கல்லறைத்
திருவிழா
|
|
|
|
அந்த ஊரில் மிகப் பெரிய பணக்காரர்கள் மூன்று பேர் இருந்தார்கள்.
மூவரும் நீண்ட காலமாக நல்ல நண்பர்கள். அவர்கள் மூவருக்கும் வயதாகிவிட்டது.
எனவே அவகளுக்கு மரண பயம் வந்துவிட்டது. மரணத்திற்குப் பின்
மோட்சம் செல்ல வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தார்கள்.
அப்போது அருமையான வாழ்வு வாழ்ந்து மக்கள் பலருக்கு வழிகாட்டுகின்ற
முனிவர் ஒருவர் நினைவுக்கு வந்தார். அவர்கள் மூவரும் இணைந்து
முனிவரை சந்திக்க முடிவு செய்தார்கள். அந்த ஊரில் உள்ள மடாலாயத்தில்
தங்கியிருந்த முனிவரிடம் வந்தார்கள். தங்களுக்கு வயதாகிவிட்டதையும்,
மரணம் பயம் வந்துவிட்டதையும் சொல்லி மரணத்திற்குப் பின் மோட்சம்
செல்ல வழிகாட்டும்படியும் கேட்டு கொண்டார்கள்.
முனிவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார்.
சிறிது நேரம் கழித்து "மூவரும் இப்போது சென்றுவிட்டு ஒரு மாதம்
கழித்து வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விட்டார். மூவரும்
திரும்பிச் சென்றார்கள். அப்படித் திரும்பிச் செல்லும் போது
திடீரென முனிவர் ஒரு மாதம் கழித்து "நீங்கள் திரும்பி வரும்
போது மூவரில் ஒருவர் இருக்க மாட்டீர்கள் இறந்து போவீர்கள்" என்று
அவர்கள் காதில் விழும்படிக் கத்தினார். திரும்பிப் பார்த்து
அவர் கத்தியதைக் காதில் வாங்கிக் கொண்டு மிகுந்த கவலையோடு மூவரும்
தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். "நம் மூவரில் யார் முதலில்
இறந்து போவோம்" என்று தெரியவில்லையே என தங்களுக்குள் பேசிக்
கொண்டார்கள்.
வீட்டிற்குச் சென்றதும் முதலாமவர் தான் முதலில் இறந்தால் என்ன
செய்வது என யோசித்தார். உடனே தன்னிடம் இருந்த சொத்தை எல்லாம்
உணவு இன்றி தவிக்கும் ஏழையருக்கு செலவிட விரும்பி அன்னதானம்
செய்தார். சத்திரங்கள் கட்டினார். உணவின்றி ஊரில் யாரும் தவிக்கக்
கூடாது என்பதில் முழுக் கவனம் செலுத்தினார்.
இரண்டாமவர் தனது செல்வத்தை நோயினால் வாடும் ஏழைகளைத் தேடிச்
சென்று அவர்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்க செலவழித்தார்.
மருத்துவமனைகள் கட்டி எழுப்பினார். நோயினால் வாடுவோரைத் தேற்றுவதில்
தனது முழுக் கவனம் செலுத்தினார்.
மூன்றாமவர் ஏழைகள், ஆதரவற்ற விதவைகள், குழந்தைகள் காப்பகம்இ
முதியோர் இல்லங்கள், தொண்டு நிறுவனங்கள், நலிவுற்றோர் எனத்
தேவையில் இருப்போரைத்தேடிச் சென்று தனது பணத்தை செலவு செய்ய
ஆரம்பித்தார்.
ஒரு மாதம் கடந்து சென்றது. மூவரும் உயிரோடு இருந்தார்கள். முனிவரைத்
தேடி வந்தார்கள். மூவரும் "இந்த ஒரு மாதமும் தங்களில் யாராவது
ஒருவர் இறந்து விடுவோம்" என்று தாங்கள் செய்ததைத் தெரிவித்தார்கள்
"இது தான் வானகம் செல்வதற்கான வழி இதையே வாழ்நாள் முழுவதும்
செய்யுங்கள்." என்று முனிவர் மூவருக்கும் சொல்லி அனுப்பினார்.
ஆம் சரியாக வாழ்ந்தால் சரியாக சாவோம் என்பது இது தான்.
நமது வாழ்வின் ஆரம்ப விதியை எல்லோரும் அறிய எழுதிய இறைவன்
முடிவு விதியை யாருக்கும் தெரியாமல் எழுதி வைத்துவிட்டார்.
ஒரு தாய் தனது வயிற்றில் குழந்தை இருக்கும் போது அவள் அருந்திய
தவறான மாத்திரையால் குழந்தை இறந்து விட்டத.ு இறந்த குழந்தை எங்கே
சென்றிருக்கும் என மன வேதனையோடு குழப்பமான நிலையில் மன்றாடுகிறார்.
குழந்தைகள் எந்தத் தவறும் செய்யாதவர்கள். இறப்பிற்குப் பின்
விண்ணகத்தில் சம்மனசுக்களாய் வலம் வருவார்கள் என்பது திண்ணமல்லவா?
சமீபத்தில் 30 வயது இளம் வாலிபர் தனது வேலைகளை எல்லாம் எல்லோருக்கும்
பணிவாகச் செய்யக்கூடியவர். திடீரென ஒரு விபத்தினால் மரணமடைந்து
விட்டார். அவருக்கு இளம் மனைவியும் இரு சிறு குழந்தைகளும் இருந்தார்கள்.
அவரது பிரிவைத்தாங்க இயலாது மன வேதனையில் துடித்தார்கள். அவரது
மரணத்தைக் கண்டு சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கண்ணீர்
வடித்தனர். இன்றும் அந்த வாலிபனின் மரணத்தை நினைத்து ஊரும், உறவும் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில்
ஏழ்மையான அந்தக் குடும்பத்திற்கு வாழ வழிகாட்டும்போது அவரது
பிள்ளைகளும் மனைவியும் சற்றே ஆறுதல் அடையலாம். அவரால் பயனடைந்தவர்களும்
அப்படியான வாழ்வாதார உதவி செய்ய முன் வரும்போது உதவி
செய்வோருக்கும் ஆத்ம திருப்தியும் இறந்த அடியாரின் ஆன்மாவுக்காக
செய்கின்ற அறநெறி செயலாகவும் அமையும். இதைத் தான் சமூகமும்
திருச்சபையும் நம்மைப் படைத்த இறைவனும் விரும்புகிறார்.
இறப்பிற்குப் பின் இறை அமைதியில் நிம்மதி பெற இயலாத ஆன்மாக்களுக்கு
பாவங்கள் தடையாய் உள்ளன. இத்தடைகளிலிருந்து விடுபடுவதற்கு நமது
மன்றாட்டுகளும், திருப்பலி, பிறரன்புச் செயல்கள் போன்றவையும்
தேவைப்படுகின்றன. இதனால் தான் திருச்சபை இறந்தவர்களுக்காக மன்றாடுவதில்
அக்கறை காட்டுகிறது. எனவே அவற்றை உணர்ந்தவர்களாக இறந்த ஆன்மாக்களுக்காக
உருக்கமுடன் நாம் மன்றாட கடமைப்பட்டுள்ளோம்.
நம்மால் செய்ய முடிந்த நற்செயலை செய்து இறந்த ஆன்மாக்களுக்கு
விண்ணக வாழ்வில் இடம் பெற செபிக்கும் காலம் இந்த நவம்பர். இதைச்
செய்யும் போது அவர்கள் வழியாக நம் விண்ணப்பங்களும் நிறைவேறும்.
இதைத் தொடர்ந்து செய்து விண்ணக நலன்களைப் பெற்றுக் கொள்ள முன்
வருவோம்.
கத்தோலிக்க பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை மிகுந்த பக்தியானவர்.
தனது பிள்ளைகளையும் ஒழுக்க நெறியில் வளர்த்து வருகின்றவர். தனது
தாய் இறந்த பிறகு சிற்றன்னையிடம் மிகவும் கொடுமைகளை அனுபவித்து
வளர்ந்தவர். தற்போது "நான் இந்த நிலைமையில் வசதி வாய்ப்புகளோடு
இருப்பதற்கு எனது தாய் உயிரோடு இருந்தால் ஒருவேளை முடியாது
போயிருக்கலாம். அவர் விண்ணகத்தில் இருந்து என் குடும்பத்தை
செழிக்கச் செய்கின்றார்" என தன்னைச் சார்ந்தவர்களிடம் சொல்லி
நெகிழ்ந்து போகிறார்.
ஆம், இறந்தவர்கள் விண்ணகத்தில் இருந்து நமக்காக பரிந்து
பேசுகிறார்கள் என விசுவசித்து செபிப்போம்.
சீடன் ஒருவன் தன் குருவிடம் கேட்டான் "உலகிலேயே அதிசயமான விஷயம்
எது?" குரு சொன்னார் "தன் கண்முன்னே உலகத்தார் ஒவ்வொருவராக இறந்தாலும்
தான் மட்டும் இறக்கமாட்டோம்... என்பதுபோல் மனிதர் வாழ்வதே, உலகில்
அதிசயமான விஷயம்" என்றார். இன்று நாம் இறந்த அனைத்து விசுவாசிகளையும்
நினைவுகூறுகிறோம். ஆனாலும் நாமும் ஒருநாள் இறப்போம் என்கிற உண்மை
மட்டும் ஏனோ நம்மை தொடுவதில்லை.
அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில்
எழுதப்பட்ட இப்புத்தகத்தில்......
நாம் பிறந்த போது, நாம் அழுதோம்...உலகம் சிரித்தது.
நாம் இறக்கும்
போது, பலர் அழுதால் தான் நம் ஆத்மா சாந்தியடையும்"
என ஆரம்பிக்கும்
- ராபின் ஷர்மா. இந்த புத்தகத்தில் கூறும் அற்புத
கருத்துக்கள், நாம் சரியாக வாழ்ந்து, சரியாக சாவதற்கு வழித்தடம்
அமைக்கின்றது.
*நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஏதோ
ஒன்றை சொல்லி தருகின்றார்கள். எனவே நாம் சந்திக்கும் அனைவரிடமும்
கருணையுடன் இருப்போம்.
*நமக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ, அதிலேயே கவனத்தையும்இ நேரத்தையும்
அதிகம் செலுத்துவோம். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காமல்
இருப்போம்.
*அடிக்கடி கவலைப் படாமல் இருப்போம். தேவை எனில் கவலைப் படுவதற்கென
ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குவோம். அந்த
நேரம் அனைத்து கவலையும்
குறித்து சிந்திப்போம்...
*அதிகாலையில் எழ பழகுவோம்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே...
*தினமும் நிறைய சிரிக்க பழகுவோம்...
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்..
*நிறைய நல்ல புத்தகம் படிப்போம்...
எங்கு சென்றாலும், பயணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன்
செல்லுவோம். காத்திருக்கும் நேரத்தில்
வாசிப்போம்...
*நமது பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுவோம். இவ்வாறு பட்டியலிடும்போதே
நம் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம்
கிடைக்கவும் வாய்ப்பு உண்டு...
*நம் குழந்தைகளை நமக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக நினைப்போம்..
அவர்களுக்கு நாம் தரக் கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நாம் செலவிடும்
நேரமே
இவைகளை நாம் சரியாக வாழ வழியாக அமைத்துக் கொள்ளலாம்.
எம். பி ஜான் என்றோர் பெரியவர், வார இதழ் ஒன்றை ஆங்கிலத்தில்
நடத்தி வந்தார். அவரைத் தெரிந்தவர்கள் அதிகாரத்தில் இருந்த அரசியல்
தலைவர்கள் மட்டுமல்ல எழுத்துத் துறையில் சமுகத்தில் உயர்ந்த
நிலையில் இருந்தவர்கள் அனைவரும்
90 வயதைத் தாண்டியவர், சிறந்த எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உடையவர். சமூக நலனுக்காக
அவர் எதைக் கேட்டாலும் உடனே அவர் கேட்டுக் கொண்டதைச் செய்வார்கள்.
எனவே எல்லோருக்கும் அவர் என்றால் அச்சம்.
அதுமட்டுமல்லாது அவர் தனக்காக எதையும் கேட்டதே கிடையாது.
நண்பர் ஒருவர் ஒருமுறை அவரைச் சந்திக்கச் சென்றிருந்த போது,
நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். நண்பரைப் பார்த்ததும் எழுதியதை
நிறுத்திக் கொண்டு சொன்னார்.
நண்பா "உனக்குத் தெரியுமா?. நான் நீண்ட நாளாகக் கடவுளை ஏமாற்றி
வருகிறேன். அப்படியே 90-வது வயதையும் தாண்டி வந்து விட்டேன்."
நண்பர் ஆச்சரியத்தோடு அவரைப்
பார்த்தார், அவர் தொடர்ந்தார்.
"நான் எப்போதும் ஒரு நூலை எழுதி முடித்த அடுத்த நாளே வேறு ஒரு
நூலை எழுதத் தொடங்கி விடுவேன். என் கையில் எப்போதும் ஏதாவது ஒரு
முக்கிய வேலை இருக்கும். நூல் எழுதுவதும் அதில் ஒன்று. கடவுள்
எப்போதுமே ஒரு வேலை நிறைவடையாமல் உள்ள நிலையில் ஒருவர் உயிரை
எடுத்துக் கொள்ளமாட்டார். அந்த வேலையை முடிப்பதற்கு அவருக்கு
அவகாசம் கொடுப்பார். எனவே புதிய புதிய வேலையாக ஒவ்வொன்றாகச்
செய்யத் தொடங்கி விடுவேன். இப்படியே பல ஆண்டுகளாகக் கடவுளை ஏமாற்றி
வருகிறேன்" என ஒரு குழந்தையைப் போல சிரித்தபடியே சொன்னார்.
அவர் 96 வயதைக் கடந்த போது அந்தச் சந்திப்பு அப்படி வழக்கமாக
நடந்தது.
அன்றும் அவர் வழக்கம் போல மகிழ்ச்சியுடன் இருந்தார். நண்பரைக்
கண்டதும் அதே சிரிப்பு.
"உனக்குத் தெரியுமா நான் இனிமேல் கடவுளை ஏமாற்ற மாட்டேன். என்
வேலைகளை எல்லாம் முடித்து விட்டேன். மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.
இறப்பதற்குக் காத்திருக்கிறேன்" என்றார்.
அன்று நண்பருடைய பிறந்தநாள் எனவே இனிப்புக் கொடுத்தார்.
சாப்பிட்டார். ஆடை ஒன்றை அவருக்கு அணிவித்து அவர்தம் கால்களில்
விழுந்து நண்பர் ஆசிபெற்றார்
அன்று இரவு அவர் இறந்து போனார்.
சிரித்துக் கொண்டே இறந்த ஒரு மகான். அந்த உதட்டில் அந்தப்
புன்சிரிப்பு அழகாகப் பதிவாகி இருந்தது.
சந்தோஷமாகச் சாக முடியுமா? என்னும் வினாவுக்கு விடை கிடைத்தது.
முடியும்
அதற்குத் தயாராக இருந்தால்.
அதற்கு எப்படித் தயாராக இருப்பது?
எந்த வயதில்? எந்தச் சூழ்நிலையில்?
இறப்பு ஒருவனுக்கு எப்போது வரும் என்று யாராலும் சொல்ல
முடியாது.
பிறப்பும், இறப்பும் இன்றும் இறைவன் கையில்.
பிள்ளைகளால் கவனிக்கப்படாமல் தெருவில் விடப்பட்ட பெற்றோர் தற்கொலை
செய்து கொள்ளக் கூட நீதிமன்ற அனுமதியை நாடுகிற அவல நிலை இன்று
நாட்டில் நிலவி வருகிறது.
இவர்கள் மரணத்தின் எல்லைக்குத் துரத்தப்பட்டு அதன் வாயில்
திணிக்கப் படுகிறார்கள்.
இவர்கள் சந்தோஷமாகச் சாக முடியுமா?
அவர்களின் உயிர் பிரியும் போது. அந்த வினாடி அவர்களின் மரணத்துக்கு
காரணமானவர்களைச் சபித்து விட்டு
"இறைவன் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்" என இறுக்கமான மனத்தோடு, வலியோடுதான் செத்துப் போவார்கள்.
இதுதான் நிதர்சனம்.
எனவே சந்தோஷமாகச் செத்துப் போவது என்பது அற்புதமான கலை; ஓர் உன்னதமான
நிலை.
அதை அடைய வேண்டும் எனில் எதையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும்
மனநிலை வேண்டும்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள்; எதையும் மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொள்வார்கள்.
எது நடந்தாலும் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். கொஞ்சம் கொஞ்சமாக
இந்த மனநிலையை வளர்த்துக் கொள்பவர்கள் சந்தோஷமாகச் சாக
முடியும்.
இறந்து கிடக்கும் ஒருவரின் முகத்தில் சிரிப்பைக் காண்பது சரித்திரத்தில்
இடம் பெறும் அளவுக்கு முக்கிமானது.
நல்லதையே நினைத்தவர்கள், நல்லதையே செய்தவர்கள், நல்லதையே நாடியவர்கள்
எல்லோரும் சந்தோஷமாகச் சாக முடியும்.
அது எந்த வயதிலும் நடக்கலாம்.
உறுப்புகளைத் தானம் செய்பவர்கள், கண்களை தானம் செய்பவர்கள் அடுத்தவர்களின்
நலனை மட்டுமே மனதில் கொள்பவர்கள்.
எனவே இவர்கள் அனைவருமே சந்தோஷத்தோடே செத்துப்போவார்கள்.
ஆனாலும் செத்த பிறகும் வாழ்வார்கள்.
உண்மையில் அவர்களுக்கு மரணமில்லை.
அந்த வரிசையில் இடம் பெறுபவர் தான் அன்னை
தெரெசா....
மிகச் சரியாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு விண்ணகம்
சென்ற அன்னை தெரெசா நமக்கு நாம் வாழும் இந்த நூற்றாண்டில்
மாபெரும் பாடமாக வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்.
மரணத்தை அற்புதமாக்கிக் கொள்ள மனிதனால் முடியும். சரியாக
வாழ்ந்தால் சரியாக சாகலாம். என்ற சிந்தனைக்கு மாபெரும் இலக்கணமாக
வாழ்ந்து காட்டிய அன்னை தெரெசா மரணத்தின் பிடியில் இருந்தவர்களை
எல்லாம் விண்ணகத்தின் பிடிக்குள் அழைதுச் செல்வதில் மிகப்
பிடிவாதமாக இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
வங்கதேசத்திற்கு வந்த போது அங்கே மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர்
அன்பின்றி மிகப் பெரிய சாபக்கேட்டிற்கு ஆளாகி இருப்பதைக் கண்டு
மனம் வருந்துகின்றார். ஒருவர் மீது ஒருவர் அக்கறை இல்லாது வறுமையின்
பிடிக்குள் அகப்பட்டு போட்டி பொறாமையினால் பீடிக்கப்பட்டு, மனித
நேயமிழந்து, மரணத்தோடு போராடி மனிதம் சாக்கடைக்குள் கிடப்பதைக்
கண்டு மனம் வெதும்புகிறார். மரணமடைவது நிச்சயம் எனத்
தெரிந்தாலும், விலை உயர்ந்த மருந்து கொடுத்து சாகக் கிடக்கும்
மனிதர்களை சாக்கடையில் இருந்து அள்ளி எடுத்து, தன் மடி மீது சுமந்து
அன்பு காட்டுகின்றார். மரணம் அடையும் போதாவது பாசத்தை அனுபவிக்கட்டும்.
படைத்தவனை நேசிக்கட்டும் என மனதார நற்பணி செய்ய தன்னைக் கையளிக்கின்றார்.
கைமாறு கருதாது தன் பணி செய்து இன்று கைமேல் பலனாக
நிலைவாழ்வுக்குள் நுழைந்துவிட்டார். அநேகரை நிம்மதியாக
நிலைவாழ்வுக்குள் நுழையவும் செய்து விட்டார். இதைத் தான்
நாமும் செய்ய வேண்டும் என இந்த கல்லறை திருவிழா நம்மை நமது
வாழ்வைத் திருப்பிப் பார்க்கச் செய்கிறது.
இறந்த விசுவாசிகளுக்காக செபிக்கும் இந்த நாளில் நம் நினைவில்
நிறுத்த வேண்டிய சில முக்கியச் செய்திகள்.
1. இறந்தோரை நினைத்து அழுது கவலைப்பட்டு புலம்புவதைவிட விண்ணக
வாழ்வில் மறுபிறப்பு எடுத்துள்ளார். என நினைத்து ஆறுதல் அடையவும்
நமது விசுவாசத்தை ஆழமாக்கவும் முன் வருவோம்.
2. இறந்தோர் விண்ணகம் செல்ல அவரது பாவங்கள் தடையாக இருப்பதை தவிர்க்க
திருப்பலி ஒப்புக்கொடுத்தல், அவரது பெயரால் தர்மங்கள் செய்து
ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்க முன்வருவோம்.
3. மரணத்தை நினைத்து அஞ்சுவதைவிட நாம் ஒரு நாள் மரணம் அடைவது
நிச்சயம் என்பதை உணர்வோம். அன்றாட வாழ்க்கையை சரியாக வாழ்வோம்
மரணத்தை அற்புதமான விஷயமாக மாற்றிக் கொள்வோம்.
4. இழப்புகளை சந்தோஷமாக சந்திக்க தயாரோவோம்.
வாழ்க்கை அழுகையில் தொடங்கி அழுகையில் முடிகிறது. "முதல் அழுகை
எப்படி வாழப்
போகிறோம்" என்பதையும் "கடைசி அழுகை எப்படி
வாழ்ந்தோம்" என்பதையும் குறிக்கிறது. |
|
|