Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அதிதூய மரியாளின் புனிதப் பெயர் ✠
(Most Holy Name of the Blessed Virgin Mary)
  Limage contient peut-tre : 2 personnes, texte  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 12)
✠ அதிதூய மரியாளின் புனிதப் பெயர் ✠
   (Most Holy Name of the Blessed Virgin Mary)

 துருக்கி நாட்டுப் படையானது கிறிஸ்தவ நாடுகளின் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வந்து போர்தொடுக்கலாம் என்றதொரு அபாயச் சூழல் நிலவியது. இதை அறிந்த போலந்து நாட்டு மன்னன் ஜான் சொபீஸ்கி (John Sobikeski) என்பவர் தன்னுடைய படைகளைத் போருக்குத் தயார்படுத்தினார். பின்னர் தன்னுடைய படையை மரியாவின் புனித பெயருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபித்து, போருக்குச் சென்றார். 1683ம் ஆண்டு, செப்டம்பர் 12ம் நாள், வியன்னாவில் இரு நாட்டுப் படைவீரர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஜான் சொபீஸ்கியின் தலைமையிலான கிறிஸ்தவப் படையானது, துருக்கி நாட்டுப் படையை வெற்றிகொண்டது. அன்றிலிருந்தே மரியாளின் புனித பெயருக்கு வணக்கம் செலுத்தும் முறையானது வழக்கில் வந்தது.

வரலாற்றுப் பின்னணி:
மரியாளின் புனித பெயருக்கு வணக்கம் செலுத்தும் முறை 15ம் நூற்றாண்டிலிருந்தே வழக்கில் இருந்து வந்திருக்கிறது. ஆனால் மேலே சொல்லபப்ட்ட நிகழ்விற்குப் பின்னர் இவ்வழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகத் தொடங்கியது. ஜான் சொபீஸ்கி தலைமையிலான கிறிஸ்தவப் படை துருக்கி நாட்டுப் படையை வெற்றிகொண்ட பிறகு, அப்போது திருத்தந்தையாக இருந்த பதினோறாம் இன்னொசென்ட் என்பவர் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 12ம் நாள், மரியாளின் புனித பெயருக்கு விழா எடுத்துக் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை அப்படியே கொண்டாடப்பட்டு வருகின்றது.

மரியாளின் புனித பெயருக்கு இருபதுக்கும் மேற்ப்பட்ட அர்த்தங்கள் இருப்பதாக அறிஞர்கள் பெருமக்கள் சொல்வார்கள். அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் நம்முடைய கவனத்தில் எடுத்துக்கொண்டு சிந்தித்துப் பார்ப்போம். விவிலிய அறிஞரான எரோனிமுஸ் என்பவர் மரியாள் என்றால் கடலின் ஒரு துளி (Drop of the Sea) என்று சொல்வார். அது எப்படியென்றால் கடல் என்பது கடவுளோடு உருவகப்படுத்தப்படுகின்றது. கடல் கடவுளாக உருவகப்படுத்தப்படும் பட்சத்தில் அதில் ஒரு துளி மரியாள் என்று சுட்டிக்காட்டுவார். மேலும் அவர் மரியாள் என்பதற்கு இறைவி என்றும் சுட்டிக்காட்டுவார். இன்னும் ஒருசிலர் மரியாள் என்பதற்கு அழகு நிறைந்தவள், அன்பு வடிவானவள், உயர்த்தப்பட்டவள் என்றும் பொருள் கூறுவர்.

விவிலியத்தில் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயருக்கு எவ்வளவு வல்லமை இருக்கின்றது என்பதை பல இடங்களில் வாசிக்கின்றோம். "நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்" (யோவா 16:23) என்று இயேசு கிறிஸ்து தன் பெயரால் நடக்கும் வல்ல செயல்களைக் குறித்துப் பேசுகின்றார். "வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசுவின் பெயரால் எழுந்து நடந்திடும்" (திப 3:6) என்று தலைமைத் திருத்தூதரான தூய பேதுரு கால் ஊனமுற்றவரிடம் சொல்ல, அவர் எழுந்து நடப்பதைப் படிக்கின்றோம். தூய பவுல் இயேசுவின் திருப்பெயர் எத்துணை மகிமை வாய்ந்தது என்பதைக் குறித்துப் பேசுகின்றார். "எனவே கடவுளும் அவரை (இயேசுவை) மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்" என்று கூறுகின்றார் (பிலி 2: 9-10) இவ்வாறு இயேசுவின் திருப்பெயரால் ஆகும் வல்ல செயல்களை, அதனுடைய மகிமையை நாம் அறிந்துகொள்கிறோம்.

இயேசுவின் திருப்பெயரைப் போன்றே, மரியாளின் புனிதப் பெயருக்கும் வல்லமை இருக்கின்றது என்பதை வரலாறு நமக்கு எடுத்துக்கூருகின்றது. தூய பிரிஜித்துக்கு மரியாள் கொடுத்த காட்சியில், அலகையின் கூட்டம் மரியாளின் பெயரை யாராவது உச்சரிக்கக் கேட்டவுடன் மிரண்டு ஓடுவதையும், வானதூதர்கள் விரைந்து வந்து உதவுவதையும் படித்தறிக்கின்றோம். தூய அம்ரோசியார், "மரியாளின் இனிய நாமம் எனது உள்ளத்தின் ஆழத்தில் மீட்பின் தைலமாக இருக்கின்றது" என்று சுட்டிக்காட்டுவார். இன்னும் இது போன்று தூயவர்களின் வார்த்தைகளைக் கொண்டு பார்க்கும்போது மரியாளின் பெயருக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

'இனிய உன் நாமம் ஒதிடல் தினமே' என்று மரியாளுக்குப் பாடல் பாடும் நாம், அவருடைய புனித பெயரை நம்பிக்கையோடு சொல்லுகின்றபோது அதனால் வாழ்வு பெறுவோம் என்பது உறுதியான செய்தி.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்:
மரியாளின் திருப்பெயருக்கு விழா எடுக்கும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மரியாளின் பெயரைச் சொல்வோருக்கு, மரியாள் மகிழ்ச்சியைத் தருவார்

தூய அல்போன்ஸ் லிகோரி தான் எழுதிய 'மரியாளின் மாண்பு' என்ற புத்தகத்தில் சொல்லக்கூடிய நிகழ்வு

வயதான குருவானவர் ஒருவர் கிளி ஒன்று வளர்த்தார். அந்தக் கிளிக்கு அவர் ஒவ்வொரு நாளும் "மரியே வாழ்க" என்ற திருநாமத்தை சொல்லி வளர்த்தார். அந்த கிளியும் அதனை எளிதாகக் கற்றுக்கொண்டது. ஒருநாள் அவர் அந்த கிளியை கூண்டிலிருந்து திறந்துவிட்டு, தன்னுடைய பங்களாவிற்கு முன்பாக அது நடந்து செல்லும் அழகை ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது திடிரென்று மேலே பறந்துகொண்டிருந்த பருந்து ஒன்று, அதன்மேல் பாய்ந்து, கிளியைத் தூக்கிச் செல்லப் பார்த்தது. அப்போது அந்தக் கிளி தனக்குத் தெரிந்த 'மரியே வாழ்க' என்பதைச் சொன்னது. உடனே, கிளியைத் தூக்க வந்த பருந்து தரையில் விழுந்து செத்து மடிந்தது.

மரியாளின் திரு நாமத்தினால் நமக்கு வரும் தீவினைகளும் விட்டு ஓடிவிடும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

நாமும் மரியாளின் பெயரை நம்பிக்கையோடு உச்சரிக்கும் போது தீவினைகள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓடும் என்பது உறுதி. ஆகவே, மரியாளின் புனித பெயருக்கு விழா எடுக்கும் இந்த நாளில் நாமும் அவருடைய பெயரை நம்பிக்கையோடு சொல்வோம். அதனால் எல்லாம் நலன்களையும் பெறுவோம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா