Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஃபிரேன்செஸ் சேவியர் கேப்ரினி ✠(St. Frances Xavier Cabrini)
   
நினைவுத் திருநாள் : (நவம்பர் / NOV - 13)
✠ புனிதர் ஃபிரேன்செஸ் சேவியர் கேப்ரினி ✠(St. Frances Xavier Cabrini)

 அருட்பணியாளர், நிறுவனர் :
(Religious and Foundress)

பிறப்பு : ஜூலை 15, 1850
சான் ஆஞ்சலோ லோடிகியனோ, லோடி பிராந்தியம், லொம்பார்டி-வெனீஷியா அரசு, ஆஸ்திரியன் பேரரசு
(Sant'Angelo Lodigiano, Province of Lodi, Kingdom of Lombardy-Venetia, Austrian Empire)

இறப்பு : டிசம்பர் 22, 1917 (வயது 67)
சிகாகோ, இல்லினோயிஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
(Chicago, Illinois, United States America)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : நவம்பர் 13, 1938
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம் : ஜூலை 7, 1946
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

முக்கிய திருத்தலங்கள் :
அன்னை கேப்ரினியின் உயர்நிலைப் பள்ளி சிற்றாலயம், நியூ யார்க் நகர்
(Chapel of Mother Cabrini High School, New York City)

பாதுகாவல் :
வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், லிங்கன்
(Immigrants, Hospital Administrators, Lincoln)

நினைவுத் திருநாள் : நவம்பர் 13

"ஃபிரேன்செஸ் சேவியர் கேப்ரினி"(Frances Xavier Cabrini) என்றும், "அன்னை கேப்ரினி"(Mother Cabrini) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், ஒரு இத்தாலிய-அமெரிக்க (Italian-American) அருட்சகோதரி ஆவார். கத்தோலிக்க சமய நிறுவனமான "இயேசுவின் திருஇருதயத்தின் அருட்பணி சகோதரிகள்" (Missionary Sisters of the Sacred Heart of Jesus) என்றொரு சபையை நிறுவியவர் இவரேயாவார். இச்சபையானது இத்தாலியிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து வந்து குடியேறியவர்களுக்கு பெரும் ஆதரவாக இருந்தது. புலம்பெயர்ந்து வந்து, அமெரிக்க குடியுரிமை பெற்று, ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக அருட்பொழிவு செய்யப்பட்ட முதல் நபர் இவரேயாவார்.

அப்போதைய "ஆஸ்திரிய பேரரசின்"(Austrian Empire) பிராந்தியமான "லோடியில்"(Lodi) பிறந்த இவரது தந்தையாரின் பெயர் "அகஸ்டினோ கேப்ரினி" (Agostino Cabrini) ஆகும். "ஸ்டெல்லா ஒல்டினி" (Stella Oldini) இவரது தாயார் ஆவார். வசதிவாய்ப்புள்ள செர்ரி மர விவசாயிகளான (Cherry Tree Farmers) இந்த தம்பதியினருக்கு பிறந்த பதின்மூன்று குழந்தைகளில் கேப்ரினி கடைக்குட்டி ஆவார். துரதிருஷ்டவசமாக, பதின்மூன்று பேரில் ஒன்பது பேர் வளர் இளம் பருவத்திலேயே மரித்துப் போயினர். கேப்ரினியுடன் சேர்த்து நான்கு பேரே உயிர் தப்பி வாழ்ந்தனர். இரண்டு மாத குறைப் பிரசவத்தில் பிறந்த கேப்ரினி, மிகவும் சிறிய உருவம் கொண்டவராகவும் பலவீனராகவும் காணப்பட்டார். வாழ்நாள் முழுதும் நோய்த்தொற்றுள்ளவராகவே வாழ்ந்தார். தமது சிறு வயதில், ஒரு விரைவான கால்வாய் அருகே வசித்து வந்த தமது தாய்மாமனும், கத்தோலிக்க குருவுமான, "டோன் லுய்கி ஒல்டினி"(Don Luigi Oldini of Livagra) என்பவரைக் காண செல்லும்போதெல்லாம், காகிதக் கப்பல்களைச் செய்து கால்வாயில் விட்டு விளையாடுவாராம். அங்குள்ள மலர்களை மறைப் பணியாளர்களென அழைக்கும் இச்சிறுமி, அவர்களை தாம் செய்யும் காகிதக் கப்பல்களில் சீனா மற்றும் இந்திய நாடுகளுக்கு செல்லுமாறு பணிப்பாராம்.

தமது பதின்மூன்று வயதில், "திருஇருதய மகளிர்"(Daughters of the Sacred Heart) நடத்திய பள்ளியில் கல்வி கற்ற இவர், ஐந்து வருடங்களின் பின்னர், கற்பிக்கும் சான்றுடன் பட்டம் பெற்றார். கி.பி. 1870ம் ஆண்டு, தமது இருபது வயதில், தமது பெற்றோர் மரித்ததும் "அர்லுனோ"(Arluno) எனுமிடத்திலுள்ள "திருஇருதய மகளிர்"(Daughters of the Sacred Heart) சபையில் இணைய விண்ணப்பித்தார். இச்சபையின் அருட்சகோதரியர், இவரது முன்னாள் ஆசிரியைகள் ஆவர். அவர்கள், இவரது பலவீனம் மற்றும் நோய்களை காரணம் காட்டின் நிராகரித்தனர்.

இவர், "கொடோக்னோ"(Codogno) எனுமிடத்திலுள்ள பிராவிடன்ஸ் அனாதை இல்லத்தின் தலைமை ஆசிரியை ஆனார். அங்கே கற்பிக்கும் பணியாற்றிய இவர், அங்கேயே ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காக ஒரு சிறு சமூகத்தை உருவாக்கினார். 1877ம் ஆண்டு, தமது சமய பிரமாணங்களை ஏற்ற கேப்ரினி, இயேசு சபை புனிதரும் (Jesuit saint) மறை பரப்புப் பணிகளின் பாதுகாவலருமான "ஃபிரான்சிஸ் சேவியரை" (Francis Xavier) கௌரவிக்கும் விதமாக தம் பெயருடன் சேவியர் என்ற பெயரை இணைத்துக்கொண்டார்.

கேப்ரினி, தனது முப்பதாவது வயதிலேயே பல பொறுப்புகளை ஏற்றிருந்தார். நோயாளிகளை கவனித்து வந்துள்ளார். பெற்றோரை இழந்த பிள்ளைகளை பராமரித்து வளர்த்துள்ளார். வழிதவறி அலைந்த இளைஞர்களுக்கு நல்வழி காட்டியுள்ளார். விதவைப் பெண்களை ஒன்று சேர்த்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டியுள்ளார்.

இவ்வாறு பல பணிகளை செய்த இவர் நீண்ட நாள் தன் மனதில் இருந்த சபை ஒன்றை நிறுவும் கனவையும் நிறைவேற்ற முடிவு செய்தார். கி.பி. 1880ம் ஆண்டு, தம்முடன் ஆறு அருட்சகோதரியரையும் இணைத்துக்கொண்டு, "இயேசுவின் திருஇருதயத்தின் அருட்பணி சகோதரிகள்" (Missionary Sisters of the Sacred Heart of Jesus) என்றொரு சபையை நிறுவினார். இவரே அச்சபையின் முதல் சபைத் தலைவியாக பொறுப்பேற்று வழிநடத்தினார்.

கி.பி. 1877ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், சீன நாட்டில் அருட்பணி சகோதரிகளின் சபை ஒன்றினை தொடங்கிட திருத்தந்தை "ஒன்பதாம் பயசின்"(Pope Pius IX) அனுமதி வேண்டி சென்றார். ஆனால், திருத்தந்தையோ சீன நாட்டுக்கு பதிலாக அவரை அமெரிக்கா செல்ல அறிவுறுத்தினார். இத்தாலியிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் அவர்களுக்கு வழிகாட்டவும் அங்கே இவரது சேவைகள் தேவைப்படும் என்று இயம்பிய திருத்தந்தை அவர்கள், கிழக்கேயல்ல - மாறாக மேற்கே செல் என்று அறிவுரை கூறினார்.

திருத்தந்தையின் அறிவுரைப்படி தமது சக அருட்சகோதரிகள் ஆறு பேருடன் அமெரிக்கா கிளம்பிய கேப்ரினி, கி.பி. 1889ம் ஆண்டு, மார்ச் 31ம் நாள், நியூயார்க் நகர் சென்றடைந்தார். அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு படியிலும் ஏமாற்றங்களையும் சிரமங்களையுமே எதிர்கொண்ட கேப்ரினி மனம் தளர்ந்து போகவில்லை. ஆரம்பத்தில் அவர்களுக்கு அணுசரணையாய் இல்லாத "பேராயர் மைக்கேல் கொர்ரிகன்"(Archbishop Michael Corrigan), அவர்கள் தங்குவதற்கு "கருணையின் சகோதரிகள்" (Sisters of Charity) பள்ளியை ஏற்பாடு செய்து தந்தார். கேப்ரினி, நியூ யார்க் நகரில் 'வெஸ்ட் பார்க்' (West Park, New York) என்ற இடத்தில், ஒரு அனாதைகள் இல்லம் தொடங்கிட பேராயர் அவர்களிடம் அனுமதி பெற்றார். இன்று, அதே அனாதைகள் இல்லமானது "புனிதர் கேப்ரினி இல்லம்" (Saint Cabrini Home) என்ற பெயரில் இயங்குகின்றது.

இத்தாலியிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய மற்றும் அவசியப்படும் மக்களுக்கு மத இலக்கண மற்றும் கல்வி வகுப்புகள் ஏற்பாடு செய்து தந்தார். மிகப்பெரிய முரண்பாடுகளுக்கும் தடைகளுக்கும் மத்தியிலும் பள்ளிகள் மற்றும் அநாதை இல்லங்களை நிறுவி நடத்தினார். கேப்ரினி ஜெப சிந்தையோடு இருந்தது போலவே சமயோசிதமாகவும் இருந்தார். தாராள மனப்பான்மை கொண்ட மக்களை இனம்கண்டு வைத்திருந்தார். அவர்களால் அவருக்கு அவசியப்படும்போது பணம், நேரம், உழைப்பு, மனித சக்தி, ஆதரவு போன்ற அனைத்து உதவிகளும் தேடி வந்தன. நியூ யார்க் நகரில் "கொலம்பஸ் மருத்துவமனை" மற்றும் "இத்தாலியன் மருத்துவமனை" (Columbus Hospital and Italian Hospital) ஆகிய இரண்டு மருத்துவமனைகளை நிறுவினார். 1980களில் அவையிரண்டு மருத்துவமனைகளும் "காப்ரினி மருத்துவ மையம்" (Cabrini Medical Center) என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டன. ஆயினும், 2008ம் ஆண்டு, இம்மருத்துவமனை மூடப்பட்டது.

கேப்ரினி மற்றும் அவரது சக அருட்சகோதரிகளால் "சிக்காகோ" (Chicago) நகரின் இதயப்பகுதியில் "கொலம்பஸ் விரிவாக்க மருத்துவமனை" (Columbus Extension Hospital) என்ற பெயரில் ஒரு மருத்துவமனையை நிறுவினர். பின்னர் இது "புனிதர் கேப்ரினி மருத்துவமனையாக" (Saint Cabrini Hospital) பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இவ்விரண்டு மருத்துவமனைகளும் மூடப்பட்டன.

புனிதர் கேப்ரினி அமெரிக்காவின் "நியூ யார்க்"(New York), "சிக்காகோ"(Chicago), "டேஸ் ப்லேய்ன்ஸ்"(Des Plaines), "இல்லினாய்ஸ்"(Illinois), "சியாட்டல்"(Seattle), "நியூ ஒர்லியான்ஸ்"(New Orleans), "டென்வர்"(Denver), "கோல்டன்" (Golden), "கொலராடோ"(Colorado), "லாஸ் ஏஞ்சலிஸ்"(Los Angeles), "ஃபிலடெல்ஃபியா"(Philadelphia) ஆகிய நகரங்களிலும் தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா (South America and Europe) போன்ற நாடுகளிலுமாக மொத்தம் 67 நிறுவனங்களை நிறுவினார்.

சீன தேசத்தில் ஒரு மதப் போதக சபை (Missionary) தொடங்க வேண்டுமென்ற புனிதர் கேப்ரினியின் நெடுநாள் கனவு, அவரது மரணத்தின் நீண்ட காலத்தின் பின்னர் அவரது மிஷனரி அருட்சகோதரிகளால் நிறைவேறியது. மிக அதிக அளவிலான சமூக மற்றும் சமய எழுச்சியின் பின்னர், ஒரு சைபீரியன் (Siberian) அருட்சகோதரியை விட்டுவிட்டு அவர்கள் சீன தேசம் புறப்பட்டுச் சென்றனர்.

கி.பி. 1909ம் ஆண்டில் கேப்ரினி ஒரு அமெரிக்கா குடிமகளாக குடியுரிமை பெற்றார்.

67 வயதான கேப்ரினி, உள்ளூர் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் இனிப்புகள் தயார் செய்யும் பணியிலிருந்தபோது வயிற்றுக்கடுப்பு மற்றும் சீதபேதி போன்ற பிரச்சினைகள் காரணமாக, கி.பி. 1917ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் நாளன்று, சிக்காகோவிலுள்ள (Chicago) கொலம்பஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல், நியூ யார்க் நகரில் அவரால் நிறுவப்பட்ட அநாதை இல்லமான "புனிதர் கேப்ரினி இல்லத்தில்" (Saint Cabrini Home) அடக்கம் செய்யப்பட்டது.

==========================================================================
தூய பிரான்ஸ் சேவியர் காப்ரினி

"இனி வாழ்பவன் நானல்ல; கிறிஸ்துவே என்னும் வாழ்கிறார்" (கலா 2:20)

வாழ்க்கை வரலாறு

இன்று திரு அவையானது தூய பிரான்சிஸ் சேவியர் காப்ரினியின் நினைவு நாளைக் கொண்டாடுகின்றது. காப்ரினி 1850 ஆம் அண்டு இத்தாலியில் உள்ள சான்ட் அஞ்சேலோ லொடிகியானோ என்ற இடத்தில் பிறந்தார்.

தொடக்கத்தில் இவர் ஓர் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கு துறவியாகப் போகவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. அதன்படி இவர் ஒரு துறவுமடத்திற்குச் சென்று, தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அங்கிருந்தவர்கள் இவருடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, இவரை துறவுமடத்திற்குள் எடுக்க மறுத்துவிட்டார்கள். மேலும் ஒருசில துறவுமடங்களுக்குச் சென்றுபோதும் காப்ரினிக்கு அதுதான் நடந்தது. அப்படியிருந்தாலும் அவர் மனந்தரளாமல் ஒவ்வொரு துறவுமடத்திற்காகப் போய்க்கொண்டே இருந்தார்.

இந்நிலையில்தான் 1874 ஆம் அண்டு, பேரருட்தந்தை சேராட்டி என்பவர், காப்ரினியை கோடோக்னோ என்ற இடத்தில் இருந்த ஒரு அனாதை இல்லத்தை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தனக்குக் கொடுக்கப்பட்ட இந்தப் பொறுப்பினை காப்ரினி மிகச் சிறப்பாகச் செய்ததால், அவருடைய பேரும் புகழும் ஆயர் டோடி வரைக்கும் சென்றது. அவர் காப்ரினியைக் கூப்பிட்டு, பாராட்டி, அனாதை இல்லத்தைக் கவனித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், ஏழைக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆயரிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பாராத காப்ரினி, தன்னோடு மேலும் ஆறு சகோதரிகளை சேர்த்துக்கொண்டு, திரு இருதய அருட்சகோதரிகள் (Missionary Sisters of the Sacred Heart) என்றொரு சபையைத் தொடங்கி, தன்னுடைய பணியை இன்னும் துரிதப்படுத்தினார்.

காப்ரினி செய்துவந்த இந்தப் பணிகளையெல்லாம் பார்த்துவிட்டு நிறையப் பெண்கள் சபையில் வந்து சேர்ந்தார்கள். இதனால் மிகக் குறுகிய காலகட்டத்திலே திரு இருதய அருட்சகோதரிகள் சபை பல நாடுகளுக்குப் பரவத் தொடங்கியது.

அனாதைக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதும் அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதும் என்று காப்ரினியின் பணி மிகத் தீவிரமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், அவருடைய உள்ளத்தில் சீனாவிற்குச் சென்று மறைப்பணி செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இது குறித்து அவர், அப்போது திருத்தந்தையாக இருந்த பதிமூன்றாம் சிங்கராயரிடம் கேட்டபோது, கிழக்கில் வேண்டாம், மேற்கிலே பணிசெய் என்று சொல்லி அனுப்பினார். இதனால் காப்ரினி நியூயார்க்கிற்குச் சென்று அங்கு தன்னுடைய பணிகளை செய்யத் தொடங்கினார்.

நியூயார்க்கின் கடற்கரை ஓரங்கில் இவர் பணிசெய்யத் தொடங்கிய காலகட்டத்தில் நிறைய பிரச்சனைகளைச் சந்தித்தார். அவற்றை எல்லாம் இவர் பொருட்படுத்தாமல், ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதும், மருத்துவச் சேவை செய்வதும், புலம்பெயர்ந்தோருடைய நலனில் அக்கறை செலுத்துவதும் என்று தன்னுடைய வாழ்நாளைச் செலவழித்தார். இவர் செய்துவந்த பணி பலரையும் கிறிஸ்துவின்பால் கொண்டுவந்து சேர்த்தது.

இப்படி அயராது பாடுபட்ட காப்ரினியின் உடல்நலம் மெதுவாகக் குன்றத் தொடங்கியது. அதனால் இவர் 1917 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவருக்கு 1946 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய காப்ரினியின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. மனந்தளராது உழைப்போம்

தூய காப்ரினியின் வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகின்ற மிக முக்கியமான பாடம், நாம் ஒவ்வொருவரும் மனந்தளராது உழைக்கவேண்டும் என்பதுதான். தூய காப்ரினி, துறவியாக மாறுவதற்காக முன்னர், துறவுமடத்தில் சேர்வதற்காகப் பல இடங்களில் ஏறி இறங்கினார். அப்போதெல்லாம் அவர், ஏதோ ஒரு காரணத்திற்காக வெளியே அனுப்பப்பட்டுக்கொண்டே இருந்தார். அப்படி அனுப்பப்பட்டதற்காக அவர் மனம் தளர்ந்துவிடவில்லை. மாறாக, அவர் தொடர்ந்து போராடினார். கடைசியில் வெற்றியும் பெற்றார்.
நாமும் கூட, பல நேரங்களில் எடுக்கும் முயற்சியில் தோல்வியைச் சந்திக்கலாம். ஆனால், மனந்தளராது போராடுகின்றபோதுதான் நம்மால் வெற்றிக் கனியை சுவைக்க முடியும் என்பது உறுதி.

கிரஹாம்பெல், தொலைப்பேசியைக் கண்டுபிடித்ததும், அதை மக்கள் பார்வைக்கு வைத்தபோது, ஒருசிலர், "இது என்ன? விளையாட்டுப் பொருளா?" என்று கேட்டனர். கிரஹாம்பெல்லோ, "இது விளையாட்டுப் பொருள் இல்லை, இதை வைத்து இங்கிருந்து நாம் பேசினால், எங்கோ இருக்கும் ஒருவருக்கு கேட்கும்" என்றார். அதற்கு அவர்கள், "இதனால் எந்தப் பயனும் இல்லை" என்று சொல்லி கடந்த போனார்கள். இதற்குப் பின்பு கிரஹாம்பெல் தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை, அப்போது அமெரிக்க அதிபர் ரூதர் போர்டிடமும் கொண்டுசென்று காண்பித்தார். அவரும் இதே பதிலைத்தான் சொன்னார்.

இதற்காக கிரஹாம்பெல் மனமுடைந்து போகவில்லை, மாறாக, தன்னுடைய கண்டுபிடிப்பை எல்லா மக்களிடத்திலும் கொண்டு சென்று விளக்கினார். இறுதியில் வெற்றியும் கண்டார். அவர் மட்டும் மனம் சோர்ந்துபோய் தன்னுடைய முயற்சியைக் கைவிட்டிருந்தால் தொலைப்பேசியும் அதனுடைய அடுத்த வடிவமான அலைப்பேசியும் வந்திருக்குமா? என்பது சந்தேகமே.

ஆகவே, தூய காப்ரினியின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று, கிரஹாம்பெல்லைப் போன்று மனந்தளராது உழைப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா