செபமாலை பக்தியின் தோற்றமும் வல்லமையும் |
இயேசு கிறிஸ்துவின் வாழ்வையும் மரியாளின் வாழ்வையும் தியானிக்கும்-ஒரு கத்தோலிக்கப் பக்தி முயற்சி ",செபமாலை!", ",செபமாலை", என்பது கத்தோலிக்கரின் பக்தி முயற்சிகளுள் ஒன்று. செபமாலை மணிகள் நம்மை இறைவனோடு இணைக்கும் சங்கிலி. செபமாலை பக்தி முயற்சி, ஆண்டவரின் வாழ்வை, ஆழ்நிலை வடிவில், தியானிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அற்புத வழி எனலாம். ஓட்டோமான் படையினருக்கு எதிராக, கிறிஸ்தவ கடற்படை வீரர்கள், 1571ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி மேற்கொண்ட ஒரு மோதலில், மிகவும் வலிமைமிக்க ஓட்டோமான் கடற்படையினரை, எண்ணிக்கையிலும், வலிமையிலும் குறைந்திருந்த கிறிஸ்தவ கடல்படையினர் வென்றனர். அந்த நாள் முழுவதும், திருத்தந்தை புனித 5 ஆம் பத்திநாதர் தொடரந்து செபமாலையை செபித்தார் என்றும், அந்த வெற்றியையடுத்து அக். 7ஆம் தேதி, செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக கருதப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன. பாரம்பரியப்படி செபமாலையில் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறைபொருள்களின் 15 மறையுண்மைகளை தியானிக்கும் வழக்கம் இருந்தது. திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களும், இதர விசுவாசிகளும் கர்த்தர் கற்பித்த செபத்தையும், அருள்நிறைந்த மரியே என்ற வானதூதரின் வாழ்த்துச் செபத்தையும் உருக்கமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். செபமாலை பக்திமுயற்சிக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள அக்டோபர் மாதத்தில், மரியன்னையை நோக்கி செபமாலை செபிப்போம். அக்.7 ஆம் தேதி செபமாலை அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடி, செபமாலை செபத்தை நம் குடும்ப செபமாகவும், பங்கு செபமாகவும், அதன் செபமாகவும் செபிக்க உறுதியெடுப்போம். படிப்பறியாத பாமரமக்கள் தாவீது எழுதிய 150 திருப்பாடல்களையும் செபிக்க முடியாத வேளையில், கன்னி மரியாள் கொடுத்த செபமாலை பேருதவியாக இருந்தது. செபமாலையில் நாம் செபிக்கும் 150 அருள் நிறைந்த மரியே செபம் 150 திருப்பாக்களை ஒத்ததாக அமைந்திருப்பதை நாம் கருத்தில் கொள்வது நல்லது. ஆனால் இன்று செபிக்கும் கன்னிமரியின் செபமாலையை, கி.பி. 1214ல் தான் புனித தோமினிக் வழியாக அன்னை மரியாள் திருச்சபைக்கு வழங்கினார்கள். அக்காலத்தில் ஆல் பிஜென்சியன்ஸ் என்ற முரண்பாட்டுக் கொள்கையினர் மனம் மாறித் திருச்சபைக்குத் திரும்பி வரவேண்டுமென்று புனித தோமினிக் செபித்து வந்தார். பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு காட்டுக்குள் சென்று பாவிகள் மனந்திரும்ப வேண்டிச் செபித்தார். மூன்றாம் நாள் செபத்தின் தவத்தின் விளைவால் உணர்வற்ற நிலையில் இருந்தார். அப்பொழுது அன்னை மரியாள் புனித தோமனிக்குக் காட்சித் தந்து எதிரிகளை முரண்பாட்டுக் கொள்கையினர்களை, பாவிகளை முறியடிக்கும் ஒரே கருவி செபமாலை என்று கற்றுக் கொடுத்தார்கள். இதன் அடிப்படையிலேயே திருத்தந்தை புனித ஐந்தாம் பயஸ் இந்த செப முயற்சியை அதிகாரப்பூர்வமானதாக அறிவித்தார். 2002 இல் திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் ஒளியின் மறைபொருள்கள் என்னும் பெயரில் இயேசுவின் பணி வாழ்வை சிந்திக்கும் 5 புதிய மறையுண்மைகளை சேர்த்தார். செபமாலை அருட்கருவியில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன. செபமாலையின் ஆங்கிலச் சொல்லான ரோசரி (rosary) என்பது ரோசா பூக்களினால் உருவான மாலையைக் குறிக்கிறது. திருச்சபை வரலாற்றில் ",செபமாலை.", ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களின் பக்தி முயற்சியாக ஒவ்வொருநாளும் 150 தடவை "இயேசு கற்பித்த இறை வேண்டலாகிய" பரலோக மந்திரத்தை (Our Father) சொன்னார்கள். பிற்பட்ட காலங்களில் 150 "அருள் நிறை மரியே" (Hail Mary) என்ற செபத்தைச் சொன்னார்கள். இன்னும் மத்திய காலப் பகுதியில், தாம் சொல்லுகின்ற 150 செபத்தை எண்ணுவதற்காக நூலில் பொருத்தப்பட்ட மணிகளைப் பாவித்தார்கள். இன்று பாவிக்கின்ற செபமாலையானது டொமினிக்கன் செபமாலையை அடிப்படையாகக் கொண்டது. 13 ஆம் நூற்றாண்டில், புனித தொமினிக்குவிற்கு மரியாள் காட்சி கொடுத்தது இப்பக்தியை பரப்பச் சொன்னதாக நம்பப்படுகின்றது. 1475 ஆம் ஆண்டில் தொமினிக்கன் சபையைச் சேர்ந்த அலன் தெ லா ரோச் (Alain de la Roche) என்பவரும் அவருடன் உடன் உழைத்தவர்களும், பிரான்சின் வடபகுதியில் இதைப் பரப்பினார்கள். அதன்பின் ஜரோப்பிய நாடுகளிலும் இது பரவியது. திருத்தந்தை பத்தாம் லியோ, 1520 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை செபமாலையின் மாதமாக அறிவித்தார். செபமாலை சொல்வது எப்படி? பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடியபின் செபமாலை சொல்லத் துவங்குவது நல்லது. முதன் முதலில் நம்பிக்கை அறிக்கை; கிறிஸ்தவ வாழ்க்கைக்கு விசுவாசந்தானே அஸ்திவாரம்; கர்த்தர் கற்பித்த ஜெபம், மூன்று முறை ",அருள் நிறைந்த மரியே", என்னும் செபம், பின் பத்து பத்தாய் ஐந்து முறை ",அருள் நிறைந்த மரியே", என்னும் செபம்பம், ஒவ்வொரு பத்துக்குப் பின் 'பிதாவுக்கும் சுதனுக்கும்' என்ற திரித்துவ ஸ்தோத்திரம் சொல்வோம். ஒவ்வொரு பத்துக்கு முன்னரும் ஒரு மறையுண்மையைச் சொல்லி அதைப் பற்றிச் சிறிது நேரம், இரண்டொரு வினாடியாவது தியானிக்க வேண்டும். செபமாலையின் வரலாறு 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே ஜெபமாலை சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. ஆனால் நாம் இன்று செபிக்கும் முறையில் செபமாலை அன்று இல்லை, செபமாலை என்ற பெயரும் அப்போது இல்லை. ",மரியாளின் சங்கீத மாலை", என்று அழைக்கப்பட்டது. குருக்கள் துறவிகள் பாடிச் செபிக்கையில் 150 திருப்பாடல்களைச் ",சங்கீத மாலை", என்று பாடினர். அதைப் பின்பற்றித்தான் மரியாளின் ",சங்கீத மாலை", வந்தது . 150 முறை ",அருள் நிறைந்த மரியே!", செபத்தைச் சொல்லி வந்தனர். மேலும் ஒவ்வொரு திருபலபாடலிலும் உள்ள இரண்டொரு வார்த்தைகளையோ , எண்ணங்களையோ புகுத்தி பாடல்கள் அமைத்து தாயைப் புகழ்ந்தனர். இதே போல் மாதாவுக்கு 150 கண்ணி கொண்ட மாலை தொகுத்தனர்: 'அருள் நிறைந்த மரியே' என்னும் செபத்தை, ஐம்பது ஐம்பதாக மும்முறை சொல்வதாம். ",அருள் நிறைந்த மரியே!", என்ற செபமும் இன்றைக்குள்ளது போல் அன்று பூர்த்தியடையவில்லை. திருப்பாடல்கள் இறைவனுக்கு தோத்திரப்பாக்கள், அது போல் ",அருள் நிறைந்த மரியே!", செபம் மாமரிக்குத் தோத்திரப்பாக்கள் . 13ஆம் நூற்றாண்டிலிருந்த ஒரு துறவி சொல்லுவார் " நாம் மரியன்னைக்கு புகழ் செலுத்துவோமேயாகில், அவர் பதில் புகழ் செலுத்தத் தெரியாத கிராமத்தாள் அல்ல. மரியன்னையின் புகழைக் கேட்டவுடன் எலிசபெத் தூய ஆவியானவரால் நிரப்பப்பட்டாள். மரியன்னை சொல்லும் புகழ்ச்சியால் நாமும் கடவுளின் வரப்பிரசாதத்தால் பூரிக்கும்படி மரியன்னைக்கு அடிக்கடி புகழ் செலுத்துவோமாக. மரியன்னைக்கு நாம் செலுத்தும் புகழ் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பரிசுத்த ஆவியைக் கொடுக்கும். இறைவனுடைய இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தும். இறைவாக்குரைக்கும் வரத்தை நமக்குக் கொண்டு வரும். ",அருள் நிறைந்த", செபம் தேவதாய்க்கு தோத்திரம் என்பதோடு கூட, அதனால் வரும் நன்மைகளைக் காண்பித்து அடிக்கடி இந்தத் தோத்திர கீதத்தைப் பாடும்படி மக்களை காலம்காலமா துறவிகள் தூண்டிவந்தனர். பலமுறை ஒன்றைச் செய்வோமேயாகில், சொல்வோமேயாகில் அதைக் கணக்கில் வைக்க வேண்டாமா? அதற்காக முதன்முதல் சிறு சிறு கூழாங்கற்களை உபயோகித்தனர். பின்னர் சில உதிரிக் கொட்டைகளை உதவியாகக் கொண்டனர். அதன்பின் அக்கொட்டைகளை சிறு கயிறுகளாலோ கம்பிகளாலோ கோர்த்தனர் . முதலில் ஐம்பது ஐம்பதாகக் கோர்த்துக் கொண்டனர் . இப்பூவுலகில் தேவதாய் 63 வருடங்கள் இருந்ததாக ஒரு ஐதீகம் இருந்து வருவதால் 63 மணிகள் கோர்த்த சரடுகள் பல இடங்களில் இருந்து வந்தன. ஒவ்வொரு பத்துக்கும் இடையில் 'கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் முடிவில் சிலர் அச்செபத்தைச் சொன்னாலும் அதைச் சொல்லும் சம்பிரதாயம் வழக்கில் இல்லை. பத்துப் பத்தாய்ப் பிரித்துக் காட்ட என்ன செய்தனர் ? ஆதியில் ஒவ்வொரு திருப்பாடல் முடிவில் என்ன செய்தனரோ அதைச் செய்தனர். அதாவது தலை குனிந்தனர்; மார்பைத் தட்டினர். ஒற்றை முழந்தாளில் நின்று எழுந்தனர். அல்லது இரட்டை முழந்தாளிட்டனர். சிலர் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து எழுந்தனர் . 16ஆம் நூற்றாண்டில் தான் விசுவாச அறிக்கையை செபமாலை நேரத்தில் சொல்லும் வழக்கம் உதித்தது. 15ஆம் நூற்றாண்டில் இருந்து சிலர் ஜெபமாலை சொல்லும்போது, சமயத்துக்கு சமயம் மனோ ஜெபத்தையும் சொல்லத் தொடங்கினர். தொண்டை , நா , உதடுகளின் அசைவின்றியே உள்ளத்திலேயே இறைவனையோ, தேவதாயையோ புகழ்வதும், அவர்கள் பெருமையைச் சிந்திப்பதும் துதிப்பதும், அவர்களைக் கெஞ்சுவதும் மனவல்லிய செபமாகும். துவக்கத்தில் தாயின் சந்தோஷங்களையும், வியாகுலங்களையும், மகிமையையும் பொதுவில் தியானித்து வந்தனர் . இவ்வழக்கத்தை புனித சாமிநாதர் மரித்த இரு நூற்றாண்டுகளுக்குப் பின் கர்த்தூசியர் சபையினரான ப்ரஷ்ஷிய நாட்டு டொமினிக் துவங்கினார். ஒவ்வொரு பத்துக்குப் பின்னும் தேவ இரகசியம் சொல்லி அதைத் தியானிக்கும் வழக்கம் இன்னும் வெகுகாலத்துக்குப் பின் தான் நடைமுறையாயிற்று. செபமாலையில் முடி போல் தொங்கும் மூன்று மணிகளும் அவைகளில் இப்போது சொல்லும் செபமும் வெகுகாலம் சென்று தான் வந்தன. என்னவானாலும் இப்போது சொல்வது போல செபமாலை சொல்லும் வழக்கம் 18ஆம் நூற்றாண்டில் வந்ததெனச் சொல்லலாம் ",அருள் நிறைந்த மரியே" என்று சொல்கிற மந்திரமும் இப்போது நாம் சொல்வது போலவே தொடக்கத்தில் இருந்தது என்று எண்ணலாகாது. செபமாலை அல்லது ",மரியின் சங்கீத மாலை", சொல்லிவந்த துவக்கத்தில் வானதூதரின் மங்கள வார்த்தையை மட்டும் சொன்னார்கள். "அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே". சில நூற்றாண்டுகள் சென்று எலிசபெத்தம்மாளின் வாழ்த்துதளையும் சேர்த்துக் கொண்டனர். "அருள் நிறைந்த மரியே வாழ்க ! கர்த்தர் உம்முடனே ; பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ; உம்முடைய திரு வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே.", இயேசு என்ற சொல் இன்னும் சிலகாலம் சென்ற பின்னர் சேர்க்கப்பட்டது. "கனியான இயேசு" மேலும் பல நாள் சென்று "புனித மரியே, இறைவனின் தாயே" என்கிற மன்றாட்டைத் திருச்சபை சேர்த்தது அன்மையில்தான். செபமாலைப் பக்தியைப் பரப்பச் சொன்ன புனித மரியன்னை புனித சாமிநாதர் பிரான்ஸ் தேசத்தில் போதித்துக் கொண்டிருந்தார். ஆல்பிஜென்சியர் என்று சில தப்பறைக் கொள்கையினர் சத்திய திருச்சபைக்கு இக்கட்டாக இருந்தனர். இதற்குக் காரணம் மனிதர்களுடைய பாவாக்கிரமங்கள் என்று உணர்ந்தார். தூலூஸ் பட்டணத்துக்கு அருகில் உள்ள காட்டில் சென்று மூன்று பகலும் மூன்று இரவும் செபத்தில் ஆழ்ந்தார். கண்ணீர் சிந்தி அழுதார். இறைவனுடைய கோபத்தை அமர்த்தக் கடுந்தவங்களைப் புரிந்தார். ஓயாமல் தன்னை அடித்துக் கொண்டமையால் உடல் எல்லாம் புண்ணாகி மயங்கி விழுந்தார் அந்நேரம் மூன்று சம்மனசுக்களோடு தேவதாய் அவருக்கு தோண்றி, "பிரியமுள்ள தோமினிக், உலகத்தை மணந்திருப்ப தமத்திருத்துவ ஆண்டவர், நீ எச்சாதனத்தைக் கையாள வேண்டும் என்று ஆசிக்கிறார் என்பதை நீ அறிவாயா? இப்போரில் எல்லா விக்கினங்களையும் தகர்த்தெறியும் இயந்திரம் மரியாயின் சங்கீத மாலை, ஆதலால் இக்கல்நெஞ்சரைக் கரை சேர்க்க வேண்டுமேயாகில் என் செபமாலையைப் பற்றிப் போதித்து வா" என்றார். புனித சாமிநாதர் எழுந்தார். தூலூஸ் நகர மக்களைத் மனந்திருப்ப மனதுருகி செபித்தார், பின் நேரே மேற்றிராசனக் கோயிலுக்குச் சென்றார். அவர் வருகையை முன்னிட்டு கண்ணுக்குத் தோன்றாத வானதூதர் மணிகளை அடித்தனர். அனல் கக்கும் ஆவலோடு பிரசங்கத்தைத் துவங்கினார். பிரசங்கத் துவக்கத்தில் பூமி அதிர்ந்தது; தரை நடுங்கியது; சூரியன் தெரியவில்லை; கட கடவென இடி; பளீர் பளீரென மின்னல், யாவருக்கும் பயம். அச்சமயம் படத்தில் உள்ள தேவதாய் மோட்சத்தின் ஆக்கினையை அழைத்தது போல தம் கரங்களை மேலே உயர்த்தினார். யாவருக்கும் நடுக்கம். செபமாலைப் பக்தியை யாவருக்கும் விளக்கவே இந்த அடையாளங்கள் ஏற்பட்டதுபோல் அனைவரும் உணர்ந்தனர். புனித சாமிநாதர் வேண்டுதலின் மேல் பேய்ப்புயல் அடங்கியது. உற்சாகமாய்ப் பிரசங்கத்தைத் தொடர்ந்து நடத்தினார். வெகு சொற்ப நாளில் தூலூஸ் நகர மக்கள் அனைவரும் தங்கள் பாவ வழியை விட்டு அக்கிரம அநியாயங்களை அகற்றித் தள்ளி மெய்யான பாதைக்குத் திரைம்பினர். புண்ணிய வாழ்வு மறுபடி தழைத்தோங்கியது. செபமாலையின் மகிமையைப் பற்றி அன்னை மரியாளின் சாட்சியம் செபமாலையின் மகிமையைப் பற்றி அன்னை மரியாள் பலருக்குத் தோன்றி விளக்கியுள்ளார்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அருள் நிறைந்த மரியே என்ற செபத்ததைச் சொல்லும்பொழுது எனக்கு ஒரு ரோசாப்பூவை அன்பளிப்பாக அளிக்கின்றீர்கள். என்கிறார்கள். செபமாலையை முழுமையாக எல்லா மறையுண்மைகளையும் தியானித்துச் செபிக்கும் பொமுது எனக்கும் இயேசுவுக்கும் ரோசாக்களைக் கோர்த்த கிரீடமாக நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளார்கள். ரோசாமலர் பூக்களின் அரசி. ஆகவே செபமாலை என்பது முக்கியமான பக்தி முயற்சிகளின் ரோசாமலர் என்பது தெளிவாகப் புலனாகும். மரியே வாக! ஆவே மரியா! *தந்தை தஞ்சை டோமி, அறந்தாங்கி |