Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠புனித சார்லஸ் பொரோமெயோ✠ (St. Charles Borromeo)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 04
 ✠ புனிதர் சார்லஸ் பொரோமியோ ✠(St. Charles Borromeo)

 
கர்தினால், மிலன் பேராயர் :
(Cardinal, Archbishop of Milan)

பிறப்பு : அக்டோபர் 2, 1538
அரோனா கோட்டை, மிலன் ஜமீன்
(Castle of Arona, Duchy of Milan)

இறப்பு : நவம்பர் 3, 1584 (வயது 46)
மிலன்
(Milan)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம் : மே 12, 1602
திருத்தந்தை எட்டாம் கிளமென்ட்
(Pope Clement VIII)

புனிதர் பட்டம் : நவம்பர் 1, 1610
திருத்தந்தை ஐந்தாம் பவுல்
(Pope Paul V)

நினைவுத் திருவிழா : நவம்பர் 4

பாதுகாவல் :
வயிற்றுப் புணால் அவதியுறுவோர்; ஆப்பிள் தோட்டம்; ஆயர்கள்; திருமுழுக்கு பெற ஆயத்தம் செய்வோரும் அவர்களுக்கு கற்பிப்போரும்; குடல் கோளாறுகள்; லம்பார்தி, இத்தாலி; மான்டெர்ரே, கலிபோர்னியா; குருமட மாணாவர்கள்; ஆன்மீக வழிகாட்டிகள்; ஆன்மீக தலைவர்கள்.

"கௌன்ட் கர்லோ பொரோமியோ டி அரோனா" (Count Carlo Borromeo di Arona) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் சார்லஸ் பொரோமியோ, மிலன் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக கி.பி. 1564ம் ஆண்டு முதல் கி.பி. 1584ம் ஆண்டு வரை பதவியில் இருந்தவர் ஆவார். புனிதர்கள் லொயோலா இஞ்ஞாசி, மற்றும் பிலிப்பு நேரி ஆகியோர் போன்று, இவரும் கத்தோலிக்க மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார். கத்தோலிக்க திருச்சபையினை சீர்திருத்தி, புத்துயிர் அளிக்கும் விதமாக இவர் பல காரியங்களைச் செய்தார். குறிப்பாக குருத்துவத்துக்கான பயிற்சி மடங்கள் பலவற்றை இவர் துவங்கினார். இவர், கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் என ஏற்கப்படுகின்றார்.

வாழ்க்கை சுருக்கம் :
இத்தாலியின் வடமேற்கிலுள்ள "லொம்பார்டி" (Lombardy) பிராந்தியத்தின் மிகவும் பழமையான செல்வந்தர்களான "பொரோமியோ பிரபுக்கள்" (Borromeo Noble family) குடும்பத்தைச் சேர்ந்த இவரது தந்தை, "அரோனா" (Count of Arona) எனும் நகரின் பிரபுவான "கில்பர்ட்" (Gilbert) ஆவார். இவரது தாயாரான "மார்கரெட்" (Margaret) பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். சார்லஸ், தமது பெற்றோரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் ஆவார்.

தனது 12ம் வயதில், மடத்தில் சேர்ந்து தனது 25ம் வயதில் குருத்துவத் அருட்பொழிவு பெற்றார். "பவியா பல்கலையில்" (University of Pavia) குடிமைச் சட்டவியல் மற்றும் திருச்சபைச் சட்டவியல் ஆகியவற்றைக் கற்று, கி.பி. 1559ம் ஆண்டும் டிசம்பர் மாதம், 6ம் நாள், முனைவர் பட்டம் பெற்றார்.

இவரது தாயாரின் சகோதரரான (தாய்மாமன்) கர்தினால் "ஜியோவன்னி ஆஞ்செலோ மெடிசி" (Giovanni Angelo Medici) கி.பி. 1559ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 25ம் நாள் திருத்தந்தையாகப் தேர்வுபெற்று, "நான்காம் பயஸ்" (Pope Pius IV) எனும் பெயரை ஏற்றார். புதிதாய் பதவியேற்ற திருத்தந்தை நான்காம் பயஸ், தமது மருமகனான சார்லசை ரோம் நகர் வரவழைத்து, கி.பி. 1560ம் வருடம், ஜனவரி மாதம், 13ம் நாளன்று, "ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பீடாதிபதிகளின் கல்லூரியின் உயர் பதவி உறுப்பினராக" (Protonotary Apostolic) நியமித்தார். அதன் பின்னர், பதினெட்டே நாள் கழித்து, அவர் இவரை கர்தினாலாகவும், மிலன் நகரின் பேராயராகவும் உயர்த்தினார். திருச்சபையை ஆள்வதில் திருத்தந்தைக்கு இவர் பேருதவியாய் இருந்தார். ரோம் நகரில் இருந்துகொண்டு திருச்சபைக்காக பணியாற்றினார். திருத்தந்தையர் மாநிலங்களின் அரசாங்கத்திலும் (Government of the Papal States) அதிகாரம் பெற்றிருந்த இவர், "ஃபிரான்சிஸ்கன்" (Franciscans) சபையினர், "கார்மேல் சபையின்" (Carmelites) ஆண் மற்றும் பெண் துறவியர், மற்றும் "தூய ஜான் இறையாண்மை மருத்துவ சேவை சபையினர்" (Knights of Malta) ஆகியோரின் மேற்பார்வையாளராகவும் இருந்தார்.

கி.பி. 1562-63ம் ஆண்டு காலத்தில் நடந்த "டிரன்ட் சங்கத்தின்" (Council of Trent) மூன்றாம் மற்றும் கடைசி அமர்வுகளை சார்லஸ் பொரோமியோ ஏற்பாடு செய்தார். அந்த சங்கத்தின் தீர்மானங்களை தமது மறைமாவட்டத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்தார். வடக்கு இத்தாலியிலுள்ள தென்மேற்கு பிராந்தியமான "லொம்பார்டியிலுள்ள" (Lombardy) "பவியா" (Pavia) எனுமிடத்தில் ஒரு கல்லூரியை நிறுவி, அதனை "தூய ஜஸ்டினா" (St. Justina of Padua) எனும் பெயரில் அர்ப்பணித்தார். இக்கல்லூரி, தற்போது "அல்மோ கொலேஜியோ பொரோமியோ" (Almo Collegio Borromeo) என்றழைக்கப்படுகின்றது.

கி.பி. 1566ம் ஆண்டு, திருத்தந்தை நான்காம் பயஸின் மரணத்தின் பின்னர், திருத்தந்தை ஐந்தாம் பயஸின் அனுமதியுடன் இவர் மிலன் நகருக்கு ஆயராக நியமிக்கப்பட்டு பணியாற்றச் சென்றார். தமது மறைமாவட்டத்தை இவர் சீர்திருத்த தொடங்கினார். இவர் செய்த முயற்சிகளால் திருச்சபை செழித்து ஓங்கியது. திருச்சபைக்கு இவர் பல நன்மைகள் செய்தார்.

நாட்டில் கொள்ளைநோய் பரவியபோது, இவர் தம் மக்களின் பாவங்களுக்காக கடவுள் மக்களைத் தண்டிக்கிறார் என்று நம்பி தம்மையே பலிபொருளாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தார். தவ ஊர்வலத்தின்போது தெருக்களில் வெறும் காலுடன் நடந்தார். தோளில் ஒரு சிலுவையை தூக்கிச் சென்றார். கழுத்தில் ஒரு கயிற்றை கட்டிக்கொள்வார்.

கல்லூரிகளும் குருமடங்களும் கட்டுவித்து அங்கு குருக்களுக்கு உதவியாக இருக்கும்படி சிறந்த நூல் நிலையம் ஒன்று ஏற்படுத்தினார். கொள்ளை நோய் காலத்தில் நோயாளிகளுடனும் மரண தருவாயில் இருந்தவர்களுடனும் தங்கி அவர்களுக்கு பேருதவி செய்யும்படி தமது உடைமைகளைக் கொடுத்தார்.

கி.பி. 1584ம் ஆண்டு, "மொண்டே வரல்லோ" (Monte Varallo) எனுமிடத்தில், தமது ஆண்டு தியானத்தின்போது, இடைவிடாத காய்ச்சல் மற்றும் மூப்படைதல் நோய்களில் வீழ்ந்த சார்லஸ் பொரோமியோ, மிலன் திரும்புகையில் இவரது நோய் வேகமாகவும் மோசமாகவும் அதிகரித்தது. இறுதி அருட்சாதனங்களைப் பெற்ற இவர், நவம்பர் நான்காம் தேதி, தமது 46 வயதில் அமைதியாக மரித்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா