Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மார்ட்டின் ✠ ( St. Martin of Tours )
நினைவுத் திருநாள் : நவம்பர் 11
✠ புனிதர் மார்ட்டின் ✠(St. Martin of Tours)
*டூர்ஸ் நகர ஆயர் மற்றும் ஒப்புரவாளர் : (Bishop of Tours and Confessor)

*பிறப்பு : கி.பி. 316 அல்லது 336
சவரியா, பன்னோனியா மறைமாவட்டம் (இன்றைய ஹங்கேரி)
(Savaria, Diocese of Pannonia (Modern-day Hungary))

*இறப்பு : நவம்பர் 8, 397
காந்த், கால் (இன்றைய ஃபிரான்ஸ்) (Candes, Gaul (Modern-day France)

*ஏற்கும் சமயம் :
 - ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)
 - கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church)
 - ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy)
 - ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion)
 - லூத்தரன் திருச்சபை (Lutheranism)


சித்தரிக்கப்படும் வகை :
குதிரைமேல் அமர்ந்துகொண்டு; தம் மேற்போர்வையை இருதுண்டாக்கி; இரவலர் ஒருவரோடு பகிர்தல்; தம் மேற்போர்வையை இரண்டாகத் துண்டித்தல்; வாத்து; தீப்பற்றி எரியும் உலக உருண்டை

பாதுகாவல் :
வறுமை ஒழிப்பு; மது அடிமை ஒழிப்பு; பாரிஜா (Baħrija), மால்ட்டா (Malta); பிச்சைக்காரர்கள்; பேலி மொனாஸ்தீர் (Beli Manastir); போனஸ் ஐரெஸ் (Buenos Aires); பிராத்தீஸ்லாவா உயர்மறைமாவட்டம் (Archdiocese of Bratislava); பர்கன்லாந்து (Burgenland); குதிரைப்படை; சிறுவர் சிறுமியர் இயக்கம்; டீபர்க் (Dieburg); எடிங்கன் குதிரைவீரர் (Edingen Equestrians); பொயானோ தெல்லா சியானா (Foiano della Chiana); பிரான்ஸ் (France); வாத்துகள்; குதிரைகள்; விடுதி காப்பாளர்; மைன்ஸ் மறைமாவட்டம் (Diocese of Mainz); மோன்டேமாக்னோ (Montemagno); ஓல்ப் (Olpe), ஜெர்மனி; ஒரேன்ஸ் (Ourense); பியேத்ரா சான்ந்தா (Pietrasanta); திருத்தந்தையர் சுவிஸ் காவலர் (Pontifical Swiss Guards); திருந்திய மது அடிமைகள்; குதிரைப் பயணிகள்; ரோட்டன்பர்க்-ஸ்டுட்கார்ட் மறைமாவட்டம் (Diocese of Rottenburg-Stuttgart); படைவீரர்கள்; தையல்காரர்கள்; உட்ரெச்ட் நகர் (Utrecht); திராட்சை வளர்ப்போர்; திராட்சை இரசம் செய்வோர்;

புனிதர் டூர்ஸ் நகர மார்ட்டின், இன்றைய பிரான்ஸ் நாட்டின் "டூர்ஸ்"(Tours) நகரத்தின் ஆயராகப் பணியாற்றியவர். டூர்ஸ் நகரில் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம், "ஸ்பெயின்" (Spain) நாட்டில் உள்ள "கம்போஸ்டேலா சந்தியாகு"(Santiago de Compostela) நகருக்குத் திருப்பயணமாகச் செல்வோர் கட்டாயமாக சந்தித்துச் செல்லும் ஒரு சிறப்பிடமாக விளங்குகிறது.

புகழ்பெற்ற புனிதர் :
புனிதர் டூர்ஸ் நகர மார்ட்டின், மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கும் புனிதர்களுள் ஒருவர். அவரைப் பற்றித் தெரிகின்ற வரலாற்றுச் செய்திகளோடு, புனைவுகளும் பல கலந்துள்ளன.

புனிதர் மார்ட்டின் ஐரோப்பா முழுவதையும் இணைக்கின்ற ஒரு பாலமாக விளங்குகின்றார். அவர் பிறந்தது ஹங்கேரி நாட்டில். அவருடைய இளமைப் பருவம் கழிந்தது இத்தாலி நாட்டின் பவீயா நகரில். வளர்ந்த பின் அவர் பல ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்தார். இவ்வாறு ஐரோப்பாவின் பல நாடுகளை இணைக்கும் ஒருவராக அவர் துலங்குகின்றார்.

வரலாற்றை எழுதியவர் :
புனித மார்ட்டின் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவர் முதன்முதலாக புனித மார்ட்டினின் வாழ்க்கை வரலாற்றைச் சில புனைவுகள் சேர்த்து எழுதினார். மார்ட்டின் போர்வீரர்களின் பாதுகாவலராகக் கருதப்படுகின்றார்.

இளமைப் பருவம் :
மார்ட்டின் இன்றைய ஹங்கேரி நாட்டின் பொன்னோயா மறைமாவட்டத்தில் சவாரியா (இன்று சோம்பாத்தேலி) நகரில் கி.பி. 316ம் ஆண்டு பிறந்தார். மார்ட்டினின் தந்தை ரோமைப் படையின் ஒரு பிரிவான அரசு குதிரை வீரர் அமைப்பில் மூத்த அலுவலராகச் செயலாற்றினார். அலுவல் காரணமாக அவர் வட இத்தாலியாவின் திச்சீனும் என்று அழைக்கப்பட்ட பவீயா நரில் தங்கியிருந்தார். அங்குதான் மார்ட்டின் தம் இளமைப் பருவத்தைக் கழித்தார்.

மார்ட்டினுக்குப் பத்து வயது ஆனபோது, அவர் தம் பெற்றோரின் விருப்பத்தை எதிர்த்து கிறிஸ்தவ சமயத்தைத் தழுவும்பொருட்டு திருமுழுக்குப் பெறுவதற்கான ஆயத்தநிலைக் குழுவில் சேர்ந்தார். அக்காலத்தில் ரோமப் பேரரசில் கிறிஸ்தவம் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட மதமாக மாறியிருந்தாலும் (கி.பி. 313) பெருமளவில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. ரோமப் பேரரசின் கீழைப் பகுதியில்தான் பலர் நகரங்களில் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். அந்நகரங்களிலிருந்து வணிகப் பாதைகள் வழியாக, கிறிஸ்தவர்களான யூதர் மற்றும் கிரேக்கர்களால் கிறிஸ்தவம் மேலைப் பகுதிக்கும் கொண்டுவரப்பட்டது.

சமுதாயத்தில் மேல்மட்டத்தில் இருந்தோரிடம் கிறிஸ்தவம் அதிகமாகப் பரவியிருக்கவில்லை. பேரரசின் இராணுவத்தினர் நடுவே "மித்ராஸ்" (Mythras) என்னும் கடவுள் வழிபாடு பரவலாயிருந்திருக்க வேண்டும். ரோமப் பேரரசன் காண்ஸ்டண்டைன் கிறிஸ்தவத்தைத் தழுவியதும், பல பெரிய கிறிஸ்தவக் கோவில்கள் கட்டியதும் கிறிஸ்தவம் பரவ தூண்டுதலாக இருந்தாலும், கிறிஸ்தவம் ஒரு சிறுபான்மை மதமாகவே இருந்தது.

இராணுவத்தில் பதவி வகித்தவர் ஒருவரின் மகன் என்ற முறையில் மார்ட்டினுக்கு 15 வயது நிரம்பியதும் அவரும் குதிரைப்படையில் வீரனாகச் சேரவேண்டிய கட்டாயம் இருந்தது. கி.பி. 334ம் ஆண்டு அளவில் மார்ட்டின் இன்றைய ஃபிரான்ஸ் நாட்டின் அமியேன் என்னும் நகரில் (அக்காலத்தில், கால் நாட்டு சாமரோப்ரீவா நகர்) குதிரைப் போர்வீரனாகப் பாளையத்தில் தங்கியிருந்தார்.

மார்ட்டின் தம் மேலாடையை இரவலருக்குக் கொடுத்த நிகழ்ச்சி:

மார்ட்டின் ரோமப் பேரரசில் போர்வீரனாகச் சேர்ந்து, பிரான்ஸின் அமியேன் நகரில் தங்கியிருந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்க தூண்டுதலாயிற்று.

ஒருநாள் மார்ட்டின் குதிரைமேல் ஏறி, அமியேன் நகரின் வாயிலை நேக்கி வந்துகொண்டிருந்தார். நகர வாயிலை நெருங்கிய வேளையில், அரைகுறையாக ஆடை உடுத்திய ஓர் இரவலர் ஆங்கு குளிரில் நின்று கொண்டிருக்கக் கண்டார். உடனேயே, மார்ட்டின் தாம் போர்த்தியிருந்த மேலாடையை இரண்டாக வெட்டிக் கிழித்தார். ஒரு பாதியை அந்த இரவலரிடம் கொடுத்து போர்த்திக்கொள்ளச் சொன்னார். மறுபாதியைத் தம் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டார்.

அன்றிரவு மார்ட்டின் ஒரு கனவு கண்டார். அக்கனவில் இயேசுவின் உருவம் தெரிந்தது. மார்ட்டின் இரவலருக்குக் கொடுத்த மேலாடைத் துண்டை இயேசு தம் மீது போர்த்தியிருந்தார். அப்போது இயேசு தம்மைச் சூழ்ந்து நின்ற வானதூதர்களை நோக்கி, "இதோ இங்கே நிற்பவர்தான் மார்ட்டின். இவர் இன்னும் திருமுழுக்குப் பெறவில்லை. ஆனால் நான் போர்த்திக்கொள்வதற்குத் தன் ஆடையை வெட்டி எனக்குத் தந்தவர் இவரே" என்று கூறினார். இக்காட்சியைக் கண்ட மார்ட்டின் பெரு வியப்புற்றார்.

இந்நிகழ்ச்சி வேறொரு வடிவத்திலும் சொல்லப்படுகிறது. அதாவது, மார்ட்டின் துயில் கலைந்து எழுந்ததும் தன் மேலாடையைப் பார்த்தார். அது ஒரு பாதித் துண்டாக இல்லாமல் அதிசயமான விதத்தில் முழு உடையாக மாறிவிட்டிருந்தது.

"கிறிஸ்துவின் போர்வீரன்" :
இயேசுவைக் கனவில் கண்ட மார்ட்டின் உள்ளத்தில் திடம் கொண்டவரானார். தான் எப்படியாவது உடனடியாகக் கிறிஸ்தவத்தைத் தழுவ வேண்டும் என்று முடிவுசெய்தார். தமது 18ம் வயதில் மார்ட்டின் கிறிஸ்தவ திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றார்.

ரோமப் பேரரசின் இராணுவத் துறையில் போர்வீரனாக மார்ட்டின் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அந்நாட்களில் அவர் நேரடியாக சண்டையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாறாக, ரோமப் பேரரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வீரர் குழுவின் இருந்திருக்கக் கூடும்.

ரோமப் படைகள் கால் நாட்டவரை எதிர்த்துப் போரிடவேண்டிய சூழ்நிலை எழுந்தது. இன்றைய ஜெர்மனியில் உள்ள வோர்ம்ஸ் (Worms) என்னும் நகரில் சண்டை நிகழப் போனது.

அப்பின்னணியில் கி.பி. 336ம் ஆண்டு மார்ட்டின் தாம் சண்டையில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்தார். அப்போது அவர் கூறியது: "நான் ரோமப் பேரரசனின் போர்வீரன் அல்ல, மாறாக நான் கிறிஸ்துவின் போர்வீரன். எனவே, நான் போரில் கலந்துகொள்ளப் போவதில்லை!"

மார்ட்டின் சண்டையில் பங்கேற்பதில்லை என்று கூறியது அவருடைய கோழைத்தனத்தைத்தான் காட்டுகிறது என்று ஒருசிலர் குற்றம் சாட்டவே, அவரைச் சிறையில் அடைத்தார்கள். அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த மார்ட்டின், தாம் ஆயுதம் தாங்கிப் போரிட்டு யாரையும் காயப்படுத்தவோ கொல்லவோ போவதில்லை என்றும், யாதொரு ஆயுதமும் தாங்காமல் படையின் முன்னணியில் செல்லத் தயார் என்றும் சவால் விட்டார். அச்சவாலை மார்ட்டினின் படைத் தலைவர்கள் ஏற்க முன்வந்த சமயத்தில், எதிர்த்துவந்த படை சண்டைக்கான திட்டத்தைக் கைவிட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. இவ்வாறு, மார்ட்டின் ஆயுதமின்றி எதிரிகளின் படையைச் சந்திக்கப் போவதாகக் கூறியது நிறைவேறாமல் போயிற்று. ஆனால் அதிகாரிகள் மார்ட்டினுக்குப் படைப் பிரிவிலிருந்து பணிவிடுதலை கொடுத்தார்கள்.

கிறிஸ்துவின் சீடர் :
மார்ட்டின் தம் வாழ்க்கை எவ்வாறு அமையவேண்டும் என்று தீர்மானித்ததும் பிரான்ஸ் நாட்டு 'தூர்' (Tours) என்னும் நகருக்குச் சென்றார். ரோமப் பேரரசில் அந்நகரத்தின் பெயர் "சேசரோடுனும்" (Caesarodunum) என்பதாகும். அங்கு புவாத்தியே நகர ஹிலரி என்னும் ஆயரின் சீடராக மார்ட்டின் சேர்ந்தார். ஹிலரி கிறிஸ்தவ சமய உண்மைகளை விளக்கி உரைப்பதில் தலைசிறந்தவராக விளங்கினார். ஒரே கடவுள் மூன்று பேராக இருக்கின்றார் என்னும் கிறிஸ்தவ உண்மையை மறுத்த ஆரியப் பிரிவினரை (Arianism) அவர் எதிர்த்தார். ஆரியுசு என்பவரின் கொள்கையைப் பின்பற்றிய ஆரியப் பிரிவினர் குறிப்பாக அரசவையில் செல்வாக்குக் கொண்டிருந்தனர்.

எனவே, புவாத்தியே நகரிலிருந்து ஹிலரி நாடுகடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து, மார்ட்டின் இத்தாலி திரும்பினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய, சம காலத்தவரான சுல்ப்பீசியுஸ் செவேருஸ் என்பவரின் கூற்றுப்படி, மார்ட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதிக் கொள்ளைக்காரன் ஒருவனை மனந்திருப்பினார்.

இல்லீரியா பகுதியிலிருந்து மார்ட்டின் மிலான் நகரம் வந்தபோது, அங்கு ஆட்சிசெய்த ஆரியப் பிரிவு ஆயர் அவுக்சேன்சியுஸ் மார்ட்டினை நகரிலிருந்து வெளியேற்றினார். எனவே, மார்ட்டின் அந்நகரை விட்டு அல்பேங்கா (Albenga) தீவுக்குப் போய் அங்கே தனிமையில் துறவற வாழ்க்கை வாழ்ந்தார்.

மார்ட்டின் தூர் நகரத்தின் ஆயராதல் :
கி.பி. 361ல் ஆயர் ஹிலரி மீண்டும் தம் பணித்தளமான புவாத்தியே நகருக்குத் திரும்பினார். மார்ட்டின் உடனேயே ஹிலரியிடம் சென்று, பணிபுரியலானார். புவாத்தியே நகருக்கு அருகில் துறவற இல்லம் ஒன்றைத் தொடங்கினார். அது பெனடிக்ட் சபை இல்லமாக (Ligug Abbey) வளர்ந்தது. அதுவே பிரான்ஸ் (கால்) நாட்டில் நிறுவப்பட்ட முதல் துறவியர் இல்லம் ஆகும். அந்த இல்லத்திலிருந்து அதை அடுத்த நாட்டுப் பகுதிகளில் கிறிஸ்தவம் பரவியது.

மார்ட்டின் மேற்கு பிரான்ஸ் பகுதிகளில் பயணமாகச் சென்று கிறிஸ்தவத்தைப் பரப்பினார். அவர் சென்ற இடங்களில் அவரைப் பற்றிய கதைகள் இன்றுவரை மக்கள் நடுவே கூறப்பட்டுவருகின்றன.

தூர் நகரத்தில் மார்ட்டின் ஆற்றிய பணியைக் கண்டு மகிழ்ந்த மக்கள் அவர் தங்கள் ஆயராகப் பதவி ஏற்க வேண்டும் என்று விரும்பினார்கள். இவ்வாறு மார்ட்டின் கி.பி. 371ம் ஆண்டில் தூர் நகரத்தின் ஆயராகப் பொறுப்பேற்றார். அப்பொறுப்பில் அவர் கிறிஸ்தவம் அல்லாத பேகனிய சமயம் சார்ந்த கோவில்களைத் தகர்த்தார். பேகனிய பழக்கவழக்கங்களை ஒழித்தார்.

கி.பி. 372ல் மார்ட்டின் தூர் நகரத்துக்கு அருகே ஒரு துறவற இல்லத்தைத் தொடங்கினார். அந்த இல்லத்திற்குச் சென்று மார்ட்டின் வாழ்ந்தார். அந்த மடம் லுவார் நதியின் மறுகரையில் தூர் நகருக்கு எதிர்ப்புறம் இருந்தது. அந்த இல்லத்திற்குப் பொறுப்பாக ஒரு மடாதிபதியும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு அம்மடம் ஓரளவு தன்னாட்சி கொண்டதாக விளங்கியது.

தூர் நகரத்தின் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் மார்ட்டின் தம் மறைமாவட்டத்தில் பங்குகளை ஏற்படுத்தினார்.

மார்ட்டினின் இரக்க குணம் :
மார்ட்டின் வாழ்ந்த காலத்தில், "ஸ்பெயின்"(Spain) மற்றும் "கால்"(Gaul) பகுதிகளில் "பிரிசில்லியன்"(Priscillian) என்பவரது கொள்கைகளை "சரகோசாவின் முதலாம் சங்கம்"(First Council of Saragossa) தடை செய்திருந்தது. ஆயினும், பிரிசிலியன் "அவிலா"(Bishop of Avila) நகரின் ஆயராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்த "இத்தாசியஸ்"(Ithacius of Ossonoba) என்பவர், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை "கிரேஷியன்"(Emperor Gratian) என்னும் ரோமப் பேரரசனின் முன் கொணர்ந்தனர். பேரரசன் கிரேஷியன், பிரிசில்லியன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான எழுத்துபூர்வமான உத்தரவை பிறப்பித்தார். "மிலன் பேராயர் அம்புரோஸ்"(Ambrose of Milan" மற்றும் திருத்தந்தை "முதலாம் டமாஸ்கஸ்"(Pope Damasus I) ஆகியோரின் ஆதரவைப் பெற இயலாத பிரிசில்லியன், "மேற்கத்திய ரோமப் பேரரசரான"(Western Roman Emperor) "மேக்னஸ் மேக்சிமஸ்" (Magnus Maximus) என்பவரிடம் மேல்முறையீட்டுக்கு சென்றார். அதனை விசாரித்த பேரரசர் "மேக்னஸ் மேக்சிமஸ்", பேரரசன் "கிரேஷியனின்"(Emperor Gratian) அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

மார்ட்டின் பிரிசில்லியனின் கொள்கைகளை எதிர்த்தவர்தான் என்றாலும், "டிரையர்"(Trier) நகரில் அமைந்திருந்த பேரரசன் அவைக்கு விரைந்து சென்று, பிரிசில்லியனையும் அவர்தம் சீடர்களையும் அரசவை தண்டிப்பதோ கொலைசெய்வதோ முறையல்ல என்று பிரிசில்லியனுக்கு ஆதரவாகப் பரிந்துபேசினார். அரசனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தாலும், மார்ட்டின் நகரை விட்டுச் சென்ற உடனேயே (கி.பி. 385) பிரிசில்லியனும் சீடர்களும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

இதைக் கேள்விப்பட்ட மார்ட்டின் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்தார். மரண தண்டனை அளிக்கப்படுவதற்குத் தூண்டுதலாக இருந்த இத்தாசியஸ் என்னும் ஸ்பேனிஷ் ஆயரோடு தொடர்புகொள்ள அவர் மறுத்தார். இறுதியில் மன்னனின் வற்புறுத்தலுக்குப் பணிந்து அந்த ஆயரோடு தொடர்புகொண்டார்.

இறப்பு :
மார்ட்டின் மத்திய பிரான்ஸின் "கால்"(Gaul) பிராந்தியமான "காண்டேஸ்-செயின்ட்-மார்ட்டின்) (Candes-Saint-Martin) என்னும் இடத்தில் கி.பி. 397ம் ஆண்டு இறந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா