Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

                       
                                பாஸ்கா காலம் - 6ஆம் ஞாயிறு - 3ம் ஆண்டு
     
=================================================================================
முதல் வாசகம்

=================================================================================
இன்றியமையாதவை தவிர, வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-2, 22-29

அந்நாள்களில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், "நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்துகொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது"என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர்.

அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர்.

அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.

பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள்.

அக்கடிதத்தில், "திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

இன்றியமையாதவற்றைத் தவிர, அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்"என்று எழுதியிருந்தார்கள்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=================================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா: 67: 1-2. 4. 5,7 (பல்லவி: 3)Mp3
=================================================================================
 பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். பல்லவி

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி

================================================================================
இரண்டாம் வாசகம்
================================================================================
 திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 21: 10-14, 22-23

தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டு சென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.

அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல் போன்றும் படிகக் கல் போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. அதைச் சுற்றிப் பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன.

வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன.

நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. நகருக்குள் கோவில் காணப்படவில்லை.

ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில். அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

=================================================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=================================================================================
யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


=================================================================================
நற்செய்தி வாசகம்
=================================================================================
தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 23-29

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பது இல்லை.

நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். `நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன்.


- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


 SIXTH SUNDAY OF EASTER

Acts 15: 1-2. 22-29/ Ps 67: 2-3. 5. 6. 8 (4)/ Rv 21: 10-14. 22-23/ Jn 14: 23-29

பொன்னோ, பொருளோ, சொத்தோ, சுகமோ நம்மனம் தேடும் நிம்மதியை தர இயலாது. எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும் என உலகம் எங்கி கேட்கும் நிம்மதியை இறைமகனே தர முடியும். அவர் தரும் ஆவியே அத்தகைய நிலையான அமைதியை தரமுடியும். ஷாலோம் என்னும் எபிரேயச் சொல் உடல்நலம், மனநலம், உயிர்நலம், ஆன்மநலம், சமூகநலம் என எல்லா நலன்களையும் தந்து வாழ்த்துவதாகும். இதனையே பலியிலே ஆண்டவருடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக எனச் சொல்லி வாழ்த்தப்படுகின்றோம். உண்மை அமைதி நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிலைக்க தூய ஆவியின் துணையை நாடுவோம்.

=================================================================================
மறையுரைச் சிந்தனை - 1
=================================================================================
(திருத்தூதர் பணிகள் 15: 1-2, 22-29; திருவெளிப்பாடு 21: 10-14, 22-23; யோவான் 14: 23-29)

உலகம் தரமுடியாத அமைதியைத் தரும் இயேசு

நிகழ்வு

ஓரூரில் கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் விசுவாச வாழ்வில் ஆழம் காணவும் அதன்மூலம் தன்னுடைய வாழ்வில் அமைதியைக் காணவும் விரும்பினான். எனவே, அவன் தனது ஊரில் இருந்த ஆலயத்திற்குச் சென்று, ஒரு வெள்ளைக் காகிதத்தில், எவற்றையெல்லாம் துறக்க நினைத்தானோ அவற்றையும் எந்தெந்த இடங்களிலெல்லாம் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எடுத்துரைக்க நினைத்தானோ அந்த இடங்களையும் எழுதி, பீடத்தில் வைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினான். நாட்கள் மெல்ல நகர்ந்தன. ஆனால், அவனுடைய உள்ளத்தில் மட்டும் அமைதி பிறக்கவில்லை. அதனால் அவன் மீண்டும் ஆலயத்திற்குச் சென்றான்.

இந்த முறை அவன் முன்புபோல் ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து, அதில் கிறிஸ்துவுக்காக எவற்றையெல்லாம் துறக்க நினைத்தானோ அவற்றையும் எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க நினைத்தானோ அவற்றையும் எழுதி, ஆலய பீடத்தில் வைத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினான். நாட்கள் நகர்ந்தன. அப்போதும் அவனுடைய உள்ளத்தில் அமைதி பிறக்கவே இல்லை. இதனால் பொறுமை இழந்த அந்த இளைஞன், அவ்வூரில் இருந்த பங்குத்தந்தையைச் சந்தித்து, தன் நிலையை எடுத்துக்கூறி, "மனதில் அமைதி பிறக்க என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான். அதற்குப் பங்குத்தந்தை அவனிடம், "நீ முன்புபோல் ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துகொண்டு, அதில் உன் பெயரை மட்டும் எழுதி ஆலய பீடத்தில் வைத்துவிடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்" என்றார். பங்குத்தந்தை சொன்னதுபோன்று அவ்விளைஞனும் ஆலயத்திற்குச் சென்று, ஒரு வெள்ளைக் காகிதத்தில் தன் பெயரை மட்டும் எழுதி, பீடத்தில் வைத்து விட்டு வீட்டிற்குத் திரும்பினான்.

அன்றைக்கு அவனுடைய உள்ளத்தில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு அமைதி குடிகொண்டது. அப்பொழுது அவன் நினைத்துக்கொண்டான், 'இறைவனிடம் நம்மையே முழுவதும் ஒப்புக்கொடுத்துவிட்டு, அவரோடு நல்லுறவில் இணைந்திருந்தால், அவர் அளிக்கும் அமைதியைப் போல் வேறு யாராலும் அளிக்கமுடியாது' என்று.

உண்மைதான். இயேசு தருகின்ற அமைதியை இந்த உலகத்தில் உள்ள எவராலும் தரமுடியாது. அத்தகைய அமைதியைப் பெற நாம் ஒவ்வொருவரும் என்ன செய்வது என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

அமைதியின் அரசராம் இயேசு

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறான இன்று, நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில் இயேசு, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" என்கிறார். இவ்வாறு சொல்லும் இயேசு முதலில் யார் எனத் தெரிந்துகொள்வது நல்லது.

சாலேம் நகர் அரசரும் உன்னதக் கடவுளின் குருவுமான மெல்கிசதேக்கு அரசர்களை வெற்றிகொண்டுவிட்டுத் திரும்பும்போது, ஆபிரகாம் அவரை எதிர்கொண்டு சென்று, தன்னிடமிருந்த எல்லாவற்றிலிருந்தும் இருந்து பத்திலொரு பங்கைக் காணிக்கையாகச் செலுத்துவார். இந்த சாலேம் நகர் அரசரைக் குறித்துச் சொல்லும்போது, எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் 'அமைதியின் அரசர்' என்றும் 'இயேசு'தான் அவர் என்றும் குறிப்பிடுவார் (எபி 7: 1-2). அப்படியானால் அமைதியின் அரசராக விளங்கும் இயேசு, இவ்வுலகிற்கு அமைதியைத் தருவதாகச் சொல்வது எவ்வளவு பெரிய பேறு!

உலகம் தரமுடியாத அமைதியைத் தரும் இயேசு

மிகப்பெரிய அறிஞரான அரிஸ்டாட்டில் இவ்வாறு குறிப்பிடுவார், "இவ்வுலகில் மிகப்பெரிய அபத்த நாடகம் என்னவெனில், அமைதியை நிலைநாட்டுவதற்குக்கூட போர் புரிவதுதான்." எவ்வளவு கசப்பான, உண்மையான வார்த்தைகள் இவை. உலகில் அமைதியை நிலைநாட்ட போர் புரியவேண்டும் என்றால், அப்படிப்பட்ட அமைதி உண்மையான அமைதியே கிடையாது. அது போலித்தனமான அமைதி. இன்றைக்கு நாடுகளுக்கிடையே இப்படிப்பட்ட அமைதிதான் ஏற்படுத்தப்படுகின்றது; இப்படிப்பட்ட அமைதிதான் நாடுகளுக்கிடையே நிலவிக்கொண்டிருந்தது. ஆனால், இயேசு தருகின்ற அமைதி இத்தகையது கிடையாது. இதைவிட மேலானது, அதி உன்னதமானது.

இயேசு தருவதாகச் சொல்கின்ற அமைதி ஷலோம் என்பது முழுமையானது. அதில் நலமும் பாதுகாப்பும் எல்லா ஆசியும் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட அமைதியைத்தான் தன் சீடர்களாக நம் ஒவ்வொருவருக்கும் தருவதாக இயேசு வாக்குறுதி தருகின்றார். மேலும் இயேசு தருகின்ற அமைதியானது பிரச்சினையோ அல்லது சண்டைச் சச்சரவுகள் இல்லாத சூழ்நிலையோ அல்ல. இயேசு தருகின்ற அமைதியைப் பெற்றுக்கொண்ட ஒருவர் எவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அமைதியாக இருக்கமுடியும். காரணம் அது தூய அன்பிலும் சகோதரத்துவத்திலும் தோழமையிலும் விழைகின்ற அமைதி.

இயேசு தருகின்ற அமைதியைப் பெற்றுக்கொள்ள என்னசெய்வது?

அமைதியின் அரசராம் இயேசு, இந்த உலகில் யாராலும் தரமுடியாத அமைதியைத் தருவதாகச் சொன்னதைக் குறித்து இதுவரை சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது இயேசு தருகின்ற இத்தகைய அமைதியைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் என்னசெய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: "மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்." (2 கொரி 13:11). தூய பவுலின் இவ்வார்த்தைகளை ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், யார் யாராரெல்லாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றார்களோ, அவர்களுக்கு இயேசுவின் அமைதி நிச்சயம் உண்டு என்று சொல்லலாம்.

இன்றைக்கு உலக நாடுகளும் சரி, நாட்டு மக்களும் சரி, கடவுள் கொடுத்திருக்கின்ற அன்புக் கட்டளைகளின்படி (யோவா 13:34) வாழ்வதில்லை. அதனால்தான் எங்கும் வன்முறையும் போர்களும் கலகங்களும் சண்டைச் சச்சரவுகளும் பெருகி வருகின்றன. என்றைக்கு மானிடர் யாரும் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரோடு இணைந்து இணைந்திருக்கிறார்களோ (யோவா 15:4) அன்றைக்கு அவர்கள் கடவுள் தரும் அமைதியைப் பெறுவது உறுதி.

சிந்தனை

அன்னைத் தெரசா, நார்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெறுகின்றபோது இவ்வாறு பேசினார்: "அன்புதான் உண்மையான அமைதியை இவ்வுலகிற்குக் கொண்டுவரும். இன்றைக்கு ஒருவர் மற்றவரிடம் உண்மையான அன்பு இல்லாததால் அமைதியில்லை. அதனால்தான் கருக்கலைப்புகளும் இன்னபிற தீமைகளும் இங்கு அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. ஆதலால், ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டு வாழ்வோம்; இவ்வுலகை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம்."

அன்னைத் தெரசாவின் இவ்வார்த்தைகள் அமைதிக்கு ஊருவிக்கும் காரணிகளை அகற்றிவிட்டு, இவ்வுலகில் அமைதியை ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அழைக்கின்றது. ஆகவே, நாம் இயேசு தருகின்ற இவ்வுலகம் தரமுடியாத அமைதியைப் பெற கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் அன்பு கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில், அமைதியில் நிலைத்திருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
=================================================================================
மறையுரைச் சிந்தனை - 2
=================================================================================
 


=================================================================================
மறையுரைச் சிந்தனை - 3பாஸ்கா காலம் 5ம் ஞாயிறு (மே 19, 2019)
=================================================================================
 நிறைவேற்றுதல்!


 திருத்தூதர் பணிகள் 14:21-27
 திருவெளிப்பாடு 21:1-5
 யோவான் 13:31-35

'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). ஆங்கிலத்தில், 'கேட்ச் 22 கட்டம்' ('Catch 22 Situation') என்ற ஒரு சொலவடை உண்டு. அதன் பொருளை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த அருள்பணியாளர் ஒருவரின் முதல் நன்றித் திருப்பலியில் ஒரு மறையுரை கேட்டேன். மறையுரை வைத்த அருள்பணியாளர் புதிய அருள்பணியாளருக்கு அறிவுரை சொல்வது போல தன் மறையுரையைக் கட்டமைத்திருந்தார்: 'அன்பிற்கினிய அருள்பணியாளரே, வாழ்த்துக்கள். புதிய ஆடை, புதிய திருவுடை, புதிய திருப்பலிப் பாத்திரம், புதிய புத்தகம், புதிய கைக்கடிகாரம், புதிய காலணிகள் என்று ஜொலிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நீங்க இன்று எங்க போனாலும் உங்களுக்கு பொன்னாடை போர்த்துவாங்க! உங்க உள்ளங் கைகளை முத்தமிடுவார்கள். உங்களைக் கட்டித் தழுவுவார்கள். உங்கள் கைகளை அன்பளிப்புக்களால் நிரப்புவார்கள். உங்களை முதல் இருக்கையில் அமர வைப்பார்கள். 'உங்களுக்கு என்ன வேண்டும்' என்று கேட்டு பரிமாறுவர். இது வெறும் 21 நாள்களுக்குத்தான். 22ஆம் நாள் வரும். நீங்க பழசு ஆயிடுவீங்க. அன்றுதான் உங்க அருள்பணி வாழ்க்கை தொடங்கும். 'இதுதான் வாழ்க்கையா' என்று புலம்ப ஆரம்பிப்பீங்க. 25 வருடங்களுக்கு உங்க பக்கத்துல யாரும் வர மாட்டாங்க. இதே கூட்டம் உங்களுடைய வெள்ளி விழாவுக்கு வரும். 'உங்கள ஆஹா ஓஹோ என்று சொல்வாங்க!' கூட்டம் மறுபடி காணாமல் போகும். காலம் அனுமதித்தால் பொன்விழா கொண்டாடுவீர்கள். நீங்க இன்று எப்படி உங்க பணியைத் தொடங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல. மாறாக, அந்த 22ஆம் நாளில் நீங்க என்ன முடிவெடுத்து எப்படி உங்க பயணத்தை முடிக்கப் போறீங்களோ அதுதான் முக்கியம்.'

நிற்க.
அருள்பணி நிலையில் மட்டுமல்ல. திருமண வாழ்விலும் 'கேட்ச் 22 கட்டம்' உண்டு. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்கு உள்ள ஈர்ப்பு குறையும் நாள் 22ஆம் நாள். அந்த 22ஆம் நாளை வெல்கிறவரே வெற்றியாளர். அதையும் தாண்டி இறுதிவரை 'திராட்சை இரசத்தை வைத்திருப்பவரே' மாபெரும் வெற்றியாளர்.

அருள்பணி, திருமணம் என்று பெரிய அளவில் வாழ்க்கை நிலையைத் தொடங்கினாலும், தொழில், பயணம், படிப்பு என சிறிய அளவில் என்றாலும் தொடங்கும் பலவற்றை நாம் நிறைவுசெய்வதில்லை. ஒன்றை நாம் நிறைவு செய்வதில்தான் அதன் பயன்பாடு தெரிகிறது.

சிலவற்றின் நிறைவு வேகமாகத் தெரிந்துவிடும். சிலவற்றின் நிறைவு தெரிய காலமாகும். தாயின் கருவறையில் உருவாகும் குழந்தை நிறைவு பெற ஏறக்குறை 9 முதல் 10 மாதங்கள் ஆகின்றன. நம் வீட்டில் திடீரென ஒரு பைப் உடைந்துவிடுகிறது. உடனடியாக ப்ளம்பரை அழைக்கிறோம். அவர் வந்த சில நிமிடங்களில் உடைப்பு சரியாகிவிடுகிறது. தண்ணீர் தடையின்றி வருகிறது. அவரின் பணி ஒரு நாளின் இறுதியில் கண்டுவிடுகிறோம். காய்ச்சல் அடிக்கிறது. மருத்துவரிடம் போகிறோம். ஊசி போட்டு மாத்திரை கொடுக்கிறார். காய்ச்சல் நீங்குகிறது. நம் உடல்நலம் நிறைவு பெறுகிறது. ஆக, ஒரு நாளில் மருத்துவரின் வேலை நிறைவுபெறுகிறது. ஆசிரியரின் வேலையின் நிறைவு பத்து மாதங்கள் கழித்து மாணவர்கள் எழுதும் தேர்வில் கிடைக்கிறது.

நிறைவுபெறும் எல்லாமே நமக்கு ஒரே வகையான உணர்வையும் தருவதில்லை. சிறையில் தன் தண்டனை நிறைவுபெறவதை எண்ணுகின்ற கைதி மகிழ்கிறார். ஆனால், நமக்குப் பிடித்தவர் நம்மோடு இருந்துவிட்டு நம்மை நகரும் நேரம் நிறைவுறும்போது நம் மனம் வருந்துகிறது. தொடங்கும் எல்லாம் நிறைவு பெற வேண்டும் என்பதே வாழ்வின் நியதி. நான் இந்த மறையுரையை எழுதத் தொடங்குகிறேன். அதை நிறைவு செய்யும்போதுதான் அது வாசிப்பவருக்குப் பலன் தரும். நிறைவுபெறாத எதுவும் நம்மைப் பாதிப்பதில்லை. சில நேரங்களில் சில நிறைவேறாததால் நாம் ஏங்குகிறோம். சில நிறைவுபெறாமல் செய்கின்றோம்.

கடவுளின் செயல் நிறைவுறுவதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டி, கடவுள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவதுபோல நாமும் நம் வாழ்வில் பணிகளை நிறைவேற்ற நமக்கு அழைப்பு விடுக்கிறது.

எப்படி?
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 14:21-27) பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப் பயணம் நிறைவு பெறுவதை லூக்கா பதிவு செய்கின்றார். பிசிதியா அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியா, லீஸ்திராவிலிருந்தும் தொழுகைக்கூடத் தலைவர்கள் மற்றும் மக்களால் துரத்திவிடப்பட்ட திருத்தூதர்கள் தெர்பைக்கு வருகிறார்கள் ஆனால், அங்கே அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. மேலும், பல புறவனித்தார்கள் பதிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களை 'உறுதிப்படுத்தியபின்' தாங்கள் புறப்பட்ட இடமான (காண். திப 13:1-3) அந்தியோக்கியா திரும்புகிறார்கள். தாங்கள் எவ்வழி நடந்து வந்தார்களோ, அதே வழியில் திரும்பிச் செல்கிறார்கள். தங்கள் பாதச்சுவடுகளைத் தாங்களே பின்பற்றுகிறார்கள். சில இடங்களில் அவர்கள் எதிர்ப்புக்களையும் ஆபத்துக்களையும் சந்திக்க நேர்ந்தாலும் துணிந்து செல்கிறார்கள். ஏனெனில், தாங்கள் ஏற்படுத்திய குழுமங்களை 'ஊக்கப்படுத்துவம், உறுதிப்படுத்துவதும் அவசியம்' என அவர்கள் அறிந்திருந்தனர். புதிய நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய செய்தி எல்லாம், 'நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்' என்றே இருந்தது. புதிய நம்பிக்கையாளர்களுக்கு எல்லாம் நன்றாக இருக்கும் என்று அவர்களுக்கு போலியான ஆறுதலைக் கொடுக்கவில்லை திருத்தூதர்கள். புதிய நம்பிக்கைக்கு எதிர்ப்பு இருக்கும் என்று அவர்கள் தெளிவுபட எடுத்துச் சொன்னார்கள். மேலும், தாங்கள் செல்கின்ற இடங்களில் தங்கள் பணியைத் தொடர்வதற்கான அடிப்படையான தலைவர்களையும் அவர்கள் நியமித்தார்கள். அவர்கள் அந்தியோக்கியா வந்தபோது, 'பணியைத் தாங்கள் செய்து முடித்துவிட்டதாகவும், கடவுளே தங்கள் வழியாக அனைத்தையும் செய்தார்' என்றும் அவர்களுக்குச் சொல்கிறார்கள். இவ்வாறாக, தாங்கள் நிறைவு செய்த அனைத்திலும் கடவுளின் கைவிரலைக் கண்டனர் பவுலும் பர்னபாவும்.

பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப் பணி நிறைவு கிறிஸ்தவம் என்னும் புதிய நம்பிக்கை வேகமாகப் பரவி வளர்வதற்கு வித்திட்டது. தாங்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும், ஆபத்துக்களை எதிர்கொண்டாலும், திருத்தூதர்கள் துணிந்து மேற்கொண்ட பணி கிறிஸ்தவத்தின் கதவுகளைப் புறவினத்தாருக்கு திறந்துவிட்டது. அவர்களின் நிறைவு புதிய தொடக்கமானது.

ஆக, எதிர்ப்பு, நிராகரிப்பு, ஆபத்து என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து தங்கள் முதல் தூதுரைப் பயணத்தை நிறைவு செய்கின்றனர் பவுலும் பர்னபாவும்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். திவெ 21:1-5) யோவான் கண்ட இறுதி வெளிப்பாடுகளின் ஒரு பகுதியாக இருக்கிறது. உலக முடிவில் கடவுள் 'நிறைவேற்றும்' செயலைக் காட்சியில் காண்கிறார் யோவான். நான்கு அடையாளங்களை இங்கே பார்க்கிறோம். முதலில், 'புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும்' காண்கிறார் யோவான். 'இதோ அனைத்தையும் புதியன ஆக்குகிறேன்' என்று சொல்லும் கடவுள் முன்னைய விண்ணத்தையும் மண்ணகத்தையும் புதியதாக ஆக்குகின்றார். இரண்டாவதாக, 'கடல் இல்லாமல் போயிற்று.' இது கடவுள் தீமையை வெற்றிகொண்டதை அடையாளப்படுத்துகிறது. ஏனெனில், 'கடல்' என்பது 'தீமை அல்லது பேயின்' உருவகமாகப் பார்த்தனர் இஸ்ரயேல் மக்கள். கடலின் குழப்பமும், ஆழமும், அலைகளின் கூச்சலும் கடலைக் கடவுளின் எதிரி என எண்ண வைத்தது. ஆக, தீமையின் துளி கூட இல்லாவண்ணம், கடல் அங்கே இல்லாமல் போகிறது. மூன்றாவதாக, 'புதிய எருசலேம் இறங்கி வருகிறது.' இத்திருநகர் மணமகள் என உருவகிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டில், எருசேலம் கடவுளின் பிரசன்னத்தோடு தொடர்புடையதாக இருந்தது. கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு திருமண உடன்படிக்கை உறவாகப் பார்க்கப்பட்டது. கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கத்தையே திருமணம் என்னும் அடையாளம் காட்டுகிறது. ஆக, இதே நெருக்கத்தோடு 'கடவுள் அவர்கள் நடுவே குடியிருப்பார்.' நான்காவதாக, 'சாவு இராது. துயரம் இராது.' இது உலகத்தின் முகத்திலிருந்தே கண்ணீர் துடைக்கப்படும் எனச் சொல்கிறது.

வேதகலாபனை, துன்பங்கள், அச்சுறுத்தல்கள் எனத் துயருற்ற கடவுளின் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது இக்காட்சி. கடவுள் அனைத்தையும் நன்மையாக நிறைவுறச் செய்வார் என்று சொல்வதன் வழியாக, இப்போதுள்ள அனைத்தும் ஒருநாள் நிறைவு பெறும் என்றும், இப்போது காண்பதும் அனுபவிப்பதும் நிறைவு அல்ல என்றும் சொல்கிறது இக்காட்சி. மேலும், துன்புறும் அனைவரும் கடவுளோடு திருமண உறவில் இணைவர். கடவுள் எல்லாவற்றையும் நிறைவு செய்துவிட்டார். மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த நிறைவை அடைவதற்கு எதிர்நோக்கோடு காத்திருப்பது மட்டும்தான்.

ஆக, தான் செய்த படைப்பு வேலையை நிறைவு செய்யும் கடவுள் அந்த நிறைவை நோக்கி மக்களை அழைத்துச் செல்கிறார். இறைமக்கள் அனுபவிக்கும் வேதகலாபனை என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' அவர்கள் கடக்க கடவுள் அவர்களோடு உடனிருக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 13:31-35) இயேசுவின் இறுதி இராவுணவு பிரியாவிடை உரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அப்பத்தைப் பெற்றுக்கொண்ட யூதாசு விருந்திலிருந்து வெளியேறியவுடன், 'இப்போது மானிட மகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்' என்கிறார் இயேசு. யோவான் நற்செய்தியில், 'மாட்சி பெறுதல்' அல்லது 'மாட்சிப்படுத்துதல்' என்பது இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, மற்றும் விண்ணேற்றத்தைக் குறிக்கிறது. தன்னுடைய மாட்சியால் கடவுளும் மாட்சி பெறுகிறார் என்று சொல்வதன் வழியாக, தன்னுடைய செயல் அனைத்தும் கடவுளின் திருவுளம் மற்றும் நோக்கத்தோடு இணைந்தது என்றும் சொல்கிறார் இயேசு. கடவுளுக்கும் இயேசுவுக்கும் நெருக்கமான இந்த உறவு உலகிற்கு வாழ்வு கொடுக்கிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் வழியாக இயேசு மீட்புப்பணியை நிறைவேற்றுகிறார்.

மேலும், தான் நிறைவேற்றும் பணியை தன்னுடைய சீடர்கள் இவ்வுலகில் 'புதிய அன்புக் கட்டளை' வழியாகத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்: 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்.' இவ்வாறாக, சீடத்துவத்தின் அடையாளமாக அன்பு செலுத்துவதை முன்வைக்கிறார் இயேசு.

ஆக, இயேசு தன்னுடைய பாடுகள் என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து மாட்சியடைகின்றார். சீடர்கள் தங்களுடைய அன்பு செலுத்துதல் வழியாக நாளும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து இயேசுவின் பணியை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் பவுலும் பர்னபாவும் தங்களின் முதல் தூதுரைப்பயணத்தை அனைவருக்கும் ஊக்கம் தந்து நிறைவேற்றுகின்றனர். இரண்டாம் வாசகத்தில் கடவுள் தன்னுடைய படைப்பை புதிய விண்ணகம்-மண்ணகம் என நிறைவேற்றியுள்ளதால் நம்பிக்கையாளர்கள் அதை நோக்கி நகர்கின்றனர். நற்செய்தி வாசகத்தில் தன் மீட்புச் செயலை நிறைவேற்றும் இயேசு, அன்பால் இவ்வுலகில் அது சீடர்கள் வழியாக தொடர்ந்து நிறைவேற்றப்படவும் வேண்டும் என்கிறார். கடவுளின் நிறைவுச்செயல்கள் அனைத்திற்காகவும் நன்றி கூறும் திருப்பாடல் ஆசிரியர் (பதிலுரைப் பாடல்), 'ஆண்டவர் தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்' (145:13) என்கிறார்.

இன்று நம்முடைய பணிகளை நாம் 'நிறைவேற்றுவதற்கு' இறைவாக்கு வழிபாடு தரும் பாடங்கள் எவை?

இந்த வாரம் நாம் பெரிய பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடப்போவதில்லை. சண்டை இடும் இரு நாடுகளைச் சேர்த்துவைக்கப்போவதில்லை. அணு ஆயுதங்களை ஒழிக்கப்போவதில்லை. ஊழல், இலஞ்சம் போன்றவற்றை துடைத்துப்போடப்போவதில்லை. நம்மை யாரும் சிலுவையில் அறையப்போவதில்லை. வேதகலாபனைக்கு உள்ளாக்குவதில்லை. கோவிலிலிருந்து வெளியே தள்ளிவிடுவதில்லை. ஆனால், சின்னச் சின்ன விடயங்கள் செய்வோம். புதிய தொழில் தொடங்குவோம். நண்பர்களைச் சந்திப்போம். மருத்துவமனைக்குச் செல்வோம். பயணம் செய்வோம். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது பற்றி யோசிப்போம். புதிய வேலைக்கு விண்ணப்பம் அனுப்புவோம். நம் வீட்டு நாய்க்குட்டியை குளிப்பாட்டுவோம். பூனைக்கு பால் சோறு வைப்போம். இவற்றை 'நிறைவேற்றுவதில்தான்' வாழ்வின் நிறைவு இருக்கிறது. இவற்றை எப்படி நிறைவேற்றுவது?

1. 'ஊக்குவித்தல்'
'ஊக்குவித்தல்' என்றால் 'ஊக்கு' 'விற்றல்' அல்ல. உற்சாகம் கொடுத்தல். நமக்கும் பிறருக்கும். நாம் தொடங்கும் பலவற்றைப் பாதியில் நிறுத்தக் காரணம் ஊக்கக்குறைவுதான். 'என்னைக் கொஞ்சம் யாராவது ஊக்கப்படுத்தியிருந்தால் நான் சாதித்திருப்பேன்' என்ற புலம்பல்கள் நம்மில் இருக்கத்தான் செய்கின்றன. எனக்கு நானே ஊக்கம் கொடுப்பதையும், எனக்கு அடுத்திருப்பவர் தளர்ந்துபோகும்போது அவருக்கு ஊக்கம் கொடுப்பதையும் நான் என் பண்பாகக் கொள்ள வேண்டும். 'மகளை எந்தக் கல்லூரியில் சேர்ப்பது? எப்படி பணம் கட்டுவது?' என புலம்பல் கேட்கிறோமா! 'வாங்க! நான் கூட்டிட்டுப் போறேன். யார்கிட்டயாவது பணம் கேட்போம். எப்படியாவது அடைப்போம்' என்று சொல்வதுதான் ஊக்கம். ஆக, எனக்கு நானே ஊக்கம் கொடுக்கும் போது நான் என் வேலைகளை நிறைவேற்றி, அடுத்தவருக்கு ஊக்கம் கொடுத்து அவரின் வேலை நிறைவுபெற நான் உதவுகிறேன் - பவுல், பர்னபா போல.

2. 'ஒன்றின் முடிவை நினைத்துத் தொடங்குவது'
'முடிவை அல்லது இறுதியை மனத்தில் வைத்துத் தொடங்குங்கள்' என்கிறார் ஸ்டீபன் கோவே. வெறும் கட்டாந்தரையில் நிற்கின்ற ஒரு ஆர்கிடெக்ட் அந்த இடத்தில் கட்டாந்தரையைப் பார்ப்பதில்லை. ஒரு பெரிய அப்பார்ட்மெண்டை அல்லது மல்டி மாலை காட்சியில் பார்க்கிறார். அப்படிப் பார்ப்பதால்தான் அவரால், 'இங்கே கேட் வரும். இங்கே பார்க்கிங் வரும். இங்கே வீடுகள் வரும்' என்று அவரால் சொல்ல முடிகிறது. ஆக, கல்லூரியில் சேரும்போதே நம்முடைய கான்வொக்கேஷன் நாளை மனதில் வைத்துச் சேர வேண்டும். இதையே இரண்டாம் வாசகத்தில் யோவான் தன்னுடைய குழுமத்திற்குச் சொல்கின்றார். புதிய விண்ணகத்தையும் மண்ணகத்தையும் மனத்தில் வைத்து வாழச் சொல்கின்றார். இது வெறும் கற்பனை என்று நாம் எண்ணக் கூடாது. நாம் காட்சிப்படுத்துவதை பிரபஞ்சம் அப்படியே நமக்குக் கொடுக்கும். ஆக, இறுதியைக் காட்சிப் படுத்துதல் அவசியம். இராபின் ஷர்மா அழகான வாழ்க்கைப் பாடமாக இதைத் தருகிறார்: 'நல்ல வாழ்க்கை வாழனுமா? ரொம்ப சிம்பிள். உங்களுடைய ஃப்யூனரல் ஒரேஷன் (அடக்கத் திருப்பலி உரை) எழுதுங்கள். நான் இறக்கும்போது என்னைப் பற்றி இப்படிச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைப்பதை எழுதுங்கள். அதை அப்படியே பின்னோக்கி வாழுங்கள். 'இவர் நிறைய மொழிகள் கற்றார்' என்று எழுதுங்கள். மொழிகளைப் படியுங்கள். 'இவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்' என்று எழுதுங்கள். நிறையப் பேரை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.' ஆக, நிறைவை அல்லது முடிவை மனத்தில் வைத்து எதையும் தொடங்குவோம்.

3. 'எல்லாரும் அறிந்துகொள்ள வேண்டும்'
நான் நிறைவுசெய்வது எனக்கும் என் சமூகத்திற்கும் பயன்தர வேண்டும். பிறர் என்னைப் பற்றி அறிய வேண்டும். ஒருவர் வாழ்க்கையிலாவது நான் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதைத்தான் இயேசு தன் சீடர்களுக்குச் சொல்கின்றார். 'நீங்கள் என் சீடர்கள்' என்பது எனக்கும் உங்களுக்குமான ஒன்று அல்ல. மாறாக, அதை மற்றவர்கள் உங்கள் அன்புச் செயலால் அறிய வேண்டும் என்கிறார். சீடத்துவத்திற்கான அடையாளமாக இயேசு மிகச் சிறிய ஒன்றைத் தெரிந்துகொள்கிறார்: 'அன்பு செய்வது.' மேலும், நாம் செய்யும் எல்லா வேலையிலும் அன்பு கலந்து செய்ய வேண்டும். இரண்டு பேர் லெமன் ஜூஸ் செய்கின்றனர். ஒரே மாதிரியான பொருள்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால். சுவை மாறுபடுகிறது. ஏன்? அன்பினால்தான்! நாம் செய்யும் அனைத்திலும் அன்பைக் கலந்தால் நிறைவு இனிமையாகும்.

இறுதியாக,
தொடங்கியது எல்லாம் நிறைவேற வேண்டும். நிறைவேற்றுதலின் பொறுப்பு தொடங்கியவரிடமே இருக்கிறது. அருள்பணியாளர் திருநிலைப்பாட்டுச் சடங்கில், கீழ்ப்படிதல் வாக்குறுதி கொடுத்தவுடன் ஆயர், 'உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் சொவ்வாராக' (பிலி 1:6) என்கிறார். தொடங்குவோம். அவரின் துணையோடு அனைத்தையும் நிறைவேற்றுவோம். தொடங்கும் அனைத்தும் இனிமையாய் நிறைவுறும்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)

=================================================================================
முன்னுரை- விசுவாசிகள் மன்றாட்டுகள்:
=================================================================================
பாஸ்கா - 06ஆம் வாரம் ஞாயிறு

அமைதியை தேடும் இந்த உலகிலே, மனிதர்கள் தேடும் அற்ப அமைதிகூட அவர்களால் பெற முடிவதில்லை. பணம், பதவி, புகழ், பெருமை, களியாட்டங்கள் என எதுவுமே அவர்களுக்கு நிலையான நிறைவான அமைதியை தருவதில்லை. அற்ப நேர சுகம் கூட கிடைப்பதில்லை. மாறாக அவை சுமையாகி, பிரிவினை, பிளவுகள், சண்டை சச்சரவுகள் என்றே அமைந்து விடுகிறது.


இத்தகைய நிலையில் அமைதியை விரும்பும் மாந்தர்கள், ஆவியின் துணையாலேயே பெற முடியும் என்பதனை உணர்ந்து ஆவியானவருக்கு நம்மை அர்ப்பணிப்போம். ஆவியானவரின் பெருவிழாவுக்கு இந்த வாரத்திலே நவநாள் தொடங்க உள்ளோம். நிறைவாய் பெற அருள்வேண்டி மன்றாடுவோம்.


மன்றாட்டு:

திருஅவையின் தலைவர்களை ஆசீர்வதித்து, ஆவியின் அருள்தந்து, அவர்களை வழிநடத்திட வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


விடுமுறையில் வாழும் அன்பர்கள் நல்ல ஓய்விலே தங்களது காலத்தை பயனுள்ள விதத்தில் காலத்தை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ள வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


விடுமுறை வேதாகப் பள்ளியில் பயிலும் குழந்தைகளை உம்வார்த்தையால் வளப்படுத்தி, நல்ல நிலத்தில் தூவப்பட்ட விதையைப் போல வார்த்தை அவர்களது உள்ளத்தில் மிகுந்த பலன் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


ஆவியின் அருள் பெற்று, நாங்கள் சாட்சிகளாக வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


ஆவியின் கனிகளையும், வரங்களையும் பெற்ற நாங்கள், அவற்றை முறையாக பொதுநலன்களுக்காய் செலவழிக்க வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!