Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் லியோனார்ட் ✠ (St. Leonard of Port Maurice)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 26
✠ புனிதர் லியோனார்ட் ✠ (St. Leonard of Port Maurice)

 இத்தாலிய ஃபிரான்சிஸ்கன் போதகர்/ துறவற எழுத்தாளர் :
(Italian Franciscan Preacher/ Ascetic writer)

பிறப்பு : டிசம்பர் 20, 1676
போர்டோ மவுரிஸியோ
(Porto Maurizio)

இறப்பு : நவம்பர் 26, 1751
ரோம் (Rome)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஜூன் 19, 1796
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)

புனிதர் பட்டம் : ஜூன் 29, 1867
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்
(Pope Pius IX)

பாதுகாவல் : மறைப்பணியாளர்கள்

நினைவுத் திருநாள் : நவம்பர் 26

"பால் ஜெரோம் கஸனோவா" (Paul Jerome Casanova) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் லியோனார்ட், இத்தாலிய ஃபிரான்சிஸ்கன் சபை துறவியும் போதகரும் ஆவார். "டொமினிகோ கஸனோவா" மற்றும் "அன்னா மரியா பென்ஸா" (Domenico Casanova and Anna Maria Benza) இவரது பெற்றோர் ஆவர். இவரது தந்தையார் ஒரு கப்பல் தலைவர் ஆவார். இவர்களது குடும்பம் இத்தாலியின் வடமேற்கு கடற்கரை பகுதியான "போர்ட் மௌரிஸ்" (Port Maurice) எனும் இடத்தில் வசித்து வந்தனர்.

இவர் தமது பதின்மூன்று வயதில் தமது மாமன் "அகோஸ்டினோ" (Agostino) என்பவருடன் தங்கி "இயேசுசபையின் ரோமன் கல்லூரியில்" (Jesuit Roman College) கல்வி பயில்வதற்காக இத்தாலி சென்றார். நல்ல மாணவரான லியோனார்ட், மருத்துவ தொழிலை தேர்வு செய்திருந்தார். ஆனால், 1697ம் ஆண்டில் "இளம் துறவியர்" (Friars Minor ) சபையில் இணைந்தார். அவர் தாம் தேர்வு செய்திருந்த மருத்துவ தொழிலை கைவிட்டபோது, அவரது மாமனும் அவரை கைவிட்டார்.

1697ம் ஆண்டு, அக்டோபர் மாதம், இரண்டாம் தேதி, தமது துறவற சீருடைகளைப் பெற்றுக்கொண்ட "பால் ஜெரோம் கஸனோவா" "அருட்சகோதரர் லியோனார்ட்" என்ற ஆன்மீக பெயரையும் ஏற்றுக்கொண்டார்.

மத்திய இத்தாலியின் "சபின் மலை" (Sabine mountains) பகுதியிலுள்ள "போண்டிசெல்லி" (Ponticelli) என்னும் இடத்தில் "துறவறப் புகுநிலை பயிற்சியை" (Novitiate) பூர்த்தி செய்தபின்னர், ரோம் நகரின் "பாலடின் (Palatine) எனுமிடத்திலுள்ள "தூய போனவெஞ்சுரா" கல்லூரியில் (St. Bonaventura) தமது கல்வியை முடித்தார். குருத்துவ அருட்பொழிவின் பிறகு அங்கேயே தங்கி பேராசிரியராக பணியாற்றிய லியோனார்ட், சீன பயணங்களை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அந்நேரத்தில் (1704ல்) அல்ஸர் நோயும் அதில் இரத்தப்போக்குமாக பாதிக்கப்பட்ட லியோனார்ட் அவரது சொந்த ஊரிலுள்ள ஃபிரான்ஸிஸ்கன் துறவு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். நான்கு வருடங்களின் பின்னர் நோயிலிருந்து குணமடைந்த அவர் "போர்ட்டோ மௌரிஸோ" (Porto Maurizio) பகுதிகளில் தமது போதனையை தொடங்கினார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் தலைசிறந்த போதகர் என்று அழைக்கப்பட்ட லியோனார்ட், சமய போதனைகளிலும் தியானங்களிலும் நோன்பு விரதம் போன்றவைகளைப் பற்றியும் பங்கு பயணங்கள் பற்றியும் பிரசங்கிப்பதில் பிரபலமானவராயும் வல்லவராயும் திகழ்ந்தார். சிறந்த மறைப்பரப்பு பணியாளராக செயல்பட்டார். பயணங்கள் பல மேற்கொண்டு, ஊர் ஊராக சென்று மறையுரையாற்றினார். இவரின் மறையுரையால் பலர் கவர்ந்து, இவரை பின்தொடர்ந்தனர். அனைத்து வித மக்களும் எளிமையாக புரிந்துகொள்ளும் விதத்தில் மறையுரை ஆற்றும் திறமையை பெற்றிருந்தார். இயேசுவின் நற்செய்தியை மிக எளிய முறையில் அறிவித்தார். அவரது ஒவ்வொரு போதனை பயணங்களும் பதினைந்து முதல் பதினெட்டு நாட்கள் வரை நீடித்தன. மேலும் அதன் பிறகும் ஒரு வாரம் வரை பாவ மன்னிப்பு கேட்கும் பணிக்காக தங்கி இருப்பார்.

1720ம் ஆண்டு, "டுஸ்கனி" (Tuscany) எல்லைகளைக் கடந்து மத்திய மற்றும் தென் இத்தாலி பகுதிகளில் மறையுரையாற்றினார். திருத்தந்தை பன்னிரெண்டாம் கிளெமென்ட்டும் (Pope Clement XII). திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட்டும் (Pope Benedict XIV) அவரை ரோம் வரவழைத்து கௌரவித்தனர். திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் (Pope Benedict XIV), அவரை பல்வேறு சிக்கலான இராஜதந்திர பணிகளில் ஈடுபடுத்தினார். "ஜெனோவா" (Genoa), "கோர்ஸிகா" (Corsica), "லுக்கா" (Lucca) மற்றும் "ஸ்போலெடோ" (Spoleto) ஆகிய நாடுகளின் பிரஜைகள் திருத்தந்தையின் நோக்கங்களை பிரதிநிதித்துவம் செய்ய ஒரு அலங்கார கர்தினாலை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்கள் கண்டதோ மிகவும் பணிவான, காலணிகள் கூட இல்லாத, சேரும் சகதியுமான ஒரு துறவியை. அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறானவராக அவர் இருந்தார்.

லியோனார்ட், சிறிது காலம் இங்கிலாந்து (England), ஸ்காட்லாந்து (Scotland) மற்றும் அயர்லாந்து (Ireland) நாடுகளின் அரசனான, "ஜேம்ஸ் பிரான்சிஸ் எட்வர்ட்" (James Francis Edward) என்பவரது மனைவியான "மரியா கிளமென்டினாவின்" (Maria Clementina Sobieska) ஆன்மீக வழிகாட்டியாக பணியமர்த்தப்பட்டிருந்தார்.

லியோனார்ட் பல பக்தி மார்க்க சபைகளை நிறுவினார். இயேசுவின் திருஇருதய (Sacred Heart of Jesus) பக்தியையும் தூய நற்கருணை (Most Blessed Sacrament) ஆராதனையையும் பரப்ப தம்மை அர்ப்பணித்துக்கொண்டார்.

நாற்பத்துமூன்று வருடங்களுக்கும் மேலாக அன்னை மரியாளுக்கு வணக்கத்தையும், சிலுவைப்பாதை வழிபாடுகளையும் போதித்த லியோனார்ட், எளிமையான முறையில் மக்களை வழிநடத்தி இறையுணர்வை கொண்டு வாழ செய்தார். இவர் மருத்துவப்படிப்பையும் தத்துவயியலையும் கற்றிருந்தபோதும் கூட எளிமையாக வாழ்ந்து நற்செய்திக்கு சான்று பகிர்ந்தார்.

மறை பரப்புதல் பணியின் கடின உழைப்பு அவரது ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்தது. எழுபத்தைந்து வயதான புனித லியோனார்ட் தமது "தூய பொனவெஞ்சுரா" (St. Bonaventura) துறவு இல்லத்தில் மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா