திருவருகைக்காலம் என்பது 'Advent' என்னும் லத்தீன்
மொழிப் பெயர்ப்பிலிருந்து "வருகை" எனப் பொருள்
பெறுகின்றது.
திருவருகைக் காலம் இரண்டு பண்புகளைக் கொண்டது.
ஒன்று இயேசு இவ்வுலகில் முதல் முறையாக வந்த நிகழ்வைக்
கொண்டாட மக்களைத் தயாரிக்கிறது. இரண்டாவது வரவிருக்கும்
இயேசுவின் இரண்டாம் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்க
மக்களைத் தூண்டுகிறது. இவ்வாறு திருவருகைக் காலம் எதிர்பார்ப்புடன்
கூடிய மகிழ்ச்சியின் காலமாக விளங்குகிறது.
இது நான்கு வாரங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த நிகழ்வை
சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட
வளையத்தினுள் நான்கு நிறம் கொண்ட மெழுகுவர்த்தியை ஏற்றலாம்.
திருவருகைக்காலம் பற்றி இறைமக்கள் அறிந்துக் கொள்ள
வேண்டிய பத்து படிப்பினைகள்
1. திருவருகைக் காலத்தின் நோக்கம் என்ன?
திருவருகைக் காலம் கத்தோலிக்க திருவழிபாட்டு காலத்தின்
ஆரம்பம். திருவழிப்பாட்டிற்கான பொதுவிதி முறைகள் (39)
கூறும் திருவருகைக் காலத்தின் இரண்டு பண்புகள்:
இறைமகன் மனிதரிடையே முதல் முறை வந்ததை நினைவு கூறும்
கிறிஸ்துப்பிறப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் தயாரிப்புக்
காலம் ஆகும்.
அவ்வாறே காலத்தின் நிறைவில் நிகழும் கிறிஸ்துவின் இரண்டாம்
வருகையை எதிர்பார்த்திருக்க உள்ளங்கள் தூண்டப்படும் காலமும்
அதுவே. இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும்
மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது.
2. திருவருகைக் காலத்தில் பயன்படுத்தப்படும்
நிறங்கள் யாவை?
திருவுடைகளின் நிறத்தைப் பொறுத்த மட்டில் மரபுவழிப்
பயன்பாடு பின்பற்றப்பட வேண்டும். அதாவது : ஊதா நிறம்:
திருவருகைக் காலத்திலும் தவக் காலத்திலும் ஊதா நிறம்
பயன்படுத்தப்படும். (GR 346 ஈ) இளஞ்சிவப்பு நிறம் வழக்கத்தில்
இருப்பின் திருவருகைக் கால 3ஆம் ஞாயிறு அன்று ("மகிழுங்கள்-)
இளஞ்சிவப்பு நிறம் பயன்படுத்தப் படலாம். (GIRM 346ஊ)
3. திருவருகைக் காலம் துக்கமான
காலமா? அல்லது மனவருத்தத்திற்கான காலமா?
திருவருகைக் காலம் துக்கமான, மனவருத்த அல்லது தவத்திற்கான
காலமல்ல. ஊதா நிறம் வழிபாட்டு நிறமாக இருந்தாலும் திருஅவை
சட்டம் 1250 குறிப்பிடுவதுபோல ஆண்டின் எல்லா
வெள்ளிக்கிழமைகளும் மற்றும் தவக்காலத்தின் அனைத்து
நாட்களுமே மனவருத்தத்தின் காலங்களாகும்.
4. திருவருகைக் காலம் எப்போது
துவங்கி எப்போது முடிவடைகிறது?
வழிபாட்டு பொது விதிமுறை (40)ன் படி திருவருகைக் காலம்
நவம்பர் 30ம் நாளில் அல்லது அதற்கு அண்மையில் வரும்
ஞாயிற்றுக்கிழமை, முதல் மாலைத் திருப்புகழோடு தொடங்கி,
கிறிஸ்து பிறப்பு விழாவின் முதல் மாலைத் திருப்புகழுக்கு
(டிசம்பர் 24)க்கு முன் முடிவடையும்.
5. திருவருகைக் கால
ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கியத்துவம் என்ன?
திருவழிபாட்டு பொது விதிமுறை (41)ன் படி திருவருகைக்
காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் திருவருகைக் கால
1, 2, 3, 4 - ஆம் ஞாயிறு எனப்படும். திருவருகைக் கால
மூன்றாம் ஞாயிறுக்கு "மகிழும் ஞாயிறு" என்ற சிறப்பு பெயர்
உண்டு. விதிமுறை 5ல் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் தனி
முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், எனவே அது பெருவிழாக்களுக்கும்
கிறிஸ்துவின் விழாக்களுக்கும் மட்டுமே இடம் தரும் என்கிறது:
ஆனால் திருவருகைக்கால, தவக்கால, பாஸ்கா கால
ஞாயிற்றுக்கிழமைகள் ஆண்டவருடைய விழாக்களுக்கும், மற்ற
எவ்வகைப் பெருவிழாக்களுக்கும் மேலான இடம் பெறும். GIRM
380ன் படி திருவருகைக்கால ஞாயிறுகளில் இறந்தவர்களுக்கான
அடக்கத் திருப்பலி இடம் பெறலாகாது.
6. திருவருகைக் கால வார நாட்களில்
என்ன நிகழ்கின்றது?
திருவருகைக் கால வார நாட்களில் மக்களுடனான திருப்பலியின்போது
தினமும் மறையுரை பரிந்துரைக்கப் படுகின்றது.
ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் கடன் திருநாள்களில் மக்கள்
பங்கேற்கும் எல்லாத் திருப்பலிகளிலும் மறையுரை நிகழ்த்துவது
கட்டாயம் ஆகும். (GIRM 66). விதிமுறை 42 டிசம்பர் 17
முதல் 24 உட்பட வரும் வார நாட்கள் கிறிஸ்து பிறப்புக்கு
நேரடி முன்னேற்பாடாக அமைக்கப்பட்டுள்ளன என்பதின்
முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.
7. திருவருகைக் கால ஆலய அலங்கரிப்பு
எவ்வாறு நிகழ்கிறது?
பீடத்தை அணி செய்வது மிதமான அளவோடு இருக்க வேண்டும்.
திருவருகைக் காலத்தில் அக்காலத்தின் தன்மைக்கேற்ப பீடத்தை
மிதமான அளவில் மலர்களால் அணிசெய்தல் வேண்டும். அது ஆண்டவருடைய
பிறப்பின் நிறை மகிழ்வை முன்னறிவிப்பதாய் அமைதல்
கூடாது. மலர்களால் அணி செய்வது எப்பொழுதும் அளவுக்கு
மிகாமல் இருத்தல் நல்லது. மலர்கள் பீட மேசையின் மீது
வைக்கப்படுவதைவிட பீடத்தைச் சுற்றி வைக்கப்பட
வேண்டும். (GRM 305)
8. திருவருகைக் காலம் இசையின்
பங்கு என்ன?
திருவருகைக் காலத்தில் அதன் தன்மைக்கு ஏற்றவாறு, இசைப்
பெட்டியையும் பிற இசைக் கருவிகளையும் மிதமாக, ஆண்டவருடைய
பிறப்பின் நிறை மகிழ்வை முன்னறிவிக்காத அளவில் மீட்டுதல்
வேண்டும். (GIRM 313)
9. திருவருகைக் காலத்தில் உன்னதங்களிலே
பாடவேண்டுமா? சொல்ல வேண்டுமா?
திருவருகைக் காலத்தில் உன்னதங்களிலே பாடுவதோ சொல்வதோ
இரண்டுமே தவிர்க்கப்படவேண்டும். (GIRM53)
10. திருவருகைக்காலத்தில் பரிந்துரைக்கப்படும்
தனிப்பட்ட சிறப்பு பக்தி முயற்சிகள் எவை?
திருவருகைக் காலத்திற்கான சிறப்பு பக்தி முயற்சிகள்
பலவற்றில் திருஅவை பரிந்துரைப்பதும் அதிகமாக பழக்கத்தில்
உள்ளதுமான திருவருகைக்கால இளந்தளிர் வளைய வழிபாடு (Wreath
Service). |
|