Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ரோஸ் ஃபிலிப்பைன் டச்செஸ்ன் ✠ (St. Rose Philippine Duchesne)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 18
✠ புனிதர் ரோஸ் ஃபிலிப்பைன் டச்செஸ்ன் ✠
(St. Rose Philippine Duchesne)

  சபை நிறுவனர்/ அருட்சகோதரி :
(Foundress and Religious Sister)

பிறப்பு : ஆகஸ்ட் 29, 1769
க்ரெநோபல், டௌபின், ஃபிரான்ஸ் அரசு (Grenoble, Dauphin, Kingdom of France)

இறப்பு : நவம்பர் 18, 1852 (வயது 83)
செயின்ட் சார்லஸ், மிஸ்ஸெளரி, ஐக்கிய அமெரிக்கா (St. Charles, Missouri, U.S.)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : மே 12, 1940
திருத்தந்தை : திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ் (Pope Pius XII)

புனிதர் பட்டம் : ஜூலை 3, 1988
திருத்தந்தை: இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II)

முக்கிய திருத்தலங்கள் :
தூய ரோஸ் திருத்தலம், ஃபிலிப்பைன், டச்செஸ்ன் (Shrine of St. Rose Philippine Duchesne)
தூய சார்லஸ், மிஸ்ஸெளரி, ஐக்கிய அமெரிக்கா (St. Charles, Missouri, United States)

பாதுகாவல் :
துன்பத்தின் மத்தியிலும் விடாமுயற்சி செய்வோர்;
ஸ்பிரிங்ஃபீல்ட்-கிரார்டியு மறைமாவட்டம் (Diocese of SpringfieldCape Girardeau)

புனிதர் ரோஸ் ஃபிலிப்பைன் டச்செஸ்ன், ஒரு ஃபிரெஞ்ச் அருட்சகோதரியும், கல்வியாளரும், "இயேசுவின் திரு இருதய அருட்சகோதரிகள்" சபையின் (Religious Sisters of the Sacred Heart of Jesus) ஆதிகால முக்கிய உறுப்பினரும் ஆவார். ஐக்கிய அமெரிக்க சமூகங்களின் முதல் ஜெப கூட்டத்தைக் (Congregation) நிறுவியவரும் இவரே. தமது வாழ்வின் இறுதி காலத்தை மத்திய-மேற்கத்திய அமெரிக்க (Midwestern United States) மக்களுக்கு கற்பித்தல் மற்றும் சேவைகளில் கழித்தார். மற்றும், நாட்டின் மேற்கத்திய எல்லைப் (Western Frontier) பகுதிகளிலும் சேவை புரிந்தார்.

ஃபிரான்ஸின் "க்ரேனோபல்" (Grenoble) எனும் இடத்தில் பிறந்த இவரின் தந்தை ஒரு வழக்கறிஞர் ஆவார். அவரது பெயர், "பியர்ரே-ஃப்ரன்க்காய்ஸ் டச்செஸ்ன்" (Pierre-Franois Duchesne) ஆகும். தாயார் "ரோஸ்-யூஃப்ரோசின் பெரியேர்" (Rose-Euphrosine Prier) ஆவார். இவர்களுக்குப் பிறந்த ஏழு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளில் ரோஸ் ஃபிலிப்பைன் டச்செஸ்ன் இரண்டாவதாகப் பிறந்த குழந்தை ஆவார்.

சிறு வயதில் அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட டச்செஸ்னின் உடலில் நீங்கா வடுக்கள் தோன்றியிருந்தன. 1781ம் ஆண்டு, டச்செஸ்ன் மற்றும் இவரது ஒன்றுவிட்ட சகோதரியான "ஜோசஃபின்" (Josephine) ஆகிய இருவரும், "கிரனோபில்" (Grenoble) அருகேயுள்ள மலையருகிலுள்ள "தூய மரியாளின் வருகை சபையின் கன்னியரால்" (Visitandine nuns) நடத்தப்படும் ஒரு துறவு மடத்தில் கல்வி கற்க அனுப்பப்பட்டார். துறவு வாழ்வில் ஈர்ப்பு கொண்ட ரோஸ், அதில் தீவிர ஈடுபாடு காண்பிக்க தொடங்கினார். இதை அறிந்த அவரது தந்தை, அடுத்த வருடமே அவரை அங்கிருந்து நீக்கி தமது வீட்டினருகேயே கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.

1788ம் ஆண்டு, இவர் தமது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி "தூய மரியாளின் வருகை" (Visitation of Holy Mary religious order) சபையின் துறவு இல்லத்தில் இணைய முடிவெடுத்தார். தமது அத்தை ஒருவருடன் பயணப்பட்டுப் போன இவர், உடனடியாக துறவு இல்லத்தில் இணைந்ததும், தந்தையிடம் தகவல் கூறுமாறு சொல்லி, அத்தையை தனியாக திருப்பி அனுப்பினார்.

எனினும், 1792ம் ஆண்டு, ஃபிரெஞ்ச் புரட்சியின் (French Revolution) பயங்கர ஆட்சி, துறவு இல்லங்களை மூட வைத்தது. அங்கிருந்த அருட்சகோதரியர் திருப்பி அனுப்பப்பட்டனர். வேறு வழியின்றி ஊர் திரும்பிய ரோஸ், தமது இரு அத்தைமாருடன் ஒரு பண்ணை வீட்டில் வசித்தார். அங்கிருந்த காலத்தில் ஃபிரெஞ்ச் புரட்சியின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முந்தைய துறவு இல்லத்தில் சிறைப்பட்டிருந்தவர்களுக்கும் சேவை புரிந்தார்.

1801ம் ஆண்டில், ஃபிரான்ஸில் மாவீரன் நெப்போலியனின் ஆட்சியின் கீழே, கத்தோலிக்க திருச்சபை மீண்டும் தலையெடுத்து தழைக்கத் தொடங்கியது. ரோஸ் "தூய மரியாளின் வருகை" துறவு இல்லத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். அதன் கட்டிட சொந்தக்காரரிடமிருந்து கட்டிடங்களை பெற முயற்சித்தார். இல்லத்தின் கட்டடங்கள் இராணுவத்தினர் வசிப்பதற்கும் சிறைச் சாலையாகவும் பயன்படுத்தப்பட்டிருந்ததால், குப்பையும் கூளமுமாக, துறவு இல்ல அருட்சகோதரிகள் தங்குவதற்கு ஏதுவானதாக இருக்கவில்லை. அவற்றை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினார். இல்லத்தின் தலைமை அருட்சகோதரியும் மற்றும் சில இளம் துறவியரும் வந்ததால் இல்லம் சுத்தம் செய்யப்பட்டது. இறுதியில், ரோஸ் இல்லத்தின் தலைமை அருட்சகோதரியாகவும், உடன் மூன்று துறவற அருட்சகோதரியரும் மட்டுமே அங்கே தனித்து விடப்பட்டனர்.

ஃபிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் சீரமைக்கப்பட்ட "தூய மரியாளின் வருகை" (Visitation of Holy Mary religious order) சபை, வடக்கு ஃபிரான்சில் தடுமாற்றத்துடன் நடந்துவந்தது. இதனால், ஃபிரெஞ்சு கத்தோலிக்க அருட்சகோதரியும், பின்னால் புனிதருமான "மெடலின் சோஃபி பராட்" (St. Madeleine Sophie Barat), புதிய "தூய திருஇருதய சமூகத்தை" (Society of the Sacred Heart) நிறுவினார். அவர், "கிரனோபில்" (Grenoble) நகரில் ஒரு புதிய அஸ்திவாரத்தை நிறுவ விரும்பினார். அவரது வழிகாட்டியும், இயேசுசபை (Jesuit priest) குருவுமான "ஜோசஃப் வரின்" (Joseph Varin) என்பவரது தூண்டுதலின் காரணத்தால், 1804ம் ஆண்டு பயணித்து, ரோஸ் ஃபிலிப்பைன் டச்செஸ்னை சந்தித்தார். தமது "தூய மரியாளின் வருகை" (Visitation of Holy Mary) சமூகத்தை "தூய திருஇருதய சமூகத்துடன்" (Society of the Sacred Heart) இணைப்பதற்கு "பராட்" தந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். புதிய சமூகம், பெண்களின் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இரு பெண்களும் உடனடியாக வாழ்நாள் சிநேகிதியரானார்கள்.

1815ம் ஆண்டு, நெப்போலியனின் யுத்தங்கள் முடிவுக்கு வந்தபின்னர் ரோஸ், பாரிஸ் நகரில் "திரு இருதய பள்ளி" (Convent of the Sacred Heart) என்ற பெயரில் ஒரு பள்ளியை தொடங்கினார். இருவரும் தொடங்கிய அப்பள்ளியில், இருவருமே புகுமுக துறவியரின் (Mistress of novices) தலைமைப் பொறுப்பேற்றனர்.

டச்செஸ்ன், சிறு வயதில் தமது பங்கு ஆலயத்தில், புதிய ஃபிரான்சின் (New France) காலனியான "லூசியானாவில்" (Louisiana) மறைப்பணியாற்றும் துறவியரின் கதைகளை ஏராளமாக கேட்டு, தாமும் அங்கே சென்று பணியாற்றும் ஆர்வம் கொண்டிருந்தார். 1817ம் ஆண்டு, "லூசியானா மற்றும் இரண்டு ஃபுளோரிடா" (Diocese of Louisiana and the Two Floridas) மறைமாவட்டத்தின் ஆயரான "வில்லியம் டுபௌர்க்" (William Dubourg) பாரிஸ் நகரின் பள்ளிக்கு வருகை தந்தார். அவர், தமது மறைமாவட்டத்திலுள்ள இந்திய மற்றும் ஃபிரெஞ்ச் குழந்தைகளுக்கான கல்வி கற்பிக்கும் மற்றும் சுவிசேஷத்துக்கு உதவும் கல்வியாளர் சபையொன்றினை வேண்டி வந்திருந்தார். அவரைச் சந்தித்த டச்செஸ்ன், உடனடியாக தமது சிறு வயது விருப்பங்கள் நினைவு வர, தமது சிநேகிதியான பராட்டிடம் அனுமதி வேண்டினார்.

1818ம் ஆண்டு, தமது சிநேகிதியான பாராட்டின் ஆசீர்வாதங்களுடனும், துறவு இல்லத்தின் நான்கு அருட்சகோதரியினருடனும், ரோஸ் அமெரிக்கா புறப்பட்டார். பத்து வாரங்கள் கடல் பயணம் மேற்கொண்டபின் அவர்கள் "நியூ ஒர்லியான்ஸ்" (New Orleans) மாகாணம் சென்றடைந்தனர். அங்கே அவர்களுக்கு தங்குவதற்கான வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. "உருசுளின்" அருட்சகோதரியருடன் சுருக்கமான ஓய்வு எடுத்தபின்னர், "மிஸிசிப்பி நதியில்" (Mississippi River) ஏழு வாரங்கள் படகு பயணம் செய்து, "செயின்ட் லூயிஸ்" (St. Louis) நகர் சென்றனர். இறுதியில் "செயின்ட் சார்லஸ்" (St. Charles) நகர் சென்று தங்கினார்கள். பண்டைய அமெரிக்க மாகாணங்களின் கடின சூழ்நிலைகளில் கற்பிக்கும் பணிகளுடன் சேவைகளும் செய்து வாழ்ந்தனர்.

1841ம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்காவின் மத்திய மேற்க்கத்திய மாநிலமான "கன்சாஸ்" (Kansas) மாநிலத்தின் "பொலவட்டோமி" (Potawatomi) மொழி பேசும் ஆதிவாசி மக்களிடையே பணியாற்ற வருமாறு இவர்களை இயேசுசபை துறவியர் அழைத்தனர். 71 வயதான ரோஸ், ஆரம்பத்தில் அவர்களுடன் செல்ல தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், "தந்தை வெர்ஹஜென்" (Father Verhaegen) வலியுறுத்தியதால், கடின பணிகளைத் தவிர்த்து அவரும் பணியாற்றினார். உள்ளூர் மொழி தெரியாததால், அவரால் கற்பிக்கும் பணி செய்ய இயலவில்லை. அவர் முழுநேர ஜெபத்திலே ஈடுபட்டிருந்தார்.

1842ம் ஆண்டு, ரோஸின் உடல்நிலை மோசமானதால் கடின கிராம சேவைகளுக்கு ஒத்துப்போகவில்லை. ரோஸ் "செயின்ட் சார்லஸ்" (St. Charles) திரும்பினார். தமது வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்களை சிற்றாலயத்தின் அருகேயுள்ள ஏணிப்படிகளுக்கு கீழேயுள்ள ஒரு சிறு அறையில் கழித்தார். வலு குறைந்த, பார்வை மங்கிப்போன, தனிமையில் கஷ்டப்பட்ட, தமது சிநேகிதியான "அன்னை பராட்டின்" (Mother Barat) கடிதங்களுக்காக ஏங்கிய புனிதர் ரோஸ் ஃபிலிப்பைன் டச்செஸ்ன், 1852ம் ஆண்டு, நவம்பர் மாதம், பதினெட்டாம் நாள் மரித்தார். அவருக்கு வயது 83.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா