✠ புனிதர் மத்தேயு ✠(St. Matthew) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்/
Sep 21) |
✠ புனிதர் மத்தேயு ✠(St.
Matthew)
✠திருத்தூதர், நற்செய்தியாளர், மறைசாட்சி :
(Apostle, Evangelist, Martyr)
✠பிறப்பு : ---
லெவி
(Levi)
✠இறப்பு : ----
ஹியேராபொலிஸ் அருகே அல்லது எத்தியோப்பியா
(Hierapolis or Ethiopia)
✠இல்லம் :
கப்பர்நாஉம்
(Capernaum)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglicanism)
லூத்தரன் திருச்சபை
(Lutheran Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
எதிர்த் திருச்சபைகள் அனைத்தும்
(All the Protestant Churches)
✠முக்கிய திருத்தலங்கள் :
சலெர்னோ, இத்தாலி
✠நினைவுத் திருவிழா :
செப்டம்பர் 21 (மேலைத் திருச்சபை)
நவம்பர் 16 (கீழைத் திருச்சபை)
✠சித்தரிக்கப்படும் வகை : தேவதூதர்,
புத்தகம்.
✠பாதுகாவல் :
கணக்காளர்கள், சலெர்னோ (Salerno), இத்தாலி, வங்கியாளர்கள், வரி
வசூலிப்பவர்கள், நறுமணப்பொருள், அரசு ஊழியர்கள்
திருத்தூதர் புனிதர் மத்தேயு, இயேசு கிறிஸ்துவின் பன்னிரு
திருத்தூதர்களுள் ஒருவர். இயேசுவின் வாழ்வை எடுத்துரைக்கும்
நூல்களை எழுதிய நான்கு நற்செய்தியாளர்களுள் இவரும் ஒருவர்.
அடையாளம் :
இயேசு கிறிஸ்துவைத் தொடக்கம் முதலே பின்பற்றிய சீடர்களுள் மத்தேயுவும்
ஒருவர் (மத்தேயு 9:9).
கப்பர்நாகுமில் வரி வசூலிப்பவராக பணியாற்றிய மத்தேயுவை, இயேசு
அழைத்து அவரோடு விருந்துண்டு தனது பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக்கினார்
(மத்தேயு 10:3).
மாற்கு (3:18), லூக்கா (6:15) நற்செய்திகளும், திருத்தூதர் பணிகள்
(1:13) நூலும் மத்தேயுவைத் திருத்தூதர்களில் ஒருவராக அடையாளம்
காட்டுகின்றன.
மாற்கு (2:14), லூக்கா (5:27) நற்செய்திகளில் இவர் அல்பேயுவின்
மகன் லேவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.
இவர், ஏரோது அந்திபாசுக்காக யூத மக்களிடம் இருந்து வரி வசூலிக்கும்
பணியாற்றியதாக நம்பப்படுகிறது. புதிய ஏற்பாட்டின்படி, இயேசுவின்
உயிப்புக்கும், விண்ணேற்றத்துக்கும் மத்தேயுவும் ஒரு சாட்சியாக
இருக்கிறார்.
ஆரம்ப நாட்கள் :
அல்பேயுவின் மகனான மத்தேயு, ரோம ஆளுகையில் இருந்த யூதேயாவின்
கலிலேயா பகுதியில் பிறந்தவர். ரோமையரின் ஆளுகையின் கீழ், யூதேய
குறுநில மன்னன் ஏரோது அந்திபாசுக்காக கப்பர்நாகும் சுங்கச்சாவடியில்
வரி வசூலிப்பவராக மத்தேயு பணியாற்றினார். வரி வசூலிக்கும் பணியாற்றியவர்களை
யூத மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக கருதினர். கிரேக்க, அரமேய மொழிகளில்
மத்தேயு தேர்ச்சி பெற்றிருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில்தான், இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில்
ஒருவராக இருக்க மத்தேயுவை அழைத்தார். அழைப்பை ஏற்ற மத்தேயு, இயேசுவைத்
தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார்.
இயேசு பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச்
சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், "இவர் வரி தண்டுபவர்களோடும்
பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்?" என்று கேட்டனர். இயேசு, இதைக்
கேட்டவுடன் அவர்களை நோக்கி, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே
மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்"
என்றார். (மாற்கு 2:16-17)
மத்தேயுவின் பணி :
புதிய ஏற்பாடு மத்தேயுவின் பெயரைக் குறிப்பிடும்போது, சில இடங்களில்
திருத்தூதர் தோமாவோடு இணைத்து கூறுகிறது. இயேசுவின் இறையரசு பணிக்கு
துணை நின்ற திருத்தூதர்களுள் ஒருவராகவும், அவரது உயிப்புக்கும்,
விண்ணேற்றத்துக்கும் ஒரு சாட்சியாகவும் புதிய ஏற்பாடு மத்தேயுவைச்
சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் விண்ணேற்றத்துக்கு பிறகு,
திருத்தூதர்கள் அனைவரும் மேல்மாடி அறையில் தங்கியிருந்து
செபித்தனர். பெந்தகோஸ்து நாளில் தூய ஆவியின் வருகைக்கு பின்பு,
அவர்கள் அனைவரும் 'இயேசுவே வாக்களிக்கப்பட்ட மெசியா' என்று எருசலேம்
மக்களுக்கு பறைசாற்றினர்.
சுமார் 15 ஆண்டுகள், மத்தேயு யூதர்களுக்கு நற்செய்தி பணியாற்றியதாக
நம்பப்படுகிறது. பின்பு அவர் எத்தியோப்பியா, மாசிதோனியா,
பெர்சியா, பார்த்தியா பகுதிகளுக்கு சென்று, அங்கு வாழ்ந்த மக்களுக்கு
இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்.
கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை ஆகியவை மத்தேயு
இரத்தம் சிந்தி மறைசாட்சியாக இறந்ததாக பாரம்பரியமாக நம்பிக்கை
நம்பிக்கை கொண்டுள்ளன.
மத்தேயு நற்செய்தி :
கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில்
யூதக் கிறிஸ்தவர்களும் பிற இனத்து கிறிஸ்தவர்களும் திருச்சபையில்
உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன.
இது தவிர யூத கிறிஸ்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட
நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான
மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது.
இச்சிக்கல்களுக்குத் தீர்வு காண மத்தேயு நற்செய்தி நூல் எழுதப்பட்டிருப்பதாகத்
தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என
யூத கிறிஸ்தவர்களுக்கு அழுத்தமாக இந்நூல் கூறுகிறது. அவர் இறைமகன்
என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது
எனும் கருத்தும் சுட்டிக்காட்டப்படுகிறது. யூத கிறிஸ்தவர்கள்
பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறை கூவல்
விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது
அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி
அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. கிறிஸ்து திருச்சட்டத்தின்
நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய
நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைத்
தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும்
இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறை கூவல்
விடுக்கிறார் (மத்தேயு 28:20).
இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப்
பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நுhல்
சுட்டிக்காட்டுகிறது. இந்நூலில் கிறிஸ்தியல், திருச்சபையில்,
நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.
ஆசிரியர் :
இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத்
திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய
மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும்
இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு
மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு
திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார்
என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத்
தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக்கொள்வதே சிறப்பு.
சூழல் :
எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத்
துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில் இந்நூல் எழுதப்படடிருக்க
வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை
விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில்
இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும்
அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க
வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.
நினைவு :
மத்தேயு கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, லூதரனியம்
மற்றும் அங்கிலிக்கன் திருச்சபை கிறிஸ்தவ பிரிவுகளில் புனிதராகப்
போற்றப்படுகிறார். இவரது விழா, மேலைத் திருச்சபை கிறிஸ்தவ நாடுகளில்
செப்டம்பர் 21ந்தேதியும், கீழைத் திருச்சபை கிறிஸ்தவ நாடுகளில்
செப்டம்பர் 16ந்தேதியும் கொண்டாடப்படுகிறது. இவரது திருப்பண்டங்கள்
இத்தாலியின் சலெர்னோ கதீட்ரலில் பாதுகாக்கப்படுகின்றன.
மற்ற நற்செய்தியாளர்களைப் போன்றே, கிறிஸ்தவ கலையில்
திருவெளிப்பாட்டில் குறிப்பிடப்படும் நான்கு உயிர்களில் ஒன்றான
சிறகுள்ள மனிதனோடு சித்தரிக்கப்படுகிறார்.
===============================================================================
நற்செய்தியாளரான தூய மத்தேயு (செப்டம்பர்
21)
நிகழ்வு
திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய அந்திரேயா நற்செய்தியில்
இடம்பெறும் ஒரு நிகழ்வு. ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்ததற்காக
மத்தேயுவை எத்தியோப்பிய அரசன் நர மாமிசம் சாப்பிடும் இனத்தின்
(Canibals) தலைவனிடம் அனுப்பி வைத்தான். அவன் மத்தேயுவின் கண்களை
பறித்துக்கொண்டு, ஒரு மாத காலம் சிறையில் அடைத்தான். மத்தேயு
சிறையில் அடைக்கப்பட்ட 27 ஆம் நாள், அற்புதமாக அங்கு வந்த அந்திரேயா
அவரை மீட்டுக்கொண்டு, நர மாமிசம் சாப்பிடும் இனக்குழுத் தலைவன்
முன்பாக நிறுத்தினார். அங்கே மத்தேயு பல்வேறு அதிசயங்களைச்
செய்து காட்டினார். இதைக் கண்ட அந்த இனக்குழு தலைவன் ஆண்டவர்
இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினான்.
இச்செய்தி எப்படியோ அரசனின் காதுகளை எட்ட, அவன் தன்னுடைய படைவீரர்களை
அனுப்பி, மத்தேயுவைப் பிடித்து, கயிறுகளால் கட்டி, தீயிட்டுக்
கொளுத்தச் சொன்னான். ஆனால் மத்தேயுவின் மீது வைக்கப்பட்ட தீயானது
பாம்பு வடிவம் எடுத்து, அரசன் மீது பாய்ந்து கொல்லப் பார்த்தது.
இதைக் கண்ட மத்தேயுவோ அப்பாம்பினைக் கடிந்துகொள்ள அது அமைதியானது.
இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அரசன் மனமாறி,
பின்னாளில் ஒரு குருவாக மாறி, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை
அறிவிக்கத் தொடங்கினான்.
வாழ்க்கை வரலாறு
நற்செய்தியாளரான மத்தேயு கப்பர்நாகூம் ஊரைச் சார்ந்தவர்.
மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களில் இவர் லேவி என அழைக்கப்படுகின்றார்
(லூக் 5:27-28). இவருடைய தந்தையின் பெயர் அல்பேயு. மத்தேயு
சுங்கச் சாவடிவில் வரி வசூலித்துக் கொண்டிருந்தார். அக்காலத்தில்
வரிவசூலிப்பவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாகவே இருந்தது. ஏனென்றால்,
அவர்கள் உரோமை அரசாங்கத்திற்குக் கீழ் வேலை பார்த்ததால்,
விரோதிகள் எனவும், நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள்.
அது மட்டுமல்லாமல், வரிவசூலிப்பவர்கள் உரோமை அரசாங்கம் வசூலிக்கச்
சொல்லும் தொகையை விடவும் அதிகமான வரிசுமையை மக்கள்மீது சுமத்தினார்கள்.
இதனால் மக்களுடைய வெறுப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளானார்கள்.
இப்படி மக்களின் வெறுப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகி இருந்த
மத்தேயுவைத் தான் இயேசு "என் பின்னே வா" என அழைக்கின்றார். இயேசுவின்
அழைப்பினை ஏற்ற மத்தேயு எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப்
பின்தொடர்கிறார்.
இந்த இடத்தில் விவிலிய அறிஞர்கள் சொல்லக்கூடிய ஒரு செய்தி. இயேசுவின்
மற்ற சீடர்களான பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு போன்றோர்
இயேசு அழைத்தபோது அவர்களுடைய படகுகளையும் வலைகளையும்தான்
விட்டுவிட்டு வந்தார்கள். ஒருவேளை அவர்கள் இயேசுவை விட்டுப்
பிரிந்து சென்றாலும்கூட அதனை மீண்டுமாகப் பெற்றுக்கொள்ள
முடியும். ஆனால் மத்தேயு செய்துவந்த வரிவசூலிக்கும் வேலையோ அப்படியில்லை.
அதனை அவர் பணம்கொடுத்துத்தான் பெற்றிருப்பார். ஒருவேளை அவர் இயேசுவை
விட்டுப் பிரிந்துசென்றால் அவ்வேலையைப் பெற்றுக்கொள்ள
முடியாது. ஏனென்றால், பணம் கொடுத்துப் பெறப்படும் அவ்வேலையைப்
பெறுவது அவ்வளவு எளிதன்று. ஆனால் இயேசு அழைத்தவுடன் மத்தேயு அந்தத்
வேலையையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார். உண்மையில்
இயேசுவின் மற்ற எல்லாச் சீடர்களை விடவும் மத்தேயுவுக்குத் தான்
இழப்புகள் அதிகம். ஆனாலும் அவர் இயேசுவுக்காக எல்லாவற்றையும்
விட்டுவிட்டு வருகின்றார்.
இது ஒரு பக்கம் இருந்தாலும், இயேசு தன்னுடைய பணிசெய்ய அழைத்ததற்காக
மத்தேயு தன்னுடைய இல்லத்தில்வைத்து அவருக்கு விருந்தொன்று படைக்கின்றார்.
அவ்விருந்தில் பாவிகள் உட்பட எல்லோரும் கலந்துகொள்கிறார்கள்.
அப்போது அங்கு வந்த பரிசேயர்கள் சிலர், "(இயேசு) இவர் பாவிகளோடு
உணவருந்துகிறாரே?" என்று முணுமுணுகிறார்கள். இதைக் கேட்ட இயேசு
அவர்களிடம், "நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர்
தேவை" (மத் 9:12) என பதிலளிக்கின்றார். இந்நிகழ்விற்குப் பிறகு
மத்தேயு விவிலியத்தின் எப்பகுதியிலும் இடம் பெறவில்லை. ஆண்டவர்
இயேசுவின் உயிர்ப்புப் பிறகு இவர் பெர்சியா, பார்த்தியா, எதியோப்பியா
போன்ற பகுதிகளில் நற்செய்தி அறிவித்ததாகச் சொல்லப்படுகின்றது.
எத்தியோப்பியாவில் இவர் நற்செய்தி அறிவிக்கும்போது கல்லால் எறிந்து
கொல்லப்பட்டதாக சொல்லப்படுகின்றது.
மத்தேயு எழுதிய நற்செய்தி நூல்
புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் முதல் நூலான மத்தேயு நற்செய்தி
நூலை, மத்தேயு ஒரு கைதேர்ந்த கலைஞனைப் போன்று வடிவமைத்திருக்கிறார்.
இயேசுவின் தலைமுறை அட்டவணையோடு தொடங்கும் இந்நற்செய்தி நூல்,
யூதர்களுக்கு எழுதப்பட்டது. இந்நூலில் மத்தேயு வலியுறுத்திக்கூறும்
உண்மை யாதெனில் இயேசுவே வாக்களிக்கபப்ட்ட மெசியா, அவர்தான்
திருச்சட்டத்தின் நிறைவு என்பதாகும். அதனை நிருபித்துக்காட்டுவதற்காகவே
அவர் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார். மேலும்
இயேசு மலைமேல் இருந்து போதிப்பதைச் சுட்டிகாட்டி, இயேசு புதிய
மோசே என்று மக்களுக்கு எடுத்துக்கூறுகின்றார். இந்நற்செய்தி
நூலில் விண்ணரசு என்ற வார்த்தை மட்டும் 51 முறை வருவது இதன் தனிச்
சிறப்பாகும்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
நற்செய்தியாளரான தூய மத்தேயுவின் விழாவைக் கொண்டாடும் இந்த
நாளில், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்ற
சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி அறிவிப்பில் ஆர்வம்
மத்தேயு, ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு பல்வேறு இடங்களுக்குச்
சென்று நற்செய்தி அறிவித்து, இறுதியாக எத்தியோப்பாவில் கல்லால்
எறிந்து கொல்லப்பட்டார் என்று அறிகின்றோம். அவர் நற்செய்தி அறிவிப்பதில்
ஆர்வமிக்க பணியாளராய் விளங்கினார். அதனால்தான் அவர் நற்செய்திக்காகத்
தன்னுடைய உயிரையும் கொடுத்தார். தூய மத்தேயுவின் விழாவை
கொண்டாடும் நாம், அவரைப் போன்று நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வமும்
அதற்காக நம்முடைய உயிரையும் தர முன்வருகின்றோமா? என
சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு கூறுவதாக மத்தேயு நற்செய்தியில்
வாசிக்கின்றோம், "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்;
தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி
கற்பியுங்கள்". (மத் 28:19-20). ஆம் நாம் ஒவ்வொருவருமே எல்லா
மக்களையும் இயேசுவின் சீடர்களாக மாற்றவேண்டும். அதுதான் நம்முடைய
கடமை.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, மறைப்பணியாளர் ஒருவர் நர மாமிசம்
உண்ணும் மக்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் நற்செய்தி அறிவிக்கச்
சென்றார். அவர் அங்கு சென்றபோது, நர மாமிசம் உண்ணும் மக்கள் சிலர்
அவரைச் சூழ்ந்துகொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார்கள். அப்போது
அந்த மறைப்பனியாளர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து, தன்னுடைய
காலில் இருந்து கொஞ்சம் சதையை வெட்டி, அவர்களிடம் சாப்பிடக்
கொடுத்துவிட்டுச் சொன்னார், "என்னுடைய சதை நன்றாக இருந்தால்,
என்னை முழுவதும் சாப்பிட்டு விடுங்கள், இல்லையென்றால் என்னை
விட்டுவிடுங்கள்" என்றார். அவர்கள் அவர் கொடுத்த சதையை
சாப்பிட்டு விட்டு, ரொம்பவும் உப்புக் கரிக்கிறது என்று
சொல்லி, அவரை விட்டுவிட்டுச் சென்றார்கள். அதன்பிறகு அவர், அவ்விடத்தில்
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் நற்செய்தி பணியாற்றி இறந்தார்.
Bennet Cerf என்ற எழுத்தாளர் சொல்லக்கூடிய இந்த நிகழ்வில் வரும்
மறைப்பணியாளர், நற்செய்திப் பணிக்காக எதையும் இழக்கத்
துணிந்தார்.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் மத்தேயுவைப் போன்று, மேலே சொல்லப்பட்ட
நிகழ்வில் வரும் மறைப்பணியாளரைப் போன்று நற்செய்தி அறிவிப்புப்
பணிக்காக எதையும் செய்யத் துணியவேண்டும்.
கடவுள் நமக்குக் கொடுத்த திறமைகள் மூலமாக கடவுளுக்கு மகிமை
செலுத்தவேண்டும்.
மத்தேயு கடவுள் தனக்குக் கொடுத்த திறமையை எழுத்தாற்றலை கடவுளின்
மகிமை விளங்கப் பயன்படுத்தினார். அவரைப் போன்று நாமும் கடவுள்
நமக்குக் கொடுத்திருக்கின்ற திறமைகளை, வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்தி
கடவுளின் மகிமை விளங்கச் செய்யவேண்டும். அது தான் தூய மத்தேயுவின்
விழா நமக்கு எடுத்துரைக்கும் பாடமாக இருக்கின்றது. உண்மையிலே
நாம், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளை
வைத்துக்கொண்டு கடவுளுக்கு மகிமை செலுத்துகிறோமா? என
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நிறைய நேரங்களில் நாம் நம்மிடம் என்ன திறமை இருக்கின்றது என்று
அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை அறிந்ததாலும் அதனை
கடவுளின் மகிமையை விளங்கச் செய்யப் பயன்படுத்தாமல், சுய நலத்திற்காக
பயன்படுத்துக்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். நற்செய்தியில்
இயேசு கூறுவார், "கொடையாகப் பெற்றதை, கொடையாகக் கொடுங்கள்" என்று
(மத் 10:8). ஆகவே, நற்செய்தியாளரான தூய மத்தேயுவின் விழாவை
கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரைப் போன்று நற்செய்தி அறிவிப்பதில்
ஆர்வமிக்க பணியாளராக மாறுவோம். கடவுள் நமக்குக்
கொடுத்திருக்கும் திறமைகளை கடவுளின் மகிமை விளங்கப் பயன்படுத்துவோம்.
அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல். |
|
|