Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜோசப் கப்பர்ச்சினோ ✠(St. Joseph of Cupertino)
  Limage contient peut-tre : 2 personnes, personnes assises  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 18)
✠ புனிதர் ஜோசப் கப்பர்ச்சினோ ✠(St. Joseph of Cupertino)

குரு, ஒப்புரவாளர், திருக்காட்சியாளர் :
(Priest, Confessor, Mystic)

பிறப்பு : ஜூன் 17, 1603
கப்பர்ச்சினோ, அபுலியா, நேப்பிள்ஸ் அரசு
(Copertino, Apulia, Kingdom of Naples)

இறப்பு : செப்டம்பர் 18, 1663 (வயது 60)
ஓசிமோ, மார்ச்சே (Osimo, Marche)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஃபெப்ரவரி 24, 1753
திருத்தந்தை 14ம் பெனடிக்ட்
(Pope Benedict XIV)

புனிதர்பட்டம் : ஜூலை 16, 1767
திருத்தந்தை 13ம் கிளமெண்ட்
(Pope Clement XIII)

பாதுகாவல் :
ஒசிமா நகர், (The City of Osimo), விமான போக்குவரத்து, விண்வெளி வீரர்கள், மாணவர்கள், மன நலமற்றவர்கள், தேர்வுகள்

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 18

"கியுசெப் மரிய டேசா" (Giuseppe Maria Desa) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் ஜோசப் கப்பர்ச்சினோ, ஒரு இத்தாலிய ஃபிரான்சிஸ்கன் சபை துறவியாவார்.

இவரது பெற்றோர் "ஃபெலிஸ் டேசா" மற்றும் "ஃபிரான்செஸ்கா பானரா" (Felice Desa and Francesca Panara) ஆவர். இவர் பிறப்பதற்கு முன்பே இவரின் தந்தை இறந்துவிட்டார். தந்தை ஏற்படுத்திய கடனை இவரின் தாயால் அடைக்கமுடியவில்லை. இதனால் தாயிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் கடன்காரர்கள் அபகரித்து சென்றார்கள். இதனால் இவரின் தாய், மகன் ஜோசப்பை கஷ்டப்பட்டு வளர்த்தார். இவருடைய தாயார் இவரை இளம் வயதிலிருந்தே பக்தி மார்க்கத்தில் வளர்த்தார். இறைபக்தியில் வளர்ந்த ஜோசப், சிறுவயதிலிருந்தே இறைதரிசனங்களை பெற்றார்.

ஜோசப் பல நல்ல குணங்களை பெற்று வளர்ந்தார். இருப்பினும் கோபம் என்னும் குணமும் இவரோடு வளர்ந்தது. இதனால் துன்பங்களுக்கும் ஆளானார். இவரும் இவரின் தாயும் துன்பப்படுவதை அறிந்த இவரின் மாமா ஜோசப்பை தன்னுடன் அழைத்து சென்றார். இவர் செய்த காலணிகள் செய்யும் தொழிலை ஜோசப்பிற்கும் கற்றுக்கொடுத்தார். அத்தொழிலை செய்தபோதும், ஜோசப்பின் மனம் ஆன்மிக வாழ்வில் நாட்டம் கொண்டிருந்தது.

இதனால் 1620ம் ஆண்டு ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்வதற்காக விண்ணப்பித்தார். கல்வித் தகுதிகள் இல்லாத காரணத்தால் அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது.

பிறகு, "டராண்டோ" (Taranto) நகருக்கு அருகிலுள்ள "மார்ட்டினோ" (Martino) எனுமிடத்திலுள்ள "கப்புச்சின்" (Capuchin friars) துறவற மடம் சென்று விண்ணப்பித்தார். அவர்கள் அவரை குருத்துவம் பெறாத அருட்சகோதரராக (Lay brother) சேர்த்துக்கொண்டனர். ஆனால், தொடர்ந்து அவர் கண்ட திருக்காட்சிகளால் அவரை மடத்திலிருந்து வெளியே அனுப்பினார்கள்.

தமது குடும்பத்தினரால் பரிகாசம் செய்யப்பட்ட ஜோசப், கப்புர்ச்சினோ நகருக்கு அருகேயுள்ள துறவியர் இல்லத்திற்கு சென்று, தம்மை அங்கே பணியாற்ற சேர்த்துக்கொள்ளுமாறு கெஞ்சி, மன்றாடி சேர்ந்துகொண்டார். சுமார் ஐந்து வருடங்கள் அயராது பணியாற்றிய ஜோசப்பின் கடின உழைப்பைக் கண்ட துறவியர், 1625ம் ஆண்டு, அவரை துறவற சபையில் இணைத்துக்கொண்டனர். அங்கே, மூன்று வருட கடின பயிற்சியின் பின்னர், 1628ம் ஆண்டு, மார்ச் மாதம் 28ம் தேதி குருத்துவ அருட்பொழிவு பெற்றார். குருத்துவம் பெற்ற ஜோசப், அங்கிருந்து "மடோன்னா டெல்லா க்ராஸியா" (Shrine of the Madonna della Grazia) திருத்தலத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கே, அவர் சுமார் பதினைந்து வருடம் பணியாற்றினார்.

இதன்பின்னர், இவர் கண்ட திருக்காட்சிகள் பன்மடங்காயின. திருக்காட்சிகளின் பின்னர் அவர் பறப்பது போன்ற அல்லது மிதப்பது போன்ற ஒருவித பரவச நிலைக்கு போனார். இதனால் அவரது தூய்மைத்தன்மையின் புகழ் பரவத் தொடங்கியது. இதனால் எரிச்சலைடைந்த அவரது ஆன்மீக தலைவர்களும் திருச்சபையின் முன்னோடிகளும் அவரை ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்தனர். பொது மக்கள் கூடும் இடங்களுக்கும் பொதுக்கூட்டங்களுக்கும் போக அனுமதி மறுக்கப்பட்டார்.

அவரது இத்தகைய பறப்பது போன்ற அல்லது மிதப்பது போன்ற நிகழ்வுகள் மாந்திரீகங்களுடன் தொடர்புடையன என்று பரவலாக நம்பப்பட்டது. இதன் காரணமாக, ஜோசப் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் அவர்களின் உத்தரவின்படி, அவரை கண்காணிப்பதற்காக, அவர் ஒரு ஃபிரான்சிஸ்கன் துறவு மடத்திலிருந்து மற்றொரு மடத்திற்கு அனுப்பப்பட்டார். முதலில், 163953 ஆண்டு காலத்தில் "அசிசி" (Assisi) நகருக்கு அனுப்பப்பட்டார். பின்னர் சிறிது காலம் "பியெட்ரருபியா" (Pietrarubbia) எனுமிடத்திற்கும், அதன்பின்னர் இறுதியில் 165357 ஆண்டு காலத்தில், "ஃபொஸ்சொம்ப்ரோன்" (Fossombrone) எனுமிடத்திற்கும் அனுப்பப்பட்டார். இங்கேயெல்லாம் இவர் கப்புச்சின் துறவியரின் மேற்பார்வையில் வைக்கப்பட்டார். அவர் தனது வாழ்நாள் முழுவதிலும் கடுமையான கட்டுப்பாடுகளை அனுபவித்தார். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே திட உணவு வகைகளை உண்டார். தமது உணவில் கசப்புப் பொருட்களை சேர்த்துக்கொண்டார். தமது வாழ்வின் முப்பத்தைந்து வருடகாலம் இவ்வாறே கழித்தார்.

இறுதியில், 1657ம் ஆண்டு, ஜூலை மாதம், 9ம் நாள், "ஓசிமோ" (Osimo) நகரிலுள்ள கத்தோலிக்க பள்ளிகளின் சமூகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டார். அங்கேயே அவர் மரித்தார்.

 
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா