Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

பரிசுத்த தந்தையின் செய்தி

                                                                                      அக்.16,2017  

கிறிஸ்தவ அன்பை ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்த வேண்டும்
 கிறிஸ்தவ அன்பை ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்துமாறு, அனைத்து விசுவாசிகளுக்கும், இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 15, இஞ்ஞாயிறு காலையில், நிறைவேற்றிய திருப்பலியில் 35, மறைசாட்சிகள் மற்றும் இறையடியார்களை, புனிதர்களாக அறிவித்த திருத்தந்தை, கடவுளின் அன்புக்கு, ஆம் என்று, எவ்வாறு நாம் பதில் அளிப்பது என்பதை, இப்புதிய புனிதர்கள் நமக்குக் காட்டுகிறார்கள் என்று கூறினார்.
புனிதர்நிலை அறிவிப்பு திருப்பலியைக் காண்பதற்காக, வத்திக்கான் தூய பேதுரு வாளாகத்தில் கூடியிருந்த 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு மறையுரையாற்றிய திருத்தந்தை, இப்புனிதர்கள், கடவுளின் அன்புக்கு மேலெழுந்த வாரியாக அல்ல, மாறாக, தங்கள் வாழ்வின் இறுதிவரை, வாழ்வால், ஆம் என்று பதில் சொன்னார்கள் என்றார்.
திருமண விருந்து பற்றிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, இறைவனோடு உள்ள ஓர் அன்புக் கதையே கிறிஸ்தவ வாழ்வு என்றும், இவ்விருந்தில் பங்குகொள்ள நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார்.
ஆண்டவரே, நான் உம்மை அன்பு கூருகிறேன் என்று, ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஆண்டவரிடம் நாம் சொல்ல வேண்டும், ஏனென்றால், அன்பு ஒருமுறை இழக்கப்பட்டால், கிறிஸ்தவ வாழ்வு வெறுமையாக மாறிவிடும் என்றும், திருத்தந்தை கூறினார்.
அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினரை உள்ளடக்கிய, பிரேசில் நாட்டின் முப்பது மறைசாட்சிகள், 1645ம் ஆண்டில், கத்தோலிக்கருக்கு எதிரான அடக்குமுறையில், Natalலில், ஹாலந்து நாட்டு கால்வனிஸ்ட் சபையினரால் கொல்லப்பட்டனர். இவர்கள், "Natal மறைசாட்சிகள்" என்று அழைக்கப்படுகின்றனர்.
மெக்சிகோ நாட்டின் புதிய புனிதர்களான, Cristobal, Antonio, Juan ஆகிய மூவரும், மெக்சிகோவில் கத்தோலிக்கத்தை ஏற்ற முதல் பழங்குடியினத்தவர். "Tlaxcala சிறார் மறைசாட்சிகள்" என்று அழைக்கப்படும் இச்சிறார், 12க்கும், 13 வயதுக்கும் உட்பட்டவர்கள. இச்சிறார், கிறிஸ்தவத்தை மறுதலித்து, தங்களின் மரபுகளுக்குத் திரும்ப வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், 1527ம் ஆண்டுக்கும், 1529ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டனர்.
இத்தாலிய கப்புச்சின் துறவு சபையின் Acriயின் புனித Angelo அவர்கள், 1739ம் ஆண்டில் காலமானார். இஸ்பெயின் நாட்டவரான, Piarist அருள்தந்தையர் சபையைச் சேர்ந்த புனித Faustino Miguez அவர்கள், 1831ம் ஆண்டில் பிறந்தவர். சிறுவர்கள் மட்டுமே கல்வி வாய்ப்பைப் பெறும் வசதியுடைய அக்காலத்தில், சிறுமிகளுக்கு பள்ளிகளைத் தொடங்கியவர் அருள்பணி Miguez.
இன்னும், நற்செய்தியின் மகிழ்வும், அதை வாழ்வதன் அழகும், நம் வாழ்வுச் சான்று வழியாக, புனிதர்களோடு சேர்ந்து சுடர்விடுவதாக என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இஞ்ஞாயிறன்று வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
=====================================================================================
எல்லாருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டும்

உலக உணவு தினமான இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இரு டுவிட்டர் செய்திகளில், உலகில் பசியே இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மனிதருக்கும் உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்க வேண்டுமென்ற உரிமையை உறுதி செய்வது, அவசரமான மற்றும் கட்டாயமாக ஆற்றப்பட வேண்டியதாகும். இதை நாம் புறக்கணிக்க முடியாது என்றும், பகிர்வதற்கு மனமாற்றம் தேவைப்படுகின்றது, இது ஒரு சவாலாகும் என்றும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் கூறுகின்றன.
மேலும், தென் சூடான் நாட்டை, குறிப்பாக, அந்நாட்டில் நிலவும் கட்டுக்கடங்காத கடும் மனிதாபிமான அவசரகால நிலையை மறக்க வேண்டாம் என்று, உலக சமுதாயத்திடம் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் சூடான் பற்றிய புதிய நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில் விளிம்புநிலையில் வாழும் மக்களின் நிலைபற்றி, ஏழைகளின் சார்பாக, வழக்கமாக, உலகிற்கு அறிவிப்பவர்கள் மறைப்பணியாளர்கள் என்றும், இவ்வாறு, தேவையில் இருப்போர் மத்தியில் வாழும் மறைப்பணியாளர்களின் தாராள மற்றும், உறுதியான அர்ப்பணம் பற்றி, கொம்போனி மறைப்பணியாளர் அருள்பணி Daniele Moschetti அவர்கள், இந்நூலில் எடுத்தியம்பியுள்ளார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
தென் சூடானில் தொடர்ந்து இடம்பெறும் மோதல்களுக்கு, தீர்வு காண வேண்டியது, உலகினர் ஒவ்வொருவரின் கடமை என்றும், அந்நாட்டில் சப்தமின்றி அனுபவிக்கப்படும் துன்பங்கள் குறித்த விழிப்புணர்வை உலகில் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், தனது முன்னுரையில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் சூடான் : அமைதி, நீதி மற்றும் மாண்பு பற்றிய நீண்ட மற்றும் துன்பமான பாதை (Sud Sudan: Il lungo e sofferto cammino verso pace, giustizia e dignit) என்ற தலைப்பில், இந்நூல், இத்தாலியத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
===============================================================================
திருப்பீட பல்சமய உரையாடல் அவை : தீபாவளி செய்தி

கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் பன்மைத்தன்மையை, உண்மையாகவே மதித்து போற்றுவதன் வழியாக, ஒற்றுமையும் நலமும் நிறைந்த ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று, திருப்பீட பல்சமய உரையாடல் அவை கூறியுள்ளது.
இந்தியாவில், இவ்வாரத்தில் தீபாவளி ஒளிவிழாவைச் சிறப்பிக்கும் எல்லாருக்குமென வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை, சகிப்புத்தன்மையும், ஒற்றுமையும் நிறைந்த, ஒரு நலமான சமுதாயத்தை உருவாக்க, இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
சகிப்புத்தன்மை என்பது, பிறரின் மனநிலையில் அவர்களின் இருப்பை ஏற்று, பிறருடன் திறந்த மனதோடும், பொறுமையோடும் வாழ்வதாகும் என்றும், நிலையான அமைதி மற்றும், உண்மையான நல்லிணக்கத்திற்காக நாம் உழைக்க விரும்பினால், சகிப்புத்தன்மை மட்டும் போதாது, மாறாக, பல்வேறு கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் உண்மையாகவே மதித்துப் போற்ற வேண்டும் என்றும் அச்செய்தி கூறுகிறது.
அனைத்து தனிமனிதருக்கும், சமூகங்களுக்கும் நன்மதிப்பைக் காட்டுவதன் வழியாக, சகிப்புத்தன்மையின் எல்லையைக் கடந்து நாம் செல்வதற்கு, சவால் விடுக்கப்படுகிறோம் என்றும், அச்செய்தி கூறுகிறது.
திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால், Jean-Louis Tauran, அந்த அவையின் செயலர் ஆயர், Miguel ngel Ayuso Guixot ஆகிய இருவரும் இச்செய்தியில் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், அக்டோபர் 18 அல்லது 19ம் தேதிகளில் தீபாவளி ஒளிவிழா சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

============================================================================================

 
 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!