியோருக்கு முன்பாக ஒரு வானதூதர் தோன்றி, தன்னை சமாதானத்தின்
தூதர் (The Angel of Peace) என்று அறிமுகம் செய்தார். மேலும்
அவர், "நான் போர்ச்சுக்கல் நாட்டின் காவல் தூதர், நீங்கள் பாவிகளுக்காக
செபிக்க வேண்டும்" என்றும் சிறார் மூவரிடமும் கூறினார்.
1917ம் ஆண்டு, மே மாதம், 13ம் தேதி, சிறார் மூவர் முன்னும்
மீண்டும் தோன்றிய அதே வானதூதர் கையில் தற்போது நற்கருணையை ஏந்தி
இருந்தார். அவரது கையில் இரசக் கிண்ணமும், அதன் மேலே அந்தரத்தில்
மிதந்தவாறு நற்கருணை அப்பமும் காட்சி அளித்தன. நற்கருணையில் பிரசன்னமாகி
இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் கூறுமாறு பின்வரும் செபத்தை வானதூதர்
அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்:
"என் கடவுளே,
நான் உம்மை விசுவசிக்கிறேன்,
நான் உம்மை ஆராதிக்கிறேன்,
நான் உம்மை நம்புகிறேன்,
நான் உம்மை நேசிக்கிறேன்.
உம்மை விசுவசிக்காதவர்களுக்காகவும்,
உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும்,
உம்மை நம்பாதவர்களுக்காகவும்,
உம்மை நேசிக்காதவர்களுக்காகவும்
உம்மிடம் மன்னிப்பு கேட்கின்றேன்."
இறுதியாக, "இயேசு மற்றும் அன்னை மரியாளின் இருதயங்கள் நம் மன்றாட்டுகளுக்குச்
செவி கொடுக்கக் காத்திருக்கின்றன" என்று கூறி வானதூதர் அவர்கள்
முன்னிருந்து மறைந்தார்.
மரியாளின் காட்சிகள்:
அந்த தூதர் மறைந்தவுடன் சிறிது நேரத்தில், சிறார்கள் ஆடு
மேய்த்துக் கொண்டிருந்த கோவா டா இரியாவின் ஒரு புதர் செடியின்
மீது ஒளிமயமான ஒரு மேகம் வந்து இறங்கியது. அந்த மேகத்தின் மேல்
அன்னை மரியாள் தோன்றி காட்சி அளித்தார். லூசியா சான்ட்டோஸ்,
ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகிய மூன்று பேரும்
அந்த காட்சியைக் கண்டனர்.
மரியன்னை அவர்களிடம், "நான் செபமாலை அன்னை" என்று தம்மை அறிமுகம்
செய்து கொண்டார். மேலும், அந்த மூன்று சிறாரும், தொடர்ந்து ஒவ்வொரு
மாதமும் 13ம் தேதி அதே இடத்திற்கு வர வேண்டும் என்று அன்னை கட்டளை
இட்டார். ஜூலை 13ம் தேதி, அன்னை மரியாள் காட்சி அளித்தபோது
சிறுவர்களுக்கு நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார்.
"பாவிகள் மனம் திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்"
என்றும் மரியன்னை அறிவுறுத்தினார்.
மக்கள் நரகத்தில் விழாமல் இருக்க, "ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை
மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும்
விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம்
தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்" என்ற செபத்தை
செபிக்குமாறு மரியாள் கற்றுக்கொடுத்தார். காட்சியை உறுதிப்படுத்தும்
வகையில் அக்டோபர் மாதம், 13ம் தேதி, சூரியனில் ஓர் அதிசயம் நிகழும்
என்றும் அவர் முன்னறிவித்தார்.
ஆகஸ்ட் மாதம், 13ம் தேதி, லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ மூவரும்
அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். எனவே அன்றைய
தினத்துக்கு பதிலாக, மரியாளின் விண்ணேற்பு நாளான ஆகஸ்ட் மாதம்,
15ம் தேதி, சிறார் மூவரும் அன்னையின் காட்சியைக் கண்டனர். மக்கள்
பலரும் அன்னையின் அற்புதத்தைக் காண இச்சிறாரைப் பின்தொடர்ந்தனர்.
மேலும் அன்னை தமது காட்சிகளின்போது, மனிதரின் தீய நடத்தையையும்,
இறைவனின் கோபத்தையும் வெளிப்படுத்தினார். மரியாள் காட்சி அளித்த
வேளையில் நிகழ்ந்து கொண்டிருந்த முதல் உலகப் போர் விரைவில்
முடியப் போவதாகவும், மக்கள் தொடர்ந்து பாவம் செய்தால் அதைவிடக்
கொடிய உலகப் போர் மூளும் என்றும் அன்னை எச்சரிக்கை செய்தார்.
வானில் காரணமின்றி தோன்றும் ஓர் ஒளியே அந்த போருக்கு அடையாளமாக
இருக்கும் என மரியன்னை முன்னறிவிப்பு செய்தார்.
கிறிஸ்தவர்கள் செபித்தால் மக்களிடையே (குறிப்பாக ரஷ்யாவில்)
மனமாற்றம் நிகழும் என்றும், கிறிஸ்துவை அறியாதவர்கள் விரைவில்
மனம் திரும்புவார்கள் என்றும் அன்னை மரியாள் மொழிந்தார். தலை
வணங்கி கடவுளிடம் மன்னிப்புக் கேட்குமாறும், கிறிஸ்துவின்
திருச்சிலுவைமுன் மண்டியிட்டு செபிக்குமாறும் மரியன்னை அறிவுறுத்தினார்.
"இறுதி காலத்தில் மக்கள் கடவுளின் கட்டளைகளை மதிக்காமல் நடப்பர்,
மக்களிடையே மனக்கசப்பும் வெறுப்பும் நிலவும், மனிதர்கள் உலகையே
அழிக்கும் பயங்கர ஆயுதங்களைக் கண்டுபிடிப்பர்" என்றும், "இயற்கை
சக்திகளால் சிறிது சிறிதாக அழிவுகள் ஏற்பட கடவுள் அனுமதிப்பார்.
குளிர்ந்த இரவில் ஏற்படும் கொடிய நிலநடுக்கத்திற்கு பின் உலகத்தில்
பேரழிவுகள் தொடங்கும், கடவுளுக்கு விருப்பமான மக்கள் மட்டுமே
அதில் தப்பி பிழைப்பர்" என்றும் அன்னை மரியாள் கூறினார்.
1917ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 13ம் தேதி, அன்னையின்
காட்சியைக் காண சுமார் 70 ஆயிரம் பேர் கூடி இருந்ததாக நம்பப்படுகிறது.
அப்போது வானில் வியத்தகு அதிசயங்கள் தோன்றின. வானில் இருந்து
பல வண்ணங்கள் தோன்றி மக்கள் மேல் ஒளிர்ந்தன. பெரிய மழை பெய்த
வேளையிலும் அன்னை மரியாள் காட்சி அளித்த புதரும் 3 சிறார்கள்
இருந்த இடமும் மட்டும் உலர்ந்தே காணப்பட்டன. மக்கள் பலரும் அன்னை
தோன்றிய ஒளிரும் மேகத்தைக் கண்டனர். அப்போது அவர் சிறாரிடம், "மக்கள்
செபிக்க வேண்டும்; பாவத்தினால் கடவுளின் உள்ளத்தை புண்படுத்தக்கூடாது"
என்று மிகவும் வலியுறுத்தி கூறினார். மக்களின் மனமாற்றத்திற்காக
செபமாலை செபிக்கப்பட வேண்டுமென்றும், இறுதியில் தனது மாசற்ற
இதயம் வெற்றி பெறும் என்றும் மரியன்னை மொழிந்தார்.
சூரியனில் அற்புதம் நிகழ்ந்தபோது, சூரியன் மக்களின் கண்களுக்கு
குளிர்ந்த நிலவு போன்று தோன்றியது. அது பம்பரம் போல சுழன்றவாறு,
சிறிது நேரம் அங்கும் இங்குமாக தள்ளாடியது. இவற்றை அங்கிருந்த
அனைவரும் பார்த்தனர். இந்த செய்தி போர்ச்சுக்கல் நாட்டு பத்திரிகைகள்
அனைத்திலும் நிழற்படங்களுடன் வெளிவந்தது.
மூன்று இரகசியங்கள்:
முதல் இரகசியம்:
அன்னை மரியாள் பாத்திமாவில் காட்சி அளித்தபோது, மக்கள் பாவத்தில்
இருந்து மனந்திரும்பவில்லை என்றால் மீண்டும் ஓர் உலகப் போர்
தோன்றும் என்றும், காரணமின்றி இரவு வானில் தோன்றும் ஓர் ஒளியே
அதற்கு அடையாளமாக இருக்கும் என்றும் கூறினார். அன்னை முன்னறிவித்த
அந்த ஒளி, 1938 ஜனவரி 25ம் தேதி வானில் தோன்றி, பூமியின் வட அரைக்கோளம்
முழுவதும் ஒளிர்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர்
மூண்டது.
இரண்டாம் இரகசியம்:
அன்னை மரியாள் பாத்திமாவில் காட்சி அளித்தபோது ரஷ்யா தனது மாசற்ற
இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென்றும், ரஷ்யா கம்யூனிசக்
கொள்கைகளில் இருந்து மனந்திரும்ப கிறிஸ்தவர்கள் அனைவரும்
செபிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 12ம்
பயஸ் முதலில் உலகத்தையும், 1952ம் ஆண்டு, ஜூலை மாதம், 7ம்
தேதி, "சாக்ரோ வெர்ஜென்ட்டே" (Sacro Vergente) என்ற தனது
திருத்தூது மடல் வழியாக ரஷ்யாவையும் மரியாளின் மாசற்ற இருதயத்துக்கு
அர்ப்பணித்தார். 1984ம் ஆண்டு, திருத்தந்தை 2ம் ஜான் பவுல்,
உலகத்தை மீண்டும் மரியாளின் மாசற்ற இருதயத்துக்கு அர்ப்பணித்தார்.
1990களில் ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனம் திரும்பியது.
மூன்றாம் இரகசியம்:
அன்னை மரியாள் பாத்திமாவில் காட்சி அளித்தபோது, இறுதி காலத்தில்
மக்கள் கடவுளை மறந்து தீய வழிகளில் ஆர்வமாக இருப்பார்கள் என்றும்,
தீவிரவாதமும், வன்முறைகளும், பயமும் அதிகரிக்கும் என்றும், கத்தோலிக்க
திருச்சபையும் திருத்தந்தையும் அதிகம் துன்புற
வேண்டியிருக்கும் என்றும், கடவுள் பல்வேறு துன்பங்களை உலகில்
அனுமதிப்பார் என்றும், உண்மை கடவுள் மீது உறுதியான நம்பிக்கை
கொள்வோர் அழிவில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வர் என்றும்,
இறுதியில் தமது மாசற்ற இருதயம் வெற்றிபெறும் என்றும் அறிவித்தார்.
இந்த இரகசியங்கள் லூசியா சான்ட்டோசின் குறிப்புகளின்படி, கத்தோலிக்க
திருச்சபையால் வெளியிடப்பட்டன. இரகசியங்களின் செய்தி சில வேளைகளில்
வேறுவிதமாகவும் கூறப்படுகிறது. இந்த மூன்று இரகசியங்களைத் தவிர
மற்றும் சில செய்திகளையும் அன்னை வழங்கினார். ஜெசிந்தாவும்,
பிரான்சிஸ்கோவும் சிறு வயதிலேயே இறந்துவிடுவர் என்றும், தனது
செய்தியைப் பரப்ப லூசியா பல ஆண்டுகள் உயிரோடு இருப்பார் என்றும்
மரியன்னை முன்னறிவித்திருந்தார். அதுவும் அவ்வாறே நிகழ்ந்தது.
1981ம் ஆண்டு, மே மாதம், 13ம் தேதி, பாத்திமா அன்னையின் திருவிழா
அன்று, திருத்தந்தை 2ம் ஜான் பவுல் "அலி ஆக்கா" என்ற துருக்கிய
இளைஞனால் துப்பாக்கியால் சுடப்பட்டபோது, தான் அன்னையின் கரங்களால்
பாதுகாக்கப்பட்டதை உணர்ந்ததாக அவர் கூறினார். அவரது உடலில்
பாய்ந்த துப்பாக்கித் தோட்டா, பின்பு பாத்திமா அன்னையின் கிரீடத்தில்
பதிக்கப்பட்டது. திருத்தந்தை 2ம் ஜான் பவுல் துப்பாக்கியால் சுடப்பட்ட
இந்த சம்பவம், பாத்திமாவின் மூன்றாவது இரசியத்தின் நிறைவேறுதலாக
கருதப்படுகிறது.
பாத்திமா பேராலயம்:
லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ் ஆகியோர் மரியாளின் காட்சிகளை கண்ட
நாட்கள் முதலே, பாத்திமா காட்சிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு
செய்யும் பணியைத் திருச்சபை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.
மேலும் 1917ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 13ம் தேதி
காட்சியின்போது, நிகழ்ந்த சூரியனின் அற்புதத்தை எழுபதாயிரம் மக்கள்
கண்டது இந்த காட்சியின் உண்மைத்தன்மைக்கு மேலும் வலுசேர்த்தது.
பாத்திமா காட்சிகளுக்கு பிறகு, கத்தோலிக்க திருச்சபை மக்களிடையே
புனித வாழ்வு மலர பல்வேறு செப, தவ முயற்சிகளை மேற்கொண்டது. செபமாலை
செபிக்கும் ஆர்வத்தை கிறிஸ்தவர்களிடையே அதிகரித்தது.
பல்வேறு விசாரணைகளுக்கு பின்பு, 1930ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில்
ஃபாத்திமா காட்சிகளின் உண்மைத்தன்மை திருச்சபையால் உறுதிசெய்யப்பட்டது.
திருத்தந்தை 11ம் பயஸ், பாத்திமா அன்னையின் வணக்கத்திற்கு அனுமதி
வழங்கினார். இதன் மூலம் பாத்திமா நகர், அன்னை மரியாளின் பக்தர்கள்
வந்து செல்லும் புனித இடமாக மாறியது.
அதன் பிறகு அன்னை மரியாள் காட்சி அளித்த புதரின் அருகில் மரியாளின்
பெயரில் பெரிய ஆலயம் ஒன்று கட்டி எழுப்பப்பட்டது. வானதூதர்
காட்சி அளித்த இடத்தில் நினைவு சிற்பமும், மரியன்னை காட்சி அளித்த
இடத்தில் நினைவு சிற்றாலயமும் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும்
உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான திருப்பயணிகள் பாத்திமா அன்னை
பேராலயத்தை நாடிச் செல்கின்றனர்.
திருத்தந்தை 2ம் ஜான் பவுல், பாத்திமாவுக்கு மூன்றாவது முறையாக
திருப்பயணம் மேற்கொண்டபோது, 2000ம் ஆண்டு, மே மாதம், 13ம் நாளன்று,
ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகியோருக்கு அருளாளர்
பட்டம் வழங்கினார். 2010ம் ஆண்டு, மே மாதம், 13ம் தேதி திருத்தந்தை
பதினாறாம் பெனடிக்ட் ஃபாத்திமா பேராலயத்தை நேரில் தரிசித்து,
அன்னை மரியாளிடம் செபித்தார்.
திருக்காட்சியாளர்களுக்கு புனிதர் பட்டம் :
பாத்திமா செபமாலை அன்னையின் திருக்காட்சியாளர்களாகிய அருளாளர்கள்
ஜசிந்தா மற்றும் பிரான்சிஸ்கோ (Jacinta and Francisco) ஆகிய இருவரும்
2017ம் ஆண்டு, மே மாதம், பதின்மூன்றாம் தேதி திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களால் ஃபாத்திமா அன்னை பேராலயத்தில் புனிதர்களாக
அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.
======================================
தூய பாத்திமா அன்னை (மே 13)
நிகழ்வு
தாய் வயலில் வேலை செய்துகொண்டிருந்தாள். அவள் குழந்தை பக்கத்தில்
மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது. வேலை மும்மரத்தில் தாய்
சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்கவில்லை. திடீரென ஞாபகம் வந்து
பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே
நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள். அடுத்து ஒரு அடி எடுத்து
வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும். கூட இருந்தவர்கள்
பதைபதைத்தார்கள். ஆனால் அந்தத் தாய் சிறிதுகூட யோசிக்காமல்
கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று, குழந்தையைப் பார்த்து,
"பாப்பா, அம்மா வீட்டுக்குக் கிளம்பிவிட்டேன். நீ வருகிறாயா,
இல்லையா?" என்று சப்தம் போட்டுச் சொன்னாள். அடுத்த நிமிடம் குழந்தை
திரும்பி தாயைப் பார்த்து ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டது.
தாயன்பு அந்த இக்கட்டானநேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது.
அன்னைக்குத் தெரியும் பிள்ளையை எப்படிக் காப்பது என்று. அது
போன்று இன்று நாம் கொண்டாடும் பாத்திமா அன்னைக்கும் தெரியும்
பிள்ளைகளாகிய நம்மைக் காப்பது என்று.
வரலாற்றுப் பின்னணி
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம், மேலை நாடுகளில் மிகவும் பயமுறுத்தக்கூடியதாகவே
இருந்தது. முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஒருநாடு
இன்னொரு நாட்டின்மீது போர் தொடுக்கும் அபாயம், எப்போது என்ன
நடக்கும் என்று தெரியாத சூழல், இப்படிப்பட்ட அபாயச் சூழலில் மக்கள்
வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இத்தகைய பின்னணியில் பாத்திமா அன்னையின்
காட்சியானது நடைபெற்றது.
1916 ஆம் ஆண்டு ஒருநாள் போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள கோவா டா
இரியா என்ற ஊருக்குப் பக்கத்தில் லூசியா, பிரான்சிஸ்கா,
ஜெசிந்தா என்ற மூன்று சிறுமிகள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களுக்கு முன்பாகத் தோன்றிய ஒரு வானதூதர் அவர்களிடம்,
"நான் விண்ணகத்திலிருந்து வந்திருக்கிறேன், நீங்கள் உலக அமைதிக்காக
மன்றாடுங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். அடுத்த ஆண்டு அதாவது
1917 ஆம் ஆண்டு மே 13 ஆம் நாள், முன்பு தோன்றிய அதே வானதூதர்
கையில் நற்கருணையை ஏந்தி வந்து, அந்த மூன்று சிறுமிகளுக்குத்
தோன்றி, "நற்கருணை ஆண்டவரே! உம்மை நான் விசுவசிக்கிறேன். உம்மை
நான் நம்புகிறேன், உம்மை நான் ஆராதிக்கிறேன், உம்மை நான்
நேசிக்கிறேன். உம்மை விசுவசிக்காத, உம்மை நம்பாத, உம்மை ஆராதிக்காத,
உம்மை நேசிக்காத மக்களுக்காக மன்னிப்புக் கேட்கிறேன்" என்ற ஜெபத்தை
அவர்கள் சொல்லச் சொல்லி அவர்களிடமிருந்து விடைபெற்றுச்
சென்றார்.
அவர் விடைபெற்றுச் சென்ற சில மணி நேரத்தில் வானத்திலிருந்து
வெண்மேகம் ஒன்று இறங்கி வந்து லூசியா, பிரான்சிஸ்கா, ஜெசிந்தா
என்ற அந்த மூன்று சிறுமிகள் இருந்த இடத்திற்கு முன்பாக இருந்த
மரத்தில் தங்கியது. அதிலிருந்து பெண்மணி ஒருத்தி தோன்றினாள்.
அவள் அச்சிறுமிகளிடம், "ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி இங்கு வந்து
நீங்கள் கூடவேண்டும். ஒவ்வொருநாளும் தவறாது ஜெபமாலை சொல்லவேண்டும்.
ரஷ்யா நாட்டு மக்கள் மனமாற ஜெபிக்கவேண்டும்" என்று
சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்து போனார். இக்காட்சியைக் கண்ட
அந்த மூன்று சிறுமிகளுக்கு மலைத்துப் போய் நின்றார்கள். அவர்கள்
இக்காட்சியை தங்கள் ஊரில் இருந்தவர்களிடம் சொன்னபோது யாருமே நம்பவில்லை.
ஏதோ உளறுகிறார்கள் என்று சொல்லி அவர்களை ஏளனமாகப் பார்த்தார்கள்.
காட்சியில் வந்த பெண்மணி சொன்னதுபோன்று அவர்கள் மூவரும் ஒவ்வொருநாளும்
ஜெபமாலை சொல்லி, மக்களுடைய மனமாற்றத்திற்காக ஜெபித்தார்கள்.
ஜூலை 13 தேதி வந்தபோது அவர்கள் மூவரும் கோவா டா இரியா என்ற அந்த
இடத்திற்குச் சென்றார்கள். சொன்னதுபோன்றே அந்தப் பெண்மணி அங்கு
வந்தார். அவர் அவர்களிடம், நகரத்தின் வேதனை மிகுந்த காட்சியை
காட்டினார். பின்னர் அவர், "ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும்,
நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும், அனைத்து ஆனமாக்கங்களையும்
விண்ணகப் பாதைக்கு அழைத்துச் செல்லும். உமது சிறப்பான உதவி
யாருக்குத் தேவையோ, அவர்களுக்கு உதவியருளும்" என்ற ஜெபத்தை
சொல்லச் சொல்லி ஜெபிக்கச் சொன்னார்கள். அவர்களும் அவ்வாறே
ஜெபித்தார்கள். பின்னர் அவர் அங்கிருந்து மறைந்துபோக சிறுமிகள்
மூவரும் தங்களுடைய இல்லங்களுக்குச் சென்றார்கள்.
இந்த முறை அவர்கள் தாங்கள் கண்ட காட்சியை மக்களிடத்தில் சொன்னபோதும்
மக்கள் நம்பவில்லை. அவர்கள் அவர்களை ஏளனமாகவே பார்க்கப்பட்டார்கள்.
தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதனால் அவர்கள் ஆகஸ்டு
மாதம் 13 அங்கு செல்ல முடியவில்லை. 15 ஆம் தேதிதான் அங்கு
சென்றார்கள். ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அவர்கள் அங்கு சென்றபோது,
அப்பெண்மணி அவர்களுக்குச் தோன்றி, "மக்கள் தங்களுடைய தீய நாட்டங்களிலிருந்து
விடுபடவேண்டும். இல்லையென்றால் இன்னொரு போர் மூளும்" என்று
சொல்லிவிட்டுச் சென்றார். அதன்பிறகு சிறுமிகள் தாங்கள் கண்ட
காட்சியையும், அதில் சொல்லப்பட்ட செய்தியையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இப்போது மக்கள் படிப்படியாக அதை நம்பத் தொடங்கினார்கள்.
1917 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் நாள் கோவா டா இரியா என்ற இடத்தில்
ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கூடியிருந்தார்கள். அப்போது ஒளிவன்ணமாய்
அப்பெண்மணி காட்சி தந்து, "நானே ஜெபமாலை அன்னை. நீங்கள் அனைவரும்
இரஷ்யாவை எனது மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கவேண்டும்"
என்று சொல்லிவிட்டுச் சென்றாள். மரியாள் தோன்றிய சமயத்தில் நல்ல
மழை பெய்தது. ஆனால் மூன்று சிறுமிகள் இருந்த அந்த இடம் மட்டும்
நனையாமல் இருந்தது. மரியாள் அச்சிறுமிகளுக்கு வேறு பல காட்சிகளைத்
தந்தார். அந்தக் காட்சிகளில், "பிரான்சிஸ்காவும் ஜெசிந்தாவும்
விரைவிலே விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகும், லூசியா
மட்டும் மண்ணகத்தில் உயிர்வாழப் போவதாகும் சொன்னார். மரியா
சொன்னது போன்றே லூசியா தவிர மற்ற இரண்டு சிறுமிகளும் இறந்து
விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள். மரியா காட்சியில்
சொன்னதுப் போன்று மக்கள் மனமாறாமல் தீயவழியில் சென்றதால் இரண்டாம்
உலகப் போர் வந்தது..
அதன்பிறகு 1952 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி இரஷ்யா மரியாவின் மாசற்ற
இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது, 1984 ஆம் ஆண்டு உலக நாடுகள்
மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. இப்போது
இரஷ்யா இறைவழியைக் கண்டுகொண்ட நாடாக விளங்குகின்றது.
பாத்திமா காட்சிகள் உணர்த்தும் உண்மை
தூய பாத்திமா அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில்,
அன்னை தன்னுடைய காட்சிகளின் வழியாக நமக்குச் சொல்லும் செய்தி
என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. ஜெபமாலை சொல்லவேண்டும்
அன்னை தன்னுடைய காட்சியில் திரும்பத் திரும்ப வலியுறுத்திச்
சொல்லக்கூடிய செய்தி ஒவ்வொருநாளும் ஜெபமாலை சொல்லவேண்டும் என்பதாகும்.
ஜெபமாலை சொல்வதன்வழியாக நாம் மீட்பின் வரலாற்றை தியானித்துப்
பார்க்கின்றோம். அதன்வழியாக நாம் அன்னையின் பாதுகாப்பையும் அன்பையும்
உணர்கிறோம். ஆகவே, நாம் சொல்ல சொல்லக்கூடிய ஜெபமாலை சாதாரண ஒன்று
அல்ல, அது வல்லமை நிறைந்தது என்ற உண்மையை உணர்ந்து வாழவேண்டும்.
இரண்டாம் உலகப் போர் முடிவில் 1945 ஆகஸ்ட் 6 ஆம் தேதி, சின்னப்
பையன் என்ற அணுகுண்டை ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா
வீசியது. அதன் விளைவாக சுமார் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தனர்.
ஆனால் அப்போது அந்நகரின் மையத்தில், குண்டு வீசப்பட்ட இடத்திற்கு
ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த விண்ணேற்பு அன்னை ஆலயமும்
அதனோடு இணைந்திருந்த இயேசு சபை இல்லமும் கதிர்வீச்சு தாக்குதலில்
இருந்து தப்பின. அந்த இல்லத்தில் இருந்த இயேசுசபை குருக்கள் அனைவரும்
எந்தக் காயமும் இன்றி உயிர் பிழைத்தனர். உயிர் தப்பிய குருக்கள்,
"பாத்திமா அன்னையின் செய்தியின்படி வாழ்ந்ததால்தான் நாங்கள் உயிர்
பிழைத்தோம் என்று நம்புகிறோம்; தினமும் செபமாலை செபிக்கும் வழக்கமே
எங்களைக் காப்பாற்றி இருக்கிறது" என்று செபமாலை அன்னைக்கு
சான்று பகர்ந்தனர்.
அனுதினமும் ஜெபமாலை சொல்லி ஜெபிப்பதனால் எத்தகைய நன்மைகள் நடக்கின்றன
என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. ஆகவே, நாம் ஜெபமாலை
சொல்லும் மக்களாக வாழ முயற்சி எடுப்போம்.
2. தீய நாட்டங்களை விட்டுவிட்டு மனமாறவேண்டும்.
பாத்திமா அன்னை தன்னுடைய காட்சியில் வலியுறுத்திச் சொல்லும் இன்னொரு
செய்தி மனமாற்றம் என்பதாகும். மக்கள் பல்வேறு தீய நாட்டங்களால்
பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அத்தகையோர் மனமாற்றம்
பெற்று இறைவழியில் நடக்கவேண்டும் என்பது அன்னையின் அன்பான
வேண்டுகோளாக இருக்கின்றது. நாம் உண்மையில் பாவ நாட்டங்களிலிருந்து
விலகி மனம்மாறிய மக்களாக வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
கலிலேயாக் கடற்கரைக்கு மிக அருகே உள்ள பழமையான நகர் கொராசின்.
இன்றைக்கு அந்த நகர் அழிந்து தரைமட்டமாகக் கிடக்கிறது. இதற்குக்
காரணம் மக்களுடைய தீச்செயல்கள். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு
அந்நகரைப் பார்த்து, "கொராசின் நகரே ஐயோ உனக்குக் கேடு,
தீர்ப்பு நாளில் உனக்குக் கிடக்கும் தண்டனை மிகுதியாகும்" என்றார்.
(மத் 11:21,22). அவர் சொன்னது போன்று நடந்தது. ஆகவே, மனமாற்றம்
பெறாத ஒவ்வொருவரும் அழிவது உறுதி என்பதே இதிலிருந்து நாம் கண்டுணரக்கூடிய
செய்தி.
ஆகையால், தூய பாத்திமா அன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல
நாளில் நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு உகந்த மக்களாய் வாழ்வோம்.
அனுதினமும் ஜெபமாலை சொல்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|