tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

அன்னையின் வணக்கமாதம்

  ஜெபமாலையினால் யாவருக்கும் பயன்.  
                                  செபமாலை சொல்லுவது முதன் முதல் குருக்களுக்குப் பெரிய பயன். செபமாலை அவர்களுக்கு வெண் ரோஜா மலர். அர்ச். லூயிஸ் மோராத்பர்ட் குருக்களுக்குச் சொல்லுகிறார்: "இறைவனுடைய சத்தியங்களையும், நற்செய்தியையும் எல்லாச் சாதி சனங்களுக்கும் போதிக்கிறவர்களே, உங்கள் பல புத்தகங்களோடு செபமாளைப் புத்தகத்தையும் வெண் ரோஜா மலரைப் போல் காப்பாற்றுங்கள். அதில் உள்ள சத்தியங்கள் யாவரும் கண்டு பிடிக்கும் தெளிவான முறையில் கூறப்பட்டிருக்கின்றன. அவைகளை உங்கள் உள்ளத்தில் பதனப்படுத்தி, நீங்களே செபமாலை செய்து அதன் கனியைச் சுவைத்து ருசி பாருங்கள். அவைகள் உங்கள் உதடுகளில் இருக்கட்டும்.செபமாலைப் பக்தியின் மேன்மையை யாவருக்கும் கற்றுக் கொடுப்பதினால் அவர்களை மனந்திருப்புவீர்கள் 

பெரும் பாவிகளையும் வேத விரோதிகளையும் மனந்திருப்பும் பெரும் ஆயுதமாகக் கடவுள் அதை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார். இவ்வுலகில் தேவ அருளையும், மறு உலகில் மோட்ச மகிமையையும் அதில் பொதிந்து வைத்திருக்கிறார். புனிதர்களும் பாப்புமார்களும் இப்பக்தியைக் கொண்டாடினார்கள். எந்த ஆத்தும குருவானவருக்கு இதன் இரகசியத்தைப் பரிசுத்த ஆவி வெளியிடுவாரோ, அக்குரு பெரும் பாக்கியவான். அவரே தினந்தோறும் அதைச் செபித்து மற்றவர்களையும் தூண்டி விடுவார். அவர் பேசுவது எளிய மொழியானாலும் மற்ற குருக்கள் பல ஆண்டுகளில் செய்து முடிக்கும் நன்மையை அவர் ஒரு மாதத்தில் செய்து முடிப்பார் 

பாவிகளுக்கு அந்த புனிதர் சொல்லுவது:" செபமாலை உங்களுக்குச் சிவந்த ரோஜா மலர் . ஏனெனில் நமதாண்டவரின் விலையுயர்ந்த இரத்தம் அதன் மேல் விழுந்தது. உங்கள் வாழ்க்கையில் அது சுகந்த பரிமளத்தைக் கொண்டு வருவதாக. விசேஷமாய் நீங்கள் விழப்போகும் ஆபத்தின் குழியிலிருந்து உங்களை அது காப்பாற்றுவதாக." ரோஜா மலரால் (இன்ப சுகத்தால்) நம்மைச் சூடிக் கொள்ளுவாமாக" என்று ஒவ்வொரு நாளும் அவிசுவாசிகளும் மனம் மாறாப் பாவிகளும் ஆரவாரம் செய்கின்றனர். நாம் சொல்ல வேண்டியதென்ன?" பரிசுத்த செபமாலையின் ரோஜா மலர்களை நாம் சூடுவோமாக " 

நம்முடைய ரோஜா மலர்களுக்கும் அவர்கள் ரோஜா மலர் என்று கருதுபவைக்கும் என்ன பார தூர வித்தியாசம்! அவர்களுடைய மலர்கள் உடலின்பம், உலக மகிமை, உடைந்த ஓட்டுக்கு நிகரான செல்வம். வெகு சீக்கிரம் அவை உதிர்ந்து போகும், அழிந்து போகும். நாம் சொல்லும் 'பரலோகத்திலிருக்கிற, அருள் நிறைந்த மரியே' என்னும் ரோஜா மலர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பின்னும் அழியா. பாவிகளின் பார்வைக்கு ரோஜா மலர்களாய்த் தோன்றுபவைகள் கூறிய முட்கள்; மனவேக்காட்டினால் அவர்கள் உள்ளத்தைக் குத்தும். மரண நேரத்தில் அவநம்பிக்கை என்னும் அக்கினி அம்புகளால் எய்யும்; நித்தியத்திற்கும் வாதையைப் பெருக்கும். 

ஆதலால் நாம் 153 மணிச் செபமாலையை கூடுமானால் ஒவ்வொரு நாளும் சொல்லுவோமாக! அவைகள் மூன்று ஆரங்கள்; மனித அவதாரத்தின் போது இயேசு தரித்த வரப்பிரசாதத்தின் ஆரம்; பாடுகள் சமயத்தில் அணிந்த முள்முடி, மோட்சத்தில் சூடிய மகிமையின் முடி. செபமாலை சொல்வதால் நமக்கும் மூன்று ஆரம். வாழ்நாளில் பேறு பலன்களில் மாலை, மரண நேரத்தில் சமாதானத்தின் மாலை, மூன்றாவது மோட்சத்தின் மகிமையின் மாலை 

மரணமட்டும் பிரமாணிக்கமாய் செபமாலை சொல்லி வருவாயேயாகில் சாபத்தின் சரிந்த கரையில் உன் பாதம் வழுக்கி நின்றாலும், நரகத்தில் ஒரு கால் வைத்திட்டாலும், சில மந்திரவாதிகளைப் போல் உன் ஆத்துமத்தைப் பேய்க்கு விற்று விட்டாலும், சாத்தானைப் போல் நீ பிடிவாதமுள்ள வேத விரோதியாய் இருந்தாலும், மனஸ்தாபத்திற்காக, உண்மையை அறிவதற்காக நீ ஜெபமாலையைப் பிரமாநிக்கமாய்ச் செய்து வந்திருப்பாயேயாகில் ஒரு நாளும் கெடாத மகிமையின் கிரீடம் உனக்குக் கிடைக்கும் என்று உறுதிமொழி கூறுகிறேன் 

பக்திமான்களே, நீங்கள் வேறெந்தப் பக்தி முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் செபமாலைப் பக்தியையும் கைப்பற்றுங்கள். செபமாலை உங்களுக்கு ஞான ரோஜா மலர். உங்கள் ஆத்துமமாகிய பூங்காவில் இந்த நறுமண மலர்ச் செடியை வளருங்கள். இந்த ஞான ரோஜா மலர்ச் செடி வாழ்விலும், மரணத்திலும் மகிமையிலும் இயேசுவும் மரியுமாகும். இச்செடியின் குளிர்ந்த பச்சை இலைகள் சந்தோசத் தேவ இரகசியங்கள். மனம் வீசி மலர்ந்த மலர்கள் மகிமைத் தேவ இரகசியங்கள். மொட்டுக்கள் சேசுவினுடையவும் மரியாவினுடையவும் குழந்தைப் பருவம். அலர்ந்த மலர்கள் அவர்கள் பாடுகளைக் காண்பிக்கின்றன. முழுதும் மலர்ந்து விரிந்த மலர் அவர்களுடைய வெற்றியும் மகிமையுமாம். இச்செடி வளர்ந்து பெரிய மரமாகும். ஆகாயத்து பட்சிகள் அங்கு அடைக்கலம் புகும்; எல்லாப் புண்ணியங்களும் அங்கு குடிகொள்ளும். பறவைகள் பழங்களை அருந்துவது போல் அப்புண்ணியங்களும் அருந்தும். எக்கனியை? சேசுவென்னும் மகிமைக்குரிய கனியை 

செபம்.

ஓ மரியே, அமலோற்பவ கன்னிகையே, செபமாலை இராக்கினியே, உமது வரப்பிரசாத நிறைவில் என்னை வைத்துக் காத்தருளும். என் அற்ப வாழ்வை ஆட்கொண்டு இறைவனுடைய சித்தத்தின் செல்வப் பாதையில் நடத்தியருளும். என் பாவங்களுக்கெல்லாம் பாவப் பொறுத்தலைப் பெற்றுத் தாரும். எனக்கு அன்பின் அடைக்கலமாகவும், ஆதரவாகவும், அகலா வழித்துணையாகவும் கேடயமாகவும் திகழ்வீராக. சோதனை சமயத்தில் எனக்கு ஆறுதல் அளித்து, எல்லா ஆபத்திநின்றும் என்னைப் பத்திரமாகப் பாதுகாத்தருளும். நானோ பலவீனன், ஏமாந்தவன். எல்லாவிதப் பாவத்தையும், அசமந்தத்தையும், கோழைத்தனத்தையும், முகத்தாட்சண்யத்தையும் என்னைவிட்டு தூரத்திலே நிறுத்தியருளும். அகங்காரம், தற்பெருமை, சுயசிநேகம், உலகப்பற்று முதலியவற்றிலிருந்து என்னைக் காப்பாற்றும். என் பலவீனத்தினாலும், குற்றங்களினாலும் இறைவனுடைய கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டேன். என்னை உம்முடைய உள்ளம் வைத்து காத்துப் புண்ணியத்தில் வளரச் செய்யும். நானும் செபமாலை இராக்கினியே, தினந்தோறும் தவறாமல் ஜெபமாலை சொலி உம் தயவைப் புகழ்வேன். ஆமென்.

சரிதை.

தென் அமெரிக்காவில் பாராகுவே என்ற ஒரு மாகாணம் உண்டு.

சேசு சபைக்குருக்கள் அந்நாட்டு மக்களுக்கு வேதத்தைப் போதித்ததுமல்லாமல் 
சமூக சேவையில் ஈடுபட்டு அவர்கள் தோட்டம் துரவுகளைப் பண்படுத்தி வியாபாரத்தை விருத்தி செய்து இவ்வுலகில் முதலாய் அந்நாட்டு மக்கள் கண்ணியமாய் வாழ  வழி வகுத்தனர்.

அங்கு ஓர் ஊரில் அக்காளும் தங்கையுமான இரு சிறுமிகள் தங்கள் வீட்டிற்கு முன்
 முழந்தாளில் இருந்து வெகு பக்தியாய்ச் செபமாலை செய்தனர். 

திடீரென ஒரு சோதிச் சுந்தரவதி அங்கு தோன்றி ஏழு வயதுள்ள தங்கையை தன்னோடு எங்கோ அழைத்துச் சென்று விட்டாள். மூத்தவள் தங்கையை எங்கும் காணாமல் அழுது கொண்டு பெற்றோரிடம் சங்கதியைச் சொன்னாள். அவர்கள் மூன்று நாள் தேடியும் குழந்தை அகப்படவில்லை. மூன்றாம் நாள் மாலை சிரித்த முகத்தோடு முன் கதவண்டை காணாமல் போனவள் தோன்றினாள். அவர்கள் ஜெபமாலையைச் சொல்லி போற்றி வந்த மாதரசி அழகிய பூங்கா ஒன்றுக்குத் தன்னை அழைத்துச் சென்று மகா ருசியான பண்டங்களையும்பழங்களையும் தனக்குக் கொடுத்ததாகச் சொன்னாள். மேலும் ஒரு அழகிய அருமையான ஆண் குழந்தையை அவளுடைய மடியில் அம்மாதரசி வைத்ததாகவும், அவர் மேல் தான் முத்தமாரி பொழிந்ததாகவும் கூறினாள். பெற்றோர் புதிதாய் மனந்திரும்பியவர்கள். தங்களுக்கு ஞானோபதேசம் கற்றுக்கொடுத்து ஞானஸ்நானம் கொடுத்த இயேசுசபைக் 
குருவானவரிடம் இவ்வரலாற்றைச் சொன்னார்கள். செபமாலையைத் தினமும் சொல்வதனால் வரும் மோட்ச இன்பமும், இறைவனுடைய கிருபைகளும் மகாப் பெரிதென அக்குருவானவர் அவர்களிடம் சொல்லி செபமாலைப் பக்தியை 
ஊக்குவித்தார்.

                            
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்