Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ புனிதர் கேதரின் லபோர் ✠ (St. Catherine Labouré)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 28
✠ புனிதர் கேதரின் லபோர் ✠(St. Catherine Labouré)

*கருணையின் அருட்சகோதரி/ மரியன்னை திருக்காட்சியாளர் :
(Sister of Charity, Marian visionary)

*பிறப்பு : மே 2, 1806
ஃபெய்ன்-லெஸ-மௌடியர்ஸ், கோட-டிஓர், ஃபிரான்ஸ்
(Fain-lès-Moutiers, Côte-d'Or, France)

*இறப்பு : டிசம்பர் 31, 1876 (வயது 70)
இங்கியன்-லெஸ்-பெய்ன்ஸ், செய்ன்-எட்-ஒயிஸ், ஃபிரான்ஸ்
(Enghien-les-Bains, Seine-et-Oise, France)

*ஏற்கும் சமயம் :
 ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholici Church)

*அருளாளர் பட்டம் : மே 28, 1933
 திருத்தந்தை 11ம் பயஸ் (Pope Pius XI)

*புனிதர் பட்டம் : ஜூலை 27, 1947
 திருத்தந்தை 12ம் பயஸ் (Pope Pius XII)

*சித்தரிக்கப்படும் வகை : அற்புத பதக்கம் (Miraculous Medal)

*பாதுகாவல் :
 அற்புத பதக்கம் (Miraculous Medal), பலவீனமான மக்கள் (Infirmed people), முதியோர் (The elderly People)

"ஸோ லபோர்" எனும் (Zoé Labouré) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் கேதரின் லபோர், "தூய வின்சென்ட் தெ பவுலின் பிறரன்பின் புதல்வியர்" (Daughters of Charity of Saint Vincent de Paul) துறவற சபையின் அருட்சகோதரியும், அன்னை மரியாளை தரிசித்த திருகாட்சியாளரும் ஆவார். மரியாளின் அறிவுறுத்தலின்படி, இவர் அற்புத பதக்கம் அணியும் வழக்கத்தை கிறிஸ்தவர்களிடையே உருவாக்கினார்.

தொடக்க காலம் :
கேதரின் லபோர், ஃபிரான்ஸ் நாட்டின் பர்கண்டி பகுதியில், "பியர் லபோர்" (Pierre Labouré) என்னும் விவசாயி தந்தைக்கும் "லூயிஸ் மடலின் கோண்டார்ட்" (Louise Madeleine Gontard) என்னும் தாய்க்கும் பிறந்த பதினோரு குழந்தைகளில் ஒன்பதாவது மகளாக 1806ம் ஆண்டு, மே மாதம், 2ம் தேதி பிறந்தார். 1815ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 9ம் தேதி, தமது 9 வயதில் தாயை இழந்தார். அப்போது இவர் மரியன்னையின் ஒரு சொரூபத்தை முத்தம் செய்து, "இப்போது முதல் நீரே என் தாய்" என்று கூறினார்.

அதன் பிறகு, இவர் உறவினர் ஒருவர் வீட்டில் வளர்க்கப்பட்டார். சிறு வயது முதலே, இவர் மரியன்னை மீது அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். இளம்பெண்ணாக இருந்தபோது, பிறரன்பின் புதல்வியர் துறவற சபையில் உறுப்பினராக இணைந்தார். அதன் மற்ற உறுப்பினர்களோடு இணைந்து பிறரன்பு பணிகளை செய்து வந்தார்.

திருக்காட்சியாளர் :
1830ம் ஆண்டு, ஜூலை மாதம், 8ம் தேதி, இரவில் கேதரின் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் ஒரு குழந்தை இவரைச் சிற்றாலயத்திற்கு அழைத்த குரல் கேட்டு விழித்து எழுந்தார். உடனே இவர் சிற்றாலயத்திற்கு விரைந்து சென்றார். அங்கு மரியன்னை நிற்கும் காட்சியை தரிசித்தார். அன்னை மரியாள் இவரிடம், "கடவுள் உன்னை முக்கியமான ஒரு பணிக்குத் தேர்வு செய்துள்ளார்" என்று கூறி மறைந்தார்.

1830ம் ஆண்டு, நவம்பர் மாதம், 27ம் தேதி, அன்னை மரியாள் மீண்டும் இவருக்கு காட்சி அளித்தார். அப்போது மரியன்னை உலக உருண்டை மேல் நின்று கொண்டிருந்தார். அவரது கரங்களில் இருந்து ஒளிக் கதிர்கள் வெளிவந்தன. மரியன்னையைச் சுற்றி முட்டை வடிவில் தோன்றிய ஒளி வட்டத்தில், "ஓ பாவமின்றி உற்பவித்த மரியாளே, உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்ற வார்த்தைகள் காணப்பட்டன. காட்சி பின்பக்கம் திரும்பியது. அதில் சிலுவை அடையாளமும், அதன் கீழ் மாதாவை குறிக்கும் "எம்" (M) என்ற எழுத்தும் காணப்பட்டன. அதன் அடியில் இயேசுவின் திவ்விய இருதயமும், மரியன்னையின் மாசற்ற இருதயமும் காணப்பட்டன. அவற்றைச் சுற்றி 12 விண்மீன்களும் காணப்பட்டன.

புதுமைப் பதக்கம் :
அந்த காட்சி முடிந்ததும் மரியன்னை கேதரினிடம், காட்சியில் கண்டது போன்ற ஒரு பதக்கத்தை கழுத்தில் அணியும் வகையில் தயார் செய்யச் சொன்னார். மேலும் இந்த அற்புத பதக்கத்தை அணிந்து கொள்பவர்கள் இயேசுவுக்கு ஏற்றவர்களாக வாழ்வார்கள் என்றும், பாவ வாழ்வில் இருந்து விலகுவார்கள் என்றும், மரியன்னை அறிவித்தார்.

இந்த காட்சிகளின் உண்மைத் தண்மை பின்பு திருச்சபையால் உறுதி செய்யப்பட்டது. கேதரினும் அன்னை மரியாள் சொன்னபடி செய்து, மக்கள் பலரும் அற்புத பதக்கத்தை அணிய வழிகாட்டினார். அதைக் கழுத்தில் அணிந்துகொண்ட பலரும் பல்வேறு நன்மைகளை அடைந்தனர். கிறிஸ்தவர்கள் அல்லாத சிலர் இந்த அற்புத பதக்கத்தை அணிந்து கொண்டதால் கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

முன்னறிவிப்புகள் :
கேதரின் லபோர், எதிர் காலத்தில் நடக்கவிருந்த சம்பவங்களை முன்னறிவிக்கும் வரமும் பெற்றிருந்தார். இவர் முன்னறிவித்தபடியே பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. ஆனால் சில முன்னறிவிப்புகள் பலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இறப்பு :
தனது வாழ்நாள் முழுவதையும் கடவுள் பக்தியின் மேன்மைக்காகவும், மரியன்னையின் பக்தியைப் பரப்பவும், அர்ப்பணித்த கேதரின், 1876ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் நாள் மரணம் அடைந்தார்.

புனிதர் பட்டம் :
1933ம் ஆண்டு, மே மாதம், 28ம் தேதி, திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.

கேதரின் இறந்த 57 ஆண்டுகளுக்கு பிறகு, இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில் கேதரினின் உடல் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

1947ம் ஆண்டு, ஜூலை மாதம், 27ம் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். புனிதர் கேதரின் லபோரின் அழியாத உடல், ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் "ரியூ டு பக்" (Rue du Bac) எனுமிடத்திலுள்ள "அற்புத பதக்க அன்னை சிற்றாலயத்தில்" (Chapel of Our Lady of the Miraculous Medal) இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா