Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

 ✠ ஹங்கேரியின் புனிதர் எலிசபெத் ✠
(St. Elizabeth of Hungary)
   
நினைவுத் திருநாள் : நவம்பர் 17
✠ ஹங்கேரியின் புனிதர் எலிசபெத் ✠(St. Elizabeth of Hungary)

 கைம்பெண்/ மறைபணியாளர் :
(Widow and religious)

பிறப்பு : ஜூலை 7, 1207
போஸ்ஸோனி, ஹங்கேரி அரசு
(Pozsony, Kingdom of Hungary)

இறப்பு : நவம்பர் 17, 1231 (வயது 24)
மார்பர்க், புனித ரோம பேரரசு, (தற்போதைய ஜெர்மனி)
(Marburg, Holy Roman Empire (Modern-day, Germany)

சார்ந்துள்ள சமயம்/ சபை :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
லூதரன் திருச்சபை
(Lutheran Church)

புனிதர் பட்டம் : மே 27, 1235
திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
(Pope Gregory IX)

நினைவுத் திருவிழா : நவம்பர் 17

பாதுகாவல் :
மருத்துவமனைகள், செவிலியர், விதவையர், நாடு கடத்தும் தண்டனை, மணப்பெண், ரொட்டி தயாரிப்பாளர், வீடற்ற மக்கள், இறக்கும் குழந்தைகள், கைம்பெண்கள், சரிகை-தயாரிப்பாளர்கள், தூய ஃபிரான்சிஸின் மூன்றாம் நிலை சபை (Third Order of Saint Francis)

ஹங்கேரியின் புனிதர் எலிசபெத், "துரிங்கியாவின் புனிதர் எலிசபெத்" (Saint Elizabeth of Thuringia) என்றும் அறியப்படுபவர் ஆவார். "ஹங்கேரி அரசு" (Kingdom of Hungary), "துரிங்கியா" (Thuringia) மற்றும் "ஜெர்மனி" (Germany) ஆகிய நாடுகளின் இளவரசியான இவர், பெரிதும் போற்றப்படும் கத்தோலிக்க புனிதர் ஆவார். புனிதர் ஃபிரான்ஸிஸின் மூன்றாம் நிலை சபையின் (Third Order of St. Francis) ஆதிகால அங்கத்தினரான எலிசபெத், அச்சபையின் பாதுகாவலரும் ஆவார்.

ஹங்கேரி நாட்டின் அரசன் "இரண்டாம் ஆண்ட்ரூ" (King Andrew II of Hungary) இவரது தந்தை ஆவார். "மெரனியாவின் கேட்ரூ" (Gertrude of Merania) எலிசபெத்தின் தாயாராவர்.

தமது பதினான்கு வயதில் குறுநில மன்னரான "நான்காம் லூயிஸை" (Louis IV) திருமணம் செய்த எலிசபெத், இருபது வயதில் விதவையும் ஆனார். ஆறாவது சிலுவைப்போரில் (Sixth Crusade) பங்கேற்பதற்காக இத்தாலி பயணித்த லூயிஸ், வழியில் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1227ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 11ம் நாள், மரணமடைந்தார். தமது கணவரின் மரணத்தின் பின்னர், தமக்கான வரதட்சினை பணத்தை திரும்ப பெற்றுக்கொண்ட இவர், அந்த பணத்தில் ஓர் மருத்துவமனையை கட்டினார். தாமே சுயமாக நோயாளிகளுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார்.

ஓய்வு, ஆடம்பரம் மற்றும் சொகுசான வாழ்க்கை வாழ இயன்ற போதும், எலிசபெத் தவம் மற்றும் சந்நியாச வாழ்க்கையையே தேர்ந்தெடுத்தார். இவரது இந்த தேர்வு, ஐரோப்பா முழுவதுமுள்ள சாதாரண பொது மக்கள் இதயத்தில் அவருக்கு ஒரு இடத்தை பெற்றுத் தந்தது.

எலிசபெத், தமது குறுகிய கால வாழ்க்கையிலேயே, ஏழைகள் மற்றும் நோயுற்றோர் மீது அளவற்ற அன்பினை வெளிப்படுத்தினார்.

எலிசபெத்துக்கு வயது ஆக ஆக, பக்தியும் வளர்ந்து கொண்டிருந்தது. 1228ல், ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஃபிரான்சிஸ்கன் சபை துறவிகளின் வழிகாட்டுதலின் பேரில், செப வாழ்வில் ஈடுபட்டார். ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவ தொடங்கினார். தினமும் தன் வாசலுக்கு வந்த நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு உணவளித்தார். இதனால் அநேகர் இவருக்கு எதிரிகள் ஆயினர். இவருடைய கணவரது சகோதரி அக்னேஸ் இவரை முழு மூச்சுடன் வெறுத்தாள். அவளுடைய தாய் மிகுந்த உலகப் பற்றுக் கொண்டவள். அவளும் இவரை வெறுத்து அரண்மனையில் இருந்தவர்களுடன் சேர்ந்துகொண்டு எலிசபெத்தை நிந்தித்து வந்தார்கள். அவரை அரண்மனையிலிருந்தே துரத்தினார்கள்.

இவர் தமது உள்ளத்தை கடவுளிடமிருந்து அகற்றவில்லை. ஏழைகள் மீது இவர் எல்லையற்ற இரக்கம் கொண்டிருந்தார். "ஏழைகளின் அன்னை" என்றும் "நோயாளிகளின் ஊழியக்காரி" என்றும் இவரை அழைப்பார்கள். உலக மக்களின் அபிப்பிராயங்களை இவர் சட்டை செய்யவில்லை. தனக்கு இயல்பாய் உள்ள பொறுப்புகளை மேற்கொண்டு ஏழைகளிடமும் நோயாளிகளிடமும் கிறிஸ்து இயேசுவையே கண்டு அவர்களுக்கு சேவை செய்து வந்தார்.

நாட்டில் பெருவெள்ளம் வந்து பயிரை அளித்தது. இதனால் பஞ்சமும் கொள்ளை நோயும் வந்தன. ஒரு மருத்துவமனையைக் கட்டி அங்குபோய் தொழு நோயாளிகளுக்கு இவரே சிகிச்சை செய்தார். அப்பமும் இரசமும் இவரது மன்றாட்டால் பலுகியது. ஏழைகளுக்கு உதவி செய்ய அரச ஆடைகளையும், ஆபரணங்களையும் விற்றார்.

இவருடைய கணவரின் சகோதர்கள் அரண்மனையைக் கைப்பற்றிக் கொண்டு இவரை விரட்டி விட்டனர். இவர் பிரான்சிஸ்கன் துறவிகளின் ஆலயத்திற்குச் சென்று, இந்த துன்பத்திற்காக கடவுளுக்கு நன்றி செலுத்தி "தேதேயும்" என்னும் நன்றியறிதல் கீதத்தைப் பாடினார்.

தமது இருபத்துநான்கு வயதில் மரணமடைந்த எலிசபெத், கிறிஸ்தவ தொண்டிற்கு ஒரு அடையாளமாக ஆனார். தமது மரணத்தின் பின், விரைவில் புனிதராக அருட்பொழிவும் செய்யப்பட்டார்.


=============================================================================
நிகழ்வு

ஹங்கேரி எலிசபெத்து அரசியின் ஆன்ம ஆலோசகராக இருந்தவர் கொனார்ட் என்னும் அருட்தந்தை. எலிசபெத்து சாகும் தருவாயில் இருந்தபோது அவருக்கு மிக அருகே இருந்தவர் இந்தத் தந்தைதான். அப்போது அருட்தந்தை கொனார்ட் அவர்கள் அரசியிடத்தில் ஒரு கேள்வியைக் கேட்டார். "அம்மா! நீங்கள் இறந்தபிறகு உங்களுடைய விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள், பொருட்கள் இவற்றையெல்லாம் யாருக்குக் கொடுக்கப் போகின்றீர்கள்?" என்பதுதான் அந்தக் கேள்வி. அருட்தந்தையின் கேள்விக்கு எலிசபெத் அரசி சிறிதும் தாமதியாமல், "நான் இறந்த பிறகு என்னுடைய ஆடை ஆபரங்கள், விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் ஏழைகளுக்குத் தான் சொந்தம்" என்றார்.

சாகும் தருவாயிலும்கூட ஏழை எளியவர்களைக் குறித்துக் கவலைப்பட்ட ஹங்கேரி நாட்டின் அரசியான எலிசபெத்தின் விழாவைத் தான் இன்றைக்கு நாம் கொண்டாடுகின்றோம்.

வாழ்க்கை வரலாறு

13 ஆம் நூற்றாண்டில் ஹங்கேரி நாட்டை ஆண்டுவந்த இரண்டாம் ஆன்ட்ரு என்பவரின் மகளாகப் பிறந்தவள்தான் எலிசபெத். இவர் அரச குடும்பத்தில் பிறந்தாலும் அந்த மினுக்கும் ஆடம்பரமும் இல்லாமல் மிகச் சாதாரணமாக வாழ்ந்ததுதான் இவருடைய தனிச் சிறப்பு. எலிசபெத் சிறுவயதிலே மிகவும் பக்தியாகவும் எளிமையாகவும் ஏழைகளுக்கு உதவும் நல்ல மனப்பான்மையோடும் வாழ்ந்து வந்தார்.

இவருக்கு பதினான்கு வயதில் ஜெர்மனியில் உள்ள தூரின்ஜியன் என்ற நகரில் மன்னராக இருந்த லூயிஸ் என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டது. திருமணம் ஆனபிறகும் கூட எலிசபெத் ஏழைகளுக்கு உதவுவதையும் பக்தியில் வளர்வதும் ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவதும் குறைந்துபோய்விடவில்லை. அவர் இத்தகைய காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அவருக்கு எல்லாவிதங்களிலும் ஒத்துழைப்பு நல்கி வந்தார் அவருடைய கணவரான மன்னர் லூயிஸ். லூயிஸ் எலிசபெத்தை அளவு கடந்த விதத்தில் அன்புசெய்தார். அவர்கள் இருவரின் அன்பின் வெளிப்பாடாக அவர்கள் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். ஒரு சமயம் எலிசபெத் கேட்டுக்கொண்டதற்கு லூயிஸ் ஏழைகளுக்காக ஒரு மருத்துவமனையும் கட்டிக்கொடுத்தார். இவ்வாறு அவர்கள் இருவரும் ஒருவர் மற்றவர்மீது கொண்ட அன்பில் நாளும் வளர்ந்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட தருணத்தில்தான் 1227 ஆம் ஆண்டு மன்னர் லூயிஸ் போருக்குச் செல்லும்போது போகும் வழியிலே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். இப்படிப்பட்ட துயர செய்தியைக் கேள்விப்பட்ட எலிசபெத் அரசி மிகவும் கலங்கிப்போனார். அவர் அத்துயர சம்பவத்திலிருந்து மீண்டுவர நீண்ட ஆகியது. இதற்கிடையில் எலிசபெத்தை அரச பதவியிலிருந்து தூக்கிவிட்டு, வேறொருவரை நியமிக்கவேண்டும் என்ற சூழ்ச்சிகள் எல்லாம் நடந்தன. ஆனால் அவரோ ஒருசிலர் நல்ல உள்ளங்களின் உதவியுடன் அப்பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

தன்னுடைய கணவர் லூயிஸ் இறந்தபிறகு எலிசபெத்துதான் மூன்று பிள்ளைகளையும் பொறுப்புடன் வளர்த்தார். அவர்களை ஆன்மீக காரியங்களில் வளர்த்தெடுப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாய் இருந்து செயல்பட்டார். இந்த சமயத்தில் பிரான்சிஸ் அசிசியார் சபையில் இருந்த துறவி ஒருவர் அரசியைச் சந்தித்து, அவருக்கு ஆன்மீகக் காரியங்களில் பேருதவியாக இருந்து வந்தார். சில நாட்களிலேயே அரசி எலிசபெத் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையில் உறுப்பினராகச் சேர்ந்து, அவர்கள் உடுத்தக்கூடிய ஆடையே வந்தார். இதைப் பார்த்து அரசபையில் இருந்தவர், ஒரு அரசி இப்படியா உடை உடுத்துவது?" என்று கேலி பேசினார்கள். ஆனால் அவரோ, "என் வழிகாட்டி, பிரான்சிஸ் அசிசியார் வழியில் நடக்கின்றேன், இதில் என்ன தவறு இருக்கின்றது?" என்று சொல்லி அவர்களுடைய வாயடைத்தார்.

எலிசபெத் ஏழைகள் மீது அதிகமான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்து வந்தார். அதே நேரத்தில் அவர் ஆண்டவர் இயேசுவின் மீதும் அன்னை மரியாவின்மீதும் ஆழமான பக்தி கொண்டு வளர்ந்து வந்தார். அதன்பயனாக ஆண்டவர் இயேசுவும் அன்னை மரியாவும் அவருக்கு நிறைய முறை காட்சி கொடுத்து பல்வேறு உண்மைகளை விளங்கிச் சொன்னார்கள். இப்படி ஆன்மீகமும் அடுத்தவர்மீது அக்கறையும் தன்னுடைய இரண்டு கண்கள் என்று வாழ்ந்து வந்த எலிசபெத் 1231 ஆம் ஆண்டு தன்னுடைய இருபத்து நான்காம் வயதில் இறைவனடி சேர்ந்தார். இவருடைய கல்லறையில் அதிகமான புதுமைகள் நடந்தன. இந்தப் புதுமைகள் அனைத்தும் ஆண்டவர் இவரை எந்தளவுக்கு அன்பு செய்தார் என்பதனையும், ஆண்டவரை இவர் எந்தளவுக்கு அன்பு செய்தார் என்பதையும் மக்கள் உணர்ந்துகொண்டார்கள். அதன் விளைவாக 1235 ஆம் ஆண்டு இவருக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

ஹங்கேரி நகர எலிசபெத்தின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து அன்பு செய்வோம்.
 
  1. ஏழைகள் மீது அன்பு

எலிசபெத் ஏழை எளியவர்மீது அதிகமான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. 1225 ஆம் ஆண்டு ஹங்கேரியில் பிளேக் நோய் பரவியபோது இவர் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் சென்று அவர்களுக்கு உதவி புரிந்தார். அதுமட்டுமல்லாமல் நோயினால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளியவருக்கு தன்னுடைய ஆடை ஆபரணங்களை விற்று, அதன்மூலமாக வந்த பணத்தை வைத்து அவர்களுக்கு உதவி புரிந்தார். இவ்வாறு அவர் அரசியாக இருந்தும், எப்போதும் ஏழையின் பங்காளியாக இருந்து வந்தார்.

இவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்மோடு வாழும் ஏழை எளியவரிடத்தில் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டு வாழ்கின்றோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். "மிகச் சிறியோராகிய இவர்களுக்கு செய்த உதவிகளை எல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்பார் இயேசு (மத் 25:40). நாம் ஏழை எளியவருக்கு உதவிகள் செய்கின்றபோது அது இறைவனுக்குச் செய்வதற்குச் சமமாகும்.

ஆகவே ஹங்கேரி நகர தூய எலிசபெத்தின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாமும் அவரைப் போன்று ஆன்மீகமும் அன்புப் பணியும் நம்முடைய வாழ்வின் இரு கண்கள் என உணர்ந்து வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா