Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 அனைத்து புனிதர்கள் பெருவிழா

மறைசாட்சிகளின் இரத்தம்  திருச்சபையின் வித்து
=============================

மனிதரும் - புனிதரும்
எண்ணிய வண்ணம் வாழ்ந்து மறைந்தோர் - மனிதர்

உம்மை எண்ணியே வீழ்ந்து உயர்ந்தோர்   - புனிதர்

கண்டதே கோலம் என வீணே வாழ்ந்தோர்  - மனிதர்

கண்ணால் உமை கண்டு மெய் மறந்தோர் - புனிதர்

நாவால் பகை சேர்த்து நலங்கெட்டோர்    - மனிதர்

நாவால் உமை புகழ்ந்து நானிலம் மகிழ்ந்தோர்-புனிதர்

ஞானம் இன்றி புறம் பேசி பகை சேர்த்தோர் - மனிதர்

ஞான ஒளியாம் உமை கண்டு வாழ் வடைந்தோர் - புனிதர்

பூவுலகில் மதி கெட்டு விதி நொந்தோர்     - மனிதர்

பூந்தளிர் மனம் கொண்டு உமக்காக உயிர் நீத்தார் - புனிதர்

விழியிருந்தும் குருடராய் வலம் வந்தோர் - மனிதர்

விண்ணரசை கைப்பற்ற தம் உயிர் தந்தோர் - புனிதர்

ஐம் புலனும் அடக்க மறந்து மிருகமானோர் - மனிதர்

ஐயன் இயேசுவை சுவைத்து வாழ்வாக்கி னோர் - புனிதர்

கிடைத்தற்கரிய வாழ்வை கறைபடுத்தி மரமானோர் - மனிதர்

கிடைத்த நல் வாழ்வில் நல்லறம் சேர்த்தோர் - புனிதர்

ஜெயித்த போதெல்லாம் மமதை கொண்டோர் - மனிதர்

ஜெபத்தில் ஒன்றித்து வெற்றி களிப்படைந்தோர் - புனிதர்

புனிதர்களை போற்றுவோம்

புனிதர்களை பின்பற்றுவோம்

இனிய சகல புனிதர் திரு நாளிலே புனிதர்களாக வலம் வர மன்றாடுவோம்
நிகழ்வு
கி.மு.முதலாம் நூற்றாண்டில் உரோமையை மார்கஸ் அக்ரிப்பா (கி.மு. 63- கி.மு. 12) என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் எல்லா தெய்வங்களுடைய சிலைகளையும் வைப்பதற்கு என்று பாந்தயோன் என்ற ஆலயத்தைக் கட்டி எழுப்பினான். இவ்வாலயமானது கி.பி. 126 ஆம் ஆண்டு மீண்டுமாகக் கட்டி எழுப்பப்பட்டது. 4 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் உரோமையின் அரச மதமாக மாறியபிறகு, அதன்பிறகு வந்த போகஸ் என்ற மன்னன் பந்தயோன் என்ற அந்த ஆலயத்தை திருச்சபைத் தந்துவிட்டான். அப்போது திருச்சபையின் தலைவராக - திருத்தந்தையாக - இருந்த ஆறாம் போனிபேஸ் என்பவர் எல்லா தெய்வங்களுக்குமாக இருந்த பந்தயோன் ஆலயத்தை அனைத்துப் புனிதர்களின் ஆலயமாக மாற்றினார். அன்றிலிருந்துதான் அனைத்துப் புனிதர்களின் விழாவானது அதிகாரப் பூர்வமாகக் கொண்டாடப்பட்டது.

வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் புனிதர்கள் அனைவருடைய விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். திருச்சபை ஒவ்வொருநாளும் ஒரு புனிதரை நினைவுகூறும்போது, எதற்காக அனைத்துப் புனிதர்களின் விழா என்று தனியாக ஒரு நாளை ஒதுக்கி புனிதர்களுக்கு விழாக் கொண்டாடவேண்டும் என்றும் நினைக்கலாம். ஆனால் திருவெளிப்பாடு நூலில், " யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும்திரளான மக்கள் - எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சேர்ந்தவர்கள் - அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டு, கையில் குருத்தோலைகளைப் பிடித்தவர்களாய், " அரியனையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகின்றது" என்று உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் 365 நாட்களில் நினைவு கூர்ந்து கொண்டாடுவது என்பது இயலாத காரியமாகும். எனவேதான் திருச்சபை, இந்த மண்ணுலகில் கடவுளுக்காக உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்த தூயவர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடுகின்றது. அவ்விழாதான் "அனைத்துப் புனிதர்கள் விழா" என்று கொண்டாடப் படுகின்றது.

முதலில் புனிதர்கள் என்பவர் யார்?, எதற்காக நாம் அவர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாட வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்துவிட்டு, இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியை சற்று அறிந்துகொள்வோம். புனிதர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து குதித்த வானதூதர்கள் கிடையாது, அவர்கள் இந்த மண்ணுலகில் தோன்றியவர்கள். மண்ணுலகில் தோன்றினாலும் தங்களுடைய மண்ணக வாழ்க்கையை கடவுளுக்கு உகந்ததாய் மாற்றியமைத்துக்கொண்டு, இறைத்திருவுளத்தை தங்களுடைய வாழ்வால், வார்த்தையால் நிறைவேற்றியவர்கள் அவர்கள்தான் புனிதர்கள் தூயவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். புனிதர்களை எதற்காக நாம் நினைவுகூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு விவிலியத்திலிருந்தே பதில் இருக்கின்றது. " உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள்" (எபி 13:7) என்கிறார் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தின் ஆசிரியர். ஆம், நமக்கு இறைவாக்கைப் போதித்த புனிதர்களை நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும், அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி அவர்களுடைய வழியில் நடக்கவேண்டும். அதைத்தான் திருச்சபை நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றது.

இரண்டாம் வத்திகான் சங்கமானது " தூயவர்களின் வாழ்விலே மாதிரியையும் அவர்களின் ஒன்றிப்பிலே தோழமையையும் அவர்கள் பரிந்து பேசுவதால் உதவியையும் அவர்களிடமிருந்து நாம் தேடுகின்றோம்" என்கிறது. ஆகவே, புனிதர்கள் அல்லது தூயவர்களின் விழாவைக் கொண்டாடுவதால் பயன்பெறப் போவது என்னமோ நாம்தான் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

எதற்காக அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடுகின்றோம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியை இப்போது உணர்ந்துகொள்வோம். புண்ணிய வாழ்வு அல்லது சாட்சிய வாழ்வு வாழ்ந்து வந்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடும் வழக்கம் 155- 156 ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. கமிர்னா நகரின் ஆயராக இருந்த போலிக்கார்ப்பின் எலும்புகளை எடுத்து, அதனை பத்திரமாக வைத்து இறைமக்கள் அவருடைய விண்ணகப் பிறப்பு விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சிப்ரியான் என்பவரும் புனிதர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இப்படி இருந்த வழக்கம் திருத்தந்தை ஆறாம் போனிபேஸ் காலத்தில் பந்தயோன் ஆலயம் அனைத்துப் புனிதர்களின் ஆலயமாக மாற்றப்பட்டபிறகு அனைத்துப் புனிதர்களின் விழா திருச்சபை முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் நாள் கொண்டாடப் பட்டு வருகின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

1. சாட்சிய வாழ்வு

புனிதர்கள் அசாதரணமான காரியங்களைச் செய்துவிடவில்லை. மாறாக அவர்கள் சாதரணமான காரியங்களை அசாதாரணமாக செய்தார்கள். அதனால்தான் அவர்கள் இன்றைக்கு நம்மால் புனிதர்களாக நினைவுகூரப்படுகின்றார்கள். எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தால் நாம் தூயவர்களாக மாறலாம் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கு விடையாக இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்கும் நற்செய்தி வாசகமானது அமைகின்றது. ஏழையரின் உள்ளத்தவராக, துயறுருபவராக, கனிவுடையவராக, நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டவராக, இரக்கமுடையவராக, தூய்மையான உள்ளத்தோராக, அமைதியை ஏற்படுத்துவோராக, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோராக நாம் வாழும்போது உண்மையிலே நாம் தூயவராக இருக்கின்றோம் என்பதில் எந்தவித சந்தேகமில்லை. கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இருக்கும் இத்தகைய போதனைகளின் படி நாம் வாழ்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அன்னை தெரசாவின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வு இது. ஒருநாள் இலண்டன் தெருக்களில் அன்னை தெரசா நடந்துகொண்டிருந்தார். அப்போது தெருவோரத்தில் மிகவும் மோசமாகவும் கோரமாகவும் ஒருவர் இருந்தார். அவர் அருகே சென்ற அன்னை தெரசா, அவரது கையை எடுத்து குலுக்கியபடியே கேட்டார், " எப்படி இருகிறீர்கள்?" என்று. அதற்கு அம்மனிதர் அன்னையின் கையில் இருந்த இளஞ்சூட்டை உணர்ந்தவராய், " அம்மா... நீண்ட நாட்கள் கழித்து, இப்போதுதான் ஓர் இளஞ்சூடான, இனிமையான அன்பை ஒரு மனிதரின் கரங்களின் மூலமாக உணர்கின்றேன்" என்றார்.

அன்னை தெரசா செய்தது பெரிய காரியமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த ஒரு சாதாரண அன்புச் செயல் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட அந்த மனிதரின் உள்ளத்தில் அன்பை, மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை. நாம் அன்பினால் உந்தப்பட்டு பெரிய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதில்லை, சாதாரண காரியங்களைச் செய்தாலும் போதும். அது நம்மை விண்ணகத்தில் உள்ள புனிதர்கள் கூட்டத்தில் சேர்த்துவிடும். இதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது.
ஆகவே, புனிதர்களைப் போன்று நாம் செய்யக்கூடிய எளிய, அன்புச் செயல்களால் இயேசுவுக்கு சான்று பகர்வோம், அதன்வழியாக விண்ணகத் திருக்கூட்டத்தில் இடம்பெறும் பாக்கியம் பெறுவோம்.

2. பரிந்து பேசுதல்

புனிதர்கள் இறைவனின் திருமுன் இருப்பதால் அவர்கள் எப்போதும் நமக்காக பரிந்து பேசுகிறார்கள் என நாம் நம்புகிறோம். இத்தகைய ஒரு பணியைச் செய்துவரும் புனிதர்களை நமக்குத் தந்திருக்கும் இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். அதே நேரத்தில் புனிதர்களைப் போன்று கடவுளிடத்தில் பரிந்து பேசும் வல்லமை நமக்கு இல்லாவிட்டாலும், நாம் ஒருவர் மற்றவர்க்காக ஜெபிக்கலாம். "நம்மோடு இருப்பவர்களுக்காக நாம் ஜெபிக்கும்போது இறைவன் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வர்" என்பது ஆழமான உண்மை. ஆகவே, புனிதர்களின் பரிந்துரையின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் நாம், ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்போம்.

"அவனும் அவளும் புனிதராக மாறும்போது, என்னால் ஏன் புனிதராக மாறமுடியாது?" என்பார் தூய அகுஸ்தினார். அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இன்று, நாமும் புனிதர்களாக மாற இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளைகளின் படி வாழ முயற்சிப்போம். நம்மோடு வாழும் சகோதர சகோதரிகளிடத்தில் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டுவாழ்வோம். அதன்வழியாக புனிதர்கள் கூட்டத்தில் இடம்பெறும் பேறுபெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

புனிதர் அனைவர் பெருவிழா

 அருளின் கனியே புனிதம்

 திருவெளிப்பாடு 7:2-4, 9-14
 1 யோவான் 3:1-3
 மத்தேயு 5:1-12

இன்று புனிதர் அனைவர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறோம். பயணம் செய்யும் திருஅவை, மகிமை பெற்ற திருஅவை, துன்புறும் திருஅவை என்னும் நம் திருஅவையின் மூன்று நிலைகளில் இரண்டாம் நிலையின் திருநாள் இது. இவர்கள் தூய்மை அல்லது புனித நிலையை அடைந்தவர்கள்? 'நான் ஒருவரே தூயவர்' என்று கடவுள் சொல்ல, தூய்மை அல்லது புனிதம் என்பது கடவுளின் பண்பு என வரையறுக்கப்பட்டிருக்க, 'மனிதர்களாகிய' நாம் புனித நிலையை அடைய முடியுமா? அல்லது சிலர் சொல்வது போல, 'மனிதமே புனிதமா'?

மனிதப் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுளின் அருளுக்கு நாம் செய்யும் தொடர் பதிலிறுப்பு எனவும், அவரின் அருளைப் பெற்ற நாம் அவருக்குக் கொடுக்கும் கனிகள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.

ஒரு சிறிய உருவகத்தோடு தொடங்குவோம். பள்ளிக்கூடத்திற்குக் குழந்தைகள் வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? குழந்தைகள் வரும் நிகழ்வை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

(அ) சில குழந்தைகளை அவர்களுடைய அம்மா, அல்லது அப்பா, அல்லது ஆட்டோக்காரர் கொண்டு வந்து விடுவார்.

(ஆ) சில குழந்தைகள் வீட்டிலிருந்து நடந்து வருவார்கள்.

(இ) சில குழந்தைகள் அப்பா வாங்கிக் கொடுத்த சைக்கிளை ஓட்டிக்கொண்டோ, அல்லது அப்பா தந்த பணத்தைக் கொண்டு பொதுப் போக்குவரத்திலோ வருவர்.
முதல் வகை குழந்தைகளுக்கு எல்லாமே அவர்களது பெற்றோரால் கொடுக்கப்பட்டுவிடுகிறது. அவர்களது வேலையெல்லாம் படிப்பதும், பெற்றோரின் எதிர்பார்ப்பின்படி நடப்பதும்தான். இதே போல, கடவுள் சிலருக்கு அவர்களது பிறப்பிலேயே புனிதத்தைக் கொடுத்துவிடுகிறார். புனிதம் என்பது இவர்களுக்குக் கடவுள் கொடுத்த கொடை. எடுத்துக்காட்டாக, அன்னை கன்னி மரியாள்.
இரண்டாம் வகைக் குழந்தைகள் தாங்களே நடந்து செல்ல வேண்டும். முதுகில் சுமை, வயிற்றில் பசி, பள்ளி மணி ஒலிக்கும் அவசரம் எனக் குழந்தைகள் நடந்து செல்ல வேண்டும். சில குழந்தைகள் பள்ளிவரை செல்லும், சில குழந்தைகள் வழியில் யாரிடமாவது லிஃப்ட் கேட்கும், சில குழந்தைகள் தங்களால் இயலாது என்று பாதி வழி நின்றுவிடும். இத்தகைய மனிதர்கள் புனிதத்தை அடையப் போராடுபவர்கள். ஏறக்குறைய புனித நிலையை அடைபவர்கள். இவர்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும். இவர்கள்தாம் உத்தரிக்கிற நிலை ஆன்மாக்கள் அல்லது துன்புறும் திருஅவையின் உறுப்பினர்கள்.

மூன்றாவதாக உள்ள குழந்தைகள், தங்கள் பெற்றோர் கொடுத்த அருள் என்னும் மிதிவண்டியைப் பயன்படுத்துவதுடன், தாங்களே மிதித்து பள்ளிக்கு வருவார்கள். இவ்வகை மனிதர்கள், கடவுளின் அருள் அல்லது அழைப்பைத் தங்கள் வாழ்வில் ஏற்று, அதற்கேற்ற பதிலிறுப்பு செய்து, தங்கள் வாழ்விலும் வாழ்வாலும் கனி தந்தவர்கள். இம்மூன்றாம் வகை மனிதர்களைத்தான், அவர்கள் அடைந்த புனித நிலையைத்தான், இன்றைய நாளில் 'புனிதர் அனைவர் பெருவிழாவில்' கொண்டாடி மகிழ்கிறோம். பள்ளிக்குள் வந்துவிட்டால் அனைத்துக் குழந்தைகளும் ஒன்றென ஆகிவிடுகிறார்கள். அது போல, இறைவனின் திருமுன்னிலையில் அனைத்துப் புனிதர்களும் ஒன்றென ஆகிவிடுகின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திவெ 7:2-4,9-14), திருவெளிப்பாடு நூல், கடவுளின் புனித மக்கள் பற்றிய வியத்தகு காட்சியை நம்முன் கொண்டுவருகிறது. கடவுளின் புனித மக்கள் இரு குழுவினர்களாக இருக்கின்றனர். முதல் காட்சியில், அல்லது முதல் குழுவில் உள்ளவர்கள் 'முத்திரையிடப்பட்டவர்கள்.' முத்திரை என்பது ஒருவருக்கு அது உடைமை என்பதையும், ஒருவர் அதன்மேல் உரிமை கொண்டாடுகிறார் என்பதையும் குறிக்கிறது. 144 ஆயிரம் மக்கள் அவ்வாறு முத்திரையிடப்பட்டுள்ளதாக யோவான் காண்கிறார். முத்திரையிடப்பட்ட இவர்கள் அனைவரும் கடவுளின் மக்கள். இங்கே, '144' என்பது ஓர் உருவக அல்லது அடையாள எண். இஸ்ரயேலின் 12 குலங்களும், அவற்றின் வழி மரபுகளாக 12 ஆயிரம் மக்களின் பெருக்கல் தொகையே 144 ஆயிரம் (காண். திவெ 7:5-8). இந்த முதல் குழு இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்றது. இந்த மக்களையே கடவுள் தன் சொந்த மக்களினமாகத் தெரிந்தெடுத்து, தனக்குப் பணி செய்யவும், தன் செய்தியை அனைத்துலக்குக்கும் அறிவிக்கவும் பணித்தார் (காண். விப 19:5-6).
இரண்டாம் குழுவினர் 'வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்கள்.' இவர்கள், 'கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள். தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக் குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.' இவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள், கிறிஸ்துவுக்காகத் துன்பம் ஏற்றவர்கள். அவர்களின் வெண்ணிற ஆடை தூய்மை மற்றும் வெற்றியைக் குறிக்கிறது. கிறிஸ்துவைப் போல அவர்கள் இருந்ததால் அவர்கள் செம்மறியின் விருந்தில் பங்கேற்கின்றனர். அவர்கள் இப்போது அனுபவிக்கும் புனிதம் அல்லது தூய்மை என்பது கடவுள் அவர்களுக்கு அளித்த கொடை. இஸ்ரயேல் மக்கள் கடவுளால் முத்திரையிடப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் அனைவரும் பாஸ்காச் செம்மறியின் இறப்பால் புனிதப்படுத்தப்படுகின்றனர்.

புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம் (காண். 1 யோவா 3:1-3), கடவுளின் அன்பு மற்றும் அன்பின் விளைவுகள் பற்றிச் சிந்திக்கும் அழைப்போடு தொடங்குகிறது. யோவானின் குழுமத்தினர் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றதால் துன்புறுகின்றனர். ஆனால், அத்துன்பம் தற்காலிகமானது என்றும், நம்பிக்கையாளர்களின் நோக்கம் தூய்மையை அடைவது என்றும் அறிவுறுத்துகின்றார் யோவான்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:1-12), மத்தேயு நற்செய்தியில் காணும் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். எட்டு பேறுபெற்ற நிலைகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன. இவற்றின் நோக்கம் கடவுளின் ஆசீரை நமக்கு வழங்குவதும், அதன் வழியாக நம்மைப் புனிதத்துக்கு இட்டுச் செல்வதுமே.
முதல் நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளரைக் கடவுளோடும், இரண்டாவது நான்கு பேறுபெற்ற நிலைகள் நம்பிக்கையாளர்களை ஒருவர் மற்றவரோடும் இணைக்கின்றன. முதலில், 'ஆன்மீக ஏழ்மை அல்லது எளிமை' முன்வைக்கப்படுகிறது. இது ஒருவர் கடவுள்மேல் கொண்டுள்ள சார்புநிலையைக் குறிக்கிறது. இரண்டாவது, துயருறுவோர் பற்றியது. துயரம் கடவுள் தரும் மீட்பை முன்குறிக்கிறது. மூன்றாவது பேறுபெற்ற நிலை திபா 37:11இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கனிவுடையோர் நாட்டை உரிமையாக்கிக்கொள்கின்றனர். நாடு என்பது கடவுள் அளிக்கும் கொடை. நான்காவது, நீதிக்கான ஏக்கம் கொள்வோர் பெறும் நிறைவை எடுத்துச் சொல்கிறது. நீதி என்பது கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் ஒருவர் ஏற்படுத்திக்கொள்ளும் சரியான உறவுநிலையைக் குறிக்கிறது. ஐந்தாவது, இரக்கம் காட்டுபவர் இரக்கம் பெறுவார். இரக்கம் என்பது ஒருவர் மற்றவர்மேல் காட்டும் உடல் மற்றும் உள்ளம்சார் அன்பைக் குறிக்கிறது. ஆறாவதாக, தூய்மையான உள்ளம் என்பது ஒருவரின் நாணயத்தையும், நம்பகத்தன்மையையும் காட்டுகிறது. உறவுகளில் தூய்மையாக இருக்கும் இவர்கள் கடவுளின் திருமுன்னிலை நோக்கி ஈர்க்கப்படுவார்கள், ஏனெனில், கடவுள் தூயவராக இருக்கிறார். ஏழாவது, அமைதியை ஏற்படுத்துவது. அமைதி என்பது ஒருங்கிணைந்த இசைவு நிலை. அந்த இசைவு நிலையில் ஒருவர் இந்த உலகத்தோடு தான் கொண்டுள்ள இணைப்பைக் கண்டுணர்கிறார். எட்டாவது பேறுபெற்ற நிலை, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுபவர் பற்றிப் பேசுகிறது. இவர்கள் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதால், கடவுளின் அரசில் பங்கேற்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதி, 'மகிழ்ந்து அக்களியுங்கள்' என்ற வாழ்த்தோடு நிறைவுறுகிறது. இந்த வார்த்தைகளைக் கொண்டே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதம் பற்றிய திருத்தூது ஊக்கவுரையை (2018) எழுதுகின்றார்.
ஆக, முதல் வாசகத்தில், கடவுளின் அருளை அனுபவித்தவர்கள் அவருக்காக மறைசாட்சியம் ஏற்றதால் கனி தருகின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், புனிதம் என்பது நாம் அடைய வேண்டிய இலக்காக வரையறுக்கப்படுகின்றது.

நற்செய்தி வாசகம், பேறுபெற்ற நிலைகளை முன்வைப்பதுடன், மகிழ்ச்சிக்கான இயேசுவின் அழைப்பே புனிதத்தின் தொடக்கம் என முன்வைக்கிறது.
பதிலுரைப் பாடல் ஆசிரியரும், இதையொட்டி, 'ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே' (காண். திபா 24) துள்ளிக் குதிக்கின்றார்.
இறுதியாக,

புனிதர்கள் வானத்திலிருந்து கீழே குதித்தவர்கள் அல்லர். மாறாக, நம்மைப் போல வாழ்ந்து, நமக்கு முன் கடந்து சென்றவர்கள். இங்கு செய்யப்பட்டு அங்கே ஏற்றுமதி செய்யப்படுபவர்கள் இவர்கள். தாங்கள் பெற்ற அருளுக்கு ஏற்ற கனிகள் தருபவர்கள் இவர்கள். இவர்கள் விழுந்தாலும் எழுபவர்கள். புனித மரிய வியான்னி சொல்வது போல, 'புனிதர்கள் சரியாகத் தொடங்கவில்லை என்றாலும், மிகச் சரியாக முடித்தார்கள்.' நாம் அனைவரும் சரியாக, நல்லதாக முடிக்க முடியும். புனிதம் என்பது நாம் மேற்கொள்ள வேண்டிய தெரிவு. அந்தத் தெரிவின்மேல் கொள்ள வேண்டிய மனவுறுதி.

மதிப்பற்றவை நீண்ட நாள்கள் நீடிப்பதில்லை. மதிப்பு மிக்கவை என்றும் நீடிக்கின்றன.
அன்றாட தெரிவுகள் தெளிவானால், புனிதம் என்பது உணர்வு அல்லது செயல் என்பது தெளிவானால், நாமும் புனிதர்களே.


(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)
(Rev. Father: Yesu Karunanidhi)




இறைவாக்கினர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டபோது, மண்ணில் மறைந்திருந்த உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழுந்தன. வானதூதர்களை நாம் பார்ப்பதில்லை. புனிதர்களின் பூத உடல்களைப் பார்த்திருக்கிறோம். புனிதர்கள் வரலாற்றில் புகுந்தவர்கள். நம்மைப் போன்று மண்ணில் வாழ்ந்து விண்ணைச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள். அவர்களின் உறவை நாம் நாடுகிறோம். எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் தேதியில் சகல புனிதர்களின் விழாவையும் மறுநாள் சகல ஆன்மாக்களின் விழாவையும் கொண்டாடுகிறோம்.

வானதூதர்களை சற்றுப் பார்ப்போம். அவர்கள் பலவிதம், ஒன்பது வகையினர் அவரவர் பணிகள், தனித்தன்மை, பொறுப்பு, கடமை வரையறுக்கப்பட்டுள்ளது. அவர்களை "நவ விலாச வானதூதர்கள்" என அழைக்கிறோம்.

1. சேராபீம் (Seraphim) - பக்தி சுவாலர்கள். இறைவனின் அன்பைப் பெற்றுத் தருபவர்கள் (எசாயா 6:1-7)

2. செரூபீம் (Cherubim) - ஞானதிக்கர்கள் இறை ஞானத்தைப் பெற்றுத் தருபவர்கள் (தி.வெ. 4:6)

3. அரியாசனர்கள்(Thrones) - பத்திராசனர்கள் நீதியைப் பெற்றுத் தருபவர்கள்

4. மேலாதிக்கர்கள்(Dominions) - நாத கிருத்தியர்கள். மனித எண்ணங்களை மாற்றி இறை சித்தத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நமக்குத் தருபவர்கள்.

5. புண்ணியர்கள்(Virtues) - இறைபலத்தைத் தருபவர்கள்.

6. அதிகாரமிக்கோர் (Powers) - தீயசக்திகளை வென்ற ஆன்மீகத் தூய்மையைத் தருபவுர்கள்.

7. முதன்மையானவர்கள்(Principalities) - பிராமிதர்கள். நாட்டையும் வீட்டையும் ஆள்வோருக்கு வலிமை தருபவர்கள். (உரோ 8:38, 1கொரி 15:24)

8. அதிதூதர்கள்(Archangel) - இறைவன் முன்னால் நின்று அவரின் கட்டளைகளை நிறைவேற்றுபவாகள் - புனித மிக்கேல், புனித கபிரியேல், புனித இரபேல்(யூதா 9, 1தெச 15:24, எபே 1:21)

9. காவல்தூதர்கள்(Guardian Angels) சம்மனசுகள்.

பத்தாவது நிலையில் உள்ளவர்கள் தான் புனிதர்கள் (Saints). இவர்கள் நம் காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதர்களின் உணர்வு, பயம், அச்சம், நோய்களை உணர்ந்தவர்கள். நமக்காக இறைவனிடம் பரிந்து பேசி மன்றாடுபவர்கள்.

புனிதர்களைப் பற்றிப் பார்போம். அவர்களிலும் வேறுபாடுகள் உண்டு.

1. மறைச்சாட்சிகள் - Martyrs - இயேசுவை ஏற்றுக் கொண்டதற்காகவும், பிற தெய்வங்களை மறுத்ததற்காகவும் கொல்லப்பட்டவர்கள், வாளால் அறுப்பட்டோர், சிரச்சேதம் செய்யப்பட்டோர், நெருப்பில் தூக்கி எறிப்பட்டோர் இப்படி பல உபாதைகளை அனுபவித்தவர்கள்.

2. துறவிகள் - Monks - துறவு வாழ்க்கை வாழ்ந்து பிறருக்கு முன் மாதிரிகையாய் விளங்கினோர் வனத்துச் சின்னப்பர், வனத்து அந்தோணியார்.

3. செபவாழ்வு வாழ்ந்தவர்கள் - Contemplatives - காட்சி தியானம் கண்டோர். புனித குழந்தை தெரசாள், புனித பாஸ்டினா, புனித அல்போன்சா

4. எழுத்தாளர்கள் - Commentators - புனித தாமஸ் அக்குவினாஸ், புனித கிறிஸ்தோம், புனித இஞ்ஞாசியார்.

5. இறைவாக்கினர் - Prophets - தவறுகளைச் சுட்டிக்காட்டி மனம் மாற்றியவர்கள். திருமுழுக்கு யோவான், புனித அருளானந்தர், புனித தாமஸ் மூர்

6. பாடகர்கள் - Choir - புனித செசீலியம்மாள், புனித கிரகோரி

7. நோயுற்றோரைப் பராமரித்தவர்கள் - Care Takers - புனித தமியான், புனித கொல்கோத்தா தெரசா

8. சமாதானம் செய்தோர் - Peace Makers - புனித சீயன்னா

9. ஏழைகளுக்கு இரங்குதல் - புனித மார்ட்டின் புனித பியோ

10. மறையுறை ஆற்றும் பணி - புனித அசிசியார், புனித அந்தோணியார், புனித சவேரியார்.

நம் ஒவ்வொருவருக்கும் வானதூதர், புனிதர்கள் ஒன்பது பேர் உண்டு. அவர்கள் நம்மைப் பாதுகாக்கும் AK47 படையினர்.

 "வானதூதர்கள், புனிதர்கள் உண்மையிலே இருக்கிறாகளா?" எனப் பலரைக் கேட்டால் அவர்கள் சந்தேகப்படுவார்கள்.
 
"பேய்களை நம்புகிறாயா?" எனக் கேட்டால் பலவிதமான பேய்கள், அவைகளின் பெயர்கள், தங்கியிருக்கும் குடியிருப்பு, விலாசம், எல்லாம் சொல்வார்கள். தீமையையும், நோயையும், இருட்டையும் மனிதன் தேடிப்பிடித்துத் தக்கவைத்துக் கொள்கிறான். ஆனால் நன்மை, உடல்சுகம், ஒளியை ஒதுக்கி ஓடுகிறான். ஆதாம் ஏவாளின் குணம் இவர்களை விட்டபாடில்லை

இதற்கு விடிவே கிடையாதா? ஏன் இல்லை நிச்சயம் உண்டு. அதுதான் நாம் இயேசுவின் மீதி வைக்க வேண்டிய விசுவாசம். நம்மீது அவருக்கு கரிசனை உண்டு. நாம் அவரை அணுகுதில்லை. "உலகம் முடியுமட்டும் உங்களோடு இருப்பேன்" என வாக்குத்தத்தம்  கொடுத்துள்ளார். அவர்வழி செல்வோம். பயத்தினை வேரறுப்போம் - இயேசுவின் பங்காளிகளாவோம்.


வத்திக்கானுக்கு வெளியே பல்வேறு புனிதர்களின் திருப்பண்டங்கள் உள்ள இடம் ஒன்று உண்டென்றால், அது சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றின் கரையில் உள்ள இடைக்காட்டூர் ஆகும். அங்கே நாற்பது புனிதர்களின் புனிதப்பண்டங்கள் (Relics) உள்ளன.  

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்