Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் சிப்ரியன் ✠(St. Cyprian)
  Limage contient peut-tre : personnes debout  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 16)
✠ புனிதர் சிப்ரியன் ✠(St. Cyprian)

 கார்த்தேஜ் ஆயர், மறைசாட்சி :
(Bishop of Carthage, Martyr)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

பிறப்பு : கி.பி. 210
கார்த்தேஜ் (Carthage)
தற்போதைய துனிஷியா (Present day Tunisia)

இறப்பு : செப்டம்பர் 14, 258
கார்த்தேஜ் (Carthage)
தற்போதைய துனிஷியா (Present day Tunisia)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 16

பாதுகாவல் : காலரா நோயிலிருந்து

புனிதர் சிப்ரியன், "கார்த்தேஜ்" (Carthage) நகர ஆயரும் முக்கியமான ஒரு ஆதி கிறிஸ்தவ எழுத்தாளரும் ஆவார். இவரது லத்தீன் படைப்புகள் பல இன்னும் நடைமுறையில் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வட ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவர் அல்லாத குடும்பத்தில் பிறந்த இவர், பண்டைய கல்விமுறையில் கற்றார். இவரது இயற்பெயர் "தாசியஸ்" (Thascius) ஆகும்.

இளம் வயதிலிருந்தே கிறிஸ்துவை பின்பற்ற வேண்டுமென்று ஆசை கொண்ட இவர், தமது முப்பத்தைந்தாம் வயதில், 245ம் ஆண்டில் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறினார். திருவருட்சாதனங்களை பெற்று, திருமறையைப் பற்றி நன்கு அறிந்தார். பின்னர், தான் பிறந்த ஊரிலே இருந்த குருமடத்தில் சேர்ந்து, பயிற்சி பெற்று முதலில் திருத்தொண்டராகவும், பின்னர் விரைவிலேயே குருவாகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். சிறந்த மறைபரப்புப் பணியாளராக பணியாற்றினார். தன் குடும்பத்திலிருந்து இவருக்கு ஏராளமான சொத்துக்களை வழங்கினர். அவற்றையெல்லாம் விற்று, வேறுபாடு பார்க்காமல் பணியாற்றினார்.

இவர், 249ம் ஆண்டு இவரின் சொந்த மறை மாவட்டத்திற்கே ஆயராக நியமிக்கப்பட்டார். பல்வேறு பிரச்சனைகள் நிறைந்திருந்த போதும், திறம்பட தம் பணியை ஆற்றினார். பல அரசர் இவருக்கு எதிராக செயல்பட்டனர். அவர்களிடமும் இறைநம்பிக்கையை வளர்த்து கிறிஸ்தவர்களாக மாற்றினார்.
இச்செயல்களை கண்ட பல கிறிஸ்தவரல்லாதவர்கள் சிப்ரியானின் செயல்களை எதிர்த்தனர்.

கிறிஸ்தவர்களை பலவிதங்களில் வதைத்துக் கொன்றனர். சில மக்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து பிரிந்து புறவின சபைகளில் சேர்ந்தனர். அவர்களின் பயத்தைப் பார்த்து, சிப்ரியான் கிறிஸ்தவர்களாக வாழ தைரியமூட்டி கிறிஸ்துவை பற்றிக்கொள்ள இன்னும் சிறப்பாக குரல் கொடுத்து பணியாற்றினார். கி.பி. 250ம் ஆண்டின் தொடக்கத்திலேயே "டிராஜன் டேசியஸ்" (Trajan Decius) என்ற ரோம பேரரசனின் கிறிஸ்தவ துன்புறுத்தல்கள் தொடங்கின. அதனை அறிந்த சிப்ரியான் அங்கிருந்து வேறு இடத்திற்கு தப்பித்து சென்றார்.

அப்போது அம்மறைமாநிலத்தில் ஆயர் இல்லாமல் போனது. இதனை அறிந்த "நோவெற்றஸ்" (Nowetras) என்பவன் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்துவை மறுதலித்தவர்களை, தன்னுடன் சேர்த்துக்கொண்டு, திருச்சபையில் இருந்துக்கொண்டே, திருச்சபைக்கு எதிராக செயல்பட்டான். ரோம் நகர் சென்று, அங்கும் தவறான வதந்திகளை பரப்பினான். இதையறிந்த சிப்ரியான் மனம் கலங்கினார். மீண்டும் கார்த்தேஜ் வந்தடைந்தார். அப்போது சில கூட்டங்களை கூட்டி திருச்சபையில் சில நிலையான தீர்மானங்களை கொண்டுவந்தார்.

256ம் ஆண்டின் இறுதியில் பேரரசர் "முதலாம் வலேரியனால்" (Emperor Valerian I) கிறிஸ்தவர்களுக்கெதிரான துன்புறுத்தல்களும் சித்திரவதைகளும் தொடங்கின. இதன் காரணமாக, திருத்தந்தையர் "முதலாம் ஸ்டீபனும்" (Pope Stephen I), அவரைத் தொடர்ந்து வந்த திருத்தந்தை "இரண்டாம் சிக்ஸ்டஸும்" (Pope Sixtus II) மறை சாட்சியாக மரித்தனர்.

ஆப்பிரிக்காவில், சிப்ரியான் கிறிஸ்தவ துன்புறுத்தல்களை தீரமுடன் எதிர்கொண்டார். இதனால் "அஸ்பசியஸ் பட்டேர்னஸ்" (Aspasius Paternus) என்ற ஆளுநர் ஒருவரால் நாடு கடத்தப்பட்டார். அப்போதும் இவர் கிறிஸ்தவ மக்களுக்காக பரிந்து பேசினார். அதனால் மீண்டும் நாடு கடத்தப்பட்டு, கடுமையான தண்டனையை அனுபவித்தார். பல துன்பங்களை அனுபவித்தார் ஆயர். அப்போதும் கூட ஆப்ரிக்கா மண்ணில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக பரிந்து பேசிக் கொண்டே இருந்தார்.

கி.பி. 258ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 13ம் நாள், புதிய ஆளுநரான "கலேரியஸ் மேக்சிமஸ்" (Galerius Maximus) என்பவனுடைய உத்தரவின்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிப்ரியானுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. நகரின் மத்தியில் கொண்டு நிறுத்தப்பட்ட இவர், தமது ஆடைகளை தாமாகவே களைந்து கொண்டார். முழங்காலிட்டு நிறுத்தப்பட்ட இவர், "இறைவனுக்கு நன்றி உரித்தாகட்டும்" என முழங்கினார். தனது இறுதி மூச்சுவரை கிறிஸ்துவின் பெயரை உச்சரித்த வண்ணமாய் இருந்த சிப்ரியன், கூரிய வாளால் தலை வெட்டப்பட்டு இறந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா