"முழு இதயத்தோடு, இறைவனிடம்
திரும்பி வர, தவக்காலம்" |
பிப்.27,2018. நம் வாழ்வை மாற்றுவதற்கு,
அச்சுறுத்தாமல், இனிமையுடன் நம்மை அழைக்கும் ஆண்டவரின் மனநிலையை,
ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர் கொண்டிருக்குமாறு,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று, கூறினார்.
சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இச்செவ்வாய்
காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
உண்மையான மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும், இத்திருப்பலியின்
முதல் வாசகமான இறைவாக்கினர் எசாயா நூல் பகுதியை மையப்படுத்தி
மறையுரையாற்றினார்.
தவக்காலம், மனமாற்றத்திற்கும், கடவுளிடம் மிக நெருக்கமாகச்
செல்வதற்கும் உதவுகின்றது, இதற்குத் தேவையான அருளுக்காக நாம்
செபிக்க வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, நம் வாழ்வை மாற்றியமைக்கவும்,
மனம் மாறி அவரை நோக்கி புதிய அடியை எடுத்து வைக்கவும், நம் ஒவ்வொருவரையும்
அழைப்பதில், ஆண்டவர் ஒருபோதும் தளர்வடைவதில்லை என்றும்
கூறினார்.
சக்கேயு, மத்தேயு ஆகியோரிடம் செயல்பட்டதுபோலவே, நம் மனமாற்றத்திலும்
ஆண்டவர் செயல்படுகிறார் என்றும், நம்மை அடிக்கவும், நம்மைத்
தீர்ப்பிடவும் அவர் விரும்பமாட்டார் என்றும் கூறியத் திருத்தந்தை,
ஆண்டவர் தம் வாழ்வை நமக்கு அளித்தார், இதுவே அவரின் நன்மைத்தனம்
என்றும் மறையுரையாற்றினார்.
ஆண்டவரிடம் திறந்த இதயத்துடன் நாம் செல்வோம், அவர் நமக்காக எப்போதும்
காத்திருக்கும் இறைத்தந்தை என்றும் கூறினார், திருத்தந்தை
பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
============================================================================================
|
|