Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர்கள் மிக்கேல், ரபேல் மற்றும் கபிரியேல் ✠
(Saints. Michael, Raphael & Gabriel)
Limage contient peut-tre : 1 personne Limage contient peut-tre : intrieur Limage contient peut-tre : 1 personne
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 29)
✠ புனிதர்கள் மிக்கேல், ரபேல் மற்றும் கபிரியேல் ✠(Saints. Michael, Raphael & Gabriel)
 
அதிதூதர்கள் :(Archangel)

✞ புனிதர் மிக்கேல் ✞(St. Michael)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Angilikkan Communion)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
எதியோப்பிய டெஹவெடோ திருச்சபை
(Ethiopian Tehawedo Church)
லூதரனியம்
(Luthernism)
இஸ்லாம்
(Islam)
யூதம்
(Judaism)

நினைவுத் திருவிழா : செப்டம்பர் 29

சித்தரிக்கப்படும் வகை :
அலகையை காலால் மிதித்தல்; கொடி, தராசு, வாள் ஏந்தியவாறு

பாதுகாவல் :
கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலர்; கீவ், யூதர்களைப் பாதுகாப்பவர், காவலர், இராணுவ வீரர், காவலர், வியாபாரி, கடற்படையினர், வானிலிருந்து குதிக்கும் வீரர்

மிக்கேல் எனப்படுபவர் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களின் நம்பிக்கையின்படி ஓர் தேவதூதர் ஆவார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம், லூதரனியம் ஆகிய சபைகள் இவரை புனிதராகவும், அதிதூதராகவும் கொள்கின்றன. இவரை தலைமை தூதர் என விவிலியம் குறிக்கின்றது. எபிரேயத்தில் மிக்கேல் என்னும் பெயருக்கு கடவுளுக்கு நிகர் யார்? என்று பொருள் உண்டு.

பழைய ஏற்பாட்டில் மிக்கேல் :
பழைய ஏற்படான எபிரேய விவிலியத்தில், தானியேல் நூலில் மிக்கேல் பற்றி தானியேல் (தானியேல் 10:13-21) குறிப்பிடுகின்றார். அவர் உண்ணா நோன்புடன் ஓர் காட்சி காண்கிறார். அதில் ஒரு தூதர் மிக்கேல் இசுரயேலின் பாதுக்காப்பாளர் என மிக்கேல் அழைக்கப்படுகின்றார். தானியேல் மிக்கேலை "தலைமைக் காவலர்" என்று அழைக்கிறார். பின்னர் அதே காட்சியில் (தானியேல் 12:1) ""கடைசி காலத்தில்" பின்வரும் நிகழ்ச்சிகள் மிக்கேலின் பங்கு பற்றி தானியேலுக்கு அறிவுறுத்தபடுகிறது:

அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

புதிய ஏற்பாட்டில் மிக்கேல் :
வெளிப்படுத்துதல் நூலில் விண்ணகத்தில் நடந்த போர் பற்றி குறிப்பிடப்படுகிறது. பின்வரும் விவிலிய வசனங்கள் அதை குறிக்கின்றது (வெளி 12 அதிகாரம் )
7. பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்: அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். 8 அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. 9 அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது: அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.

யூதா 1ம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில், மிக்கேல் பற்றி குறிப்பிடப்படுகின்றது.
9. தலைமைத் தூதரான மிக்கேல், மோசேயின் உடலைக் குறித்து அலகையோடு வழக்காடியபோது அதனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியவில்லை. மாறாக, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று மட்டும் சொன்னார்.

☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆

✞ புனிதர் ரபேல் ✞(St. Raphael)

ஏற்கும் சமயம் :
கிறிஸ்தவம்
(Christianity)
யூதம்
(Judaism)
இஸ்லாம்
(Islam)

நினைவுத் திருவிழா : செப்டம்பர் 29

சித்தரிக்கப்படும் வகை :
இளைஞர் ஒருவர் கையில் கோளும் மீனும் ஏந்தியவாறு

பாதுகாவல் :
மருந்தாளுணர்கள்; குருடர்; உடல் நோய்கள்; நோயாளிகள்; கண் கோளாறுகள்; காதலர்கள்; செவிலியர்கள்; மன நோய்; பயணிகள்; இடையர்கள்; இளையோர்; பாதுகாவல் தேவதைகள்; சியாட்டில் உயர்மறைமாவட்டம் (Archdiocese of Seattle);
மேடிசன் மறைமாவட்டம் (Diocese of Madison); மருத்துவர்கள்; பயணிகள்; இளைஞர்கள்;
டுபுக்யு உயர்மறைமாவட்டம் (Archdiocese of Dubuque); வாஷிங்க்டன்; பிலிப்பைன்ஸ்; ஆடு மேய்ப்பவர்கள்.

எபிரேய மொழியில் கூறப்படும் இவரின் பெயரின் பொருள் "கடவுள் குணமளிக்கின்றார்" என்பதாகும். இவரும் இறைவனின் முக்கிய தூதர்கள் எழுவரில் ஒருவர் ஆவார். இவர் கடவுளிடம் பரிந்து பேசி குணமளிக்கிறவராக இருக்கின்றார். நீண்ட பயணங்களிலும் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கின்றார்.

யூத மற்றும் கிறிஸ்தவ மரபுப்படி குணப்படுத்தும் இறைதூதர் ஆவார். கத்தோலிக்கர்கள் மற்றும் மரபுவழி திருச்சபையினரால் இறையேவுதல் பெற்ற நூலாக ஏற்கப்பட்ட விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியாகிய இணைத் திருமுறைத் தொகுப்பைச் சேர்ந்த ஏழு நூல்களுள் ஒன்றான தோபித்து நூலில் அதிதூதர் புனிதர் ரபேல், குறிக்கப்பட்டுள்ளார். விவிலியத்தில் பெயரோடு குறிக்கப்பட்டுள்ள மூன்று தூதர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.

விவிலியத்தில் கடவுளுடைய முன்னிலையில் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர் தாம் என இவரே குறிப்பிடுவதாக உள்ளது.

இவரே தோபியாசும் அவர் மருமகள் சாராவும் மன்றாடியபோது அவர்களின் வேண்டுதல்களையும் நற்செயல்களையும் எடுத்துச்சென்று ஆண்டவரின் திருமுன் ஒப்படைதவரும், தோபியாசை சோதிக்க அனுப்பப்பட்டவரும், அவருக்கும் அவரின் மருமகள் சாராவுக்கும் நலம் அருளக் கடவுளால் அனுப்பப்பட்டவரும் ஆவார்.
☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆

✞ புனிதர் கபிரியேல் ✞(St. Gabriel)

ஏற்கும் சமயம் :
கிறிஸ்தவம்
(Christianity)
யூதம்
(Judaism)
இஸ்லாம்
(Islam)

கபிரியேல், ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் தேவதூதர் ஆவார்.

கடவுளின் முக்கிய அதிதூதர்கள் ஏழு பேரில் இவரும் ஒருவர். மரியன்னைக்கு மங்களவார்த்தையின் வழியாக இறைமகன் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை, சக்கரியாசுக்கு முன்னறிவித்தவரும் இவர்தான்.

கிறிஸ்தவ நம்பிக்கைகள் :
இவரைப்பற்றிய குறிப்பு முதன் முதலில் காணக்கிடைப்பது தானியேல் நூலில் ஆகும். லூக்கா நற்செய்தியில் இவர் திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பெற்றோர்களுக்கு அவர்களின் பிறப்பை முன் அறிவிப்பதாய் அமைகின்றது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இவரை அதிதூதர் என அழைக்கின்றனர்.

தனித்தீர்வையின்போது, இறைவனின் முன்னிலையில் நிற்பவர் இவர். இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் நெற்றியில் ஆசீர் அளிப்பவரும் இவர். இயேசுவின் பிறப்பை, பெத்லேகேமில் இடையர்களுக்கு அறிவித்தவர்.

இவர் தாழ்ச்சியையும், ஆறுதலையும் இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு தருகின்றார். இவர், பெர்சியா என்ற நாட்டிற்கு நிகழவிருந்த வீழ்ச்சியையும், வெற்றியையும் முன்னறிவித்தார். இவர் மரியன்னையிடம் கூறிய வாழ்த்துச் செய்தி, இன்று திருச்சபையில் மூவேளை செபமாக செபிக்கப்படுகின்றது.

இஸ்லாமிய நம்பிக்கைகள் :
இஸ்லாமிய சமயத்தில் இவர் ஜிப்ரீல் என்று அரபு மொழியில் அழைக்கப்படுகிறார். இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களான நபிமார்களுக்கு கொண்டு செல்பவர் என புனித குரான் குறிப்பிடுகின்றது.

இவர், இயேசுவின் தாய் மரியாளுக்கு இயேசு பிறக்கும் நற்செய்தியை இறைவனிடம் இருந்து மரியாளிடம் கொண்டு சேர்த்ததாக குரான் குறிப்பிடுகிறது.

இஸ்லாமிய நம்பிக்கையில், இவர்தான் அனைத்து இறைத்தூதர்களுக்கும் இறை செய்தியை கொண்டு சேர்த்ததாக நம்பப்படுகிறது.

மேலும், புனித குரான் இவர் மூலமாகவே முகமது நபியவர்களுக்கு அருளப்பட்டது என்பது இஸ்லாமிய நம்பிக்கை.

பிற நம்பிக்கைகள் :
சிலசமயங்களில், குறிப்பாக புது யுக இயக்கத்தினரால் பெண்பாலிலும் இவர் குறிப்பிடப்படுகிறார்.

====================================================================================
அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல் மற்றும் இரபேல் திருவிழா

  கி.பி. 404 ஆண்டு சிபான்றோ நாட்டு மக்கள் பக்கத்து நாட்டவரிடமிருந்து பல்வேறு விதமான அச்சுறுத்தல்களைச் சந்தித்தார்கள். எப்போது வேண்டுமானாலும் தங்கள் நாட்டின்மீது பக்கத்து நாட்டவரால் போர்மூளும் என்றதொரு நிலை ஏற்பட்டது. இதனால் சிபான்றோ நாட்டு மக்கள் தங்கள் ஆயரை அணுகி, தூய மிக்கேல் அதிதூதரிடம் தங்களுக்காக மன்றாடும்படி கேட்டுக்கொண்டார்கள். அதன்படி ஆயரும் சிபான்றோ மக்களுக்காக தூய மிக்கேல் அதிதூதரிடம் பரிந்துபேசினார்.

அடுத்தநாள் காலை எதிரி நாட்டவர் சிபான்றோ நாட்டு மக்கள்மீது போர்தொடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத விதமாக வானத்திலிருந்து இடியும், மின்னலும், பெரு மழையும் விழுந்தது. இதனைச் சற்றும் எதிர்பார்த்திராத எதிரிநாட்டுப் படையினர் பின்வாங்கத் தொடங்கினார்கள். இதனால் சிபான்றோ நாட்டின்மீது போர்மூளும் அபாய நிலையானது நின்றுபோனது.

மக்கள் அனைவரும் தூய மிக்கேல் அதிதூதர் வழியாக கடவுள் தங்களுக்குச் செய்த நன்மைகளுக்கு நன்றிபண் பாடினார்கள். இன்றைக்கும் கூட சிபான்றோ மக்கள் கடவுளிடமிருந்து தூய மிக்கேல் அதிதூதர் வழியாக பல்வேறு நன்மைகளைப் பெற்று வருகிறார்கள்.

இன்று திருச்சபையானது அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியல் மற்றும் இரபேல் ஆகியோரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. தொடக்கத்தில் இந்த மூன்று முதன்மைத் தூதர்களின் விழா வேறு வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தது. தூய மிக்கேல் அதிதூதரின் விழா செப்டம்பர் 29 ஆம் தேதி அன்றும், தூய கபிரியல் அதிதூதரின் விழா மார்ச் 24 ஆம் தேதியிலும் தூய இரபேல் அதிதூதரின் விழா அக்டோபர் 21 ஆம் தேதியிலும் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ரோம் நகரில் அனைத்துப் புனிதர்களுக்குமான ஆலயம் கட்டப்பட்ட பிறகு மூன்று அதிதூதர்களின் விழாக்களும் ஒன்று சேர்க்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலை ஏற்பட்டது.

இந்த மூன்று அதிதூதர்களின் விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இறைவார்த்தை நமக்குத் தரும் செய்தி என்னவென்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

தூதர்கள் என்றால் அவர்கள் கடவுளின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கடவுளின் பணியை சீராகச் செய்யக்கூடியவர்கள் (திருப்பாடல் 103:20). அந்த வகையில் பார்க்கும்போது தூய மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகிய மூன்று முதன்மைத் தூதர்களும் இறைவார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அவர் சொன்ன பணியைச் சிறப்பாக செய்தார்கள்.

தூய மிக்கேல் அதிதூதரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இவர் இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும், திருத்தூதரான தூய யூதா புத்தகத்திலும், திருவெளிப்பாடு நூலிலும் அதிகமாக இடம்பெறுகிறார். திருவெளிப்பாடு நூலில் விண்ணகத்தில் கடவுளின் தூதர்களுக்கும், அவருக்கு எதிரானவர்களுக்கும் எதிராகக் கலகம் ஏற்படும்போது இவர்தான் கடவுளின் தூதர்படைக்குத் தலைமை தாங்கி, எதிரிகளிடமிருந்து வெற்றியைப் பெற்றுத் தருகின்றார். "ஆண்டவருக்கு நிகர் யார்?" என்ற தன்னுடைய பெயருக்கு ஏற்ப தூய மிக்கேல் அதிதூதர் கடவுளின் பெயரை விளங்கச் செய்பவராக இருக்கின்றார்; பகைவர்களிடமிருந்தும், தீய ஆவிகளிடமிருந்தும் நம்மை மீட்பவராக இருக்கின்றார்.

இன்றைக்கும்கூட நமது வீட்டு வாசலில் தூய மிக்கேல் அதிதூதரின் படத்தைத்தான் வைத்திருக்கிறோம். காரணம் அவர் நம்மைத் தீய ஆவிகளிடமிருந்து விடுக்கின்றார் என்பதனால்தான். இவர் திருத்தந்தையின் பாதுகாவல் தூதர் என்றும் அறியப்படுகின்றார்.

அடுத்ததாக தூய கபிரியேல் அதிதூரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இவர் "ஆண்டவரின் செய்தியை எடுத்துரைக்கக் கூடியவராக" இருக்கின்றார். திருமுழுக்கு யோவானின் பிறப்பை சக்கரியாவிடமும், ஆண்டவர் இயேசுவின் பிறப்பை அன்னை மரியாளிடமும் இவர்தான் எடுத்துரைத்தார். இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் இவர் இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலைச் செய்தியை அறிவித்ததாக நாம் வாசிக்கின்றோம் (தானி 8:16).

இவ்வாறு அதிதூதரான தூய கபிரியேல் கடவுளின் செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கக்கூடியவராக விளங்குகின்றார். இறைவனின் அன்புமக்களாகிய நாம் நம்மோடு வாழும் மக்களுக்கு நல்ல செய்தியை எடுத்துரைக்கின்றவர்களாக இருக்கின்றோமா என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நிறைவாக வரும் தூய இரபேல் அதிதூதரைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது இவர் "கடவுள் குணப்படுத்துகிறார்" என்ற தன்னுடைய பெயருக்கு ஏற்ப விளங்குகின்றார். குறிப்பாக வர் தோபித்து நூலில் அதிகமாக இடம்பெறுகின்றார். தொபியாசுக்கு வழிதுனையாகவும்ம், அவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணிடமிருந்து தீய ஆவியை ஓட்டுவதற்குக் காரணமாகவும், இன்னும் சிறப்பாக தோபித்து மீண்டுமாகப் பார்வை பெறுவதற்கும் காரணமாக விளங்குகின்றார்.

புதிய ஏற்பாட்டில் வரும் பெத்சாய்தா குளத்தை கலக்கி, அதில் இறங்கும் மக்களுக்கு குனம்தரும் தூதர் இவர்தான் என்று சொல்லப்படுகின்றார். இவ்வாறு தூய இரபேல் கடவுள் அளிக்கும் நலவாழ்வை, சுகத்தை எல்லா மக்களுக்கும் அளிக்கக்கூடியவராக விளங்குகின்றார்.

ஆகவே அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் நாமும் கடவுளுக்குக் கீழ்படிந்து வாழ்வோம். அதேநேரத்தில் தீமையை எதிர்த்துப் போராடுவோம், மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்போம், உடல் உள்ள நோயால் வருந்தும் மக்களுக்கு மருந்தாய் விளங்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

(அருட்தந்தை: மரிய அந்தோனிராஜ்)

==================================================================================
அதிதூதர்களான தூய மிக்கேல் கபிரியேல் ரபேல் (செப்டம்பர் 29)


நிகழ்வு

ஒருசமயம் திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது திடிரென மூர்ச்சையானார். மக்கள் அனைவரும் அவர் இறந்துவிட்டார் என்றே நினைத்தார்கள். ஆனால் திருத்தந்தை இறக்கவில்லை, மாறாக ஒரு காட்சி கண்டார். அந்தக் காட்சியில் அதிதூதர் மிக்கேல் சாத்தானோடு போர் தொடுத்து வெற்றிக்கொண்டார். இந்தக் காட்சியைக் கண்டபிறகு அவர் விழித்தெழுந்து தூய மிக்கேல் அதிதூதருக்கு ஒரு ஜெபத்தை எழுதினார். அந்த ஜெபம் இதுதான்: அதிதூதரான தூய மிக்கேலே! எங்கள் போராட்டத்தில் எங்களைக் காத்தருளும். சாத்தானின் வஞ்சக தந்திரங்களில் எங்களுக்குத் துணையாயிரும்; தாழ்மையான எங்கள் மன்றாட்டுகளைக் கேட்டு, எல்லாம் வல்ல இறைவன் சாத்தனைத் தண்டிப்பாராக; வான் படையின் தலைவரே, ஆன்மாக்களைக் கெடுக்க இவ்வுலகில் சுற்றித் திரியும் சாத்தானையும் மற்ற தீய ஆவிகளையும் இறை வல்லமையால் நரகத்தில் தள்ளுவீராக ஆமென்.

இந்த ஜெபத்தை அவர் எழுதி முடித்துவிட்டு, மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தீமைகளும் சோதனைகளும் வரும்போது இச்செபத்தைச் சொல்லி மன்றாடும்படி கேட்டுக்கொண்டார்.

வானதூதர் என்பவர் யார்?

அதிதூதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் முதலில் வானதூதர்கள் யார் என அறிந்துகொள்வோம். வானதூதர் என்பவர் யார் என்பதற்கு தூய அகுஸ்தினார் இவ்வாறு விளக்கம் தருவார், "வானதூதர் என்பது இயல்பு கிடையாது, மாறாக செய்யக்கூடிய பணி. வானதூதர்கள் கடவுளின் திருமுன் நின்று எப்போதும் அவரைப் புகழ்ந்துகொண்டிருப்பவர்கள்; அவர்கள் கடவுள் விடுக்கும் கட்டளையை நிறைவேற்றக் கூடியவர்கள்; தீமைக்கெதிரான போராட்டில் நம்மோடு உடன் இருப்பவர்கள்". தூய கிரகோரியார் வானதூதர்களை அவர்கள் செய்யக்கூடிய பணிகளை வைத்து இரு வகைப்படுத்துவார். முக்கியமான பணிகளைக் செய்பவர்களை வானதூதர்கள் என்றும், மிக முக்கியமான பணிகளைச் செய்பவர்களை அதிதூதர்கள் என்றும் அவர் குறிப்பிடுவார்.

மிக முக்கியமான பணிகளைச் செய்ய அதிதூதர்கள் எழுவர் இருப்பதாக திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத ஏனோக் நூலில் வாசிக்கின்றோம். அவர்களுடைய பெயர்கள் பின்வருவனவாகும் மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், சீத்தியேல், ஜுகுதியேல், பரசியேல். அந்த ஏழு அதிதூதர்களில் மூவரின் பெருவிழாவை இன்று திருச்சபையானது நினைவுகூறுகின்றது. அவர்களைக் குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

மிக்கேல்

மிக்கேல் என்றால் "கடவுளுக்கு நிகர் யார்?" என்று அர்த்தமாகும். இவரைக் குறித்து இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் யூதா புத்தகத்திலும், திருவெளிப்பாடு நூலிலும் வாசிக்கின்றோம். தானியேல் புத்தகத்தில் மிக்கேல் இஸ்ரயேல் மக்களின் தலைவராக இருந்து, எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் (தானி 10:13, 12:11), தூய யூதா புத்தகத்தில், மிக்கேல் சாத்தானோடு மோசேயின் இறந்த உடலைக் குறித்து வாதிடுவதையும், அப்போதும் சாத்தான் மோசேயின் உடலை புதைக்கவேண்டும் என்று சொல்ல, மிக்கேல் அதனைக் கடிந்துகொள்வதையும் குறித்து வாசிக்கின்றோம் (யூதா 1:8,9). எதற்காக சாத்தான் மோசேயின் உடலைப் புதைக்கவேண்டும் என்று வாதிட்டது என்பதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லும் விளக்கம். சாத்தான் சொல்வதுபோன்று மோசேயின் உடலை புதைக்கும் பட்சத்தில் மக்கள் அவரைக் கடவுளாக வழிபடத் தொடங்கிவிடுவார்கள். அதுவே மிகப்பெரிய பாவம் ஆகிவிடும் என்பதற்காகத்தான் மிக்கேல் சாத்தானைக் கடிந்துகொள்கிறார்.

திருவெளிப்பாடு நூலில் மிக்கேல் சாத்தானோடு போரிட்டு வெல்வதைக் குறித்து வாசிக்கின்றோம். ஒரு சமயம் விண்ணகத்தில் கடுமையான போர் மூழ அந்தப் போரில் ஒரு பக்கம் அரக்கப் பாம்பும் (அலகை) அதன் தூதுவர்களும் இன்னொரு பக்கம் தலைமைத் தூதரான தூய மிக்கேலும் அதன் தூதுவர்களும் நின்று போரிட்டார்கள். மிக்கேல் அதிதூதரோடு போரிட்ட இந்த அலகை வேறு யாரும் கிடையாது தொடக்கத்தில் கடவுளை எதிர்த்து நின்ற லூசிபர் என்ற சாத்தான்தான். அப்படிப்பட்ட அலகைதான் இங்கே மிக்கேலுக்கும் அதன் தூதர்களுக்கும் எதிராக நின்றது. இரு தரப்புக்கும் இடையே கடுமையாக நடைபெற்ற அந்தப் போரில் இறுதியில் மிக்கேலும் அதன் தூதர்களுமே வென்றார்கள். இதனால் அலகையும் அதன் தூதர்களும் விண்ணகத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டார்கள். அவர்களுக்கு விண்ணகத்தில் இடம் இல்லாது போனது (திவெ 12: 7-9)

மிக்கேல் அதிதூதருக்கு விழா எடுத்தும் கொண்டாடும் வழக்கம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. 404 ஆம் ஆண்டில் சிபான்றோ என்ற இடத்தில் அதிதூதர் மிக்கேல் காட்சி கொடுத்தார். அந்த இடத்தில் மக்கள் ஒரு கெபி கட்டி வழிபட்டு வந்தார்கள். இந்த நேரத்தில் எதிரி நாட்டவர் சிபான்றோவின் மீது எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஆயர் அதிதூதர் மிக்கேலிடம் மன்றாட, மிக்கேல் அதிதூதர் அவரிடம், "நீங்கள் எதைக் குறித்தும் கவலைகொள்ளவேண்டாம், நாளைய நாளில் எதிரி நாட்டினர் இங்கு வரும்போது அவர்கள் திக்குத் தெரியாமல் ஓடுவார்கள்" என்று வாக்குறுதி கொடுத்தார். அதேபோன்று அடுத்த நாள் எதிரி நாட்டவர் சிபான்றோவின் மீது படையெடுத்து வந்தபோது பெரும் காற்றும் இடியும் மின்னலும் வெட்டி, அவர்கள் திசை தெரியாமல் ஓடிப்போனார்கள். அன்றிலிருந்தே மக்கள் மிக்கேல் அதிதூதரை தங்களுடைய பாதுகாவலராகக் கொண்டு வழிபட்டு வந்தார்கள்.

மிக்கேல் அதிதூதர் தொடக்கத்திலிருந்தே திருச்சபையின் பாதுகாவலராக இருந்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் அவர் சாத்தானை எதிர்த்து போரிடுபவராகவும், சாவிலிருந்து ஆன்மாக்களை விடுவிப்பவராகவும், வெற்றிவீரராகவும், இறுதித்தீர்ப்பின்போது மானிட மகனோடு உடன் வருபவராகவும் இருக்கின்றார்.

கபிரியேல்

அதிதூதர்களில் இரண்டாம் ஆளாகிய கபிரியேல் என்பதற்கு ஆண்டவரின் ஆற்றல் என்பது அர்த்தமாகும். கபிரியேல் தூதரைக் குறித்து இறைவாக்கினர் தானியேல் புத்தகத்திலும் லூக்கா நற்செய்தியிலும் வாசிக்கின்றோம். தானியேல் புத்தகத்தில் கபிரியேல் தூதர் தானியேலுக்குத் தோன்றி அவர் கண்ட காட்சியின் உட்பொருளை விளக்கிக்கூறுகின்றார் (தானி 9:21). லூக்கா நற்செய்தியில் சக்கரியாவிற்கும், மரியாவிற்கும் தோன்றி முறையே திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் இயேசுவின் பிறப்பையும் குறித்து எடுத்துச் சொல்கிறார். கபிரியல் தூதர் ஆண்டவரின் நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை செய்வதால், அவர் தொலை தொடர்புச் சாதனங்களுக்குப் பாதுகாவலராக இருக்கின்றார்.

ரபேல்

மூன்றாம் அதிதூதரான ரபேல் என்பதற்கு ஆண்டவர் குணப்படுத்துகிறார் என்று அர்த்தமாகும். இவரைக் குறித்து நாம் தோபித்து புத்தகம் முழுவதும் வாசிக்கின்றோம். மிதியா நோக்கிய பயணத்தில் தோபித்தோடு ஒரு வழிபோக்கரைப் போன்று பயணித்து, கொடிய மீனிடமிருந்து அவரைக் காப்பாற்றி, தோபித்து மணந்துகொள்ள இருந்த சாராவிடமிருந்து தீய ஆவியை விரட்டி, இறுதியாக தோபித்துவின் தந்தை தொபியாசுகு பார்வை கொடுக்கிறார் இந்த ரபேல் அதிதூதர். தனக்குப் பணிக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட்டு, ரபேல் அதிதூதர் அவர்களிடம், "நான் இரபேல்!, ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வான தூதர்களுள் ஒருவர்" என்று தன்னை வெளிப்படுத்துகிறார் (தோபி 12:15)

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


தீமைக்கெதிரான போராட்டம்

தென்காசியில் உள்ள தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நடைபெற்றதாக பாரம்பரியாகச் சொல்லப்படும் நிகழ்வு. ஒரு சமயம் தூய மிக்கேல் அதிதூதரின் திருவுருவப் பவனியின்போது நாத்திகர் பலர் இழிவான காரியங்களைச் செய்தார்கள். அன்றிரவே அவர்கள் கொள்ளை நோயால் தாக்கப்பட்டு இறந்துபோனார்கள். அதனால் நிறையப் பெண்கள் தங்களுடைய தாலிகளை இழந்து கைம்பெண்கள் ஆனார்கள். அப்பெண்களின் தாலி ஒரு நாழி அளவு பிடித்தது. இதைப் பார்த்து பயந்துபோன நாத்திகர்கள் தூய மிக்கேல் அதிதூதரிடம் மன்னிப்புக் கோரி, ஆத்திகர்கள் ஆனார்கள். இப்படி நிறையப் பெண்களின் தாலி அறுத்ததால் தூய மிக்கேல் அதிதூதரை நாழி அளவு தாலி அறுத்த தூய மிக்கேல் அதிதூதரே எனவும், நாத்தினரும் ஆத்திகராக மாறி, கடவுளை வழிபட்டதால் தூய அதிதூதர் கோவில் சர்வேசுவரன் கோவில் என இன்றளவும் அழைக்கப்படுகின்றது.

அதிதூதர்(கள்) எப்போதும் தீமைக்கெதிரான போராட்டத்தில் நமக்கு முன்னின்று போராடுபவராக (களாக) இருக்கின்றார்(கள்) என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று. அவர்களது விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவர்களைப் போன்று தீமையை எதிர்த்து போரிடுபவர்களாக இருக்கவேண்டும் என்பது இவ்விழா நமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கின்றது.

நாம் வாழும் இந்த சமுதாயத்தில் எத்தனையோ தீமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. லஞ்சம், ஊழல், சாதி, வன்முறை, அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு போன்றே பல்வேறு தீமைகளை நாம் துணிவோடு எதிர்த்துப் போராடி, நாம் வாழும் இந்த பூமியில் இறைவனின் ஆட்சியை இந்த மண்ணில் மலரச் செய்யும்போது உண்மையிலே இவ்விழாவைக் கொண்டாடுவதில் முழுமையான அர்த்தம் இருக்கின்றது. ஆகவே, அதிதூதர்களின் விழா நாளில் அவர்களைப் போன்று கடவுளுக்குத் தொண்டு செய்து வாழ்வோம், தீமைக்கெதிரான போராடத்தில் எப்போப்தும் நாம் இறைவன் பக்கம் நின்று போராடி வெற்றிகொள்வோம்; இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

================================================================================

 அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியல் ரஃபேல் திருவிழா

"Angels" என்ற புத்தகத்தில் சொல்லப்படக்கூடிய நிகழ்ச்சி இது. 1998 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்துவந்த ஜெஸ்சி, சாரா மற்றும் மரியா என்ற மூன்று இளம்பெண்களும் விடுமுறைதினம் ஒன்றில் தங்களுக்கு முன்பு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் ஒருவரைச் சந்திக்க வாகனத்தில் அதிகாலையிலே புறப்பட்டனர்.

போகிற வழியில் கல்லறை ஒன்று இருந்தது. அதிலே சில தினங்களுக்கு முன்புதான் ஜெஸ்சியின் சகோதரன் இறந்து அடக்கம் செய்யப்பட்டிருந்தான். மற்ற இருவரையும் காரிலே இருக்கச் சொல்லிவிட்டு, ஜெஸ்சி மட்டும் கல்லறைக்குச் சென்று, தன் சகோதரன் கல்லறை முன்பாக நின்று ஜெபித்துவிட்டுத் திரும்பினாள். அவள் காரில் ஏறியதும் மீண்டும் அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்தார்கள். ஆனால் பயணம் தொடங்கிய சிறிது நேரத்திற்குள் கார் ஒரு சிறுகுழியில் இறங்கிவிட்டது. வண்டியை எவ்வளவோ முன்னும், பின்னும் தள்ளிப்பார்த்தும், அவர்களால் வண்டியை வெளியே கொண்டுவர முடியவில்லை. அடர்ந்த காடுவேறு அது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். மூன்று பேருமே, "யாராவது இங்கே இருந்தால் எங்களுக்கு உதவுங்கள்" என்று சத்தமாகக் கத்திப் பார்த்தார்கள்.

அப்போது ஒரு மனிதர் வெண்ணிற ஆடையில் அங்கு வந்தார். அவரிடத்தில் தங்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்ல அவர் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிவிட்டு, கார் சாவியை வாங்கிகொண்டு, உள்ளே ஏறி, வண்டியை ஒரு அழுத்து அழுத்தினார். அடுத்த நொடியில் வாகனம் வெளியே வந்தது. அவர்களுக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. எவ்வளவு நேரம் முயன்றும் முடியாததை, இவர் ஒரே நொடியில் செய்துவிட்டாரே என்று அவருக்கு நன்றி சொன்னார்கள். அவரும் பதிலுக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து மாயமாய் மறைந்துபோனார். அவர் எந்த வழியில் போனார் என்ற காலடித் தடம்கூட இல்லாதது கண்டு, அவர்கள் இன்னும் மலைத்துபோய், வானதூதர் ஒருவர் தான் நம்மைக் காப்பாற்றி இருக்குகிறார் என்று நம்பி, தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

இன்று திருச்சபையானது விண்ணக அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல், ரஃபேல் ஆகியோரின் பெருவிழாவைக் கொண்டாடுகிறது. தூதர்கள் நமக்கு எப்போதும் இறைவனின் திருமுன் நின்றுகொண்டு நமக்காக பரிந்துபேசுபவர்கள்; நமக்கு என்றும் துணையாய் இருப்பவர்கள்; துன்பத்திலிருந்து காப்பவர்கள். மேலும் கடவுள் படைத்தவைகளில் சிறந்தவை எனப் போற்றப்படுவோர் வானதூதரும், மனிதரும் மட்டும்தான்.
விவிலியத்தில் தொடக்கம் முதல் இறுதிவரை வானதூதர்களின் பணிகளை பல இடங்களில் நாம் காணலாம். இன்றைய நாளில் சிறப்பாக இறைவன் திருமுன் நின்று பணிபுரியும் ஏழு வானதூதர்களில் முதன்மையான மூன்று தூதர்களைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.

முதலாவதாக மிக்கேல் அதிதூதர்: மிக்கேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுளுக்கு நிகர் யார்?" என்பது பொருள். இறைவனுக்கு எதிராக சிந்தித்த லூசிபரையும், அவன் தோழர்களையும் அதிதூதர் மிக்கேல் நல்லதூதர்களை தன்னோடு இணைத்துக்கொண்டு அவர்களை நரகத்தில் வீழ்த்தினார். அதனால் அவர் தலைமை தூதர் ஆனார். இவரைக் குறித்து தானியேல் நூலிலும், திருவெளிப்பாடு நூலிலும் படிக்கின்றோம். இவரே நம் திருத்தந்தையின் (போப்பாண்டவர்) காவல் தூதரும், நற்கருணையின் பாதுகாவலரும் ஆவார்.

இரண்டாவதாக கபிரியேல் அதிதூதர்: கபிரியேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுளின் ஆற்றல்" என்பது பொருள். ஆறுதல் தரும் செய்திகளை விண்ணிலிருந்து மண்ணகத்திற்கு கொண்டுவருபவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை சக்கரியாவுக்கும், இறைமகன் இயேசுவின் பிறப்பை அன்னை மரியாளுக்கும் அறிவித்தவர். அதனால் இவர் நற்செய்தியின் தூதர் எனவும் அழைக்கப்படுகிறார்.

மூன்றாவதாக ரஃபேல் அதிதூதர்: ரஃபேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு "கடவுள் குணமளிக்கிறார்" என்பது பொருள். இவரே நோயாளிகளுக்கும், பயணிகளுக்குமான பாதுகாவலராக இருக்கிறார். இவரைக் குறித்து தோபித்து நூல் முழுமைக்கும் வாசிக்கின்றோம். பெரிய தோபித்துவுக்கு பார்வை கிடைக்கவும், அவருடைய மகனுக்கு வழித்துணையாக இருந்து நல்ல மனைவி கிடைக்கக் காரணமாக இருந்தவர் இவரே.

ஆதலால் இறைவனின் திருமுன் நின்று அவருக்குப் பணிபுரிந்தும், நமக்கும் தீமையை வெல்வதற்கான ஆற்றலையும், ஆறுதல் செய்தியையும், குணத்தையும் தரும் இத்தூதர்களைப் போன்று நாமும் இறைவனுக்கு மட்டுமே பணிபுரிந்து வாழ்வோம். இறையருள் பெறுவோம்.

"நீ செல்லும் இடமெல்லாம் உன்னைக் காக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார். (திபா 91:11).

(அருட்தந்தை: மரிய அந்தோனிராஜ்)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிதூதர்கள்

அதற்கு இயேசு, 'இதைவிட பெரியவற்றைக் காண்பீர். வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்று நத்தனியேலிடம் கூறினார்.
(யோவான் 1:51)

இன்று (செப்டம்பர் 29) அதிதூதர்களான மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஆங்கிலத்தில் இந்தத் தூதர்களின் முதல் எழுத்தைச் சுருக்கி, எம்.ஜி.ஆர். திருநாள் என்றும் இதை அழைப்பர்.

வானதூதர்கள் பற்றிய நம்பிக்கை எப்படி உருவானது?

முதல் ஏற்பாட்டு நூல்களில் விடுதலைப்பயணம், நீதித்தலைவர்கள், தானியேல் போன்ற நூல்களில் அடிக்கடி வரும் ஒரு நபர் 'மலாக் எலோகிம்' (கடவுளின் தூதர்). ஆனால் 'மலாக் எலோகிம்' வானதூதர் அல்ல. முதல் ஏற்பாட்டு நூலின் ஆசிரியர்கள் கடவுள் என்ற பெயரை பயன்படுத்தாமல் சில நேரங்களில் 'கடவுளின் பிரசன்னம்' மற்றும் 'கடவுளின் தூதர்' என்னும் வார்த்தைகளை மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தினர்.

முதன்முதலாக முதல் ஏற்பாட்டில் வானதூதர் என்ற சிந்தனை இஸ்ரயேல் மக்களின் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின்பே வந்தது. யூப்ரடிஸ், டைக்ரீஸ் நதியோரங்களில் வாழ்ந்த மக்கள் கடவுள் நம்பிக்கையை விட கடவுளின் தூதர்கள் மேல் நம்பிக்கை வைத்தனர். இறக்கும் நம் முன்னோர் அனைவரும் கடவுளி;ன் தூதர்களாக மாறிவிடுகிறார்கள் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இந்தக் கடவுளின் தூதர்கள் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் இடையே தூது செல்பவர்கள்.

தூதர்கள் என்பவர்களின் தலைவர்களே அதிதூதர்கள்.

வானதூதர்களின் மேல் உள்ள நம்பிக்கை கிறித்தவ மதத்தில் மட்டுமல்ல, மத்திய கிழக்கில் பிறந்த அனைத்து மதங்களுமே வானதூதர்கள் இருப்பதாக நம்புகின்றன. கிறித்தவர்களுக்கு, அதுவும் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல் என்னும் மூன்று அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் 'ஆர்த்தடாக்ஸ்' எனப்படும் கிறித்தவர்கள் மிக்கேல், கபிரியேல், ரபேல், உரியேல், செயால்தியேல், யெகுதியேல், பராக்கியேல் மற்றும் யெராமியேல் என்னும் எட்டு அதிதூதர்கள் இருப்பதாக நம்புகிறார்கள்.

யூத மரபில் ஏழும், இசுலாமில் நான்கும், ஸோராஸ்டிரியத்தில் ஏழும் கடவுளின் அதிதூதர்களின் எண்ணிக்கை.

மிக்கேல் என்றால் 'மிக்கா ஏல்', அதாவது 'கடவுளுக்கு நிகர் யார்?' என்பது பொருள். பாரம்பரியமாக வலது கையில் ஒரு அம்பை வைத்து லூசிஃபர் என்னும் சாத்தானின் தலைவனை தன் காலடியில் போட்டிருப்பவராகவும், மற்றொரு கையில் சில நேரங்களில் தராசும், சில நேரங்களில் ஒலிவக் கிளையும் ஏந்தியவராகச் சித்தரிக்கப்படுகிறார். யாக்கோபு 1:9, தானியேல் 10:13, 12:1 மற்றும் திவெ 12:7 ஆகிய இடங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

கபிரியேல் என்றால் 'கபார் ஏல்', அதாவது 'கடவுளின் வல்லமை'. 'கடவுள் வல்லமையானவர்' என்றும் மொழிபெயர்க்கலாம். மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வரும் இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளில் சக்கரியாவுக்கு, மரியாவுக்கு, யோசேப்புக்கு மற்றும் வானதூதர்களுக்கு 'மங்கள வார்த்தை' சொல்பவர் இவரே.

ரபேல் என்றால் 'ரஃபா ஏல்', அதாவது 'கடவுள் குணமாக்குகிறார்' என்பது பொருள். தோபித்து நூலில் (3:17, 12:15) தோபியாவின் கண்ணுக்குப் பார்வை அளிப்பவராக, தோபித்தின் மனைவி சாராவைப் பிடித்திருந்த பேயை வெளியேற்றுபவராக வருகிறார். தோபித்தின் பயணத்தில் உடனிருப்பவர் இவரே.

நாம் அன்பு செய்யும் அனைவருமே நம்மைச் சுற்றியிருக்கும் தூதர்கள் தாம். நாம் முன்பின் பார்த்திராத கடவுளை நமக்குக் காட்டுபவர்கள் இவர்களே. இவர்களே நமக்கு கடவுளாகவும், கடவுளின் வல்லமையாகவும், குணமாக்குபவர்களாகவும் நம் அருகில் வருகிறார்கள்.

இறைவனுக்கும், மனிதருக்கும் இடைப்பட்டவர்கள் இவர்கள். இரண்டு இயல்புகளையும் உடையவர்கள் இவர்கள்.

கடவுளைப் போல காலத்தையும், இடத்தையும் கடந்து நின்றாலும், மனிதர்களைப் போல காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டவர்கள் இவர்கள்.

என்னைப் பொறுத்தவரையில் நம் குடும்பங்களில் அல்லது நம் நண்பர்கள் வட்டத்தில் இறந்த நம் முன்னோர்களும் காவல்தூதர்களே. இவர்கள் எந்நேரமும் நம்மைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். நாம் நம் அறையில் தனியாக இருந்தாலும், நெடுந்தூரம் பயணம் செய்தாலும் இவர்கள் அருகில் இருக்கிறார்கள்.

ஆக, அதிதூதர்கள் தரும் முதல் செய்தி 'உடனிருப்பு.'

நாம் தனிமையில் இல்லை. அவர்கள் என்றும் நம் உடனிருக்கிறார்கள்.

இரண்டாவது, நாமும் இந்த அதிதூதர்கள் போல பிறர்வாழ்வில் உடனிருக்க நம்மை அழைக்கிறார்கள்.

இன்று பல நேரங்களில் நமக்கு எல்லாம் இருப்பது போல இருக்கும். ஆனால், ஏதோ ஒரு தனிமை கன்னத்தில் அறைந்துகொண்டே இருக்கும். நான் தனிமையாக இருக்கிறேன் என புலம்புவதை விட்டு, அடுத்தவரும் அப்படித்தானே நினைத்துக் கொண்டிருப்பார் என அவரின் அருகில் சென்றால் நாமும் அதிதூதர்களே.

'கடவுளின் தூதர் ஏறுவதையும் இறங்குவதையும்' காட்சியில் காண்கிறார் யாக்கோபு (காண். தொடக்கநூல் 28:12).

தன் அண்ணன் ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமை மற்றும் தந்தையின் ஆசியைப் பெற்றுக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் யாக்கோபு பெத்தேலில் கனவு காண்கின்றார். அந்தக் கனவில்தான் இந்தக் காட்சியைக் காண்கிறார்.

'நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு திரும்பிவரச் செய்வேன்' என்று கடவுள் அவருக்கு வாக்குறுதி கொடுப்பதும் இக்காட்சியில்தான்.

ஆக, முதல் ஏற்பாட்டிலும் இரண்டாம் ஏற்பாட்டிலும் கடவுளின் தூதர்கள் பற்றிய செய்தி 'கடவுளின் உடனிருப்பை' நமக்கு உறுதி செய்கிறது.

இன்று ஒட்டுமொத்தமாக நம் எண்ணத்தில் குறைவுபடுவது இந்த உடனிருப்பு உணர்வே.

இதை இன்றைய திருநாள் நிறைவுசெய்வதாக.

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா