✠ அதிதூய வியாகுல அன்னை ✠(Our Lady of
Sorrows) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்
/
Sep
15) |
✠ அதிதூய வியாகுல அன்னை ✠(Our Lady of
Sorrows)
ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
திருவிழா நாள் : செப்டம்பர் 15
பாதுகாவல் :
ஸ்லோவாக்கியா (Slovakia), ஹங்கேரி (Hungary), போலந்து (Poland),
மால்ட்டா (Malta), மரியாளின் ஏழு வியாகுலங்கள் (Seven Sorrows
of Mary), மிசிசிப்பி (Mississippi), ரோண்டா (Ronda), செபு
(Cebu), டனவன் பஸ்டோஸ் (Tanawan Bustos), புலாகன் (Bulacan)
வியாகுல அன்னை என்பது கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும்
பெயர்களில் ஒன்றாகும். மரியாள் தமது வாழ்வில் பட்ட துயரங்களின்
நினைவாக இறைவனின் அன்னைக்கு இப்பெயர் வழங்கப்படுகின்றது.
வியாகுல அன்னையாக கத்தோலிக்க கலையில் மரியாள் அதிகம்
சித்தரிக்கப்படுகிறார்.
மரியாளின் ஏழு வியாகுலங்களை தியானிக்கும் பழக்கம் கத்தோலிக்க
திருச்சபையில் உள்ளது. பொதுவாக, கத்தோலிக்க கலையில் வியாகுல
அன்னையை துயரத்துடனும், கண்ணீருடனும் காட்சிப்படுத்துவர். ஏழு
வாள் அவரது இதயத்தை ஊடுருவி இரத்தம் கொட்டுவது போலவும்
சித்தரிப்பது வழக்கம். சிமியோனின் (Simeon) இறைவாக்கின்
அடிப்படையில் இப்பக்தி முயற்சி துவங்கியது. வியாகுல அன்னை
ஜெபமாலை, வியாகுல அன்னை மன்றாட்டுமாலை முதலியன இப்பக்தி
முயற்சிகளில் அடங்கும்.
"தூய மரியாளின் துயரங்கள்" என்னும் பெயரில் மரியாளுக்கு
கத்தோலிக்க திருச்சபையில் பிரதி செப்டம்பர் மாதம் 15ம் நாள்
விழா எடுக்கப்படுகின்றது.
மரியாளின் ஏழு துயரங்கள்:
இவை துயர மறைபொருள்களிலிருந்து வேறுபட்டதாகும்.
1. சிமியோனின் இறைவாக்கு:
மரியாளும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரும்
குழந்தை இயேசுவை எருசலேம் திருக்கோவிலில் காணிக்கையாக
ஒப்புக்கொடுக்கச் சென்றபோது, அங்கிருந்த சிமியோன் குழந்தை
இயேசுவைக் கையில் ஏந்தி, "இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள்
பலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்;
எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். இவ்வாறு பலருடைய
எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவிப்
பாயும்" (லூக்கா 2:34-35) என்று மரியாளிடம் சொல்லுகிறார்.
சிமியோனின் இவ்வார்த்தைகள் மரியாளின் உள்ளத்தில் மிகப்பெரிய
வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், இயேசுவின் தாயாக
இருப்பதால் துன்பங்கள் வரலாம் என மரியாளுக்கு
தெரிந்திருக்கும். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக வரும் என்று
அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
(லூக்கா 2:25-35)
2. குழந்தையைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடுதல்:
ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த கொடுங்கோலன் ஏரோது,
குழந்தை இயேசுவைக் கொல்வதற்குக் கட்டளையிடுகின்றான். இதனை
கனவின் மூலமாகத் தெரிந்துகொண்ட சூசையப்பர், மரியாளையும்
குழந்தை இயேசுவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார்.
பெத்லகேமிலிருந்து எகிப்து 600 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.
அவ்வளவு தூரத்தையும் பயத்தோடும், வேதனையோடும் கழித்த
மரியாளுக்கு இது ஒரு வியாகுலம்தான்.
(மத்தேயு 2:13-14)
3. சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போதல்:
தூய அல்போன்ஸ் லிகோரி கூறுவார், "மரியாள் அடைந்த
வியாகுலங்களில் மிகவும் கொடியது இயேசு எருசலேம் திருக்கோவிலில்
காணாமல் போனதுதான். ஏனென்றால், மற்ற வியாகுலங்களில் இயேசு
மரியாளோடு உடன் இருப்பார். இதில் இயேசு மரியாளோடு இல்லை. தான்
ஏதாவது தவறு செய்துவிட்டோமோ, அதனால்தான் இயேசு தன்னைவிட்டுப்
பிரிந்துபோய்விட்டாரோ என மரியாள் நினைத்திருக்கக் கூடும். அது
அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்". தூய லிகோரி
சொன்னது முற்றிலும் உண்மை. இயேசு கோவிலில் காணாமல் போனது
மரியாளுக்கு மிகப்பெரிய வியாகுலம்தான்.
(லூக்கா 2:43- 47)
4. இயேசு சிலுவை சுமந்து செல்லுதல்:
கள்வர்களுக்கும், நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும்
கொடுக்கப்படும் சிலுவைச் சாவு, ஒரு பாவமும் அறியாத தன்னுடைய
மகனுக்குக் கொடுக்கப்பட்டதை நினைத்து மரியாள் மிகுந்த வேதனை
அடைந்திருக்கலாம். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக
அமைந்திருக்கும்.
(லூக்கா 23:27)
5. சிலுவையின் அடியில் துணை நின்றது:
ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்
தன் மகன் இயேசுவைப் பார்ப்பதற்கு மரியாளுக்கு வேதனையிலும்
வேதனையாக இருந்திருக்கும். மூன்று ஆண்டுகள் உடனிருந்து இயேசு
செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பார்த்த சீடர்கள்
ஓடிப்போனது, இயேசுவிடமிருந்து எவ்வளவோ நன்மைகளையும்
நலன்களையும் பெற்றுக்கொண்ட மக்கள் அவரைக் கைநெகிழ்ந்தது,
இவற்றோடு சேர்த்து, தன் மகன் இப்படி வானத்திற்கும் பூமிக்கும்
இடையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறாரே என்று மரியாள்
மிகுந்த வேதனை அடைந்திருப்பார். அது அவருக்கு பெரிய வியாகுலமாக
இருந்திருக்கும்.
(யோவான் 19:41,42)
6. இறந்த இயேசுவின் உடலை மடியில் கிடத்திவைத்தல்:
எருசலேம் திருக்கோவிலில் தன்னுடைய மகனைக் காணிக்கையாக ஒப்புக்
கொடுத்தபோது சிமியோன் சொன்ன உமது உள்ளத்தையும் ஒரு வாள்
ஊடுருவும் என்ற வாக்கு இங்கே நிறைவேறி விட்டதை நினைத்து
மரியாள் பெரிதும் வேதனைப் பட்டிருக்கக்கூடும். இறந்த மகனின்
உடலை இப்படியா சுமந்திருப்பது என்று மரியாளுக்கு இந்நிகழ்வு
பெரிய வியாகுலமாகவே இருந்திருக்கும்.
(யோவான் 19: 40)
7. இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தல்:
இறந்த பெற்றோர்களை பிள்ளை அடக்கம் செய்யும் நிலைமாறி, இங்கே
இறந்த தன்னுடைய மகனை தாயாகிய மரியாள் அடக்கம் செய்கிறார்.
உலகத்தில் இதைவிட கொடுமை என்ன இருந்திருக்கும்? மரியாள் தனக்கு
ஏற்பட்ட இப்படிப்பட்ட ஒரு வியாகுலத்தை பொறுமையோடு
ஏற்றுக்கொள்கிறார்; எல்லாவற்றையும் இறைத் திருவுளமென
தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறார். மரியாளைப் பொறுத்தளவில்
பாடுகள்தான் பரலோகத்திற்கான நுழைவாயில் என்பது ஆழமான
விசுவாசமாக இருந்திருக்கும். அதானால் அவர் எல்லாத்
துக்கங்களையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்.
(யோவான் 19: 41-42)
இவை ஒவ்வொன்றின் நினைவாக தினமும், கிறிஸ்து கற்பித்த "பரலோக
மந்திரம்" (Our Father) ஒருமுறையும், மற்றும் "அருள்நிறைந்த"
(Hail Mary) "மங்கள மந்திரம்" ஏழு முறையும் செபிப்பது
கத்தோலிக்கரிடையே வழக்கமாகும்.
|
|
|