Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மார்டின் டி போரஸ் ✠(St. Martin de Porres)
  Limage contient peut-tre : plein air  
நினைவுத் திருநாள் : (நவம்பர் / nov - 03)
✠ புனிதர் மார்டின் டி போரஸ் ✠(St. Martin de Porres)

 டொமினிக்கன் சபை பொதுநிலை சகோதரர் :
(Lay brother of the Dominican Order)

பிறப்பு : டிசம்பர் 9, 1579
லிமா, காலனியாதிக்க பெரு
(Lima, Viceroyalty of Peru)

இறப்பு : நவம்பர் 3, 1639 (வயது 59)
லிமா, காலனியாதிக்க பெரு
(Lima, Viceroyalty of Peru)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)

முக்திப்பேறு பட்டம் : கி.பி. 1837
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி
(Pope Gregory XVI)

புனிதர் பட்டம் : மே 6, 1962
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
(Pope John XXIII)

முக்கிய திருத்தலங்கள் :
சாந்தோ டொமினிகோ ஆலயம், லிமா, பெரு
(Church of Santo Dominigo, Lima, Peru)

நினைவுத் திருவிழா : நவம்பர் 3

சித்தரிக்கப்படும் வகை :
ஒரு நாய், ஒரு பூனை மற்றும் ஒரு பறவை ஒரே தட்டில் ஒன்றாக உணவு உண்பது; விளக்குமாறு, சிலுவை, ஜபமாலை, இதயம்

பாதுகாவல் :
பிலாக்ஸி மறைமாவட்டம் (Diocese of Biloxi), கருப்பு இன மக்கள், சிகை அலங்காரிகள், விடுதி காப்பாளர், கலப்பு இன மக்கள், பெரு (Peru), ஏழை மக்கள், பொது கல்வி, பொது சுகாதாரம், அரசு பள்ளிகள், பொது கல்வி, இன உறவுகள், சமூக நீதி, தொலைக்காட்சி, மெக்ஸிக்கோ (Mexico), பெருவியன் கடற்படை விமானிகள் (Peruvian Naval Aviators), வியட்நாம் (Vietnam), மிசிசிப்பி (Mississippi), ஹோட்டல் நடத்துபவர்கள் (Innkeepers), லாட்டரி, லாட்டரியில் வெற்றி பெற்றவர்கள்,

புனிதர் மார்டின் டி போரஸ், ஒரு டொமினிக்கன் சபையினைச் சேர்ந்த பொது நிலை சகோதரரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் கலப்பு இன மக்கள், அமைதிக்காக துன்பப்படுவோர் முதலியோருக்கு பாதுகாவலராகக் கருதப்படுகின்றார். இவர் தன் வாழ்நாள் முழுதும் ஏழைகளுக்காகவே பணியாற்றினார். ஒரு அனாதை இல்லத்தையும், ஒரு குழந்தைகளுக்கான மருத்துவமனையையும் நிறுவினார். நோன்புகள், மற்றும் புலால் உணவு தவிர்த்தல், உள்ளிட்ட எளிமையான மற்றும் கடுமையான தவமுயற்சிகளைக் கொண்ட கடின வாழ்க்கை முறை வாழ்ந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு :
"ஜுவான் மார்டின் டி போரஸ் வெலாஸ்குயிஸ்" (Juan Martin de Porres Velzquez) எனும் இயற்பெயர் கொண்ட இவர், "ஸ்பேனிஷ் காலனித்துவ நிர்வாக மாவட்டமான" (Spanish Colonial Administrative District) பெருவின் (Peru) தலைநகரான லிமாவில் (Lima) கி.பி. 1579ம் ஆண்டு பிறந்தார். ஸ்பேனிஷ் பிரபுவான "டான் ஜூவான் டி போரேஸ்" (Don Juan de Porres) எனும் தந்தைக்கும், பனாமா (Panama) நாட்டில் அடிமையாக இருந்து விடுதலை பெற்ற "அனா வெலாஸ்குயிஸ்" (Ana Velzquez) என்ற ஆஃபிரிக்க இன தாய்க்கும் சட்டவிரோதமாகப் பிறந்த இவருக்கு கி.பி. 1581ல் பிறந்த "ஜுவானா" (Juana) எனும் பெயருடைய ஒரு இளைய சகோதரியும் உண்டு. தங்கை பிறந்த பிறகு, இவரது தந்தை இவர்களது குடும்பத்தை கைவிட்டு சென்றார். இவர்களுடைய தாயார், ஒரு ஆடை சலவையகத்தில் வேலை செய்து தமது குழந்தைகளை வளர்த்தார். மிகவும் வறுமையில் வாடியதாலும், இவரது தாயாரால் இவரை வளர்க்க இயலாமல் போனதாலும் ஒரு ஆரம்ப பள்ளியில் இரண்டு வருடங்கள் வேலை செய்தார். பின்னர், தமது பத்துவயதிலேயே அறுவை சிகிச்சை மருத்துவரிடமும் (Surgeon), நாவிதரிடமும் (Barber) வேலை பயில சென்றார். இளம் வயதிலேயே இரவு முழுதும் செபிக்கும் வழக்கம் இவரிடம் இருந்தது.

அப்போதைய பெரு நாட்டின் சட்டங்கள், ஆபிரிக்க இன மக்களையும், அமெரிக்க குடி மக்களையும் ஆன்மீக சபைகளில் சேருவதை தடை செய்தது. மார்டினுக்கு இருந்த ஒரே வழி, லிமா நகரிலிருந்த "தூய செபமாலை புகுநிலை டொமினிக்கன் துறவியரிடம்", (Dominicans of Holy Rosary Priory) தம்மை தன்னார்வ தொண்டு பணியாளாக சேர்த்துக்கொள்ள வேண்டுவதேயாகும். சரீர உழைப்பை நல்கிய இவருக்கு பிரதியுபகாரமாக, துரவியரில் சீருடை அணிந்துகொள்ளவும், அவர்களுடன் வாசிக்கவும் உரிமை கிட்டியது. தனது 15ம் வயதில் லிமா நகரிலுள்ள டொமினிக்கன் சபையில் சேர விண்ணப்பித்தார். முதலில் டொமினிக்கன் சபையினரின் செபமாலை பள்ளியில் வேலையாளாகவே அனுமதிக்கப்பட்டாலும், பின்னர் பல முக்கிய பொறுப்புகளும் இவருக்கு வழங்கப்பட்டன. பின்னர் டொமினிக்கன் சபையில் சேர கடவுள் தன்னை அழைப்பதாக உணர்ந்த இவர் இச்சபையின் மூன்றாம் சபையில் சேர்ந்தார்.

தொடர்ந்து, தமது நாவிதன் பணியையும், குணமாக்கும் பணிகளையும் செய்துவந்தார். இவர், தமது செப வல்லமையால் பலரை அற்புதமாக குணமாக்கியதாக கூறப்படுகிறது. சமையலறைப் பணிகள், சலவைப் பணிகள், மற்றும் சுத்திகரிக்கும் பணிகளும் செய்தார்.

எட்டு வருடங்களின் பின்னர், மார்டின் மீது இரக்கம் கொண்ட தூய செபமாலை மடத்தின் தலைவரான "ஜுவான் டி லொரென்ஸானா" (Juan de Lorenzana) என்பவர், பெரு நாட்டின் சட்டங்களுக்கு மறைவாக மார்ட்டினை டொமினிக்கன் சபையின் மூன்றாம் நிலை துறவற பிரமாணங்களை ஏற்க வைக்க முடிவெடுத்தார்.

24 வயதான மார்ட்டின், கி.பி. 1603ம் ஆண்டு, டொமினிக்கன் சபை பொது நிலை சகோதரராக பிரமாணங்களை ஏற்றார். ஆனால், தமது தந்தையின் தலையீடினால்தான் தமது அந்தஸ்து உயர்கிறதோ எனும் ஐயம் காரணமாக, இவர் பலமுறை இதனை மறுத்து வந்திருக்கிறார். அத்துடன், இதன் காரணமாகவே அவர் ஒரு குருத்துவ அருட்பொழிவை இறுதிவரை மறுத்துவந்தார்.

அவரது பள்ளி கடனில் மூழ்கும்போதெல்லாம், அங்குள்ள துறவியரிடம், "நான் ஒரு தரித்திரம் பீடித்த "முலெட்டோ" (Mulatto) (நீக்ரோவுக்கும் வெள்ளையருக்கும் பிறந்தவர்), என்னை விற்றுவிடுங்கள்" என்று கெஞ்சுவார்.

மார்ட்டின், அர்ச்சிஸ்ட்ட நற்கருணையின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒருநாளிரவு, திருப்பலி பீடத்தின் படியின்மீது முழங்கால்படியிட்டு நற்கருணையின் முன்னர் செபித்துக்கொண்டிருந்தவேளை, அவர் நின்றிருந்த படிக்கட்டில் தீ பற்றிக்கொண்டது. தீயினால் ஏற்பட்ட அத்துணை குழப்பத்திலும் சந்ததியிலும், தம்மைச் சுற்றி நடப்பவற்றை அறியாதவராக தாம் இருந்த இடத்திலேயே இருந்தார்.

34 வயதான மார்டின், பொதுநிலை சகோதரருக்கான துறவற சீருடைகள் கொடுக்கப்பட்டதும், நோயுற்றவர்களுக்கு சேவை செய்யும் மருந்தகத்தின் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். சுமார் இருபத்தைந்து வருடங்கள், இவர் இறக்கும்வரை இச்சுகாதார மையத்திலேயே இருந்தார். நோயாளிகளுக்கு சேவையாற்றுவதில் அக்கறை கொண்டிருந்தார். நோயாளிகளின் தேவையுணர்ந்து அவர்களுக்கு சேவை செய்யும் கடின பணிக்குத் தேவையான நல்லொழுக்கமும் பொறுமையும் அவரிடமிருந்ததை அவருடைய மேலதிகாரிகள் கவனித்தனர். பள்ளிக்கு வெளியே இருந்து அழைத்துவரப்படும் நோயாளிகளையும் கவனித்தார். அவர்களை குணப்படுத்தினார். ஒரு குடுவை தண்ணீர் மூலம் அவர் நோயாளிகளை குணப்படுத்தினார். வேறுபாடுகளேயில்லாமல் ஸ்பேனிஷ் பிரபுக்களுக்கும், அண்மையில் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளுக்கும் மருத்துவ சேவை புரிந்தார். ஒருநாள், உடல் முழுதும் புண்ணான, ஏறக்குறைய நிர்வாண நிலையிலிருந்த ஒரு பிச்சைக்காரன் தமது இரு கைகளையும் நீட்டினார். மார்டின் அவரை உடனே தமது படுக்கைக்கு கொண்டு சென்றார். இதனைக் கண்ட இவரது சகாவான ஒரு சகோதரர் மார்டினை கடிந்துகொண்டார். அவருக்கு பதிலளித்த மார்டின், "என் அன்பு சகோதரா, இரக்கமே தூய்மைக்குத் தகுதியானது" என்றார்.

அக்காலத்தில், ஒருமுறை லிமா நகரில் தொற்று நோய் பரவியதால் இவரின் பணி மிகவும் கடுமையாக இருந்தது. செபமாலை பள்ளியின் மடத்தில் சுமார் அறுபது துறவியர் இருந்தனர். அனைவரும் நோய்வாய்ப்பட்டிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களிருந்த அறைகள் மூடி பூட்டப்பட்டிருந்தன. வெளியே வர இயலாத அவர்களுக்கு எவராலும் மருத்துவம் பார்க்க இயலவில்லை. ஆனால், மார்டினோ, பூட்டியிருந்த கதவுகளை ஊடுருவிச் சென்று நோயுற்ற துறவியருக்கு மருத்துவம் செய்தார். இதுபோல் பலமுறை அதிசயங்கள் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.

புலால் உணவைத் தவிர்த்த மார்டின், பள்ளி நிர்வாகம் தர இயலாதவற்றை வாங்குவதற்காக தர்மம் (பிச்சை) எடுத்து வாங்கி வருவார். சாதரணமாக, தாம் பிச்சை எடுத்து வரும் பொருட்களைக் கொண்டு, தினமும் சுமார் 160 பேருக்கு உணவு வழங்குவார். குறிப்பிட்ட ஒரு சிறு தொகையை ஏழை மக்களுக்கும் வழங்குவார். அவரது தினசரி பணிகளான சமையலறைப் பணிகள், சலவைப் பணிகள், மற்றும் மருத்துவமனைப் பணிகளுடன், அவரை உயரே காற்றில் தூக்கிய பரவச அனுபவங்கள், அவர் செபிக்கும் அறையை நிரப்பிய வெளிச்சம், ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் அதிசயங்கள் நிகழ்த்துவது, உடனடி குணப்படுத்துதல், மிருகங்களுடனான பரஸ்பர ஒத்துணர்வு ஆகியவற்றுடன் அவரது வாழ்க்கை ஒரு அசாதாரண பரிசாக விளங்கியது. கைவிடப்பட்ட சிறுவர்களுக்காகவும், அனாதைகளுக்காகவும் லிமா நகரில் ஒரு இல்லத்தை நிறுவினார்.

இறப்பும் புனிதர் பட்டமளிப்பும் :
இவர், டொமினிக்கன் பொதுநிலையினரும், புனிதர்களுமான "புனிதர் ரோஸ்" (St. Rose of Lima), மற்றும் புனிதர் "ஜுவான் மசியாஸ்" (St. Juan Macas) ஆகியோரின் நண்பராவார். இவர் லிமாவில் கி.பி. 1639ம் ஆண்டு, நவம்பர் மாதம், 3ம் நாள் இறந்தார். இவருக்கு இறுதி வணக்கம் செலுத்த இவரின் உடல் மக்களுக்காக வைக்கப்பட்டு இவர் இருந்த மடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. இவரால் பல புதுமைகள் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டதால், இவரின் புனிதர் பட்ட நடவடிக்கைகள் இவர் இறந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு துவங்கப்பட்டது. இவருக்கு கி.பி. 1837ல் திருத்தந்தை ஆறாம் கிரகோரியால் அருளாளர் பட்டமும், கி.பி. 1962ம் ஆண்டு, மே மாதம், ஆறாம் தேதி, திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானால் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது.

இவரது நினைவுத் திருவிழா, நவம்பர் மாதம், 3ம் நாள் ஆகும்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா