Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

புனித மலாச்சி  ( St. Malachy )
நினைவுத் திருநாள் : நவம்பர் 03
 *அர்மாக் மறைமாவட்ட பேராயர் : (Archbishop of Armagh)

*பிறப்பு : 1095 அர்மாக், அயர்லாந்து (Armagh, Ireland)

*இறப்பு : 2 நவம்பர் 1148 கிளேர்வாக்ஸ், ஃபிரான்ஸ் (Clairvaux, France)

*புனிதர் பட்டம் : 6 ஜூலை 1190 திருத்தந்தை 3ம் கிளமெண்ட் (Pope Clement III)

*பாதுகாவல் : அர்மாக் பேராயம், (Archdiocese of Armagh) டான் மற்றும் கொன்னர் ஆயம்
(Diocese of Down and Connor)

புனித மலாச்சி, ஒரு ஐரிஷ் புனிதரும், "அர்மாக்" மறைமாவட்ட (Archbishop of Armagh) பேராயரும் ஆவார். புனிதராக அருட்பொழிவு பெற்ற முதல் ஐரிஷ் மொழி பேசும் கத்தோலிக்கர் இவரேயாவார்.

அயர்லாந்து நாட்டில், 9ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "வைகிங்" சோதனைகள் தொடங்கின. நாட்டின் மீது படையெடுபுகளும் ஆக்கிரமிப்புகளும் செய்யப்பட்டன; பல துறவு மடங்கள் கொள்ளையடிக்கப்பட்டன; துறவிகள் வாள்முனையில் வைக்கப்பட்டனர்; தேவாலயங்கள் இடிக்கப்பட்டன; நூலகங்கள் எரிக்கப்பட்டன. மதச்சார்பற்ற கட்டுப்பாடுகளுடன் கூடிய தடைகள் படையெடுப்பாளர்களால் கொண்டுவரப்பட்டன. புனித பேட்ரிக்கும் பிற ஆதி கிறிஸ்தவ சபைகளும் கடைப்பிடித்த தார்மீக, மத பாரம்பரியங்கள் மற்றும் கிறிஸ்தவ நல்லொழுக்கங்கள் மிகப் பெரிய சரிவைச் சந்தித்தன. 11ம் நூற்றாண்டில், அயர்லாந்தின் சில பகுதிகள் பிற சமய சார்புடையவைகளாக மாறின.

1095ல், பேராசிரியர் ஒருவரின் மகனாகப் பிறந்தார். இவரின் தந்தை துறவற மடத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்ததால், மலாச்சியுசும் அங்கேயே படித்தார்."இமர்" (Imhar O"Hagan) என்ற துறவு மடாதிபதி இவருக்கு ஞானஸ்நானம் கொடுத்து கல்வி கற்பித்தார். ஐரிஷ் திருச்சபையை சீரமைக்க முயற்சிப்பவர்கள் மீது அனுதாபமும் கருணையும் கொண்டிருந்தார். நீண்ட கற்பித்தலின் பிறகு, புனித செல்லாச் (St Cellach in 1119) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார்.

1123ம் ஆண்டு கொனோர் (Conor) நகரின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். மீண்டும்1129ம் ஆண்டு அர்மாக் நகருக்கு பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பேராயர் பதவியில் பல எதிர்ப்புகளை சந்தித்தார். இதனால் பல இன்னல்களை சந்தித்தார். தனது பணியை சரியாக செய்ய இயலாததால் 1136ம் ஆண்டு மீண்டும் டவுன் (Down) என்ற நகருக்கு ஆயராக அனுப்பப்பட்டார். பல ஆண்டுகள் தன் ஆயர் பதவியில் சிறப்பாக பணியாற்றியப்பின் சிஸ்டர்சீயன் துறவற சபையை சார்ந்த பெர்னார்டு என்பவருடன் இணைந்து சில துறவற மடங்களைக் கட்டினார்.

பின்னர் மலாச்சி துறவற கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ரோம் நகர் சென்று திருத்தந்தையை சந்திக்க எண்ணினார். அப்போதுதான் கடினமான நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.

நவம்பர் 2ம் தேதி மரித்த இவருடைய நினைவுத் திருநாள் நவம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் அனைத்து ஆன்மாக்களின் திருநாளாகையால்,நவம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்படுகின்றது.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா