உத்தரிக்கிற
ஸ்தலம் இருக்கிறதென்பது உள் நியாயங்களினால் காணப்படுகிற சத்தியமாம்
தியானம்
மதிகெட்ட மனுஷன் ஒருவன் தன்னைப் பெற்ற தாய் தகப்பனைக் கோபித்து
அடித்து வெட்டிக் கொலை செய்கிறான். அவன் கட்டிக் கொண்ட பாவம்
எவ்வளவு கொடியதென்று சொல்லிலும் நினைவிலும் அடக்கும்
தன்மையல்ல. மற்றொருவன் ஒரு கத்தரிப்பிஞ்சு திருடுகிறான். இவன்
செய்த குற்றம் தாய் தகப்பனைக் கொன்றவன் பண்ணின துரோகத்திற்கு
எவ்வளவு தூர வித்தியாசம்! மோக வெறி கொண்ட சண்டாளனான பாவி ஒருவன்
பல தந்திர உபாயங்களைத் தேடி தனது சிநேகிதனுடைய பெண்ஜாதியை
மோசப்படுத்துகிறான். இதை எல்லோரும் பெரிய தோஷ துரோகம்
என்பார்கள். வேறொருவன் தன் மனதிலே தோன்றிய ஆகாத விசாரங்களை உடனே
தள்ளாமல் சொற்ப நேரம் அசத்தையாய் இருக்கிறான். இவன் இப்படிப்
பண்ணின குற்றம் அந்த சண்டாளன் பண்ணின துரோகத்துக்குச் சரி என்று
சொல்வாருண்டோ? ஒருவன் தன் விரோதியைக் கெடுக்க வேண்டும் என்கிற
ஆசையினாலே அவன் பேரில் இல்லாத குற்றத்தைச் சாட்டி, பொய் சாட்சிகளை
ஏற்படுத்தி பல முகாந்தரங்களையும், அத்தாட்சிகளையும் பிறப்பித்து
அவனுக்கு மரண தீர்வை வரப்பண்ணுகிறான். இதை போல அநியாய துஷ்டத்தனம்
வேறு உண்டோ? மற்றொருவன் விளையாட்டுக்கு ஒரு சொற்பப் பொய்யைச்
சொல்லுகிறான். இந்தக் குற்றம் அந்த பாதக தோஷத்துக்கு நிகரான தோஷமென்று
சொல்லுவார் உண்டோ?
இது இப்படி இருக்க, எந்த மனுஷரும் பெரிய பாவங்களும் சொற்ப பாவங்களும்
உண்டென்று சுபாவ புத்தியினால் அறிந்து சொல்லுவார்கள் என்பதற்க்குச்
சந்தேகமில்லை. மேற்சொன்ன பாவங்களைக் கட்டிக் கொண்டவர்கள் பாவசங்கீர்த்தனம்
செய்யாமலும் உத்தம மனச்தாபப்படாமலும் திடீரெனச் சாகிறார்கள்.
சர்வ நீதி நிறைந்த கடவுளாகிய சர்வேசுரன் அவர்களை என்ன
செய்வார்? ஒருமிக்க அவர்களை தீயெரி நரகத்தில் தள்ளி விடுவாரோ ?
பெரிய தோஷ துரோகங்களைக் கட்டிக் கொண்டவர்களைப் போலவே அற்பப்
பொய் அற்பத் திருட்டு என்கிற சொற்ப குற்றங்களையும் செய்தவர்களையும்
தண்டிப்பாரோ? அப்படிச் செய்வது அவரது நீதிக்கும் தயவுக்கும்
ஏற்குமோ? அது நியாயம் இல்லை என்று யாவருக்கும் காணப்படுகிற
சத்தியமாமே. அதனால் மனம் திரும்பாத மூர்க்கரான பாவிகளை என்றென்றைக்கும்
வேதனைப்பட நித்திய நரகத்துக்கு நீதியான சர்வேசுரன் அனுப்பும்போது
சொற்ப குற்றங்களோடு செத்தவர்களை அப்படிச் சபித்துத் தள்ள
மாட்டார். ஆயினும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் எந்த குற்றத்தொடும்
ஒருவராவது பிரவேசிக்கக் கூடாது என்கிறதினாலே, இந்த சொற்ப பாவத்தோடு
சாகிறவர்கள் அவ்விடத்துக்கு உடனே போகாமல் தாங்கள் சுத்தராகும்
மட்டும் ஒரு நாடு ஸ்தலத்திலே நிறுத்தப்படுவார்கள் என்று சொல்ல
வேண்டியுள்ளது. செத்த பிற்பாடு நரகத்தைப் பெருவிக்கும் பாவமும்
மோட்சத்தை வருவிக்கும் புண்ணியமும் செய்ய இடமும் காலமும்
இல்லாததினாலே, இந்த ஆத்துமாக்கள் கெட்டுப் போக மாட்டார்கள்.
யாதொரு பேறு பலன்களைப் பெற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். ஆகையால்
தங்களுடைய குற்றங்களுக்குத் தக்க ஆக்கினைகளை அனுபவித்து சுத்திகரப்படுவார்கள்
அல்லாமல் மற்றபடியல்ல. இந்த ஆத்துமாக்கள் ஆக்கினைப்படுகிற இடம்
உத்தரிக்கிற ஸ்தலம் எனப்படும்
மேலும் சொற்பக் குற்றங்களோடு செத்தவர்களைத் தவிர அநேகர் சாவான
பாவங்களைக் கட்டிக் கொண்ட பிற்பாடு பாவசங்கீர்த்தனத்தால் ஆனாலும்
உத்தம மனஸ்தாபத்திலென்கிலும் இந்த பாவத்திற்கு மன்னிப்பை அடைந்த
பின் சாகிறார்களே, அவர்கள் மட்டில் அறிய வேண்டிய சத்திய
விசேஷமென்னவென்றால்: மனம் பொருந்திச் செய்த சாவான பாவத்தால்
பாவிக்கு இரண்டு கேடுண்டாம். அதாவது: பாவதோஷமும் அபராதக் கடனும்
இவ்விரண்டுமாம். பாவியானவன் பாவதோஷத்தால் இஷ்டப்பிரசாதத்தை இழந்து
சர்வேசுரனுக்குத் துரோகி ஆகிறான். அபராதக் கடனோவெனில்
இரண்டுண்டாம்: நரகத்துக்குப் போக நித்திய அபராதக் கடனும் அநித்திய
அபராதக் கடனும் நீங்காததினாலே என்றென்றைக்கும் நரகத்தில் வேகக்
கடனுண்டாம். அந்தப் பாவதோஷம் பாவசங்கீர்த்தனத்தினாலாவது
மெய்யான மனஸ்தாபத்தினாலாவது தீர்ந்தால் நித்திய நரகத்திற்குப்
போக இருக்கிற அபராதக் கடனும் தீரும்; ஆனாலும் இந்தப் பாவத்துக்குச்
செலுத்த வேண்டிய அநித்திய அபராதக் கடன் தீராது.
இந்த அபராதத்தை இவ்வுலகத்தில் தான் செலுத்த வேண்டும் என்று இருந்தாலும்
அநேகர் இதைச் சரிவரச் செலுத்தாமல் மரிக்கிறார்களே, அவர்கள் இஷ்டப்பிரசாதத்தோடே
சாகிறதினால் நித்திய நரகத்துக்குத் தள்ளப்படுகிறதில்லை. ஆயினும்
பாவத்துக்குச் செய்ய வேண்டிய அநித்திய அபராதத்தை அவர்கள்
செலுத்தாமல் இருக்கிறதினால் அவர்கள் மோட்சத்துக்குப் போகிறதுமில்லை.
அதனால் அவர்கள் தங்களுடைய பாவங்களுக்குச் செலுத்த வேண்டிய அபராதத்தையும்
செலுத்துவதற்கு ஓரிடம் இருக்க வேண்டியதல்லவோ ? அதிலே முன்
சொன்ன பிரகாரமே, பேறுபலன்களை அடையவும், புண்ணியத்தைச் செய்யவும்
காலமில்லாததினாலே தாங்கள் அனுபவிக்கும் வேதனைகளால் அந்த பரிகார
அபராதத்தைச் செலுத்த வேண்டும். இப்பொழுது சொன்னதெல்லாம்
புத்தியுள்ள எந்த மனுஷனுக்கும் சரியான நியாயமுமாய் தேவ
நீதிக்கும் தேவ கிருபைக்கும் ஏற்புடைய நடவடிக்கையுமாய்க் காணப்படுமல்லோ?
சர்வேசுரன் அருளிச் செய்த கற்பனைகளெல்லாம் இரண்டு கற்பனைகளுக்குள்
அடங்கி இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமே. அதாவது: தேவ
சிநேகமும், பிறர் சிநேகமும், இவ்விரண்டு கற்பனையாம். மற்றவர்கள்
எல்லோரையும் தன்னைத்தான் நேசிப்பது போல நேசிக்க வேண்டுமென்று
இருந்தாலும், பந்து ஜனங்களையும், சிநேகிதர் உபகாரிகளையும், மற்ற
யாவரையும் அதிகமாய் நேசிக்க வேணுமல்லவா? இந்த விசேஷ சிநேகமும்
பொதுவாகப் பிறர் சிநேகமும் சாவினால் அற்றுப் போகுமோ? அப்படிச்
சொல்லவும் நினைக்கவும் கூடாது. அதிலே நாம் நேசித்துச் செத்தவர்களுக்கு
யாதொரு நன்மையையும் சகாயமும் செய்ய கூடுமானால் இதை மகா பிரியத்துடனே
செய்வோம் என்பதில் சந்தேகம் உண்டோ? ஆண்டவருடைய மட்டில்லாத
கிருபை தாளத்தை நம்பி அப்படிச் செய்யலாமென்று நாம் நினைத்து நம்முடைய
ஜனங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் படும் ஆக்கினைகளை அமர்த்தவும்,
குறைக்கவும், முடிக்கவும், வேணுமென்கிற ஆசையினாலே ஜெபங்களைப்
பொழிவோம், பிச்சைகளைத் தருவோம். தவத்தைச் செய்வோம். திவ்விய
பூசையை ஒப்புக் கொடுக்கப் பண்ணுவோம்
அப்படி அவர்கள் நம்முடைய ஜெப தப தான தருமத்தினால் மீட்டிரட்சிக்கப்பட்டு
மோட்ச பேரின்பத்துக்குச் சேர்ந்த பிற்பாடு, நம்மை மறவாமல் சர்வேசுரனிடத்திலே
நமக்காக வேண்டிக் கொள்ளுவார்கள் என்கிற நம்பிக்கையானது சந்தோசம்
நிறைந்த சத்திய விசுவாசமாம். இவ்வாறு இன்னும் இவ்வுலகத்திலே
ஜீவிக்கிறவர்களும் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிறவர்களும்
மோட்சத்திலே வாழுகிறவர்களும் தங்களுக்குள் விடாத சிநேகமும்
முறியாத பந்தமுமாய் இருக்கிறார்கள் என்று புத்தியினாலே போதிக்கப்பட்ட
சத்திய விசுவாசமென்று அறியக் கடவீர்களாக
இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம்
சேசுவே எங்கள் பேரில் தயவாயிரும்
செபம்
சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா! ஜீவியர்கள் மேலும் மரித்தவர்கள்
மேலும் செங்கோன்மை செலுத்தி விசுவாசத்தாலும் நற்கிரியைகளாலும்
உமது பட்சமாவார்கள் என்று தேவரீர் முன் தெரிந்த சமஸ்தருக்கும்
தயையுள்ளவராய் இருக்கிறீர். நாங்கள் யாருக்காக செபித்து மன்றாடுகிறோமோ,
அவர்கள் எல்லோரும் சரீர சம்பந்தத்தோடு இவ்வுலகில் இருக்கின்றவர்களாயினும்
சரீரத்தை விட்டு மறுவுலகில் சென்றவர்களாயினும் சகல அற்சிஷ்டவர்களுடைய
வேண்டுதலாலும் உமது நன்மைப் பெருக்கத்தின் கிருபா கடாட்சத்தினாலும்
பாவப் பொறுத்தலை அடையத்தக்கதாக தேவரீரைப் பிரார்த்திக்கிறோம்
சுவாமி ஆமென்
இன்றைய தினத்தில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது
உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஐம்பத்து மூன்று மணி செபம்
சொல்லுகிறது
தொடர்ந்து இனைந்திருங்கள்
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக!!! பரிசுத்த
திருக்குடும்பமே துணை
|
|
|
|