Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் பவுஸ்டினா ✠ (St. Maria Faustina Kowalska)
  Limage contient peut-tre : 1 personne, chapeau et gros plan  
நினைவுத் திருநாள் : அக்டோபர் 5
✠ புனிதர் ஃபவுஸ்டினா ✠(St. Maria Faustina Kowalska)

கன்னியர், மறைப்பணியாளர், இறைக்காட்சியாளர், "இறை இரக்கத்தின் தூதர்":
(Virgin, Religious, Christian Mystic, "Apostle of Divine Mercy")

பிறப்பு : ஆகஸ்ட் 25, 1905
குலோகோவிச், ரஷியப் பேரரசு
(Głogowiec, Łęczyca County, Congress Poland)

இறப்பு : அக்டோபர் 5, 1938 (அகவை 33)  க்ராகோவ், போலந்து (Krakw, Poland)

ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

அருளாளர் பட்டம் : ஏப்ரல் 18, 1993
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II)

புனிதர் பட்டம் : ஏப்ரல் 30, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II)

முக்கிய திருத்தலங்கள் :
இறை இரக்கத்தின் பேராலயம், க்ராகோவ், போலந்து (Basilica of Divine Mercy, Krakw, Poland)

பாதுகாவல் : உலக இளையோர் நாள்

"புனிதர் அர்ச்சிஷ்ட நற்கருணையின் மரிய பவுஸ்டினா கோவால்ஸ்கா" (Saint Maria Faustyna Kowalska of the Blessed Sacrament), போலந்து நாட்டின் "க்ராகோவ்" (Krakw) எனுமிடத்தில் பிறந்த கத்தோலிக்க அருட்சகோதரியும், இறைக்காட்சியாளரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் இறை இரக்கத்தின் தூதர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

"ஹெலெனா கொவால்ஸ்கா" (Helena Kowalska) எனும் இயற்பெயர் கொண்ட பவுஸ்டினா, தமது பெற்றோரின் பத்து குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் ஆவார். தச்சுத் தொழிலாளியும், விவசாயியுமான இவரது தந்தையின் பெயர், "ஸ்டானிஸ்லாவ் கொவால்ஸ்கி" (Stanisław Kowalski) ஆகும். இவரது தாயாரின் பெயர், "மரியான்னா கொவால்ஸ்கா" (Marianna Kowalska) ஆகும்.

இவருக்கு தமது வாழ்நாள் முழுவதும் இயேசுவின் திருக்காட்சிகள் தரிசனமாக காணக் கிடைத்ததாகவும், தாம் அவருடன் அடிக்கடி உரையாடியதாகவும் கூறியுள்ளார். இத்திருக்காட்சிகளை இவர் தமது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். இக்குறிப்புகள் பின்னாளில் (Divine Mercy in My Soul) என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

தனது 20ம் வயதில் போலந்து நாட்டின் "வார்சா" (Warsaw) எனுமிடத்திலிருந்த கன்னியர் மடத்தில் சேர்ந்த இவர், பின்னாளில் "ப்லாக்" (Płock) நகருக்கும், அதன் பின்னர் "வில்னியஸ்" (Vilnius) எனுமிடத்திற்கும் மாற்றல் செய்யப்பட்டார். அங்கே, இவர் "அருட்தந்தை மிக்கேல் ஸ்போகோ" (Father Michał Sopoćko) என்பவரை சந்தித்து, அவரையே தமது ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டார். இவரின் துணையாலேயே கோவால்ஸ்காவின் காட்சிகளில் விவரித்தபடி முதல் இறை இரக்கத்தின் ஓவியம் வரையப்பட்டது. மேலும் முதல் இறை இரக்கத்தின் நாள் (உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு) திருப்பலியில் இவரால் அந்த ஓவியம் பயன்படுத்தப்பட்டது. பின்னர், திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) இறை இரக்கத்தின் விழாவை வருடாவருடம் அதே ஞாயிறன்று அனுசரிக்க ஏற்பாடு செய்தார்.

இவர் தனது நாட்குறிப்பேட்டில், இவரது செய்திகள் சிலகாலங்களுக்கு திருச்சபையினால் முடக்கப்பட்டு பின் ஏற்கப்படும் என முன்னுரைத்திருப்பது குறிக்கத்தக்கது. அவ்வண்ணமே இவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இவரது பக்தி முயற்சிகள் கத்தோலிக்க திருச்சபையினால் தடைசெய்யப்பட்டது. 1978ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததாலும், போலந்தில் பொதுவுடமை வாதம் தழைக்க துவங்கியதாலும், வத்திக்கானுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையே இருந்த தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதால், இவரின் நாட்குறிப்பேட்டை மொழிபெயர்க்கும் போது பிழை ஏற்பட்டது. இதனால் இக்குழப்பம் நேர்ந்ததாகவும், அது கண்டு பிடிக்கப்பட்டதனால் தடை நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இவருக்கு 30 ஏப்ரல் 2000 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரே 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராவார். இவரின் நினைவுத் திருவிழா நாள் அக்டோபர் 5 ஆகும்.

================================================================================
தூய பவுஸ்தினா (அக்டோபர் 05)

நிகழ்வு

1935 ஆம் ஆண்டில் ஒரு நாள், பவுஸ்தினா ஆலயத்தில் தனியாக அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அன்னை மரியா அவருக்குக் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியில் மரியா அவரிடம், "அன்பு மகளே பவுஸ்தினா! என் மகன் இயேசுகிறிஸ்து இவ்வுலகின்மீது மிகுந்த இரக்கம் கொண்டிருக்கின்றார். இந்த அளவிட முடியாத இரக்கத்தை உலகத்தார் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். அதற்காக நீ இப்போது நான் உன்னிடத்தில் சொல்வதையெல்லாம் குருக்களிடம் சென்று சொல்லி, அவர்களை இயேசுவின் இரக்கத்தை மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளச் செய்யுமாறு சொல்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்து போனார். மரியாவின் அன்புக் கட்டளைக்கிணங்க பவுஸ்தினா இரக்கத்தின் ஆண்டவரைப் பற்றி குருக்களிடம் எடுத்துச் சொல்லி, இரக்கத்தின் ஆண்டவரது பக்தி உலகம் முழுவதும் பரவுவதற்குக் காரணமாக இருந்தார்.

வாழ்க்கை வரலாறு

பவுஸ்தினா 1905 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்தார். இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பமாகும். குடும்பத்தில் இருக்கின்ற அனைவரும் உழைத்தால்தான் உணவு கிடைக்கும் என்றொரு நிலை இருந்ததால், பவுஸ்தினா அக்கம் பக்கத்து வீடுகளில் வேலை செய்து, அதிலிருந்து கிடைத்த சிறிய தொகையை தன்னுடைய தந்தையிடம் கொடுத்து, குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருந்தார். பவுஸ்தினா சிறு வயது முதலே நற்கருணை ஆண்டவரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவருக்கு ஏழு வயது நடந்துகொண்டிருந்தபோது கடவுளின் அழைப்பை உணர்ந்து, கன்னியர் மடத்தில் சேர நினைத்தார். ஆனால் சிறிய வயது என்பதால் அவரை கன்னியர் மடத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார். அதன்பிறகு இருபது வயதில்தான் சேர்ந்தார்.



கன்னியர் மடத்தில் பவுஸ்தினா தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மிகவும் பொறுப்புடனே செய்துவந்த அதே நேரத்தில், நற்கருணை ஆண்டவரிடத்தில் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். அவ்வப்போது ஆண்டவரின் காட்சி அவருக்குக் கிடைத்தது. ஒரு காட்சியில் ஆண்டவர் இயேசு அவரிடம், "நான் இந்த உலகத்தின் மீது மிகுந்து அன்பும் இரக்கமும் கொண்டிருக்கின்றேன். மனுக்குலத்தின் மீதான எனது இரக்கத்தை எல்லா மக்களிடத்திலும் எடுத்துச் சொல்லி, இந்த பக்தி முயற்சியை எல்லாரிடத்திலும் பரப்பு" என்று சொன்னார். அதன்பேரில் இரக்கத்தின் ஆண்டவர் பக்தி முயற்சியை எங்கும் பரவுவதற்குக் பவுஸ்தினா காரண கர்த்தாவாக இருந்தார். இன்னொரு சமயம் ஆண்டவர் இயேசு தோன்றும் போது அவருடைய நெஞ்சத்திலிருந்து இரு கதிர்கள் தென்பட்டது, ஒன்று சிகப்பு நிரந்திலும் இன்னொரு ஊதா நிறத்திலும் இருந்தது. இயேசுவின் காலடியில் "இயேசுவே உம்மை நான் நம்புகிறேன் (Jesus i trust in you ) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் இந்தக் காட்சியில் இடம்பிடித்தவைத்தான் "இரக்கத்தின் ஆண்டவரது அடையாளமாக மாறிப்போனது.

பவுஸ்தினா, இரக்கத்தின் ஆண்டவரது பக்தி முயற்சியை எங்கும் பரப்பி சிறந்ததொரு நற்செய்தியின் தூதுவராய் விளங்கினார். இவருக்கு முப்பத்து மூன்று வயது நடந்துகொண்டிருக்கும்போதே எலும்புருக்கி நோயினால் பத்திக்கப்பட்டு இறந்து போனார். இவருக்கு 2000 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய பவுஸ்தினாவை நினைவுகூறும் இந்நாளில், அவருடைய வாழ்வு நமக்கு எத்தகைய பாடத்தைக் கற்றுத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

விண்ணகத் தந்தையைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருப்போம்

தூய பவுஸ்தினா தன் வாழ்நாள் முழுக்க இரக்கத்தின் ஆண்டவரைக் குறித்து தியானித்து, அவரை எல்லா மக்களுக்கும் அறிவித்தார் என்று அவருடைய வாழ்க்கைக் குறிப்பு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அவருடைய விழாவைக் கொண்டாடுகின்ற நாம், அவரைப் போன்று இரக்கத்தின் ஆண்டவரைப் பற்றி எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கின்றோமா? அல்லது இரக்கத்தின் ஆண்டவரைப் போன்று நாமும் நம்மோடு வாழக்கூடியவர்களிடம் இரக்கமுள்ளவர்களாக இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவனிடமிருந்து இரக்கத்தைப் பெற்றுக் பெற்றுக்கொள்கின்றோம். ஆனால், நம்மோடு வாழக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு அந்த இரக்கத்தைக் காட்டாமல் இருந்துவிடுகின்றோம். இது தகுதியான ஒரு செயலாக இருக்க முடியாது.

தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் கூறுவார், "இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்" என்று (2:13). இது உண்மையிலும் உண்மை. நாம் மற்றவர்களிடம் இரக்கம் காட்டாதபோது, இறைவனிடமிருந்து எப்படி இரக்கத்தை எதிர்ப்பார்க்க முடியும் என்பதுதான் கேள்வியாக இருக்கின்றது.

ஆகவே, நாம் விண்ணகத் தந்தையை போன்று இரக்கமுள்ளவர்களாக இருப்போம். தூய பவுஸ்தினாவைப் போன்று இரக்கத்தின் ஆண்டவரிடம் உண்மையான பக்தி கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா