✠ புனிதர் ஹில்டெகார்ட் ✠(St. Hildegard of
Bingen) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்/
Sep 17) |
✠ புனிதர்
ஹில்டெகார்ட் ✠(St. Hildegard of Bingen)
✠மறைவல்லுநர், ரைனின் இறைவாக்கினர் :
(Doctor of the Church, Sibyl of the Rhine)
✠பிறப்பு : கி.பி. 1098
பெர்மெர்சீம் வோர் டெர் யோகே
(Bermersheim vor der Hhe, County Palatine of the Rhine,
Holy Roman Empire)
✠இறப்பு : செப்டம்பர் 17, 1179 (வயது
81)
ரைன் ஆற்றுக்கரை பிங்கென்
(Bingen am Rhein, County Palatine of the Rhine, Holy Roman
Empire)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
✠முக்திபேறு பட்டம் : ஆகஸ்ட் 26,
1326
திருத்தந்தை இருபத்திஇரண்டாம் ஜான்
(Pope John XXII)
✠புனிதர் பட்டம் : மே 10, 2012
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
(Pope Benedict XVI)
✠முக்கிய திருத்தலங்கள் :
ஐபிங்கென் மட ஆலயம்
(Eibingen Abbey, Germany)
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர்
17
புனிதர் ஹில்டெகார்ட், ஓர் எழுத்தாளரும், இறை இசையமைப்பாளரும்,
மெய்யியலாளரும், கிறிஸ்தவ உள்ளுணர்வாளரும், இறைக்காட்சியாளரும்,
ஜெர்மனிய கன்னியர் மடத்தின் தலைவியாக இருந்தவரும், பன்முக திறனாளரும்
ஆவார். இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் பெண் இறைவாக்கினர் என்று
அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண் ஆவார்.
கி.பி. 1136ம் ஆண்டில் சக கன்னியர்களால் ஆதீனத்தலைவியாக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஹில்டெகார்ட் 1150ம் ஆண்டு, ரூபரட்சுபெர்க்கில்
ஓர் மடத்தையும் 1165ம் ஆண்டு, ஐபிங்கெனில் ஓர் மடத்தையும்
நிறுவினார். இவரது ஆக்கமான ஓர்டோ விர்சுதும் (Ordo Virtutum)
கிறிஸ்தவ சமய நாடகங்களுக்கு ஓர் முன்னோடியாகும். சமயவியல், தாவரவியல்
மற்றும் மருத்துவத் துறைகளில் இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.
மேலும் இவரது படைப்புகளில் கடிதங்கள், சமயப் பாடல்கள், கவிதைகள்
மற்றும் நாடகங்களும் அடங்கும். சிறு சித்தரிப்புகளையும்
மேற்பார்வையிட்டுள்ளார்.
கி.பி. 1098ம் ஆண்டு, ஜெர்மனியின் உயர்குலத்தில் பணக்காரக்
குடும்பத்தில் ஹில்டெகார்ட் பிறந்தார். தனது 8வது வயதில் பெனடிக்ட்
சபை துறவு மடத்துக்குக் கல்வி பயிலச் சென்றார். 18வது வயதில்
அக்கன்னியர் மடத்திலேயே சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார்.
20 ஆண்டுகள் கழித்து 1136ம் ஆண்டில் துறவு மடத்தின் தலைவியானார்.
அதற்கு அடுத்த நான்கு ஆண்டுகள் இறைக் காட்சிகளைக் கண்டார் என்பர்.
1140ம் ஆண்டு முதல் 1150ம் ஆண்டுவரை அக்காட்சிகளைப் படங்களோடும்
விளக்கங்களோடும் எழுதி வைத்துள்ளார். இதற்கிடையில் இக்காட்சிகள்
உண்மையானதா எனக் கண்டறிவதற்கு திருத்தந்தை மூன்றாம் யூஜின் ஒரு
விசாரணைக் குழுவை அனுப்பினார். இக்காட்சிகள் உண்மையானவை என அக்குழு
திருத்தந்தைக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
ஹில்டெகார்ட், தெற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பாரிஸ் எனப்
பல இடங்களுக்குப் பயணம் செய்து மறை போதித்து வந்தார். இவரது மறையுரைகளைக்
கேட்டவர் அனைவரும் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டனர். எழுத்துவடிவிலும்
மறையுரைகளைத் தருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஹில்டெகார்ட்
தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் துன்பம் அனுபவித்தார்.
திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த இளம் கிறிஸ்தவர்
ஒருவர் இறந்தபோது அவருக்கு கிறிஸ்தவ முறைப்படி அடக்கச் சடங்கை
நிறைவேற்றினார். இதனால் கடுமையாக எதிர்க்கப்பட்டார். இந்தக்
கிறிஸ்தவர் மரணப்படுக்கையில் தனது தவறுகளுக்காக வருந்தி திருவருட்சாதனங்களையும்
பெற்றார் என்பது இவர் தரப்பு வாதம். இதனால் இவரது கன்னியர் இல்லம்
விலக்கி வைக்கப்பட்டது. இதனைக் கடுமையாய் எதிர்த்தார்
ஹில்டெகார்ட். பின்னர் இவ்விலக்கு நீக்கப்பட்டது. 1179ம் ஆண்டு,
செப்டம்பர் மாதம், 17ம் தேதி தனது 81வது வயதில் இவர் இறந்தார்.
பேரரசர்கள், திருத்தந்தையர்கள், ஆயர்கள், அருள்சகோதரிகள் மற்றும்
உயர்குலப் பிரபுக்களுக்கு எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கடிதங்கள்,
ஒரு நாடகம் உட்பட 72 பாடல்கள், ஏழு புத்தகங்கள் உட்பட
ஹில்டெகார்ட் எழுதியவை இன்றும் உள்ளன. இவர் எழுதிய இசைக்
குறிப்புகள் இக்காலத்திலும் வாசிக்கக்கூடிய வடிவில் உள்ளன.
இவரது எழுத்துக்களில் அறிவியல், கலை, மதம் ஆகிய அனைத்துத் துறைகளும்
இருக்கின்றன. ஒவ்வொரு மனிதரையும் இறைவனின் சாயலாகப் பார்த்த
இவர், சமூகநீதிக்காவும், ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காவும்
அயராது உழைத்தார். 12ம் நூற்றாண்டில் திருச்சபையில் பெரும்
மாற்றத்திற்கும் சீர்திருத்தத்திற்கும் வித்திட்டவர் இவர் என
நம்பப்படுகின்றது.
இவருக்கு முறையான புனிதர் பட்டமளிப்பு நிகழவில்லை எனினும் இவரின்
பெயர் புனிதர்கள் பட்டியலில் இருந்தது. இவரின் புனிதர் பட்ட
நிலையில் இருந்த குழப்பத்தை நீக்க, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்,
2012ம் ஆண்டு, மே மாதம், 10ம் நாளன்று, இவரின் பக்தியை அதிகாரப்பூர்வமான
ஒன்றாக அறிவித்தார். 2012ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் நாளன்று,
இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
அறிவித்தார். |
|
|