Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் ஜோசஃப் பிக்னடெல்லி ✠(St. Joseph Pignatelli)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 14
✠ புனிதர் ஜோசஃப் பிக்னடெல்லி ✠(St. Joseph Pignatelli)

*இயேசு சபையை புதுப்பித்தவர் : (Restorer of the Society of Jesus)

*பிறப்பு : டிசம்பர் 27, 1737
ஸரகோஸா, ஸ்பெயின் (Zaragoza, Spain)

*இறப்பு : நவம்பர் 15, 1811 (வயது 73)
ரோம், முதலாவது ஃபிரெஞ்ச் பேரரசு (Rome, First French Empire)

*ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை - இயேசு சபை (Roman Catholic Church - Society of Jesus)

*முக்திபேறு பட்டம் : மே 21, 1933
திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI)

*புனிதர் பட்டம் : மே 12, 1954
திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ் (Pope Pius XII)

*முக்கிய திருத்தலம் :
"கேஸு" ஆலயம்; பியஸ்ஸா டெல் கெஸ், ரோம், இத்தாலி
(Church of the Gesù; Piazza del Ges, Rome, Italy)

புனிதர் ஜோசஃப் மேரி பிக்னடெல்லி, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஸ்பேனிஷ் குருவும், இயேசு சபைச் சமூகம் ஒடுக்கப்பட்டதன் பின்னர், "சார்டினியாவில்" (Sardinia) இயேசு சபையினர் நாடுகடத்தலின்போது அச்சபையினரின் அதிகாரபூர்வமற்ற தலைவராக செயல்பட்டவருமாவார். இயேசு சபையை மீட்டு புதுப்பித்ததன் காரணமாக, அவர் இயேசு சபை சமூகத்தின் இரண்டாம் நிறுவனராக கருதப்பட்டார்.

பிக்னடெல்லி, ஸ்பெய்ன் நாட்டின், "ஸரகோஸா" (Zaragoza) மாநிலத்தின் "நியோபோலிடன்" (Neapolitan) வம்சாவளியின் உன்னத பரம்பரையில் பிறந்தவராவார். அவர் தமது ஆரம்பக் கல்வியை தமது சகோதரர் "நிக்கோலசுடன்" (Nicolàs) இணைந்து இயேசு சபை பள்ளியில் பயின்றார். அங்கே அவருக்கு காச நோயும் பிளேக் என்னும் நோய்த்தொற்றும் ஏற்பட்டது. இதன் காரணமாக இவர் தமது வாழ்நாள் முழுதும் துன்புற்றார்.

1753ம் ஆண்டு, மே மாதம், 8ம் தேதி, தமது பதினைந்தாம் வயதில், "டர்ரகொனா" (Tarragona) எனும் இடத்திலுள்ள இயேசு சபையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இணைந்த இவர், தமது கத்தோலிக்க இறையியல் கல்வியை பூர்த்தி செய்து குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பின்னர் "ஸரகோஸா" (College of Zaragoza) கல்லூரியில் கற்பிக்கும் பணியிலமர்த்தப்பட்டார்.

1766ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சத்துக்கு ஸரகோஸா ஆளுநர் பொறுப்பாக்கப்பட்டார். இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள், ஆளுநரின் மாளிகையை தீயிட்டு கொளுத்த முற்பட்டனர். மக்களை வசப்படுத்தியிருந்த பிக்னடெல்லியின் முயற்சியால் பேரிடர் தவிர்க்கப்பட்டது. ஸ்பெயின் அரசர் "மூன்றாம் சார்லஸ்" (King Charles III of Spain) அனுப்பிய நன்றி நவிலல் கடிதத்தையும் மீறி கலகமூட்டியதாகவும், தூண்டியதாகவும், இயேசு சபையினர் குற்றம் சாட்டப்பட்டனர். மேற்சொன்ன குற்றச்சாட்டினை பிக்னடெல்லி மறுத்ததால் அவரும் இயேசு சபையினரும் 1767ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 4ம் தேதி, ஸரகோஸாவை விட்டு வெளியேற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

பிக்னடெல்லியும், இயேசு சபையின் மற்றுமொரு அங்கத்தினரான - அவரது சகோதரர் நிக்கொலசும் இயேசு சபையை விட்டு விலகுவதானால் ஸரகோஸா நகரிலேயே இருக்க அனுமதிப்பதாக அரசனுடைய கையாளும், இயேசு சபையினரை வெளியேற்றுவதை ஊக்குவிப்பவருமான "அராண்டா" பிரபு (The Count of Aranda) கூறினார். ஆனால், தமது நோயையும் பொருட்படுத்தாத பிக்னடெல்லியும் அவரது சகோதரர் நிக்கொலசும் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தனர்.

நாடு கடத்தல் :
ஸரகோஸா'விலிருந்து நாடு கடத்தப்பட்ட இயேசு சபையினர் இத்தாலியிலுள்ள "ஸிவிட்டவெச்சியா" (Civitavecchia) என்னுமிடத்தில் இறங்க திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமென்ட் (Pope Clement XIII) அனுமதி வழங்க மறுத்ததால், அவர்கள் கடல்வழியாக "கோர்ஸிகன் குடியரசுக்கு" (Corsican Republic) பயணித்தனர்.

1770ல் ஃபிரான்ஸ், கோர்ஸிக்கா (Corsica) நாட்டை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டபோது, இயேசு சபையினர் ஜெனோவா (Genoa) சென்று தங்க அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், 1773ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இயேசு சபையினர் முழு சமுதாயத்தையும் திருத்தந்தை "பதினான்காம் கிளமென்ட்" (Pope Clement XIV) அவர்களால் நசுக்கி கலைக்கப்பட்டது. பிக்னடெல்லி சகோதரர்கள் இருவரும் வடக்கு இத்தாலியின் பிராந்தியமான "எமிலியா-ரொமாக்னாவின்" (Emilia-Romagna) தலைநகரான "பொலோக்னாவில்" (Bologna) தஞ்சம் பெற அனுமதிக்கப்பட்டனர். அங்கே ஓய்வு பெற அனுமதிக்கப்பட்ட அவர்கள், தமது கிறிஸ்தவ ஊழியங்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனர்.

சில வருடங்களின் பின்னர், புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருத்தந்தை ஆறாம் பயஸ், (Pope Pius VI) வாழும் முன்னாள் இயேசு சபையினரை ரஷிய பேரரசிலுள்ள இயேசு சபையினருடன் சந்தித்து உரையாட அனுமதி வழங்கினார்.

முன்பொருமுறை, 1768ம் ஆண்டு, பிக்னடெல்லியையும் மற்றுமுள்ள இயேசு சபையினரையும் பலாத்காரமாக நாடு கடத்திய "அராண்டா பிரபுவான" (The Count of Aranda) "ஃபெர்டினான்ட்" (Ferdinand), இம்முறை தமது பூமியான, இத்தாலிய பிராந்தியமான "பார்மாவில்" (Parma) அவர்கள் நிரந்தரமாக தங்கிக்கொண்டு, இயேசுசபையை மறுநிர்மாணம் செய்துகொள்ள அனுமதித்தான். 1793ம் ஆண்டு, ரஷியப் பேரரசி "இரண்டாம் கேதரனின்" (Empress Catherine II of Russia) அனுமதியுடன், ரஷியாவின் சில இயேசுசபை தந்தையருடன், வேறு சில இயேசுசபையினருடன் இணைந்து, புதிய சபை நடைமுறை செய்யப்பட்டது.

1797ம் ஆண்டு, ஜூலை மாதம், 6ம் தேதி, பிக்னடெல்லி தமது மத சத்திய பிரமாணங்களை புதுப்பித்துக் கொண்டார். இயேசு சபையினர் தமது வழக்கமான சமய சடங்குகளை நடத்தத் தொடங்கினர். 1799ம் ஆண்டு, இத்தாலிய பிராந்தியமான "பார்மாவின்" (Parma) நகரான "கொலோர்னோவிலுள்ள" (Colorno) புதிய புகுமுக பயிற்சியாளர் (New Novitiate) மடத்தின் புதிய தலைவராக (Master of Novices), திருத்தந்தையின் அனுமதியுடன் நியமிக்கப்பட்டார். 1802ம் ஆண்டு, "பார்மாவின் பிரபு" (Duke of Parma) மரணமடைந்ததும், அம்மாநிலம் ஃபிரான்சுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. 1800ம் ஆண்டு, திருத்தந்தை ஏழாம் பயஸ் (Pope Pius VII), இத்தாலிய பிராந்தியத்தின் இயேசுசபை தலைவராக (Provincial Superior of the Jesuits) இவரை நியமித்தார். இத்தாலியின் தன்னாட்சிப் பகுதியும், "மத்தியதரைக் கடலிலுள்ள" (Mediterranean Sea) பெரும் தீவுமான "சிசிலியில்" (Sicily) பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பிக்னடெல்லி, "ரோம்" (Rome), "டிவோலி" (Tivoli), மற்றும் "ஒர்வியேட்டோ" (Orvieto) ஆகிய நகரங்களில் கல்லூரிகளை நிறுவினார். இயேசுசபை தந்தையர் படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

திருத்தந்தை "ஏழாம் பயசின்" (Pope Pius VII) நாடு கடத்தலின்போதும், ஃபிரான்ஸ் நாடு திருத்தந்தையர் மாநிலங்களை (French occupation of the Papal States) கைப்பற்றியபோதும், விழிப்புடைமைக்கு பெரும்பாலும் காரணமாக இருந்த பிக்னடெல்லியின் தலைமையின் கீழே இயேசு சபையினர் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக இருந்தனர்.

மரணமும் புனிதர் பட்டமும் :
ரோம் நகரம், ஃபிரான்ஸின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது, காச நோயின் தீவிரத்தால் ஏற்பட்ட குருதிப் போக்கு பிக்னடெல்லியின் மரணத்துக்கு காரணமாய் அமைந்தது. 1811ம் ஆண்டு, நவம்பர் மாதம், 15ம் நாள், ஜோசஃப் மேரி பிக்னடெல்லி மரித்தார். அன்னாரது பூவுடல், ரோமிலுள்ள இயேசு சபையின் தேவாலய பலிபீடத்தின் கீழே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

1933ம் ஆண்டு, மே மாதம், 21ம் தேதி, திருத்தந்தை பதினோராம் பயஸ் (Pope Pius XI), இவருக்கு முக்திபேறு பட்டமளித்தார்.
1954ம் ஆண்டு, ஜூன் மாதம், 12ம் தேதி, திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ் (Pope Pius XII) அவருக்கு புனிதர் பட்டமளித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா