Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் டமியன் ✠(Saints Cosmas and Damian)
  Limage contient peut-tre : 2 personnes  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 26)
✠ புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் டமியன் ✠(Saints Cosmas and Damian)

 மறைசாட்சிகள் :(Martyrs)

பிறப்பு : கி.பி. சுமார் 3ம் நூற்றாண்டு
அரேபிய தீபகற்பம் (Arabia)

இறப்பு : கி.பி. 287
அயேகியா, சிரியாவின் ரோம பிராந்தியங்கள்
(Aegea, Roman province of Syria)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபைகள்
(Eastern Orthodox Churches)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்
(Oriental Orthodox Churches)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்
(Eastern Catholic Churches)

முக்கிய திருத்தலங்கள் :
மேட்ரிட் நகரிலுள்ள "எளிய கிளாரா" பள்ளி மற்றும் புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் டமியன் பசிலிக்கா, பிடோன்டோ, பரி, இத்தாலி
(Convent of the Poor Clares in Madrid, Basilica of Saints Cosmas and Damian in Bitonto, Bari, Italy)

நினைவுத் திருவிழா : செப்டம்பர் 26

பாதுகாவல் :
அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், குழந்தைகளின் பாதுகாவலர்கள், மருந்தாளுனர்கள், முடி வெட்டுபவர்கள், அனாதை இல்லங்கள், பகல்நேர பாதுகாப்பு மையங்கள், இனிப்பு தயாரிப்பாளர்கள், குடலிறக்கத்தால் அவதியுறுவோர், பிளேக் நோய்க்கு எதிராக.

புகழ் பெற்ற இரட்டைச் சகோதரர்களான புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் டமியன் இருவரும் மருத்துவர்களும், ஆதி கிறிஸ்தவ மறை சாட்சிகளுமாவர். அறிவியலும், மருத்துவமும் பயின்ற இருவரும் துறைமுக நகரான "எஜியா" (Aegeae) மற்றும் சிரியாவின் ரோம பிராந்தியங்களில் மருத்துவப் பணியாற்றினர். இவர்கள் பணி செய்தபோதும், மக்களை குணப்படுத்தியபோதும், சிறிதளவு பணம் பெறாமல் பணியாற்றினர். இதனால் இவர்கள் காசுபணம் இல்லாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதன் காரணமாகவே மக்கள் பலர் கிறிஸ்தவ மறைக்கு மனம் மாறி வந்தனர் என்று கூறப்படுகிறது.

இவர்கள் மக்களிடையே சிறப்பான பணியாற்றினர். அம்மக்களிடையே வாழ்வதில் இவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இவர்கள் இருவரும் ஆற்றிய சேவையினால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தனர்.

இவர்களின் தியாகங்கள், புனித வாழ்க்கை, குணமளிக்கும் சக்தி ஆகியவற்றினால் பலர் கிறிஸ்தவர்கள் ஆனார்கள் என்பர். பேரரசன் "டையோக்ளேஷியன்" (Diocletian) கிறிஸ்தவர்களை துன்புறுத்தியபோது இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, தலைவெட்டப்பட்டு இறந்தனர்.

இவர்களின் பெயரால் ரோம் நகரில் பல ஆலயங்கள் உள்ளன. திருச்சபையில் இவர்களின் பெயரால் பல மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன. மிகத் தொன்மை வாய்ந்த நினைவுக் குறிப்புகளில், இவர்களின் கல்லறை சிரியாவில் சைர் என்னுமிடத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் டமியன் பெயரால் கிழக்கிலும் மேற்கிலும் பல ஆலயங்கள் உள்ளன. இப்புனிதர்களின் பக்தி அங்கிருந்து ரோம் வந்தடைந்தது. பின்னர்தான் திருச்சபை முழுவதும் பரவியது என்றும் கூறப்படுகின்றது


================================================================================

 "இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணையின் முன் நிற்கக் கண்டேன். வேறொரு நூலும் திறந்து வைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல். இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது" (திவெ 20:12).

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூருகின்ற கோஸ்மாஸ் மற்றும் தமியான் ஆகிய இருவரும் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் அரேபியாவில் பிறந்தவர்கள். இவர்கள் இருவரும் இரட்டையர்கள், இரண்டுபேருமே கைதேர்ந்த மருத்துவர்கள்.

இருவரும் தாங்கள் இருந்த பகுதியில் இருந்த ஏழை எளியவருக்கு, நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சேவையினைச் செய்து வந்தார்கள். இதனால் இவர்கள் இவருடைய பேரும் புகழும் எங்கும் பரவியது.

அந்நாட்களில் உரோமையை டையோக்ளசியன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் தொடக்கத்தில் கிறிஸ்தவர்களிடத்தில் நன்றாகத்தான் இருந்தான். ஆனால் நிக்கோமீதியா என்ற அரண்மனை யாரோ ஒருவரால் தீக்கிரையாக்கப்பட்டபோது, அது கிறிஸ்தவர்களால்தான் தீக்கிரையாக்கப்பட்டது என நினைத்துக்கொண்டு, கிறிஸ்தவர்களைக் கொன்றொழிக்கத் தொடங்கினான்.

இந்த நேரத்தில் இலவசமாக மருத்துவச் சேவைகளைச் செய்தும் ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்தும் வாழ்ந்து வந்த கோஸ்மாஸ் மற்றும் தமியானைப் பிடித்து, "நீங்கள் இருவரும் உரோமைக் கடவுளை வணங்கி, அவருக்குத் தூபம் காட்டினால், உயிர் பிழைப்பீர்கள், இல்லையென்றால், கொல்லப்படுவீர்கள்" என்று மிரட்டினான். சகோதர்கள் இருவரும் எதற்கும் பயப்படாமல் மிக உறுதியாக இருந்தார்கள். இதனால் அவன் சகோதரர்கள் இருவரையும் பலவாறாக சித்ரவதை செய்தான். எதிலும் அவர்களுடைய உயிர் போகவே இல்லை, கடைசியில் அவன் அவர்களைத் தலைவெட்டிக் கொன்றுபோட்டான். இவ்வாறு கோஸ்மாஸ் மற்றும் தமியான் என்ற சகோதரர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவின்மீது கொண்ட விசுவாசத்திற்காக தங்களுடைய இன்னுயிரைத் துறந்தார்கள். அவர்கள் இறந்த ஆண்டு 303.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய கோஸ்மாஸ் மற்றும் தமியான் ஆகியோருடைய நினைவுநாளை கொண்டாடும் நாம், அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. இறைவனிடமிருந்து இலவசமாகப் பெற்றுக்கொண்டதை, மக்களுக்கு இலவசமாக வழங்குவோம்!

தூய கோஸ்மாஸ் மற்றும் தமியான் ஆகிய இருவரும் இறைவனிடமிருந்து இலவசமாக பெற்ற கொடையினை மக்களுக்கு இலவசமாகவே வழங்கினார்கள். அவர்களைப் போன்று நாம், இறைவன் நமக்குக் கொடுத்திருக்கின்ற கொடையினை, திறமையினைக் கொண்டு மக்களுக்கு (இலவசமாக) சேவை செய்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு சேவை செய்யும் மனப்பான்மையே குறைந்துவரும் சூழலில், இலவசமாக யார் சேவை செய்வார்கள்? என கேள்வி எழலாம்.

இந்த இடத்தில், 2017 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, லண்டனில் சிறந்த மனிதநேய ஆசியர் என்ற விருதுபெற்ற ஜாக் பிரெகர் என்பவரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஆசியர் அல்லாத ஒருவர் இந்த விருதினைப் பெறுவது இதுவே முதல்முறை. இப்படி இருக்கும்போது, இவர் இந்த விருதினைப் பெறுகின்ற அளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டார் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மருத்துவரான ஜாக் பிரெகர், புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் படித்து, மருத்துவராகி கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தார். அப்படியிருந்தும் அவருக்கு மனநிறைவு இல்லை. எனவே ஏழை எளிய மக்கள் அதிகமாக வாழும் பகுதிக்குச் சென்று, அங்கு மருத்துவ சேவை செய்யலாம் என்று தீர்மானித்து, அதன்படி மேற்கு வங்கத்திற்கு வந்து, அங்குள்ள சேரிப்பகுதிகளில், மக்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவைகளை செய்யத் தொடங்கினார். இப்படிப்பட்ட பணியை அவர் கடந்த 38 ஆண்டுகளாகச் செய்துவருகின்றார். மக்கள் இவர் செய்துவருகின்ற மருத்துவச் சேவையினைப் பார்த்துவிட்டு இவரை "ஏழைகளின் மருத்துவர்" என்றே அழைத்து வருகின்றனர்.

இப்படி எங்கோ பிறந்து, இங்கே வந்து மருத்துவச் சேவையை செய்யும் ஜாக் பிரெகரின் சேவையைப் பார்த்துவிட்டுத்தான் அவருக்கு "சிறந்த மனிதநேய ஆசியர்" என்ற விருதானது கொடுக்கப்பட்டது.

இலவசமாகப் பெற்றுக்கொண்டதை இலவசமாக மக்களுக்குத் தருகின்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம்தான் அவரை கண்டுணரவில்லை. ஆகவே, தூய கோஸ்மாஸ் மற்றும் தமியானின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஆண்டவரிடமிருந்து பெற்ற அருளை, கொடையை மற்றவர்களுக்கும் வழங்குவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா