✠ புனிதர் பீட்டர் கிளேவர் ✠(St. Peter
Claver) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்/
Sep 09) |
✠ புனிதர் பீட்டர் கிளேவர் ✠(St. Peter
Claver)
✠மறைப்பணியாளர், குரு மற்றும் ஒப்புரவாளர், ஆபிரிக்க மக்களின் மறைப்பணிகளுக்கான
பாதுகாவலர், மனித உரிமைகள் பாதுகாவலர் :
(Religious, Priest and Confessor, Patron of the Missions to
African peoples and Human Rights Defender)
✠பிறப்பு : ஜூன் 26, 1581
வெர்டு, உர்ஜெல், கெடலோனியா, ஸ்பெயின் அரசு
(Verdu, Urgell, Lleida, Catalonia, Kingdom of Spain)
✠இறப்பு : செப்டம்பர் 8, 1654 (வயது 73)
கர்டஜெனா, கிரனடாவின் புதிய அரசு, ஸ்பேனிஷ் பேரரசு
(Cartagena, New Kingdom of Granada, Spanish Empire)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
அமெரிக்காவில் உள்ள இவாஞ்சலிக்கல் லூதரன் திருச்சபை
(Evangelical Lutheran Church in America)
✠அருளாளர் பட்டம் : ஜூலை 20, 1850
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)
✠புனிதர் பட்டம் : ஜனவரி 15, 1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)
✠முக்கிய திருத்தலங்கள் :
தூய பீட்டர் கிளேவர் ஆலயம், கர்டஜெனா, கொலம்பியா
(Church of Saint Peter Claver, Cartagena, Colombia)
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர் 9
✠பாதுகாவல் :
அடிமைகள், கொலம்பியா குடியரசு, இன உறவுகள், மாலுமிகள்,
அமெரிக்காவிலுள்ள ஆபிரிக்க மக்களுக்கான மறைப்பணிகள்
புனிதர் பீட்டர் கிளேவர், ஒரு ஸ்பேனிஷ் இயேசு சபை குருவும்
(Spanish Jesuit priest) மறைப்பணியாளருமாவார். ஆவார். தமது
வாழ்க்கை முறையாலும், மேற்கொண்ட பணிகளாலும், அடிமைகள்,
கொலம்பியா குடியரசு மற்றும் அமெரிக்காவிலுள்ள
ஆபிரிக்கர்களுக்கான மறைப்பணிகளின் பாதுகாவலர் ஆனார். கொலம்பியா
குடியரசில், தமது நாற்பது வருட கால மறைப்பணிகளின்போது, சுமார்
300,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு தாம் மட்டுமே திருமுழுக்கு
அளித்தார். அன்பு மற்றும் மனித உரிமைகள் நடைமுறை ஆகியவற்றின்
கிறிஸ்தவப் புகழ் காரணமாக அவர் ஒரு தலைமைப் பண்பாளராக
மதிக்கப்படுகிறார். அவரது நினைவுத் திருநாளான செப்டம்பர்
மாதம், ஒன்பதாம் நாளை, கொலம்பியா குடியரசின் தேசிய மனித
உரிமைகள் தினமாக "கொலம்பியா குடியரசின் காங்கிரஸ்" (The
Congress of the Republic of Colombia) அறிவித்துள்ளது.
பீட்டர் கிளேவர் பிறப்பதற்கு சுமார் எழுபது வருடங்களுக்கு
முன்னரே, "ஸ்பெயின்" நாட்டின் அரசன் "பெர்டினாண்ட்" (King
Ferdinand of Spain), "புதிய ஸ்பெயின்" (New Spain)
பிரதேசங்களில் காலனித்துவ அடிமை முறை கலாச்சாரத்தை
தொடங்குவதற்காக, "லிஸ்பன்" (Lisbon) நகரில் 250 ஆபிரிக்க
அடிமைகளை வாங்குவதற்கு அங்கீகாரம் அளித்தார். இதுவே கிளேவரின்
வாழ்க்கையை வடிவமைப்பதற்கான ஒரு நிகழ்வாக அமைந்தது.
"பார்சிலோனா" பல்கலையில் (University of Barcelona) கல்வி
கற்கையில், அவர் தமது அறிவுத்திறன் மற்றும் பக்திக்காக
குறிக்கப்பட்டார். அங்கே இரண்டு வருடகால கற்றலின் பின்னர் அவர்
திரும்புகையில், தாம் தமது வாழ்நாள் முழுதும் தம்முடன்
வைத்திருந்த ஒரு குறிப்புப் புத்தகத்தில் பின்வருமாறு எழுதி
வைத்தார். "எனது மரணம்வரை, நான் ஒரு அடிமை என்ற புரிதலுடன்
கடவுளுக்கு சேவை செய்வதில் என்னை அர்ப்பணிக்க வேண்டும்."
புதிய உலகில்:
20 வயதில் தமது கல்வியை பூர்த்தி செய்த கிளேவர்,
"டர்ரகோனாவிலுள்ள" (Tarragona) இயேசு சபையில் (Society of
Jesus) இணைந்தார். தமது புகுமுக பயிற்சிக்காலத்தை (Novitiate)
முடித்ததும், தத்துவக் கல்வி கற்பதற்காக "மல்லோர்காவிலுள்ள"
(Mallorca) "பல்மா" (Palma) அனுப்பப்பட்டார். அங்கே இருந்த
காலத்தில், அங்கே சுமை தூக்கும் பணி செய்துவந்த, குருத்துவம்
பெறாத மறைப்பணியாளரான (Laybrother), தூய்மை மற்றும்
தீர்க்கதரிசனத்தின் பரிசுகளுக்காக அறியப்பட்ட, புனிதர்
"அல்ஃபோன்சஸ் ரொட்ரிகஸ்" (St. Alphonsus Rodriguez) அவர்களை
சந்தித்தார். கிளேவர் தமது வாழ்க்கையை புதிய ஸ்பெய்னின்
காலனிகளில் சேவை செய்வதில் கழிக்கவேண்டுமென கடவுள் தம்மிடம்
கூறியதாக உணர்ந்த ரோட்ரிகஸ், அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு,
இளம் மாணவன் கிலேவரை அடிக்கடி வலியுறுத்தினார்.
ஸ்பேனிஷ் காலனிகளுக்காக முன்வந்த கிளேவர், "புதிய கிரனடா"
(Kingdom of the New Granada) அரசுக்கு அனுப்பப்பட்டார்.
கி.பி. 1610ம் வருடம் "கர்டஜெனா" (Cartagena) துறைமுக நகருக்கு
வந்து சேர்ந்த கிளேவர், குருத்துவ அருட்பொழிவுக்காக ஆறு
வருடங்கள் காத்திருக்க நேர்ந்தது. இக்காலகட்டத்தில், இவர் தமது
இறையியல் கல்வியைக் கற்றார். இந்த ஆயத்த வருடங்களில்,
ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த கருப்பு இன அடிமை
மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் கடுமையாக
நடத்தப்படுவது கண்டு ஆழ்ந்த வேதனையுற்றார். கிளேவர், கி.பி.
1615ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
இந்த நேரத்தில் அடிமை வர்த்தகம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு
அமெரிக்காவில் நிறுவப்பட்டது. "கார்டஜெனா" (Cartagena) இதற்கு
ஒரு முக்கிய மையமாக இருந்தது. மேற்கு ஆபிரிக்காவில் இருந்து,
அட்லாண்டிக் கடந்து ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் அடிமைகள்
துறைமுகத்தில் இறக்கப்பட்டனர். தவறான, மனிதாபிமானமற்ற முறையில்
நடத்தப்படும் காரணங்களால், பயணங்களிலேயே மூன்றிலொரு அடிமைகள்
மரித்துப் போயினர். இருப்பினும், அடிமை வர்த்தகத்தை
திருத்தந்தை "மூன்றாம் பவுல்" (Pope Paul III) கண்டித்து
வந்தார். திருத்தந்தை "ஒன்பதாம் பயஸ்" (Pope Pius IX) இதனை
"உச்சகட்ட வில்லத்தனம்" ("Supreme Villainy") என்று
கண்டித்தார்.
கிளேவரின் முன்னோடியான (Predecessor) இயேசு சபை தந்தை
"அல்ஃபோன்சோ டி சேன்டோவல்" (Jesuit Father Alfonso de
Sandoval), தம்மை நாற்பது வருடங்களாக அடிமைகளின் சேவையில்
அர்ப்பணித்திருந்தார். இப்பணியை தொடர்வதற்காக கிளேவர் அங்கே
வந்து சேர்ந்தார். தம்மை, "நீக்ரோக்களின் என்றென்றுக்குமான
அடிமை" ("The Slave of the Negroes forever") என
அறிவித்துக்கொண்டார்.
கப்பல் ஆப்ரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான மனிதர்களை,
மிருகங்களைப் போல் அடைத்துக் கொண்டு வந்து சேர்த்ததும்,
அவர்களில் பலர் கடல் பயணத்தில் உயிர் துறந்தனர். மீதம் இருந்த
அடிமைகள், துறைமுகத்தில் ஏலத்தில் விற்கப்பட்டனர்.
அந்தச் சூழலில் 30 வயது இளம் அருட் பணியாளர் கிளேவர், அந்த
அடிமைகள் நடுவே சென்று, அவர்களுக்கு உணவும், நீரும்
வழங்கினார். காயமுற்று, நோயுற்று இருந்தவர்களுக்கு மருந்துகள்
வழங்கினார். அங்கிருந்த அடிமை வர்த்தகர்கள் அவரை வெறுப்புடன்
வசைபாடினாலும், அவர் தன் பணியை நிறுத்தவில்லை.
40 ஆண்டுகள் அவர் தொடர்ந்த இப்பணியினால், அடிமைகள் பலர்
கிறிஸ்துவை ஏற்கும் வாய்ப்பு பெற்றனர். இவர் தன் பணியில் 3
இலட்சத்திற்கும் அதிகமான அடிமைகளுக்கு திருமுழுக்கு வழங்கி
கிறிஸ்துவிடம் அழைத்து வந்தார்.
இவரது வாழ்வின் இறுதி மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் மிகுந்த
நோயுற்று கிடந்தார். அடிமையாய் இருந்து விடுதலை பெற்ற ஒருவரை,
இவரைக் கவனித்துக் கொள்ளும்படி இல்லத்தலைவர் ஏற்பாடு
செய்திருந்தார். அவரோ, பீட்டர் கிளேவரை கொடுமைப்படுத்தினார்.
இருப்பினும், பீட்டர் அவரைக் குறித்து யாரிடமும் புகார்
சொல்லாமல் அனைத்தையும் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார்.
கி.பி. 1654ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 8ம் தேதி, தமது 73வது
வயதில் இறைவனடி சேர்ந்த பீட்டர் கிளேவர் அவர்களையும், அவருக்கு
ஆன்மீக வழிகாட்டியாக இருந்து, மறைபரப்புப்பணி நாடுகளுக்குச்
செல்லும் ஆவலைத் தூண்டிய அருட் சகோதரர் "அல்ஃபோன்சஸ்
ரொட்ரிகஸ்" (St. Alphonsus Rodriguez) அவர்களையும் கி.பி.
1888ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் புனிதர்களாக
அருட்பொழிவு செய்வித்தார். |
|
|