Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜான் கிறிசோஸ்டம் ✠(St. John Chrysostom)
  Limage contient peut-tre : 1 personne, plein air  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர் / Sep 13)
✠ புனிதர் ஜான் கிறிசோஸ்டம் ✠(St. John Chrysostom)

 கான்ஸ்டன்டினோபில் பேராயர், மறைவல்லுநர் :
(Archbishop of Constantinople, Doctor of the Church)

பிறப்பு : கி.பி. 349
அந்தியோக்கியா
(Antioch)

இறப்பு : செப்டம்பர் 14, 407 (வயது 58)
கோமானா, போன்டஸ்
(Comana in Pontus)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutharanism)
கிழக்கு திருச்சபைகள்
(Church of the East)

பாதுகாவல் :
கான்ஸ்டன்டினோபல் (Constantinople), கல்வி, வலிப்புநோய், மறையுரையாளர்கள், விரிவுரையாளர்கள், போதகர்கள்

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 13

புனிதர் ஜான் கிறிசோஸ்டம், மிக முக்கியமான திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராவார். இவர், தலைசிறந்த மறைபோதகரும், கான்ஸ்டன்டினோபல் (Constantinople) மறைமாநில பேராயரும் ஆவார். இவர் பெரும் எழுத்தாளரும், மறையுரையாளரும், விவிலிய விரிவுரையாளரும், இறையியலாளருமாவார். இவரால் திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இவரது மறை உரையின் மேன்மையினை உனர்த்தும் விதமாக மக்கள் இவரை "பொன்வாய்" (Golden-mouthed) என்னும் பொருள்படும்படி கிரேக்கத்தில் "கிறிசோஸ்தோமோஸ்" என அழைத்தனர். இதுவே பிற்காலத்தில் இவரின் பெயர் ஆயிற்று.

வரலாறு:
இவர், கி.பி.347ம் ஆண்டில் ரோமானியப் படைத் தளபதிக்கும், கிரேக்கப் பெண்மணிக்கும் மகனாகப் அந்தியோக்கியாவில் (Antioch) பிறந்தார். இவர் பிறந்த சிறிது காலத்திலேயே இவரது தந்தை மரித்துப் போனதால், ஜான் கிறிசோஸ்டம் தமது தாயாரால் நல்ல கிறிஸ்தவராக வளர்க்கப்பட்டார். கி.பி. 368 அல்லது கி.பி. 373ம் ஆண்டு திருமுழுக்கு பெற்றார்.

தமது தாயாரின் செல்வாக்கினால் நகரின் "அந்தியோக்கியா பள்ளியின்" நிறுவனரும், ஆயரும், துறவற சீர்திருத்தவாதியும், சிறந்த இறையியலாளருமான "தியோடோர்" (Diodore of Tarsus) என்பவரிடம் இறையியல் கற்றார்.

தீவிர தவவாழ்வு நடத்த விரும்பிய ஜான், 375ம் ஆண்டில் அந்தியோக்கியாவுக்கு அருகிலிருந்த மலைக்குச் சென்றார். அடுத்த இரண்டு வருடங்களும் தொடர்ந்து நின்றபடியும், அரிதாக உறங்கியும், திருவிவிலியத்தை மனனம் செய்தும் கழித்தார். இத்தகைய தீவிர பழக்க வழக்கங்களால், இவரது வயிறும் சிறுநீரகங்களும் நிரந்தரமாக பாதிக்கப்பட்டன. இதனால், அந்தியோக்கியா திரும்பி வந்த ஜான், கி.பி. 381ம் ஆண்டு திருத்தொண்டராக அருட்பொழிவு பெற்றார். கி.பி. 386ம் ஆண்டு குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.

கான்ஸ்டன்டினோபல் ஆயராக:
கி.பி. 397ம் ஆண்டு, ரோமப் பேரரசின் தூதரான (Consul of the Roman Empire) "யூட்ரோபியஸ்" (Eutropius), யாருக்கும் தெரியாமல் இவரைக் கான்ஸ்டன்டினோபிளுக்கு வரவழைத்து இவரை ஆயராக நியமித்தார். திருமறை அதிகாரிகளின் கட்டாயத்தின்பேரில் இப்பொறுப்பை ஏற்ற இவர், ஆயரானதும் சீர்திருத்தப்பணிகளில் இறங்கினார். ஆயர் இல்லத்தின் ஆடம்பர வாழ்வை முற்றிலும் மாற்றினார். அடிக்கடி விருந்துகள் வைப்பதைத் தவிர்த்தார். இவரே படிக்கட்டுகளைச் சுத்தம் செய்யத் தொடங்கினார். ஆயர் இல்லத்தில் பெண்கள் வேலை செய்வதை முதலில் நிறுத்தினாலும், பின்னர் அவ்வாறு வேலை செய்யும் பெண்கள் கன்னிமை வாக்குறுதியைக் கொடுக்கச் செய்தார். இவர் ஆயராகப் பொறுப்பேற்றபோது கான்ஸ்டான்டிநோபிள் நகரில் எண்ணற்ற துறவிகள் இருந்தனர். இவர்களில் துறவிக்குரிய வாழ்க்கை வாழாமல் வீணாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவர்களைத் துறவு மடங்களுக்கு அனுப்பி வைத்தார். ஆடம்பர வாழ்வு வாழ்ந்து பிறருக்குத் கெட்ட எடுத்துக்காட்டாக இருந்த குருக்களைக் கண்டித்தார். கொலை மற்றும் விபச்சாரக் குற்றம் புரிந்த குருக்களை குருத்துவநிலையிலிருந்து விலக்கினார்.

இவரது மறை போதனைகளும், இவர் எழுதியப் புத்தகங்களும் பலரையும் நல்வழிப் படுத்தியதாகக் கூறப்படுகின்றது. பணக்காரர்களின் அர்த்தமற்ற ஆடம்பரச் செலவுகளைக் கண்டித்தார். பணக்காரப் பெண்களின் வீண்பெருமையைச் சாடினார். அவர்கள் உடை அணிவதில் அடக்கத்தை வலியுறுத்தினார். ஏழைகள்மீது அக்கறை காட்டினார். இதுபோன்ற பல நடவடிக்கைகளால் அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவர் தியோபிலஸ் உட்பட சில திருச்சபையின் அதிகாரிகள் மற்றும் உயர் பதவியிலிருந்தவர்கள் இவருக்கு எதிரிகளானார்கள். இவர்களில் யுடோக்சியா என்ற பேரரசி இவருக்குக் கடும் எதிரியானார். இவரின் மறையுரைகள் இந்தப் பேரரசிக்குப் பிடிக்கவில்லை. இவரைப் பழிவாங்கும் நோக்கத்தில் பலக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் பேரரசி. அதனால் அரன் இவரை நாடு கடத்த ஆணையிட்டான். இதைக் கேள்விப்பட்ட மக்கள் வெகுண்டெழுந்ததைக் கண்டு, இந்த முயற்சி கைவிடப்பட்டது.

இறப்பு:
இவரின் ஆலயத்திற்கு வெளியே அரிசி யுடோக்சியாவின் வெள்ளி சிலை நிறுவப்பட்டு அதன் திறப்பு விழாவுக்கு இவர் அழைக்கப்பட்டர். ஆனால் இவர் அரசியின் ஆடம்பர செயலை கடுமையாக சாடினார். அதனால் இவரை ஆர்மேனியாவுக்கு நாடு கடத்தினர். அப்போதைய திருத்தந்தை "முதலாம் இன்னசெண்ட்" (Pope Innocent I) இவருக்கு ஆதரவாக இருந்து அரசனின் செயலை வன்மையாக கண்டித்தார்.

அவரை அந்தப் பேரரசின் கடைகோடியிலிருந்த பைதியுசுக்கு மீண்டும் நாடு கடத்தினர். அவ்விடத்துக்கு இரண்டு படைவீரர்களால் நடக்க வைத்தே அழைத்துச் செல்லப்பட்டார். இரவில் குளிரிலும், பகலில் வெயிலிலும் மழையிலும் நீண்டதூரம் நடக்க வைக்கப்பட்டார். ஏற்கனவே நலிந்திருந்த இவரது உடல் தாங்கவில்லை. கி.பி. 407ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 14ம் தேதி, இவரால் நடக்கவே முடியவில்லை. இனிமேல் நடக்க முடியாது என அந்தப் படைவீரர்களிடம் கூறியும், அவர்கள் அதற்கு இணங்காமல் மீண்டும் ஆயரைக் கட்டாயப்படுத்தி நடக்க வைத்தனர். அவரது உடல்நிலை மோசமாகவே கோமனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அதே நாளில் தனது 58வது வயதில் இறந்தார். "எல்லாவற்றிலும் கடவுளுக்கு மகிமை உண்டாவதாக" என்ற வார்த்தைகளைச் சொல்லி இவர் காலமானார்.

இந்தப் புனிதர் இறந்து 31 ஆண்டுகள் கழித்து, பேரரசி யுடோக்சியாவின் பிள்ளைகளான அரசி புனிதர் புல்ச்சேரியாவும், அரசர் 2வது தியேடோசியசும் தம் பெற்றோரின் செயல்களூக்கு மனம் வருந்தி தவம் செய்தனர். புனிதரின் உடலை கி.பி. 438ம் ஆண்டு, ஜனவரி மாதம், 27ம் நாளன்று, மிக ஆடம்பரமாக கான்ஸ்டன்டினோபிலின் திருத்தூதர் ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்கே அடக்கம் செய்தனர். ஊர்வலத்தில் சவப்பெட்டியை இவர்கள் தாங்கிச் சென்றனர்.

இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதராகவும், திருச்சபையின் மறைவல்லுனராகவும் கருதப்படுகிறார். கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் செப்டம்பர் மாதம், 13ம் தேதியாகும். கிழக்கு மரபுவழி திருச்சபையில், இவர் கான்ஸ்டன்டினோபிலின் ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்ட நாளான நவம்பர் மாதம் 13ம் தேதி, இவரது விழா நாளை நினைவு கூர்கின்றனர்.

படைப்புகள்:
ஜான் கிறிசோஸ்டம், தொடக்ககாலத் திருச்சபையின் மாபெரும் போதகர் என்று அறியப்படுகிறார். கிரேக்கத் திருச்சபையின் தந்தையர்களுள் இவரைப்போன்று யாரும் போதிக்கும் ஆற்றல் கொண்டிருக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. விவிலியத்தில் தொடக்கநூல் பற்றி 67 மறையுரைகள், திருப்பாடல்கள் பற்றி 59 மறையுரைகள், மத்தேயு நற்செய்தி பற்றி 90 மறையுரைகள், யோவான் நற்செய்தி பற்றி 88 மறையுரைகள், திருத்தூதர்பணிகள் பற்றி 55 மறையுரைகள் என இவர் ஆற்றிய மறையுரைகள் ஏராளம், ஏராளம். புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாடு நூல்கள் பற்றி நூற்றுக்கணக்கான விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார். இவரது மறையுரைகள் கேட்பவரது வாழ்க்கையை நேரிடையாகத் தொட்டன. இதனால் இவரது மறையுரைகளைக் கேட்கும் மக்கள் அவற்றை எழுதி அரசர் முதல் அனைவருக்கும் அனுப்பி வைத்தனர்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா