Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

  ✠ அதி தூய கன்னி மரியாளை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா ✠
✞ The Presentation of Our Lady ✞
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 21
✞ அதி தூய கன்னி மரியாளை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா ✞
(The Presentation of Our Lady)

"அதிதூய கன்னி மரியாளைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா" (The Presentation of the Blessed Virgin Mary) என மேற்கிலும் - "மிகவும் தூய இறையன்னை கோவிலுக்குள் நுழைந்தது" (The Entry of the Most Holy Theotokos into the Temple) என கிழக்கிலும் - அறியப்படுவது, நவம்பர் 21ம் நாள், கத்தோலிக்க திருச்சபை, மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளில் கொண்டாடப்படும் கிறிஸ்தவ விழாவாகும்.

அன்னை மரியாளை ஆலயத்தில் ஒப்புக்கொடுத்ததாக புதிய ஏற்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லையெனினும், திருமுறைப் பட்டியலைச் சேராத நூல்களில் இந்நிகழ்வு பற்றிய குறிப்புகள் உள்ளன.

குழந்தைப் பருவம் தொடர்பான யாக்கோபு நற்செய்தியில் (Gospel of James) இவ்வாறு வாசிக்கிறோம் :

"மரியாவின் பெற்றோராகிய "சுவக்கீன்" (Joachim), "அன்னா" (Anne) ஆகிய இருவரும் முதிர் வயதுவரை குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். ஆயினும் அவர்கள் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தனர். வானதூதர் வழியாக மரியாளின் பிறப்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மரியாளும் பிறந்தார். இதற்கு நன்றியாக, குழந்தை மரியாளை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை கடவுளுக்குக் காணிக்கையாக்கினார்கள். அதன்பிறகு மரியாள் தமது 12வது வயதுவரை ஆலயத்தில் இருந்தார்" என்று யாக்கோபு எழுதியுள்ளார்.

மரியாளின் பிறப்பு நற்செய்தியில் (Gospel of the Nativity of Mary), மரியாளின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மரியாள் ஆலயத்திலேயே கல்வி கற்றார், இறைவனின் அன்னையாகும் நிலைக்கு தன்னைத் தயாரித்தார் எனவும் இக்குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

"பைசாண்டைன்" (Byzantines) பேரரசர் "முதலாம் ஜஸ்டீனியன்" (Emperor Justinian I) சிதைவுற்றுக் கிடந்த எருசலேம் ஆலயத்திற்கு அருகில் ஓர் ஆலயம் எழுப்பி, அதை கி. பி. 543ம் ஆண்டில் அதிதூய கன்னி மரியாளுக்கு அர்ப்பணித்தார். அதுமுதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

614ம் ஆண்டில், "சசனியன் பேரரசின்" (Sasanian Empire) "பாரசீக பேரரசர்" (Persians) "இரண்டாம் கொஸ்ராவு" (Khosrau II), எருசலேமை முற்றுகையிட்டபோது இவ்வாலயம் இடிக்கப்பட்டாலும், மக்கள் இவ்விழாவைத் தொடர்ந்து கொண்டாடி வந்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இத்தாலியின் தென் பகுதியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை 1568ம் ஆண்டில் திருப்பலி புத்தகத்திலிருந்து திருத்தந்தை "ஐந்தாம் பயஸ்" (Pope Pius V) நீக்கினாலும், 1585ம் ஆண்டில் திருத்தந்தை "ஐந்தாம் சிக்ஸ்டஸ்" (Pope Sixtus V) இதனை மீண்டும் ரோமத் திருவழிபாடு நாள்காட்டியில் சேர்த்தார்.

அதிதூய கன்னி மரியாளை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா நவம்பர் 21 ஆகும்!
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா